Wednesday, October 7, 2015

குற்றம்(ஆக்கப்பட்டதை) கடிதல்குற்றம் கடிதல் சமீபத்தில் பார்த்த படம். குற்றம் எது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?   நாடகத்தன்மையோடு கிசுகிசுப்பு பரப்பும் பொதுஜனமும், அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தன் வாழ்வாதாரத்திற்கென எதை வேண்டுமானாலும் தீப்பிடிக்க செய்யும் ஊடங்களும் நடுத்தர வாத்தியார் வர்க்கத்தை என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக காட்டி இருக்கிறது குற்றம் கடிதல். ஏழை கணக்கு வாத்தியாரின் மூன்றாவது மகள், அம்மாவும் விளையாட்டு ஆசிரியை. மேலும் பெரியம்மா, பெரியப்பா, மாமா, மாமி, அத்தைக்கள், அத்தைகளின் கணவர்கள், சித்தப்பாக்கள், அக்காக்கள், அண்ணாக்கள் என்று எல்லோரும் ஆசிரிய வர்க்கம், நடுத்தர ஆசிரிய வர்க்கம். இவர்கள் யாரும் மாணவர்களை கண்டித்தற்காக பல பஞ்சாயத்துக்களால் பாதிக்கப்பட்ட என் சிறு வயதின் வாழ்க்கை பல்வேறு விதமாக நினைவில் நிறைந்திருக்கிறது. அதுவும் ஒரு விளையாட்டு ஆசிரியையாக அம்மாவுக்கு கண்டிப்பை காட்ட வேண்டியது கட்டாயம், கடமையும் கூட. பின்னர் பிரச்சனைகளாலும்பல்வேறு காரணங்களுக்கான குற்றவுணர்வாலும் அலைக்கழிக்கப்படுவது  அன்றாட நிகழ்வாக இருந்தது எங்களுக்கு. அதனாலேயே இந்த படம் எனக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறது. அப்பாவி நடுத்தர வர்க்க ஆசிரியை மெர்லினை, ஒன்றுமறியாத சிறுவன் செழியன் ஒன்றுமே செய்யாமல் தனது பிரியத்துக்குரிய ஆசிரியையை தற்கொலை செய்யும் அளவிற்கு குற்றவுணர்விற்கு ஆளாக்கும் கதை, திரைக்கு புதிது. நடுத்தரவர்க்கத்தில் மனச்சாட்சி என்ற மண்ணாங்கட்டியை கட்டுக் கொண்டு குற்றத்தை கடிதல் மிகவும் கடினமே. அதை அழகாக கதையாக்கி இருப்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒரு விசயம்.

இந்த அழகான கதையை திரைக்கதை ஆக்கியவிதத்தில் எனக்கு சில கருத்துகள் உண்டு இதற்கு கிடைக்க வேண்டிய சில நட்சத்திரங்களை அது பறித்துக் கொண்டதோ என்ற ஐயமும் உண்டு. இயக்குனர் ஒரு நாடகபாணியில் திரைக்கதை அமைத்திருப்பது வித்தியாசத்திற்காக செய்தாரா அல்லது வேறு விதமாக சொல்ல முடியாது என்று நினைத்து செய்தாரா தெரியவில்லை. கதைக்குள் வரும் எல்லா கதாப்பாத்திரங்களின் குணாதிசியம் என்னவென்று தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சியை அமைத்திருப்பது திரைப்படம் போல் தோன்றாமல் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வை தருகிறது. அறிமுக காட்சி மட்டுமல்லது இடையிடையே பல்வேறு இடங்களில் இந்த நாடகம் போன்ற தோற்றம் தெரிகிறது. மெர்லின் தோழி அவள் திருமணம் முடிந்து முதல் நாளே பள்ளி வந்ததும் பேசும் விதமும், பின்னர் தான் அனுமதி விடுப்பில் செல்வதால் மெர்லினை ஏழாம் பிரியட்டை எடுக்க சொல்லி பேசுவதும் நிஜமாய் ஒரு மேடை நாடகபணியே. மெர்லினின் தோழியாக வரும் அந்த ஆசிரியை ஒரு நடனக்கலைஞராக இருக்க வேண்டும். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கூட இந்த நாடகத்தன்மையை பார்க்க முடியாது. குற்றம் நடந்ததை விளக்கிச்சொல்லும் குழந்தையின் உடல்மொழியும் மற்றும் நிகழ்வை கதையாக்கி கற்பனை சுவாரஸ்களுடன் பேசும் திறனும் அதனை ஊக்குவிக்கும் அக்குழந்தையின் பெற்றோரும் இந்த நாடகத்தன்மையின் உச்சம் எனலாம். அந்த குழந்தையின் பேச்சில் குழந்தைத்தனத்தை தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. மெர்லின் செழியனின் தாயாரை மருத்துவமனையில் சந்திக்கும் காட்சியும் இதே அளவிற்காக நாடகமாகவே தோன்றியது. இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய காட்சியது

இவை மட்டுமல்ல மேலும் சில காட்சிகள் திரைக்கதைக்கு சற்றும் ஒட்டி வரவில்லை. குறிப்பாக சொன்னால் பாலியல் கல்வி தேவையா என்ற விவாதமாகட்டும், ஒரு ஊடகவியல் பெண்ணும் அவர் தோழனும் நடந்த குற்றத்தை ஒரு காபிக்கடையில் விவாதிப்பதாகட்டும் திரைப்படத்தின் ஓட்டத்தின் இடைச்சொருகல் போன்ற உணர்வையை தருகின்றன. ஆனால் இவ்விரு உரையாடல்களுமே குற்றம் கடிதலுக்கும் மிகவும் முக்கியமான விவாதங்கள். அது திரைக்கதையாகாமல் தொலைக்காட்சியில் வரும் ரியாலிட்டி ஷோ விவாதம் போலவே இருப்பது இயக்குனரின் திரைக்கதையின் கலவையின் குறைப்பாடாகவே எனக்குப்பட்டது. மேலும் ஒரு ஆசிரியை/யர் தன் மாணவர்/மாணவிகளை அடிப்பது கூடாது கடுமையாக கண்டிப்பது கூடாது. அன்பாக நடத்த வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்த இடத்தில், இறுதிவரை  எவரேனும் ஒருவர் பாலியல் கல்வி குறித்த கருத்தை கூறிக்கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பது இயக்குனர் தன் கருத்தை திணிக்க முயன்றிருப்பதை போலவே காணவியல்கிறது. மேலும் பாலியல் கல்வி வேண்டுமென்று ஆதரிக்கும் எல்லோரும் பெண்களாகவும் அதனை ஏற்க தயங்குவது அல்லது தத்தி போல் பேசுவது ஆண்களாகவும் காட்டி இருப்பது தற்செயலாக நடந்த விசயமாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

எந்த படைப்பும் நேரடியாக சொல்லும் விஷயங்களை விட மௌனமாக உணர்ந்த்தும் விஷயங்களே மிக ஆழமாக மனதில் பதியும். அப்போது அந்த படைப்பின் வெளிப்பாடு இன்னுமொரு வடிவெடுக்கும். ஒரு சிறந்த படைப்பு தன் படைப்பிடையே வாசகர்கள்/பார்வையாளர்கள் உணர வேண்டிய மௌனத்திற்கு இடம் வைக்க வேண்டும். சில காட்சிகள் இந்த மௌனத்திற்கு இடம் தந்திருக்கிறது. மெரிலின் பள்ளியிலிருந்து வெளிவரும் சமயம் கால் செருப்பில் மாட்டி கூடவே வரும் கருப்புநிற பாலிதீன் பையை கூட எடுத்து எறியாமல் செல்வது, மேலும் பைக் கண்ணாடியில் சிலுவையை அதுவும் சிவப்பு நிறம் உறுத்தும் சிலுவையை கண்பது எல்லாம் அவள் தேவையற்ற உணர்வுகளால் குழப்பிய மனநிலையில் சூழ்நிலையை கையாளாத் தெரியாமல் இருப்பதை உணர்த்துகிறது. அவள் அந்த சர்சில் கேட்பது ஒரு திருமண நிகழ்விற்கான அறிவிப்பு, தனது திருமணம் மதம் மீறி நடந்தால் இவ்வாறு பிரச்சனையில் சிக்கி கொண்டேமோ என்று அவள் நினைப்பதாக குறிப்பால் உணர்த்தியது மிகவும் புத்திசாலிதனமான காட்சியமைப்பு. இதைப்போல் மேலும் சில காட்சிகள் இருந்தாலும் மௌனமாக உணர்த்த வேண்டிய இன்னும் பல முக்கியமான காட்சிகள் இப்படி இல்லாமல் போனதில் எனக்கு சின்ன வருத்தமுண்டு.

அதற்கு ஒருவேளை திரைப்படத்தில் இயக்குனருக்கு தான் சொல்ல வரும் கருத்து மக்களுக்கு புரியுமா என்ற பதட்டம் இருந்து இருக்கலாம், அதனால் காட்சியை விளக்க மேலும் ஒரு சில காட்சிகளையோ அல்லது சில வசனங்களையோ சேர்த்திருத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.  உதாரணத்துக்கு மெர்லின் கொஞ்சம் பைத்தியக்காரனத்தனமாக கொசுவர்த்தி மெசினை ஏதோ செய்வாள்(அது ஒரு தற்கொலைக்கான முயற்சியாக கூட இருக்கலாம்) பின்னர் சம்மந்தமே இல்லாமல் கத்துவாள். இதை இத்துடன் நிறுத்தி இருந்தாலே அவள் குற்றவுணர்வில் சாகுமளவுக்கு தவிக்கிறாள் என்று புரிந்திருக்கும். அப்படி புரியாதவர்க்கு அடுத்து சேர்க்கப்பட்ட கூத்துக்காட்சி வசனமான “குற்றஉணர்ச்சியில் தவித்தாள் குந்திதேவி” என்ற வசனத்திற்கும் முன் வந்த காட்சிக்கும் இருக்கும் பொருத்தமும் புரியாது. அதே போல் செழியனுக்கு ஏதோ முன்பிருந்தே வியாதி இருக்கிறது என்ற விஷயத்தை சில காட்சிகளில் காட்டி இருந்தாலும் பின்னர் மீடியாவிற்கு வெளிப்படையாக சொன்னதும் இதே வகையை சேர்ந்தது தான். மேலும் மெரிலினில் பிரின்ஸிபாலும் அவர் மனைவியும் தன் ஆசிரியர் மற்றும் மாணவர் மேல் இவ்வளவு அக்கரை ஏன் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விளக்கும் காட்சியும் இது போல தான்.  

படத்தின் பிண்ணனி இசை சில இடங்களில் ஒட்டவில்லை. ஒருவித வெறுப்பின்னை தந்தது போல் இருந்தது. மெர்லினில் பயம் மற்றும் குற்ற உணர்வை காட்டும் பிண்ணனியாக ஒரு உடுக்கை சத்தம் வரும். அது அவள் செழியனை அடித்த அடுத்த கணத்திலிருந்து வர ஆரம்பிக்கும்அந்த பிண்ணனி இசை, "இவ எதுக்கு இவ்வளவு பயம் கொள்ளனும். ஒவர் ஆக்டிங் போல இருக்கே" என்று தோன்ற வைக்கிறது  அந்த உணர்வு அந்த இசையில் பொருட்டு வந்தது என்று இப்போது உணர்கிறேன்இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் பல்வேறு வகுப்பில் நடக்கும் காட்சிகளை கொண்ட ஒரு பாடலும், சின்னங்சிறுகிளியே என்ற பாரதியின் பாடலும் அருமையாக காட்சிபடுத்தப் பட்டிருப்பதாக பலரும் சொல்லக் கேட்கிறேன். ஆனால் அவ்விரு பாடல்களிலும் இயக்குனர் சொல்ல வேண்டிய நிறைய விசயங்களை ஒன்றுபட சொல்லி அந்த பாடல்களுக்கு கிடைக்க வேண்டிய இன்னும் சில பாராட்டுக்களை அவரே பிடுங்கி வைத்துக் கொண்டார் என்றே நினைக்கிறேன். பாரதியின் பாடலுக்கு கதைக்கு சம்மந்தப்பட்ட எல்லோருடைய  மலரும் நினைவுகளை திணித்திருப்பது, இத்தனை அருமையான பாடலில் ஏன் இதெல்லாம் என்றே நினைக்க வைக்கிறது. உதாரணத்துக்கு செழியனின் அப்பா இறந்து போனது இந்த கதைக்கு தேவையில்லாத பின்புலம் அதை அந்த அருமையான பாரதி பாடலின் ஏன் வைக்க வேண்டும்.

நம் கல்வி திட்டமே சரியில்லை அடிப்படை வாழ்வியல் விசயங்களை கற்றுத் தருவதில்லை, ஒரு அடிமை குமாஸ்தாவை உருவாக்கும் திட்டமட்டுமே இருக்கிறது என்று எத்தனையோ குறைபாடுகளை கல்வித்துறை சார்ந்து நாம் பேச வேண்டிய சமயத்தில் பாலியல் கல்விக்கான தெளிவு வேண்டும் என்ற கருத்தினை மட்டும் கையாண்டிருப்பது கொஞ்சம் வருத்தம் தரக்கூடியது. ஆயினும் இது வரை வந்த திரைப்படங்கள் சாடி இருப்பது போல கல்வி நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயல்படுகிறது. கடினமான மன அழுத்திற்கு மாணவர்களை உள்ளாக்குகிறது. மனனம் செய்தலை மட்டுமே ஊக்கிவிக்கிறது என்ற பழைய கத்தரிக்காய்களை மீண்டும் வதக்காமல் இருந்தது மிகப்பெரிய ஆறுதல். எது எப்படியானாலும் கொஞ்சமும் வியாபாரத்தனமில்லாத, எதார்த்தமான, எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் வாழ்வில் கடந்து போன ஒரு அனுபவத்தை முற்றிலும் மாறுப்பட்ட பாணியில் திரைக்கதையாக்கி இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவை இன்னொமொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படங்களில் ஒன்றுகுற்றம் கடிதல்” என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இயக்குனர் பிரம்மா திரைகதையாக்கத்திலும் பிண்ணனி இசையிலும் அடுத்தடுத்த படத்தில் மேலும் கவனமாக இருப்பார் என்று நம்புகிறேன். நல்ல படத்தை தந்ததற்கு அவருக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்.

No comments: