Monday, April 27, 2009

தொலைந்து போதல்

தொலைந்து போவதும் மீண்டு வருவதும் வாழ்கைத் தத்துவம் பூமாவின் கவிதை போல.

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

-- பூமா ஈஸ்வரமூர்த்தி

ஆனால் என் அனுபவம் ஒரு வித்தியாசமான தொலைந்து போதல்.

அன்னியதேசத்தில் தனிமையோடு இருத்தல் மிக கொடியது. அதனால் கிடைத்தவர்களை எல்லாம் தோழமையாக்கி கொண்டு ஒன்றாய் உண்பதும் வார இறுதியில் கூட்டமாய் வெளியே செல்வதும் வித்தியாசமான அனுபவங்களே. அதுவும் ஒரே மொழி பேசும் நண்பர்கள் வாய்த்துவிட்டால் மிக சீக்கிரம் தோழமையும் உரிமையும் பாராட்ட ஆரம்பிப்பது மிக இயற்கை. அதுவும் ஒரு தாய்க்கு உண்டான பரிவோடு அனைவர்க்கும் உணவை சமைப்பதிலும், பரிமாரி விடுவதிலும், கூட்டத்தை கூட்டுவதிலும் பிரசித்தி பெற்றவள். எல்லோர்க்கும் என் மேல் பிரியம் என்றே நினைத்திருந்தேன். ஒரு சுபயோக சுப வார இறுதியில் மதிய உணவிற்கு பிறகு வெளியே எங்கும் போவதற்கான ஆயத்தம் எதுவும் தெரியாத காரணத்தால் அறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் சென்று தமிழ் பேசும் அந்த நண்பரின் அறை எண்ணை அழைத்தேன் பதில் இல்லை. இன்னும் ஒரு தோழியின் அறையையும் அழைத்தேன் அங்கும் பதில் இல்லை. அவளுடைய செல்லிடைபேசியில் அழைத்தேன் எல்லோரும் வெளியில் கிளம்பி நீண்ட நடை சென்றிருப்பதாக சொன்னாள். சட்டென மனதை மேகம் திரையிட்டது. தனிமை போன்ற வெறுமையொன்று கூட வந்தமர்ந்தது. ஏதுவும் செய்ய தோன்றவில்லை.

வெளியே கிளம்பி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ளும் கிளிகளும், அழகிய மலர்களும், பூனை போலிருந்த சுவீடன் தேசத்து முயல்களும் என் வெறுமையை போக்கி கொண்டிருந்தன. தனிமை கூடக்கூட நடக்க ஆரம்பித்தது. நிறைய தெருக்களை கடந்து, சில பூங்காக்களை கடந்து ஒரு ஏரியை கடந்து ஒரு பாலமேறி நீண்ட தொலைவு சென்று பின் திசை புரியவில்லை. வளைந்து வளைந்து நடக்கின்றேன் வந்த வழி புரியவில்லை. எந்த வளைவில் திரும்பி நடந்தால் வந்த இடம் போகலாம் என்பது தெரியவில்லை. அருகே நடந்து வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பேசிய பாஷை புரியவில்லை. சட்டென தெரிந்தது தொலைந்து போய்விட்டேன் என்று. கையில் காசு கூட எடுக்கவில்லை. செல்பேசியும் இல்லை. வசிக்கும் தெருவின் பெயர் மட்டும் தோரயமாக தெரியும். சற்றே பயத்தோடு நடந்தேன். எப்படி எப்படியோ அலைந்து ஒரு பிராதான சாலையை அடைந்தேன். எங்கள் விடுதி வழி செல்லும் பேருந்து அவ்வழியில் செல்வதை கண்டேன். சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆயினும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ரங்கனை நொடி நேரம் மனதில் நினைத்து ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய வழி எனக்கு புலப்பட்டது. விடுதி சென்றதும் எதிர்பட்டாள் தோழி எங்கே சென்றிருந்தாய் உன்னை மிக தேடினோம் உன் கைப்பேசியை கூட அழைத்தேன் என்றாள். எந்த சமாதானத்துக்கும் இடம் தராத கலகக்காரியின் வேடமணிந்து அறையை தாளிட்டு கொண்டேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். மனித்தில் இருந்த வெறுமை குழப்பம் மறைய இந்த தொலைதல் உதவி இருந்தது.

Friday, April 24, 2009

பொம்மலாட்டம்

வாழ்க்கை என்பதே ஒரு பொம்மலாட்டம் தான். இங்கு பிரச்சனை நூல் யார் கையில் என்பதே. பல சமயங்களில் நம் ஆட்டத்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தான் தீர்மானிக்கின்றார்கள். ஆனால் இது ஆடுகின்ற பொம்மையை ஆட்டி வைத்ததவர் யார் என்ற ஆராய்ச்சியைப் பற்றிய நீள்பதிவு.

பொம்மைகள்

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்கேள்வி கூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

- ஹரன் பிரசன்னா.

பொம்மை ஆடிக்கொண்டு இருக்கின்றது. பார்ப்பவருக்கு இதை ஆட்டி வைத்தவர் யாராக இருக்கும் என்ற சந்தேகம். இந்த சாதாரண விசயத்தை இவ்வளவு அலச வேண்டிய காரணம் என்ன என்று நாம் ஆச்சரிய படலாம். ஆனால் இங்கே ஆடும் பொம்மை ஒரு இறுதி விளைவு.(End result) அந்த இறுதி விளைவின் தாக்கம், எப்படி நடத்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியம் அல்லது ஆர்வம் எதுவேண்டுமானாலும் காரணிகளை ஆராய காரணமாக இருக்கலாம்.

குற்றம் அறிதல்
-----------------------------

அலுவ‌ல‌க‌த்திலிருந்து த‌லைவ‌லியோடு வீட்டுக்கு வ‌ரும் பெண்ணிட‌ம், உணவின் சுவை சரியில்லை என்று கணவன் குறை கூறினால், பெரும் சண்டை தான் விளையும். அவள் எரிச்ச‌லுக்கு காலையில் இரண்டு நிமிடம் தாமதத்தில் தொட‌ங்கி அதை தொட‌ந்த‌ அலுவலக பேருந்தை தவறவிட‌ல், நெரிசல் மிகுந்த நகர பேருந்தில் பய‌ணித்தல் அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாம‌ல் த‌லைவ‌லியில் முடித‌ல், ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ளின் அல‌ட்சிய‌ம், உய‌ர் அதிகாரியின் தேவையில்லாத‌ கோப‌ம் இதில் எது வேண்டுமானாலும் கார‌ண‌மாக‌லாம்.

பிறிதொரு நோக்கில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற‌டைய‌ வேண்டிய‌ மிக முக்கியமான ஒரு கோப்பு சென்ற‌டைய‌வில்லையாயின், மேலாள‌ர் க‌ண‌க்க‌ரையும், க‌ண‌க்க‌ர் ப‌ணி பைய‌னையும், ப‌ணி பைய‌ன் அலுவ‌ல‌க‌ விதிமுறைக‌ளையும் ம‌ற்றும் சில‌ர் வேறு சில‌ரையும் கை நீட்டுவ‌ர். எவரின் த‌வ‌றாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். கோப்பு சென்ற‌டைய‌ வேண்டிய‌ இட‌ம் செல்ல‌வில்லை.

சரி இங்கே காரணிகளை பட்டியலிட்டாற்று. அதனால் ஆட்டம் நிற்கவா போகின்றது. எந்த பிரச்சனைக்கும் தீர்வை தேட வேண்டும். பிரச்சனை வந்ததன் காரணம் தேடுவதால் ஒரு பலனும் இல்லை. காரணிகள்(குற்றம்) அறிவதால் பொம்மையின் ஆட்டம் நிற்க போவதில்லை.

மாற்றங்களை மறுதலித்தல்
--------------------------------------------------

ஒரு பெண் குழந்தையின் தாய் த‌ன் தோற்ற‌ம் கார‌ண‌மாக‌ அவள் க‌ண‌வ‌னுக்கு த‌ன்னை பிடிக்க‌வில்லை என்று தெரிந்து தாய் வீடு வ‌ந்தும் விவாக‌ர‌த்து பெற‌ த‌ய‌ங்குகின்றாள். மாற்று வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றாள். இதன் காரணம் சமூகத்தின் மேல் இருக்கும் பயமா, மனத்தின் தெளிவின்மையா அல்லது பெண் என்பதால் சார்புடைமை அதிகம் என்பதாலா?

க‌ணினி துறையில் ப‌ணி புரியும் மிக‌ க‌டுமையான‌ உழைப்பாளி ஒருவ‌ர், வேலைக்கு தகுந்த சன்மானமுமில்லாத‌ போதும், பணி எப்போது வேண்டுமானாலும் போய்விடுமோ என்ற பயமிருந்த‌ போதும் வேறு வேலைக்கு முயற்சிக்கவில்லை. இதற்கு காரணம் தன்னம்பிக்கை இன்மையா? வாய்ப்பு வசதிகள் பற்றிய கவலையா? இங்கே இருக்கும் அளவு நண்பர் கூட்டம் திரட்ட முடியுமா, என்ன தான் கஷ்டம் என்றாலும் பழகிய இடமாகிவிட்டது என்பதா?

பணி இடம் குடி இருப்பிருலிருந்து மிக தொலைவில் இருந்தும் ஒருத்தி வீடு மாற்றிக் கொள்ள யோசிக்கின்றாள். அங்கே இதை போன்ற வசதியா வீடு கிடைக்குமா? வேலையாட்கள் கிடைப்பார்களா? குழந்தைக்கு பள்ளி சரியாக அமையுமா? மருத்துவம் பிற வசதிகள் எல்லாம் இங்கே ஓரளவு கைப்பட்டு விட்டது அங்கு அப்படி வாய்க்குமா?

எல்லோரிடத்திலும் எத்தனை கேள்விகள்? எத்தனை தயக்கங்கள்? மாற்றங்களை முயற்சிக்கும் வரை தான் துயரமெல்லாம். மாற்றத்திலும் அதற்குண்டான நன்மைகள் விளையத் தான் செய்யும் என்பதை அனுபவம் கொண்டு தெளியவேண்டும். மாற்ற‌ங்க‌ளை ம‌றுக்கும் வ‌ரை பொம்மைக‌ளின்(பிர‌ச்ச‌னைக‌ள்) ஆட்ட‌ம் நிற்க‌வா போகின்ற‌து

மடமை போற்றுதல்
-----------------------------------

மாத‌வி எப்பேர்ப‌ட்ட‌ பெண். இவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள். கோவ‌ல‌ன் பல ஆண்டுகள் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள்.

சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் மாதவி கூறுவதாவது

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

கோவ‌லன் மாத‌வியோடு கொண்டிருந்த‌து வெறும் உட‌ல் இச்சை. மாத‌வியின் மேல் இருந்த‌ ஈர்ப்பு குறைந்த‌தும், மாத‌வி அந்நாட்டு ம‌ன்னனை புக‌ழ்ந்து பாடினாள் என்ற‌ சிறு காரணத்திற்காக த‌ன்னை விட்டக‌ன்ற‌ கோவலனை, தான் தன் மனை என்று போனவன் போனானடி என்று விடாமல் "நம்மை மறந்தாரை நாம் மறக்கலாமா?" என்று வினவும் மாதவிக்கு கோவலன் மேல் இருந்தது காதலா, காமமா, இதை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றா? இப்படிப்பட்ட மாதவிகளின் மடமை போற்றுத‌லால் கோவலன் போன்ற பொம்மைகள் இன்றும் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.


கோதை ஒரு அற்புத‌ பிற‌வி. அவ‌ள் தோன்றிய‌தே ஒரு துள‌சி செடி அருகில் தான். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளையும் அவர் மூலமாய் கேட்டு, அந்தக் கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. க‌ண்ண‌ன் மேல் அவ‌ளுக்கு எத்த‌னை பிரிய‌ம். திருமாலுக்கு சார்த்த‌ வேண்டிய‌ மாலையை தான் அணிந்து கொடுத்து "சூடிக் கொடுத்த‌ சுட‌ர்கொடி" பெய‌ர் பெற்று கோதை ஆண்டாள் ஆனாள்.

நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

திரும‌ண‌ வ‌ய‌தில் திருமாலை ம‌ண‌க்க‌ வேண்டும் என்று வ‌ட்ட‌மிட்டு பார்த்த‌ல், கூட‌ல் கூடிய‌தா என்று பார்த்த‌ல், ம‌ன்ம‌த‌னை வேண்டுத‌ல், பாவை நோன்பிருத்த‌ல்,க‌ன‌வு காணல் என்ற‌ ப‌ல‌ ம‌ட‌மைக‌ளை ஆண்டாள் போன்றினாலும் அவை எல்லாவ‌ற்றிர்க்கும் முத்தாய்ப்பாக‌ "என் மார்பகங்கள் திருமாலுக்கேய‌ன்றி மனிதர்களுக்கு அல்ல‌" என்று கூறும் ஆண்டாள் தன்னிலை மறந்தவளா? கடவுளை கண்டவளா? அல்லது தானே கடவுள் என்ற அக‌ங்காரம் பிடித்தவளா? காரணம் எதுவாயினும் ஆண்டாள் மடமை போற்றியதால் திருப்பாவை, திருமொழி என்ற பொம்மைகள் ஆடி எழுந்தன.