புராணங்களில் என்னைக் கவர்ந்த இரண்டு பாத்திரங்கள் ராவணன் மற்றும் கர்ணன். பிறன்மனை நோக்காதவன் மட்டுமல்ல பிற பெண்டிர் தம்மிடத்தே இருப்பினும் அவர்தம் சம்மதமின்றி விரல் கூட படாமல் வைத்திருத்தல்தாம் உண்மையான பேராண்மை என்பது. ராவணனை பத்து தலை கொண்டவன் என்ற ஒரே காரணத்திற்காக அரக்கன் என்பது எனக்கும் எப்போதும் ஏற்புடையது அல்ல. சீதையை அவன் கடத்தியதும் கூட தன் தங்கையை அரக்கி என்ற காரணத்தால் ஒரு தெய்வ நிலைக்கு அருகில் இருந்த ஒருவன் இயற்கையான அவள் விளைவை அழகாக மறுக்காமல் அவள் மூக்கினை அறுத்த ஒரே காரணத்திற்கே என்றே தோன்றும். சீதை மேல் காதல் என்பது ரசம் சேர்க்க பின்னர் புனையப்பட்டதாக இருக்கக் கூடும்.
வெகு நாட்களாக ஆவலோடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வெளிவந்த ‘ராவணன்‘ ராமாயணத்தை ஒட்டி எடுக்கப்பட்டது என்பது எல்லா தரப்பினராலும் வெளிப்படையாக பேசப்பட்டதுதான்.ஆயினும் இந்த அட்டை காப்பியை சொதப்பி எடுப்பார் என்பது மணிரத்தினத்திடம் இருந்து நாம் எதிர்பார்க்காதது. என்னதான் நவீன கோப்பையில் வழங்கி இருந்தாலும் சீதையின் மேல் ராவணன் சுண்டு விரல் கூட படவில்லை படத்தில் (‘U‘ சான்றிதழ் படம் பார்க்கறதுன்னா சும்மாவா?) கொஞ்சம் நெருடல்களில் ஒன்று சூர்ப்பனகையை மூக்கறுக்கதற்கு பதில் கூட்டு சேர்ந்து கற்பழித்திருக்கின்றார்கள்.
‘ஏன் மணி சார், ஒரு பெண்ணை விசாரிக்க கூட்டுட்டு போனா, அவங்களை காவல்நிலையத்தில் இரவு தங்க வைக்க கூடாது, அப்படியே இருந்தாலும் பெண் காவலர் கூடவே இருக்க வேண்டும் என்பது கூடவா உங்களுக்கு தெரியாது?‘
அதென்ன காவல்துறையை சார்ந்தவர்கள் எல்லோருமே ஈவு இரக்கமற்றவர்களா...
சமாதானம் பேச வந்தவரைக்கூட சுட்டுக் கொல்வாங்களா என்ன? தன்னுடைய காதல் மனைவியானாலும் எதிரியை கொல்ல இல்லாததும் பொல்லாததும் சொல்வாங்களா என்ன? என்னவோ போங்க...
சுஹாசினி வசனம் பல இடத்தில் நன்றாக இருந்தது.
"ஏழு பொருத்தம் பார்த்தாங்க கைக்கால் வழவழப்பா இருக்கான்னு பாத்தாங்களா?"
"என்னை கோபத்தோடே வைத்திரு இவங்க பிரியம் என்னை பலவீனபடுத்தாமா பார்த்துக்கோ"
இது போல இன்னும் பல இடம். ஆனா சுஹாசினி "பொம்பளை பின்னால ஒளிஞ்சி தப்பிச்சிட்டானா" என்ற வசனடம் கேவலமாக இருந்தது. மிகவும் வருத்தபடவைத்த வசனமிது. பல இடத்தின் நீண்ட வசனம்... இதுவரை மணிரத்னம் படத்தில் இதுவரை இல்லாதது. சில இடத்தில் கொஞ்சம் சலிப்பா கூட இருந்தது. அடுத்த படத்தில் கவனம் செலுத்துவீங்கன்னு நினைக்கிறேன். உங்கள் படபட பேச்சை ஹாசினி பேசும் படத்தில் ரசிப்பதை போல இங்கே “பக்..பக்.. டாண்டன... டாண்டன... இந்த வசனங்களை ரசிக்க முடியவில்லை. படத்திற்கு கதை என்று யார் பெயரையும் போடாமல் விட்டு விட்டது ஒரு ஆறுதலான விஷயம்.
ரொம்பவே ஒட்டாமல் இருந்த விடயம் தேவ் (வாசுதேவ்??) கதாபத்திரமாக வந்த பிருத்விராஜ். மீசையில்லாமல் கிட்டத்தட்ட அரவாணி போல் தோன்றமளிக்கிறார். உயர் காவல் அதிகாரியாக மெனக்கெடும் மிடுக்கும் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அது சரி... ப்ரியாமணியின் கணவனாக வருபவனிடமும் ஏன் அந்த அளவு கொடூரமாக நடந்து கொள்ள வேண்டும். அவருக்கு தெரியாத அவனுக்கு அந்த கூட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று. சர்க்கரையை ஏன் கொல்லணும்? வெண்ணிலாவுக்கு நடந்த விசயம் தேவ் அவர்கள் கவனத்திற்கு வராமலா இருந்திருக்கும். பின் அதுக்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. படத்தில் கேட்கப்படும் “உங்க பொண்ணு என்றால் மரகதம்... எங்க பொண்ணுன்னா“ என்ற கேள்வி எனக்கு கேட்க தோன்றியது. இதுபோல படத்தில் நிறைய கேள்விகள் எழுகின்றது. கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதையமைப்பு, காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.
சில காட்சிகளை வசனமின்றி சொல்லி இருக்கலாம். உதாரணத்துக்கு, வெண்ணிலா தன் அண்ணிடம் தனக்கு நடந்ததை சொல்கிற இடம். ஆனா சில காட்சிகளை காட்சிபடுத்தி இருந்த விதம் அழகா இருந்தது. நிறைய இயற்கை எழில், மழை அந்த பெரிய விஷ்ணு சிலை இருக்குமிடத்தில் வரும் கவிதை போன்ற காட்சி இப்படி பல.
ஆனால் கடைசிவரை ராவணன் தன் ஆசையை சொல்லி கிட்டே இருக்கான், ராகினி தன்னுடைய கணவன் மேல் இருக்கும் காதலை விடாமல் இருக்கா. அவரை விட்டுங்க நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்லும் இடத்தில் கூட கணவன் மேல் காதல் கொண்டவளாகவே இருக்கா ராகினி.
சரி... இந்த கண்ணகி முன்னே “இப்படி இருக்கறவங்களை சுட்டுக் கொல்ல தானே உங்களுக்கு துப்பாக்கி கொடுத்திருக்காங்கன்“னு சொன்னவ “தேவ் தப்பாபில்லாம சுட்டு இருக்கமாட்டாரு“ என்று முரண்படும் அதே அவங்க தன்னை கொல்ல வரும் நேரத்தில் கூட “என்னை கொல்ல நீ யாருன்னு“ கேட்கும் புரட்சி பெண், தன்னை சந்தேகித்த கணவனுக்கு எதுவுமே சொல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி முடிக்கப்படிருக்கும் அவள் கதாபாத்திரம் இன்னும் என்னுள் பேசியபடி இருக்கிறது. இதைதானே மணிரத்னம் நீங்க எதிர்பார்த்தீங்க.
எதிர்மறை கதாநாயகர்கள் மிக நல்லவர்கள் என்று காட்சிப்படுத்தும் பல படங்களை நிஜக்கதைகளை கேட்டும் பார்த்தும் இருந்த காரணத்தால் ராவணன் மேல் இரக்கம் வந்தாலும் மணிரத்னம் மேல் பெரும் ஏமாற்றம் வந்ததே மிகவும் உண்மை.
பெட்டர் லக் நெஸ்ட் டைம் மணிரத்னம் & சுஹாசினி.