Saturday, May 24, 2003

யாசோதரையின் யாகம்

மஞ்சள் ஒற்றாடை உடுத்தி பழுத்த துறவி போல சித்தார்த்தின் மனைவி யசோதரை அந்த வனத்தில் தனித்து அமர்ந்திருந்தாள். அவள் தவம் மெய்ப்பட்டது. ஆறு வருடம் கழித்து அவள் கணவன் வர இருக்கின்றாராம். எண்ணிப் பார்த்தாள் தன் பழைய வாழ்வதனை. எத்தனை ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை. கண் நிறைந்த மாமன் மகனே காதலானாக பின் கணவனாக. அரண்மனை வாழ்க்கை, ஆயிரம் பணியாட்கள். தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிய மாமனே மாமனார். சுவைக்க கனி வகைகள், பொழுதை இன்பமாக கழிக்க நந்தவனங்கள். ஆடல் பாடல்களுக்கு குறைவில்லாத அந்தப்புரம். பதி்மூன்று வருடங்கள் எத்தனை இனிமையாக இருந்தது ஒரே ஒரு குறையை தவிர. பிள்ளை வரம். அதுவும் பதிமூணாம் வருடம் கிடைக்கப் பெற்றது. எத்துணை மகிழ்வடைந்தார் என் கணவர் நான் கருவுற்ற செய்தியை கேட்டு. என்னை அர்ச்சிக்காத குறை தான். ஆடை ஆபரணம் என்று அள்ளி குவித்தனர் மாமனும் கணவரும். இந்த உலகே அழகானது போல எத்துணை அருமையாக இருந்தது என் வாழ்க்கை.

ஆனால் ஆண்மகவை பெற்று அடுத்த நொடி முதல் இந்த உலகில் இருக்கும் அத்தனை துயரங்களையும் ஒன்றாக பெற்றது போல ஒரே இரவில் இருண்டல்லவா போனது என் வாழ்க்கை. என்ன நினைத்தாரோ ஏது அறிந்தாரோ இத்துணை அன்பானவளை நொடியில் துறந்து சென்ற இடம் தான் தெரியாது. தவித்த தவிப்பொன்ன? உண்ண மறந்து உறங்க மறந்து பித்துப் பிடித்தவள் போல இருந்த கொடுமை தான் என்ன? தனிமை கொடுங்கொடுமை. அதிலும் இளமையில் தனிமை இன்னுமல்லவா கொடுமை. இன்று வருகின்றாயா! வா! உன்னிடம் கேட்க வேண்டும் சில பல கேள்விகள் அதற்கு தானே இந்த தவம்.

வந்தார் கௌதம புத்தார் முன்னாள் சித்தார்த் இன்னாள் ஞானம் பெற்ற புத்தர். வந்தார். தன் தந்தையிடம் "எங்கே யாசோதரை என்றார்?" அந்த அறையில் என்றோரு அறை காட்டினார் உள்ளே சென்றார். வந்தாள் யசோதரை புத்தரின் காலில் வீழ்ந்தாள் கதறி அழுதாள். அழுது தீர்க்கும் வரை காத்திருந்தார் புத்தர். ஆரம்பமானது யசோதரையின் கேள்வி கணைகள்

"ஏ புத்தரே உன்னை இப்படி கேட்க வேண்டும் என்று தான் இத்தனை நாள் காத்திருந்தேன். ஒரு பிள்ளைக்கு அதுவும் பதிமூன்று ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு பெயர் சூட்டக் கூட தந்தை என்று நிற்காமல் உன் ஞானம் பெரிதென்று எங்கோ சென்று விட்டாய். தந்தையாய் அந்த பிள்ளைக்கு என்ன செய்தனை நீ?

"உன் மேல் கொள்ளை பிரியம் வைத்து இந்த உலகே தெரியாமல் துன்பம் என்பதென்ன என்ன தெரியாமல் பாசம் நேசம் கொட்டி வளர்த்தாரே என் மாமன், அவருக்கு ஒரு மகனாய் உன் கடமையை செய்தாயா?"

"உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் இந்நாட்டு மக்கள், நீ மன்னனாகி நல்வாழ்வை அவர்களுக்கு அளிப்பாய் என்று. ஆனால் நீயோ ஏதோ போதி மரம் தான் உன் பெற்ற தாய் போல போய் அடைக்கலமடைந்து விட்டாய். உன் கடமை தவறிவிட்டாய்"

"இந்த ஆறு வருடங்களாக பகலை பாழாய் கழித்தேன். இரவை ஏங்கி கழித்தேன். மாமன் மகன் என்ற காரணத்தால் மணந்தேன். உன்னை மணந்த காரணத்தால் இல்லதுள்ளேயே துறவறம் பூண்டேன். உன்னை போல பிச்சை எடுத்து மட்டும் தான் உண்ணவில்லை. ஆனால் அடம்பர ஆடை அணிகலனை துறந்தேன். ஒரு வேளை மட்டும் உண்டேன். உறங்க கடும் தரையை மட்டும் உபயோகபடுத்தினேன். என்னை மறுபடியும் மணக்க முன் வந்தோரிடம் மறுத்தேன். ஏன் தெரியுமா? ஒரு நாள் நீ வருவாய், அன்று இந்த கேள்வியை உன்னிடம் கேட்க வேண்டும் என்றே காத்திருந்தேன்."

"ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதே உன் போதனையாம் நீ போதி மரத்தில் அடியில் உணர்ந்தறிந்ததாம். ஆனால் நான் சொல்வேன் என் எல்லா துயரத்திற்கும் காரணம் கௌதம புத்தனே நீர் தான் ஆவீர்"

Friday, January 24, 2003

எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள்



இன்றிலிருந்து "மின்ன‌ல் ப‌க்க‌ம்" "உயிரோடை" ஆக உருமாறுகின்ற‌து. மின்ன‌ல் என்ற‌ பெய‌ர் எனக்குப் பிடிக்கும் என்றாலும், பொதுப்புத்தி சார்ந்த பலருக்கும் அது முதலில் கேலிக்குரிய ஒரு சொல்லாக கையாளத் தோன்றியது. இதை நீண்ட‌ நாட்க‌ளாக‌வே என்னை அறிந்தோர் தெரிந்தோர் அனைவ‌ரும் கூறிக்கொண்டிருந்தார்க‌ள். அதுவும் சில இடங்களில் சென்றதும் "வாம்மா மின்ன‌ல்" என்ற‌ வ‌ச‌ன‌ம் கூற‌ப்பெற்ற‌து. அது என‌க்கு க‌வ‌லைய‌ளிக்க‌வில்லை என்றாலும் இல‌க்கிய‌த்துவ‌மும் ஒரு அழ‌கிய‌லும் இல்லாத‌ பெய‌ர் போன்றிருப்பதாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ முடிவு. இன்றிலிருந்து மின்ன‌ல் ப‌க்க‌ம் உயிரோடையாக‌ வ‌ல‌ம் வ‌ரும். என்னை தொட‌ரும் அன்ப‌ர்க‌ளுக்கு உயிரோடை என்ற‌ சுட்டி தானாக‌வே இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

••••••

இந்த முறை சென்னை வந்த போது திருவ‌ர‌ங்க‌மும் சென்றிருந்தேன். எப்போதும் இரு முறை சேவிக்கும் வ‌ழ‌க்க‌ம் என‌க்கு. மேலும் 50 ரூபாய்க்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தி தேவ‌ஸ்தான‌த்தில் தெரிந்த‌ ஒருவ‌ர் பெய‌ர் சொல்லிவிட்டு ர‌ங்க‌னை 5 நிமிட‌த்தில் சேவிக்கும் பாக்கிய‌ம் என‌க்கு அவ‌ன் த‌ந்திருக்கும் வ‌ர‌ம். ஆயினும் இந்த‌ முறை இர‌ண்டாம் நாள் மூல‌ஸ்தான‌ம் ர‌ங்க‌னை 5 நிமிட‌த்திலும், தாயாரை 10 நிமிட‌த்திலும், வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப்ப‌த்தில் உல்லாச‌மாக‌ வீற்றிருந்த‌ உற்ச‌வ‌ ர‌ங்க‌னை நீண்ட‌ வ‌ரிசைக‌ளுக்கும் இடிபாடுக‌ளுக்கும் பின் சேவித்தேன். கோவில் நிர்வாகிக‌ள் வ‌ச‌ந்த‌ உற்ச‌வ‌த்தின் போது வ‌ச‌ந்த‌ ம‌ண்ட‌ப‌ வ‌ரிசைக‌ளை வ‌கைப‌டுத்தி க‌ட்டுப்ப‌டுத்தினால் என்னை போன்றோர் அதிக‌ம் பாடுப‌டாம‌ல் நிம்ம‌தியாக‌ சேவிக்க‌லாம். இல்லையென்றால் சேவிக்கும் புண்ணிய‌ம் அங்கே விய‌ர்த்துக் கொட்டும் எரிச்ச‌லிலேயே ச‌ம‌ன் செய்ய‌ப்ப‌டும். ந‌ல்ல அனுப‌வ‌ம். அதிலும் இந்த முறை என்னுடைய ரங்கனை கண்டு கொண்ட பரவசத்தில் எதுவுமே குறையாகத் தோன்றவில்லை.

••••••

கடந்த ஞாயிறு (31.05.2009) சென்னையிலிருந்து நான் செல்ல‌ வேண்டிய‌ விமான‌ம் அரைம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ கிள‌ம்பி டெல்லியை அடைந்தும் த‌ரையிர‌ங்க‌ அரை ம‌ணி நேர‌ம் தாம‌த‌மாக‌ ந‌ள்ளிர‌வு தாண்டி டெல்லியை அடைந்திருந்தேன். விமான‌த்திலிருந்து இற‌ங்கும் போதே புய‌ல் முன்னும் பின்னும் நெட்டி த‌ள்ளி தீர்த்த‌து. விமான‌ நிலைய‌ம் விட்டு வெளியே வ‌ந்து சீருந்தை அடையும் முன்னேயே பேய் ம‌ழை கொட்ட‌ ஆர‌ம்பித்த‌து. இர‌ண்டு நாட்க‌ளாக‌ டெல்லியில் புய‌லும் ம‌ழையும் பெய்து க‌டுமையான‌ வெப்ப‌ம் த‌ணிந்து ர‌ம்மிய‌மான‌ சூழ‌லாக‌ இருந்தது சந்தோஷமாக இருந்தது.

••••••


க‌ட‌ந்த‌ வார‌ம் சென்னை சென்று வ‌ந்த‌தில் மிக‌ புதிய‌ அனுப‌வ‌ங்க‌ள். உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ள். என் மான‌சீக‌ குரு ம‌னுஷ்ய‌ புத்திர‌னை ச‌ந்தித்தோம். க‌ட்ட‌ற்ற‌ காட்டாறு போன்றிருந்த‌து அவ‌ர் பேச்சை. எந்த‌ எடுத்து த‌ந்தாலும் அதில் இருந்து பேசினார். சுந்த‌ர‌ராம‌சாமி முத‌ல் சுஜாதா வ‌ரை. உட‌ன் இருந்த‌ 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா மூவ‌ரும் அவ‌ருட‌ன் நிறைய‌ நேரம் பேசினார்க‌ள். நான் படிப்ப‌தும் எழுதுவ‌தும் மிக‌ குறைவென்ப‌தால் அதிக‌ம் பேச‌வில்லை. நிறைய‌ உரையாட‌ல்,ஒரு கப் காபி, ஒரு வேளை மதிய உண‌வென்று அவருடனான மிக‌ நீண்ட‌ ப‌கிர்த‌லுக்கு பின் ம‌ன‌ம் நிறைந்திருந்த‌து. பின் க‌ட‌ற்க‌ரையில் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன், 'தூறல்கவிதை' ச.முத்துவேல், யாத்ரா, 'நெய்த‌ல்' ச‌ந்திர‌சேக‌ர் ம‌ற்றும் 'சுய‌ம்' இராவ‌ண‌ன் இவ‌ர்க‌ளோடு மனுஷ்யபுத்திரனின் 'நீராலானது' தொகுப்பை முழுவதுமாக வாசித்து கருத்துப் பகிர்ந்தோம். பிறகு க‌விதை திரைப்பாட‌ல்க‌ள் என்று இல‌க்க‌ற்ற‌ எண்ண‌ற்ற‌ பேச்சு... பேச்சு... மேலும் பேச்சு மட்டுமின்றி எழுத்தில் சொல்லிவிட தீராத‌ உன்ன‌த‌ங்க‌ள்.

••••••

இங்கே எழுத‌ப‌ட்டிருப்ப‌வை ஒரு ப‌ய‌ண‌க் க‌ட்டுரையோ, க‌ட்டுரையோ, குறிப்புக‌ளோ அல்ல‌து வேறு சிலவோ கிடையாது. என் ம‌ன‌தில் நான் பூசிக் கொண்ட‌ எண்ண‌ வ‌ண்ண‌ங்க‌ள். எண்ண‌ங்க‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும் உயிரோடையில் தொட‌ரும். தொட‌ர்ந்து வாசியுங்க‌ள்.

••••••

எனக்குப் பிடித்த கவிதையொன்று :

மனமொளிர் தருணங்கள்
தளர்ந்து இறுகும்
சிறகுகள் அசைத்து
கால் புதைய காற்றில்
நடக்கிறது ஒரு பறவை
என்னை நானே
அருந்தி இரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்த
பறவைச் சிறகின் கதகதப்பை
கைப்பற்றி
கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது
பறவை
உதிர்ந்த சிறகு குறித்த
கவலையேதுமற்று.
- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்