"என்ன தவம் செய்தனை யாசோதே..." எங்கேயோ வானொலியில் பாடுவது அந்த அந்தி மாலை நேரத்தில் என் காதில் விழுந்து என் மனதை என்னவோ செய்தது. அந்த பாடல் ஏதோ இனம்புரியாத உணர்வை என்னில் உண்டாக்குகின்றது. எத்தனை அருமையான பாடல் இந்த பாடலை யாசோதையே கேட்டால் அவள் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்ததிருக்கலாம் இதோ உங்கள் ஆய்விற்கு.
"கண்ணா மணிவண்ணா! நீ என் பிள்ளையாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ என்ற ஏக்கம், சந்தோஷம் எல்லோருக்கும். ஆனால் என் மன சஞ்சலங்களை அறிவாயா மாதவா கேசவா? மனம் திறந்து கேளடா என் புலம்பல்களை.... உருக்கமான உன் நெஞ்சையும் பிளக்கலாம் அவை.
"கண்ணா மணிவண்ணா! நீ என் பிள்ளையாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ என்ற ஏக்கம், சந்தோஷம் எல்லோருக்கும். ஆனால் என் மன சஞ்சலங்களை அறிவாயா மாதவா கேசவா? மனம் திறந்து கேளடா என் புலம்பல்களை.... உருக்கமான உன் நெஞ்சையும் பிளக்கலாம் அவை.
"நீ பிறந்த அதே கணம் நான் பெற்ற மகளை உனக்காக பறிகொடுத்தேனே! இதற்கு நான் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்?" "பெற்ற பிள்ளையின் முகம் கூட காண முடியாத பாவியல்லவா நான்!" "என் பிஞ்சு மகள் சிறையில் தரையில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்படவா பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தேன்?" "அந்த பிள்ளையை நான் இழந்தேன் என்று கூட தெரியமல் அவளுக்குகாக் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் பதிணெட்டாண்டுகள் வாழ்ந்துவிட்டேன் என்ன கொடுமையடா இது" "அதை விட எல்லாம் விட கொடுமை முலைப்பால் தந்து வளர்த்த இந்த பிள்ளையை நான் பெறவேயில்லை என்ற உண்மை தெரியாமலே எத்தனை காலம் வாழ்ந்த ுவிட்டேனே!" இதெற்கெல்லாம் எத்தனை தவம் செய்து இருக்க வேண்டும்.
"இந்த பதினெட்டாண்டுகளில் உன்னால் நான் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமா?" " கோவிந்தா! கோபாலா! ஒரு நாள் நீ மண் தின்றாய், உலகாளும் பரம்பெருள் நீ என்றறியாத என் பேதைமையால் நீ மண்ணுண்டதைப் பார்த்து பதறினேன். வாயை திறக்க சொன்னால் அண்ட சாரசாரம் காட்டி என்னை மேலும் பித்தாக்கினாய். உன் குறும்பை தாங்காது உரலில் கட்ட நினைத்தேன் பரப்பிரும்மம் உன்னைக்கட்ட என்னால் முடியுமா உன்னை கட்ட இயலாது நான் பட்டப்பாட்டை நீ கிண்டலாக பார்த்து சிரித்து ரசித்தாய். சிறு வயதில் உன்னை கொல்ல எத்தனை எத்தனை சதிகள்? ஒவ்வொரு நாளும் உன்னை காக்க நான் பட்டபாடு எத்தனை என்பதை மறந்துவிட்டாயா தேவகி நந்தனா?" "பரந்தாமன் உன்னை காத்துக்கொள்ள உனக்கு தெரியும் என்று இந்த பேதைக்கு தெரியவில்லையே புருசோத்தமா?"
"அது மட்டுமா? உன் குறும்புகளால் எத்தனை அவபெயர் எங்களுக்கு. நம் வீட்டில் வெண்ணை புரண்டோடும்; ஆனால் நீயோ அடுத்தவர் வீட்டில் வெண்ணை திருடி உண்டதாக தினம் ஒரு குற்றச்சாட்டும், வழக்கும்." "நீ பருவம் அடைந்ததும் உன் லீலைகள் காரணமாக எத்தனை பெண்களை கண்ணீர் சிந்த வைத்தாய்? அத்தனை பெண்களில் பாவத்தை நாங்கள் அன்றோ சுமந்தோம்?"
"நீ சிறு வயதில் பெற்ற சாபத்தின் காரணமாக யாதவர் குலமே அழிய காரணமானாயே!" "உன்னை வளர்த்து நானும் அந்த பாவ செயலில் பங்கெடுத்துவிட்டேனே, பார்த்தீபா! என்னை நம் மக்கள் குலநாசம் செய்த கொடும்பாவி என்றல்லவா நினைப்பார்கள். இதற்கெல்லாம் என்ன தவம் செய்தேன் அய்யா நான்?"
"கண்ணுக்குள் வைத்து காத்து அரும்பாடு பட்டு உன்னை வளர்த்து எத்தனையோ துயர்களுக்கு இடையே உன் புன்சிரிப்பை கண்டு மனம் மகிழ்ந்து வாழ்ந்து வந்த நாங்கள் ஒரு நொடியில் நீ என் சொந்த மகனில்லை என்று தெரிந்ததும் எப்படி மனம் உடைந்து கலங்கிப்போனோம் என்று யோசித்தாயா? " "ஒருவனுக்கு எந்த உறவு வேண்டுமாயினும் ஒன்றுக்கு மேல் இருக்கலாம் ஆனால் ஒரு பிள்ளைக்கு இரண்டு அம்மை அப்பன் இருக்க முடியுமா?" "உலகில் எதை வேண்டும் என்றாலும் பங்கு போடலாம். ஆனால் பெற்ற பாசத்தை நீ பங்கு போட வைத்து விட்டாயே?" "மாயவனே! தூயவனே!" "இப்போது சொல்லடா, எங்கும் நிறைந்த பரப்பிரும்மம் நீ என்னை அம்மா என்று அழைக்கலாம் ஆனால் உன்னை பெற்றவள் தேவகியல்லவா? உனக்காக ஏழு குழந்தைகளை அநியாயமாக தொலைத்தவள். அவளன்றோ ஞானி. அவளன்றோ பெருந்தவம் செய்தவள்." நான் என்ன தவம் செய்துவிட்டேன்?