Sunday, December 22, 2013

என் வீட்டின் வரைபடம் - புத்தக விமர்சனம்

சமீப காலத்தில்(சுமார் ஒரு வருடத்திற்கு முன்) படித்த "என் வீட்டின் வரைபடம்" சிறுகதை தொகுதியின் மூலம் எனது சிறுகதை தேடலின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்தேன். என் வீட்டின் வரைபடம் இந்த தொகுப்பின் எல்லா கதைகளுமே ஒரு நாவலுக்குரிய அடர்ந்தியை பெற்றிருக்கின்றன. முன்னுக்கு பின் சொல்தல், சம்மந்தம் இல்லாத சம்பவங்களை ஒரு குறீயீடு சார்ந்து சேர்த்து சொல்லுதல் இந்த பாணியில் அமைந்ததே "என் வீட்டின் வரைபடம்". இந்த தொகுதியில் எனை மிக முக்கியமாக கவர்ந்த அம்சம், கதைகளில் வித்தியாசமான தலைப்புகள் "என் வீட்டின் வரைபடம்", "மிகு மழை", "உடைந்த புல்லாங்குழல்", "உருவங்களின் ரகசியம்", "தனிமையின் புகைப்படம்" என்றபடி நீள்கிறது கதையின் தலைப்புகள். தலைப்பிற்காகவே படிக்க தொன்றும் கதைகள் இவை. 

ஓவ்வொரு கதைக்கான களத்தினை தானே அனுபவித்தது போல அழுத்தமாக எழுதப்பட்டிருக்கின்றன எல்லா சிறுகதைகளும். உடைந்த புல்லாங்குழல் என்ற ஒரே ஒரு கதையை தவிர மற்ற எல்லா கதைகளின் கதை சொன்ன விதம் எல்லா நவீன கதைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. நேர்த்தியாய் தெளிந்த நீர் போல ஓடவில்லை ஜே.பி.சாணக்கியாவின் கதைகள். கொஞ்சம் கலங்கிய நீரும், தேங்கிய நீருமாய், சில இடத்தில் குழப்பிய நீருமாய் ஒடி இருக்கிறது. பெரும்பாலான கதைகளில் விரசமான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் கதாசிரியர். அது கதைக்கு தேவையானது என்ற சிந்தனையினும் சில இடம் மிக நீண்ட அருவருப்படையும் அதிருப்பியையும் தருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மிகு மழை ஏதோ தன்னிச்சையாய் தன்னிஷ்டம் போல இருக்கும் பெண்ணின் காமத்தை பற்றி பேசுகிறது. அவளை ஏதோ சமூகத்தின் அருவருக்கதக்கவள் கேலி குரியவள்  போல சித்திரக்கும் ஆசிரியரின் மனபோக்கு சற்றே கண்டிக்கத்தக்கது. இதே கதையில் ஆசிரியர் தன்னுடைய கண்ணோடத்தில் அந்த பெண்ணை சித்தரித்தது போலில்லாமல் அவளுக்கான நிலைப்பாட்டினை பேசி இருக்கலாமே என்ற ஆதங்கம் மிஞ்சியது கதையை வாசித்து முடித்த பின்னர். "உருவங்களின் ரகசியம்" என்ற மற்றுமொரு கதையில் கள்ள உறவுக்கு பெண் மட்டுமே கலங்கம் கற்பிக்கபடுகிறாள். எல்லா பொது புத்தி சார்ந்த கதைகளம் போல் அதில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். எவனால் அந்த பெண் இறந்தாளோ அவள் மகளையே காதலித்து அவளுக்கான தற்கொலையும் செய்து கொள்கிறான்.

தனிமையின் புகைப்படம் மற்றும் ப்ளாக் டிக்கெட் இரண்டு கதையின்களத்தின் அதிகப்படியான முரண் உறவுகளை சார்ந்த பகுதிகள் இல்லை. ஆனால் அதிலும் இல்லாவே இல்லை என்றெல்லாம் சொல்ல இயலாது. தனிமையின் புகைப்படம் பிச்சைகாரர்களின் வாழ்வினை சொல்கிறது. அதில் வரும் "குரு  மகராஜ்" கிழவன் இறக்கும் தருணம் புதுமைபித்தனின் கதையொன்றை(சாலையேரம் செத்து கொண்டிருக்கும் பிச்சைகாரனை பற்றியது) நினைவுபடுத்தியது. ப்ளாக் டிக்கெட் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வின் சோகத்தை, தன் அடுப்பை/வீட்டை முதுகில் சுமந்து திரியும் நாடோடிகளில் வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்கிறது. தனிமையின் புகைப்படத்தில் பிச்சைக்கார கிழவியும் குருமகராஜ் கிழவனும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்த்து விட மாட்டார்களா என்று ஏக்க வைத்தது.

"ரிஷப வீதி" மற்றும் "ஆட்டத்தின் விதிமுறைகள்" ஆண் ஆதிக்கத்த்தின் உச்சநிலையை பிரகணடப்படுத்திகிறது. தன்னால் தர முடியாத குழந்தையை, வன்புணர்வின் பின் பெறும் மனைவி தற்கொலை செய்து இறந்து விடுவாள் என்றே நினைக்கிறான் சராசரி இந்திய/தமிழக கணவன். அதுவே அவள் விதியாக இருக்க வேண்டுமென்று பின்னர் விரும்புகிறான். மொத்த தொகுப்பில் என்னை பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாக்கிய கதை ரிஷப வீதி. எவ்வளவு மிதிபடுகின்றனர் கீழ்தட்டு பெண்கள் என்று படித்து சீரணக்கவே இயலாத கொடும் கதாசித்திரங்களை புனைந்து வைத்திருக்கிறார் ஜே.பி.சாணக்கியா.

ஒட்டு மொத்த தொகுப்பின் என்னை மிகவும் கவர்ந்த கதை "என் வீட்டின் வரைபடம்", ஒரு வீட்டின் உறவுகளுக்கும் நடவடிக்களுக்கும் இருக்கும் மர்மங்களையும் அவலங்களையும் மனப்போராட்டங்களையும் தெளிவாக வரைந்திருக்கிறார் சித்திரமென. அதெப்படி ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் வெவ்வெறு விதமான பிரச்சனை, சினிமாதனமாக என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எப்படி சொன்னாலும் வித்தியாசமான மொழி, கதை சொல்லும் நேர்த்தி, எதார்த்தமான பாத்திரங்கள், சென்சாரே இல்லாத வாசங்கங்கள், சற்றே சிரமப்பட்டே இவர் கதைகளை உள்வாங்கி கொள்ள முடிகிறது.

No comments: