அவரவர் கைமணலைத் துழாவிக் கொண்டிருந்தோம்
எவரெவர் கைமணலோ இவை என்றேன்
பிறகு மணலறக் கைகழுவி விட்டு
எங்கோ சென்றோம்.
- தேவதச்சன்
கடற்கரையில் மிகப் பிரியமானவருடன் அமர்ந்து நிலவோளியும் நிம்மதியும் நிறைந்த தென்றல் தழுவும் ஒரு மாலையில், துழாவும் கைமணல் கூட கடல் போல் விரியும் கவிதைக்கான படிமம் தான்.
இப்படிப்பட்ட சூழலில் பேசப்படும் எல்லாமே அழகாக இருக்கும். அந்த சூழலையே கவிதையாக்கிய ‘அவரவர் கைமணல்‘ என்ற தேவதச்சனின் கவிதையை வாசித்ததும் என்னுள் தழைத்தெழுந்த சிந்தனைகளை தருகிறேன்.
அவரவர் கவிதை

கவிதை படைப்பாளிகளுக்கு, என்னையும் சேர்த்து இருக்கும் ஒரு சுவையற்ற வழக்கம் தத்தம் கவிதைகளைப் பற்றி பேசித்திரிதல். அவரவர் கவிதையை பற்றியோ அனுபவம் பற்றியோ அடுத்தவரிடம் பேசுவோம். அவை அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தில் எவராலேயோ படைக்கப்பட்டதோ அல்லது உணரப்பட்டதாகவோ தான் இருக்கின்றது.
எந்தக் கவிதையை பேசினாலும் அது என்றோ உணரப்பட்ட அனுபவமாகவே இருக்கின்றது. பின்னும் பேசிப்பேசி தீர்க்கின்றோம். பேசி கவிதைகளை காற்றில் உலவவிட்டு மெல்ல திரும்புவோம் அவரவர் வெளிக்கு திரும்புகின்றோம் சுவடுகள் கலைத்து.
அவரவர் பிரச்சனை

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது அனைவரும் அறிந்த ஒரு சொல்லடை. அப்படித்தான் அவரவர் வாழ்க்கை பிரச்சனைகள் எல்லாம் அவரவர்க்கு பெரியதாக தெரிகின்றது.
பிரச்சனைகள் அவரவர் துழாவும் கைமணல் போன்றது. அடுத்தவர் கைமணலை பார்க்க ஆரம்பித்தால் தம் கைமணல் மிகவும் குறைவானதென்று தெரியவரும். நம்மிலும் கீழே வாழ்பவர் கோடி என்ற கண்ணாதாசன் வரிகளை உணர்ந்தெடுத்தால், மணலறக் கை கழுவுதல் வசப்படும்.
பிரச்சனைகளை சிறிது தள்ளி நின்று பார்த்தால், கவனித்தால் பிரச்சனைகள் சுமையல்ல என்பது புரியவரும். அதன் பின் தெரியும் பிரச்சனை மணல் போன்றதே, பெரியதல்ல மிகச்சிறியதென்று. எந்த நேரத்திலும் மணலறக் கைகளை கழுவது போல பிரச்சனைகளும் எளிதாக தீர்க்க கூடியவையே என்பதும் புரியும்.
அவரவர் கருத்து

நண்பர்கள் இலக்கியவாதிகள் கூடுமிடம் அல்லது கூடி பயணிக்கும் வேளைகளில் அவரவர் கருத்துக்களை அழுந்தக் கூறுவோம். அவரவர் கருத்துக்களை விவாதிப்போம். விவாதம் ஆரோக்கியமான விசயமே மேலும் அவை அறிவை வளப்படுத்தும்.
விவாதம் சில சமயம் சர்ச்சையில் கூட முடியலாம். ஆயினும் கூட்டமோ பயணமோ முடிந்த பின் தத்தம் கருத்துக்களை தம்மோடு வைத்துக் கொண்டு அந்த அனுபவத்தை சுமந்தபடியோ அவரவர் வீட்டுக்கும் வழக்கமான வாழ்க்கைக்கும் திரும்புவது வழக்கமான வழக்கம் தானே. அதன் பின் அந்த சர்ச்சைகள் கைவிடப்பட்ட கடற்கரை மணல் போல் அடையாளம் தொலைத்து போகும். அந்த கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் எல்லாம் பின்னொரு கூட்டத்தில் வேறு விதமாக அலச பெறும்.
அவரவர் கர்வம்

தான்.. தனது என்ற கர்வமில்லாத மனிதன் எங்குமில்லை எனலாம். குறைந்தபட்சம் மனிதனுக்கு தன் உடல் பற்றிய கர்வம் இருக்கவே செய்கின்றது. எந்த ஆசையுமே இல்லாத சராசரி மனிதனின் ஆதார எதிர்பார்ப்பாக இருப்பது அடுத்தவர் முன் தான் மதிக்க பெற வேண்டும் என்பதே.
இதற்காகவே ஆடை அலங்காரங்களில் நடையுடை பாவனைகளில் அல்லது இதுகளற்ற ஏதோ ஒன்றை துழாவிக் கொண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் ஆழ்ந்து பார்ப்பின் இந்த உடல் நம்முடையது மட்டுமே என்ன. உடல் ஒரு சட்டை தானே. ஆன்மாவன்றோ அழிவற்றது.
அவரவர் உடல் எவரெவர் உடலோ. பட்டினத்தார் சொல்லும் "எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் இட்ட குழி" என்ற பாடல் தேவதச்சனின் இந்த கவிதைக்கு மிகவும் பொருந்தத்தக்கதாகும்.
ஆகையால் தான் தன் உடல் தன் கருத்து தன் பிரச்சனை தன் கவிதை என்ற எல்லா கர்வமும் மாயையே. துழாவிய கைமணல் போல எப்போதும் எதையும் சிந்தையில் ஒட்டாது வைத்திருந்தால் வாழ்வு மிக சிறப்பாகும்.
000