Wednesday, May 13, 2015

சிலந்திக் கூடு

சிலந்திக் கூடு : லாவண்யாவின் இரவைப் பருகும் பறவையை முன்
வைத்து:-“நான் மிகச் சாதாரணமானவள்
என்னால் குறைந்தபட்சம்
உங்களைப் பற்றிய அவதூறுகளை
உங்களிடம் மட்டும்தான் பரப்ப முடியும்”

கவிதை வாசிப்பிற்கான மனநிலையை சமீபமாய் தொலைத்துவிட்டிருப்பதால்
சற்று அசிரத்தையான மனநிலையுடன் தான் லாவண்யா அனுப்பித் தந்த
அவர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். நான்கைந்து கவிதைகளுக்குப்
பிறகு லாவண்யாவின் உலகிற்குள் எளிதாக சம்மணமிட்டு அமர்ந்து
கொள்ள முடிந்தது. சன்னமான பெண் மனதை சின்ன சின்ன நுண்
உணர்வுகளாய், அழகியல் மென் தூவலாய், சற்றே மிதக்கும் கற்பனை
நினைவுக் குவியலாய் மாற்றியிருப்பது புன்னகையை வரவழைத்தது.
எல்லாக் கவிதைகளும் வாசிக்கும்போது மனதை லேசாக்குகின்றன.
இலகுவான மனம் கொண்டு எழுதப்பட்ட இலகுவான கவிதைகள்
வாசிப்பவரை இலகுவாக்குவதில் வியப்பில்லைதானே! தொகுப்பை வாசித்து
முடித்த பின்பு ஏனோ சிலந்திக் கூடு மெல்ல நினைவில் அசைந்தது.
ஒருவேளை ஒட்டு மொத்தக் கவிதைகளும் மென் சொற்கள் கொண்டு
எழுதப்பட்டிருப்பதால் சன்னமாய் பின்னப்பட்ட இழைக்கூடு நினைவில்
வந்ததோ என்னவோ. தெரியவில்லை.

இயற்கையின் அழகை சிலாகித்தல், இயற்கையோடு தன்னைப் பொருத்திக்
கொண்டாடுதல் அல்லது வருந்துதல், இம்மூன்றும் பல கவிதைகளில்
பதிவாகி இருக்கின்றன. பெண் அடையாளம் கொண்ட தனித்தன்மையான
இருப்பு நிலைக் கவிதைகளாக சிலவற்றை வாசித்துப் பார்க்கலாம்தான்
என்றாலும் பால் நிலை கடந்த பொதுவான உணர்வுகளே பெரும்பாலான
கவிதைகளில் இடம்பெறுகின்றன. உடல் குறித்துப் பேசவேண்டிய
இடங்களில் கூட சற்று உள்ளடங்கி உடலின் பின்னான மனதை
மட்டுமே இக்கவிதைகள் பேசுகின்றன. சில கவிதைகளில் உடலைப்
பதிவு செய்ய பயம் கொள்வதாகக் கூட எனக்குத் தோன்றியது (
இக் கருத்தை படைப்பாளியை நன்கு அறிந்திருப்பதால் தோன்றும்
விமர்சகனின் குழப்பங்களாகக் கூட வாசிக்கலாம்) மற்றபடி மூளைக்கு
அதிக அழுத்தத்தைத் தரவிரும்பாத இம்மென் கவிதைகளை வாசிப்பதில்
உருவாகும் மனநிலையை நெகிழ்வு என வரையறுக்கலாம்.

தொகுப்பிலிருக்கும் மொத்தக் கவிதைகளிலேயுமே இந்த நெகிழ்வு
பதிவாகியிருக்கிறது. எதிர்ப்பை/கோபத்தைக் கூட மென்மையாக பதிவு
செய்யும் பெண் மனம் மீதான கற்பனை வாசிப்பவர்களை ‘ரொமாண்டிச’ மன
நிலைக்குத் தள்ளுகிறது. கவிதைகளில் பதிவாகி இருக்கும் பெரும்பாலான
காட்சிகள் ரசனை மிகுந்ததவையாக உள்ளன. யாரையும் பழித்துப் பேசாது,
எதனையும் குறை சொல்லாது வெறும் பார்வையாய் காட்சியாய் மட்டுமே
கவிதைகள் நிகழ்ந்துள்ளன.

“பெருமழை தீர்ந்த பின்பொழுதில்
கண்ணாடியில்
சிறிதும் பெரியதுமாகப்
பூத்திருந்தன மழைத்துளிகள்

சென்ற பின்னும்
மனசோடு தங்கியிருக்கிறது
அசைந்தசைந்து மெல்லக் கடந்த
யானையின் மணியோசை”

ஒரு கறாரான விமர்சகனாய் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஆரம்ப
நிலை நவீனக் கவிதைகள் என வரையறுத்துவிட முடியும். ஆனாலும்
இக் கவிதைகளில் பதிவாகி இருப்பவை அந்த அளவில் நேர்மையானவை
என்பது ஆசுவாசமாக இருக்கிறது. போலச் செய்தலையோ,மிகையையோ,
பாசாங்கையோ இக்கவிதைகளில் உணரமுடியாது. வேறு யாரையும் போல
இருக்க விரும்பாத, பிடிவாதமில்லாத குழந்தையின் புன்முறுவலான
சிறு நடை தான் இத்தொகுப்பு. மற்றபடி ப்ரியம், வாஞ்சை, அப்படியே
ஏற்றுக்கொள்ளுதல், ஏக்கம், கரைவு, தண்மை, மன்னித்தல், இயலாமை
என மனதின் மேல் நிலையில் நின்று, பார்த்து எழுதப்பட்ட பல நிலைகள்
வாசிப்போருக்கு இணக்கத்தையும் நிம்மதியையும் தருகின்றன.

கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ப்ரியம் என்ற சொல்
நாவில் ஒட்டிக் கொண்டது. ப்ரியங்கள் சொற்களாய் மட்டுமே நின்றுபோன
என்னுலகில் இந்தப் ப்ரியம் என்ற சொல் ஏற்கனவே தன் நிறத்தை
இழந்துவிட்டிருக்கிறது. தவறான முகவரி எனச் சொல்லி அப் ப்ரியத்தை
லாவண்யாவிடமே கொடுத்துவிடுகிறேன். இத்தொகுப்பிற்கு என்னைப்
போய் விமர்சனம் எழுதக் கேட்டுக் கொண்டதற்கான தண்டனையாய்
அவருக்கு ஒரு இலவச அறிவுரையையும் தராமல் முடிப்பது இச்சிறு
பகிர்வுக்கு அழகில்லைதானே? அது இப்படியாகிறது

“ப்ரியங்களால் நிறைந்த ப்ரியமுள்ள லாவண்யா உங்களின் அடுத்த கவிதைத் தொகுப்பில் இந்தப் ப்ரியம் என்ற சொல்லைப் பார்க்க நான் விரும்பவில்லை”

அய்யனார் விஸ்வநாத்

3 comments:

விச்சு said...

நீங்கள் குறிப்பிட்ட கவிதை வரிகள் அருமை. கிடைத்தால் வாங்கி படித்து விடுகிறேன்.

சே. குமார் said...

நல்ல பகிர்வு.

உயிரோடை said...

விச்சு, சே.குமார் நன்றி