Tuesday, February 24, 2004

"மௌனஒலி"


"Pin drop silence"


அமைதி அல்லது மௌனமான ஒரு இடத்தை,நிகழ்வைக் குறிக்கும் மேற்கோள் தானே மேலே சொன்னது. ஒரு குண்டூசியைத் தரையில் எறிந்தால் அதன் சப்தம் சற்று அமைதியான பகுதியில் காதில் கேட்கும் அளவில் இருக்கும். இது ஒரு சாத்தியமான விசயம். ஆனால் இதை விட அழமான கொடூரமான மௌனத்தை பற்றிய சங்க கால கவிதை ஒன்று உள்ளது.

கொன்னுர் துயிலினும் யாந்துங் சலமே
எம்இல் அயல ஏழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.


உரை:
-------

இந்த பெரிய ஊர் தூங்கிய பிறகும் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டின் அருகே ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள மயிற் பாதம்
போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்.

நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"


இந்த சங்க பாடல் ஒரு உக்கிரமான மௌனத்தை பேசுகிறது. ஊர் உறங்கிவிட்ட வேளை. தூங்க முடியாத இருவர், சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்திலிருந்து உதிரும் பூ ஒன்றின் ஒலியை கேட்டுக் கொண்டு இரவெல்லாம் தூங்காது இருப்பதாக வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு அழமான சோகம் போல தெரிந்தாலும் உற்று கவனித்தால்,இலைகளை மயிற் பாதங்களுக்கு ஒப்பிட்ட கவிஞன் பெரிய பூங்கொத்துகளை நினைவில் கொணரும் கவிஞன் உதிரும் பூ நீலமணி போலிருக்கும் என்று நினைவு கூரும் கவிஞன் சோகமாக இருக்க வாய்பில்லை என்றும் கொள்ளலாம். மலர் உதிரும் ஒலியை கேட்பது சாத்தியமா என்ற வாதத்தை விடுத்து உறங்காமல் தவிக்கும் அந்த இருவர்
பற்றி சிந்திதேன். என் சிந்தனையில் வந்து போனது நான்கு விதமான உறவாகும்.

நட்பு
--------

நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சண்டை என கொள்வோம். சண்டை முடிந்திருக்கும் ஆனால் அதன் சாரம் போகாதிருக்கும். நீ என்ன அவ்வளவு பெரியவனா என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கும். ஆனால் நட்பும் மேலோங்கி நிற்கும். பேச முடியாது. ஒரே அறையில் இருவரும் அடுத்தவன் வந்து பேசுவான் என்ற நினைப்போடு உறங்காமல் படுத்து இருப்பார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் கூடிய பழைய நண்பர்கள் இருவர். நிறைய பேசி மகிழ்ந்து,பிரிந்து செல்ல வேண்டிய நாளின் முதல் நாள் இரவு. மிக சந்தோசமான மனநிலையில் நாம் இருக்கும் போது ஒரு சில பயணங்கள் முடியக் கூடாது என்று நினைப்போம்.அது போல அந்த இரவு முடியாமல் தொடரக் கூடாதா என்று நினைத்தவாறு இருவரும் தூங்காமல் பேசாமல் தாங்கள் மகிழ்ந்து களித்த தருணங்களை நினைத்தபடி படுத்துக்கிடப்பார்கள்.

தாய் மகள்
------------------

மகளை திருமணம் முடித்து கொடுத்த பெற்றோர் அவளை காண அவள் வீடு வந்திருக்கின்றனர். திருமணம் மற்றும் தலை தீபாவளி, பொங்கல், ஆடி இப்படி பல பண்டிகைக்கு தரப்பட்ட சீர் சரியில்லை என்கிற சண்டை. வீடு தேடி வந்த பெற்றோரை அவமான செய்த கணவனையும் கணவர் வீட்டாரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத பெண், தன் மகளை இப்படி பட்ட பேய்களிடையே விட்டு விட்டோமே என்று தாய், அவர்களும் ஒரே வீட்டில் ஒர் இரவில் உறங்காது இருப்பார்கள் அப்போது மலர் உதிரும் ஒலி என்ன கண்ணில் இருந்து கன்னங்களில் கண்ணீர் வழியும் ஒலியைக் கூட கேட்க முடியும்.

கணவன் மனைவி
----------------------

இந்த உறவில் மலர் உதிரும் ஒலியை கேட்டு கொண்டே ஒருவரோடு ஒருவர் பேசமல் படுத்திருப்பார்கள் என்றால் அதைவிட கொடுமை உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்த கவிதைக்கு இந்த உறவை வைத்து நான் சிந்தித்தது வேறு விதமாகும்.

"நான் கேட்கும்
எந்த ஒரு கேள்விக்கும்
உடன் பதில் வைத்திருகிறாய்
அழகாய், அது
உன் மௌனம். " - நன்றி நிலா ரசிகன்

இந்த கவி வரிகளில் ஒரு ஏக்கமில்லை, ஒரு சாடல் இல்லை. இதில் ஒரு சந்தோசம் தான் தெரிகிறது. என் மௌனம் சொல்லாத எதையும்
என் வார்த்தைகள் சொல்ல போவது இல்லை என்ற புரிதல்(understanding) கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரும் "மயிற் பாதம்
போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்" என படுத்திருக்கலாம்.

காதலன் காதலி
--------------------

காதலிக்கும் சமயம் இருவரும் வேறு வேறு வீடுகளில் தான் இருப்பார்கள். ஆயினும் சிந்தனை ஒரே புள்ளியில் தான் இருக்கும். ஒருவேளை
கற்பனையில் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின்
இருந்து உதிரும் நீலமணி மலர்களின் ஒலியைக் கேட்டபடி இருவரும் அவர் அவர் வீட்டில் உறங்காமல் படுத்து இருப்பர். கற்பனையில் மட்டுமே
மலர் உதிரும் ஒலியை காதில் கேட்க முடியும்.

வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

சகுந்தலை

காட்சி - 1:
நறுமணம் கமழும் அழகான சோலை, அமிழ் தூறும் மலர்கள், ரீங்காரம் செய்யும் வண்டுகள், வண்ண வண்ண மலர் சொரியும் மரங்கள், இதமாக தென்றல் தாலாட்டும் மலையருவி, குயில்களின் கானம், மயில்களின் நடனமென பூலோக சொர்க்கமாக இருந்தது அந்த நந்தவனம். அந்த நந்தவனத்தில் சகுந்தலை தோழியர் சூழ நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அந்த கன்னியர்களில் ஆடல் பாடல் மேலும் அந்த நந்தவனத்திற்கு அழகு சேர்த்தது.
காட்சி - 2:
ஏனோ தோழியர் யாரும் துணையின்றி தனித்து வனம் புகுந்தாள் சகுந்தலை அன்று. தூரத்தில் மயங்கி கிடப்பது யார்? புரியாமல் பரிதவித்தாள் பேதை மகள். அவன் தான் தன் வாழ்வின் துயரம் என்று அறியாமல் அருகில் இருந்த அருவில் நீர் எடுத்து வந்து அவன் முகம் தெளித்தாள். கண் விழித்தவனுக்கு புசிக்க சிறந்த கனி வகைகளை அழித்தாள் அந்த கனிகை. மேகலையின் மகளாயிற்றே வந்தவன் சகுந்தலையின் அழகில் மயங்கினான்.
"கன்னிகையே உன் பெயர் என்ன?"
"சகுந்தலை" என்றாள் சகுந்தலை
"தேவலோக மங்கை போல அழகாய் இருகின்றாய் உன் வாசம் எது?"
"கண்வ முனிவர் குடில் தான் என் இருப்பிடம். தாய் தந்தை இல்லாதவள், இருப்பினும் பெறும் அன்பிற்கு குறைவில்லாதவள்"
"சகுந்தலா உன் அழகில் மயங்கினேன் என் பெயர் துஷ்யந்தன். இந்த நாட்டின் மன்னன். உன்னை இப்போதே மணக்க ஆசை கொண்டேன்"
"இப்போதே எப்படி அக்னி மூட்டி தேவர்கள் சாட்சியாக, தந்தை கண்வ முனிவர் ஆசி வழங்க ஊரார் முன்னிலையில் திருமணம் நடப்பதே முறை இப்போதே எப்படி சாத்தியம் ஆகும்"
"நாம் கந்தர்வ மணம் புரிவோம்"
"அப்படி என்றால்"
"இந்த காடு, மலை, காற்று, அருவி சாட்டியாக உனக்கு இதோ இந்த சோலையின் மலர்களால் ஆனா மாலையை அணிவித்து என் மனைவி ஆக்கிக் கொள்வேன்"
மனம் மகிழ்ந்தாள் சகுந்தலை, தான் நீர் வார்த்த சோலையின் மலர்கள் சேமித்து மாலை தொடுத்தாள். மணம் புரிந்தனர் துஷ்யந்தனும், சகுந்தலையும். மன்மதன் குடி புகுந்தான் அந்த வனப் பகுதியில். கிளம்பும் முன் தன் மோதிரத்தை பரிசளித்தான் அன்பு மனைவியிடம்.
"கலங்காதே சகுந்தலா, விரைவில் வருவேன் உன்னை என் மாளிகைக்கு அழைத்துச் செல்ல..."
புரவி பறந்தது.
காட்சி - 3:
மகிழ்ச்சியின் எல்லைகள் இது தான் என்றிருந்தாள் சகுந்தலை. நம்பிக்கையோடு இருந்தாள். எப்போதும் கனவு கண்டவாறு இருந்தாள். வழக்கம் போல ஓடைக்கு நீராட கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது ஆஸ்ரமத்திற்கு வருகை புரிந்துக் கொண்டு இருந்த துர்வாச முனிவரை அவள் கவனிக்கவில்லை. துர்வாசர் உடனே யார் நினைவால் என்னை கவனிக்காது நீ நடந்தாயோ அவருக்கு உன் நினைவுகள் அற்று போக கடவது என்று சாபம் தந்தார். நீராட சென்ற இடத்தில் காதல் பரிசான மோதிரத்தை தொலைத்தாள் சகுந்தலை. தன் சிரிப்பையும் அன்றே தொலைத்தெரிந்தாள்.
காட்சி - 4:
கண்வ குடிலில் பெண்கள் எல்லோரும் சோக உருவாக காட்சியளித்தனர். தொலைத்த மோதிரத்தை நினைத்தவாறு தன் மகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சகுந்தலை. கண்வ முனிவர் அரண்மனை சென்று அவமானப்பட்டு திரும்பி இருந்தார்.
காட்சி - 5:
வருடங்கள் ஓடின, ஆனால் சகுந்தலையின் வாழ்கை விடிவில்லாமல் நகர்ந்தது. மகன் வளர்பில் தன்னையே அர்பணித்துக் கொண்டாள் சகுந்தலை.
காட்சி - 6:
ஒரு நாள் துஷ்யதன் அரசவையில் ஒரு மீனவன் கொண்டு வரப்பட்டான். ராஜா மோதிரத்தை விற்றதற்காக கைதாகி இருந்தான் அவன். அரசன் வழக்கை விசாரித்தார்.
"அரசே நான் வலை வீசி பிடித்த மீன் வயிற்றில் இந்த மோதிரம் அது" என்றான்
அந்த மோதிரத்தை பார்த்ததும் அரசனுக்கு சகுந்தலையின் நினைவும் அவளை மணந்ததும், அரண்மனை வந்தது மறந்ததும் நினைவில் வந்தது. அவளை அழைத்து செல்வேன் என்று வாக்களித்தது நினைவில் வந்தது.
காட்சி - 7:
மன்னர் தன் சுற்றம் சூழ கண்வ முனிவர் குடிலுக்கு வந்து சகுந்தலையையும் அவன் மகனையும் தன்னோடு அனுப்புமாறு கோரினான். சகுந்தலை மனம் மகிழ்ந்தாள். கண்வ முனிவர் ஆசியோடு அரண்மனை சென்றடைந்தாள்.
சுபம்
நாடகத்தை பார்த்த சுப்பையா குறலெழுப்பினார் "நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு" ஆமாங்க நம்ம நாடகத்துக்கு அது தான் தலைப்பு இப்போது காட்சி 7 மறுபடியும்
காட்சி - 7:
மன்னர் தன் சுற்றம் சூழ கன்வ முனிவர் குடிலுக்கு வந்து சகுந்தலையையும் அவன் மகனையும் தன்னோடு அனுப்புமாறு கோரினான். சகுந்தலை குமுறி எழுந்தாள்.
"துஸ்யந்தா நாடாழும் மன்னாக இருக்கலாம் ஆனால் நீ அழைத்த நேரத்தில் மட்டும் தான் நான் வர வேண்டுமா?
ஆனால் ஒரு மோதிரத்தை பார்த்த பின் தான் உனக்கு மனைவியின் நினைவு வரும் அதன் பின்புதான் எனக்கு உன்னோடு வாழ்வு என்றால் அப்படிப்பட்ட வாழ்வே எனக்கு வேண்டாம். என் மகனின் தந்தை யார் என்று உலகிற்கு தெரிந்து விட்டது அது போதும் எனக்கு. இந்த காடு, மலை, அருவி இவை தாம் எம் வாழ்க்கை நீ சென்று வரலாம்"
சுபம்