Tuesday, September 24, 2013

பேராண்மையும் ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ம‌ற்றும் திரைய‌ர‌ங்க‌ அர‌சிய‌ல்க‌ளும்

த‌மிழ் திருநாள் பொங்க‌லை முன்னிட்டு நீண்ட‌ விடுப்பெடுத்து த‌மிழ‌க‌ம் சென்று திரும்பியாயிற்று. தில்லியில் வ‌சிப்பு என்று விதிக்க‌ப்ப‌ட்ட‌ பின் த‌மிழ‌க‌ம் செல்லும் போதெல்லாம் முடிந்த‌ ம‌ட்டும் சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையாவ‌து பார்த்து விடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அந்த‌ வ‌கையில் இந்த‌ முறை நான்கு திரைப்ப‌ட‌ங்க‌ளையும் க‌ண்டு வ‌ந்த‌தில் ம‌க‌ழ்ச்சி சில‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ள்.

த‌மிழ‌க‌ம் அடைந்து இந்த‌ முறை நான் பார்த்த‌ முத‌ல் திரைப்ப‌ட‌ம் பேராண்மை. அடுத்த‌து ஆயிர‌த்தில் ஒருவ‌ன். நான்கு ச‌ண்டைக்காட்சி, ஐந்து பாட‌ல்க‌ள், கொஞ்ச‌ம் சென்டிமென்ட் என்று க‌ட்ட‌ம் கட்டி த‌வித்து வ‌ந்த‌ தமிழ் திரையுல‌கிற்கு ச‌மீப‌மாக‌ வ‌ந்திருக்கும் மாறுத‌ல்க‌ள் வ‌ர‌வேற்கத்த‌க்க‌வை. அந்த‌ வித‌த்தில் பேராண்மையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ச‌லாம் போட‌ வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ள்.


பேராண்மை மிகவும்‌ க‌வ‌ர்ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. எடுத்துக் கொண்ட‌ க‌தைக்க‌ள‌ம், திரைக்க‌தை அமைத்திருந்த‌ வித‌ம் எல்லாம் அருமை. சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் உறுத்த‌லாக‌ இருந்த‌து. ஆர‌ம்ப‌ காட்சிக‌ளில் அந்த‌ பெண்க‌ளின் அட்டகாச‌ம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அருவெறு‌க்க‌த்த‌க்க‌தாக‌ இருந்த‌து. என்ன‌தான் பெண்க‌ள் மாடர்‌ன் ஆகிவிட்டாலும் இந்த‌ அள‌விற்கு ஒருவ‌ரை ப‌ழிவாங்க‌ என்ன‌ வேண்டுமானாலும் செய்வோம் என்ப‌து திரைப்ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும். மேலும் ம‌லை வாழ் ம‌க்க‌ளை அதிகாரிக‌ள் கேவ‌ல‌மாக‌ ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டியிருப்ப‌தும் மிகையான‌து. மேலும் காம்யுனிச‌ம் ப‌ற்றிய‌ வசனங்கள் திணிக்க‌ப்ப‌ட்ட‌து போல் கதையோடு ஒட்டாமல் இருந்த‌து. எது எப்ப‌டி ஆனாலும் பெண்க‌ளை மிக‌ உய‌ர்வாக‌ காட்டி இருப்ப‌தும், காட்டில் சில‌ பெண்க‌ளும் ஒரு ஆணும் ப‌ய‌ங்க‌ர‌ எதிரிக‌ளை முறிய‌டிப்ப‌தும் அருமை. அதில் இர‌ண்டு பெண்க‌ள் பலியாவ‌து உண்மையாக‌ க‌ண்ணீரை வ‌ர‌வ‌ழைத்தது. அதுவும் சுசீலாவை புதைக்கும் போது அவ‌ள் எப்போதும் கேட்கும் க‌ந்த‌ச‌ஷ்டி ஒலிப்ப‌து க‌வித்துவ‌மாக‌ இருந்த‌து. என்ன‌தான் பேராண்மை கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ராக்கெட் ச‌ம்ம‌ந்த‌மாக‌ கூட‌ தெரிந்திருப்ப‌து மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. மொத்த‌த்தில் மிக‌வும் அருமையான‌ ப‌ட‌ம். வ‌ள்ளுவ‌ன் சொன்ன‌ பிற‌ன்ம‌னை நோக்கா இருப்ப‌து பேராண்மை என்ப‌திலும் நாட்டை நேச‌ப்ப‌தும் பெண்க‌ளை ம‌திப்ப‌தும் பேராண்மை என்று சொல்லி இருக்கும் அழ‌கு மிக‌ நேர்த்தி.


அடுத்த‌ப‌டி க‌வ‌ர்ந்த‌து... ஆயிர‌த்தில் ஒருவ‌ன். முத‌ல் பாதியில் சோழ‌ இள‌வ‌ர‌ச‌ன் தமிழ‌க‌த்திலிருந்து விய‌ட்நாம் அருகில் இருந்த‌ ஒரு தீவில் சென்று வாழ்ந்த‌தாக‌வும் அவ‌ன் விட்டு சென்ற‌ த‌ட‌ங்க‌ளை தேடி சென்ற‌வ‌ரை தேடும் பொருட்டு ஒரு ப‌டை கிள‌ம்புகின்ற‌து. ஏதோ ம‌ந்திர‌ த‌ந்திர‌ க‌தைக‌ளில் வ‌ருவ‌து போல‌ இருக்கின்ற‌து முத‌ல் பாதி. க‌ட‌ல், புதை ம‌ண‌ல், நாக‌ம், காட்டுவாசிக‌ள், ப‌சி, தாக‌ம் என்று சோழ‌ர்க‌ள் ஏற்ப‌டுத்திய‌ ஏழு த‌டைக‌ளை (இர‌ண்டு த‌டைக‌ள் சரியாக‌ விள‌ங்க‌வில்லை) தாண்டி செல்கின்ற‌தாம் அந்த‌ ப‌ய‌ண‌ம். இறுதியாக‌ ப‌ல‌ இழ‌ப்புக்குபின் அந்த‌ ந‌க‌ரை அடைகின்ற‌னர் சில‌ர். அங்கே நிஜ‌மாக‌வே சோழ‌ர்க‌ள் 800 ஆண்டையும் தாண்டி வாழ்வ‌தாக‌வும் பாண்டிய‌ வ‌ம்ச‌த்து எஞ்சிய‌ சில‌ர் த‌ங்க‌ள் ப‌ர‌ம்ப‌ரை தெய்வ‌ சிலையை மீட்க‌வே இந்த‌ ப‌ய‌ண‌த்தை மேற்கொள்வ‌தாக‌ சொல்லி க‌தை ந‌க‌ர்த்தி இருப்ப‌து இர‌ண்டாம் ப‌குதி. இதில் சில‌ குழ‌ப்ப‌ங்க‌ளை த‌விர்த்திருந்தால் இந்த‌ ப‌ட‌த்தை க‌ண்டிப்பாக‌ ஒரு உல‌க‌ த‌ர‌மிக்க‌ ப‌ட‌மென்று சொல்லி இருக்க‌லாம். த‌டைக‌ள் சில‌ ச‌ரியாக‌ புரிய‌வில்லை. க‌ட‌லில் என்ன‌ த‌டை என்றே தெரிய‌வில்லை. எப்ப‌டி ச‌ட‌ச‌ட‌வென்று ம‌க்க‌ள் இற‌க்க‌கின்ற‌ன‌ர் என்று தெரிய‌வில்லை. மேலும் சோழ‌ ந‌க‌ர‌த்தை அடைந்த‌வ‌ர்க‌ளுக்கு ஏன் பைத்திய‌ம் பிடித்த‌து போல‌ ஆகிற‌து. சோழ‌ ம‌க்க‌ள் உண‌வை நோக்கி வ‌ரும் போது ம‌ன்ன‌ன் ஏன் அடித்து விர‌ட்டுகிறான். பாண்டிய‌ இள‌வ‌ர‌சி சோழ‌ ம‌ன்ன‌னை கூட‌ ஏன் விழைகிறாள். ஏன் மாயாஜால‌ காட்சிக‌ள் போல‌ பல‌ காட்சிக‌ள் வ‌ருகின்ற‌து. க‌டைசியில் ஏன் அந்த‌ ப‌டை வீர‌ர்க‌ள் சோழ‌ பெண்டிரிட‌ம் அத்த‌னை வ‌க்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ன‌ர். இதெல்லாம் விள‌க்காம‌லேயே ப‌ட‌ம் முடிந்து விடுகின்ற‌து. ஆயினும் மிக‌ வித்தியாச‌மான‌ முய‌ற்சி. க‌ண்டிப்பாக‌ செல்வ‌ராக‌வ‌னை ந‌ம்பி படம் பார்க்கச் செல்வோரின் எதிர்பார்ப்பு வீணாக‌வில்லை.


மூன்றாவ‌தாக‌ ரேணிகுண்டா, க‌தைக்க‌ள‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ எல்லாமே மிக‌வும் பிடித்திருந்த‌து. சுப்‌ர‌ம‌ணிய‌புர‌ம் போன்றே வ‌ன்முறையை சாதார‌ண‌மாக்கிவிட்டு போய் இருக்கின்ற‌து இந்த‌ப‌ட‌ம். மனைவியை த‌ன் ப‌ண‌க‌ஷ்ட‌த்திற்காக‌ பாலியல் தொழில் செய்ய‌ சொல்லும் க‌ண‌வ‌னிட‌ம் இருக்கும் குற்ற உண‌ர்விலிருந்து, அப்ப‌டியிருக்கும் பெண்ணும் மேலும் ப‌ண‌த்திற்காக‌ கொல்லும் கூலிப்ப‌டையாக‌ இருப்ப‌வ‌ரிட‌ம் கூட‌ இருக்கும் இர‌க்க‌மும் நேர்மையும் வ‌ரை ப‌ட‌ம் பிடித்து காட்டி இருப்ப‌து அருமை. மிக‌ எளிய‌ சினிமாத‌ன‌ம‌ற்ற‌ க‌தாபாத்திர‌ அமைப்புக‌ள். த‌ன‌து ந‌ண்ப‌னை கொல்லும் வ‌ரை வ‌ன்முறையில் ஈடுப‌டாத‌ நாய‌க‌ன் அத‌ன் பின் இர‌ண்டு கொலை செய்வ‌தும் மிக‌ இய‌ல்பாக காட்ட‌ப்ப‌டிப்ப‌த‌ற்கு ஒரு ச‌பாஷ். ஆனால் க‌தாநாய‌கி மேல் இறுதி க‌ட்ட‌த்தில் கூட‌ ஒரு ப‌ரிதாப‌ம் வ‌ராம‌ல் போன‌து இந்த‌ ப‌ட‌த்தின் தோல்வி. பல‌ காட்சிக‌ள் க‌வித்துவ‌மாக‌ இருந்தது. ப‌ல‌ர் ந‌டிப்பு பாராட்டும் வ‌ண்ண‌மிருந்த‌து.

க‌டைசியாக‌ ‘குட்டி‘. இந்த‌ ப‌ட‌ம் மிக‌வும் அபாரமாக‌ இருந்த‌து. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் பார்த்துவிட்டு வ‌ந்த‌தும் என் க‌ண‌வ‌ர் அருகில் இருந்த‌ திரைய‌ர‌ங்கில் ஓடிக்கொண்டிருந்த‌ குட்டி ப‌ட‌த்தை பார்த்திருக்க‌லாம் என்றார். ஆனால் குட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது பேசாம‌ல் க‌ட‌ற்க‌ரை போய் வ‌ந்திருக்க‌லாம் என்றார். மொத்த‌த்தில் குட்டி ஒரு வெட்டி.

ஆகா... பார்த்த‌ நான்கு ப‌ட‌ங்க‌ளில் ச‌மீப‌கால‌த்தில் திரைய‌ர‌ங்குக‌ளில் ந‌ட‌க்கும் சில‌ விச‌ய‌ங்க‌ள் எனை மிக‌வும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்ற‌து. நான் பேராண்மையை என் சொந்த‌ ஊர் முசிறியில் பார்த்தேன். அங்கே நாங்க‌ள் திரைப்ப‌ட‌ம் பார்த்த‌ அன்று முத‌ல் வ‌குப்பில் எங்க‌ளையும் சேர்த்து ஆறு பேரும் மேலும் மொத்த‌ திரைய‌ர‌ங்கில் ப‌தினைந்து பேர்தான் ப‌ட‌ம் பார்த்தோம். முசிறியில் இருக்கும் ஒரே அர‌ங்க‌ம் அதுதான். இன்னொன்று திரும‌ண‌ ம‌ண்ட‌பமாக‌ மாறிவிட்ட‌து. ஆனால் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் வெளிவ‌ந்த‌ ம‌றுநாள் திருச்சியில் ர‌ம்பாவில் பார்த்தோம் முத‌ல் வ‌குப்பு டிக்கெட் விலை 120 ரூபாய் இதன் ச‌ரியான‌ விலை 50 ரூபாய் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இப்ப‌டி அதிக‌ப்ப‌டியாக‌ வ‌சூலிக்க‌ப்ப‌டும் பணம் யாருக்கு செல்கிறது...? திரையரங்குகள் இப்படி அதிக‌ கட்டணம் வ‌சூலிப்ப‌தால் தான் திருட்டு விசிடிக‌ள் ம‌லிகின்ற‌ன‌. என்ன‌ சொல்ல‌... விரைவில் திரைப்ப‌ட‌ங்க‌ளை விசிடிக‌ளிலும் அல்ல‌து தொலைக்காட்சிக‌ளிலும் ரிலிஸ் செய்தால் ஆச்ச‌ரிய‌மில்லை.

3 comments:

கமலேஷ் said...

நேர்மையான விமர்சனம்,உங்களின் பகிர்வுக்கு மிக நன்றி தோழி..

பா.ராஜாராம் said...

பத்தி எழுத்துக்களில் நல்ல முதிர்வு தெரிகிறது லாவண்யா..விமர்சனமே என்றாலும்.

கலக்குங்க சகோ..

உயிரோடை said...

வாங்க‌ க‌ம‌லேஷ், வாங்க‌ பா.ரா அண்ணா. க‌ருத்துக்கு ந‌ன்றி