Thursday, September 24, 2015

நிபந்தனையற்ற வரவேற்பு....!!! - கலாப்ரியா

நீர்க்கோல வாழ்வை நச்சி தொகுப்பிற்கான கலாப்ரியா அவர்களின் அணிந்துரை

அன்பு, பிரியம், சினேகம் ஆகியவற்றுடனும் அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்தத் தொகுப்பு. அதனால் தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் அவருடைய கவிதைகள் இயங்குகின்றன.

சினேகிதத்தின் ‘உடனிருப்பு‘ அவருள் பல வசீகரம் மிக்க படிமங்களை உருவாக்குகிறது.

“இப்போதுதான் கழுவிய
கண்ணாடிக் குவளை மேல்
தண்ணீர்ப் படலமென
வசீகரம் கொண்டது
உன் இருப்பு.”

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் என்ற எங்கள் கிராமத்தில் போய் இருப்போம்.அங்கே மின்சாரம் கிடையாது. சூரியன் மேற்கில் மறையத் தொடங்குகிற சாயுங்காலம் வந்து விட்டால். அம்மா நாலைந்து ஹரிக்கேன் லைட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு துடைத்து எண்ணெய் விட்டு, திரிகள் திருத்தி, அதன் கண்ணாடிச் சிம்னிகளை கழுவிக் காய வைப்பாள். சிம்னியின் வளைவுகளில் ஒரு தண்ணீர்ப் படலம் அழகாய் இறங்கி வட்ட வடிவமாய் செங்கல்த் தரையில் ஒரு கோலமிடும். நீண்ட நாட்களாக, கிட்டத்தட்ட 55 வருடமாக, நான் இதைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்று லாவண்யாவின் கவிதையில்வாசித்து அந்நினைவை மீட்டுக் கொள்கிறபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

இப்படி நினைவையும் அனுபவத்தையும் வலியையும் கால,வெளி அலகுகளைத் தாண்டி மீள் நினைவாக்குவதே ஒரு நல்ல கவிதையின் செயல்.

புறக்கணிப்பின் வலியைப் பற்றி புலம்பல்கள் இல்லாமல் நிதர்சனமான வரிகளை நிறையவே காணமுடிகிறது .

கவிதை போலும் – என்றொரு கவிதை.

காலம் காலமாய் வாழும் அது
என்றாய் நகைத்திருந்தேன்.
....... ............. .................

..................... ..................... ......

சாவிலும் கூடவே வரும் அது
என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்.

இறுதியில் நீ உமிழ்ந்து விட்டுப் போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக.

இதில் கலக்கம் இருக்கிறது. ஆனால் சாக்கடை நிலவுப் படிமம் அதன் தொனியையே மாற்றி விடுகிறது.இதில் முக்கியமாக கவிஞர் ”அது” என்று குறிப்பிடுகிறர். அது நட்பா, காதலா, எதிராளி ஆணா, பெண்ணா என்றெல்லாம் துலங்காமல் இருப்பது முக்கியமானதாகப் படுகிறது.

செவ்வியல்ப் படிமங்கள் என்றில்லை... இன்றைய தாராளமயப் பொருள் உலகின் பலவும் இவரது கவிதையில் படிமங்களாகப் பதிவாகின்றன.

இப்போதெல்லாம் எங்கள் கிராமங்களைச் சுற்றி கற்றாலைகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. இதற்கான, நிறுவப்பட்ட பின் உயரமாகும் உபகரணங்கள், நீஈஈளமான லாரிகளில் அடிக்கடி வருகிறது. அவற்றை இரு சக்கர வாகனத்தில் வேகமாகக் கடக்கும் போது ஒரு படபடப்பு ஏற்படும்.(இது போல கண்டெயினர்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள்.)

லாவண்யாவின் கவிதை வரிகள்:

வாகன அடர் சாலையில்
நீளும் கன வாகனமொன்றை
கடக்கும் படபடப்போடு
எத்தனை அவமானங்களை
கடந்தாகி விட்டது....

என்கிற படிமம் அந்தக் கவிதையின் மையத்தோடு அற்புதமாகப் பொருந்தி வருகிறது.

அவருடைய பல கவனிப்புகள் நம்மைச் சுற்றி நொடியில் நிகழ்ந்து விடுபவை. “கண நேரம் கொரிக்க கை கோர்த்து கங்காரு போலாகும் அணில்கள்....”என்பது அதில் ஒன்று. ஒரு நல்ல கவிஞரின் பார்வை இப்படி நுணுக்கமாக இருக்க வேண்டும். இருக்கிறது இவரிடம்.

கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும். என்கிற கவிதை முழுக்க ஒரு நவீன வரிகளுடன் நகர்கிற கச்சிதமான முழுமையான கவிதை. இதைப் போன்ற கவிதைகள் இவருக்கு நிச்சயம் பேர் வாங்கித் தரும்.

பயம் பற்றி நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

”எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழகுவதேயில்லை”

என்கிற லாவண்யாவின் வரிகள் என்னை இன்னும் பயப் படவைத்தது, ஒரு சின்ன ஆசரியத்தோடு.

மழைக்கு விரித்திருக்கிற தார்ப் பாயின் குழிவுகளில் தேங்கி இருக்கும் நீரையும், காற்றுக்கு அது அசைகிறதை அதன் கீழிருந்து பார்த்தும் ரசித்திருக்கிறேன்.”நீர்க் கோல வாழ்வை நச்சி” என்கிற தலைப்புக் கவிதையில் இது போலொரு அழகான படிமம். இப்போதெல்லாம் கட்சி விழாக்களுக்கும் கல்யாணங்களுக்கும் வைக்கிற வினைல் போர்டுகள் பல, சேரிக் குடிசைகளுக்கு கூரையாகி இதே போல் நீர்க் கோல வாழ்வை வழங்கிக் கொண்டிருக்கிறது. (நான் பார்க்க நேர்ந்த ஒரு குடிசையின் வினைல் கூரையில், வானம் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவின் ”க்ளீவேஜில்” தண்ணீர் தேங்கி இருந்தது.)

சில கவிதையின் வரிகளிடையே தொடர்பின்மை தென்படுகிறது.”அமைதியை விளைவித்தல்” என்கிற கவிதை. இது நல்ல கவிதையாக்கப் பட்டிருக்க வேண்டும். எங்கேயோ இடறுகிறது.

”நாலாம் பிறையை நாய் கூடப் பாக்காது” என்று ஒரு சொலவடை உண்டு. பார்த்தால் நிறையக் குழந்தை பிறக்கும் என்றொரு தொன்ம நம்பிக்கையும் உண்டு. ஆனால் அதுதான் சோதனைக்கென்றே கண்ணில் பட்டுத் தொலைக்கும். அதைச் சொல்லுகிற ஒரு கவிதை நன்றாக வந்திருக்கிறது. இந்த சொலவடை , தொன்மம் எல்லாம் சொல்லப் படாமல் வேறொரு தளத்தில்.

நீரடியில் காத்திருத்தல்-என்றொரு கவிதை, நல்ல கவிதை. நீரினடியில் காத்திருத்தல்.....என்ற பொருளில் தலைப்பு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இதெல்லாம் பழக்கத்தில் சரியாகி விடும். மற்றப்படி வழக்கமான முதியோர் இல்லம் மாதிரியான எல்லோரையும் பாதிக்கிற விஷயங்களை எல்லோரையும் போல் தனித்துவமற்ற வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதையும் இருக்கிறது.


இப்படி சின்னச் சின்ன விலகுதல்கள்( aberrations) இருந்தாலும் நிறைவான லாவண்யாவின் பிரியமும் நட்பும் திகட்டத் திகட்ட ஊடாடும் பல கவிதைகள் நன்றாக இருக்கின்றன.வீணை காயத்ரி, `ப்ரிய பாந்தவி’ என்றொரு புதிய ராகம் கண்டுபிடித்தது நினைவுக்கு வருகிறது. லாவண்யாவும் நல்ல கண்டு பிடிப்பாகலாம். இந்த நல்ல தொகுப்பை எந்த நிபந்தனையுமின்றி வரவேற்கலாம்.

-கலாப்ரியா

இடைகால்
29.11.2009

லாவண்யா சுந்தரராஜனின் "நீர்க்கோல வாழ்வை நச்சி" - பாவண்ணன்



ஊமத்தம்பூக்களும் தானியங்கிக்குழாய்களும்

பெருநகரத்தில் பெரிய நிறுவனமொன்றில் இணைந்து பணிபுரிந்து வாழும் வாய்ப்புப்பெற்றவராக உள்ளார் லாவண்யா. ஆனால் அவர் மனம் பள்ளிப் பருவத்துக்குச் சொந்தமான கிராமத்துடன் ஆழ்ந்த பிடிப்புடையதாக இன்னும் இருக்கிறது. மனத்தளவில் கிராமத்தையும் புறநிலையில் நகரத்தையும் சுமந்தபடி வாழ்கிற இரட்டை வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு தவிர்க்கமுடியாத ஒரு நெருக்கடி. எதையும் உதறமுடியாத, எதையும் உடனடியாகப் பற்றிக்கொள்ளமுடியாத அவர்கள் மனத்தவிப்புகள் இக்காலகட்ட இலக்கியத்தின் பாடுபொருளாக மாறியிருக்கிறது. லாவண்யாவின் படைப்புலகத்திலும் அது சுடர்விடுகிறது. ஊமத்தம்பூ அவருக்குப் பிடித்திருக்கிறது. தானியங்கிக்குழாய் அவருக்குப் பிடிக்கவில்லை. அவரையறியாமலேயே அவருடைய விருப்புவெறுப்புகள் கவிதைகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகின்றன.

"ஏரி போலும் ஏரி" இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. கவிதையில் சித்தரிக்கப்படும் ஏரி வறண்ட தோற்றத்துடன் உள்ளது. சற்று முன்பாக பெய்த மழையின் வரவால் எங்கோ ஒரு பள்ளத்தில் சின்னக் குட்டையாக தேங்கி நிற்கிறது நீர். ஒரு காலத்தில் நீர் தளும்பி நின்ற தோற்றம், இன்று ஒரு சின்னக்குட்டையையும் பெருமளவு கருவேல மரங்களையும் புல்வெளியையும் கொண்ட இடமாக உருமாறிவிட்டது. உயரமான தோற்றத்தோடு எழுந்து நிற்கும் கரைகள்மட்டுமே ஏரி என்கிற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் அடையாளமாக இன்னும் எஞ்சி நிற்கிறது. உருமாறி நிற்கிற ஏரியின் சித்தரிப்பதோடுமட்டுமே இக்கவிதை முற்றுப்பெற்றிருப்பின் அதை ஒரு காட்சிக்கவிதை என்ற அளவில் கடந்துபோய்விடமுடியும். ஆனால் கவிதை சற்றே நீண்டு, அந்த ஏரியைக் கடந்துபோகிற ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது. தன்னைப்போலவே அந்த ஏரி என அவள் மனம் எண்ணுவதையும் கண்டறிந்து சொல்கிறது. அக்கணம் ஏரி அழகான ஒரு படிமமாக விரிவாக்கம் பெற்றுவிடுகிறது. அவள் எப்படி ஏரியாக மாறமுடியும். நீர் தளும்பிநின்ற ஏரியைப்போல அவளும் ஒரு காலத்தில் இளமை ததும்ப நின்றவள். காலம் அவள் இளமையை விழுங்கிவிட்டது. வெவ்வேறு அடையாளங்களை அவள் உடலில் ஏற்றிவிட்டது. அவள் உருவம்மட்டுமே பெண்ணுக்குரிய தோற்றமாக எஞ்சி நிற்கிறது. அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கியபடி நகர்ந்துகொண்டே இருக்கிறது காலம். காலம்மட்டுமே, மாறாத உருவத்தோடு வலம்வர, அதன் கண்ணில்பட்ட எல்லாம் மாற்றமடைந்தபடியே இருக்கிறது.

"கண்ணாடிக்கோப்பைகளும் சில பிரியங்களும்" தொகுப்பில் உள்ள மற்றொரு நல்ல கவிதை. இரண்டு கண்ணாடிக்குவளைகளை முன்வைத்துப் பேசுகிறது கவிதை. அதன் தோற்ற ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இரட்டையர்போல இருப்பதாகவும் சொல்கிறது. தோற்றம்மட்டுமே ஒன்றாகவே இருந்தாலும் அது பயன்படும் விதத்தில் துல்லியமான வேறுபாடு உள்ளது. ஒன்றில் பிரியம் நிரப்பப்படுகிறது. இன்னொன்றில் தனிமை அகப்பட்டுத் தவிக்கிறது. இது ஒரு தருணத்தின் காட்சி. இன்னொரு தருணத்தில் இக்காட்சி மாற்றமடையலாம். பிரியத்தின் குவளையில் தனிமை அகப்பட்டுவிடுகிறது. தனிமையில் குவளையில் பிரியம் நிரம்பி வழிகிறது. தருணங்கள் இப்படி மாறிமாறி அமைந்தாலும், எல்லாத் தருணங்களிலும் ஏதோ ஒரு குவளைமட்டுமே நிரப்பப்படுகிறது, மற்றொரு குவளையில் தனிமையின் வெறுமை சூழ்ந்து நிற்கிறது. மேசைமீது வைக்கப்பட்ட கண்ணாடிக்குவளைகள் சமூகத்தளத்தில் படிமமாக மாற்றமடையும்போது கவிதையின் வலிமை அதிகரிக்கிறது. நிரப்பப்பட்ட குவளை, எப்போதும் வாய்ப்புகளைத் துய்க்கிற வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் வெற்றுக்குவளை, வாய்ப்புகளுக்கு வழியில்லாமல் புறக்கணிக்கப்பட்ட வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் உணரமுடியும். பெறுவதும் புறக்கணிக்கப்படுவதும் தருணத்துக்குத் தகுந்தபடி மாறலாம். ஆனால் புறக்கணிப்பென்ற ஒன்றே இல்லாதபடி சூழல் ஏன் மாறவில்லை என்பது முக்கியமான கேள்வி.

"எத்தனைமுறை பயந்தாலும் பயம்மட்டும் பழகுவதில்லை" என்பது லாவண்யாவின் ஒரு கவிதையில் இடம்பெற்றிருக்கும் வரி. மனம் அசைபோட நல்ல வரி. சிலருக்கு எதிர்பாராதவிதமான ஓசைகளைக் கேட்டதும் பயம் அரும்புகிறது. சிலருக்கு எதிர்பாராத மனிதர்களைச் சந்தித்தால் பயம் உருவாகிறது. சில காட்சிகளைக் கண்டால் சிலருக்கு பயம் தோன்றுகிறது. ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வாமையால் அல்லது அதிர்fச்சியால் உருவாகிற உணர்வுதான் பயம். அதிர்ச்சி அல்லது ஒவ்வாமை இருக்கிறவரைக்கும் பயமும் இருக்கத்தான் செய்யும். பயத்தை ஒருபோதும் நம்மால் பழகிக்கொள்ளமுடிவதில்லை. பிறவிக்குணம்போல அது நம்முடனேயே தங்கிவிடுகிறது.

"அமைதியை விளைவித்தல்" நவீன வாழ்வின் பதற்றத்தைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல கவிதை. வேலையிடங்கள் இப்போதெல்லாம் பெருநிறுவனத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன. எல்லா இடங்களிலும் அடையாள அட்டை. கைவிரல் ரேகைப் பதிவு. வரும் சமயம், வெளியேறும் சமயங்களின் பதிவு. நுழைந்ததற்குப் பிறகு தானே அடைத்துக்கொள்ளும் தானியங்கிக் கதவுகள். எங்காவது ஓரிடத்தில் இடறிவிடுமோ என்கிற பதற்றத்தை மனம் எப்பொழுதும் சுமந்தபடியே இருக்கும். தவறே செய்யாத இயந்திரங்கள் பிறழ்ந்து செயல்படும் சமயங்களில் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக கைகட்டி நிற்பதைப் பலமுறை பார்த்த அனுபவத்தால், உள்ளிருக்கும் வரை பதற்றமும் துணையாக இருக்கிறது. அமைதியான வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ளத்தான் வேலையைத் தேடுகிறோம். ஆனால் வேலைசெய்யப் போன இடத்தில் பதற்றத்தில் உழல்fகிறோம். எவ்வளவு பெரிய முரண்.

காட்சிகளையும் அனுபவங்களையும் எண்ணங்களையும் வகைப்படுத்தி கவிதைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளையதலைமுறைக் கவிஞர் லாவண்யா. அவருடைய ஆர்வத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பைச் சாட்சியாகச் சொல்லலாம். அவர் மேற்கொள்ளும் இடைவிடாத புதிய முயற்சிகள்மட்டுமே இனி அவரை அடுத்த கட்டத்தைநோக்கி நகர்த்திச் செல்ல உதவும்.

( நீர்க்கோல வாழ்வை நச்சி - கவிதைத்தொகுதி. லாவண்யா சுந்தரராஜன், அகநாழிகை பதிப்பகம். 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்- 603 306. விலை.ரூ40)