Monday, December 30, 2013

ஈதேன்ன பேருறக்கம்?

 மார்கழித் திங்கள் பக்தி இலக்கியம் சார்ந்த ஒரு பதிவை இந்த வருடம் பதிக்க வேண்டும் என்று மார்கழி முதல் தேதியே நினைத்திருந்தேன், ஆனால் சோம்பலும் தூக்கமும்(உறக்கம் என் பலகீனம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரம் உறக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்) உலகிற்கு கிடைப்பதற்கரிய பல விசயங்களை என்னை பதிப்பிக்க விடாமல் தொடர்ந்து தடை செய்கிறது. மார்கழி பனிரெண்டாம் நாள் திருப்பாவையில் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்" என்ற படித்த போது என்னை தான் சாடினாளோ ஆண்டாள் என்று தான் நினைத்தேன். இந்த பேருறக்கத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு இன்று எழுதி விடவேண்டும் என்று நினைத்து அலுவலகம் அடைந்த போது(பொதுவாக நான் எழுதுவது அலுவலத்தில் தான்) என்னை தவிர என் குழுவில் அனைவரும் விடுப்பெடுத்திருந்த காரணத்தால் இன்னொருத்தரின் சுமையை சுமக்கும் பொறுப்பு வந்து இடைபட ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை சார்ந்த எந்த பதிவையும் பதிப்பிக்க இயலாமல் போனது.  ஆனால் இன்று மார்கழி 15ஆம் நாள் சற்று எள்ளலாக ஆண்டாள் என்னை கேட்டாள் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதையோ?"  எழுத தொடங்கியாயிற்று.



உறக்கத்தை பல்வேறு விதமாக சொல்லி இருக்கிறார் ஆண்டாள். என்ன இப்படி துயில்கிறாய் குர்பகர்ணன் உறக்கத்தை உனக்கு தந்து விட்டானா என்றும், துயிலணை மேல் கண் வளரும்(கண் வளர்ந்தல் - அட போட வைக்கும் சிந்தனை), பேருறக்கம்,  மந்திரிக்க பட்டது போல ஏமப் பெருந் துயில் என்று பல்வேறு உறக்கத்தை பட்டியலிட்டு மிக அதிகாலை நேரத்தில் ஊரையே உறக்கத்திலிருந்து எழுப்பி, "குள்ளக் குளிரக் குடைந்து நீராடாடி", கண்ணனை தொழ அவன் இல்லம் தேடிச் சென்று வாயில் காவலனை எழுப்பி கண்ணின் பெற்றோரை எழுப்பி, பின்னர் கண்ணனையே எழுப்பி(கண்ணனும் கடும் சோப்பேறி தான், உலகின் பெரும் பகுதி கடல், அதில் பள்ளி கொண்ட பெருமாளை, திருப்பள்ளி எழுச்சி பாடி பாடி எழுப்பியவர் எத்தனை பேர், இன்னும் அவன் எழுத பாடில்லை). இத்தனை ஆரவாரத்தோடு பத்தியை கொண்டாடுகிறாள், தென்நாட்டு ராதை ஆண்டாள்.  பக்தி இலக்கியத்தில் கடவுள் மேல் காதல் கொள்வதே பக்தியின் உச்சகட்டம்.   ஆண்டாள் மட்டுமல்ல ஆழ்வார்களில் சிலர், திருவெம்பாவை எழுதிய மாணிக்க வாசகரும் இவ்வாறே. இதில் சில்லென்று (சில்லென்றெழையென்மின் என்பதும் ஆண்டாள் சொன்னதே) பக்தியை, காதலை தேன்மதுர தமிழை இனிக்க இனிக்க சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்கு காலையில் "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்"என்ற மாணிக்க வாசகர் வரிக்கு "நீயே என் தலைவன் என்று ஒற்றைகாலில் சிவதவம் செய்யும் பூச்செடிகள்" என்ற விளக்கம் சொன்ன மாணிக்க வரிகளை படித்தது இன்றைய நாளை தொடங்க போதுமானதாக இருந்தது.





"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" இந்த ஒருவரி போதுமானது பிரமாண்டமான சிவபெருமானை,(பெங்களூருவில் முருகேஷ்பால்ய அருகில் ஒரு பிரமாண்ட சிவன், 108 சிவ லிங்களும் உள்ள கோவில் உள்ளது, சிவ பெருமான் என்றால் அந்த பிரமாண்ட வெண் சிலையே நினைவுக்கு வரும்) அவன் அற்புத வடிவத்தை விளக்கி கூறிட. திருவெம்பாவையிலும் துயில் எழுப்புவது போன்ற காட்சிகள் சில உண்டு, இங்கும் மார்கழி மாதத்தில் நோன்புண்டு, அதிகாலை  "குள்ள குளிர" மார்கழி நீராடலுண்டு, "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி" வண்டுகள் மொய்க்கும் குளத்தில் (அப்படின்னா பூக்கள் நிறைந்திருக்கு), கையால் குடைந்து குடைந்து குளித்தோம் என்றும் இடத்தில் வனப்பமும்(பூக்களை கைகளால் தள்ளி விட்டு விட்டு குளிக்கின்றனர்), இயற்கை எழிலை ரசனையை ரசிக்கக் கொடுத்திருக்கிறார் மாணிக்க வாசகர். "பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்"(திருவெம்பாவை - 13) இந்த பாடல் மிக வியப்புடையது கன்னி பெண்கள் நீராடும் பொதிகையையே சிவனாகவும் பார்வதியாக பாவித்து நீராடாடுவது போல் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது. மறுமைக்கு வழிகாட்டலாவே அவன் "இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதந்தந்தருளுங் சேவகனே" என்றும் சொல்கிறார் மாணிக்கவாசகர். "முன்னிக் கடலைச் சுருக்கி"(திருவெம்பாவை -16) பாடலில் மாணிக்கவாசகர் மழையை பார்வதிக்கு ஒப்பிட்டு பாடுகிறார். திருவெம்பாவையில் பாடல்களில் இறையாய் சிவனும் பார்வதியும் சேர்ந்தே போற்றபடுகின்றனர்.

  பக்தி இலக்கியத்தில் கோவிந்தனை ஈசனை போற்றி வீடு பேறு பெற பெரிதாக ஆறு கால பூசையும் பட்டும் பட்டாசையும் பலவகை நேவேத்தியமும் எதுவும் செய்ய தேவையில்லை "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" நம் துயர் அனைத்தையும் போக்குவான் என்று எளிமையை ஆண்டாளும்,  "விண்ணுகொரு மருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினாயானை பாடிக்கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுகுருக" என்று மாணிக்க வாசகரும் கற்றுத்தருகின்றனர். மாணிக்க வாசகர், ஆண்டாள், மாணிக்க வாசகம் போல் இறைவன் மீது காதலாகி கசிந்துருகவிடுனும் இறையை அவர் பாடல்களால் போற்றுதல் எம் தீம்தமிழுக்கு நம்மாலான சிறுதொண்டு. பத்தி இலக்கியத்தில் தித்திக்கும் தமிழும், இறையனுபவமும் போற்ற தக்கவை. இறை மீது நம்பியவர்க்கு அது இறை வழிபாடு. நம்பிக்கையற்றவர்க்கு இது சிறந்த தமிழ் இலக்கிய பாடல்கள்.

திருப்பாவை:
http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruppaavai.html

திருவெம்பாவை:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் கொண்டாட கோடி இருந்தாலும் என்னால் இயன்ற எள்ளப்பமிது. ஆண்டாள் மற்றும் மாணிக்க வாசகர் திருவடிகளே சரணம்.

5 comments:

இராய செல்லப்பா said...

நாளையும் (அதிகமாக) உறங்காதிருங்கள். ஆறுமணி நேரத்திற்கும் அதிகமான உறக்கம் இளைஞர்களுக்குத் தேவையில்லயே! மேலும், இதுபோன்ற அருமையான கட்டுரைகளை நாங்கள் இழக்கநேரிடும் என்பதும் ஒரு காரணம்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கட்டுரை. காலையிலேயே படித்தேன். கருத்திட வேண்டி திரும்பவும் வந்தேன்....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை...
வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

நன்றி Chellappa Yagyaswamy, திண்டுக்கல் தனபாலன், Rupan com, வெங்கட் நாகராஜ், சே. குமார்