Monday, April 25, 2022

கசகசா பழம் உண்ணும் பறவைகளைத் தேடி

பெங்களூர் மைத்திரி லே அவுட் உள்ளே வீடு தேடிப் பிடித்ததற்கு முக்கியமான  காரணம் லே அவுட் முழுக்க நிறைய மரங்களும், அவை பூக்கும் விதவிதமான மலர்களும் ஆகும். போக்குவரத்து நெரிசலில் மூச்சுத் திணறும் நாட்களிலும் லே அவுட் நுழைவாயிலில் நுழைந்த உடனேயே மிகப்பெரிய ஆசுவாசம் கிடைக்கும். சில நூறு தனிமனைகளில் பல நூறு வீடுகளைக் கட்டி பெங்களூர் நெருக்கடியை இந்த லே அவுட் உள்ளேயே கொண்டு வர, லே அவுட் குடிமக்கள் எவ்வளவோ முயன்றாலும் சில நூறு மரங்களாவது இன்னும் இதனுள் எஞ்சியிருப்பது நிம்மதியளிக்கும் விஷயம்.


சில வருடங்களுக்கு முன்பு, நானும் எனது நண்பர் நந்தாகுமாரனும் யஷஸ்வினி என்ற எங்கள் தோழிக்கு அவரது சித்தாப்பாவின் கவிதைகளைப் புரிந்துகொள்ள உதவி செய்தோம். எங்கள் தோழி யஷஸ்வினி கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவர் ஆவணப் படங்களை எடுக்கும் இலக்கிய ஆளுமை. பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். பல தளங்களில் விரிவும் ஆழுமும் கொண்ட அவரது அறிவும், எந்த ஒரு விஷயத்தையும் அதன் அடி ஆழம் வரை சென்று தேடும் பிடிவாதமான உறுதியும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் என்னை பரவசப்படுத்தும்.  பெண் ஆளுமை ஒருத்தி எவ்வாறு இருக்க வேண்டுமென்று நான் கனவு கண்டேனோ அவ்வாறு இருக்கும் பெண். 


யஷஸ்வினியின் சித்தப்பா தமிழ் கவிஞர். சில சிறப்பான கவிதைகளைத் தமிழுக்கு வழங்கியவர். யஷஸ்வினி பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதன் பொருட்டு  பெங்களூர் நகரவாசிகள் இழந்த விஷயங்கள் மீது தீராத கோபம் கொண்டு அதை "கோஸ்ட்" என்ற ஆவணப்படத்தின் வழியாக வெளிப்படுத்திருத்தியிருந்தார். பெங்களூரை வேறுப்பட்ட கோணத்தில் படமெடுத்திருந்தார். பெங்களூரின் பரிமாணம் அந்த ஆவணத் திரைப்படத்தின் வழியாக சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அவரது உறவினர் "நீ ஏன் நம்ம ... பற்றி ஒரு ஆவணப் படமெடுக்கக் கூடாது?" என்ற கேட்டது யஷஸ்வினி மனதில் ஆழமான தேடல் ஒன்றை உருவாக்கியது. தமிழில் கவிதைகளை எழுதிய தன் சித்தப்பாவைப் பற்றி ஏதேனும் பதிவு செய்ய வேண்டுமென்றால் அவரையும் அவர் படைப்புகளையும் முழுதாக அறிய வேண்டுமென்று நினைத்தார். யஷஸ்வினி தனது ஒவ்வொரு திரையாக்கத்துக்கும் கொடுக்கும் உழைப்பு அபரீதமானது. அவர் எப்போதுமே எங்கள் வியப்புக்குரியவர்.


யஷஸ்வினிக்கு தமிழ் தெரியாது. (ஆனால் இந்த பதிவை நான் தட்டச்சிக் கொண்டிருக்கும் 2022 ஏப்ரல் 25 ஆம் தேதி அவருக்கு சில தமிழ் வார்த்தைகளைத் தட்டச்சும் அளவுக்குத் தமிழ் தெரியும்.) அதனால் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளைப் பற்றி முழுமையாக அறியும் முயற்சியில் தேடித் தேடி என்னையும் என் வழி நந்தாவையும் கண்டடைந்தார். நந்தா யஷஸ்வினியின் சித்தப்பா எழுதிய தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். யஷஸ்வினியின் அப்பாவும் யஷஸ்வினிக்காக அதே கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளையும் மூலத் தமிழ்க்கவிதையையும் நாங்கள் கூடி விவாதித்து வந்தோம். சில சமயம் என் வீட்டிலும், சில முறை நந்தாவின் வீட்டிலும், பல முறை யஷஸ்வினியின் ஸ்டியோவிலும் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேல் இந்த பணியில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த உரையாடல்கள் எனக்குப் பல அனுபவங்களையும் பல புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது. பெரும்பாலும் இந்த உரையாடல்கள் அரை நாளிலிருந்து சில சமயம் முழுநாள் வரை தொடர்ந்தது உண்டு.


அப்படி யஷஸ்வினியும், நந்தாவும் எங்கள் வீட்டுக்கு வரும் போது உரையாட வரும்போது, இரண்டு மணி நேரம் உரையாடல் நடக்கும். பின்னர் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டு எங்கள் லே அவுட்டில் சிறு நடைப்பயணம் மேற்கொள்வோம். இது போன்ற இடைவெளியை நாங்கள் நந்தா வீட்டிலோ, யஷஸ்வினி வீட்டிலோ எடுத்துக் கொண்ட நினைவில்லை. பெரும்பாலும் என் வீட்டுக்கு வரும் போது அதைச் செய்திருக்கிறோம். காரணம் நந்தா, யஷஸ்வினி இருவருக்குமே எங்கள் வீடு அமைந்திருக்கும் அந்த பசுங்சூழல் பிடித்தது காரணமாக இருக்கலாம். அப்படி நடைபயணம் செய்யும் போது அங்கிருக்கும் மரங்கள், பறவைகள், இன்னும் பலபலவற்றைப் பற்றி யஷஸ்வினி சொல்லிக் கொண்டே வருவார். நந்தாவும் ஏதாவது அதற்கு இணையாகச் சொல்வார். நான் இருவரையும் வாய்பிளந்து பார்த்துக் கொண்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டும் வருவேன். 



எங்கள் லே அவுட்டில் கசகசா பழமரங்கள் அதிகமுண்டு. மிக அடர்த்தியாக வளரும் கசகசா பழ மரத்தில் மிகச்சிறிய அளவில் சிவந்த பழங்கள் காய்த்திருக்கும். சிங்கபூர் செர்ரி பழங்கள் என்றும் இதைச் சொல்கின்றார்கள். பவள தொங்கட்டான் போல இருக்கும் அந்த பழங்கள் மிக இனிப்பாக இருக்கும். கசகசா மரம் பூக்கும் தருணம் இன்னும் அழகானது. பச்சை வானத்தில் வெள்ளை நட்சத்திரங்களைப் பொதித்தது போல மலர்கள் அடர்ந்து பூக்கும். 

நாங்கள் நடக்கும் போது கசகசா மரம் தெரிந்தால் உடனடியாக அதனருகில் சென்று அதிலிருக்கும் பழங்களைப் பறித்து எனக்குக் கொடுத்துவிட்டு தானும் உண்பார் யஷஸ்வினி. அப்போதெல்லாம் கிளைக்கு எங்கோ ஒன்றோ இரண்டோ காணக் கிடைக்கும் பழமாய் அந்த கசகசா பழமிருந்தது. நந்தா "அது சிறு பறவைகளின் உணவு. நாம் அவற்றைச் சாப்பிட்டால் அவை என்ன செய்யும் பாவம்" என்பார். "அதற்கு ஏகப்பட்ட மரம் இருக்கும், பிற பழங்களுமிருக்கும்" என்று சொல்லி யஷஸ்வினி மறுபடி பழத்தைப் பறித்து உண்பார் என்னிடமும் கொடுப்பார். அவருக்கு அந்த பழங்கள் மிகப்பிடிக்கும் என்றும் சொல்வார். எனக்கும் பிடிக்கும். ஆனால் நந்தா "பறவைகளுக்கானது" என்று சொல்வதை நினைத்துக் கொஞ்சம் குற்றவுணர்வோடு அதை உண்பேன்.


இப்போதும் கசகசா மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் உரையாடல் நினைவுக்கு வரும். இன்று வெளியில் காய்கறி வாங்கி வர போன போது பல கசகசா மரங்கள் அதன் கிளைகள் முழுவதும் தன் பவள பழங்களைத் தொங்க விட்டிருந்தது. ஒவ்வொரு கிளையிலும் அவ்வளவு பழங்கள். கைநிறைய கசகசா பழங்களைக் கொண்டு வந்தேன். 
கூடவே பழைய நினைவுகளையும். நந்தா நீங்கள் சொன்னது போல அவை சிறு பறவைகளுக்கானவை. ஆனால் பெங்களூரில் பறவைகள் எல்லாமே தொற்று காலத்து மனிதர்கள் போல நகர் நீங்கி எங்கோ போய்விட்டன என்று நினைக்கிறேன். கசகசா மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களும், அதன் நிழலில் உதிர்ந்து கிடக்கும் பழங்களும் பறவைகள் வரவுக்காக ஏங்கிக் கிடக்கின்றன. பறவைகள் ஒலியே எங்கள் முழு நிலப்பரப்பில் கேட்கவில்லை. எனக்குப் பிடித்த இந்த கசகசா பழங்களை நான் உண்ணாமல் இருக்க விழைகிறேன். பெங்களூருக்குப் பறவைகளை வரச்சொல்லுங்களேன். 


இனி நந்தா, லாவண்யா, யஷஸ்வினி சந்திப்பு எப்படி ஒரு வசந்தகாலத்தில் நடந்த நினைவு நாடகமாக இருக்குமோ போலவே கசகசா மரத்தில் கனி காய்க்கக் காய்க்க உண்டு செல்லும் பறவைகள் வாழும் நகரமாய் பெங்களூர் மாறுவதும் இனி கனவாகவே இருக்கும்.