
சண்டையிட்டு பிரிந்து செல்லும்
காதலர் போல்
எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன
வருகிற மற்றும் போகிறவர்களின்
பிரயாணப் பெட்டிகள்
ரயில் வரும் வரை
ஒவ்வொரு அறிவிப்புகளையும்
சலிப்போடு கேட்டு கொண்டிக்கின்றன
ரயிலடியில் காத்திருக்கும் சூட்கேஸ்கள்
ரயில் வந்து நின்றதும் பரபரக்கின்றன
பயணிக்கும் எல்லா சூட்கேஸ்களும்
ஏறுவோர் இறங்குவோர்
இருக்கை தேடுவோர்
எதிர்வருவோர்
எல்லோருக்கும்
சுணங்கி வியர்த்து வடிக்கின்றன
பயண சீட்டில்லாத சிறுமி
எனக்கெந்த இருக்கை என்று
ஏங்கியழும் போது
பயண சீட்டற்ற தன்னிடத்தை
தந்திட ஆவல் கொள்ளுமவை
அனைவரும் அடங்கியதும்
தன் இருக்கையில்
ரயிலின் தாலாட்டில்
உறங்கி விடும் சூட்கேஸ்கள்
இறங்குமிடம் வந்ததும்
எதிர்ப்புறம் சென்று விட்டதை
உணர்ந்து வந்த வழியே திரும்பச் சென்று
செல்லுமிடம் சென்றடைந்து
மற்றுமொரு பயணத்திற்கு
காத்திருக்கும் சூட்கேஸ்கள்.
- லாவண்யா சுந்தரராஜன்
Monday, December 28, 2009
பெட்டிகளின் பிரயாணம்
Wednesday, December 23, 2009
கண்ட நாள் முதல்

நாட்குறிப்பில்
தேடியெடுத்த நாளொன்றில்
உன்னைக் கண்டிருந்தேன்
சங்கீத நினைவுகளோடு
விரைந்த பயணத்தில்
தொலைதூரத்தில்
நீல நிற குவளை பூக்கள்
நிறைத்திருந்த நீர்நிலையாய்
மகிழ்த்தியது நம் சந்திப்பு
எத்தனை முறை முயன்றாலும்
எட்டாத கரையின் தரை
நனைக்காத அலைகளாக
தீராது தொடர்ந்தன நம் உரையாடல்கள்
விரைந்து கடக்கும் ரயிலொன்றின்
பயம் தரும் கூக்குரலாக
தடுமாறி விழி மூட செய்தது உன் பிரியம்
கருவேல மரமொன்றின் மேலேறிய பாம்பின்
நிழலாக பயம் காட்டுவதாக
இருந்தது உன் கோபம்
தொலைதூர பயணத்தில்
ஜன்னல் வழி கூடவே வரும் காற்றாக
இருந்தது உன் நினைவுகள்
கண்டெடுத்த நாளின் மரணமாக
நிகழ்ந்திருந்தது நம் பிரிவு
மீண்டும் சந்திக்கும் வரை
Tuesday, December 22, 2009
அசோகமித்திரனின் "மானசரோவர்"

அசோகமித்திரனின் "மானசரோவர்". மிக எளிமையான கரு(ஒன் லைனர்) ஆனால் 207 பக்கங்களாக ஒரு நாவலில் சொல்லி இருக்கின்றார். ஒரு துப்பறியும் கதைக்கான விறுவிறுப்பு இருக்கின்றது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே முடிச்சு அவிழ்க்கப்படுகின்றது. அதுவும் முழுமையாக சொல்லாமல் வாசகர் முடிவுக்கு விட்டுவிட்டார் அகோகமித்திரன்.
ஒரே மூச்சில் படித்து முடிக்க கூடிய சுவாரஸியமான அதே சமயம் மிக எளிமையான மொழியில் அமைந்திருக்கும் நடை. 40 நிமிடங்களில் 80 பக்கங்கள் வாசித்துவிட முடிகின்றது. நாவலில் இரண்டு கதை சொல்லிகள். அவர்களை சுற்றி பல கதாபத்திரங்கள். கொஞ்சம் சினிமா. கொஞ்சம் சூப்பர் பவர். மிக அருமையாக நகர்ந்திருக்கின்றது கதை.
கோபால்ஜியின் மகன் இறந்து, மகள் புக்ககத்தில் ஏதோ கொடுமை அனுபவிப்பவளாக காட்டி, மனைவிக்கு பைத்தியம் பிடித்து என்று ஒரு குடும்பமே சின்னாபின்னமாகிறது. அதற்கு இதுதான் காரணமென்று இறுதியில் பட்டும்படாமலும் விளக்கி இருக்கின்றார். சத்யன் குமார் ஒரு திரைப்பட நடிகர் கோபால்ஜியை மிகவும் மதிப்பவர் இறுதியில் இவர் தான் கோபால்ஜியின் கஷ்டங்களுக்கான முடிச்சினை அவிழ்க்கிறார்.
இந்த இரு கதைசொல்லிகளும் முதலில் ஒருவரும் பின்பு அடுத்தவரும் என்று மாறி மாறி கதை சொல்கின்றார்கள். ஒருவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அடுத்த அத்தியாயத்தை உடனே படிக்க தூண்டும் வண்ணமிருக்கும் ஒரு முடிச்சு. ஒரு கதை சொல்லியின் பங்கு முடிந்ததும் அடுத்த கதை சொல்லி ஆரம்பிக்கும் போது முதல் கதைசொல்லியின் கதையே நீடிக்க கூடாதா என்ற எண்ணம் வருகின்றது. இதே எண்ணம் இரண்டாம் கதை சொல்லி கதை சொல்லி முடிக்கும் இடத்திலும் வருகின்றது.
காமாட்சிக்கு என்ன பிரச்சனை, சியாமளாவின் வாழ்க்கை இப்படி சில விசயங்கள் மட்டுமே சொல்லப்படாமல் இருக்கின்றன. அவற்றை கூட நாமே ஒரு விதமாக யூகித்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட புத்தகங்கள் மேலும் சிறந்தவற்றை வாசிக்க தூண்டுகின்றன. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
மானசரோவர் (நாவல்)
- அசோகமித்திரன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை:125 ரூபாய்
Monday, December 21, 2009
நினைவுக் கோலங்கள்
எனக்கு பிடித்த பட்டியலில் ரங்கனுக்கு மூன்றாவது இடம், இரண்டாம் இடத்தை பிடிப்பது மார்கழி மாதம். இந்த மார்கழி மாதத்திற்குத்தான் எப்படி இத்தனை வசீகரம். விஞ்ஞான ரீதியாக இந்த மாதத்தில் நிலத்தில் வரும் ஓசோன் அதிகமென்று சொல்கிறார்கள். ஆன்மீக ரீதியில் தேவகணத்தின் பிரும்ம முகூர்த்தமே இந்த மார்கழி மாதம். மாதங்களில் கண்ணன் மார்கழியானவன். அவனுக்கு உகந்த இந்த மாதத்தில் தான் கோதையும் திருப்பாவையை பாடி கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சி பழகி கிடந்தனள். பல் வேறு விசேஷங்கள் கொண்டது இந்த மார்கழி மாதம்.
இந்த மார்கழி மாதத்து கொண்டாட்டங்கள் பலவும் சிறு வயது முதல் நினைவுகளில் அடி ஆழத்தோடு கிடந்து இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சிறு வயதில் கோலத்திடையடைக்க வண்ணப் பொடிகளை மிக ஆர்வமாக கலந்து வைத்து காலையில் எழுப்பி விடுங்க அம்மா என்று சொல்லி தூங்கிவிட்டு மறுநாள் அம்மா கோலம் போட்டு வண்ணமடைத்து முடித்ததும் தான் எழுந்திருப்பேன். பதின்ம வயதுகளில் அம்மா புள்ளியை மட்டும் வைத்து விட்டு வந்து எழுப்பிவிட சொல்லுவேன். பின்பு அழகாக கோலம் போட்டு வண்ணமடிக்குமுன் புலர்ந்திருக்கும் வானம்.
திருமணமாகி ஹரியானா வந்ததும் எனக்கு இங்கே புலப்பட்ட முதல் வித்தியாசம் எங்கே யாரும் கோலம் போடுவதில்லை. வெற்று வாசல்களை பார்க்க முதலில் மிக வித்தியாசமாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் நாளடைவில் பழகி போனது. நான் மட்டும் எங்க வீட்டு வாசலில் சின்னதாக சில கீற்றுகளை இழுத்து வைப்பேன். மார்கழி திங்கள் மேல் கோதை போலவே தீராத காதல் இருந்ததால் ஒவ்வொரு மார்கழியிலும் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் இடுவது வழக்கம். வருட வருட அக்கப்பக்கங்களில் இருப்பவர் என்ன விசேசம் ஏன் ரங்கோலி என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
ஹரியானா வந்த புதிதில் டெல்லியில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி வேலையில் இருந்தேன். அந்த நிறுவனம் இருந்த இடம் திக்ரி என்ற கிரமத்தின் அருகிலிருந்தது . மார்கழி வரும் முன் அந்த கிராமத்து கடை வீதியில் சென்று வெள்ளை துணிகளுக்கு போடும் நீலம், குங்குமம் மற்றும் சில வண்ணபொடிகளை நானே வாங்கி வருவேன். குளிர்காலத்துக்கென வரும் பதினைந்து நாள் விடுமுறையில் வாசல் அடைத்து கோலம் போட்டு மகிழ்ந்திருந்தேன்.
பனிரெண்டாம் வகுப்பிலிருந்தே மென்பொருள் நிறுவனத்தில் பணி புரியவேண்டுமென்ற ஆவல் அடிமனதில் நீறு பூத்த நெருப்பாக வளர்த்து வைத்திருந்த காரணத்தால் விட முயற்சியினால் டெல்லியில் இந்தியாவின் முன்ணணி நிறுவனத்தில் மேல்படிப்பு படித்து மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து திக்ரி கடைவீதியில் பார்த்து பார்த்து வாங்குவது போல வண்ணப்பொடிகள் வாங்கவோ அலுவல் கிளம்பும் அவசரத்தில் பெரிய கோலம் போடும் அளவு நேரமோ கிடைப்பதில்லை. ஆயினும் வண்ணக்கோலம் வரையும் வழக்கம் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இன்றுவரை.
ஹரியானாவில் மார்கழி கோலங்கள் வழக்கம் இல்லாத காரணத்தால் இங்கே வண்ணப்பொடிகள் நம்மூரில் அளவு விதவிதமான நிறங்களில் கிடைக்காது. ஹோலி பண்டிகையின் போது பொதுவாக பச்சை வண்ணத்திலும், இளம் சிவப்பு மற்றும் அழுக்கு மஞ்சள் நிறத்திலேயே வண்ணங்கள் உபயோகிக்கப்படும் அந்த வண்ண வண்ணங்களையே மார்கழி வண்ணக் கோலங்களின் விதியையும் தீர்மானித்து வந்தது.
வருடவருட ஹோலியின் போது வாங்கும் வண்ணப்பொடிகளை பாதுகாப்பது போல இந்த வருடமும் வைத்திருந்தேன். ஆனால் வீட்டில் சமீபமாக வெள்ளை அடித்ததால் அவை எங்கு மாற்றி வைக்கப்பட்டன என்று தெரியாமல் மார்கழியின் முதல் மூன்று நாட்களும் ஆச்சி மஞ்சள் பொடியும் சென்னை கிராண்ட் ஸ்வீட்ஸில் வாங்கிய கருவேப்பிலைப் பொடியும் வண்ணக் கோலங்களாகி அலங்கரித்தன.
இந்த சனிக்கிழமை டெல்லி செல்லும் வாய்ப்பு கிடைத்ததால் முனிர்க்கா ரமா ஸ்டோரில் ராங்கோலி வண்ணப்பொடிகளை வாங்கி வந்தோம். பதினைந்து ரூபாய்க்கு பனிரெண்டு வண்ணங்கள் கிடைத்தது. ஞாயிறு காலை மார்கழி திங்கள் ஐந்தாம் நாள் ஐந்து வண்ணங்களில் தாமரையும் பாட்டாம்பூச்சிகளும் அழகாய் ஜொலித்தபடி இருந்தது எங்கள் வீட்டு வாசலில்.
- லாவண்யா சுந்தரராஜன்
Thursday, December 17, 2009
நிபந்தனையற்ற வரவேற்பு....!!! - கலாப்ரியா
நீர்க்கோல வாழ்வை நச்சி தொகுப்பிற்கான கலாப்ரியா அவர்களின் அணிந்துரை
அன்பு, பிரியம், சினேகம் ஆகியவற்றுடனும் அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்தத் தொகுப்பு. அதனால் தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் அவருடைய கவிதைகள் இயங்குகின்றன.
சினேகிதத்தின் ‘உடனிருப்பு‘ அவருள் பல வசீகரம் மிக்க படிமங்களை உருவாக்குகிறது.
“இப்போதுதான் கழுவிய
கண்ணாடிக் குவளை மேல்
தண்ணீர்ப் படலமென
வசீகரம் கொண்டது
உன் இருப்பு.”
என்னுடைய சின்னஞ்சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் என்ற எங்கள் கிராமத்தில் போய் இருப்போம்.அங்கே மின்சாரம் கிடையாது. சூரியன் மேற்கில் மறையத் தொடங்குகிற சாயுங்காலம் வந்து விட்டால். அம்மா நாலைந்து ஹரிக்கேன் லைட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு துடைத்து எண்ணெய் விட்டு, திரிகள் திருத்தி, அதன் கண்ணாடிச் சிம்னிகளை கழுவிக் காய வைப்பாள். சிம்னியின் வளைவுகளில் ஒரு தண்ணீர்ப் படலம் அழகாய் இறங்கி வட்ட வடிவமாய் செங்கல்த் தரையில் ஒரு கோலமிடும். நீண்ட நாட்களாக, கிட்டத்தட்ட 55 வருடமாக, நான் இதைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்று லாவண்யாவின் கவிதையில்வாசித்து அந்நினைவை மீட்டுக் கொள்கிறபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இப்படி நினைவையும் அனுபவத்தையும் வலியையும் கால,வெளி அலகுகளைத் தாண்டி மீள் நினைவாக்குவதே ஒரு நல்ல கவிதையின் செயல்.
புறக்கணிப்பின் வலியைப் பற்றி புலம்பல்கள் இல்லாமல் நிதர்சனமான வரிகளை நிறையவே காணமுடிகிறது .
கவிதை போலும் – என்றொரு கவிதை.
காலம் காலமாய் வாழும் அது
என்றாய் நகைத்திருந்தேன்.
....... ............. .................
..................... ..................... ......
சாவிலும் கூடவே வரும் அது
என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்.
இறுதியில் நீ உமிழ்ந்து விட்டுப் போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக.
இதில் கலக்கம் இருக்கிறது. ஆனால் சாக்கடை நிலவுப் படிமம் அதன் தொனியையே மாற்றி விடுகிறது.இதில் முக்கியமாக கவிஞர் ”அது” என்று குறிப்பிடுகிறர். அது நட்பா, காதலா, எதிராளி ஆணா, பெண்ணா என்றெல்லாம் துலங்காமல் இருப்பது முக்கியமானதாகப் படுகிறது.
செவ்வியல்ப் படிமங்கள் என்றில்லை... இன்றைய தாராளமயப் பொருள் உலகின் பலவும் இவரது கவிதையில் படிமங்களாகப் பதிவாகின்றன.
இப்போதெல்லாம் எங்கள் கிராமங்களைச் சுற்றி கற்றாலைகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. இதற்கான, நிறுவப்பட்ட பின் உயரமாகும் உபகரணங்கள், நீஈஈளமான லாரிகளில் அடிக்கடி வருகிறது. அவற்றை இரு சக்கர வாகனத்தில் வேகமாகக் கடக்கும் போது ஒரு படபடப்பு ஏற்படும்.(இது போல கண்டெயினர்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள்.)
லாவண்யாவின் கவிதை வரிகள்:
வாகன அடர் சாலையில்
நீளும் கன வாகனமொன்றை
கடக்கும் படபடப்போடு
எத்தனை அவமானங்களை
கடந்தாகி விட்டது....
என்கிற படிமம் அந்தக் கவிதையின் மையத்தோடு அற்புதமாகப் பொருந்தி வருகிறது.
அவருடைய பல கவனிப்புகள் நம்மைச் சுற்றி நொடியில் நிகழ்ந்து விடுபவை. “கண நேரம் கொரிக்க கை கோர்த்து கங்காரு போலாகும் அணில்கள்....”என்பது அதில் ஒன்று. ஒரு நல்ல கவிஞரின் பார்வை இப்படி நுணுக்கமாக இருக்க வேண்டும். இருக்கிறது இவரிடம்.
கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும். என்கிற கவிதை முழுக்க ஒரு நவீன வரிகளுடன் நகர்கிற கச்சிதமான முழுமையான கவிதை. இதைப் போன்ற கவிதைகள் இவருக்கு நிச்சயம் பேர் வாங்கித் தரும்.
பயம் பற்றி நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
”எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழகுவதேயில்லை”
என்கிற லாவண்யாவின் வரிகள் என்னை இன்னும் பயப் படவைத்தது, ஒரு சின்ன ஆசரியத்தோடு.
மழைக்கு விரித்திருக்கிற தார்ப் பாயின் குழிவுகளில் தேங்கி இருக்கும் நீரையும், காற்றுக்கு அது அசைகிறதை அதன் கீழிருந்து பார்த்தும் ரசித்திருக்கிறேன்.”நீர்க் கோல வாழ்வை நச்சி” என்கிற தலைப்புக் கவிதையில் இது போலொரு அழகான படிமம். இப்போதெல்லாம் கட்சி விழாக்களுக்கும் கல்யாணங்களுக்கும் வைக்கிற வினைல் போர்டுகள் பல, சேரிக் குடிசைகளுக்கு கூரையாகி இதே போல் நீர்க் கோல வாழ்வை வழங்கிக் கொண்டிருக்கிறது. (நான் பார்க்க நேர்ந்த ஒரு குடிசையின் வினைல் கூரையில், வானம் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவின் ”க்ளீவேஜில்” தண்ணீர் தேங்கி இருந்தது.)
சில கவிதையின் வரிகளிடையே தொடர்பின்மை தென்படுகிறது.”அமைதியை விளைவித்தல்” என்கிற கவிதை. இது நல்ல கவிதையாக்கப் பட்டிருக்க வேண்டும். எங்கேயோ இடறுகிறது.
”நாலாம் பிறையை நாய் கூடப் பாக்காது” என்று ஒரு சொலவடை உண்டு. பார்த்தால் நிறையக் குழந்தை பிறக்கும் என்றொரு தொன்ம நம்பிக்கையும் உண்டு. ஆனால் அதுதான் சோதனைக்கென்றே கண்ணில் பட்டுத் தொலைக்கும். அதைச் சொல்லுகிற ஒரு கவிதை நன்றாக வந்திருக்கிறது. இந்த சொலவடை , தொன்மம் எல்லாம் சொல்லப் படாமல் வேறொரு தளத்தில்.
நீரடியில் காத்திருத்தல்-என்றொரு கவிதை, நல்ல கவிதை. நீரினடியில் காத்திருத்தல்.....என்ற பொருளில் தலைப்பு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இதெல்லாம் பழக்கத்தில் சரியாகி விடும். மற்றப்படி வழக்கமான முதியோர் இல்லம் மாதிரியான எல்லோரையும் பாதிக்கிற விஷயங்களை எல்லோரையும் போல் தனித்துவமற்ற வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதையும் இருக்கிறது.
இப்படி சின்னச் சின்ன விலகுதல்கள்( aberrations) இருந்தாலும் நிறைவான லாவண்யாவின் பிரியமும் நட்பும் திகட்டத் திகட்ட ஊடாடும் பல கவிதைகள் நன்றாக இருக்கின்றன.வீணை காயத்ரி, `ப்ரிய பாந்தவி’ என்றொரு புதிய ராகம் கண்டுபிடித்தது நினைவுக்கு வருகிறது. லாவண்யாவும் நல்ல கண்டு பிடிப்பாகலாம். இந்த நல்ல தொகுப்பை எந்த நிபந்தனையுமின்றி வரவேற்கலாம்.
-கலாப்ரியா
இடைகால்
29.11.2009
Tuesday, December 15, 2009
நான் பறக்கும் போது(உரையாடல் கவிதை போட்டிக்காக)

விடிந்த பொழுதொன்றில்
பறக்கும் வரம் பெற்றாற் போலொரு
மனக்கனவின் நீட்சியாய்
சிறகில்லை
பறக்க செயற்கை இயந்திரமில்லை
உந்திப் பறந்தெழ உத்தியொன்றும்
புலப்பட்டாற் போலில்லை
பின்னும்
பறக்கும் முயற்சியில் இருந்தேன்
சீதைக்காக முறிந்த
சிவ தனுசில்
அம்பாகி விசை கொண்டு
புறப்பட்டேன்
கையசைக்காமல் பறக்கும்
வித்தை சற்றைக்கெல்லாம்
பெற்றேன்
செல்ல நினைத்த இடங்களுகெல்லாம்
வில்லிருந்தே எய்தப்படுகின்றேன்
விருட்டென போய்ச் சேர்கிறேன்
பறவைகள் வியக்கின்றன
வினோத மிருகம் ஒன்று
விண்ணில் அலைவதைக் கண்டு
தானும் அம்பாகி பறக்க
யத்தனித்து தோற்கின்றன
திடுமென நினைத்து கொண்ட
கடவுளர் இரவலாக
தந்த வரத்தை
திருப்பி தராமல் காலம்
கடத்துவதாக
வெடுக்கென்று பிடுங்கி கொண்டார்
வரமிழந்த மறுநாளும்
வில்லிருந்து புறப்பட்ட
நான் விழுந்தேன்
மீளமுடியாத
பள்ளத்தாக்கொன்றில்

