Sunday, September 14, 2014

புகையும் ப‌ட‌ங்க‌ளிர‌ண்டு



நினைவின் புகைப்ப‌ட‌ங்க‌ள்
நேற்றின் ஒன்று
நாளையின் ம‌ற்றொன்று

இருக்கைக‌ள் சில‌
இட‌ம் மாறியும்
ஒன்றிர‌ண்டு காணாமலும்
இர‌ண்டேனும் புதிதாக‌வும்
இருக்கின்ற‌ன‌
புகையும் ப‌ட‌ங்க‌ளில்

இப்ப‌டியாக‌
க‌ட‌க்கிற‌து
வாழ்க்கை

Tuesday, September 2, 2014

லஷ்மண ராஜா மேனகா கல்யாண வைபோகமே....

சில பொழுதுகள் விடியும் போதே இனிய நிகழ்வுகளைக் கொண்டு வரும். அப்படிப்பட்ட ஒரு தினமே 31.8.2014. அது லஷ்மணராஜா என்கிற இரவணன் தன்னுடைய நீண்ட நாள் சகியுடன் கரம் கோர்த்த நற்தினம். அன்று அதிகாலை முதல் இரவு கருமையை போர்த்திக் கொள்ளும் வரை பல்வேறு மகிழ் தருணங்கள் என்னிடம் வந்து சேர்ந்தது. எனது நாத்தனாரின் புதுமனையில் தொடங்கியது அன்றைய தினம். அங்கிருந்து காலை 7 மணிக்கெல்லாம் கள்ளக்குறிச்சி கிளம்பினோம். ரம்யமான காலைப் பொழுதில், காற்று கடலலை போல் அடித்து கூந்தல் கலைக்க, "சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது" போன்ற சுந்தர கானங்களை கேட்டுக் கொண்டு, தம்மப்பட்டிக்கு சற்று முன்னர் தொடங்கி ஆத்தூர் வரை நானே சிற்றுந்தை ஓட்டி சென்றது என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிக மகிழ்வான தருணம். பக்கத்து இருக்கையில் ஒருவேளை அவர் பயந்து கொண்டே வந்திருக்கலாம். 

தற்சமயம் நினைத்துப் பார்க்கிறேன், நான் விழியன் திருமணத்திற்கும் 7 மணிக்கு தான் கிளம்பினேன். வேலூரில் 9 மணி திருமணத்திற்கு காலையில் 7 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பினேன். (ரசிகவ் அதனை மிகுந்த நகைச்சுவையோடு தனது பதிவில் கூட எழுதி இருந்தார்). அன்று மணமகளும் மணமகனும் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பி வீட்டுக்கு செல்ல வெளியில் வந்த தருணம், வாழ்த்தி விட்டு திரும்பினேன். தற்சமயம் அப்படியில்லாமல் இந்த திருமண வரவேற்ப்பில் முன்னரே சென்ற காரணத்தால், மணம் முடிந்து வந்த மணமகனையும் மணமகளையும் மணக்கோலத்தில் மண்டபத்தின் வாயிலில் வரவேற்க்க முடிந்தது.





   லஷ்மண் பெரும்பாலும் பெயர் மாற்றி அழைக்கும் வரம் பெற்றிருந்தார். அவருடைய திரைக்கதையை வடிவமைக்கும் போது என்னை தொலைபேசியில் அழைப்பார், சில பல சந்தேகங்கள் என்பார், இடைஇடை கேள்வி நடுவில் என்னை அனிதா(ஆம் அதே அனிதா ஜெயகுமார் தான்) என்று அழைப்பார். அனிதா லஷ்மணின் சிறந்த தோழி, லஷ்மண் அனிதாவை பற்றி அடிக்கடி சொல்லி இருந்தார். பெங்களூர் வந்ததும் நான் முதலில் சந்திக்க நினைத்தது அனிதாவை தான். (லஷ்மணின் திருமண வரவேற்பில் தான் அனிதாவை சந்திக்க கிடைத்தது. அது எனக்கு பேரானந்தம், இன்னும் சற்று முன்னரே இந்த வரவேற்ப்பை நடத்தி இருக்கலாம்). அதே போல் திருமண பத்திரிக்கையை எங்கள் இல்லத்தில் வந்து கொடுத்த தினம் தொலைபேசியில் அனிதா அழைத்த போது, இடையில் இல்லை லாவண்யா என்றார். :)

  மேலும் பத்திரிக்கையை நேரில் தர வேண்டும் என்று பெங்களூரின் மூம்முனைகளில் இருக்கும் லாவண்யா, கார்த்திகா மற்றும் முகுந்த் மேலும் அனிதா என்று சிரமம் பாராமல் வந்த போது, லஷ்மனுடன் சற்று அளவளாவ நேரம் கிடைக்குமென்று, அவருடன் சென்ற காரணத்தால் கார்த்திக்கா, முகுந்த் மற்றும் நேயமுகிலையும் சந்திக்க முடிந்தது. இதையே லஷ்மண் தனது திருமண வரவேற்ப்பு பாதாகையில் "மரம் அழைக்கிறது, மரத்தடியில் கூடும் அனைவரும் தோழமை பூண்கிறோம்" என்று எழுதி வைத்திருந்தார் போலும். அவருடைய திருமணத்தில் சொந்தங்களுக்கு இணையான எண்ணிக்கையில் தோழர்/தோழியர் வந்திருந்தது அவரின் உன்னதமான நட்புக்கு சாட்சி.



  லஷ்மணின் அனைத்து படைப்புகளும் மிக நேர்த்தியான, வித்தியாமான மற்றும் அழமான சிந்தனை பின்புலங்களை கொண்டது. "வெளிச்சம் பயத்தை ஏற்படுத்த தொடங்கும் முன்பு, இருளில் செய்த அனுமானமும் பாதையும் எளிதாக இருந்தது"  போன்ற கவிதையும், "நீர்வழி படூம்" போன்ற குறும்படமும் இவரின் நெடும் தேடல்களின் அடையாளம். அத்தகைய தேடல் அவருடைய திருமண அழைப்பிலும் இருந்தது. சங்க காலத்தில் திணை கடந்த காதல் உண்டா என்று தேடித் தேடி, திணை தாண்டிய காதல் சங்கத்தில் இல்லை என்று "மலையும் குகையும் அவள் கனவு, கடல் பார்த்தல் அவன் கொள்ளை ஆசை" என்று தனது சொந்த வரிகளில் வடிவமைத்திந்தார், (அனிதா தன் அழைப்பிதழில் குறுந்தொகை பாடலை தந்தது போல நினைவு. good friends think alike). லஷ்மணின் தேடலுக்கு மற்றுமொரு உதாரணம் திருமண வரவேற்பிலிருந்த மற்றுமொரு பாதகை. பாரதியின் பாடல் அது. அப்படி ஒரு பாடலை பாரதியார் கவிதைகளில் கேட்டு அறிந்தது இல்லை. இவருடைய கூழாங்கற்கள் நிறுவனம் மற்றுமொரு கலை நேர்த்திக்கான உதாரணம்.



  குறிக்கோளுக்கென்றும், எளிமைக்கென்றும், தன் சிந்தனை சரியென்றால் அதனை செயல்படுத்த பிறர் என்ன நினைக்ககூடும் என்ற தயக்கமற்ற பாசாங்கற்ற தெளிவே லஷ்மணின் தொடர் வெற்றிகளுக்கு காரணமென்று நினைக்கிறேன்.  புகைப்பட கலையில் கொண்ட பெரும் ஈடுபாடுகெனவும், சினிமா மேல் கொண்ட கொள்ளை கனவுக்கெனவும், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, திருமண நிகழ்வுகளை சந்தோச தருணங்களை பதிவு செய்யும் வேலையை செய்ய எத்தனை அசாத்திய துணிவு வேண்டுமோ, அதே அளவிற்கான துணிவினை கொண்டிருந்தது லஷ்மணின் திருமண வரவேற்ப்பு. இத்தனை எளிமையான மிக அழகான ஒரு மணமேடையை சமீபமாய் எந்த திருமணத்திலும் நான் பார்க்கவில்லை. 



அதே போன்ற மற்றுமொரு முயற்சி தான், முற்றிலும் இயற்கை உணவுமுறை சிறுதனிய உணவு விருந்து. எல்லா நிகழ்வுகளிலும் அவர் தனித்துவம் மிளிர்ந்து கொண்டிருந்தது. ஓவியர் ஒருவர், வந்திருந்த அனைத்து குழந்தைகளில் ஒவியத்தை வரைந்து தந்த வண்ணமிருந்தார். பின்னர் குழந்தைகளுக்கு பனை ஓலையில் பின்னப்பட்ட கிலுகிலுப்பை கொடுக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் திருமணம், வரவேற்ப்பு மேடையில் திருப்பாவை என்று மொத்தத்தில் மிக நிறைவான நெகிழ்வான நிகழ்வு லஷ்மணராஜா மற்றும் மேனகாவின் திருமணமும் அவர்களது வரவேற்ப்பும். அவர் இருவரும் சுவாதிக்கா சொல்வது போல சின்ன சின்ன சண்டைகள் போட்டு உடனுக்குடன் பெரிய சமாதானம் ஆகி சந்தோகம் பொங்க வாழ வாழ்த்துகிறேன்.




பின்னர் இணைக்கப்பட்ட அறிமுகம்:
லஷ்மணராஜா 2006 முதல் தெரியும். முத்தமிழ் என்ற இணைய குழுமத்திலிருந்து அறிமுகம். விழியன், நிலாரசிகன், ப்ரியா, ரசிகவ், ஷைலஜாக்கா, மஞ்சூர் அண்ணா என்று எம் நட்பு குழுவில் என்றைக்கும் எந்த போட்டி பொறாமை வெட்டி பேச்சுக்கு  இடமில்லை. முதன்முதல் லஷ்மணை சந்தித்தது இந்திரா நகர் பறக்கும் ரயிலில். அந்த சந்திப்பு நான், லஷ்மண், நிலாரசிகன் அனைவரும் ஷைலஜா அக்கா வீட்டுக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற போது நடந்தது. பார்த்ததும் மனவெளியின் ஆழத்திற்குள் வந்தமரும் ஒரு சிலரில் லஷ்மனும் ஒருவர். இந்த நேர்மையான நட்பை விவரிக்க தமிழில் வார்த்தைகள் குறைவு. சகதோழனாக என் வாழ்வில் துன்பமிக நாட்களையும், மிக இன்பம் தோய்ந்த நாட்களையும் கவனித்தவர் இவர். லஷ்மன் இல்லத்திற்கு பணி நிமித்தம் ப்ரிதாபாத்திலிருந்து வந்திருந்த சமயம் லஷ்மணின் அம்மாவின் கையால் ஒரு நாள் முழுதும் மூன்றுவேளையும் உண்டிருக்கிறேன். இந்த திருமணத்திலும் என்னை லஷ்மணின் அன்னை என்னை அன்புடன் கண்ணு என்று அழைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். 

Saturday, March 8, 2014

மகளிர் தினம்




இன்று மகளிர் தினம். எனக்கு இந்த தினத்தை கொண்டாடுவதில் அத்தனை உடன்பாடில்லை. என்றாலும் ஊரோடு ஒட்டி வாழ் என்று இன்று எனக்கு வரும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறேன். வாழ்த்துகிறேன். நேற்று மகளிர் தினவிழாவில் அலுவலத்தில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த மகளிர் தின கருத்தாக்கத்தில் உடன்பாடில்லை.

நான் இப்படி சொல்வதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. எனக்கு பெண் என்ற தடை என்றைக்குமே இருந்ததில்லை. எதை செய்ய நினைக்கிறேனே அதை செய்ய என்னால் இயலும். இடைவிடா முயற்சி மட்டுமே இதற்கு துணை புரிந்ததே அன்றி, நான் பெண் என்ற அடையாளம் இல்லை.

எனக்கு என் பார்வைக்குள் நடக்கும் அநியாயங்களை பொருத்து கொள்ள இயலாது. நான் BSF Polytechnique, Batharpur Delhi யில் பணி புரிந்த காலம் அது ஒரு இருபாலினர் கல்லூரி. ஒரு முறை சில ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். நான் அப்போது தான் அங்கே பணி புரிய ஆரம்பித்திருந்தேன். என்னுடன் இருந்த ஆசிரியை "கண்டுக்காம வாங்க லாவண்யா, இவங்க எல்லாம் ரௌடிங்க, மேலும் பெரிய ஆபிசர்ஸ் மகன் நாம் பிரிஸ்பாலிடம் புகார் அளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே ஒரு பையன் கொத்தாக பிடித்து ஒரு அறை விட்டேன், ஒருவன் மட்டுமே சிக்கினான் மற்றவர் எல்லோரும் ஓடி போயினர். பின்னர் அது பெரும் பிரச்சனை ஆகி எல்லாம் சரியானாலும் அந்த நிறுவனத்தை விட்டு வரும் வரை அனைவரும் சிலேகிக்கும் புலான் தேவியானேன். 

என்னால் சில விசயங்களை சகித்து கொள்ளவோ பொருமையாக போகவோ இயலாது. உதாரணத்துக்கு வேண்டுமென்றே சாலை விதிகளை மீறி, போக்குவரத்து நெரிசல் உருவாகும் சில இடங்களில் அலுவலக கேப் ஆகட்டும், எங்கள் சொந்த வண்டியாகட்டும் தயங்காமல் இறங்கி போய் சமதானமோ சத்தமோ போட்டு ஓரளவுக்கு பிரச்சனையை சரி செய்ய பார்பேன், சில முறை அது பெரிதாகவும் போய்விடும். ஒரு முறை அவ்வாறு பிரச்சனை செய்த வண்டி ஹரியான மாநில அமைச்சருடையதாம், உள்ளே ஏகே47 வைத்துக் கொண்டு இருந்தார்கள். நன்றாக சண்டை போட்டுவிட்டு வண்டிய நகர்த்தி விட்டு, வந்து அமர்ந்த உடன், வண்டி ஓட்டும் பையன் சொன்னான் "என்ன அக்கா பயமில்லாமல் இப்படி போய் சண்டை போடுங்க, கையில் வைச்சி இருக்கறதுல பொட்டு போட்ட என்ன பண்ணுவீங்க" என்றான். கொஞ்சம் பயம் அப்போது தான் வந்தது. இருந்தாலும் நான் செய்தது என்ன தவறு என்று சொன்னேன். கூட பயணிக்கும் தோழர், தோழியர் "லாவண்யா இப்படி எல்லாம் செய்ய கூடாது. கொஞ்சம் பொருமையா இருக்கனும்" என்றார்கள். என் கணவரும் அதையே தான் சொல்வார். இருந்தாலும் நான் இப்படி இருப்பதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை.

மற்றுமொரு சம்பவத்தில் நாங்கள் குளித்தலையிலிருந்து சென்னை செல்லும் மங்களூர் விரைவு வண்டியில் ஏறினோம். இரவு மணி 9. அடுத்த இருக்கைக்காரன் குடித்திருந்தான், ஒரிரு கெட்ட வார்த்தைகள் பேசினேன். பின்னர் நானும் என் கணவரும் அங்கே இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். திருச்சி வர சற்று நேரம் இருந்தது. மணி 9.30 தான் இருக்கும்,  அந்த குடிகாரன் "என்ன ஒரே சவுண்டா இருக்கு சலசலன்னு பேசிட்டு, மனுசன் தூக்க வேண்டாமா" என்று ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்ட போக, வேகமா எழுந்து போய் "ஏய் என்ன குடிச்சிட்டு வந்து கலட்டா பண்றீயா போலீஸ் ல சொல்லவா" என்றதும் "ஒரு பொம்பள போலவா பேசற, ரௌடி கணக்கா" என்றான். உடனே "நான் பொம்பளன்னு உனக்கு யார் சொன்னா" என்றேன். அது அசாதரணமாக வந்த வார்த்தையில்லை. எனக்குள் ஆணித்தரமாக கிடக்கும் எண்ணம். நான் பெண் என்பதில் பெரும் பெருமை கொண்டவள். நான் பெண் மட்டுமில்லை,  கருணை ஊற்றானவள், அனைவர்க்கும் உதவுபவள், அநியாயத்திற்கு பொங்கி எழும் ஆயிரம் கரம் கொண்டவள், பெரும் சக்தி. எனக்கு எழும் அவமானம், மரியாதையின்மை, துவேசம் அனைத்தையும் ஆயுதமாக அணிந்தவள். 

இத்தனை பேறாற்றல் ஒவ்வொரு பெண்ணிலும் உண்டு. ஆகவே அந்த பெரும் சக்தியின் அதிரூபத்தை கொண்டாட, ஒரு நாள் போதுமா? ஜனிக்கும் ஒவ்வொரு நொடியும், யுகமும் அவர்களுடையதல்லவா?

Friday, February 21, 2014

பிழை பொறுத்தருள்க

கடந்த ஏழு வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன். கிட்டதட்ட 380 பதிவுகள் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, புத்தக விமர்சனம், திரை விமர்சனம், பயணக் கட்டுரை, பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், இவை எதிலும் வகைபடுத்த இயலாதவை என்று என்னென்வோ எழுதி இருக்கிறேன். முத்தமிழ் என்ற இணைய குழுமத்தின் மூலமே நான் எழுத வந்தேன். எழுத ஆரம்பித்த போது தமிழில் தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள் விடுவேன். (தற்சமயமும் அப்படியே, பிழைகள் குறைந்திருந்தாலும் அறவே அற்று போகவில்லை). இன்று கூட தொலைந்து போதல் என்ற என்னுடைய பழைய பதிவு ஒன்றில் மூன்று பிழைகளையும், பண்ணையாரும் பத்மினியில் ஒரு பிழையையும் திருத்தினேன்.

  தமிழில் எழுதும் போது மட்டுமல்ல ஆங்கிலத்தில் எழுதும் போதும் கூட பிழைகள் செய்வது சர்வ சாதாரணம். நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விசயமாக(area to improve) அலுவலகத்தில் ஓரிரு முறை பிழையின்றி மடல் எழுத வேண்டும் என்று கூட குறிப்பிட்டு இருந்தார்கள். எனக்கு எழுத்து வடிவமாய் எழுதும் ஆங்கிலத்தில் தான் பிரச்சனை (written english) ஆனால் பேச்சு வழக்கு(spoken english) மிக அற்புதமாக வரும். அதுவும் அலுவலக பணி நிமித்தம் யாரிடம் பேசினாலும் மிக சரளமாக என்னால் பேச முடியும். ஒரு ஒலிபெருக்கியை கையில் கொடுத்து விட்டால் போதும் மணிக்கணக்கில் பேச முடியும். இத்தகைய பிரச்சனைக்கு காரணம் எனக்கு பில்டிங் ஸ்ரான்ங் ஆனா பேஸ்மெண்ட் வீக். 

  நான் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்றது தமிழ் வழி கல்வியில் அதனால் எனக்கு ஆங்கில அறிவும் மேலும் ஆங்கில வார்த்தைக் கலனும் மிகக் குறைவு. ஆங்கில வார்த்தைக்கு இந்த எழுத்து வருமா அந்த எழுத்து வருமா என்ற குழப்பமும் அதிகம் வரும். அது மட்டுமில்லாமல் ஐந்தாம் வகுப்பு வரை நான் படிக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பா இருவரும் ஆசிரியர்கள், அதனால் சிறு வகுப்புகளில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. இந்த காலத்தில் கொடுப்பது போல வீட்டுப்பாடம் எங்கள் அன்னை, பிதாவிற்கு அப்போதெல்லாம் எங்கள் மூலம் கொடுக்கப் படவில்லை, அதனால் வீட்டிலும் படிப்பதில்லை, பள்ளியிலும் படிப்பதில்லை. ஆறாம் வகுப்பு வந்த பின்னர் மற்ற குழந்தைகளில் அறிவும் மேலும் அன்னை, தந்தை வேலை பார்க்கும் பள்ளியில் அனைத்து ஆசிரியரிமுடம் புத்திசாலி என்று பெயர் வாங்க வேண்டும் என்ற சித்தியும் உந்தி தள்ள தத்தி தடவி ஏதோ படிக்க ஆரம்பித்தேன்.  

  நான் ஏழாம் வகுப்பு  படிக்கும் போது என்னுடைய ஆங்கில ஆசிரியர் ஒரு முறை தந்தை எழுதுவது போல விடுமுறை விடுப்பு எழுதி வரச் சொன்னார். எனக்கு தெரிந்து முதல் வீட்டுப்பாடம் அது தான் என்று நினைக்கிறேன். அப்பாவிடம் இதை சார்ந்து கேட்க மறந்து போயிந்தேனோ அல்லது தயக்கமோ நினைவில்லை. வீட்டில் கடிதம் எழுதாமல் பள்ளிக்கூடம் போய் சேர்ந்து, அவசர அவசரமாக என்ன எழுதினேன் என்று தெரியாது, ஒவ்வொரு வார்த்தைக்கு கீழும் சிவப்புக் கோடு, உச்சகட்டம் என்னவென்றால் என் தந்தையின் பெயர் சுந்தரராஜன், R.சுந்தரராஜன், அவர் படித்த பள்ளியில் இரண்டு R.சுந்தரராஜன்கள் இருந்ததால் உப்பலியபுரம் R.சுந்தரராஜன். அதாவது U.R.சுந்தரராஜன், அந்த பெயரை கூட முழுதாக எழுத தெரியாமல் yours sincerely, URS( அப்பாவை பள்ளியில் அனைவரும் URS Sir என்றே அழைப்பார்கள்) என்று எழுதி வைத்திருந்தேன். ஆங்கில ஆசிரியர் மிகுந்த கோபத்துடன் "எவ்வளவு திமிர் என்றால் URS என்று எழுதுவாய் அது நாங்கள் எங்க வசதிக்காக அழைக்கும் பெயரல்லவா?" என்று அனைவர் முன்னிலையில் திட்டியது மட்டுமில்லாமல் அந்த கடிதத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டார். அம்மா விளையாட்டு ஆசிரியை, அனைவர் முன்னிலையிலும் ஓங்கி ஒரு அறை விட்டார். அன்றிலிருந்து ஒழுங்காக படிக்க ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

 எழுதும் போது பிழையின்றி எழுத இயலாமல் போவதற்கு கவன குறைவும், அவசர புத்தியும் மிக முக்கியமான காரணம். மேலும் சில இடங்களில் ஒற்றுப்பிழையும் ரகர, றகர மயக்கமும் எனக்கு மிக அதிகமாக உண்டு. பல முறை படித்து பார்த்தாலும் என் கண்களுக்கு சில பிழைகள் தென்படுவதே இல்லை. இவ்வாறு பிழையோடு எழுதும் காரணத்தால் பல முறை அவமானமும், பிழையோடு எழுதினால் கவிதை தெரியாமல் பிழை தான் கண்ணுக்கு தெரிந்து கவிதையின் அழகு கெடுகிறது என்ற சாடலும், பிழையின்றி எழுத தெரியாமல் ஏன் எழுத வந்தீர்கள் என்ற வசையும், பெருங்குற்ற உணர்வும் என்னை ஏகத்துக்கு ஆட்டி படைக்கும். எழுதவே வேண்டாமே என்று கூட அடிக்கடி நினைப்பேன்.

  முத்தமிழில் எழுதிக் கொண்டிருந்த சமயம் மஞ்சூர் அண்ணா என்னுடைய எல்லா பதிவுகளுக்கு பிழை திருத்தித் தருவார். நதியலைடாக்டர். சிவசங்கர், டாக்டர். சங்கர், நிலாரசிகன் அவர்களும் அந்த உதவியை செய்து இருக்கின்றார். பண்புடனில் எழுதும் போது சில சமயம் ஐயப்பன் கிருஷ்ணன் உதவி இருக்கிறார். சா. முத்துவேல் வலைச்சரத்தில் சில பதிவுகளுக்கு பிழைத் திருத்தி தந்திருக்கிறார். கவிதை தொகுப்புகளுக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன், தயாளன், கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று பலரும் பிழைகளை நீக்க உதவி இருக்கின்றார்கள். இதே உதவியை செய்த வேறு சிலரை நான் மறந்து விட்டிருக்கலாம். அனைவரையும் நன்றிகளுடன் நினைவு கூர்கிறேன். மேலும் என்னுடைய பிழைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஆகவே என் சகோதர சகோதரியரே நட்புகளே அன்போடு உங்களிடம் நான் கேட்டு கொள்வதெல்லாம் ஒன்று மட்டுமே. அறியாமல் தெரியாமல் நான் "பேயானாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே" இது எழுத்துப்பிழைக்கு மட்டுமின்றி என்னுடைய ஏனைய எல்லாப் பிழைகளுக்கு சேர்த்ததாகவே இருக்கட்டும் அது.

Sunday, February 16, 2014

பண்ணையாரும் பத்மினியும்:



பெயரை பார்த்ததும் ஏதோ வித்தியாசமாக தோன்றினாலும் மிக அழகான படம். பாரதிராஜா முதற்கொண்டு அறிமுகம் செய்து வைத்த வில்லத்தனமான பண்ணையார்களையே இதுவரை கண்டிருந்த தமிழ் திரையுலகிற்கு ஒரு நாற்பதாண்டுக்கு முன்னர் இருந்திருக்க கூடிய நல்ல மனம் கொண்ட பண்ணையாரை(என்ன தான் இவ்வளவு நல்லவராக இருந்தாலும் காரில் பிணத்தை கொண்டு போக சொல்வது எல்லாம் ஓவர்) காண இப்போது தான் கொடுத்து வைத்திருக்கிறது.

கார் அது கண்டசாவாயினும், பத்மினியானும் யாருக்கும் மோகம் குறைவதில்லை. பதினொன்னாம், பணிரெண்டாம் வகுப்புக்கு மட்டும் தான் உதவும் என்பதற்காக ஒரே செட் யுனிபார்ம் வைத்து எனது +1 , +2 முடித்த(அவ்வளவு சிக்கனம்) எனக்கு இருந்த பெரும் கனவு, திருமணத்திற்கு பின் சொந்த ஊருக்கு வரும் போது காரில் தான் வந்து செல்ல வேண்டும் என்பது. மிடில் க்லாஸ் மக்களுக்கு தன்னுடைய லட்சிய கனவாக இருப்பது சொந்த வீடும், சொந்தமாய் சின்ன காரும்.

முதன் முறை கார் வாங்கும் ஒவ்வொருவரும் அதனை மிகவும் நேசிப்பார்கள் முதன்முறை கார் ஓட்ட கற்பதும், அப்போது பயம் கொள்வதும், கற்று தருபவரின் திட்டுகளை பெறுவதும், அப்போது காருக்கு சின்ன அடியோ, கோடோ விழும் போது மனம் பதறுவதும், வீட்டில் ஒரு ஆள் போல் ஆகிவிட்ட கார் ஏதோ காரணத்திற்காக எங்கோ வைத்துவிட்டு வந்து அது திரும்ப வந்து அது நின்ற இடத்தை நிறப்பும் வரை அவ்விடத்தின் தனிமையை நுகர்வதும் என்று சிற்றுந்து வைத்திருக்கும் ஒவ்வொருவரின் தனித்தனி மென் அனுபவத்தை, நல் நிகழ்வுகளை, அதன் பொருட்டு அனுபவித்தை மன வேதனையை, சிறு சண்டைகளை கிளறிப் போகிறது.

வித்தியாசமான கதைக்களம், ஒரு காருக்கு ஊருக்குள் வரும் மினி பஸ்ஸை வில்லன் போல சித்தரித்திருப்பது அழகு. பின்னணி இசை அசத்தல், காரை பண்ணையாரும், பண்ணையார் மனைவியும், டிரைவர் முருகேசன் ஸ்பரிசத்து உணரும் பல்வேறு தருணங்களில் இதயத்துடிப்பு போல அமைத்திருப்பதும், மேலும் மினி பஸ் வரும் போது வில்லத்தனமான ஒரு இசை அமைத்திருப்பதும் அருமை. மொத்தத்தில் பின்னணி அற்புதம்.

நடிப்பில் எல்லா பாத்திரத்தங்களும் கன கச்சிதமாக செய்து இருக்கின்றார்கள். ஜெய்பிரகாஷ் ஆகட்டும் விஜய் சேதுபதியாகட்டும்(தனது முக்கியத்துவம் போய்விடுமோ என்று முகபாவம் காட்டுவதில் ஆகட்டும், காதல் காட்சிகளில் ஆகட்டும், பண்ணையாருக்கு காரோட்ட கற்று தருவதில் ஆகட்டும் மனிதன் அசத்துகிறார்), பண்ணையாரின் மனைவியாக(ஜெய் பிரகாஷ்க்கு அக்கா போல் இருக்கிறார் ஆயினும் முகபாவம் படு நேர்த்தி) வருபவரும், சிறு சிறு பாத்திங்களில் வருபவரும்(கார் மெக்கனிக், காரில் ஏற விரும்பும் சிறுவன், பெருச்சாளி என்கிற பீடை) அனைவரும் மிக அழகாக நடித்திருக்கின்றார்கள். படம் முழுக்க நல்லது சொல்லி கெடுத்தலாக விளைவிக்கும் பீடை பின்னர் கார் சாவியாகி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்,

இந்த கதைக்கு காதநாயகனின் காதல் அதனால் ஒரு கதாநாயகி, அதை சார்ந்த சில பாடல்கள் இடைச்சொருகலாக இருப்பது ஒரு சிறு குறை. மகள் காரை கேட்டு வாங்கிக் கொண்டு போக இருக்கிறார் என்பதை காட்ட முன்னிரண்டு காட்சிகளில் அவள் வந்து தொலைபேசியும், மறுபடி வானொலி பெட்டியும் எடுத்து செல்வது போலவும், அதற்கு அம்மாக்காரி பொருவது போல வருவது கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருந்தது, மகளுக்கு எதுவும் தருவதில் தாய்க்கு எப்போதும் அலாதி இன்பமே இருக்கும்.

படம் பார்த்து விட்டு வந்த போது ஒரு நல்ல நாவல் படித்தது போலிருந்தது. மொத்தத்தில் நல்ல படம், அவசியம் பார்க்கலாம். இது ஒரு குறும்படமாக வந்து பேர் பெற்றதாக கூகுளில் தகவல் இருக்கிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா ஒரு நல்ல கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது புரிகிறது. அறுதலாக இருக்கின்றது. வாழ்த்துகள் பண்ணையாரும் பத்மினியும் குழு.

Thursday, January 23, 2014

Coffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்


நான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அம்மாயி தான் காப்பி குடிக்கும் போது நான் ஏங்கி பார்க்கிறேன் என்று ஒரு வாய் குடிக்க கொடுத்து பழக்கிவிட்டதாக அம்மா சொல்வார்கள். அம்மா தடுத்தாலும் பிள்ளை ஏக்கமா பாக்கறா குடுத்த சப்பு கொட்டி குடிக்கிறா ஏன் தடுக்கிறே என்று அடக்கி விடுவார்களாம். அப்படி என்னை தேவியாக்கும் காப்பி பாணம் எனக்கு தொட்டில் பழக்கம். அதற்காக எல்லா காப்பியையும் குடித்து விட மாட்டேன், நல்ல A ரக பிபேரி காப்பி கொட்டைகளை 50% விதமும் B ரக காப்பி கொட்டைகளை 50% சரிபட வறுத்து, 100 கிராமுக்கு 10 கிராம் சிக்கரி கலந்து அரைத்து வைத்த திருச்சி புகழ் பத்மா காபியை அல்லது கிராமத்தில் காப்பி ராமு அண்ணா கொண்டு வந்து தரும் ரமா காபி இவை மட்டுமே பிரியமானது. அதுவும் காப்பிக்கு பாலில் , தண்ணீர் அளவு அதை காய்ச்சும் முறையும் மிக முக்கியம், டிக்காசன் அதிகமா சக்கரை குறைவாக சேர்த்து ஒரு சிப் அருந்தும் போது நாவில் பரவுமே ஒரு சுவை, ஆஹா காப்பி மனிதரை தேவராக்கும் பாணம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.

திருமணமாகி ப்ரிதாபாத் போய் சேர்ந்த புதிதில் காப்பித் தூள் சரியாக கிடைக்காத காரணத்தாலும் மேலும் அங்கே கிடைக்கும் பாலில் கலந்த காப்பி சுவை நாவிற்கு ஒவ்வாத காரணத்தாலும் தேனீரில் இஞ்சி எலக்காய் இன்னபிற விசயங்களை சேர்த்து ஒருவாறு நாவினை ஒப்பேத்தி கொண்டிருந்தேன். கிட்டதட்ட ஒராண்டுக்கு காப்பி அருந்துவது அறவே இல்லாது போனது. பின்னர் டெல்லி முனீர்கா ரமா ஸ்டோர் அருகே ஒரு காப்பித் தூள் கடை மிக சிறப்பாக காப்பித் தூளை அரைத்து தருவார்கள் என்று அறிந்து அங்கே போய் வாங்கி வந்து காப்பி அருந்தும் போது திருச்சி பத்மா காபியின் அதே சுவையை மீட்டெடுக்க முடிந்தது. இந்த சுவைக்காக வேறும் காப்பிப் பொடி வாங்குவதற்காகவும் அந்த சாக்கில் சரவணபவனில் சாப்பிடுவதற்காகவும் ப்ரிதாபாத்திலிருந்து வார இறுதியானால் டெல்லி செல்வோம். அப்படிப்பட்ட ஒரு பொற்காலமது.

பெங்களூர் வந்து தனியளாக இருந்த ஒரு ஆறு மாத காலத்தில் என்னிடம் மிக குறைவான பாத்திரங்களே இருந்தது, அதில் காப்பி பில்டர் இல்லை. அதனால் மீண்டும் இஞ்சி ஏலக்காய் டீக்கு என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். அதன் பின்னர் அம்மா கூட வந்து இருக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் எப்படி தான் காப்பியை விட்டாயோ அதிசயமா இருக்கு என்றார்கள். அவர்கள் அப்படி ஆச்சரியப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஒரு படி உயர டம்பளிரில் முக்கால்பாகம் காப்பி கொடுத்தால் கூட முகம் சுண்டிக் கொள்வேன் என்று முழு டம்ளராக அல்லவா காபிக் கொடுத்து வளர்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் போய் அம்மா "வயிறு காப்பிக்கு பசிக்குது" என்று கூட சொல்வேனாம். அது எனக்கு நினைவில்லை ஆனால் அம்மா இதை அடிக்கடி சொல்வார்கள். அவ்வளவு பிரியம் எனக்கும் காப்பி மீது.

இத்தனை காப்பி ப்ரியம் கொண்ட நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே என் அலுவலத்தில் காப்பி வாசனை, அலுவலத்தில் மட்டுமல்ல ஸ்டார் பக்ஸ் காபே, லாவாசா இட்டாலியன் காபே, இத்தாயி என்று எல்லா இடத்திலும் ஏகபோகமாய் காப்பி மணம் மனதை மணக்குமளவுக்கு ததும்பி வழியும். நாவை அடக்கவே முடியாதபடி அந்த காபியின் மணம் நம்மை எங்கிருந்தாலும் ஈர்க்கும். அத்தனை ஆர்வமாய் போய் அவர்கள் தரும் சின்ன வாளி அளவில் இருக்கும் பெரிய குவளையில் காப்பியை நுரை பொங்க எடுத்து வந்து ஒரே ஒரு சிப் வைத்தால் போதும் காறி துப்பும் அளவிற்கு காப்பியின் மீது வெறுப்பாகி விடும். அமெரிக்கா சென்ற முதல் வாரத்தில் அலுவகத்தில் தினம் காப்பியை எடுப்பேன் பின்னர் அப்படியே வாஷ்பேசனில் கவிழ்த்து விடுவேன். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் வரை முழுமையாக காப்பியை வெறுக்க ஆரம்பித்தேன். அங்கே தேனீரும் நாம் நினைக்கும் சுவையில் கிடைக்காது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நல்ல காப்பி கிடைக்கவில்லையே என்று நா ஏங்கி போகும் தமிழ்நாட்டு காப்பி ப்ரியர்களுக்கு காப்பி ப்ரியர்களுக்கு சன்னிவேலில்(Sunnyvale) இருக்கும் கோமள விலாஸ் (திருச்சிக்காரர் இயக்கி வருவது) http://www.komalavilas.com/ மற்றும் http://www.madrascafe.us/ மெட்ராஸ் காப்பேயும் நல்ல வடிகால். சாப்பாடு, டிபன் முக்கியமாக காப்பி எல்லாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையுடன் கிடைக்கும். ஆகா அமெரிக்கா சென்று வந்த முதல் ஆறு மாதம் நான் காப்பியை அறவே தொடவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள் அங்கிருக்கும் காப்பி என்னை எந்த அளவு வெறுப்பேத்தி விரட்டி இருக்குமென்று.

தற்சமயம் அக்குபிரஸ்ஸர் என்று ஒரு உடலையே மருத்துவர் ஆக்கும் மருத்துவ முறையொன்றின் பொருட்டு பால், தயிர் இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்று, காப்பி டீ குடித்தே ஆக வேண்டுமென்றால் ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காப்பி குடியுங்கள் என்றும் அறிவுத்தப்பட்டு, பால் சேர்த்து காப்பி குடிப்பது முற்றாக நின்று போனது. கடந்த முறை திருச்சி சென்ற போது நவகிரக கோவில்கள் சென்றதில் எனக்கு பிடித்த விசயம் நாங்கள் அருந்திய கும்பகோணம் டிகிரி காப்பியே, மேலும் திருச்சியில் இருந்து பெங்களூர் வரும் நெடுங்சாலையில் தீபாவளிக்கு சென்று வரும் போது தான் கிருஷ்ணகிரி டோல்(toll) தாண்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் டிகிரி காப்பி கடையொன்றை கண்டோம். அங்கே காபி அருந்துவதற்கென்றே அடுத்த முறையும் காரில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன் அவரிடம், ஹூம்ம்ம்ம் இனி என்று பால் ஊத்தி நல்ல காப்பித் தூளால் தயாரிக்கப்பட்ட டிக்காசன் காப்பியை எப்போது குடிப்பேனோ தெரியவில்லை. I miss you coffee.

இப்போது பரிபூர்ணமாய் உணர்கிறேன் காப்பி மனிதரை தேவனாக்கும் பாணமென்று நன்றி சுகுமாரன் சார்.  பிரபஞ்சன் எழுதி இருப்பதாக அவர் தான் சொன்னார்.

Monday, January 13, 2014

மென் உணர்வுகளின் சங்கமிப்பு - திரிவேணி

 கவிஞர் தூரன்குணாவின் முதல் சிறுகதை தொகுப்பான "பாதரசம்" வெளியீடாக வந்திருக்கும் "திரிவேணி" சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் நெஞ்சார்ந்த நினைவுகளை புரட்டிப்பார்க்க ஏதுவான, மிக எளிய மொழிவளத்தில் எழுதப்பட்ட கவித்துவமான நூல். ஒரு நல்ல கதை சொல்லியின் கதை அவனை கதைக்குள் காட்டிக் கொடுக்கும். அதனை வாசிக்கும் போது அவன் உணர்ந்த வலி, துக்கம், சந்தோசம், பரவசம் எல்லாவற்றையும் வாசிப்பவர் உணர இயலும். இன்னும் மிகைத்து சொன்னால் வாசிக்கும் தருணத்தில் வாசகன் தானே கதைக்குள் சொன்று கதையாளியாக மாறும் ஒரு விசித்திர அனுபவம் தருவதே மிக சிறந்த எழுத்தின் வடிவம். அது கதையோ, கவிதையோ எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். அத்தகைய கூடுவிட்டு கூடு பாயும் அனுபவத்தை இந்த தொகுப்பின் பல கதைகளில் தந்திருக்கிறார் தூரன் குணா. வாசிப்பு ஒரு பேரனுபவம், சில நூல்களை கையில் எடுத்தவுடனே மின்னல் வேகத்தில் முடித்துவிடும் சுவாரஸித்தில் எழுத்தப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட இலகுவான மொழியின் வசீகரமாக எழுத்தப்பட்டது தான் இந்த திரிவேணி. கடுமையான பணிகளுக்கு இடையில் வேலையில் போக்கினையும் மன அழுத்தை குறைத்து கொள்ளவும் வேறு எதேனும் வலையில் படிக்கும் இடைப்பட்ட நேரத்தில்(6 மணி நேரம்) திரிவேணியை வாசித்து முடிக்க முடிந்தது.
 தூரன் குணா முன்னுரையில் கதைக்கான களத்தையும் தன் பற்றிய பின்புலத்தையும் வாழ்வாதாரம் வேண்டி தன்னை தானே ஊர்கடத்தி கொண்ட பலரது குரலை "நினைவின் ஊரை சுமந்து  கொண்டு நிலவொளியில் வாழும்" என பிரகணடப்படுத்துகிறார். இவர் கதை வெளிவந்த பத்திரிக்கைகளும், இவருடன் உரையாடலில் இருக்கும் ஆளுமைகள் நாஞ்சுண்டான், கோணங்கி, ஆதவன் தீட்சண்யா மற்றும் பலரும்,  இவரின் பிம்பத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிக பிராகாசமாக்கித் தருகின்றார்கள். சில கதைகளை வடிவங்களை உதாரணமாக "சாரப்படுத்துதல்" வடிவத்தில் முயற்சித்தாக குளம்படி நிலம் என்ற கதையின் வடிவம் சார்ந்தும், உயிரெழுத்து இதழில் வெளியாகி, இந்த நூற்றாண்டின் சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டதாக இவர் சொல்லி இருக்கும் "கர்ண மகாராஜா" சிறுகதையினை சார்ந்தும் எனக்கு மாற்று கருத்துண்டு. அதை இறுதியில் பகிர்தலே சிறந்தது.
  தூரன் குணா பயில்வது கவிதை என்று, இவரது இரண்டு கவிதை நூல்கள் வெளியாகி இருக்கின்றது என்ற அவரது அறிமுக உரையின் வாயிலாகவும், "செந்தீயின் சிறுதுளிகளாய் காடெங்கும் மெட்டபாப்பாத்திகள் தன் போக்கில் குழந்தைகளென அலைந்து கொண்டிருக்கும்"(குளம்படி நிலம்), "சுண்ணாம்பு பூசப்பட்ட காரைசுவர்களுக்கு வெளியில் கசியும் மின்விளக்கொளி, மௌன ரகசியமாய் இருளில் வெளியில் ததும்புகிறது"(மின் மினிகள் எரியும் மூன்றாம் சாமம்), "பயனுடைய ஒன்றாக எனக்கு வாழ்வில்லை, அது காலி செய்யப்பட வேண்டிய கோப்பை"(கைக்கிளை சிலுவை)  போன்ற வரிகளாலும் அறிகிறேன்.

  "சுகிலதம்" இந்த கதையே இந்த தொகுப்பினை சார்ந்து உடனடியாக என்னை எழுத தூண்டியது. தலைப்பினை பார்த்து கொஞ்சம் மனசங்கடத்தோடே படிக்க ஆரம்பித்தேன் ஆயினும் துளியும் விரசமற்ற கதையிது. கதையாளியின் கதை கற்பனை அனுபவத்தை அப்படி உணரக்கொடுத்த இந்த கதையில் அகம் சார்ந்த சில உணர்வுகள் மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழந்தையின்மைக்கு தான் காரணமோ ஆகிவிட கூடுமோ என்ற அகச்சிக்கலை தன் மனைவியிடம் மிகுந்த கடுமையான வார்த்தை வெளிப்படுத்துவதிலும், சில நாட்களாக வேலையில் சரிவர செய்யாது இருப்பதாய் மேளாளர் சொல்லவதாய் பதித்தும், மரணம் சார்ந்த அச்சம் கொள்வதும் என்று மிக அழகாக வரைந்திருக்கிருக்கிறார். இந்த கதையினை படித்து முடித்ததும் ஒரு இனம் புரியாத உணர்வொன்று உறக்கம் கலையாத ஒரு சராசரி நாளை உத்வேகமும் மிக ஆக்கபூர்வமாகவும் மாற்றி தந்தது. கைகிளை சிலவை என்ற கதையும் எந்த வித மாற்று கருத்துமற்ற சிறந்த கதையாகும். மேலும் பல சிறந்த கதைகளான திரிவேணி, கொவ்வை படர்ந்த வேலி, அந்தர நதி, கள்ளன், இருளில் மறைவர்கள் போன்ற சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த சிறுகதை நூல்.
 
  அந்தர நதி, சுந்தர ராமசாமியின் திரைகள் ஆயிரம் என்ற நெடுஞ்கதையில் வரும் புதிர் முடிச்சுகளை போல் முடிச்சுகள் கொண்டதாக இருக்கின்றது. தனியாய் வாழும் ஒரு பெண்ணின் மேல், ஒரு ஆணுக்கு இருக்கும் இருக்கும் பொதுபுத்தி சார்ந்த எண்ணம் இந்த கதையில் நாயகனுக்கும் இருக்கிறது, இந்த கதையில் நாயகி போதையில் மயங்கிய அவனுக்கு உதவும் போது கையை பிடிக்க, குருதி படித்த கத்தியை போலிருந்த ஒரு அழுத்தமான பார்வையை வீசி விட்டு போவதகாக சொல்லி இருப்பது நாயகியின் நிலைபாட்டையும் அவளை சார்ந்த புதிரை மேலும் வலுவாக்கி இருக்கின்றது. மிக ஆறுதலாக இருக்கின்றது இந்த கதையின் கண்ணியம். மேலும் இருளில் மறைபவர்கள் என்ற கதையில் வரும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மனிதாபிமனத்தை அழகாக படம் பிடித்திருப்பதும் கண்களை நிறைக்கிறது.
  காலச்சுவடில் வெளியான திரிவேணி(நூலின் தலைபினை கொண்ட சிறுகதை) என்னை மிக கவர்ந்த கதைகளில் ஒன்று. கதை அம்மா(குயிலாத்தாள் என்கிற மயிலாத்தாள்), மகள்(சரசு என்கிற சரஸ்வதி), பேத்தி(பாப்பா என்கிற மைதிலி) மூன்று பெண்களை சார்ந்தது. மிக நெகிழ்வான கதை. அன்னை இளம் வயதில் விதவையாகிறாள், அவள் பெண் கணவனுடன் வாழ பிடிக்காமல் அம்மாவை அண்டி வருகிறாள், அவள் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த ஒரு கதைக்குள் மூன்று கதைகள் இருக்கின்றன, மூன்றையும் சேர்த்து படித்தால் முழுகதையாகவும் இருக்கிறது. சிறுகதையின் இந்த வடிவம் மிக புதுமையாகவும் வரவேற்க்க தக்கதாகவுல் இருக்கின்றது. அதே சமயம் இந்த கதையிலும் சரசு கணவனை இந்த அளவு வெறுக்க என்ன காரணமென்று சொல்லப்படாமல் போனது புதிராகவும் அதே சமயம் கதையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைந்ததாகவும் எனக்கு தெரிகின்றது. மைதிலி தற்கொலைக்கு செய்யும் அளவுக்கான கொடுங்காரணம் (அம்மா பெண்ணை திட்டும் வெறும் வாய் வார்த்தை திட்டுகளுக்காகவா ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வாள்?) எதுவுமில்லை. அந்த தற்கொலை பாரங்கல் சுமப்பது போன்ற வலியினை தரவேண்டிய அந்த சம்பவம், ஒரு நீர்குமிழி வெடித்தது போன்ற அதிர்வை மட்டும் தருவது மட்டுமே இந்த சிறுகதை சிறு குறை.  ஒருவேளை இது தூரன் குணா அவர்கள் கண்டறிந்த ஒரு சம்பவமாக இருக்கும்.  கதைபடுத்தும் போது சில இடத்தில் , சம்பவத்தின் ஊகம் மட்டுமே எழுத்தாகி இருக்கிருக்கலாம் அதனால் ஆழம் கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. மற்றபடி இது மிக சிறந்த கதையாகும்.

 "கொவ்வை படர்ந்த வேலி" என்ற சிறுகதை கல்கியின் சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதையெனயும் அதுவே தனது முதல் கதை என்றும் இந்த கதையை சார்ந்து தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்து இருக்கிறார். ஒன்று விட்ட அண்ணன் தங்கையின் இனிய உறவினை, அன்பை, சகோதர பாசத்தைப் பற்றி பேசுகிறது கதை. கன கச்சிதமாக அமைந்து விட்ட கதை களத்தில் உடன் பிறந்த தங்கையற்ற அண்ணன் சகோதரியின் பாசத்திற்கு ஏங்கும் மேலும் சில காட்சிகளையும், சித்தப்பாவின் அப்பாவின் பகைமையுணர்வை வேலி தாண்டி வரும் கிடாயை மிரட்சியாக துரத்தும் சிறுமியின் காட்சி சித்திரத்தில் சொல்லியதில் மட்டுமின்றி இன்னும் அழுத்தமான நிகழ்வுகளை சேர்த்திருந்தால் இந்த கதை ஆக சிறந்த கதையாகி இருக்கும். இவர் முதல் கதை என்றதால் இவை விடுபட்டு போயிக்கக்கூடும். ஆயினும் மிக அழக்கான சிறந்த சிறுகதை இது.

கார்போரேட் என்ற கதையில் கடைசி வரி மட்டுமே கதையின் மொத்த உணர்வை சொல்லி விடுகிறது. அந்த வரியை மட்டுமே ஒரு வரி கதையாக்கி இருந்திருக்கால் அத்தனை அழுத்தம் கொண்ட வரி அது. அந்த வரிக்கு முன் வரும் அனைத்து சம்பவங்களும் படிக்க சுவாரஸியமான சிலர் தற்காலத்தில் அனுபவத்து கொண்டிருக்கும் சம்பவங்கள். கள்ளன் என்ற கதையிலும் கடைசி வரி கதையை வேறு ஒரு தளத்துக்கு உயர்த்தி வைக்கிறது. கடின மனங்களிக்கிடை மென்மை, மென் மனங்களிடை உள்ள கள்ளம், பணம் வெறும் பணம் எதை தான் செய்ய வைக்காது?
கிழக்கில் ஒரு காலம் மற்றும் குளம்படி நிலம் போன்றவை நவீன கதைகளுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. சகடம் மற்றும் கர்ண மகாராஜா இரண்டும் வேறு வடித்தில் முயன்றிருந்தால் இன்னும் மிக சிறந்த கதையாகி இருக்க கூடும். இவற்றை அணுகுவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சிறுகதை வடிவ மாற்று முயற்சிகளில் விளைவான அதே சமயம் சம்பவங்கள் அழுத்தி பின்னப்பட்ட கதைகளாக அமைந்துள்ளது. கதைத் தொகுப்பில் சில கதைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் கதைகள்.

ஒரு விதத்தில் இந்த தொகுப்பின் ஒரு சில சுமாரான கதைகள் என்று நான் கணித்து வைத்திருந்த கதைகளில் குளம்படி நிலமும், கர்ண மஹாராஹாவும் உண்டு. ஒருவேளை இந்த சிறுகதைகளின் வடிவம் சார்ந்த குழப்பம் என்னை அந்த சிறுகதைகளைகளிலுள் பயணப்பட தடுத்திருக்கூடும். குளம்படி நிலத்தில் கதை முற்று பெறவில்லையோ அல்லது சொல்ல வேண்டிய முக்கியமான கருத்து விடுபட்டு போனதோ, சில சம்பவங்களின் தொகுப்பாகி போனதோ என்ற குழப்பமும் உண்டு எனக்கு. மேலும் சுமாரானென நினைத்த கதைகளே மிக சிறந்த கதைகளாக பேசப்பட்டிருக்கும் போது மற்ற கதைகள் சார்ந்து சொல்ல வார்த்தைகள் வசப்படவில்லை. இருப்பினும் திரிவேணியில் வாசிக்கும் போது எனக்குள் பதிந்த சில விசயங்களை பகிரும் பொருட்டே இப்பதிவு.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம்
இந்த புத்தகத்தினை வாங்க

 திரிவேணி(சிறுகதைகள்)-தூரன் குணா-பாதரசம் பதிப்பகம் (ஸ்டால் எண்:654)