Sunday, January 24, 2010

நிசப்தத்தின் சப்தம்

கொஞ்ச நாளைக்கு முன் நண்பர் லஷ்மணராஜாவின் கவிதைகான பன்முனை விளக்கங்களை படித்த அனுஜன்யா நீங்கள் தேவதச்சன் கவிதைக்கு இந்த மாதிரி ஏன் முயற்சிக்க கூடாது என்றார். நான் அதிகம் தேவதச்சன் கவிதைகள் படித்ததில்லை. சில நாட்களுக்கு முன் வா.மணிகண்டனின் வலைப்பதிவில் ஒரு தேவதச்சன் கவிதை பார்த்தேன். படித்ததும் மணிகண்டன் சொன்னது போலவே பல படிக்கட்டுகளுடன் இந்த கவிதை என் மனதில் ஏறி அமர்ந்து கொண்டது.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.


மனித மனமென்பது ஒரு பெறாற்றல் பெற்ற ஒன்று. நிமிட நேரத்தில் அமெரிக்காவில் இருப்பவனை ஆண்டிப்பட்டி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே நண்பர்களோடு
அளவளவியதையோ, கண் காணாத காதலன் என்றோ கொடுத்த முத்தத்தில் இன்றும் திளைக்கவோ வைக்கும். பல விஞ்ஞான,அஞ்ஞான விசயங்களை நினைக்க, பின் நடத்தி காட்ட வைக்கும். இன்னும் பல பல கற்பனைகட்கு அடிதளமாக இருக்கும். இந்த கவிதையில் அவள்/அவன் துணி துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் காதில் விழும் சத்தத்தை மூளை இனம் பிரித்து குருவி சத்தம் என மனதுக்கு சொல்கின்றது. பின் குருவிகளின் நிசப்தத்தையும் நிசப்தத்தின் சப்தத்தையும் மனம் உணர்கின்றது. புறம் அமைதியானதும் அகம் சத்தமிட ஆரம்பிக்கின்றது. செயல் ஒன்று தான் ஆனால் புலன்களும் மனமும் மட்டும் என்னென்னவோ உணர்கின்றது.


நிசப்தத்தின் சப்தம் - 1
------------------------------

நாம் எப்போதும் எல்லாம் வழக்கம் போல் தான் எந்த மாற்றமுமில்லை காலை,மாலை வீடு, அலுவலகம், மனைவி, மக்கள், தொலைக்காட்சி என்று எல்லா நாளும் ஒரே மாதிரி தான் செல்கின்றது என்றே சலிப்போடு இருப்போம். ஆனால் ஆர்விசந்திரசேகரின் இந்த கவிதையையில்

மற்றுமொரு நாள்...

எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையின் கையசைப்பை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையின் கையசைப்பை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.

இப்படி ஏதாவது ஒரு அழகாக தான் இருக்கின்றது தினமும். நம்மை அறியாமலே அதை கவனித்தும் கவனிக்காமல் செல்லும் நாம் வழக்கம்போல் எல்லாம் என்று புலம்புவது புதிரான விசயமன்றோ. ஒவ்வொரு துணி துவைக்கையிலும் அவன்/அவள் காதில் விழுவது வித்தியாசமான சப்தங்கள். அது போல தான் எதுவுமே வழக்கம் போல என்ற வழக்கே கிடையாது. யோசித்து பார்த்தால் ஏதாவது வித்தியாசமாக இருக்க தான் செய்யும் அது நன்மையோ தீமையோ மனமொன்றி அனுபவிக்க பழகி கொண்டால் வாழ்கை சலிப்பின்றி சுவாரஸியமாக, சுவையாக இருக்கும்.

நிசப்தத்தின் சப்தம் - 2
------------------------------

ஒரு கல்லூரி செல்லும் பெண் அவள் தினமும் காலை செல்லும் பேருந்தில் சந்திக்கும் ஒருவன் தினமும் அவளை பார்க்கின்றான் என்றால், முதலில் சங்கடபடுவாள். சில நாள் சென்று அவன் பார்ப்பது அவளுக்கு பழகிவிடும். அவனை அவளுக்கு பிடிக்க வேண்டும் என்பது கூட இல்லை. வெறுமனே பார்பவனை போய் யாரிடம் சொல்லி என்ன செய்வது என்ற தயக்கமோ, அவன் பார்ப்பதெப்படி உனக்கு தெரியும் என்ற எதிர் கேள்விக்கு பயந்தோ அவள் அவனை பற்றி யாருக்கும் சொல்லி இருக்க மாட்டாள். எதேச்சையாக ஒரு நாள் அவன் வரவில்லை என்றாலோ வந்தும் அவளை பார்க்கவில்லை என்றாலோ அது அவளுக்கு மிக வித்தியாசமான உணர்வை தரும். வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என்று இருக்கும். வந்தும் பார்க்கவில்லை என்றால் ஏன் பார்க்கவில்லை என்றுமிருக்கும். தொடர்ந்து சில நாள்கள் வராமலோ, பார்க்கமலோ இருந்தால் என்ன ஆயிற்றோ என்று நிசப்பதமாக மனம் சத்தமிடும். புறமடங்க(அடக்கப்பட) அகமதிகம் சப்திக்கும். இது பெண்களுக்கே உரிய உணர்வு நிலையா அல்லது ஆண்களுக்கு அதே நிலை தானா ஒரு வேளை தேவதச்சன் இந்த சிந்தனையை அந்த கவிதையாக வடிக்க முயற்சி செய்தாரா?


நிசப்தத்தின் சத்தம் - 3
-------------------------------

சில சமயம் நம் உணர்வுகள் சிந்தனையை தாண்டியதாக இருக்கும். உதாரணத்துக்கு ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளர் தன் நண்பர்களுடன் சத்தமாக அரட்டை அடிக்கும்
சமயம் நாம் ஏதாவது சிக்கலான விசயத்திற்கு யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த சத்தம் அதிகம் தொந்தரவு செய்யும், ஒரு வேளை அவர்களே நீங்கள் மிக கவனமான வேலையில் இருப்பதாக நினைத்து அரட்டை சப்தத்தை குறைந்தாலோ அல்லது வேறு இடம் சென்று பேசினாலோ, பேச்சை நிறுத்தி கொண்டாலோ கூட உங்கள் காதுகள் அவர்களை பின்
தொடரும். அதே தொல்லை பெரும்பாலும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளோக்கோ, வேலைக்கு செல்லும் பெண்களுக்கோ அடிக்கடி நிகழும். அனைவரும் உறங்கி விளக்கு
அணைக்கப்பட்டாலும் அவர்கள் கண்ணுக்குள் மட்டும் விளக்கு எறியும். இது பெரும்பாலும் ஒவ்வாத இடத்தில் இருக்கும் அனைவர்க்கும் பொருந்தும்.

நிசப்தத்தின் சப்தம் - 4
------------------------------

பிரியமான உறவிடை ஒரு சிறு பிணக்கோ அல்லது சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்க வேண்டிய கட்டாயமோ ஏற்படுமாயின் வழக்கமாக அவர்கள் நமக்கு செய்த பணிவிடைகளையோ, சிறு உதவிகளையோ, பிடித்த, பிடிக்காத விசயங்களையோ மனம் எப்போதும் அலசி கொண்டிருக்கும். அடிக்கடி மனதருகே ஒரு மாயபிம்பம் வந்து வந்து மறையும். உணர மட்டுமே முடிந்த ஒரு உணர்வது. இதே உணர்வு மனதுக்கு நெருக்கமான நண்பர்களிடையே கூட வரலாம். எதிரிகள் கூட மனக்கண்ணில் எப்போதும் வந்தாடி நம்மை விசனபடுத்தலாம். கோபியரை விட கண்ணனை அதிகம் நினைத்திருந்தது கம்சனாக தான் இருக்க முடியும். பிரஹலாதனை விட நாரணயண நாமம் சொன்னது ஹிரண்யகஷ்புவாக தான் இருக்க முடியும். மனித மனமென்பது வித்தியாசமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பெற்ற பெரும் அதிர்வை தரும் ஒன்று.

நிசப்தத்தின் சப்தம் - 5
-----------------------------
எதார்தமான சில நம் விருப்பங்கள், வாழ்வின் கட்டாயங்களால் நம்மாலே நிராகரிக்கப்படுகிறது. அந்த வாய்ப்புகள் இழந்த பின்னும் அதன் நினைவுகளை நம்மை அலைக்கழிக்கிறது நிசப்தத்தின் சப்தமென்பதுங்கு வாழ்வின் விருப்பங்க்ளுக்கும் கட்டாய ஏதார்த்திற்குமான இடைவெளி அவ்ளோதான். இதற்கான உதாரணங்களாக ஒரு நிமிடத்தில் தவறா விடப்பட்ட பேருந்து எப்படி 12-B திரைபடத்தில் இரண்டு கதையாக அமைந்ததோ அதே போல தான். தவறவிடப்பட்ட பேருந்து, தவறவிடப்பட்ட வாய்ப்புகள்,தவறவிட்டப்பட்ட உறவுகள், தவறாக இழைத்த கறைகள் அவற்றின் சுவடுகள் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் நிசப்தத்தின் சப்தமாக பலவற்றை. இந்த எல்லாவற்றிலும் அலைகழிப்பது மனம் மனம் மனம் மற்றுமற்றி வேறெதுவும் இல்லை.

9 comments:

திகழ்மிளிர் said...

/ஏதாவது வித்தியாசமாக இருக்க தான் செய்யும் அது நன்மையோ தீமையோ மனமொன்றி அனுபவிக்க பழகி கொண்டால் வாழ்கை சலிப்பின்றி சுவாரஸியமாக, சுவையாக இருக்கும்./

/மனித மனமென்பது வித்தியாசமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பெற்ற பெரும் அதிர்வை தரும் ஒன்று./

/இந்த எல்லாவற்றிலும் அலைகழிப்பது மனம் மனம் மனம் மற்றுமற்றி வேறெதுவும் இல்லை./

சரியாகச் சொன்னீர்கள்

narsim said...

ஒரு கவிதையை ஒரு அர்த்தர்த்துல புரிஞ்சிக்கிறதே தாவு தீருது.. பன்முனை விளக்கங்கள்.. மிக மிக அருமை..மிகச்சிலரால் மட்டுமே முடியும்.. கலக்குங்க..

(அனுஜன்யா.. நன்றி..)

அனுஜன்யா said...

முதற்கண் நன்றி மின்னல். பிரமாதமாக அலசுகிறீர்கள்! இன்னும் புதிய அர்த்தங்களை அந்தக் கவிதை தருகிறது - உங்கள் அலசலுக்குப் பின். ஆனாலும், சுந்தர் சொல்வதுபோல் கவிதையை அலசுவது/விளக்கம் தருவது ஒரு விதத்தில் கவிதையைக் கொன்றுவிடுகிறது. ஒரு எல்லையைத் தந்துவிடுகிறது. அனுபவங்களும், புரிதல்களும் வாய்க்கப்பெற்ற சுந்தர், அய்ஸ் போன்றோருக்கு ஆயாசம் வரலாம். என் போன்ற நிறைய கத்துக்குட்டிகளின் ஆர்வத்தை முன்னிட்டுப் பார்த்தால், அலசுவது தவறு ஒன்றும் இல்லையோ என்றும் தோன்றுகிறது.

சுந்தர்/அய்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்!

அனுஜன்யா

மின்னல் said...

வாங்க திகழ்மிளிர். நன்றி. அடிக்கடி வாங்க.

நன்றி நர்சிம்.

அனுஜன்யா அண்ணா, நீங்க சொன்னதாலே தான் இந்த கட்டுரை எழுத முடிந்தது. நன்றி.

ஆனா என் தோழி ஒருத்தி கவிதையோட அழகு கொஞ்சம் குறைஞ்சது போல இருக்குன்னு சொன்னா. லஷ்மண்ராஜா படிச்சிட்டு என் perception வேறன்னு சொன்னாரு. அவர் சொன்ன கோணம் தான் கடைசி பத்தி. மணிகண்டன் வாசிட்டு நல்லா இருக்குன்னு சொன்னாரு ஆனா உண்மையாவே நல்லா இருக்கான்னு டவுட் தான்.

கே.ரவிஷங்கர் said...

மின்னல்,

என் புரிதல்:(இப்படியும் புரிந்துக் கொள்ளலாம்?)

//துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்//

யதார்த்தமாக (spontaneous) காதில் விழுகிறது.இந்த மாதிரி வலுகட்டாயமில்லாத(unconcentrated listening)ஏனெனில் துவைக்கும் வேலையும் நடக்கிறது ரசிப்பது ஒரு நிலை.அதுதான் “சப்தம்”

//தொடர்ந்துதுவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்//

ரசிக்க ஆரம்பித்தவுடன்யதார்த்தம்போய்(focussed listening)வலுக்கட்டாயரசிப்பு வந்து விடுகிறது.அதுதான் “காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்”இதை ’’தொடர்ந்துதுவைத்துக் கொண்டிருந்தேன்’’ பாவலா என்று சொல்லலாம்.

இந்த இடத்தில் வைரமுத்து & co "துவைத்தலை நிறுத்தி நாவால் காற்றைத் துவைத்து எழுப்பும் “கீதத்தைக் கேட்டேன்” என்பார்.(????????????)


//அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்//

இப்போது(unconcentrated listening)மறுபடியும் வருகிறான்/ள்.
ஆனால் இப்போது “காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்”
யதார்த்தம் போய்விட்டது.The originality is lost?

பொதுவான எண்ணங்கள்:

இசை கேட்கும்போது வேறு வேலையில் ஈடுப்பட்டுக் கொண்டே கேட்டால்அந்த இசையின் எல்லா துகள்களும் துல்லியமாகக் கேட்கும்.ஆனால்இந்த focussed listeningஇல் துல்லியம் இல்லை என்பது என் சொந்த அனுபவம்.

உங்கள் எதிர்வினையை எழுதவும்.

உங்களுக்கு ரசிப்புத்தன்மையும் எழுத்து ஆற்றலும் இருக்கிறது. முடிந்தால்
“குக்கரில் எண்ணப் படாத விசில்” என் கவிதையை படித்து விமர்சிக்கலாம்.


நன்றி.

மின்னல் said...

ரவிஷங்கர்,

உங்கள் விளக்கம் அருமை. எதிர்வினையா வாய் பிளந்து பார்க்க ஆரம்பிச்சாச்சு.

உங்க வலை வரணும் வரேன்.

கே.ரவிஷங்கர் said...

மின்னல்,

நன்றி.ஏதோ திடீரென்று ஒரு மின்னல்(!)அடித்தது.சொன்னேன்.


உங்க டைப்/கனிமொழி/சுந்தர் கவிதைகள்(அந்தகணங்களின்...ஒருமித்த எண்ணத்தில்...கைக்குலுக்கும் மரங்களின்...புன்னகை..ஒரு சினேகபாவ்....) எழுத முயற்சி செய்து என்க்கு வர மாட்டேங்குது.

வலைக்கு வந்து கருத்துச்சொன்னதற்கு நன்றி.

மதன் said...

தொடரட்டும் நல்முயற்சிகள்.. வாழ்த்துக்கள்..!

மின்னல் said...

நன்றி மதன்