Wednesday, September 24, 2008

யானையின் மெல்லிய நடை

கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். 16

வேழம் - யானை
தொடி - வளையல்

"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

நன்றி:சென்னை லைப்ரரி.

இந்த பாடலில் இயற்கையான பெண்ணின் குணமான, பிரியமானவர் மீதான அதீத அக்கரையும், மிதமிஞ்சின கற்பனையில் அது நடக்குமோ இது நடக்குமோ என்ற பயமும், அவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற கவலையும் சேர்த்து அவளை தூங்க விடாமல் வாட்டுவது போல் மேலோட்டமாக கொள்ளலாம்.

ஆயினும் அடிபட்ட யானையாக அவளையும், சினம் கொண்ட புலியாக அவள் இல்லத்தாரையும் பொருந்தி பார்க்கலாம். அவள் பசலை படர்ந்திருப்பது அவள் பெற்றோர்க்கு தெரிய கூடாதென்று மறைக்க பாடுபடுவதை தலைவனுக்கு குறிப்பாக உணர்த்த தோழி இவ்வாறு உரைத்ததாக கொள்ளலாம்.

எல்லாம் காதல் படுத்தும் பாடு.

No comments: