Saturday, February 5, 2022

ஜனவரி 2022 சில கதைகள் பரிந்துரை

 கதை: விளிம்பு
ஆசிரியர்: வைரவன் லெ ரா
இதழ்: ஓலைச்சுவடி
பரிந்துரை:லாவண்யா

மாய எதார்த்த கதை போல மொழியும் வடிவமும் மிக அருமையாய் குலைந்திருக்கிறது சிரஞ்சீவி மலைகள் இந்தியாவின் பலபகுதிகளில் இருப்பது போல குமரிமுனையிலும் ஒன்று அந்த மலையையும் இமயமலையையும் இணைக்கும் ஒரு சிறுபுள்ளி. நல்ல கதை.

*

கதை: யாருக்காகவும் பூக்காத பூ
ஆசிரியர்: அரவின் குமார்
இதழ்: வல்லினம்
பரிந்துரை:லாவண்யா

கதைசொல்லி ஒரு பள்ளி மாணவன் பத்துவயதுக்கு குறைவான வயதுடைய பையன் சொல்வது போன்ற கதை அதற்கே உரிய(குழப்பமான) போக்கில் இருக்கிறது. கதை சொல்லியும் அவன் நண்பர்கள் எல்லோருமே ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோரின் பிள்ளைகள். சிறுபிள்ளைகளிலுக்கிடையே நிகழும் சின்ன சின்ன போட்டி பொறாமைகள் மிகத்தெளிவாக பதிவாகியிருக்கிறது. அன்னையற்ற குழந்தைக்கு தராத சலுகையை அவர் கதைசொல்லிக்கு தருகிறார். இந்த இடத்தில் கதாரியர் நமக்கு ஏதோ ஒரு ஏற்றதாழ்வை உணர்த்த விரும்புகிறார் ஆனால் அது தெளிவாக உணர தேவையாக உரிபொருள் இல்லையோ என்று தோன்றுகிறது. பால்ய வயதில் நிகழும் கதைகளுக்குண்டான innocence இன்னும் கொஞ்சம் புனைப்பட்டிருந்தால் இந்த கதை எங்கோ சென்றிருக்கும். வாசிக்கலாம்.

*

ஆசிரியர்; எம்.கோபாலகிருஷ்ணன்
கதை: திரும்புதலற்ற பாதை
இதழ்: வல்லினம் இணைய இதழ
பரிந்துரை: மு. குலசேகரன்

நேர்த்தி மிகுந்த நெடுங்கதை. இதில் இந்த தனித்த வடிவத்துக்கேயுரியதான, வெவ்வேறான, ஆனால் வரையறுக்கப்பட்ட ஒரு விதத்தில், கதைமாந்தர், காலம், இடம், சிறப்பாக அமைந்துள்ளன. இந்தியாவின் இரு வேறு மூலைகளை பிணைக்கிற சாதிய சிக்கல் பின்னணியில், மிகவும் கலையமைதியுடன், சொல்லப்படாத பலவற்றை உணர வைக்கும் மொழியில் இக் கதை எழுதப்பட்டுள்ளது. நிலவுடமை முறை சரிந்து, முதலாளித்துவம் வளர்ந்த சூழலிலும் வேரோடிப்போயுள்ள, மேல்/கீழ் பிரச்சினை மாறாமலிருக்கிறது. உற்பத்தி உறவுகள் மாறினால் சாதியம், மத சிக்கல்கள் தேயும் என்பது இன்னும் கனவாகவே நின்றிருக்கிறது. குறிப்பிட்ட இருவரும் ஒத்த பொருளாதார நிலையிருந்தாலும், அந்நியமான பிரதேச அவலத்திலிருந்தாலும், ஒருவன் உயர்சாதிய மனோபாவம் கொண்டிருக்கிறான். அதுவே அவன் உடல், நடத்தை பாவனைகளாக வெளிப்படுகின்றன. அது போலவே, களமும் மாறுபட்டிருப்பதால், ஒடுக்குதலுக்குள்ளானவன் இம்முறை எதிர்த்து நிற்கிறான், காகம் வலிமையான கழுகிடம் போரிடுவது போல். இதில் ஊழ் போல் சிக்கி மரணமடைகிறான் மற்றொருவன். அவனுக்கு சாதியப் பிரச்சனைகள் இல்லை போலிருந்தாலும், குடும்ப அமைப்பை மீறிய காதல் மணம் புரிந்தவன். இறுதியில் ஆதரவற்று நிற்கும் மனம் வெதும்ப செய்யும் மனைவிகள், உற்றார்கள். சாதியம், மீறல் என்ற வெற்று உணர்வுகள் ஒரு தற்செயலான அபத்தப் புள்ளியில் வைத்து, பல நுட்பங்கள் கொண்டு விவரிக்கப்படுகின்றன.

*

கதை: பிரதி ஜெராக்ஸ்
ஆசிரியர்: சேவியர் ராஜதுரை
இதழ்: சொல்வனம்
பரிந்துரை:லாவண்யா

பிரதி எடுக்கும் கடையில் மறுபடி மறுபடி பிரதி எடுக்க எடுக்க வருவதற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று நினைக்கும் படியான கதை. கதையின் முடிவை இன்னும் இறுக்கமான, உனக்காகத் தான் வருகிறேன் என்றெல்லாம் சொல்லாமல் விட்டிருந்தால் இந்த கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும். எழுதுவது ஒருவிதத்தில் பிரதி எடுப்பது போன்றதே என்ற இடத்தை இந்த கதை தொட முயற்சி செய்திருக்கிறது. அந்த கோணத்தை இன்னும் வலுபடுத்தியிருந்தால் இந்த கதை இன்னும் வேறு தளத்தைத் தொட்டிருக்கும்.

*

ஆசிரியர்:கனகராஜ் பாலசுப்பிரமணியம்
கதை: நிலவுண்ணும் மண்
இதழ்: காலச்சுவடு
பரிந்துரை: அனோஜன் பாலகிருஷ்ணன்

சமீபத்தில் உரையாடல் ஒன்றில் நண்பர் சொன்னார், “அடிப்படைவாத இஸ்லாமியர்களிடம் இருந்து, முற்போக்கு இஸ்லாமியர்கள் தம்மைப் பாதுகாக்க இனிவரும் காலங்களில் அதிகம் கடினப்பட வேண்டியிருக்கும்…” என்று. ஏறக்குறைய அதை உணர்த்திச் செல்லும் கதை. துனேசியா நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அரசியல் புரட்சியை, குடும்ப உறவுச்சிக்கலுடன் இணைத்துக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. பிரான்ஸில் அரேபிய பின்புலத்தில் எழுதப்பட்ட வாழ்க்கைச்சூழல், பழகிப்போன கதைக்களங்களில் இருந்து நம்பகமான வேறுப்பாட்டைத் தருகிறது; காரணம் கனகராஜின் நுண்தகவல்களும் அவதானங்களும். காலனிய காலத்தின் பின்னர் ஏற்பட்டிருக்கக்கூடிய இடம்பெயர்வுகள், குடியேற்றங்கள், அதன் அரசியல் முரண்கள் போன்றவை தமிழ் இலக்கியத்திலும் வருவது நல்ல விஷயம். சுருக்கத்திலிருந்து இன்னும் இன்னும் விரிவுக்குள் செல்ல அது உதவும். அரசியல் கதைகளில் இருக்கும் பிரச்சார நெடி அது கொண்டுசெல்லும் தீர்வில் மட்டுமல்ல; கதையைப் பிரஸ்தாபிக்கும் விதத்திலும் உண்டு. கனகராஜால் பக்குவமாக எழுதிச்செல்ல முடிகிறது. ஜனவரி காலச்சுவட்டில் இக்கதையை வாசிக்கலாம்.

*

No comments: