Saturday, October 24, 2009

த‌ம்பி யாத்ராவிற்குயாத்ராவை சமீப காலமாக தான் தெரியும். தூறல்கவிதைகள் முத்துவேல் கவிதை எனக்கு அனுஜன்யாவின் வலை மூலமும், அங்கிருந்து யாத்ராவின் கவிதையும் அறிமுகமானது. சென்ற முறை சென்னை வந்திருந்த போது நீண்ட நேரம் யாத்ரா, முத்துவேல், வாசுதேவன், லஷ்மண் மற்றும் சந்திரசேகருடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. பின்னர் யாத்ராவுடன் அடிக்கடி அரட்டையிலும் தொலைப்பேசியிலும் பேச முடிந்தது. இவர் மென்மையான குணம் மிக கவர்ந்த விசயம். இவரை என் தம்பியாக பெற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி. இவர் சமீபமாக எழுதிய தரை மற்றும் எறும்பின் பயணம் என்ற கவிதைகளை படித்தேன். மிகவும் நெகிழ்வாக உணர்ந்தேன். வேலை மற்றும் சிறு மனகசப்போடு இருந்த என்னை மீட்டது இந்த கவிதைகள். வெற்று வார்த்தைகளால் விளக்க இயலாத உணர்வுகளை பெற்றிருந்த தினம் அந்த கவிதைகளை வாசித்த தினம். அந்த கவிதைகள் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவை. விக்கித்த வார்த்தைகளால் சிறு பின்னூட்டமிட்டு வேலைப்பளுவின் காரணத்தால் வார இறுதி வரை நேரம் கேட்டிருந்தேன்.


தரை
====
கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்த இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.


இந்த கவிதையின் பாடுபொருள் சாதாரணமாக எல்லோராலும் நோக்கப்பட்டிருக்கும் ஒரு விசயம். இந்த படிமத்தை இவ்வளவு அழகான உணர்வாக்கிய யாத்ராவின் விரல்களுக்கு மோதிரம் தான் போட வேண்டும். இங்கே தரையின் ஈரம் என்பது ஒரு உணர்வு. இந்த கவிதையின் உணர்வை எந்த உறவோடும் ஒப்பிட்டு பார்க்க இயலும். ஒவ்வொரு உறவின் உணர்வின் தொடக்கமும் முழு தரை நிறைந்த ஈரமாகவும் தளும்பியபடியும், பின் சற்றே உலர ஆரம்பித்து அந்த உணர்வுகளுக்கு அர்த்தமாக்கும் சில வடிவங்களும், அந்த வடிவங்கள் சில சமயம் அழகானதாகவும் சில சமயம் புரிந்து கொள்ள முடியாதவையாகவும், சில சமயம் அகோரமாகவும் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து முடிந்ததும் அந்த மாய வடிவங்கள் மனதிரையில் ஓடிய படியே இருக்கும். மீண்டும் ஈரம் கோர்க்கும் ஈர காயும். இந்த ஈர உணர்வை சந்தோசம், சோகம், வருத்தம், சண்டை என்று எந்த உணர்வோடும் கட்டிப்பார்க்க முடியும். காதல், நட்பு, நேசம் ஒருவரிடத்தோ, ஓரிடம் காரணம் அறிந்தோ அறியாமலோ தவிர்க்க முடியாமல் முடிந்து போய் மற்றோரிடம் தொடர்வதோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த கவிதை இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டியது. நெகிழ்வோடு வாழ்த்துகிறேன் யாத்ரா வாழ்க பல்லாண்டு.


எறுப்பின் பயணம்
================
சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி
நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு
சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊறியபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்
ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க
ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்
ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்
என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்


எறுப்பின் பயணம் இந்த நிகழ்வும் அனைவராலும் பார்க்கப்படும் நிகழ்வு தான். எதை கண்டாலும் கவிதை கொட்டுகின்றது என் தம்பிக்கு. பாராட்ட வார்த்தைகளை தேடி திசை தெரியாத எறும்பைப் போல தவிக்கின்றேன் நானும். சிறு நிதானிப்பு, சிறு வளைவு சக எறும்புகள் செல்லும் திசையில் செல்லுதல், போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி போதல் ம்ம்ம்ம்ம் நம் தினசரி வாழ்வின் பயணத்திற்க்கும் எறும்பின் பயணத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. "யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்" எறும்பாய் உணர்ந்தாலும் தன் மென்மையான குணத்தை உணர்த்தி இருக்கின்றார். "பருகுவதற்கு யாருமற்று யுகயுகமாய் தனித்திருக்கும்" இந்த தனிமை கொஞ்சம் வெறுமை எல்லோரிடத்தும் ஒரு சமயம் உணரப்பட்டதாகவே இருக்கும். மேலும் பல கவிதை எழுதுவாயாக யாத்ரா.