Friday, December 16, 2016

உயிரோடையும் காலச்சுவடும் இணைந்து நடத்தும் "சிறுகதை பயிலரங்கம் 2017"

இடம்: சக்தி கல்யாண மண்டபம், அய்யம்பாளையம், திண்டுகல் மாவட்டம்
தேதி: பிப்ரவரி 10,11,12.
நோக்கம்:
தமிழ்ச் சிறுகதையின் வளத்தையும் வலிமையையும் மீண்டும் உணர்தல்; உணர்த்துதல். சம காலப் படைப்புகளை விரிவான வாசிப்புக்கு உட்படுத்துதல். புதிய படைப்பாளிகளைக் கண்ட டைந்து அவர்களை ஊக்குவித்தல்.
நிகழ்வு:
மூன்று நாட்களில் ஐந்து அமர்வுகளாகப் பயிலரங்கம் நடைபெறும். உணவும் தங்குமிட வசதியும் அமைப்பாளர்களால் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தமது சொந்தச் செலவில் வந்து செல்லவேண்டும்.
பயிலரங்கில் பங்கு பெற:
பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்றை shortstories.workshop2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
நிபந்தனைகள்:
*வயது வரம்பில்லை. அனுமதி இலவசம்
* மாணவ / மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
*ஒருங்கிணைப்பாளர்களால் இறுதி செய்யப்பட்டு பங்கேற்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.









Monday, November 7, 2016

கவிதையும் கனவும் - லாவண்யாவின் கவிதை உலகம் - கவிஞர் ஆனந்த்

”ஒரு ஆசிரியர் தன் கதையின் பொருளை மற்றவர்களை விட இன்னும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை,” என்கிறார் லூயிஸ் கரால். அந்த விதத்தில் என் வாசிப்பில் எனக்குக் கிடைத்த லாவண்யாவின் கவிதைப் பாங்கு பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதையும் கனவும் ஒரே முறைபாட்டின் இருவேறு வெளிப்பாடுகள் என்று நான் நம்புகிறேன். இரண்டுமே வாழ்வின் ஓட்டம் ஆழ்மனக் கட்டமைப்புகளின் சட்டகங்களில் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதன் புறவயமான தோற்றம்தான். இரண்டுமே சிக்கல்களும் எளிதில் புரிந்துவிடாத இருண்மைத் தன்மையும் கொண்டவையாக இருக்கின்றன. சொற்களும் குறியீடுகளும் படிமங்களும் இதைத்தான் குறிக்கின்றன, இதற்கு அர்த்தம் இதுதான் என்று அறுதியாக வரையறுக்க முடியாமல் இருக்கும் நிலை இரண்டிலும் இருக்கிறது. நாம் எந்தச் சட்டகத்தில் வைத்தாலும் அதற்கேற்ப புதிய அர்த்தங்களை தரவல்லவையாக இருக்கின்றன கவிதை, கனவு இரண்டுமே. இரண்டும் மனிதப் பிரக்ஞையின் ஆழ்தள ஓட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. அதனால் அந்த ஓட்டங்களையும் ஆழ்தள இயக்கங்களையும் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. பிரக்ஞையின் ஆழ்தளங்களும் அங்கே உறைந்திருக்கும் பிம்பங்களும் தனிமனிதப் பிரக்ஞை சார்ந்தவை அல்ல. முழு மனிதப் பிரக்ஞையின் அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்தவை அவை. மனித இனத்தின் ஒட்டுமொத்த அனுபத்தின் சாரம் அங்கே பொதிந்து கிடக்கிறது. அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான தளம் அது. மனித அனுபவத்தின் கூறுகளை இவைதான் நிர்ணயிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் லாவண்யாவின் கவிதைகளை நான்  பார்க்கிறேன்.
காதல் தரும் வேதனை, பிரிவின் ஆழ்ந்த துயரம், மனப் பிழிவு, மனத்தை ஓயவிடாது நீர்ப்பரப்பில் ஒளிச்சிதறலென எழுந்து மறையும் எண்ண அலைகள். பார்வையை எதிலும் பதியவிடாமல் மனத்தைத் தொடர்ந்து அலைக்கழிக்கும் உணர்ச்சிப் பெருக்கு, மனத்திரையில் இடைவிடாது பிம்பங்களைப் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் ஆழ்மன இயக்கங்கள், இவையெல்லாம் லாவண்யாவின் கவிதை உலகைக் கட்டமைக்கின்றன. அவரது ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு தளத்தில் இந்த விஷயத்தை அணுகுகின்றன.
அவரது முதல் தொகுப்பான ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ என்னும் நூலில் உள்ள கவிதைகளில் பெருமளவுக்கு புலன் சார்ந்த அனுபவங்களும், உடலும், உடல் சார்ந்த படிமங்களும் குவிமையமாக இயங்குகின்றன.
பயணத்தின் முடிவில்
நான் கிழித்தெறிந்த
பயணச்சீட்டின் துகள்கள்
உன் முகத்தில் மோதியிருக்கக் கூடும்
பயணத்தில் கடந்த வீடொன்று
உனக்குப் பிடித்திருக்கலாம்                     (தொடர்ந்து வரும் கடந்த பாதை)

            இன்னொரு கவிதை. கூர்மையான புலனுணர்வு தூண்டும் அக அனுபவங்கள் இந்தக் கவிதையில் வெளிப்படுகின்றன.
இருளின் மணத்தை
நுகர்ந்தபடி விரைந்திருந்தது
என் பயணம்
தனிமையின் நீலநிற
நீரூற்று சுழன்றாடியபடி
கூடவே வந்தபடியிருந்தது                                 (நான்காம் பிறை நிலா)
           
மேற்கொண்டு எழுதப் போகும் ஆழமான கவிதைகளுக்கு எடுத்துக்காட்டென ’நிழலுருவம்’ என்றொரு கவிதை முதல் தொகுதியில் காண முடிகிறது.  ’கனவின் மழைத்துளி’ என்னும் இன்னொரு கவிதையும்கூட.
கனவின் தொழிற்சாலையாக
தினமொரு நினைவினை உணவென
தந்தபடி விடிகிறது என் வானம்
கனவின் மழைத்துளி
சிறிது சிறிதாக
நனைக்கிறது என் வாசலை
விடியும் வரை எனதில்லை
என் வானம்
என் வாசல்
விடிந்தெழுந்தபின்
எனதில்லை என் கனவுகள்                               (கனவின் மழைத்துளி)

இரண்டாவது தொகுப்பான ‘இரவைப் பருகும் பறவை’ லாவண்யாவின் கவிதை வேறொரு தளத்தை அடைந்துவிட்டதைக் காட்டுகிறது. இந்த இரண்டாவது தொகுப்பில் உள்ள கவிதையுலகம் உள்வாங்கி அகவயப்பட்டிருக்கிறது. புலன் விடுத்த மனோலயமான பிம்பங்கள் இந்தத் தொகுப்பில் நிறையக் காணக் கிடைக்கின்றன. லாவண்யா படிமங்களினூடாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டிருப்பதை இந்தத் தொகுப்பின் கவிதைகள் பறைசாற்றுகின்றன. படிமங்களின் பயன்பாட்டில் ஒரு நேரடித் தன்மை வந்தமைந்திருக்கிறது. தவறி விழுந்து மடங்கிவிட்ட புத்தகத்தின் அட்டையைச் சரி செய்ய இயலாமல் போகிறது. இழந்துவிட்ட குழந்தைமையின் களங்கமின்மையை இந்த வரிகள் பிரதிபலிக்கின்றன.
மறக்க இயலாத நிகழ்வென
மீண்டும் பழைய அட்டையை
மீட்க முடியாத கனவென
இந்த ஒரு துளித் துயரம்                                                (ஒரு துளித் துயரம்)
            இதே விஷயம், ‘மீன்குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும்’ என்ற கவிதையிலும் தெரிகிறது. பழகிப் போய்ப் பரிச்சயமாகிவிட்ட வாழ்க்கை முறையில் பிரியம் தொலைந்து போவதை ‘உதிர்ப் பிரியம்’ என்னும் கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.
அங்கங்கே சில இடங்கள் மட்டும் படிமமாக உருக்கொண்டு வெளிப்படாமல் ஒரு கருத்தாக, அல்லது கூற்றாகத் தங்கிவிட்டிருக்கின்றன. ‘பிழைக்காட்சி’, ‘நிகழ்வின் பின்’ என்னும் தலைப்புக்கொண்ட இரண்டு கவிதைகளின் கடைசி வரிகள் இதற்கு உதாரணம். மேலும் இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் ‘பிரியம்’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருப்பது அந்தச் சொல்லின் செறிவை சற்று நீர்த்துப் போகச் செய்திருக்கிறது என்று தோன்றுகிறது.
தொகுப்பின் தலைப்பான ‘இரவைப் பருகும் பறவை’ என்னும் தலைப்புக்கொண்ட கவிதை மிகச் சிறந்த கவிதையாக உருப்பெற்றிருக்கிறது. நீண்டதொரு காலநீட்சியின் பிம்பம் கவிதை விரியும்போது மனத்தில் எழுகிறது. வாசக மனத்தின் ஆழங்களைத் தீண்டுவதாக இந்தக் கவிதை அமைந்திருக்கிறது.
‘நானும் நானும்’ என்ற கவிதையில் சுயத்தின் எல்லைகளைக் கடந்து பார்வை நீள்கிறது. தன்னுள்ளே தான் ஊடுருவி நோக்கும் ஆழ்மனப் பார்வை, ‘விரவி நீங்கும் நினைவுகள்’ கவிதையில் தெரிகிறது. குறிப்பாகத் தொடக்க வரிகள்.
கனவின் இடுக்குகளில் தெறிக்கும் கைப்பற்றல்
புதைமணலின் அடியாழம் வரை நுழைகிறது.                     (விரவி நீங்கும் நினைவுகள்)

            இதேபோல்,
எங்கோ தொடங்கி
எங்கோ முடியும்
எல்லாப் பயணங்களையும்
சுமந்துகொண்டே இருக்கிறது
ஏதோ ஒரு சாலை                                                           (விழித்திருக்கும் சாலை)

பிரக்ஞையின் பல தளங்களிடையே உள்ள பரிமாற்றம் பல நேரங்களில் சரிவர இருப்பதில்லை. ஒரு தளத்தில் புரிந்த அனுபவம் இன்னொரு தளத்திற்குப் புரிவதில்லை. இந்த உண்மை அனுபவ ரீதியாக வெளிப்பட்டிருக்கும் வரிகள் இதோ.
நிலவென்ன செய்யும்
மீன் மொழி
அதற்குப் புரிவதில்லை
நதியும் செய்வதறியாது
சலனமற்று ஓடுகிறது                                                     (செதில்கள்)

தினசரி வாழ்வின் இயல்பான அனுபங்களின் வழியாக மன அசைவுகளைப் பிரதிபலித்துக் காட்டும் லாகவம் இவருக்குக் கைவந்துவிட்டது என்பதைக் காட்டும் சில வரிகள் இன்னொரு கவிதையில் காணக் கிடைக்கின்றன.
மெத்தெனப் பதியும் தலையணையில்
உறுத்தும் காதணியென
புரண்டு புரண்டு படுக்கச் செய்கிறது
உரையாடலில் நெருடிய சொற்கள்                (உறங்க மறுக்கும் உரையாடல்கள்)


            கடைசியாக ‘அரூபிணி’ என்னும் கவிதை.
அரூபமானவள் அவள்
குரலில்லை நிறமில்லை பெயருமில்லை
ஆயினும்
அவள் என் உயிர்த் தோழி
            இந்த அரூபிணியிடம்தான் தன் கவிதைகளை எல்லாம் சொல்கிறாரோ லாவண்யா? அவளுக்காகத்தான் இதையெல்லாம் எழுதுகிறாரோ அவர்?
இப்போது ‘அறிதலின் தீ.’ மூன்றாவது தொகுப்பு. முதல் தொகுப்பின் கவிதைகள் புலனனுபவத்தின் ராகங்களைத் தம் கவிதைக் களனாகக் கொண்டிருந்தன. இரண்டாவது தொகுப்பில், உள்வயப்பட்டு, மனோராகங்களில் விஸ்தாரமாகச் சஞ்சரிக்கிறார் இவர். இப்போது மூன்றாவது தொகுப்பில் முந்தைய வரையறைகளைக் கடந்து புதிய எல்லைகளைத் தீண்டியிருக்கிறார். புதியதொரு உணர்வுலகத்தின் பெருவெளியில் தன் பயணத்தைத் தொடர்ந்து, அதன் மூலைமுடுக்குகளை உசாவுகிறார். பார்வையில் நுண்ணுணர்வும் வெளிப்பாட்டில் சொல்நுட்பமும் கூடியிருப்பதோடு மட்டுமில்லாமல் புதிய பரிமாணங்களில் கவிதை நுழைந்திருக்கிறது. இவரது கவிதையுலகின் வளர்ச்சிக்கேற்ப இவரது மொழியில் ஆழமும் செறிவும் துல்லியமும் மேம்பட்டிருக்கின்றன. இது தவிர, முந்தைய இரண்டு தொகுப்புகளில் காணக்கிடைக்காத ஒரு எளிமை இப்போது கைவந்திருக்கிறது.
விட்டு விட்டு
சொட்டிக்கொண்டிருந்த குழாயை
இறுக மூடிய பின்னர்
நின்றுபோயின
நீர்த்துளிகள்
என்னவோ செய்கிறது
சொட்டாத குழாயின் நிசப்தம்                                     (சலனம்)

‘உணர்வின் வண்ணம்’ என்னும் கவிதை இவரது முந்தைய கவிதையாடலில் இருந்து விலகி வேறொரு தளத்தில் உட்புகும் ஜாலத்தைக் காட்டுகிறது. ‘அறிதலின் தீ’ கவிதையும் இவர் தனது முந்தைய கவிதைக்களனின் எல்லைகளைக் கடந்து வந்திருப்பதைக் காட்டுகிறது. கவிதை வெளிப்பாட்டின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது ‘காதலென்று’ என்னும் கவிதை.
கோப்பை நிறைய
நீலக்கடலை நிரப்பி
அதிலென் உயிர்ப்பூவை
மிதக்கவிட்டு
உன் கையில் அளித்தேன்
தேர்ந்த இசைக்கலைஞனென
இசைக் குறிப்புகள்
உதிர உதிர
நீ நுகர்ந்துகொண்டிருந்தாய்
சுழன்று சுழன்று
குதூகலித்துக்கொண்டிருந்தது
உயிர்ப்பூ
பருகப் பருக
வற்றிக் காய்கிறது
நீலக் கடல்

‘சுயநலமற்ற தனிமை’ என்னும் கவிதையைப் பார்ப்போம். தனிமை என்னும் உணர்வில் இரண்டு பரிமாணங்கள் உண்டு. ஒன்று வேதனை அளிக்கும் தனிமை உணர்வு. சொல்லப் போனால் தனக்குத் தானே இல்லாமல் போய்விட்ட நிலை அது. இன்னொரு தனிமை வேறு தளத்தைச் சார்ந்தது. தான் தன்னில் வேர்கொண்ட நிலை அது. மனம் அடங்கிய அமைதியும், அறிவு கடந்த ஆழமும் நிறைந்து, குறிப்பிட்ட யாருமாகவும் இல்லாமல் தான் இருக்கும் நிலை அது. அந்த உன்னதமான நிலையின் சாயல்களை இந்தக் கவிதை அதன் சில கோணங்களில் பிரதிபலிக்கிறது.
ஒரு வழியாய்
பயணம் முடிந்து
வீடு வந்து சேர்ந்ததும்
காலணியைக் கழற்றி
வெளியில் வைக்கும் வரை
எனது வெறுமையை
விரட்டியது தனிமை
கடைசி இரண்டு வரிகளில் இந்த நிலையின் முக்கியமான அம்சமான வெறுமையுணர்வு இல்லாத, நிறைவான தனிமை நிலை என்பது அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக இன்னொரு புதிய தடம். இன்றைய வாழ்க்கை முறையின் அடிப்படை அமைப்பிலேயே வலியும் வேதனையும், தவிப்பும் அல்லாடலும் குடிகொண்டிருக்கிறது. இவரது மூன்று தொகுப்புகளிலும் வலியையும் வேதனையையும் எதிர்கொள்வது பல கவிதைகளில் பிரதிபலித்திருந்தாலும், புதியதொரு கண்ணோட்டத்தில், புதியதொரு அணுகலில், புதிய முதிர்ச்சியைக் காட்டும் கவிதை ‘அமைதியின் ஒப்பனை.’ வாழ்வின் வலியை எதிர்கொள்ளும் பாங்கு மாறிவிட்டிருக்கிறது.
இன்றைய தினத்தின் அவமானத்தை
உதட்டுக்குச் சாயமிடு முன்
பூசிக் கொள்கிறேன்
நேற்றின் புறக்கணிப்புகளை
கூந்தல் அலங்கார மணிகளினூடே
பின்னி மறைக்கிறேன்
சில காலமாய்த் தொடரும்
மரியாதையின்மையை
விரல்களுக்கும் நகப் பூச்சுக்கும்
இடையே சொருகி வைக்கிறேன்
பல நாட்களாய்ப் பாடாய்ப் படுத்தும்
பழிச் சொற்களை
கண்மையோடு தீட்டிக் கொள்கிறேன்
இவற்றில்
எங்கேனும் படியும் உங்கள் பார்வை
மேலும் அழகூட்டும் என்னை

அகநிலை புறவெளிக் காட்சியில் பிரதிபலித்துத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் விந்தையை வெளிப்படுத்தும் சில வரிகள் இதோ இங்கே ஒரு கவிதையில்.
மாலை நெருங்க நெருங்க
எல்லா மலைகளும்
பெண்ணாய்த் தெரிகிறது
இரவில் வாதையுடன்
அவை புரண்டு படுக்கும் ஓசை
எனக்கு மட்டும் கேட்கிறது                                                      (மலைப்பெண்)

தன் தொடக்கத்தைத் தேடிப்போவது என்பது நுட்பமான மனித மனங்களின் இயல்பு. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும் இந்த விஷயம், ’ஆரண்யம்’ என்ற கவிதையில் அவருக்கேயான விதத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ’விதிமுறைகள் இல்லாது திறந்தே இருந்தது வானமும் கானகமும்’ என்னும் வரிகள் இப்போதைய வாழ்முறையின் வரையறைகளையும் அவை தரும் வேதனையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதோ அந்தக் கவிதை.
முன்னொரு காலத்தில்
எங்கும் நிறைந்திருந்தது பசுங்காடு
விதிமுறைகள் இல்லாது
திறந்தே இருந்தது
வானமும் கானகமும்
என்றோ
கல் வனம் அடர்ந்து
பாதைகள் ஊர்ந்தன
காட்டில் இடமில்லாத மிருகங்கள்
மனித மனத்தில் குடியேறின
நான்
அந்த வனத்தையும்
அதன் பறவைகளையும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
’மலையோடே இருக்கும் மலை’, ‘வெறுமே நோக்குதல்’, ’பிரிவற்ற பிரிவொன்று’, ‘பாசக் கயிறு’, ‘முதுகுப் பாரம்’, இவையெல்லாம் மிக நல்ல கவிதைகள்.
லாவண்யாவின் கவிதைகள் இயல்பானவை. இயல்பான வளர்ச்சி கொண்டிருப்பவை. வாழ்வனுபவத்தின் ஓட்டத்தில் ஏற்படும் அகவளர்ச்சி அவரது கவிதைகளில் பிரதிபலிக்கின்றன. பாசாங்கற்ற நேரடியான சொல்லுதல் இவரது கவிதையின் சிறப்பு. அதனாலேயே ஆழம் கூடி நிற்கின்றன இவை. இத்தகைய கவிதைகளை ரசித்துப் புரிந்து கொள்வதற்கு சற்றுப் பொறுமையும் அவகாசமும் அகவெளியும் தேவை. மேலோட்டமான வாசிப்பில் கிட்டாமல் போய்விடக்கூடியவை இவரது கவிதைகள். பெருமளவிலான வாசகக் கூட்டத்தை இவர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல கவிதைகளை எழுதிவருவது குறித்து இவர் நிச்சயம் சந்தோஷப்படலாம்.
ஒரு நல்ல கவிதையுடன் இந்த உரையை முடிக்கிறேன். ‘நீர்ப்பாறை’ என்னும் தலைப்பில் உள்ள கவிதை.
ஆதியில் அவள் பாறையென்றிருந்தாள்
நீலக்கடல் அலைந்து அலைந்து நித்தம் அவளை
கெஞ்சிக்கொண்டிருந்தது
சிறிதும் இரக்கமில்லை கடல் மீது
பெருமிதம் கொண்டிருந்தாள்
கவலையற்ற கடல்
மெல்லத் தின்னத் தொடங்கியது பாறையை
மேனி மெலிந்தாள்
கரடு முரடுகள் குறைந்தன
கொடியிடையாள்
கடலாலே அழகியானோம்
என்றே மகிழ்ந்திருந்தாள்
மெல்ல
கூழாங்கல்லாகி
தன்னைத் தொலைத்திருந்தாள்
கடலடியில்.

[