Thursday, December 24, 2009

சுவிட் சுவீடன் - பகுதி 2

சுவீட் சுவீடன் மெட்ரோவும்,செல்ப் சர்வீஸ் சூப்பர் மார்கெட்களும் இந்தியாவிலேயே பார்க்க கிடைப்பதால் இது ஒன்றும் புதிய உணர்வை கொடுக்கவில்லை.(ஆனால் சில்லறை பெருவதற்கும் மீதி சில்லறை தருவதற்கும் மெசின் இருக்கு புதுமையா) ஆனாலும் பனி சூழ்ந்த சுவீடன், பசும் புல்வெளி ஆங்காங்க வெண்பனி இயற்கை போட்ட ரங்கோலி, சில சமயம் சோப்பு நுரை பரப்பியது போல, சில சமயம் இட்லி மாவை கொட்டி பரப்பியதை போல, கேக் மேல் பரப்பிய ஐசிங் போல இப்படி பலவிதங்களில் அழகாக இருக்கின்றது. பனி பொலியும் போது பஞ்சு மிட்டாய் வெள்ளை கலரில் பறப்பது போல ரசிக்கும் படி இருக்கின்றது அறைக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருக்கும் வரை. வெளியே நடக்கும் போது என்னதான் கனமான ஜாக்கெட் போட்டாலும்,க்ளவுஸ் போட்டாலும், சாக்ஸ்,சூ போட்டாலும் கையும் காலும் விரைத்து போவதும், தரையில் நடப்பதே பனிக்கட்டி மேல் நடப்பது போல வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது. சில நாட்கள் காலையில் அலுவலகம் வரும் போது நம் ஊர் போல இருக்கும் ரோடும், தரையும். ஆனால் மாலை திரும்பும் முன் பனி பொழிந்து எங்கும் வெள்ளை கம்பளத்தை விரித்தது(தூய வெள்ளை நிறம் பார்க்க கொள்ளை அழகு) போல ஆகிவிடும். மரம்,செடிகளில் ஆங்காங்கே தங்கியபடி இருக்கும் பனித்துகள் பார்க்க கொள்ளை அழகு. சில சமயம் மரங்கள் பூத்த வெள்ளை பூப்போல இருக்கும் அவை.

எண்களால் ஆனது சுவிடன் உலகம். ஹோட்டல் நுழைவாயிலில் ஒரு சந்கேத எண் அடித்தால் தான் கதவு திறக்க கதவோடு இணைக்கப்பட்ட பாதுகாப்பு கருவி அனுமதி தருகின்றது. அதன் பின் அறைகள் இருக்கும் வரண்டாவில் ஒரு 4 இலக்கத்தை அடிக்க வேண்டி இருக்கின்றது அதை தாண்டி கதவை திறக்க ஒரு எண், பூட்டிவிட்டு வெளியே வர இன்னொரு எண்(சாவியோடு உள்ள பூட்டும் உண்டு இந்தியர்களுக்காகவே இந்த ஏற்பாடு என்றாள் ஹோட்டலை நிர்வாகிக்கும் பெண். என்ன தான் இலக்க எண்கள் கொடுத்து படு பயங்கர பாதுக்காப்பென்றாலும் இந்தியர்கள் மட்டும் பூட்டு சாவி கேட்கின்றார்களாம், இருக்காதா பின்னே பூட்டை பூட்டி அதை ஒரு முறை தொங்கி திறக்கவில்லை என்று தெரிந்ததும் தானே மனதுக்கு நிம்மதி பிறக்கின்றது நமக்கு.) சரி இப்படி தங்கும் இடத்தில் தான் இத்தனை இலக்க எண்களை மனனம் செய்ய வேண்டுமென்றால், பணி இடமோ அதற்கு மேல், நுழைவாயில், வாரண்டா மட்டும் இல்லாது மின்தூக்கியில் ஏற ஒரு எண், இறங்க ஒரு எண்(அடகொன்னியா உங்க பாதுகாப்பு உணர்ச்சிக்கு அளவே இல்லையா?) ஒருவேளை இறங்கும் எண்ணை தப்பாக அழுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்து E மாடிக்கு(அதானுங்க நுழைவாயில், entrance floor) வரும் முன் அங்கே இருக்கும் காவலாளர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய் விடுவார்களாம்.(அவ்வளவு fast)

நான் பணி நிமித்தம் சென்ற அலுவலக்கதில் ஒரு மாலை சூடான விவாதத்தின் இடையில் உடன் இருந்த சூவிடன் அலுவலக பணியாளர் குடிக்க டீ வேண்டுமா என்றதும் சரி என்றேன். அவர் யாரிடமோ சொல்ல ஒரு மனிதர் கரும்காபி எடுத்து வந்தார், அவர் பார்க்க ஆபிஸ் பாய் மாதிரி இல்லை. பால் வேண்டும்,சர்க்கரை வேண்டும் என்று நான் படுத்தியதும் அந்த மனிதர் வெளியே சென்று வாங்கி வந்தார். அலுவத்தின் போன் ஆப்ரட்டேர், அட்மின்ஸ்ட்ரெசன் சம்மந்தப்பட்ட வேலை அனைத்து அவர் தான் பார்ப்பராம். அலுவலகத்தில் எப்போதும் பழவகைகள் இருக்கும் அதை வாங்கி வருபவரும் அவர் தானாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஆளுக்கு Rs.10000 என்று எங்கள் அலுவலத்தில் இருந்து பெறும் கம்பெனியின் முதலாளி அவர் என்றால் கொஞ்சம் வியப்பாக இல்லாமல் என்ன செய்யும்?

சுவிடனில் வந்து கொஞ்சம் சுவிடிஷ்(அது என்ன டிஷ் என்பவர்க்கு அது தான் சுவீடனின் மொழி) புரியும் வரை கொஞ்சம் கடினம் தான். சூப்பர் மார்கெட் சென்று ஒரு சோப்பு பவுடர் வாங்க வேண்டுமானாலும் அங்கே இருப்பவரிடம் இது சோப்பு பவுடர் தானே என்று கேட்க வேண்டி இருக்கின்றது. பால்,தயிர் என்று எதுவுமே ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை. எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் சுவிடனில் சுவிடிஷ் பேச தயங்குவதே இல்லை இந்த மக்கள். என்னோடு பணி புரியும் சக பணியாளி, தான் செய்த மென்பொருளை என்னிடம் காட்டும் போது அதில் எழுதப்பட்டுருந்த விளக்கங்கள்(comments) சுவிடிஷில் இருந்தது(விட்டா இவிங்க மென்பொருளை கூட சுவிடிஷில் எழுதி விடுவார்கள் போலும்) அவ்வளவு மொழிப்பற்று.

வார இறுதியில் சுவிடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சென்றோம் கிருஸ்துமஸ் இப்போது தான் முடிந்து இருக்கின்றது அதனால் எல்லா இடங்களிலும் பல விதமான வண்ண விளக்குகள் இருந்தன. ஸ்டாக்ஹோமில் பெரிய மார்கெட் இருக்கின்றது. அங்கே எல்லாம் கிடைக்குமாம். ஆனாலும் நமது திநகர் மார்கெட் போல் எல்லாம் இல்லை. சும்மா சுவீடன் வந்ததற்கு சென்று பார்க்கலாம். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒன்றொன்றும் ஒவ்வொரு அலங்காரத்தில்(interior decoration) ரசிக்கும் படியாக இருக்கின்றது. இங்கே இருக்கும் குழுந்தைகள் பெரும்பாலும் அழுவதோ, அதிகம் அங்கிங்கும் ஓடுவதோ கிடையாது, கன்ன சிவப்போடு அமைதியான பொம்மைகள் போலிருக்கின்றன.சுவிடன் சாப்பாட்டு விடுதிகளில் வெஜிடேரியன் என்றால் நான்கைந்து உருளை கிழங்கை அவித்தும் சில இழை தழைகளை அவிக்காமலும் தருகின்றார்கள்.

9 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//பூட்டை பூட்டி அதை ஒரு முறை தொங்கி திறக்கவில்லை என்று தெரிந்ததும் தானே மனதுக்கு நிம்மதி பிறக்கின்றது நமக்கு.)//

ஹி...ஹி...ஹி...

narsim said...

//எண்களால் ஆனது சுவிடன் உலகம்//

இது போன்ற மிக நல்ல சொல்லாடல் கட்டுரை முழுதும்.. தொடரவும்

மின்னல் said...

வாங்க அப்துல்லா நன்றி. உங்க சிங்க(சுத்த)பூர் பதிவை படித்தேன். அருமை. மீண்டும் மீண்டும் வருக

வாங்க நர்சிம். நன்றி.

கே.ரவிஷங்கர் said...

விறு விறுப்பா போகுது

மங்களூர் சிவா said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க!

மின்னல் said...

வாங்க சிவா நன்றி மீண்டும் வருக

செந்தழல் ரவி said...

இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதலாம்...

சிறப்பா எழுதவேண்டியதை மொக்கையாக்குறீங்களே என்று வருத்தம்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மின்னல் said...

செந்த‌ழ‌ல் ர‌வி,

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி. ஏதோ என‌க்கு தெரிஞ்ச‌தை எழுதி இருக்கேன். மொக்கையாக்க‌ணும் என்ற‌ எண்ண‌ம் எல்லாம் இல்லை. உங்க‌ள் நேர‌த்தை வீணாக்கிய‌த‌ற்கு வ‌ருந்துகின்றேன்.

வினையூக்கி said...

:)