Friday, September 6, 2019

பின்னல் சித்திரங்கள்


                         


 காலச்சுவடு பதிப்பகத்தின் வெளீயிடாக தற்சமயம் நடைபெறும் மதுரை புத்தக காட்சிக்கு வெளியான எனது முதல் சிறுகதை நூல் "புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை". அதற்கு எழுத்தாளர் அசதா அவர்கள் எழுதியுள்ள முன்னுரை.   
புனைகதை என்பது தொடர்ச்சியாகப் பொய்களை நெய்து ஒரு மகத்தான உண்மையைக் கண்டடைவது. ஆப்கானிய எழுத்தாளர் கலீத் ஹொசைனியின் புனைவெழுத்துக் குறித்த இந்தப் பார்வை ஒரு செவ்வியல் வரையறை. புனைவெழுத்தாளரது நெய்யும் பாங்கில் பின்னப்படும் கற்பனைகள் ஒரு வெளிச்சத்தை வந்து சேருகின்றன. அந்த வெளிச்சம் அல்லது உண்மை ஒரு அகதரிசனமாகவோ, மனப்புரட்டலாகவோ அல்லது அதன் பின்னால் இன்னும் கூடுதல் வெளிச்சமிருக்கும் ஓர் இருண்ட வாயிலுக்கான திறப்பாகவோகூட இருக்கலாம். இறுதிச் சித்திரம் பின்னலில்தான் இருக்கிறது எனும்போது கதைகள் பின்னப்படும் விதமே பிரதானமாகிறது.

லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கியபுறாக்களை எனக்குப் பிடிப்பதில்லைஎன்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது அகவுலகை நமக்குக் காட்டுபவை. பூ விற்கும் பெண்ணும் கிராமத்து விவசாயக் குடும்பத்துப் பெண்ணும் மையப்பாத்திரங்களாக அமைந்த கதைகளும் உண்டு என்றபோதும் மேற்சொன்ன அடையாளமே தொகுப்புக்குப் அதிகம் பொருந்தி வருகிறது. இக்கதைகளை வாசிக்கையில்  சம்பவங்கள்  ஊற்றுப்போல பெருகியபடியிருக்க அதனிடையே கதைமாந்தர்கள் உலாவியபடியும் இடைவிடாது பேசியபடியும் இருப்பதுபோன்ற ஒரு சித்திரம் மேலெழுந்து வருகிறது. தம்போக்கிலான இம்மனிதர்களையும் சம்பவங்களையும் கதையாசிரியர் பின்னியிருக்கும் விதத்தில் இவை சமகாலத்தின் முக்கியமான சிறுகதைகளாகியிருக்கின்றன.

சப்தபர்னி மலர்கள்நுட்பமான சிறுகதை. அறிமுகமில்லாப் பெருநகரில் ஒரு பெண் சுற்றியிருக்கும் ஆண்கள் மட்டில் தன்னை மெதுவாக இயல்பாக நெகிழ்த்திக் கொள்வதை ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் இக்கதை ஆண் -பெண் உறவின் சூக்குமப் பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது. தான் ஏமாற்றப்பட்டதற்கு நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடும் சூழலில் இருந்தபடி ஒரு பெண் தன்னை சமூகம் உறவுகள் அரசு அமைப்புகள் ஆகியனவற்றுக்குள் பொருத்திப் பார்த்துக்கொள்வதாக  சில்லறைகதை அமைந்திருக்கிறது.

இளம் கைம்பெண்ணான தனது அண்ணிக்கும் திருமணமாகாத தனது தம்பிக்குமிடையேயான உறவின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் குழம்பி சதா குமைச்சலுறும் ஒரு பெண்ணைமுற்றத்து அணில்கதையில் திறம்படப் படைத்திருக்கிறார் லாவண்யா சுந்தரராஜன். இன்னொரு தளத்திலிருந்து பெண்ணின் அகச்சிக்கலைப் பேசும் கதையானபூமரம்”, கதையாசிரியரின் லாகவமான கூறுமுறையில் குறிப்பிடத்தக்க கதையாகிறது. எல்லாவகையிலும் வெற்றிபெற்றுவிட்ட ஒரு பெண்ணின் அகந்தை தாய்மைப்பேறின்மை என்னும் விஷயத்தின்முன் சலனமுறுவதாகச் சொல்லுமிடம் சற்று நெருடலானது என்றபோதும் இதுபோன்ற இடங்களில் சமூக வழக்கின் தாக்கம் குறைத்து மதிப்பிட இயலாதது.

தனது எளிய கனவுகளுக்குள்கூட பொருந்திடாத, எப்போதும் தன்னிலிருந்து விலகியே நிற்கும், பொதுவாழ்வின் சாமர்த்தியங்கள் ஏதுமற்ற அப்பாவை அவரது மரணத்தின்போது நினைவுகூரும் ஒரு மகளின் நினைவேக்கங்களின் தொகுப்பாய் அமைந்திருப்பதுஅப்பாசிறுகதை. தந்தைமகள் உறவின் அதிகம் அறியப்படாத ஒரு பரிமாணம் இக்கதையில் காணக்கிடைக்கிறது. வண்ணப்படத்தின் நடுவே நகரும் கறுப்பு-வெள்ளை துண்டுக்காட்சியைப்போல காலத்தாலும் பேசுபொருளாலும் தனித்து அமைந்த கதைகள்சின்ன லட்சுமிமற்றும்யூனிபார்ம்”. “விடுபூக்கள்நேரடியாகச் சொல்லப்பட்ட கதையேயானாலும் அதில் பெண்ணின் பாடுகள் அசலாகப் பதிவாகியிருக்கின்றன. “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை”, “செண்பா சித்திஆகியன பெண் மனதின்  அக அடுக்குகளை பூடகமாகச் காட்டிச் செல்லும் கதைகள்.  துண்டுதுண்டான சம்பவங்களைத் தொகுத்தபயணங்கள்கதையும் முக்கியமானது.

தொன்மங்கள், வரலாறு, சமகால நிர்ணயங்கள் இவற்றையொட்டி சமூகத்தில் பெண்களின் வகிபாகம் தொடர்ச்சியாக ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் உள்ளாகும் நிலையில் அவர்களை அவர்களது அன்றாடத்தின் வெளிச்சத்திலும் இறுக்கத்திலும் பார்க்க விழைவனவாக லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் இருக்கின்றன. இக்கதைகளின் பெண்கள் - சப்தபர்னி மலர்கள் கதையின் நாயகியோ, செண்பா சித்தியோ, விஜயாவின் அண்ணியோ- தமது தேவைகளை அறிந்தவர்கள், குடும்பத்துள் எளிய புகார்களுடன் அல்லது புகார்களேயற்று உழல்பவர்கள்; அதேநேரம் தம்மைச் சுற்றியுள்ள தடுப்புக்களை உடைக்கிறோம் என்ற பிரக்ஞையின்றியே அவற்றை மெல்ல உடைத்து முன்னேறுபவர்கள். இந்த அன்றாடங்களின் வழியாக லாவண்யா சுந்தரராஜன் படைத்துக்காட்டும், உறவுச் சிக்கல்களும் உணர்ச்சிப் மோதல்களும் நிறைந்த பெண்கள் உலகை ஒருவர் நேசிக்காமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக சம்பவங்களைப் பின்னிச் செல்வதினூடே தன் கதைகளைப் படைத்திருக்கும் லாவண்யா பெண்களின் மீறல்களை இயல்பாகக் கதைகளுள் பொதிந்திருக்கிறார். பின்னல்கள்வழி முடிச்சுக்களையல்லாமல் யதார்த்த சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார். சொல்லலில் முனைப்போ மொழிமீதான அதீத கவனமோ இன்றி எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் யதார்த்தமாக அமைந்திருக்கும் அதேநேரம் வலுவான புனைவாக்கங்களாகவும் திரண்டு வந்திருக்கின்றன. இத்தொகுப்பு வழியாக கவிஞரான தன்னை ஒரு சிறுகதையாசிரியாக முன்வைக்கும் லாவண்யா சுந்தரராஜனின் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அசதா
20-08-19