Thursday, May 14, 2015

அன்பெனும் வாசனை திரவியம் - கவிஞர் சுகுமாரன்



லாவண்யா சுந்தரராஜனுக்குக் கை கொஞ்சம் நீளம். அன்பு என்று
சொல்லப்படும் பொருள் எங்கெல்லாம் இருக்குமோ என்று சகல
திசைகளிலும் அந்தக் கை தேடுகிறது. பூமியின் எல்லா இண்டு
இடுக்குகளிலும் நுழைந்து அன்பைத் தொட எத்தனிக்கிறது.
பிரபஞ்சத்தின் அந்தரவெளியிலும் துழாவி அதை ஸ்பரிசித்துவிடத்
துடிக்கிறது. மனிதர்கள் மீதான, மனிதர்களுக்கிடையிலான அன்பை
மட்டுமல்ல இயற்கை மீதும் இயற்கைக்கு இடையிலுமான
அன்பையும் தேடுகிறது.  மனித உற்பத்திப் பொருட்களுக்கு
நடுவிலிலும் அன்பின் துகள் இருக்கக் கூடுமென்று இயங்குகிறது.
இந்தச் செயலில் அந்தக் கைக்குள் அகப்படும்  கணங்களை 'கவிதைப்
பொழுதுக'ளாக நிரந்தரப் படுத்திக் கொள்ள லாவண்யா முயல்கிறார்.
'உண்மையும் பிரியமும்/ எங்கேனும் ஓரத்தில்/
ஒளிந்திருக்கிறதாவெனத்/ துளாவுகிறேன்' என்று அவரே தன்னிலை
விளக்கமும் கொடுக்கிறார். லாவண்யாவின் கவிதைக்கான
மனநிலையைத் தீர்மானிப்பது இந்தச் செயல்பாடுதான் என்பது  என்
யூகம். இந்த மனநிலையின் விளைவுகளை  வெவ்வேறு நிறங்களில்,
வெவ்வெறு தொனிகளில் எழுதிப் பார்க்கிறார்.

'கோடிமுறை சிலிர்த்திருப்பினும்/ புதுத் தொடலின்போது/ சிலிர்த்தே
தொலைக்கிறது மனம் எப்போதும்' என்று மனிதர்கள் மீதான
அன்பையும் 'உனக்கான என்னை ஏந்திக் கொண்டாய் சிறகென' என்று
மனிதர்களுக்கிடையிலான நேசத்தையும் 'வேருக்குத்
தெரியவில்லை/வெட்டப்பட்ட மரத்தின் வலி/ விடாது தேடியது
தனக்கான நீர்மையை'  என்று இயற்கை மீதான பரிவையும்
'பிரியங்களைப் பொழிவிக்கும் மழை/ பாறையென்றும்
மண்ணென்றும் பார்ப்பதில்லை' என்று இயற்கைக்கு இடையிலான
இயல்புணர்வையும் 'உணவருந்திய மேஜைமீது/ ரோஜாப் பூவாக
மலர்ந்திருந்தன/ கை துடைத்தெறிந்த காகிதங்கள்' என்று
அஃறிணைச் சலனமின்மையையும்  லாவண்யாவின் கைவரிசை
கவிதைப் பொருள்களாக மாற்றுவது இந்த மனநிலையால்தான்.
தொகுப்பில் இடம் பெறும் கவிதைகளில் அதிகம் உபயோகிக்கப்
பட்டிருக்கும் சொல் - பிரியம்.   தன்னுடைய கவிதை மனநிலைக்கு

ஆதாரமான உணர்வை இந்தப் பிரியமான சொல்லைத் தவிர வேறு
சொற்களால் வெளிப்படுத்துவது
லாவண்யாவுக்கு அசௌகரியமாகக் கூட இருக்கும்போல.
தொகுப்புக் கவிதைகளில் எத்தனை இடங்களில் 'பிரியம்'
தென்படுகிறது என்று குதர்க்கமான ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்று
தோன்ற வைக்கிறது இந்த சொற் காதல். ஆனால்
இது வெறும் சொல்லாசையல்ல; மனவமைப்பின் வெளிப்படுத்தல்
என்பதைக் கவிதைகள் அநாயாசமாக நிறுவுகின்றன. 'பெரு மழை
தீர்ந்த பின்பொழுதில் கண்ணாடியில் சிறிதும் பெரிதுமாகப்
பூத்திருக்கும் மழைத்துளிகள்' போல இந்தக் கணங்கள் கவிதைக்குள்
பத்திரமாகின்றன. மழைத் துளிகளைப் பற்றி யோசித்தால் மழையை,
அது உருவாகும் வானத்தை, விழும் நிலத்தை, நீர்மையை, ஈரத்தை,
அது ஏற்படுத்தும்  சிலிர்ப்பை, சமயங்களில் வெறுப்பையும்
உணர்ந்துகொள்ள முடியும் என்பதுபோல இந்தப் பிரிய சொற்களில்
மனவோட்டங்களின் வேறுபட்ட நிலைகளைக் கண்டடையலாம்.
'சந்தோஷ நுரைப்புகளையும் சங்கடக் கசிவுகளையும்' உணரலாம்.

லாவண்யாவின் இந்தக் கவிதை மனநிலையைக் கற்பனாவாதத்
தன்மையானது  - ரொமாண்டிக்கானது - என்ற விமர்சனக்  கலைச்
சொல்லால் எளிதாக வகைப்படுத்தி விட முடியும். நவீனக் கவிதை
ஒரு காலப் பகுதியில் மூர்க்கமாகப்
புறக்கணித்த மனநிலை இது. வாழ்வனுபவங்களை உணர்ச்சிப்
பெருக்குடன் மட்டுமே வெளிப்படுத்திய இந்தப் போக்கு அந்தக் காலப்
பகுதியில் எள்ளலுக்குரியதாக இருந்தது. கண்ணீரைப் பூவாக
உருவகப்படுத்தும் மனநிலையை அன்றைய சீரிய  புதுக் கவிதை
உதாசீனம் செய்தது இயல்பான செயல். ஆனால் கற்பனாவாதம்
உண்மையில் உணர்ச்சிப்  பெருக்கானதல்ல; தன்னெழுச்சியானது
என்ற கருத்து தொண்ணூறுகளுக்குப் பின்னர் பரவலானது.

பெண்மைய நிலையிலிருந்து பேசப்படும் கவிதைகளும்
ஒடுக்கப்பட்டவர் வாழ்வனுபவத்திலிருந்து எழும் உணர்வுக ளும்
எல்லாக் கோட்பாடுகளாலும் கைவிடப்பட்ட நவீன வாழ்வின்
பின்புலத்திலிருந்து உருவாகும் சொற்களும்  தன்னெழுச்சி
இல்லாமல் எப்படிவெளிப்படும்? முந்தைய கற்பனாவாதம் அந்தக்
காலப் பின்னணியில் செல்லுபடியாகக்  கூடிய கரிசனங்களையும் (
சமூகம் சீரழிந்து கிடக்கிறது; ஒரு புரட்சியின் மூலம் அதை
மாற்றிவிடலாம் என்பது போன்ற கருத்தையொட்டியவை),
ஆசைகளையும் ( பெண்ணும் கீழ்த்தள மக்களும் ஒடுக்கப்
பட்டிருக்கிறார்கள்; அவர்களை விழிப்படையச் செய்தால்
பொன்னுலகம் தோன்றி விடும் என்பனபோன்ற நம்பிக்கையை
யொட்டியவை ) அடிப்படையாகக் கொண்டு இயங்கியதாகக்
கணிக்கிறேன். இவற்றில் வாழ்வனுபவத்தின் லேசான சாயல்
இருந்தது. அதன் நிஜ இருப்போ, சிக்கல்களோ படைப்பாகவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் அவை தன்னெழுச்சியற்றவை.

இந்தத் தொகுப்பிலுள்ள 'பொம்மைகளின் பிரியம்' என்ற எளிய
கவிதையில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. முன்னால்
நின்றிருக்கும் வாகனத்தின் பின்பக்கக் கண்ணாடி வழியாக
வெளியுலகை நோட்டமிடும் மூன்று பொம்மைகள். அவற்றின்
கண்களில்  ஏதோ ஒரு மழலைப் பிரியத்தை  வீட்டோடு விட்டு வந்த
ஏக்கம் தேங்கியிருப்பதைப் பேசுகிறது கவிதை.பொம்மைகள்
குழந்தையைப் பற்றி ஏங்கும் இந்தத் தற்குறிப்பேற்றம்
ரொமாண்டிக்கானதுதான். ஆனால் தன்னெழுச்சியால் விளைந்தது.
லாவண்யா கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான இந்த
வேட்கைதான்.வசப்பட்ட அன்பைப் பேணுதலைப் பற்றியும் ( 'உனது
குடை விரிப்பில் சட்டென்று அடங்கியது எனக்கான வானம்') அன்பில்
நேரும் நெருடல்கள் பற்றியும் ( பேசித் தீர்த்த சொற்கள்/ இருப்பினும்/
பேசாத ஒன்றைப் பற்றியே/ நமது
குற்றச்சாட்டுகளும் மௌனங்களும்) மறக்கப்பட்ட அன்பையும்
மறவாத அன்பையும் பற்றியும் ( புகைப்பட ஆல்பம் கைக்குவர/
அவசரமாய்த் தேடுகிறோம்/ அக்கா அக்காவை/ தம்பி தம்பியை/ நான்
என்னை/ அம்மாவோ பொறுமையாக ஒவ்வொருவரையும்) என
அன்பையும் அன்பின்மையையும் அவற்றின் இடைவெளியில்
உள்ளவற்றையும் கவிதைப் பொருளாக்குகிறார் லாவண்யா.
அரூபனாக வரும் காதலனும் அநாமதேய வழிப்போக்கனும்
பொம்மைகளும் தொட்டி  மீனும் புறாவும் நத்தையும் எல்லாம்
அன்பின் வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டே வருகின்றன.

இவ்வளவு அன்புக்குரியதா இந்த உலகம்? என்று லாவண்யாவிடம்
கேள்வி எழுப்பினால், 'பெருங்கருணையோடிருக்கும்
பிரியங்களுக்கும்/ பிரியத்தைத் தவிர/ காரணிகள் வேறு/ எப்போதும்
இல்லை என்று பதில் சொல்லக் கூடும்.

இது லாவண்யாவின் இரண்டாவது தொகுப்பு. முதல் தொகுப்பின்
கவிதையாக்கத்திலும் இதே மனநிலைதான் செயல்பட்டிருக்க
வேண்டும் என்பது என் யூகம். அந்தத் தொகுப்புக்குத்  தலைப்பாக
அவர் எடுத்தாண்டிருக்கும் 'நீர்க் கோல வாழ்வை நச்சி...' என்ற கம்ப
ராமாயண வரியின் பின்புலம் அதற்குச் சான்று. இராமனின்
அணியில் இணைந்து கொள்ள வீடணன் கும்பகர்ணனுக்கு அழைப்பு
விடுக்கிறான். அதற்கு மறுப்பாகக் கும்ப கர்ணன் சொல்வது இது.
நீரில் பிரதிபலிக்கும்  கோலம் போன்ற வாழ்க்கையை விரும்பி நீண்ட
நாள் இருந்து சாவதை விட இராவணனுக்காக உயிர் துறப்பது மேல்
என்கிறான். என்றைக்காவது களத்தில் பலி கொடுப்பதற்காகவே தான்
இரைபோட்டுப் பராமரிக்கப் பட்டிருக்கிறோம் என்று தெரிந்தே
கும்பகர்ணன் சொல்லும் இந்த பதிலுக்குப் 'பிரியத்தைத் தவிர வேறு
காரணமில்லை'. இந்தக் கணம் கவிதை,வாழ்க்கையைச் சந்திக்கும்
கணம். இந்தக் கணங்களையே தனது அனுபவங்களின் பின்புலத்தில்
கவிதையாக்க எத்தனிக்கிறார் லாவண்யா. அதற்கான கவிதை
மனநிலை அவருடையது. அதை இந்தத் தொகுப்பிலுள்ள
கவிதைகளை விடச் செறிவாகவும் நுட்பத்துடனும் இனி எழுதும்
கவிதைகளில் வெளிப்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கைக்கு இந்தத்
தொகுப்பு ஆதாரம்.

திருவனந்தபுரம்
25 மே 2011                                                                                                                                          
சுகுமாரன்

No comments: