Thursday, September 24, 2009

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IV



கைந்நிலை (பாட‌ல் 23) உண‌ர்வு நிலை ந‌ம்பிக்கையின் ஊற்று

சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் - தோழி! - நமர்?


ஒலி எழுப்பும் அம்பேற்றிய‌ வில்லும் கொடுங்கோப‌மும் கொண்ட‌, எதை கொல்கின்றோம் என்ற‌ சிந்த‌னையோ இர‌க்க‌மோ இல்லாமல் கொல்வ‌தை ம‌ட்டுமே தொழிலாக‌ கொண்ட‌ ந‌ம‌ன் போன்ற‌ வேட‌ர்க‌ள் ஓடும் போது ச‌ருகான‌ இலைக‌ள் ஓசையெழுப்பும் மிகுந்த‌ வெப்ப‌முடைய‌ இந்த‌ கான‌த்தில் இந்த‌ வேனிற்ப‌ருவ‌த்தில் சென்ற‌ ந‌ம் த‌லைவ‌ன் ந‌ம்மை விட்டு நீங்கிய‌ சொன்ற‌ தொலைவை நினைத்து பாராம‌ல் இருக்க‌வா இய‌லும் சொல் தோழி.

இப்பாட‌லின் உட்பொருளாக‌ க‌ண்டால் தோழி த‌லைவ‌ன் மேல் கொண்டிருந்த‌ அதீத‌ காத‌ல் அவ‌ன் வ‌ழியில் அவ‌னுக்கு நேர‌ இருக்கும் துய‌ர‌ங்க‌ளை, அபாயங்க‌ளை எண்ணி அஞ்சி இருப்ப‌தாக‌ நினைக்க‌ தோன்றுகின்ற‌து. வேனிற் கால‌ம் சென்று இருக்கும் தலைவ‌னின் ப‌சி, தாக‌ம், கொலை செய்த‌ அஞ்சாத வேட‌ர் இவையல்ல‌ இப்பாட‌லில் கார‌ணி, இடையாற‌து பிரிவால் மௌனமாக‌ அர‌ற்றும் உட‌லை தான் ஓடும் இலை ஒலி வெங் கானத்து என்று கான‌த்தின் மேல் ஏற்றி விட்டு சொல்லி இருக்கின்றாள். என்னை போல‌ த‌லைவ‌னும் ஏக்க‌முற்று இருக்கின்றானோ என்ற‌ க‌வ‌லையும் வேறு சேர்ந்தே வாட்டுகின்றது அவ‌ளை. ச‌ர‌ ச‌ர‌க்கும் ச‌ருகை போலும் இவ‌ளுட‌ல், இவ‌ள் பிரிவை ஏதாவ‌து ஒரு கார‌ண‌த்தால் நினைவூட்டிய‌ப‌டியே இருக்கின்ற‌ர் உட‌னிருப்போர். பிரிவு தொலைவு த‌ன்னை த‌கிர்ப்ப‌து போல் த‌லைவ‌னைக்கும் த‌ன் நினைவினை ஏதாவ‌து ஊட்டிய‌ வண்ணிருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கை அவ‌ளுக்கு நிறைய‌ இருக்கின்ற‌து. இந்த‌ உண‌ர்வையே அகத்திணையில் மிச்ச‌ம் என்ற‌ க‌விதையில் கனிமொழி கூறி இருக்கின்றார்.


ந‌ட்போ காத‌லோ இர‌ண்டும் ம‌ற்ற‌ அதீத‌ பிரிய‌மோ ஏதோ ஒன்றால் பிணைந்த‌ இருவ‌ரை மென்திரை போல‌ ப‌டியும் சிறு இடைவெளி கால‌ப் பெருவெளியில் நீண்டு வ‌ள‌ர்ந்து இவ‌ரும் பிரிய‌ கார‌ண‌மாகி போகும் க‌தை அனைவ‌ரும் உண‌ர்ந்த‌தே. அப்ப‌டிப்ப‌ட்ட‌ இடைவெளியையும் பெரிவையும் பேசும் இக்க‌விதையில்

என்றேனும் ஒரு க‌ண‌ப்பொழுதில்
ந‌ம் க‌ன‌வுக‌ள் உர‌ச‌க்கூடு‌ம்
ந‌ம்பிக்கையில்
வீசியெறியாம‌ல் வைத்திருக்கின்றேன்
இவ்விருட்ச‌த்தின் விதையை

என்ன‌ ஒரு ஆதர்ச‌மான‌ ந‌ம்பிக்கை த‌ன் காத‌ல் நினைவுக‌ள் மீது. அந்த‌ நினைவுக‌ள் உனை என்னோடு சேர்க்கும் மீண்டும் ஒரு விருட்ச‌த்தை உருவாக்கும் முன்பிழுந்திருந்த‌ அவ்விருட்ச‌த்தின் விதை என்ற‌ க‌னிமொழிக்கு ச‌ங்க‌கால‌ த‌லைவியின் ம‌ன‌நிலை பெருதும் பொருத்த‌மாக‌வே இருக்கின்ற‌து.

இதே பாடலில் தலைவி தொலைவு இலர்கொல் என்று கூறுமிடத்தை மிகைப‌டுத்தி பார்க்கும் போது அவ‌ள் சிறு கவலையும் கொண்டவாளாகவும் எனக்கு தெரிகின்றாள், தான் தலைவனை பிரிந்து வாடுகின்றாள் தன் காதலை காமத்தால் தவிக்கும் உடலை மறைக்க இயலாது தவிக்கிறாள். இந்த‌ உண‌ர்வுநிலை மேல் சொல்ல‌ப்ப‌ட்ட‌திலிருந்து ச‌ற்றே மாறுபட்டதாக‌ இருந்தாலும், இதே உண‌ர்வின் நிலையை பச்சை தேவதை தொகுப்பில் சல்மாவும் கூறி இருக்கின்றார்.

பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்.

தன்னருக்கில் இல்லாத தலைவனை அவன் நினைவில் வாடும் தலைவியின் மனநிலையை ஒட்டி மிக அருகில் தான் இருக்கின்றது சல்மாவின் நீங்குதலின்றி கவிதையும்.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி III

3 comments:

அகநாழிகை said...

அருமையான பகிர்வு. தொடர வாழ்த்துகள்.

பத்மா said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க லாவண்யா .ஆழ்ந்து படித்தேன் .சென்ற தலைவன் நினைவில் நாம் இருப்போம் என்ற நம்பிக்கை எந்த காலத்துக்கும் பொது .இல்லையா ?
அது இல்லாத போது அவள் நிலை துயரம்.
நன்றி லாவண்யா

உயிரோடை said...

வாங்க‌ அகநாழிகை. க‌ருத்துக்கு ந‌ன்றி.

வாங்க‌ ப‌த்மா. க‌ருத்துக்கு ந‌ன்றி.