Wednesday, September 24, 2008

ஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையும்.

என்னோட எல்டிஎ இரண்டு வருசமா டூயூ இந்த வருசம் அவைல் பண்ணலேன்னா எக்ஸ்பெயர் ஆயிடும் என்று அடிக்கடி நச்சரித்தார் என் கணவர். நான் இப்போ தானே புது வேலை சேர்ந்திருக்கேன் என்று தட்டி கழித்து வந்தேன். தினமொரு முறை 5 ஸ்டார் ஹோட்டலில் வேற தங்க எலிஜிபிலிடி இருக்கு.. இப்படி அடிக்கடி புலம்பலுக்கு முடிவு கட்ட மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் நான்கு நாள் மும்பை போகலாம் என்று முடிவாயிற்று.

ஒரு வழியாக மும்பை கிளம்ப வேண்டிய சுபயோக சுபதினத்தில் சாயுங்காலம் 4.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி, ஒரு சேர் ஆட்டோவில்("என்னது ஏர்போர்ட்க்கு ஆட்டோவில் அதுவும் சேர் ஆட்டோலயா?" அப்படீங்கிறவங்களுக்கு எங்க அலுவலகம் இருப்பது ஹரியானாவில் நான் போக வேண்டியதோ தில்லி ஏர்போர்ட்க்கு. நேரடியாக ஆட்டோ கிடைக்காது. ஹரியானா தில்லி பார்டரில் தான் தில்லி செல்லுவதற்கான ஆட்டோ கிடைக்கும். சென்ற முறை சென்னை செல்லும் போது அழகா என் அலுவலகத்திலேயே சொல்லி ஒரு டாக்ஸி புக் செய்து எளிதாக 25 நிமிடத்தில் ஏர்போர்ட் அடைந்து விட்டேன். இந்த முறை மறந்தது மட்டும் அல்லாமல் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன் கையில் இருந்தது 150 ரூபாய் மட்டும். அது பாருங்க இந்த ஏடிஎம், டெபிட் கார்ட் எல்லாம் வந்ததிலிருந்து கையில் காசு வைத்திருப்பதென்பது மிக குறைவு. அதனால் ஆட்டோவில் போகலாம் என்று கப்பசடா பார்டரில் ஒரு ஆட்டோகார‌ரிடம் எனக்கு 6.15 ஃப்ளைட் சீக்கிரம் போக வேண்டும் என்றது தான் குறை அவர் டைம் அவுட் வைத்து ஓட்டுகின்றேன் பேர்வழி என்று, ஆட்டோவை ஓட்டோ ஓட்டென்று ஓட்டி 5.40க்கு விமான நிலையம் சேர்த்தார். ஏனோ அன்று விமான நிலையம் வரும் வழி, விமான நுழைவாயில் என்று என்றுமில்லாத வாகன கூட்டம். அது மட்டுமில்லாது உள்ளே செல்ல வெளியிலிருந்தே பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நிற்பதை விட பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது. நல்ல வேளையாக அவர் முன்னமே போய் போர்டிங் பாஸ் வாங்கி இருந்தார். மேலும் வாயில் அருகே வந்து காவலரிடம் கேட்டு என்னை வரிசையில்லாமல் உள்ளே அழைத்து சென்று விட்டார். அப்புறமும் க்யூ விட்டபாடில்லை. செக்குரிட்டி செக்கிலும் அவ்வளவு பெரிய வரிசை. திருச்சி பஸ் நிலையத்தில் 3 அல்லது 4 நாள் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப நிற்கும் கூட்டம் போலிருந்தது அந்த கூட்டத்தையும் கூச்சலையும் கேட்கும் போது. ம்ம் இந்தியாவின் சராசரி மனித வாழ்வின் தரம் உயர்கின்றது. :) ஒரு வழியாக 30 நிமிட தாமத‌த்துடன் மட்டும் மும்பை வந்திருங்கியது விமானம். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்னார் நாம் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் பெரும்பாலும் எவ்வளவு நேரம் விமானம் பயணிக்கின்றதோ அதை விட அதிக நேரம் தரையிறங்க ஆகுமென்றார். அங்கிருந்து ஹோட்டல் வந்து இரவு விருந்துண்டு உறங்கி விட்டோம்.

மறுநாள் எழுந்து காலையில் சாண்டகுரூஸ் ரயில்நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினோம் மீட்டரில் 18 ரூபாய் வந்திருந்தது. ஆட்டோகாரர் மீட்டரில் 18 என்றால் 17 ரூபாய் தான் வாங்குவோம் என்றார், அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று வியந்து போனேன்.(முதல் நாள் விமான நிலையத்திருலிருந்து ஜுகுவிற்கு 140 ரூபாய் வாங்கிட்டான் அந்த டாக்ஸிகாரன் என்று என் வீட்டுகாரர் புலம்பியதில் ஆச்சரியமில்லை என்று தெரிந்தது, எனக்கு மும்பை முதல் முறை அவர் ஐந்தாறு முறை வந்திருக்கின்றார்.) கேட் வே ஆப் இந்தியா போக சர்ச்கேட் ரியல் நிலையத்திலிருந்து டாக்ஸியில் 15 ரூபாய் தான் மீண்டும் வியப்பு தான்.(சென்னை ஆட்டோகாரர்கள் நினைவு வந்தால் வியப்பாக இருக்காதா என்ன) இது தான் கேட் வே ஆப் இந்தியா, அது தான் தாஜ் ஹோட்டல் போகலாமா என்றார். அப்படியே இரண்டு, மூணு போட்டோ எடுத்துட்டு மீண்டும் ரயில் ஏறினோம். அங்கிருந்து தாதரில் இறங்கி ஆரோரா தியேட்டர் போனோம். அங்கே தமிழ் படம் ஓடுமாம் போனால் சிலப்பாட்டம் ஓடிக்கொண்டு இருந்தது ஓடியே வந்துட்டோம். "ரத்னா அவங்க இங்க தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போகலாமா" என்றார். சரி என்றதும் ஹோட்டல் சென்று கொஞ்சம் புதிதாகி(fresh ஆகி) மீண்டும் ரயில், கந்திவெளி சென்று தக்கூர் கிராமம் என்ற மும்பை புறநகரில் மிக பணக்கார கிராமத்தை அடைந்தோம். அங்கே செலென்ஜர் டவரில் ரத்னா மனோகர்(எங்க குடும்ப நண்பர்கள் நீண்ட நாட்களாக ஃபரிதாப்தில் இருந்தார்க‌ள் கொஞ்ச நாள் முன் மும்பை மாற்றலாகி வந்தார்கள்) வீட்டுக்கு சென்றோம். வழக்கம் போல உபசரிப்பு, பேச்சு, சிரிப்பு என்று கொஞ்சம் நேரமில்லை கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போனதே தெரியலை. அவர்களோடு டின்னர் முடித்துவிட்டு மீண்டும் ஜுகு கிளம்பினோம். ரத்னா கொஞ்சம் என்னை போலவே நகைச்சுவையாக பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சில, "என்ன ரத்னா செல்ப்ல ஒரே இன்கிலிஸ் புக்ஸா இருக்குன்னு" கேட்டதுக்கு "க‌வுண்ட‌ம‌ணி ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க‌ தான்", என்றார்கள். இன்னுமொன்று "பாம்பேல வேலைகாரி ரொம்ப நல்லா வேலை செய்வாங்க ஒரு ஒரமா யாராவது உக்கார்ந்து இருந்தா அவங்களை கூட சூப்பரா துடைச்சி சுத்தம் செய்துட்டு போயிடுவாங்க." மேலும் ஒண்ணு "ஃபரிதாபாதிலிருந்து வரும் போது நிறைய சாமான்களை டிஸ்போஸ் செய்து விட்டு வந்தேன். இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய முடியல"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)

இரண்டாம் நாள் காலையில் எழுந்து அதே ரயில்(அதெப்படின்னு மொக்கை போடாதீங்க, அதேன்னா அதே இல்லை), அதே தாதர் நிலையம், மீண்டும் டாக்ஸி இப்போது போனது சித்தி விநாயகர் கோவில். அங்கே அருகம்புல் ஒரு கொத்தோடு ஒரு செம்பருத்தியை வைத்து கட்டி ஒரு சிறு பொக்கே போலவோ விற்று கொண்டிருந்தார்கள். அதே மாலையாகவும் கிடைத்தது. பார்க்க மிக அழகாக இருந்தது. இரண்டு மாலை வாங்கி விநாயகருக்கு கொடுத்து, வணங்கி விட்டு அங்கிருந்து மஹாலஷ்மி கோவிலுக்கு போனோம், பெரிய வரிசை(கிட்டதட்ட 2 கிமி தூரம் மக்கள் வெள்ளம்) அதனால் அங்கிருந்து அப்படியே யூ ட்ர்ன் அடுத்து மடுங்காவுக்கு தமிழ் சாப்பாடு கிடைக்கும் என்று சொன்னதால் வந்தோம். அங்கே நிறைய தமிழ் கோவில்களும் இருந்தது. ஆனால் மதிய வேளை என்பதால் எல்லாம் மூடி இருந்தது. மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட் வே ஆப் இந்தியா போய் எலிபெண்டா கேவ் போகலாம் என்று முடிவெடுத்து அங்கே போய் ஒரு படகில் கிட்டதட்ட ஒன்ற‌றை ம‌ணி நேரம் கடலில் அங்கே மிதக்கும் கப்பல்,படகுகள் இதெல்லாம் பார்த்தபடி போய் ஒரு தீவில் இறங்கி அங்கே விற்கும் இலந்தை பழம்,மாங்காய் இத்தியாதி இத்தியாதியை வாங்கி உண்டு இரண்டு நிமிடம் ரயிலில்(மாதிரி) போய், 20 நிமிடம் நடைபாதை கடைகளை ரசித்தவாறு ஒரு மலை மேல் ஏறி அங்கே இருக்கும் குரங்குக‌ளின் அட்டகாசத்திலிருந்து தப்பி அங்கிருக்கும் சுமாரான ஒரு குகை கோவிலை தரிசித்துவிட்டு இஷ்டபடி புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வந்த வழியே வந்து விடுதியை அடையும் போது இரவு உணவிற்கான நேரம் வந்திருந்தது. அதனால் உண்டு விட்டு ஜூகு கடற்கரை (கடற்கரைக்குறிய எல்லா அடையாளங்களும் கூடாவே நிறைய‌ குப்பைக‌ளும் இருந்த‌து, மும்பை மாநகராட்சி இதை கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்) சென்று வந்து உறங்கியாகிவிட்டது.

மூன்றாம் நாள் மும்பை சுற்றி காட்டும் ஒரு பேருந்தில் சென்றோம். பேருந்தில் ஒரு வழிகாட்டி மிக நகைச்சுவையாக மும்பை மாநகரை பற்றி கூறிக் கொண்டு வந்தார். ஒரு கட்டிடத்தை காட்டி அது தான் சஞ்ஜய்தத்தின் மாமியார் வீடு என்றார், அப்புறம் அதை அப்படி தான் கிண்டலாக கூறுவோம் அது மும்பை உயர்நீதி மன்றம் என்றார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானத்தை காட்டி அதற்கு பெயர் காந்தி மைதானம் என்றும் காரணம் அதில் புல் இல்லாம‌ல் மொட்டையாக இருப்பதால் என்றார். :) நீங்கள் இறங்கும் போது பணம்,நகை, பாம்(வெடிகுண்டு) போன்ற விலை உயர்ந்தவைகளை கூடவே எடுத்து சென்றுவிடுங்கள், சாப்பிடும் ஐட்டம் ம‌ட்டும் விட்டு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்றார். :) மும்பை தரிசனில் பிடித்தவை தொங்கும் தோட்டம்(ஆனால் உண்மையாக தோட்டம் தொங்கவில்லை நீர்தொட்டி மேல் அமைந்து இருப்பதால் அந்த பெயர் காரணமாம்), பூட் ஹவூஸ், மெரைன் டிரைவ் சாலை, மஹாலஷ்மி கோவில், அட்ரா மாலில் காட்டப்பட்ட 4டி காட்சி, அனுஜன்யா அண்ணாவை சந்தித்தது.(பாவம் அனுஜன்யா, ஹேங்கிங் கார்டனில் இருந்து, மஹாலஷ்மி கோவில் வரை எங்கள் பேருந்தை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக‌ சந்தித்து, ஓட்டத்தோடு ஓட்டமாக மஹாலஷ்மியை தரிசித்து, கொஞ்சம் பேசி, மஹாலஷ்மி கோவிலிருந்து அட்ரா மால் வரை கொண்டு வந்து விட்டார். என்னிடம் பேசியதை விட என் வீட்டுகாரரிடம் அதிகம் பேசினார். அனு அண்ணியும் தொலைபேசினார்கள் என்னிடம்) 4டி சோவில் 3டியை விட கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது. படத்தில் பனி பெய்யும் போது தலை மேல் பனி பொலிந்தது. அங்கே தீ எரியும் போது நாற்காலியிம் பின்பக்கத்தில் ஊதாங்குழல் ஊதுவது போல ஒரு வித சத்ததோடு என்னவோ வந்தது.(நல்ல வேளை நிஜபனி போல நிஜ தீ வைத்து சுடவில்லை.) ஆனால் அடிக்கடி நாற்காலி முன்னும் பின்னும் ஆடி யாரோ நம்மை அடிப்பது போல இருந்தது. மற்றபடி கண்டிப்பாக 4டி சோ பார்க்கலாம். நல்ல வித்தியாசமான பொழுது போக்கு. அங்கிருந்து நேரு அறிவியல் கூடம் சென்றோம் நிறைய விசயம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை போல இருந்தது. சத்தம், சங்கீதம் பற்றிய தொகுப்பிடத்தில் வெர்சுவல் ரியாலிட்டி என்ற இடத்தில் நாம் நடனமாடினால் அதற்கு தகுந்த இசை ஒலிக்கிறது.(பெரிய கம்ப விசித்திரமில்லை எல்லாம் மென் பெருளே, ஒரு சில இசைகருவிகள் அந்த இசை கருவி மீது நம் நிழற்படம் விழந்தால் ஒலிக்கின்ற மாதிரி செய்து இருக்கின்றார்கள். ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது) மேலும் சிலது அந்த பகுதியில் நன்றாக இருந்தது. ஒரு பியானா போன்ற கருவியில் நடந்தால் இசை வந்தது. அதன் பின் பேருந்து ஜுஹு கடற்கரை சென்றதால் நாங்கள் இடையில் இறங்கி மீண்டும் மடுங்கா சென்ற முதல் நாள் விட்டு போயிருந்த கோவில்களை பார்த்துவிட்டு இரவு உணவை முடிந்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

நான்காம் நாள் காலை எழுந்து தில்லி திரும்பும் ஆயத்த‌த்தில் ஆழ்ந்தோம். வரும்போது இருந்த தில்லி விமான நிலைய நெரிசலை மனதில் கொண்டு இரண்டு மணி நேரம் முன்னமே விமான நிலையத்தை அடைந்தால் என்ன ஆச்சரியம், நுழை வாயிலில் கூட்டமே இல்லை. போர்டிங் பாஸ் வாங்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆயிற்று. செக்குரிட்டி செக் பத்தே நிமிடத்தில் முடிந்தது. நல்லவேளை கையில் சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் புத்தகம் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை. விமானமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னமே கிளம்பி சரியான நேரத்தில் தில்லி வந்திறங்கியது. ஒரு டாக்ஸி பிடித்து இல்லம் வந்து சேர்ந்தோம். கைபேசியை உயிர்யுட்டியில் இணைத்துவிட்டு, எஸ் எஸ் முசிக்கில் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாட்டை கேட்டதும் வீட்டிக்குள் வந்து விட்டது மனமும்.

பயணத்தில் திரும்பும் போது எடுத்து சென்ற சூட்கேஸ் நிறைய அழுக்கு துணிகளும்..., தினசரி சிடுசிடுப்பும்,சலிப்புமில்லாத‌ சற்றே அதிக நேரமும், தில்லி வந்திருக்கிய விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணித்த பேருந்தில் என் கையசைப்பிற்கு என்னை பார்த்து மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக "எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)

யானையின் மெல்லிய நடை

கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். 16

வேழம் - யானை
தொடி - வளையல்

"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

நன்றி:சென்னை லைப்ரரி.

இந்த பாடலில் இயற்கையான பெண்ணின் குணமான, பிரியமானவர் மீதான அதீத அக்கரையும், மிதமிஞ்சின கற்பனையில் அது நடக்குமோ இது நடக்குமோ என்ற பயமும், அவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற கவலையும் சேர்த்து அவளை தூங்க விடாமல் வாட்டுவது போல் மேலோட்டமாக கொள்ளலாம்.

ஆயினும் அடிபட்ட யானையாக அவளையும், சினம் கொண்ட புலியாக அவள் இல்லத்தாரையும் பொருந்தி பார்க்கலாம். அவள் பசலை படர்ந்திருப்பது அவள் பெற்றோர்க்கு தெரிய கூடாதென்று மறைக்க பாடுபடுவதை தலைவனுக்கு குறிப்பாக உணர்த்த தோழி இவ்வாறு உரைத்ததாக கொள்ளலாம்.

எல்லாம் காதல் படுத்தும் பாடு.

Sunday, August 24, 2008

குழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்

அன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.

நான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.

எதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.

எதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.

என் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அருகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.

Saturday, May 24, 2008

அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு

ஒரு வழியாக இரண்டு வருடங்களாக படித்து கொண்டிருக்கும் யூமா வாசகியின் "அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு" என்ற கவிதை தொகுப்பை படித்து முடிக்க வாய்த்தது தனிமையோடான நீண்டதொரு பயணம். இந்த தொகுப்பை எனக்களித்த பாம்பாட்டி சித்தன் அவர்களுக்கும், அவரை எனக்கு அறிமுகம் செய்த முத்தமிழுக்கும், முத்தமிழுக்கு என்னை அறிமுகம் செய்த நிலாரசிகனுக்கும் நன்றி.

அனேகமாய்
வெயிலற்ற ஒரு பொழுதில் - உன்
வீடுள்ள தெருவழியாய் - நான்
என்றாவது நடக்க நேரிடும்.

என்று ஆரம்பிக்கும் இந்த கவிதை தொகுப்பின் முதல் கவிதையே படிக்க ஆரம்பித்ததுமே மிக அருமையான கவிதை தொகுப்பை தந்த சித்தருக்கு ஆயிரம் நன்றிகள் கூறிக் கொண்டேன். அப்படி என்ன விசேசம் இந்த கவிதையில் என்பவர்களுக்கு, ஒருவேளை அப்படி நான் நடக்கும் போது உள்ளே இருக்கும் நீ எந்த காரணத்திற்காவும் வெளியே வர வேண்டாம் வந்தாலும் யாருக்கும் தானம் கொடுக்கும் நோக்குக்கு உண்டான அளவான ஈர்போடு மட்டும் வா. உடனே உள்ளே சென்று விடு. ஒருவேளை

"உணர்ந்து பெயர்கூவி
அணைக்கின்ற ஆசையோடு
நெருக்கிவிடாதே
அதோடு என் பயணம் முடிந்துவிடும்."

:)

ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும் என்ற தலைப்பில் இடப்பட்டு இருக்கும் ஏழுகவிதைகளும் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அழகாக இருக்கின்றன. முத்தாய்ப்பாக

"என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்"

என்று அழைப்பது யாரை தெரியுமா? பிறை கூடிய அந்த இறையை, சிவபெருமானை.

"நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவிசெய்து ஒத்திருப்போம்"

என்று சொல்லும் போதும், வரும்போது நந்தியையும் நாகத்தையும் அழைத்து வா எனக்கு டீயும் சிகரெடும் வாங்கி வர தேவைப்படும் என்று சொல்லும் போதும் கவிக்கே உரிய ஆளுமை புலப்படுகின்றது.

தொகுப்பு முழுவதும் அழகியல் மழைத்துளிகளாக அங்காங்கே அழகாக தெளிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றில் இங்கே நனைவோம்

"கடவுள் விரல்கள் காட்டும் அபிநயங்களின்
அர்த்தங்களறியாதவர்களுக்குதவ உன் கொலுசு
தூண்டற்குறிப்புகளை வாரி சொரிந்தது."

தூண்டற்குறிப்புகள் என்பது அழகான சொல்லாடல் அல்லவா?

"பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று
சொட்டியதிர்கிற ஓசையையில்"

"உன் கொலுசொலி நிரம்பிய கடல் இந்த வராண்டா"

"கருகமணிகளின் சறுக்கு விளையாட்டில்
விழிக்கு வெளியேயும் சிதறும் பனுச்சில்லுகள்"

"உன் உள்ளங்கைகளின் மருதாணி புள்ளிகளிலிருந்து
பிறந்து வரும் இரவுகாலம்"

"உன் தீண்டலில் பொடிந்து தூசுபடலமாவேன் - அதில் நீ
வரையும் வடிவாய் வெளிப்படுவேன்"

"எங்கோ பெய்த மழை உன் பாதங்களை முகர்ந்தபடி
தவழ்ந்து வருகிறது என் வறட்சிக்கு"

அத்தனையும் அழகியல் அற்புதமான மொழி வசப்பட்டு இருக்கின்றது இந்த கவிஞருக்கு.

மேலும் கவிஞர் பெண்மையை போற்றும் இடத்திருக்கு பல இடங்களில் ஆதாரம் இருக்கின்றன். "உடலுக்கு வெளியே இலங்கும் உறுப்புகள் அனைத்திக்கும் இயக்கம் என்பது உன்னை வியப்பதே" இதை விட பெண்மையை போற்ற இயலுமா?

கவிஞர் கையாண்டு இருக்கும் உவமைகள் கூட அழகோவியமாய் திகழ்கின்றது.

"உச்சிகிளை இலவங்காய் வெடித்து - பஞ்சுப் பிசிறு
மெல்ல நிலமணைவதுபோல்" என்று தன் காதலியின் மெல்லிய நடைக்கு ஒப்பிடுகின்றார்.

"கன்னத்துப் பருவாக ஆஷ்டிரேவிற்குள் கிடக்கிறேன்"


மேலும் கவிஞர் துரோகத்தை வெறுப்பை பதித்திருக்கும் விதமும் அருமை "செரிப்பற்று இடறும் என் அன்பை மறைவில் சென்று வாந்தியெடுத்துப் போ".ஒரு முயல் வடிவ குப்பைத் தொட்டிக்கு கூட இரங்கும் கவிஞரின் சிந்தனை அதி அற்புதமானது.

பிளர்ந்தெரியும் நெருப்பாக தகிர்க்கும் தருணமும் "புகையின் முனையில் என் உதடுகள் உன் இருப்பிடத்தின் கதவுகளை முத்தமிட்டுத் திரும்புகின்றன" என்கின்றார். அவ்வளவு அதி
உன்னத காதல் அவரது.

தனிமையில் காதல் நுகர்தலை இதை விட அழகாக சொல்லமுடியுமா?

"இரவில் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிற்கும் உன் கனம்
பல நூறு துடிப்புகள் ஓடஓடத் துரத்தியடிக்கின்றன"

அடுத்து...

"இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருந்தேன்."

என்று ஆரம்பிக்கும் இந்த கவிதையில் கவிஞர் தன் அறையில் காதலி வந்து சென்றது போல நினைத்து தடயத்தை தேடுக்கின்றார். ஒரு துப்பறியும் நாவல் போல விருவிருப்பாக
இருக்கின்றது கவிதை. எங்கும் தேடி கிடைக்காத தடயம் தண்ணராக நீர்சாடியில் இருக்கின்றது. காலையில் காலியாக இருந்த சாடியில் நீர் இருக்கின்றது இப்போது. கைப்பட்டு சாடி கவிழ்ந்து அவர் நனைகின்றார் நாமும் தான்.

ஒரு கலவியை காமத்தை சொல்லிவிட்டு இறுதிவரிகள் இப்படி இருக்கின்றன

"கவுண்டருக்குள்ளிருந்து அவள்
சாந்தமாகவே டிக்கெட் கொடுத்தாள்
பெற்றகன்று
வழியோரம் துப்பிய எச்சில்
விழுந்தது விந்தென"

படிக்கும் போது அதிராமல் இருக்க முடியவில்லை.

இறுதியாக நான் தொலைந்து போன கவிதை இதோ.

"குற்ற உணர்வில் குமைந்து
கைகளைப் பிசைந்தபடி இத்திடலில் உலவும்போது"

இப்படி கவிஞர் கூறுவது காற்றை. காற்றுக்கு ஏன் இந்த குற்ற உணர்வு, ஒரு வேளை எங்கோ கடல் கொந்தளிபையோ, ஒரு புயலையோ ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறுவனில் பட்டத்தையோ அறுத்திருக்க வேண்டும் என்கின்றார். அதற்கு பரிகாரமாக சற்றே தூரத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டு இருக்கும் காதலியின் கூந்தலை அடிக்கடி நெற்றிக்கு தள்ளுகின்றாம் அதை ஒதுக்கும் போதெல்லாம் அவள் அவரை பார்க்கின்றாள்.

"பாவத்திற்கொரு பரிகாரம் செய்யும் பதட்டத்தில்
அது என்னைப் பலியிட்டுப் போய்விட்டது" என்கின்றார். :)

உடலியல் மொழியும் விரசமும் நிறம்பி ததும்புகின்றது பல கவிதைகளில். ஆனாலும் நல்ல கவிதைகளை பதிவிக்க ஆசைக் கொள்ளும் அனைவரும் ஒரு முறையேனும் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.

Thursday, January 24, 2008

ப‌டித்த‌ க‌விதைக‌ள்

தப்பித்தலின் சாத்தியங்கள்...
============================

நான் விதைக்கப்பட்டிருக்கும்
சின்னஞ்சிறு பரப்பினை
வன்மமாய்
நினைவூட்டுகின்றன
இந்த தொட்டிச்செடிகள்..

விடுபடலோ
விட்டு விடுதலையாதலோ
சாத்தியமாவதில்லை
எப்போதும்...

வேர்களால் உள்வாங்கி
பூக்களாய் எதிரொளித்து
தளிர்நுனிகள் அனைத்திலும்
உயிர்சொட்டும் விருட்சங்கள்
காழ்ப்புணர்ச்சியோடு
கசப்புத் தருகின்றன...

தப்பித்தல்களுக்கான
இடம் தேடிக்களைத்து
எங்கேனும் எதிலேனும்
ஒளிந்துகொள்ள முயன்று
முடிவாய் மறைந்து போகிறேன்
கவிதைகளின் பின்னால்.

- காயத்ரி

வசந்தத்தின் திரட்சி
===================

கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய
விழுதுகளாய்
மண்ணோடு பிணைந்து விடும்
பிரயத்தணங்களோடு
எப்போதும் எதிர்த் திசையில்
ஒரு பயணம் நினைவுகளால்
கடந்து விட முடியாதவையாய்
மீண்டும் மீண்டும் பேசிப் போகும்
உன் வார்த்தைகள்
தொடர் செவி மடுத்தலில்
மறைந்திருக்கும் இன்னுமொரு பொருள்
முகம் காட்டிச் சிரிக்கும்

நிகழும் வசந்தங்களைப்
பதுக்கி வைத்துக் கொள்ள
திட்டமிட்ட வேளையில்
பயமுறுத்தும் இதற்கு முன்
தாண்டிச் சென்ற கோடை

இருந்தும்
என் காலடியிலெங்கும்

வசந்தத்தின் திரட்சி
பயத்தின் நிழல் மீறி
நாற்றுக்களாய் நெளிந்து
துளிர்விடத் துவங்கியிருக்கும்

- திலகபாமா

...
====

கண்கள் இறுக்கி
கொஞ்சமேனும் மூச்சடக்கி
ஆலம் விழுதைப் பற்றி
காற்றோடு பயணிக்கும் உற்சாகத்தை
உள்ளங்கை உராய்தலுக்கு அஞ்சி
தவறவிட்டதுண்டு ...

- ல‌ஷ்மி சாக‌ம்ப‌ரி

க‌ன‌வில் அல்லி ப‌திய‌ன்க‌ள்
=========================

எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் வடிவொத்து
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லிதாளுக்கு

- கௌரிப்ரியா