Saturday, March 8, 2014

மகளிர் தினம்
இன்று மகளிர் தினம். எனக்கு இந்த தினத்தை கொண்டாடுவதில் அத்தனை உடன்பாடில்லை. என்றாலும் ஊரோடு ஒட்டி வாழ் என்று இன்று எனக்கு வரும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறேன். வாழ்த்துகிறேன். நேற்று மகளிர் தினவிழாவில் அலுவலத்தில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த மகளிர் தின கருத்தாக்கத்தில் உடன்பாடில்லை.

நான் இப்படி சொல்வதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. எனக்கு பெண் என்ற தடை என்றைக்குமே இருந்ததில்லை. எதை செய்ய நினைக்கிறேனே அதை செய்ய என்னால் இயலும். இடைவிடா முயற்சி மட்டுமே இதற்கு துணை புரிந்ததே அன்றி, நான் பெண் என்ற அடையாளம் இல்லை.

எனக்கு என் பார்வைக்குள் நடக்கும் அநியாயங்களை பொருத்து கொள்ள இயலாது. நான் BSF Polytechnique, Batharpur Delhi யில் பணி புரிந்த காலம் அது ஒரு இருபாலினர் கல்லூரி. ஒரு முறை சில ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். நான் அப்போது தான் அங்கே பணி புரிய ஆரம்பித்திருந்தேன். என்னுடன் இருந்த ஆசிரியை "கண்டுக்காம வாங்க லாவண்யா, இவங்க எல்லாம் ரௌடிங்க, மேலும் பெரிய ஆபிசர்ஸ் மகன் நாம் பிரிஸ்பாலிடம் புகார் அளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே ஒரு பையன் கொத்தாக பிடித்து ஒரு அறை விட்டேன், ஒருவன் மட்டுமே சிக்கினான் மற்றவர் எல்லோரும் ஓடி போயினர். பின்னர் அது பெரும் பிரச்சனை ஆகி எல்லாம் சரியானாலும் அந்த நிறுவனத்தை விட்டு வரும் வரை அனைவரும் சிலேகிக்கும் புலான் தேவியானேன். 

என்னால் சில விசயங்களை சகித்து கொள்ளவோ பொருமையாக போகவோ இயலாது. உதாரணத்துக்கு வேண்டுமென்றே சாலை விதிகளை மீறி, போக்குவரத்து நெரிசல் உருவாகும் சில இடங்களில் அலுவலக கேப் ஆகட்டும், எங்கள் சொந்த வண்டியாகட்டும் தயங்காமல் இறங்கி போய் சமதானமோ சத்தமோ போட்டு ஓரளவுக்கு பிரச்சனையை சரி செய்ய பார்பேன், சில முறை அது பெரிதாகவும் போய்விடும். ஒரு முறை அவ்வாறு பிரச்சனை செய்த வண்டி ஹரியான மாநில அமைச்சருடையதாம், உள்ளே ஏகே47 வைத்துக் கொண்டு இருந்தார்கள். நன்றாக சண்டை போட்டுவிட்டு வண்டிய நகர்த்தி விட்டு, வந்து அமர்ந்த உடன், வண்டி ஓட்டும் பையன் சொன்னான் "என்ன அக்கா பயமில்லாமல் இப்படி போய் சண்டை போடுங்க, கையில் வைச்சி இருக்கறதுல பொட்டு போட்ட என்ன பண்ணுவீங்க" என்றான். கொஞ்சம் பயம் அப்போது தான் வந்தது. இருந்தாலும் நான் செய்தது என்ன தவறு என்று சொன்னேன். கூட பயணிக்கும் தோழர், தோழியர் "லாவண்யா இப்படி எல்லாம் செய்ய கூடாது. கொஞ்சம் பொருமையா இருக்கனும்" என்றார்கள். என் கணவரும் அதையே தான் சொல்வார். இருந்தாலும் நான் இப்படி இருப்பதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை.

மற்றுமொரு சம்பவத்தில் நாங்கள் குளித்தலையிலிருந்து சென்னை செல்லும் மங்களூர் விரைவு வண்டியில் ஏறினோம். இரவு மணி 9. அடுத்த இருக்கைக்காரன் குடித்திருந்தான், ஒரிரு கெட்ட வார்த்தைகள் பேசினேன். பின்னர் நானும் என் கணவரும் அங்கே இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். திருச்சி வர சற்று நேரம் இருந்தது. மணி 9.30 தான் இருக்கும்,  அந்த குடிகாரன் "என்ன ஒரே சவுண்டா இருக்கு சலசலன்னு பேசிட்டு, மனுசன் தூக்க வேண்டாமா" என்று ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்ட போக, வேகமா எழுந்து போய் "ஏய் என்ன குடிச்சிட்டு வந்து கலட்டா பண்றீயா போலீஸ் ல சொல்லவா" என்றதும் "ஒரு பொம்பள போலவா பேசற, ரௌடி கணக்கா" என்றான். உடனே "நான் பொம்பளன்னு உனக்கு யார் சொன்னா" என்றேன். அது அசாதரணமாக வந்த வார்த்தையில்லை. எனக்குள் ஆணித்தரமாக கிடக்கும் எண்ணம். நான் பெண் என்பதில் பெரும் பெருமை கொண்டவள். நான் பெண் மட்டுமில்லை,  கருணை ஊற்றானவள், அனைவர்க்கும் உதவுபவள், அநியாயத்திற்கு பொங்கி எழும் ஆயிரம் கரம் கொண்டவள், பெரும் சக்தி. எனக்கு எழும் அவமானம், மரியாதையின்மை, துவேசம் அனைத்தையும் ஆயுதமாக அணிந்தவள். 

இத்தனை பேறாற்றல் ஒவ்வொரு பெண்ணிலும் உண்டு. ஆகவே அந்த பெரும் சக்தியின் அதிரூபத்தை கொண்டாட, ஒரு நாள் போதுமா? ஜனிக்கும் ஒவ்வொரு நொடியும், யுகமும் அவர்களுடையதல்லவா?