Thursday, December 24, 2009

நாடோடியின் கிச்சன்

ஒரு வழியாக சுவீடன்(ஸ்டாக்ஹோம்) வந்து சேர்ந்தாயிற்று. அந்த அன்று நண்பர்கள் விடு்தியில் விட்டு விட்டு தங்கள் இடம் சென்றனர். அது ஒரு ஞாயிற்று கிழமை என்பதாலும் பயணகளைப்பாய் இருந்ததாலும் இந்திய நேரப்படி நடு இரவை தாண்டி இருந்தாலும் சூட்கேஸ் மற்றும் பைகளில் இருந்த எதையும் எடுத்து வைக்க முடியாத காரணத்தால் அப்படியே உறங்கி போனேன். காலையில் எழுந்ததும் விடுதியின் வரவேற்பறையில் கேட்டு அருகில்(ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்) ஒரு சூப்பர் மார்கெட்க்கு(நம் நீல்கிரீஸ் போல இருந்தது)சென்றேன். கடையில் இருந்தவர்களை பால் எது தயிர் எது என்று கேட்டு வாங்கினேன்(எல்லாம் கெரகம் சுவீடிஷ்ல இல்ல எழுதி இருக்கு, முதல் முறை கேட்டு சரியாக வாங்கி வந்தேன் அடுத்த முறை தெனவெட்டாக நானாக எடுத்து வந்த பால் மிக கெட்டியாக பால் போலவும் அல்லாது தயிர் போலவும் அல்லாது ஏதோ ஒன்றாக இருந்தது). ஒரு பிரட் பாக்கெட் போல இருந்த ஒன்றை எடுத்து பில் போடுபவரிடம் இஸ் திஸ் வெஜ் என்றேன். இட் இஸ் பிரெட் வாட் டி யு மீன் பை இஸ் திஸ் வெஜ் ஆர் நான்வெஜ் என்றார் நக்கலாக. சரி தான் என்று வாங்கி வந்தேன்.

அன்று காலை ஏதோ உண்டு விட்டு, சமைக்க நேரம் இல்லாததால் அலுவலகம் சென்று விட்டேன். மதியமும் சாப்பிடவில்லை, சாயுங்காலம் வந்ததும் அகோர பசி, கொடுமைக்கு அடுப்பு வேறு இல்லை, மைக்ரோவேவ் மட்டும் தான்.(வீட்டில் எதற்கு மைக்ரோவேவ் இடத்துக்கும் காசுக்கும் கேடா இதில் என்ன செய்ய முடியும் எதை எடுத்தாலும் வாங்கி வைக்க வேண்டியது தானா என்று அவரை தீட்டிய படி மைக்ரோவேவில் சமைக்க பழகாதது இப்படி ஒரு பின்விளைவாக வரும் என்று யாருக்கு தெரியும்) அதில் நான் செய்த உப்புமாவை பற்றி ஒரு கதை தான் எழுத வேண்டும். பத்திரம் வைத்து தளிக்க 6 நிமிடம் எண்ணை சூடக்க வேண்டும். பின் எடுத்து கடுகு போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வைத்து உளுந்து போட்டு, பின் எடுத்து வெங்காயம் போட்டு அதை வதக்குவதக்குள் நான் வதங்கிவிட்டேன். அப்புறம் ஒரு வழியாக தண்ணீர் ஊற்றி சூடாக்கி உப்புமாவை கிண்டி உண்டால் ஆஹா எவ்வளவு சுவையாக இருந்தது தெரியுமா? நான் அவ்வளவு அருமையான உப்புமாவை இதற்கு முன் உண்டதில்லை அவ்வளவு அதிகமான அளவு உப்புமாவையும் உண்டதில்லை. எல்லாம் பசி செய்யும் அற்புதம். சுவீடன் வந்ததில் இருந்து அதிகம் பசிக்கின்றது.

எங்காவது கசக்கும் ஜாம் சாப்பிட்டு இருக்கின்றீர்களா? சுவீடனில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஜாம் தேடி தேடி,கிடைத்ததும் ஆஹா கண்டேன் சீதை என்றவாறு ஒரு ஆரஞ்சு பழம் படம் போட்ட ஜாம் பாட்டிலை எடுத்தேன். அதில் உள்ளே சிறிய துகள்கள் போன்ற ஏதோ இருந்தது. நானும் அது என்ன என்று கடை(டன்)கரனிடம் கேட்டேன் இட் இஸ் ஆரஞ்ச் என்றான். சரி என்று நம்பி எடுத்து வந்து அதை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு திறந்து சாப்பிட்டால் ஒரே கசப்பு ஏன்னா அது தெரிந்த துகள்கள் எல்லாம் ஆரஞ்சு பழ தோலாம். :( அதே போல ஒரு முறை மாதுளை ஜீஸ் வாங்கி வந்து ஒரு கோப்பையில் ஓத்தி குடித்தால் தொண்டையில் ஒரே அறிப்பு. அந்த ஒரு கோப்பையை குடித்து முடிக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அலுவலகம் எடுத்து போய் ஒரு நண்பரிடம் கொஞ்சம் கொடுத்தேன் அவர் இது ஒயின் போல் இருக்கின்றது என்றார். அட பாவிகளா இப்படித் தான் ஒயின் இருக்கும் என்றால் அந்த கெரகத்தை எப்படி குடுக்கிறீங்க என்றேன். அந்த ஒரு லிட்டர் பாட்டலை அவரிடமே கொடுத்து விட்டேன். ஆனால் சுவீடனில் ஜீஸ் மிக விலை கம்மியாக கிடைக்கின்றது(ஒரு லிட்டர் பழரசம் 9 கோரோனா தான்) ஆரஞ்சு மற்றும் மிக்ஸ் பழரசங்கள் நன்றாக இருக்கின்றன.

சுவீடனில் கிச்சன் பற்றி எழுத்தும் போது நாராயணி அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர்களை நான் மெட்ரோ ரயிலில் தற்செயலாக சந்தித்தேன். நான் சுவீடன் வந்த வாரம் அலுவலக நண்பர்களிடம் எங்காவது செல்லலாமா என்று கேட்டதற்கு போகலாம் என்று கூறி அழைத்துச் செல்லும் போது டிக்கெட் வாங்க சொன்னார்கள் சரி என்று போனால் 180 கோரோனா வாங்கிக் கொண்டு 16 முறை பயணிக்க ஏதுவான ஒரு பயண அட்டையை வாங்கி தந்தார்கள். அதை உபயோக்கித்து ஒரு முறை தான் சென்று வந்திருந்தேன் அதனால் சும்மா சென்று வரலாமே சென்று மெட்ரோ நிலையம் சென்று ஒரு ரயிலில் ஏறி சோல்னா சென்ரமில் இறங்கி சும்மா கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்தேன். அடுத்த நிலையத்தில் ஒரு பெண் தன் அலைபேசியில் தமிழில் பேசியபடி நான் பயணித்த அதே பெட்டியில் ஏறி அமர்ந்தார். நான் போய் நீங்கள் தமிழா நானும் தமிழ் என்றதும் அறிமுக உரையாடல்கள் முடிந்ததும் நான் சீஸ்தா செல்கின்றேன் அங்கே தான் பச்சை மிளகாய் கிடைக்கும் என்றார். சரி என்று நானும் அவரோடு சென்றேன். அவர் அழைத்து சென்றது சீஸ்தா கோரோசன் என்ற இந்தியர் நடத்தும் கடை அங்கே எல்லா இந்திய காய்கறிகளும் கிடைக்கின்றன. இங்கே தயிர் நன்றாக கிடைக்கும் வாங்கி உண்ணுங்கள் என்று ஒரு பிரண்ட் தயிரை காட்டினார்.(ஒரு பெயிண்ட் டப்பா சாயலில் இருந்த அந்த டப்பாவை வாங்கிக் கொண்டேன் அதில் ஒரு மீசைக்காரன் படம் போட்டு இருந்தது) மேலும் சில டிப்ஸ் தந்தார். மக்காச்சோளம் மற்றும் பச்சை பட்டாணி அடைத்த டப்பாவை காட்டி வாங்கோங்க மாலை நேரம் உண்ண அருமையாக இருக்கும் என்றார். வாங்கிக் கொண்டேன். மேலும் பேன் பீஸாவை காட்டி இது கூட நன்றாக இருக்கும் வாங்கிக்கோங்க என்றார்.

நாராயணி கூறியது போல தயிர் மிக அருமையாக இருந்தது. அது சாப்பிட தயிர் போல இருந்தாலும் பார்க்க வெண்ணை அல்லது வெண்ணிலா ஐஸ்கீரிம் போல இருந்தது. மக்காச்சோளம் டின் திறக்க சாவியோடு(பெப்ஸி டின்னில் இருக்குமே அது போல) இருந்தது அதனால் எளிதாக திறந்து சாப்பிட்டு விட்டேன். ஆனால் அந்த பச்சைபட்டாணி டின் மிக படுத்தி விட்டது. திறக்க மிக கடினமாக இருந்தது. கத்தி(விடுதியில் ஆடு வெட்டும் அளவிற்கு பெரிய கத்தி கூட இருந்தது), முள் கரண்டி, ஸ்பூன் என்று எல்லா ஆயுதம் மற்றும் மெக்ஸிமம் எனர்ஜி கொஞ்சம் மூளை இதை பயன்படுத்தி திறந்து உண்டால் சிறிது இனிப்பான சுவையோடு நன்றாக தான் இருந்தது. பேன் பீஸா பசிக்கு நல்ல விருந்தாக இருந்தது. ஒரு நாள் நல்லிரவு திடிரென பசியால் விழிப்பு வர அந்த பீஸா தான் உதவிற்று. முன்னமே சொன்னது போல சுவீடன் வந்ததிருலிருந்து அதிகம் பசிக்கின்றது.

இப்படியாக இரண்டு மூன்று வாரம் கழித்ததும், ஒரு வெள்ளி மாலை அசதியாக என்ன சமைப்பது என்று யோசித்தவாறு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த சமயம் பின்னாலிருந்து ஒரு குரல் நீங்க தமிழா என்று ஆமாம் என்றதும் ஆஹா என்று திரும்பி பார்த்தேன் மூன்று பேர் அதில் ஒருவர் தமிழ் மற்றவர்கள் கன்னடர்கள் ஆனால் அவர்களுக்கும் தமிழ் புரியுமாம் அவ்வளவு தான் வரண்டாவில் நின்று பெரிய அரட்டை ஆயிற்று. மறுநாள் ஒன்றாக உண்ணலாம் என்றும் முடிவாயிற்று. நான் இரண்டு காயும் அந்த சென்னை நண்பர் சாம்பார் மற்றும் சுண்டலும் செய்தார். சாம்பார்க்கு வைத்த பருப்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரசமும் செய்தேன். மற்றவர்கள் சிக்கன் மற்றும் ஆம்லேட் செய்து வந்திருந்தனர். மற்றுமொரு தோழி கேரட் அல்வா செய்து கொண்டு வந்தார். 5 பேரும் சேர்ந்து உண்டது ஏதோ ஒரு கல்யாணத்திருக்கும் போய் வந்தது போல் இருந்தது. இதுவரை தனிமையே துணையாக இருந்தவளுக்கு இது மிக வித்தியாசமான உணர்வாக இருந்தது. அன்று மட்டும் அல்லாமல் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஒன்றாகவே உண்டோம். கொஞ்ச நாளில் அந்த சென்னை நண்பர் கிளம்ப வேண்டி இருந்தது. அவர் அறையில் இருந்த எல்லாம் மசாலா ஐட்டங்களையும் எண்ணெய் பால் கன்ப்ளாஸ் ப்ரட் எல்லாம் என் அறைக்கு கொண்டு கொடுத்தார். அவர் சென்றதும் ஏதோ பெரிய இடைவெளி வந்தது போல இருந்தாலும் மீதி இருந்தா நால்வரும் ஒன்றாக உண்பது வார இறுதியில் வெளியே செல்வது என்றபடி கழித்தோம். மேலும் இரு வாரம் கழித்து நான்கு நண்பர்கள் வந்து இணைந்து எங்கள் குழு 8 பேர் ஆனா குழுவானது. அவர்கள் கொண்டு வந்த அடையார் ஆனந்தபவன் புளிக்காய்ச்சல், காரக்குழம்பு, வத்தகுழும்பு, கருகப்பிள்ளை தொக்கு என்ற ஐயிட்டங்கள் என் அறையை நிறைத்தன. பொதுவாக என் அறையில் தான் குழுமி உண்போம் அதனால் அனைவரின் பாத்திரிங்கள் மற்றும் கரண்டிகள் எல்லாம் என் அறையில் நிறைந்திருக்கும் பின் என் இரண்டு ஸ்பூன் இங்கே இருக்கு, என் அந்த பாத்திரம் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற எல்லோரும் தேடுவார்கள்.

ஆரம்ப நாள்களில் கடுகு,உளுத்தம் பருப்பு, மஞ்சள் இத்தியாதி இத்தியாதிகளை அப்படியே அதன் பேக்கிங் பேகிலேயே சேமித்து வந்திருந்தேன். பின் ஒரு நாள் மொபின் வாங்கி வந்த போது அது தீர்ந்த பின் ஆபத்பவனாக அஞ்சரை பெட்டி போல உபயோகமாயிற்று. மேலும் சேர்ந்த பல டப்பாக்கள் மற்றும் பாட்டில்களால் அது ஒரு சீரான கிச்சனாக மாறி இருந்தது. நான் கிளம்பும் முதல் நாள் எல்லா மசாலா ஐயிட்டம், எண்ணெய், பால் கன்ப்ளாக் எல்லாம் எதிர் அறையில் அடைத்துவிட்டு, இருந்த பழரசமெல்லாம் குடித்து தீர்த்து ஒரு வழியாக கிளம்பி இந்தியா வந்தடைந்தேன். பல அனுபவங்களையும் தன்னம்பிக்கையும் தந்தது இந்த நாடோடி கிச்சன். இந்தியா வந்து கேஸில் சமைப்பது என்னவோ ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது. :)

No comments: