Thursday, June 24, 2004

சிறைவாழ்வு

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்...
--நன்றி வைரமுத்து.
இந்த உலக வாழ்வே ஒரு சிறை வாழ்வு தான். சிலருக்கு சிறை சற்று பெரியதாக இருக்கும். வீடு, அலுவலகம், உறவுகள், நண்பர்கள் என்று விரியும் அவர்கள் உலகம். ஒரு சிலருக்கு பிறக்க ஒரு நாடு வசிக்க ஒரு நாடென்று அமைந்து விடுகிறது. சிலருக்கு குறிப்பாக சில பெண்களுக்கு வீடு ஒரு சிறையாகும். அதை விட்டு விடுபடுவது அவள் இறப்பே ஆகும். மீன் தொட்டியை கண்டிருக்கிறீர்களா? அதில் நீந்தும் மீன்கள் மிக அழகாக இருக்கும். அவை எல்லாம் மிக சந்தோசமாக இருப்பதுப் போல நமக்குத் தோன்றும். சில சமயம் மெதுவாக நீந்தும், சில சமயம் மின்னல் வேகத்தில் மேலிருந்து கீழாக குதிக்கும். நாம் தருவதை உண்ணும். ஒரு சில கொடுத்து வைத்த மீன்கள் சற்று பெரிய தொட்டியில் ஒரு சில உறவுகளோடு காலம் கழிக்கும். ஒரு சில தொட்டிகள் பானை போன்ற வடிவில் சிறியதாக இருக்கும். கடலில் நீந்த தெரிந்தாலும்கூட அந்த அளவான இடத்தில் தான் மீன்கள் உலவ வேண்டும். அதன் வாழ்வு அந்த தொட்டிக்குள் மட்டுமே. மீன் தொட்டி மீன்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் யாவரும் பல காலமாக சிறை வாழ்வே வாழ்கின்றோம். கீழ் வரும் சங்க கவிதையை பாருங்கள்.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
உரை
---------
தாழி செய்பவனே! தாழி செய்பவனே! தருமம் நிறைந்த பழைய ஊரின் தாழி செய்பவனே! அச்சில் சுழலும் வண்டிச் சக்கரத்தில் ஒட்டியிருக்கும் சிறிய வெளிறிய பல்லிபோல இவனுடன் பலவிதமான பாதைகள் தாண்டிவந்த என்னிடமும் கனிவுகாட்டுவாயாக. மலர் நிரப்பி மண்ணில் இறக்கப்படும் உறுதியான பெரிய தாழியை இன்னும் பெரிதாக வனைவாயாக.
--நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"
இந்த கவிதை இறுக்கமான உணர்வு பொருந்தியது.இந்த வரிகளின் வலி உணர பெறுங்கள். எவ்வளவு ஆழமான துயரத்தை வெளியிட்டிருக்கிறாள் அந்த பெண்கவி. என்ன பொருத்தமான ஒரு உதாரணம் பாருங்கள், ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லியானது வண்டி செல்லும் இடம் எல்லாம் செல்லும் ஆனால் அதன் வாழ்வு இருக்கும் அதே இடத்தில் மட்டுமே. இப்படி தானே இருக்கின்றது சில பெண்களின் வாழ்வு இன்றும் கூட. மேலும் சொல்கிறாள் அவள் மலர் நிரப்பிய தாழி வனைக, எவ்வளவு ரசனை மிக்கவளாக இருந்திருப்பாள் ஒரு வேளை இனி அவளை கட்டுபடுத்தி சிறை அடைக்க ஆள் இருக்க போவதில்லை என்ற ஆனந்தமா அது? இன்னும் உறுதியான தாழியை சற்று பெரியதாக வனைக... இவ்வளவு இறுக்கமான வாழ்வு அவள் வாழ்திருந்தாள் இறக்கும் போதாவது சற்று விசாலமான இடத்தில் இறக்க வேண்டும் என்று எண்ணி இருப்பாள்.உடன்கட்டை ஏறுவதினும் கொடும் கொடுமை இதல்லாவா?
இப்போது இதற்கு இணையான இன்னும் ஒரு சூழலைப் பார்ப்போம். "புனரபி மரணம் புனரபி ஜனனம்" என்ற ஆதி சங்கரர் பாடல் கேட்டிருக்கின்றீர்களா? கருவிலுள்ள குழந்தைக்கு பிறக்கும் வரை புனர் ஜென்ம சிந்தனை எல்லாம் இருக்குமாம். அப்போது பட்ட அத்துணை துன்பங்களும் நினைவிலிருக்குமாம். அது கடவுளிடம் இந்தப் பிறவி வேண்டாம் என்று இறைந்துக் கேட்குமாம். அதையே வேறு விதமாக நாம் யோசித்தால் அக்குழந்தை இந்த புவிக்கு வரும் முன் "கடவுளே நான் ஒரு மீள முடியாத சிறைக்கு செல்ல இருக்கிறேன், எனக்கு ஒரு நல்ல வீடு, நிறைய சொந்தங்கள், சொத்து எல்லாம் தா, குறைந்த பட்சம் உன்னை அடையும் வரை புவி சிறையை முடிந்த அளவு சுற்றி வருகின்றேன் என்று கேட்பது போல கொள்ளலாம். இக்குழந்தை பிறக்கும் வரை தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும் ஆனால் அது வாழும் இடமோ தாயின் கருவறையே.
அடுத்த சூழலை வேறு விதமாக மேலே கூறிவிட்டேன். அதுவும் ஒரு பிறப்பு போல தான். திருமணம் முடிவாகி இருக்கும் ஒரு பெண் மனநிலை கூட ஒரு கருவில் உள்ள குழந்தைக்கு ஒப்பிடலாம். தன் கணவன் மற்றும் கணவனை சார்ந்த சொந்தங்களை பற்றிய பயம் கலந்த ஒரு சிந்தனை இருக்கும். அந்த குடும்ப சூழல் பழக்க வழக்கம் எல்லாம் பற்றிய கலக்கம் இருக்கும். ஒரு புது உலகை பற்றிய கனவிருக்கும், ஆனால் அவள் இருக்கும் இடம் தாயின் வீடாக இருக்கும். சிந்தனை அவளை சுற்றியடிக்கும்.
இதை திருமணம் முடிந்த ஒரு பெண் வாழ்வோடும் ஒப்பிடலாம். இருக்கும் இடம் கணவன் வீடாக இருந்தாலும் சிந்தனை மட்டும் ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லி போல தாய் வீட்டையே சுற்றி சுற்றி வரும். தாய் வீட்டில் அதிகாலை சூரியன் அவளை இப்போதும் விழிக்க வைக்கும். தாயோடு இட்ட செல்ல சண்டைகள் இன்று கூட சிணுங்க செய்யும். அப்பல்லி படும்பாட்டை பாருங்கள். தாய் வீட்டு திண்ணையோடு உலவும் தென்றல் எப்போதும் அவளை தாலாட்டும். வீட்டு தோட்டத்தில் உள்ள மல்லிகை செடிகளுக்கும் நினைவால் நீர் வார்க்கப்படும். அங்கே வந்து போகும் பட்டாம்பூச்சிகளின் நலம் விசாரிக்கும் அவள் மனம். மாடிப்படிகளில் அமர்ந்து ரசித்த அடுத்த வீட்டு அவரைக்கொடியின் பூங்கொத்து அவள் எண்ணங்களில் சிறகடிக்கும். மொட்டை மாடியில் பார்த்து கிறங்கிய சாயுங்கால கீழ்வான சிவப்பும் சின்ன புன்னகை பூக்க செய்யும். அவள் படுக்கை அறை ஜன்னல் வழி பார்த்த தென்னங்கீற்றிடை நிலவொளி உள்ளத்தை மயக்கும். எப்போதும் தாய் இடும் மருதாணி இப்போதும் சிவந்திருப்பது போல தோன்றும். சிறு வயதில் பிறந்த நாளுக்கு தலையில் தைத்து கொண்ட மல்லிகை பூக்களை கண்கள் தேடித் தொலைக்கும். பட்டியலிட்டது அவள் நினைவுகளின் ஒரு சிறு பகுதி தான். சொல்லாதவதை ஒரு கோடி இருக்கலாம்.


வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

நல்லதோர் வீணை செய்து

நல்லதோர் வீணை செய்து - அதை
நலங்கெட புழுதியில் ஏறிவதொண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
இப்பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது. எதை நினைத்து பாரதி இந்த பாடலை பாடி இருப்பான்? தன் வறுமையையா? செல்லம்மா தனக்கு கவிதைகள் மீதுள்ள காதலை புரிந்து கொள்ளாமல் கோபிக்கிறாளே என்றெண்ணியா? இவ்வளவு ஆற்றல் மிக்க அனல் பறக்கும் கவிதைகளுக்கு அவர் நினைத்த அளவு ஆக்கபூர்வமான பின் விளைவுகள் இல்லை என்ற வேதனையா? எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கே.பாலசந்தர் "வறுமையின் நிறம் சிவப்பு" என்ற தன் படத்தில் இந்தப் பாடலை மிக அழகாக பயன்படுத்தி இருந்தார். நன்கு படித்த இளைஞன் அவன் படிப்பிற்கு தக்க வேலை கிடைக்காமல் அவதியுறுவதை இப்பாடல் அழகாக வெளிப்படுத்தும்.

இந்தப் பாடலை ஒப்பிட்டுப் தக்க ஒரு சில சிந்தனைகள் இதோ.

அவள் ஒரு அழகோவியம். காண்போர் யாவரையும் ஒரு கணமேனும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகுக் தேவதை. யாருடனும் சட்டென பழகி விடுவாள். எவரையும் தன் பேச்சால் கவர்ந்திழுப்பாள், மகிழ்ச்சி அடைய செய்வாள். அவளிருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லொருக்கும் உதவுவாள். மிக அன்பானவள். குழந்தை போல் உள்ளம் கொண்டவள்.நன்கு படித்தவள். கற்பூர புத்தி கொண்டவள். கொடுத்த எந்த வேலையையும் இதை விட சிறப்பாக செய்ய யாராலும் செய்ய இயலாது என்னும் வண்ணம் செய்வாள். அதிலும் எதை செய்தாலும் மிக ரசனையோடு செய்வாள். மார்கழியில் தெருவடைத்து அவள் இடும் கோலம் அதற்கு அவள் தரும் வண்ணம, ஆஹா அற்புதம். எல்லோரும் தான் வண்ணக்கோலங்கள் வரைகிறார்கள். ஆனால் அவள் வரையும் போது மட்டும் ஏன் அது உயிர்பெற்று எழுகிறது என்று தோன்றும். ஒரு நாள் மயில் தோகை விரித்து ஆடும், ஒரு நாள் குயில் கூவும், பிறிதொரு நாள் வண்ண உடைகளில் அழகு பெண்கள் நடனமாடுவர், ஒரு நாள் சிறார்கள் விளையாடுவர். ஒரு நாள் அழகான பூ பூக்கும். அவள் பாடினால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. அவள் மலர் தொடுக்கும் அழகிற்கே கண்ணன் கூட அவள்மீது காதல் கொள்வான். அவளது சமையல் எட்டு ஊருக்கும் மணக்கும். அவள் எழுதும் கவிதைகளில் கவிரசம் பொங்கும்.. காவியங்களைப்பற்றி அவள் பேசும்போது அக்காவியமே நம் கண்முன் நடப்பது போல தோன்றும். சுருக்கமாக சொன்னால் அவள் பெண்மையின் இலக்கணம். அந்த நல்லதோர் வீணைக்கு கிடைத்தது ஒரு புழுதி போன்ற கணவன். அவனுக்கு ரசனை என்ற ஒரு வார்த்தை தமிழில் இருக்கின்றது என்றே தெரியாது. அவனுக்கு அவன் அலுவலகம், பின் வீடு, சாப்பாடு, தூக்கம். எல்லாமே ஒரு இயந்திரம் போல, மென்பொருள் இட்ட கணிபொறி போல. இத்துணை குணவதி அவளை பற்றி யாவரும் பெருமை பேசி என்ன பயன்? இதை பார்த்து தான் பாடி இருப்பானோ பாரதி?
அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவன். அவன் படித்தது ஒரு சாதாரண கல்லூரி. ஆனால் அவனுடம் பணி புரியும் அனைவருமே மிக பெரிய பெயர் போன கல்லூரிகளில் படித்தவர்கள். ஆனால் அவர்களின் அறிவிற்கு ஒரு படி மேலானதே அவன் அறிவாகும். அவன் அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொத்த திறமையையும் கொண்டவன் எனக்கொள்ளலாம். திட்டமிடுதல், கட்டமைத்தல், மென்பொருள் எழுதுதல், அதை திருத்தி தரமிடல் இப்படி மென்பொருள் வாழ்வு சுழற்சியின் எந்த பகுதியிலும் அவன் செயல் தரமாக இருக்கும். எவருமே குறை சொல்ல முடியாது. குழுவில் உள்ள மற்ற சக பணியாளர்கள் இவன் திறன் கண்டு மிரண்டு போவார்கள். ஆனாலும் அவன் படித்தது அவ்வளவு உயர்ந்த கல்லூரி அல்லாததால் அதை வைத்து அரசியல் நடத்துவர் குழு மேலாளரும் சக பணியாளர்களும். அவனிடம் நல்ல திறன் காட்ட கூடிய பணியே தரபடாது. வேறு ஒருவருக்கு அது தரப்படும். ஆயினும் வேலை இவனிடம் வாங்கபடும். அதில் வரும் பயன் வேறு ஒருவனுக்கு போய் சேரும். அவ்வளவு நல்லறிவு இருந்தும் என்ன பயன் அது ஒடுக்க படுகின்றதே இங்கே. ஒருவேளை இது போன்ற ஒரு சுழலை தான் பாரது பாடி இருப்பானோ?
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?" வற்றாத ஜீவ நதிகள், காடுகள். மலைகள், விளைநிலங்கள். பூமி நிறைய கனிமங்கள். தாது பொருட்கள். உப்பு, தங்கம், வைரம் , நிலகரி, கச்சா எண்ணைய் படிமங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் இந்த மண்ணில். எத்தனையோ போரட்ட வீரர்கள் இத்தனையும் இந்த மண்ணில். இருந்தும் இந்திய தாய் அடிமைப் பட்டு கிடக்கிறாள். அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சுடர் மிக்க அறிவோடு என்னை படைத்துவிட்டாய். ஆயினும் என் செய்ய அடிமைதளை உடைக்க முடியவில்லையே இப்படி தான் பாரதி யோசித்து இந்த பாடலை பாடி இருக்க வேண்டும்.
இன்று நாமும் நினைப்போம் இவ்வளவு வளங்கள் இருந்தாலும், எத்தனையோ அறி்வாளிகள் விஞ்ஞானிகள் இருந்தாலும், இந்திய மூளையை நம்பி பல பன்னாட்டு நிறுவனங்கள்.இருந்தாலும் இந்திய தாய் அவள் சுயநலம் மிக்க ஆட்சியாளர்களாலும், பொறுப்பற்ற குடிமக்களின் கைகளிலும் மாட்டிக்கொண்டிருக்கிறாளே என்று.

"நல்லதோர் வீணை செய்து அதை
நலங்கெட புழுதியில் ஏறிவதொண்டோ"


வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

படித்ததில் பிடித்தது : மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது‘

ஆட்களற்ற நீண்ட மலைப்பாதையில் தனிமையில், சூழலின் ரம்மியத்தோடு, பிடித்த பாடலைக் கேட்டு இரசித்தபடியிருக்கும் நிலையை சில புத்தகங்களின் வாசிப்பனுபவம் நமக்கு தருகிறது. நான் வாசித்தவற்றில் இப்படியான அனுபவத்தை எனக்களித்த சில புத்தகங்களைப் பற்றிய பகிர்தலே இப்பதிவு.

---

எத்தனை முறை வாசித்தாலும், ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது அனுபவங்களை தருகின்ற கவிதைகளை எழுதியிருக்கும் என் மானசீக குரு மனுஷ்யபுத்திரனின் நீராலானது தொகுப்பை சமீபத்தில் மீண்டும் வாசித்தேன். அதில் நான் ரசித்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது‘ தொகுப்பு, உன்னோடிருத்தல் தன்னோடிருத்தல் மற்றும் பிறரோடு இருத்தல் என்று மூன்று பிரிவுகளாக கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலற்ற மிக எளிமையான மொழி மனுஷ்ய புத்திரனுடையது. ஆனால் அவை அழைத்து செல்லும் தூரம் மிக அதிகம்.

உன்னோடிருத்தல் பகுதியின் கவிதைகளில் பிரியம் நிரம்பி வழிகிறது. பல கவிதைகளில் எந்த எதிர்ப்பார்ப்புமற்ற நேசம், ஈரம் தென்றலாக பகுதி முழுவதும் வீசிக்கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு கவிதையிலும் சில வரிகள் குறிப்பிட்டு சொல்லும் வண்ணிமிருக்கின்றன.


"இன்றிலிருந்து உனது
எல்லா பரிசுகளையும்"


இங்கே பரிசுகள் என்பது ஒரு உணர்வு அல்லது அனுபவம் என்றே கொள்ள வேண்டும்.
அந்த பரிசுகளை தரையில் விட்டு விடுவதாகவும் அவை ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல

தம் திசைகளை
தாமே அறியட்டுமென்று


அவ்வுணர்வுகளுக்கு உணர்வின் வயப்படாமல் இருப்பதையோ அல்லது அவை தன்வசம் தன் கட்டுபாட்டில் இல்லை என்பதையோ குறிக்கின்றது.

பற்றிக் கொள்ள
ஒரு பிடி நிலமில்லை
தனது ஈரத்தைத் தவிர
அதற்கு ஒன்றுமேயில்லை


இங்கே ஒரு இயலாமையையும், எதிர்ப்பார்ப்பற்ற பிரியத்தையும் ஒரு சேர பார்க்கலாம்.

தவித்து அருந்திய
தண்ணீரில் ஒரு திவலை சிந்தியதில்லை

வந்ததற்கும் போனதற்கும் நடுவே
எதுவும் இடம் மாறியிக்கவில்லை


என்னால் பாதிப்பு உனக்கோ உன்னாலான பாதிப்பு எனக்கோ என்றுமில்லை நம்மிடம் மிஞ்சுவது எல்லாமே நம் நினைவுகள் மட்டுமே என்று குறிக்கும் வரிகள். அழகு வரிகள்.

உன் தாவரங்களின் மேல்
உன் நிழல் விழாத போது
சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு
தாம் அளித்த நிழல்களைத்
திரும்ப எடுத்துக் கொள்கின்றன.


பிரியம் மேலும் பிரியத்தை வளர்க்கும் பிரியமின்மை மேலும் பிரியமின்மையை தொடரும் என்பதை இதை விட அழகாய் உணர்த்த இயலுமா என்ன?

குகை மூடிய பாறை
ஒரே ஒரு கணம் திறந்து
சாத்திக் கொண்டது.


குகை மூடிய பாறை என்பதிங்கே நமக்குள் தங்கிய இருக்கும் இறுக்கம். கண நேரம் திறந்து மூடுகையில் பிரியம் ஒரு நம்பிக்கை நுழைய போதுமானது. பிரியத்தின் பட்டியலை சொல்லிய கவிதை நம்பிக்கையை


குகையின் தீராத இருளுக்கு
பயப்படவுமில்லை


என்ற வரிகளில் சொல்லி இருக்கின்றார்.

எனது கட்டுமானங்களின்
விரிசல்களில் நீர் கசிந்துகொண்டிருக்கிறதுஒரு காயத்தை இவ்வளவு அழகாக வெளிப்படுத்த இயலுமா?

விடை கொடுக்கும் போது
உன் அசையும் கைகள் உறுதியிழப்பதேயில்லை


பிரியம் பிரிவின் வலி இயலாமை இந்த வரிகள் சொல்லாத உணர்வுகள் தாம் ஏதும் உண்டோ?


ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி


ஒரு செடியின் வெளியுலக தொடர்ப்பிர்கான குறியீட்டை குறிப்பிட்டு என் சிந்தனையின் எல்லா துகள்களும் கொள்ளும் கடுந்துயரை இப்படி தானே சொல்ல இயலும்.

உன் எடையற்ற குரலின்
எடையற்ற துயரங்கள்


என்ன ஒரு சொல் ஆளுமை... குரலுக்கும் எடையில்லை, துயரக்கும் எடையில்லை ஆனால் துயர் கொண்ட மனம் மட்டும் கனத்திருப்பது விந்தையா, வியப்பா என்ன ஒரு சிந்தனை இந்த வரிகளில்.


எளிய பிரியத்தின் கண்ணீர்
முதலில் ஒரு மணல் துகளாகிறது.


எந்த பிரியமும் கண்ணீர் வரவலைக்குமெனில் அது பெரிய உறுத்தலாகத் தான் இருக்க இயலும். அதற்கு மணல் துகள் என்று உறுத்தலின் படிமம் சொல்லி இருப்பது அழகு. மிக பொருத்தம்.

நீயும் கொண்டுவராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.


பிரியத்தின் நீட்சியை, அது அந்த அனுசரனையை, அன்பை நேசத்தை இன்னும் சிலதை சொல்லி தீர்க்கின்றன இந்த வரிகள். என்ன ஆழமான வரிகள் அதே போல் இன்னும் சில வரிகள்

இல்லாதபோதும்
இருந்துகொண்டிருக்கும்
உன் நிழல் படர்ந்த முற்றங்களுக்கு

மேசைகள் திரும்பத் திரும்ப
துடைக்கப்படுகின்றன
அப்புறமும் நீ
அவற்றின்மீது படிந்துகொண்டேயிருக்கிறாய்


உணர்வுகளை இவ்வளவு படிய எளிமையாக சொல்லி இருப்பது அருமை.

சொல்லப்படாதவை
சொல்லப்படாதவையே

உன்னைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன
அழித்து முடியாத சுவடுகள்


பிரிவின் வலியை பின்வரும் வரிகளை விட நுணுக்கமாக உணர்த்த இயலுமா


இன்று
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்

ஒரு குருவி
திடீரென பறந்தபோது
காற்றில் ஒரு விரிசலைக் கேட்டேன்


சேர்ந்திருக்கவியலாத பிரியத்தின் ஏக்கமாக பின் வரும் வரிகளில்

ஏதோ ஒரு கனவின் விழிப்பில்
தோன்றிவிடுகிறது
உன்னோடிருப்பது
உன்னோடிருப்பது போல்
இல்லாமல்

நெருங்கவியலாதென விதிக்கப்பட்ட மலர்களை
முடிவில்லாமல் நெருங்கியபடி