Sunday, October 25, 2015

லைட்டா பொறமைப்பட வைக்கும் கலைஞன்



    "லைட்டா பொறாமைப்படும் கலைஞன்" கட்டுரைத் தொகுப்பில் இசை எழுதிய கவிதை நூல்களை குறிந்த சில கட்டுரைகளும், சினிமா குறிந்த சில கட்டுரைகளும், மார்சிஸம் சார்ந்த ஒரு நூலுக்கும், மணியன்பிள்ளை எழுதிய புத்தகத்திற்கும் அறிமுக உரையான சில கட்டுரைகளும் மற்றும் அப்பா பற்றி எழுதிய ஒரு கட்டுரையும் என்று கலவையான கட்டுரை தொகுப்பு இது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாது, இதை பற்றி மட்டுமே எழுதுவேன் என்ற குழந்தைத்தனமான பிடிவாதம் இல்லாத ரசனை மிகுந்த கட்டுரைகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு. ஆனால் எழுதிய எல்லாக் கட்டுரைக்குள்ளும் கவிதையை குறிந்த ஏதேனும் ஒன்றை எழுதி இருக்கிறார்.

  இந்த தொகுப்பிற்கு லைட்டா பொறாமைப்பட வைக்கும் கலைஞன் என்று தலைப்பிட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் இசை கவிதையைப் பற்றி எழுதினால் படிப்பவர்க்கு கவிதையின் சூத்திரம் விளங்குகிறது. குத்துப்பாட்டு பற்றி எழுதினால் மனம் குத்தாட்டம் போடுகிறது. எந்த விஷயத்தையும் இவர் "தெளிவுற அறிந்து திறம் படவே மொழிகிறார்". அவை ஒரு நண்பனுடன் பேசுவது போல் நம்மை நெருங்குகின்றன. இசையை ( சங்கீதம் கவிஞர் இசையல்ல ) கேட்டு மனத்துயர் மீளும் பழக்கம் எனக்கு உண்டு. இசையின் குத்துப்பாட்டு கட்டுரையைப் படித்து மன வருத்தம் கலைந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.

  இசையின் எழுத்தில் ஒரு நேர்மை இருக்கிறது. எளிமை இருக்கிறது. பகடி இருக்கிறது. சொல்ல வந்தததை சுற்றி வளைக்காமல் பளிச்சென்று நேரடியாக சொல்லும் தெளிவும் துணிவும் இருக்கிறது. “எழுத வேண்டிய விசயத்திற்கான நுட்பமான பார்வையும், ஆழ்ந்த உள்வாங்கலும் ஆழமான கருத்தாக்கமும், சுவாரஸ்மாகவும், ஹாஸ்யமாகவும் சொல்லும் திறனும் தனித்துவமும் இருக்கிறது. ஆகவே தான் இவருடைய கட்டுரை தொகுப்பு புத்துணர்வும் பசும் ஒளியும் ததும்புவதாக என்றென்றைக்குமான நித்திய இளமையோடு இருக்கிறது. பொதுவாக கட்டுரை தொகுப்பு வாசிக்கும் போது ஏற்படும் அலுப்பும் சலிப்பும் இவர் தொகுப்பில் ஏற்பாடதற்கு அந்த பசுமையும், துள்ளல் நடையும் காரணமாக இருக்கலாம்

  ஒவ்வொரு கட்டுரைக்கு பின்னாலும்  இவர் மேற்கொண்டிருக்கும் கடும் உழைப்பு பாராட்டத்தக்கது. குத்துப்பாட்டு கட்டுரைக்காக கிட்டத்தட்ட இருபத்து நான்கு குத்துப்பாடல்களையும்  ஒரு குத்தற்ற(குத்துப்பாடல் அல்லாத பாடலை எப்படி அழைப்பது?) பாடலையும் கேட்டே கட்டுரையை எழுதி இருக்கிறார். அத்தனை பாடல்களையும் பல முறை கேட்டு இசைக் குறிப்புகளை முழுதும் உள்வாங்கி ( ஆட்டமா தேராட்டமாபாடல்  குத்துப்பாடலா என்று குழம்பும் அளவிற்கு இந்தப் பாடல்களை எல்லாம் திரும்ப திரும்ப கேட்டிடுருக்கிறார் ) அதன் பின்னரே எழுதுகிறார்  "இளக்காரமாக ஒதுக்கப்படும்  குத்துப்பாட்டுக்கே இசையமைப்பாளர்கள் இத்தனை மெனக்கெடும் போது எழுத்தாளன் தன் எழுத்துக்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும்" என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டதாக சொல்லும் இசை அப்படி மெனக்கெட்டியிருக்கும் கட்டுரைகள் இவை.

   ”திருடன் மணியன்பிள்ளையும் திருடர் ( திருடனில்லை திருடர் ) சத்தியமூர்த்தியும்என்று தலைப்பிடுவதின் நேர்மையும், நுட்பமும் என்னைக் கவர்ந்தது. அந்த தலைப்பே எல்லாவற்றையும் பேசி விடுகிறது. எத்தனை பேருக்கு ஒரு திருடன் செய்த துர்சாகசங்கள், கெட்ட செயல் நம்மை விட்டு தூரத்தில் இல்லை, கொஞ்சம் துணிந்திருந்தால் நாம் செய்யக்கூடிய அற்பதனங்களே என்று சொல்லிக் கொள்ள தைரியம் பிறக்கும்? திருடர்கள் அப்பாவிகள் நாம் வக்கிர அறிவோடு செய் நேர்த்தியுடன் தவறுகள் செய்வதால் தப்பித்து நல்மனிதர்கள் என்று நடமாடுகிறோம் என்று வெளிப்படையாகவே சொல்ல எவ்வளவு துணிவு வேண்டும்? திருடன் மணியம்பிள்ளைக்கு பெண்கள் மீதான கரிசனம் பெறும்பாலான சத்தியசீலர்களுக்கு இல்லை என்பதை மணியம்பிள்ளையின் வார்த்தைகளாக எடுத்தாண்டிருக்கும் இசையின் வரிகளூடே புரிந்து கொள்ள முடிகிறது. திருடனின் வாழ்க்கை வரலாற்றில் கூட கலாரசனையை, கவிதையை, கலைகளை சார்ந்த விசயங்களை, விசித்திரங்களை, வினோதங்களை பற்றி மட்டுமில்லாது கடவுளை அரசியல்வாதியாக்கி விமர்சனம் செய்யும் இவரை என்ன தான் செய்வது?  

  ”பிசாசு” பலரை பாதித்ததைப் போல இவரையும் பாதித்திருக்கிறது. அது கட்டுரையான விதமே அந்த அழகியலே அதனை காட்டிக் கொடுக்கிறது. பிசாசு படத்தின் நுட்ப மடிப்புகளில் சிக்கி பிசாசை கொண்டாடுகிறார். தன் துர்நினைவுவாக எஞ்சும் “காரை எரித்துவிட்டால் போதுமா முட்டாப் பிசாசே” என்று இவரை போலவே நானும் கேட்கிறேன். எதை எரிந்து நல்லுறவுகள் கொடுக்கும் அனுபவத்தை நினைவை அழிக்க முடியும்? எந்த கலையின் வடிவத்தின் மிக பெரும் வெற்றி, அந்த கதைமாந்தோடு நம்மை பொருத்திப் பார்ப்பது தான். இந்த பிசாசிடன் தன்னையோ தன் காதலியையோ பார்க்கும் இயல்பு, கற்பனையே இந்த படத்தின்(கட்டுரையின்) வெற்றி. பிசாசு படம் பார்த்துவிட்டு வந்து நானும் இது போல பிசாசு இருந்தா ஒன்றென்ன ஏழெட்டை வீட்டில் விட்டு வைக்கலாமே” என்று பலரிடம் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. ஆகவே  இந்த கட்டுரை எனக்கு மிக நெருக்கமானதாகிறது. பியர் பாட்டில்களை உடைக்கும் பிசாசை பிடிக்க கூடாதல்லவா பிறகென் அதை சீராட்டுகிறோம் என்ற இவர் கேள்விக்கு அதுவே கலையின் மர்மம் என்று அவர் பதிலையே இப்போதைக்கு சொல்லி வைக்கலாம்.

  கவிதைகளை குறித்த இவரது நுட்பமான புரிதலினாலேயே கவிதைகள் குறித்து பேசும் எல்லாக் கட்டுரைகளும் நெய்யப்பட்டிருக்கின்றன. பெருமாள் முருகன் எளிய மனிதர்கள் மீது கொண்டிருக்கும் வாஞ்சையையும், சாதியின் பொருட்டு பெற்ற குற்றஉணர்வையும் கவிதையாக்கி இருப்பதை சிலாகிக்கிறது “பெருமாள் முருகன் கவிதைகளுடனான ஒரு பயணம்” என்ற கட்டுரை. இசையின் கூர்மையான பார்வை ஒரு கவிதையில் சொல்லப்பட்ட “எப்போதோ மலையேறி எப்போதோ மலையிறக்கும் வெள்ளாட்டு குட்டியை” இன்னொரு கவிதையில் வரும் “வீட்டை சுமந்தலையும் மனிதரோடு” ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. பெருமாள் முருகன் கவிதைகளில் இவருக்கு பிடித்ததாக எடுத்தாண்டிருக்கும் கவிதை அனைத்தும் ரத்தினம். கண்ணாடி பார்ப்பவள் எப்படி காளியாவாள் இவர் எழுப்பும் கேள்வி, காளி என்ற பெருமாள் முருகளின் கவிதையை வேறு ஒரு தளத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. இவர் கவிதைகளுக்காக தன் கண்களை எப்போதும் அகலத் திறந்து வைத்துக் கொண்டே திரிகிறார். கவிதை நுட்பங்களை படிக்கும் எல்லா விசயங்களிடமிருந்தும் கற்கிறார், ஆகவே தான் பெருமாள்முருகன் கவிதைகளில் உள்ள சிக்கலை இப்படி பேசிகிறார் பெருமாள்முருகன் என்கிற புனைகதையாளர் கவிதைக்குள் காட்சி விவரிப்பின்துல்லியத்தை கூட்டுவதில் சாதகமாகவும், பெருமாள்முருகன் என்ற கட்டுரையாளர் கவிதையின் மௌனத்தில் இடையூறு நிகழ்த்தி எதையும் மிச்சம் வைக்காது பேசி தீர்த்து விடுவதில் பாதகமாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வேன்.

  கவிதையில் இந்த இருபத்தி ஒன்றாம் நூறாண்டில் நடந்து கொண்டிருக்கும் புதுமைக்கு இசையின் மொழியில் “பெரும் விளையாட்டிற்கு” துவக்கப்புள்ளிகளில் ஒருவராக இவர் ஞானகூத்தனை குறிப்பிடுகிறார், தனது கருத்து மிகையல்ல என்று தரவுகளோடு பேசி இருக்கும் கட்டுரை “உன்னந்தங்களில் பொந்திற்குள் புகுந்து விளையாடும் எலிக்குஞ்சு” தலைப்பையும் இவர் மேல் சொன்ன கருத்தையும் துல்லியமாக அணுக முடிகிறது. புனிதங்களை கொண்டாடுவதை போலவே புனிதமற்றதை மறுக்கும் மட மனத்தால் மறுப்பின் தடை நீக்கி பார்த்தால் இன்னும் அசலான விளையாட்டுத்தனத்தை கவிதைகளில் காண முடியும் என ஞானக்கூத்தன் கவிதைகளில் மூலம் தன் உணர்ந்ததை நமக்கு உணர்த்துகிறார். கவிதை என்ற உம்மணாமூஞ்சியை ஞானக்கூத்தன் கவிதைகள் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் பாடவும் வைத்ததாக இந்த கட்டுரையில் கூறுகிறார். மேலும்கலை என்பது விடுபடல்களை கோர்த்தெடுக்கவே விரும்புகிறது எனும் இசையின் கருத்தை ஞானக்கூத்தினின் ஆடலசர் கவிதையோடு என்னால் எளிதாக ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள முடிந்த்து. சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்ற பொதுவான கருத்தை மறுப்பது போல எப்போதும் ஏமாறும் குடியாவன், ஞானகூத்தத்தன் கவிதையில் குடியானவன் ஏமாற்றியதாக வருவது இவருக்கு ஆச்சரியமில்லாது இருக்கலாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஞான கூத்தன் ஆ-புனிதத்தையும் கொண்டாடுபவர் என்பது எனக்கும் கொஞ்சம் புரிந்தது.

  மோகனரங்கன் கவிதைத் தொகுப்பை பற்றி பேசும் போது தமிழ் வாசனை இல்லாத கவிதைகள்என்றோ இசைமொழியற்ற கவிதைகள்என்றோ மோகனரங்கனின் கவிதைகளை குற்றம் சாட்டவியலாது என்று சொல்கிறார்.  இந்தக் கவிதைகளை மனனம் செய்து பாடியும் பார்த்திருப்பாரோ என்ற ஐயம் எழுந்தது எனக்கு. பழந்தமிழ் சொற்களை பிய்த்தெடுத்து தன் கவிதையின் மூச்சினை கொடுத்திருப்பதாக எடுத்துக்காட்டோடு வியந்து குறிப்பிடுகிறார் சீரிளமைஇந்த சொல்லை எத்தனை முறை சிறுவயதில் எண்ணத்தில் உணராமல் கூட பாடி இருப்போம், அது மோகனரங்கனின் கவிதையில் எப்படி புத்துயிர் பெறுகின்றது என்பதை இவர் கட்டுரையை படித்த போது தான் நானும் உணர்ந்து கொண்டேன். இசை தந்திருக்கும் விளக்கம் இல்லாது போயிருந்தால் என் போன்ற அப்பாவிகளுக்கு கவிஞர் மோகனரங்கனின் யவன ராணி கவிதை சத்தியமாய் சற்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

  பாரதியின்  கவிதைகள் சத்தியமும் சங்கீதமும் என்கிறார் இசை. பாரதி நன்மையும் அறிவும் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றார் என்று சொல்லி எடுத்துக்காட்டி இருக்கும் பாடல், பலர் செவியுள் புகாத பாரதியின் வேறொரு குரல். இந்திய தாய்க்கு சிங்காசனம் தந்து சிம்மவாகினி ஆக்கிய பாரதியே, இந்திய கொடியில் துலுக்கர் பிறையும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். பாரதி சாதிகள் மட்டுமில்லை மதமும் பேதப்படுத்த தேவையற்றதாக நினைத்திருக்கக் கூடும் என்று நம்மை உணரவிடும் இந்த நுட்பமான இணைப்பை இசை திட்டமிட்டே செய்திருக்க வேண்டும். பாரதியின் கூற்றாக “பேசாத பொருள் பேச துணிந்தேன்” என்று பாரதியை பற்றி இதுவரை பேசாத பல விசயங்களை எடுத்து ஒரு நீள் கட்டுரைக்குள் அந்த அக்னி குஞ்சை கட்டி வைத்திருக்கிறார். பாரதி கவிதையின் பல்வேறு தளத்தை தொட்டு, தரவாக பாரதின் கட்டுரைகளிலிருந்து சில பத்திகளை காட்டுக் கொடுத்திருக்கும் இந்த கட்டுரையில் எனக்கு சில குறைபாடுகள் தெளிவாக தெரிந்தது. இந்த கட்டுரைக்குள் கோர்வையற்ற பல இடங்கள் இருக்கின்றன. சில வரிகளில் சொற்கள் விடுபட்டிருக்கின்றன. இதற்கு பாரதியின் மேல் இசை கொண்டிருக்கும் அதீத காதல் காரணமாக, சொல்ல வேண்டிய பல விசயங்களை எங்கே எப்படி அடுக்க வேண்டும் என்ற திட்டமிடாது இருந்திருக்கலாம் அல்லது கட்டுரையாக்கியாக்கிய பின்னர் பல்வேறு விசயங்களை கட்டுரையின் நீளம் கருதி ஈவு இரக்கமின்றி வெட்டி எறிந்திருக்கலாம். இவர் பாரதியை பற்றி இவ்வளவு ஆழமாக பேச பாரதி கவிதையின் அனுபவம் இவருக்கு சிறு வயதிலிருந்தே தொடங்கி இருக்க வேண்டும் அதை தன் அப்பாவை பற்றி எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் அப்பாவின் ரசனையை மெச்சும் ஒரு இடமாக பாரதி பாடலில் வரும் அங்கு கத்தும் குயிலோசை சற்றே காதலில் வந்து விழுவேண்டுமாமேஎன்று அப்பா சொல்வதாக சொல்லி இருப்பார் இசை. காதில் வந்து இடித்தால் குயிலோசையென்றாலும் சகித்துக்கொள்ள முடியாது என்று கூறும் இவர், அந்த “சற்றே” என்ற வார்த்தையை சரியான இடத்தில் அமர்ந்தி இருப்பதால் தான் பாரதி கவியாகிறார் என்று தனது அப்பாவின் கூற்றாக குறிப்பிடுகிறார்.

  இவரின் கவிதை குறித்த சத்திய நோக்கினில், கறார் விமர்சனத்தில் தன் தந்தையையும் விட்டு வைக்கவில்லை. பெருமாள் முருகன் கவிதையில் செய்திருப்பது குறைவு தான் என்று நேர்பட பேச தயங்கவில்லை. சே. பிருந்தாவின் கவிதைகளை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து எங்கே என்ன பிரச்சனை என்று அலசி துவைத்து போட்டுவிடுகிறார். எந்த வரிகள் மட்டும் கவிதையாகி இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் வரை தந்திருக்கிறார். வெள்ளந்திகளுக்கு கவிதை வராது. கொஞ்சம் திருட்டுத்தனமும் வேண்டுமென்கிறார்.  
  
  சாதி அடையாளத்தை வெறுக்கிறார் இசை. தனது தாத்தாவின் பெயரிலிருந்து சாதிபின்னொட்டை நீக்கி புரட்சிசெய்தது, பின்னால் அப்படி செய்வதால் மட்டும் எதுவும் மாறிவிடாது என்று கண்டுகொண்டது, தன் அம்மா தனக்குள் இருக்குள் சாதிக்காரியை விரட்டியடித்து விட்டு பறையாட்டத்தில் மயங்கி நின்றது என்று பலவற்றை வெளிப்படையாகப்  பகிர்ந்துகொண்டிருக்கிறார்.  "வீணையின் மீட்டலில் இருந்து மந்தகாசம் பொங்க கடவுள் எழுந்து வருவாரெனில், நமது பறைக்குள் இருந்து ஏற்றிக்கட்டிய  லுங்கியுடன்  தொடை தெரியக் குதிப்பதுவும் அவரே" என்றும், “மலரே மௌனமா”  வித்யாசாகரின் நெற்றிப் பொட்டிலிருந்தும் "மச்சா மீசை வீச்சருவா..." அவரின் குதிகால் வெடிப்பிலிருந்து பிறந்தவை அல்ல என்றும்  எழுதியிருப்பதிலிருந்து தெரிகிறது இசைக்கு சாதி இழிவின் மீதிருக்கும் கோபம்.

  கவிதை என்றால் என்ன என்ற பஞ்ச் டைலாக் பல இருக்கின்றன இந்த தொகுப்பு முழுவதும். "கவிதை என்பது வேற்று கிரகத்திலிருந்து சொற்கூட்டங்களை கட்டி இழுத்து வருவது அல்ல அது சுய அனுபவத்தை ஒட்டிய தேடலின் விளைவே", கவிதை "வெறும் வரிகணக்கல்ல", "கவிதையும் நாமும் மாறி மாறி வெட்டிக் கொள்ளும் பகடையாட்டம்", "விளக்குவது கவிதையை கொல்கிறது", "அது மொழிக்குள் இயக்கும் இன்னொரு மொழி", "கவிதை என்பது பிரிதொன்றில்லாத புதுமை", "கவிதை என்பது பாதி திறந்த கதவு", "கவிதை ஒரு தனி உயிர்" இப்படி நிறைய்ய...

  இசை பிறரை மட்டும் பகடி செய்யவில்லை தொகுப்பு முழுவதும் பல இடங்களில் தன்னை தானே பகடி செய்து கொள்கிறார். அன்பென்றால் வாந்தி வாந்தியாக வருகிறது என்கிறார். அன்பின் மீது எனக்கிருக்கும் ஒவ்வாமையும் கிட்டத்தட்ட இதுவே. பிறர் சொல்ல துணியாத விசயங்களை எழுதுவதே இவர் பலம் என்று நினைக்கிறேன்  தோழர் தியாகுவின் நூல் பற்றிய கட்டுரை இவரிடம் இயல்பாக பொங்கும் ஹாஸ்மும் நக்கலும் தொனியோட எழுத்துநடையில் நடையில் அமைந்திருக்கும் இன்னுமோர் சித்திரம். இவருக்கு கெட்ட கவிதைகளை அறிமுகம் செய்து வைத்த அந்த நல்ல காம்யுனிஸ்ட் தோழர்கள் யாரைப் பார்த்தால் நல்ல கவிதையை எழுத முடியும் என்று காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இசை தனது கவிதை ஆன்மா எங்கிருந்து பிடிக்கிறார் என்ற சூட்சமத்தை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். தனது மனதை கவிதைக்காக பேப்பர் பேனாவின்றி திறந்து வைத்திருப்பதாக இதே புத்தகத்திலுள்ள நேர்காணலில் சொல்லி இருப்பதை இக்கருத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். தியாகு “perfection” என்பதை ”செந்நிறைவு” என்று மொழி பெயர்த்திருப்பது தனக்கு பிடித்திருப்பதாக சொல்கிறார் இசை. இந்த ”செந்நிறைவை” இசையின் எல்லாக் கட்டுரைகளிலும் காண முடிகிறது.

  இந்த தொகுப்பு முழுவதிலும் எந்த குறைகளுமே இல்லையா என்ற கேள்விக்கு தொண்ணூறு சதவிகிதமில்லை என்ற பதிலே என்னிடமிருக்கிறது. பாரதி குறித்த “சத்தியத்தை மீட்டுதல்” கட்டுரையின் கோர்வையின்மையும், சில இடங்களில் வெளிப்பட்டிருக்கும் மேதாவித்தனமும், எனக்கு கவிதைகளை காட்டி கொடுத்த விரல்களில் ஒன்று என்று சே. பிருந்தாவை சொல்லி இருந்தாலும், அவரின் கவிதை நூலுக்கான விமர்சன  கட்டுரையில் அந்த முழு தொகுப்பில் ஒரு நல்ல கவிதை கூடவா இல்லை என்ற கேள்விக்கு இடம் வைத்ததும், சில இடத்தில் சுய புலம்பல்களும், கூறியது கூறல், கவிதை பற்றி "இரத்தம் கக்கி சாக நினைப்பவர்கள் என்னுடன் வாருங்கள்" என்று எச்சரிக்கை விடுத்து எழுதியிருக்கும் கவிதை பற்றிய கட்டுரையில் மருந்துக்கு கூட ஒரு பெண் கவிஞரின் கவிதை எடுத்துக் காட்டப் படவில்லை. நேர்காணலில் சமகாலத்தில் பிடித்த/பாதித்த கவிஞர்களின் பட்டியலிலும் பெண் கவிஞர் எவரின் பெயரும் இல்லை. இக்குறைகளையும் தாண்டிச் சொல்வதென்றால் இசை ஸ்டிராங்கா பொறாமைப்பட வைக்கும் கலைஞன்”.

லைட்டா பொறமைப்படும் கலைஞன்
ஆசிரியர்: இசை
காலச்சுவடு வெளியீடு

No comments: