Sunday, May 24, 2009

பிடித்த கவிதைகள்

தண்ணீர்

பாத்திரங்கள் மாறுகின்றன
வடிவங்களும்
ஆனாலும்
நான் ஒரு போதும்
பாத்திரங்களல்ல
எனினும்
நான் பாத்திரங்களைப் போலிருக்கிறேன்
தவிர்க்க முடியாதபடிக்கு

பெருவெளியின் பனித்துளியாய்
அலைகடலின் நுரைமுதலாய்
இழை அவிழும் முதல் துளியாய்
ஆகிவிடும் என் கனவு
தேங்கிக் கிடக்கிறது
இமைகடவாதொரு துளியாய்

நிரந்தமின்மையின்
அந்தரத்துள் மூழ்கிப்
புதுப்புதுப் பாத்திரங்கள்
ஆனாலும்
நான் வடிவங்கள்
அற்றதொரு சோதி

-அகிலன்

======================================

அன்பெனும் பிடிக்குள்
அக‌ப்ப‌ட்ட‌ ம‌லைய‌து
எவ்வ‌ள‌வு பெரிதோ
அவ்வ‌ள‌விற்கு க‌ன‌மில்லை
என்றாலும்
சிறுபொழுதும் தாம‌திக்க‌வோ
உட‌ன் சும‌ந்து ஏக‌வோ இய‌லாத‌
வ‌ழிந‌டைப் ப‌ய‌ணி
நான்
இற‌க்கி வைத்துப் போகிறேன்
ப‌த்திர‌மா ய‌தை
பாதையின் ம‌றுங்கே
திசைக‌ளோடி பிரிந்த‌ வ‌ழிக‌ள்
இருண்ட‌ பிற‌கு
என் பிராதுக‌ளையும், பிரார்த்த‌னைக‌ளையும்
காலத்தின் ப‌லிமுற்றத்தில்
கிட‌த்திவிட்டு
வெறும‌ கையோடு நான்
திரும்பும் காலில்
அடைக்க‌ல‌ம் த‌ரும்
அசையாத‌ அம்ம‌லையின்
அடிவ‌யிற்றுக் குகை
நிழ‌ல்.

3 comments:

அகநாழிகை said...

மின்னல் (லாவண்யா)
இன்று உங்கள் பதிவுகள் முழுவதும் வாசித்தேன். (நிஜமாகவே முழுவதும்)
கலந்து கட்டி அடித்திருக்கிறீர்கள்.
மொத்தமாக வாசித்ததில் உங்கள் இயல்பும், ஆர்வமும், வாசிப்பும், மனோநிலையும் ஓரளவிற்கு உணர முடிந்தது என்றே நினைக்கிறேன்.
என்னை கவர்ந்த பதிவு முதலில் ‘யாதுமானவன்‘ மிகைப்படுத்தல்களின்றி இயல்பாக இருந்தது. (கொஞ்சம் ஆர்ப்பாட்டமும் கூட)
அடுத்ததாக உங்கள் கவிதைகளில் எனக்குப் பிடித்தவை
1. முத்தப்பூ தொடுக்கும் கலை கற்றவன்
2. மழை தீர்ந்த பொழுதில்
3.வானுக்கு வண்ணமேற்றுதல்
4. திரும்ப கிட்டாதவை (மிக அருமை)
5. காற்றை மொழி பெயர்த்தல்
6. வாழ்க்கை போல
7.மழைக்கால மனசு
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

மற்றபடி, உங்கள் எழுத்துக்களின் சரள நடையும், விவரணையும் நன்றாக இருக்கிறது.
தாமதமாக படித்துவிட்டு எழுதுவதற்காக என் மனம் சங்கடப்படுகிறது.

சுவீடன் பற்றிய பதிவுகளும், ஆண்டாள் பற்றிய பார்வையும், கவிதைகளை அலசுதலும் (முடிஞ்சா என் கவிதைகளையும், பின்னிடுங்க,)
ஆழ்ந்த பார்வையில் பதிவாகியுள்ளது. ரசனைப்பார்வைதான் உங்களின் எழுத்துக்களை மேன்மைப்படுத்துகிறது.
வாழ்த்துக்கள்.
சில கேள்விகளும் எனக்குள்ளது. chatல் கேட்கிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

சென்ஷி said...

இரண்டு கவிதைகளும் அருமை..

//நான் பாத்திரங்களைப் போலிருக்கிறேன்
தவிர்க்க முடியாதபடிக்கு//

அகிலனின் “நான்” போலத்தான் எல்லோரும் எப்போதுமோ?!

இரண்டாம் கவிதை யாருடையது?

அகநாழிகை பின்னூட்டத்தில் அமர்க்களப்படுத்தியுள்ளார் :)))

முபாரக் said...

நன்றி