Sunday, August 24, 2008

குழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்

அன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.

நான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.

எதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.

எதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.

என் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அருகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.