நான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அம்மாயி தான் காப்பி குடிக்கும் போது நான் ஏங்கி பார்க்கிறேன் என்று ஒரு வாய் குடிக்க கொடுத்து பழக்கிவிட்டதாக அம்மா சொல்வார்கள். அம்மா தடுத்தாலும் பிள்ளை ஏக்கமா பாக்கறா குடுத்த சப்பு கொட்டி குடிக்கிறா ஏன் தடுக்கிறே என்று அடக்கி விடுவார்களாம். அப்படி என்னை தேவியாக்கும் காப்பி பாணம் எனக்கு தொட்டில் பழக்கம். அதற்காக எல்லா காப்பியையும் குடித்து விட மாட்டேன், நல்ல A ரக பிபேரி காப்பி கொட்டைகளை 50% விதமும் B ரக காப்பி கொட்டைகளை 50% சரிபட வறுத்து, 100 கிராமுக்கு 10 கிராம் சிக்கரி கலந்து அரைத்து வைத்த திருச்சி புகழ் பத்மா காபியை அல்லது கிராமத்தில் காப்பி ராமு அண்ணா கொண்டு வந்து தரும் ரமா காபி இவை மட்டுமே பிரியமானது. அதுவும் காப்பிக்கு பாலில் , தண்ணீர் அளவு அதை காய்ச்சும் முறையும் மிக முக்கியம், டிக்காசன் அதிகமா சக்கரை குறைவாக சேர்த்து ஒரு சிப் அருந்தும் போது நாவில் பரவுமே ஒரு சுவை, ஆஹா காப்பி மனிதரை தேவராக்கும் பாணம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.
திருமணமாகி ப்ரிதாபாத் போய் சேர்ந்த புதிதில் காப்பித் தூள் சரியாக கிடைக்காத காரணத்தாலும் மேலும் அங்கே கிடைக்கும் பாலில் கலந்த காப்பி சுவை நாவிற்கு ஒவ்வாத காரணத்தாலும் தேனீரில் இஞ்சி எலக்காய் இன்னபிற விசயங்களை சேர்த்து ஒருவாறு நாவினை ஒப்பேத்தி கொண்டிருந்தேன். கிட்டதட்ட ஒராண்டுக்கு காப்பி அருந்துவது அறவே இல்லாது போனது. பின்னர் டெல்லி முனீர்கா ரமா ஸ்டோர் அருகே ஒரு காப்பித் தூள் கடை மிக சிறப்பாக காப்பித் தூளை அரைத்து தருவார்கள் என்று அறிந்து அங்கே போய் வாங்கி வந்து காப்பி அருந்தும் போது திருச்சி பத்மா காபியின் அதே சுவையை மீட்டெடுக்க முடிந்தது. இந்த சுவைக்காக வேறும் காப்பிப் பொடி வாங்குவதற்காகவும் அந்த சாக்கில் சரவணபவனில் சாப்பிடுவதற்காகவும் ப்ரிதாபாத்திலிருந்து வார இறுதியானால் டெல்லி செல்வோம். அப்படிப்பட்ட ஒரு பொற்காலமது.
பெங்களூர் வந்து தனியளாக இருந்த ஒரு ஆறு மாத காலத்தில் என்னிடம் மிக குறைவான பாத்திரங்களே இருந்தது, அதில் காப்பி பில்டர் இல்லை. அதனால் மீண்டும் இஞ்சி ஏலக்காய் டீக்கு என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். அதன் பின்னர் அம்மா கூட வந்து இருக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் எப்படி தான் காப்பியை விட்டாயோ அதிசயமா இருக்கு என்றார்கள். அவர்கள் அப்படி ஆச்சரியப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஒரு படி உயர டம்பளிரில் முக்கால்பாகம் காப்பி கொடுத்தால் கூட முகம் சுண்டிக் கொள்வேன் என்று முழு டம்ளராக அல்லவா காபிக் கொடுத்து வளர்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் போய் அம்மா "வயிறு காப்பிக்கு பசிக்குது" என்று கூட சொல்வேனாம். அது எனக்கு நினைவில்லை ஆனால் அம்மா இதை அடிக்கடி சொல்வார்கள். அவ்வளவு பிரியம் எனக்கும் காப்பி மீது.
இத்தனை காப்பி ப்ரியம் கொண்ட நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே என் அலுவலத்தில் காப்பி வாசனை, அலுவலத்தில் மட்டுமல்ல ஸ்டார் பக்ஸ் காபே, லாவாசா இட்டாலியன் காபே, இத்தாயி என்று எல்லா இடத்திலும் ஏகபோகமாய் காப்பி மணம் மனதை மணக்குமளவுக்கு ததும்பி வழியும். நாவை அடக்கவே முடியாதபடி அந்த காபியின் மணம் நம்மை எங்கிருந்தாலும் ஈர்க்கும். அத்தனை ஆர்வமாய் போய் அவர்கள் தரும் சின்ன வாளி அளவில் இருக்கும் பெரிய குவளையில் காப்பியை நுரை பொங்க எடுத்து வந்து ஒரே ஒரு சிப் வைத்தால் போதும் காறி துப்பும் அளவிற்கு காப்பியின் மீது வெறுப்பாகி விடும். அமெரிக்கா சென்ற முதல் வாரத்தில் அலுவகத்தில் தினம் காப்பியை எடுப்பேன் பின்னர் அப்படியே வாஷ்பேசனில் கவிழ்த்து விடுவேன். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் வரை முழுமையாக காப்பியை வெறுக்க ஆரம்பித்தேன். அங்கே தேனீரும் நாம் நினைக்கும் சுவையில் கிடைக்காது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நல்ல காப்பி கிடைக்கவில்லையே என்று நா ஏங்கி போகும் தமிழ்நாட்டு காப்பி ப்ரியர்களுக்கு காப்பி ப்ரியர்களுக்கு சன்னிவேலில்(Sunnyvale) இருக்கும் கோமள விலாஸ் (திருச்சிக்காரர் இயக்கி வருவது) http://www.komalavilas.com/ மற்றும் http://www.madrascafe.us/ மெட்ராஸ் காப்பேயும் நல்ல வடிகால். சாப்பாடு, டிபன் முக்கியமாக காப்பி எல்லாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையுடன் கிடைக்கும். ஆகா அமெரிக்கா சென்று வந்த முதல் ஆறு மாதம் நான் காப்பியை அறவே தொடவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள் அங்கிருக்கும் காப்பி என்னை எந்த அளவு வெறுப்பேத்தி விரட்டி இருக்குமென்று.
தற்சமயம் அக்குபிரஸ்ஸர் என்று ஒரு உடலையே மருத்துவர் ஆக்கும் மருத்துவ முறையொன்றின் பொருட்டு பால், தயிர் இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்று, காப்பி டீ குடித்தே ஆக வேண்டுமென்றால் ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காப்பி குடியுங்கள் என்றும் அறிவுத்தப்பட்டு, பால் சேர்த்து காப்பி குடிப்பது முற்றாக நின்று போனது. கடந்த முறை திருச்சி சென்ற போது நவகிரக கோவில்கள் சென்றதில் எனக்கு பிடித்த விசயம் நாங்கள் அருந்திய கும்பகோணம் டிகிரி காப்பியே, மேலும் திருச்சியில் இருந்து பெங்களூர் வரும் நெடுங்சாலையில் தீபாவளிக்கு சென்று வரும் போது தான் கிருஷ்ணகிரி டோல்(toll) தாண்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் டிகிரி காப்பி கடையொன்றை கண்டோம். அங்கே காபி அருந்துவதற்கென்றே அடுத்த முறையும் காரில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன் அவரிடம், ஹூம்ம்ம்ம் இனி என்று பால் ஊத்தி நல்ல காப்பித் தூளால் தயாரிக்கப்பட்ட டிக்காசன் காப்பியை எப்போது குடிப்பேனோ தெரியவில்லை. I miss you coffee.
இப்போது பரிபூர்ணமாய் உணர்கிறேன் காப்பி மனிதரை தேவனாக்கும் பாணமென்று நன்றி சுகுமாரன் சார். பிரபஞ்சன் எழுதி இருப்பதாக அவர் தான் சொன்னார்.