Herta Müller (born 17 August 1953) is a Romanian-born German novelist, poet and essayist noted for her works depicting the harsh conditions of life in Communist Romania under the repressive Nicolae Ceauşescu regime, the history of the Germans in the Banat (and more broadly, Transylvania), and the persecution of Romanian ethnic Germans by Stalinist Soviet occupying forces in Romania and the Soviet-imposed communist regime of Romania. Müller has been an internationally-known author since the early 1990s, and her works have been translated into more than 20 languages. She has received over 20 awards, including the 1994 Kleist Prize, the 1995 Aristeion Prize, the 1998 International IMPAC Dublin Literary Award and the 2009 Franz Werfel Human Rights Award. On 8 October 2009 it was announced that she had been awarded the 2009 Nobel Prize in Literature.
Herta Müller On Packing
Translated from the German by Donal McLaughlin
ஹெர்டா முல்லர்
“புறப்பாட்டிற்கான ஆயத்தம்“
மொழியாக்கம் : உயிரோடை லாவண்யா
என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நான் என்னோடு எடுத்துச் செல்கிறேன் அல்லது என்னுடையவை அனைத்தையும் என் மேல் அணிந்துள்ளேன். நான் சுமந்திருக்கும் அனைத்தும் என்னிடம் இருந்தவை. ஆனால் அவை எல்லாமே என்னுடையவை அல்ல. அவை யாவும் வேறு காரணிகளுக்காக படைக்கப்பட்டவை அல்லது பிறரிடமிருந்து நான் பெற்றவை. இந்த பன்றித்தோல் பொருத்திய துணிகள் அடைக்க பயன்பெறும் பெட்டி(சூட்கேஸ்) ஒரு இசைகருவி (கிராமபோன்). குளிர் தாங்க உதவும் இந்த ஜாக்கெட் என் தந்தையுடையது. வெல்வெட்டால் ஆன கழுத்துப் பட்டை பொருத்திய இந்த கோட் என்னுடைய பாட்டனது ஆகும். குளிருக்கு அணியும் இந்த அரைக்கால் சட்டை என்னுடைய மாமா எட்வினுடையது. காலின் கீழ் பாதிக்கு அணியும் இந்த மிருகதோலால் ஆன ஆடை எங்கள் வீட்டு அருகில் வசிக்கும் உயர்திரு கார்ப் அவர்களுடையது. இந்த பச்சை வர்ண கைகவசம் என்னுடைய சித்தி பினியுடையது. இந்த ஆழ்சிவப்பு வர்ண தலைக்கு அணியும் துணியும், குளியல் பொருட்கள் வைக்கும் சிறு பையும் மட்டுமே என்னுடையவை அவை சமீபமாக வந்த கிருஸ்துமஸில் எனக்கு கிடைத்த அன்பளிப்பாகும்.
போர் தொடர்ந்து ஜனவரி 1945 வரை நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த கடுங்குளிர் சமயம் இந்த ரஷ்யர்களால் நான் எங்கே அழைத்து செல்லப் படுகிறேன் என்று தெரியாத அதிர்ச்சியில் இருக்கிறேன். இப்படி நான் அழைத்துச் செல்லப்படும் காரணத்தால் அனைவரும் மிக அன்போடு எனக்கு உபயோகமாக இருக்கும் என்று எதையாவது தந்திருக்கின்றார்கள். அவை எதுவும் எனக்கு உதவவில்லை. உண்மையை சொல்லப்போனால் இந்த உலகத்தின் எந்த ஒரு பொருளும் எனக்கு உதவவில்லை. அது எந்த உதவியாலும் என்னை மீட்க முடியாத ஒரு நிலை. நான் ரஷ்யர்களின் பட்டியலில் இருப்பதாக அறிந்து எல்லோரும் அவரவராக ஒரு முடிவெடுத்து இந்த பொருட்களை எனக்கு தந்தனர். அப்போது எனக்கு பதினேழு வயதாகி இருந்தது. அவர்கள் அனைவரும் கொடுத்த எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு நானே அங்கிருந்து செல்ல முடிவெடுத்தேன். செல்ல அதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். நான் ரஷ்யர்களின் பட்டியலில் இருந்தது மட்டுமே இதற்கு காரணமல்ல. ஒருவேளை இந்த முடிவை எடுக்காமல் இருந்தால் அது இதைவிட மோசமான நிகழ்வை தந்திருக்கக் கூடும். திரும்பிய இடமெல்லாம் கண்ணாக நீண்டு நோக்கும் இந்த நகரத்திலிருந்து செல்லவே விரும்பினேன். நான் அதிகம் பயப்படவில்லை ஆயினும் பொறுமையிழந்து படபடப்பாக இருந்தேன். நான் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது என்னுடைய சொந்தங்களிடம் பயம் கலந்த அனுதாபத்தை தந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படியே இருந்தால் அடுத்த நாட்டில் எனக்கு என்ன நிகழும் என்று பயந்திருந்தேன். எனக்கே தெரியாத ஒரிடத்திற்கு நான் பயணப்பட நினைத்திருந்தேன்.
நடக்கக்கூடாத ஏதோ ஒன்று எனக்கு நடந்தது. அது வித்தியாசமாக, வெட்கமற்றதாக, அருவெறுக்கத் தக்கதாக, அழகாக இருந்தது. அது பனி மரங்கள் நிறைந்த பூங்காவில், பசும்புல் நிறைந்த சிறு மலைக்கு பின் நடந்தது. நான் என் வீடு திரும்பும் முன் விடுமுறை நாட்களில் இசைவிழா நடக்கும் அந்த பூங்காவின் மையப்பகுதிக்கு சென்றிருந்தேன். சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அழகிய வேலைபாடுகள் செய்யப்பட்ட அந்த மரப் பலகையில் நான் கண்ட மெல்லிய கயிறு வளைவுகளால் இணைக்கப்பட்ட வெற்றுச் சக்கரங்களிலும், சதுரங்களிலும், நாற்கோணங்களிலும் பயம் கலந்திருந்தது. அந்த வேலைப்பாடுகள் என்னுடைய அனைத்து மன உளைச்சலையும், என் முகத்தின் பய ரேகையையும் காட்டியபடி இருந்தது. இனி ஒரு முறை இந்த பூங்காவிற்கு வரக்கூடதென்று எனக்குள் நானே உறுதி எடுத்துக்கொண்டேன்.
எவ்வளவு அதிகமாக என்னை கட்டுப்படுத்தினேனோ அவ்வளவு அதிகமாக ஆர்வம் உந்த இரண்டு நாட்களுக்குள் அந்த இடத்திற்கு சென்றேன். நாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த பூங்காவே ஆகும். நான் இரண்டாம் முறை நாங்கள் சந்திக்கும் இடத்திற்கு சென்ற போதும் நான் முதலில் சந்தித்திருந்தவர் உடனேயே சென்றேன். அவர் பெயர் நாரை. இரண்டாமவனுக்கு பைன் என்றும், அடுத்தடுத்து வந்தவர்களுக்கு காது, கயிறு, பொன்வண்டு, தொப்பி, கங்காரு, பூனை, கடல் புறா, முத்து என்று இஷ்டப்படி பெயரிட்டு விளையாடி இருந்தோம். எங்களுக்கு மட்டும் அடையாளப்படும் அந்த பெயர் அனைத்தும். அனைவரும் வன விலங்குகளோடு விளையாடினோம். மிக மகிழ்ந்து என்னை மறந்திருந்தேன். அது வேனிற்காலமானதால் மரங்கள் எல்லாம் தம் சொந்த நிறங்களிலும், இலைகளற்ற மரங்களாகவும், மல்லிகையும் அடர்புற்களும் கூட வளர்ந்திருந்தன.
அன்புக்கும் பருவகாலமுண்டு. அந்த இலையுதிர் காலம் பூங்காவிற்கு முடிவுகட்டி இருந்தது. மரங்களை நிர்வாணமாக்கி இருந்தது. நாங்கள் சந்திக்கும் இடமும் மாறிவிட்டது. அந்த குளக்கரை பறவை இலச்சினை பொருத்திய இரும்பு கதவுடையது. ஒவ்வொரு வாரமும் நான் என்னை விட இரு மடங்கு மூத்த ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ருமேனியர். திருமணமானவர். நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திருந்தாலும் எங்கள் பெயர்களைக்கூட கூறிக்கொள்ளவில்லை. தனித்தனியாக வந்தோம். பணம் செலுத்தும் இடத்தில் அமர்ந்திருந்த பெண், பளபளப்பக்கும் கற்கள் பொருந்திய இந்த தரை, அல்லி மலர்கள் போல் வரையப்பட்ட சுவரில் பதித்த கற்கள், அழகிய வேலைபாடு நிறைந்த இந்த மர நாற்காலிகள் இவை எதுவுமே அறிந்திருக்கவில்லை எங்களுடையது திட்டமிட்ட சந்திப்புதான் என்று. நாங்கள் இருவரும் மற்றவர்களோடு சாதாரணமாகவே நீந்தினோம். நீச்சல் குளம் இருக்கும் இடத்தில்தான் நாங்கள் கடைசியாக சந்தித்தோமா?
அதன் பின், நான் அந்த போர்க்கால அகதி முகாமிற்கு செல்லும் சிறிது காலத்திற்கு முன்பிருந்து நான் 1968ல் திரும்பும் வரை அது போல ஏதாவது சந்திப்பில் பிடிப்பட்டிருந்தால் சிறையில் தான் அடைக்கப்பட்டிருப்பேன். குறைந்தபட்சம் ஐந்தாண்டு கடுங்காவல் கிடைத்திருக்கும். அப்படி பிடிப்பட்டவர்களை கடுமையான விசாரிப்புக்கு உட்படுத்தப்படுத்திய பின் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். பூங்காவிலிருந்தோ அல்லது நகராட்சி குளியல் இடங்களிலிருந்தோ நேரடியாக அந்த கால்வாயை தாண்டி இருக்கும் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். அந்த சிறைக்கு சென்றவர்கள் யாரும் திரும்புவதில்லை. அப்படி திரும்புவர்கள் யாரும் வாழும் அருகதையோடும், எந்த அன்பையும் ஏங்கும் நிலையிலுமில்லை.
போர் முகாமிலும் ஒருவேளை நான் பிடிப்பட்டிருந்தால் இறந்திருப்பேன்.
ஐந்து வருடம் முகாமிலிருந்து வந்த காரணத்தால், நான் வீதியில் நடக்கும் போது கூட கைதாகிவிடும் பயத்தோடும் மன உளைச்சலோடுமே நடந்து போகிறேன். கையும் களவுமாக பிடிபடுவாய் என்று குற்ற உணர்வை பெருக்கும் இந்த வாக்கியத்திற்கு எதிரான எனது எந்த வாதமோ, சட்டபூர்வமான ஆதாரங்களோ வரப்போவதில்லை. நான் எனது மௌனத்தை என்னுடன் சுமந்து செல்கிறேன். என்னை நானே ஆழ்ந்த மௌனத்துடன் புதைத்துக் கொண்டேன். அதன் பின் என்னுடைய வார்த்தை என்றும் அவிழ்த்தெடுக்க பெறவில்லை. நான் ஒவ்வொரு முறை பேசும் போது என்னை வேறு விதமாக அடைத்து வைக்கவே முயற்சிக்கிறேன்.
கடந்த வேனிற்கால சந்திப்பின் போது நான் வீட்டிலிருந்து பனிமரங்கள் நிறைந்த அந்த பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, பிரதான வளைவு சாலையில் இருக்கும் செயின்ட் டிரினிடி ஆலயத்திற்கு சென்றேன். விதியை சந்தர்ப்பவாதம் என்றும் சொல்லலாம். நான் வருங்கால நிகழ்வுகளை அப்போதே பார்த்தேன். மேடைக்கு அடுத்திருந்த தூணருகில் சாம்பல் நிற அங்கி அணிந்திருந்த பாதிரியார், ஒரு வெள்ளாட்டை கழுத்தைச் சுற்றி சுமந்திருந்தார். அந்த ஒரு அமைதியின் குறியீடு. நீங்கள் சில விசயங்களை பேசுவதில்லை. ஆனால் உங்கள் கழுத்தை சுற்றி இருக்கும் அமைதி உங்கள் வாயிலுள்ள அமைதியை போலில்லை என்று கூறும் நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கு முற்றிலுமாக தெரிந்தே பேசுகிறேன். முகாம் இதற்கு முன்பாக போகும் முன், அங்கே இருந்த காலம் மற்றும் அங்கிருந்து வந்து விட்ட பின்னும் ஏறத்தாழ இருபத்து ஐந்தாண்டு காலம் நான் என் குடும்பத்தாலும், நாட்டாலும் பயத்தோடு மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். சற்றே நிலை பிறண்டிருந்தாலும் நான் ஒரு குற்றவாளியாக சிறை பிடிக்க பெற்றிருப்பேன். என் குடும்பமும் என்னை பொறுப்பேற்றிருக்காது. இந்த வளைந்து நெளிந்த தெருக்களில், விற்பனை பொருட்களை கண்காட்சிக்காக வைத்திருக்கும் பெட்டகங்களும், வீடுகள் மற்றும் புகைவண்டியின் ஜன்னல்களும், நீர் ஊற்றுகளும், நீர் நிறைந்த குளங்களும் எனக்கு கண்ணாடி போலவே காட்சியளிக்கின்றன. அவை பயங்கலந்த என்னை பிரதிபலிக்கின்றன. என்னைக் கண்டே நான் பயங்கொள்ளுமளவில் நான் ஒளிக்கதிர்கள் ஓடுருவ கூடியவளாகவே இருக்கிறேன்.
என் தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். அவர் தன்னுடைய தொழில் சம்மந்தமான புதிய வார்த்தைளான “வாட்டர் கலர்” என்பதை உபயோகிக்கும் போது நான் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகிறேன். என் தாய் என்னை உருளை கிழஙகு உண்ண முள் கரண்டியை உபயோகப்படுத்த கூடாது என்கிறாள். இரைச்சி சதைகளை உணவே முள் கரண்டி உபயோகிக்க வேண்டுமென்கிறாள். முள்கரண்டியும் உருளைக்கிழங்கும் இருக்குமிடத்தில் அவள் எப்படி சதைகளை பற்றி பேசலாம்? என்ன விதமான சதைகளை பற்றி அவள் கூறினாள்? ஆனால் எங்கள் கூட்டமோ சதை என்பதற்கான பொருளை முற்றிலுமாக மாற்றி விட்டது. நானே எனக்கு எதிரியானேன். வார்த்தைகள் எதிர்பாராமல் வந்து விழுந்து என்னை காட்டிக் கொடுத்து விட்டது.
என்னுடைய தாயாருக்கும், முக்கியமாக தந்தைக்கும் நகரத்தில் இருந்த அனைத்து ஜெர்மானியர்களையும் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய செந்நிற முடியையும் வெள்ளையான முழங்கால் வரை அணியும் கால் மெஷ்சும் அவர்களில் நம்பகத்தன்மைக்கு உகந்தது ஆகும். ஹிட்லரின் சதுர கரும் மீசையும், ட்ரன்சில்வேனியனின் ஜெர்மனிய பகுதியும் ஆரியர்களின் இனமே. என்னுடைய ரகசியமென்று என்னுடலில் ஆராயப்பட்டது மிகவும் வெறுப்பிற்குரியது. ரூமேனியர்களின் கூற்றுப்படி நான் ஒரு ஆரியனில்லாதவனுடன் தொடர்புடையவள்.
நான் என்னுடைய குடும்பத்திலிருந்து தொலைதூரம் போக நினைத்திருந்தேன் அது முகாமென்றாலும் அங்கேயே தான் செல்ல விரும்பினேன். நான் வருந்தியதெல்லாம் என்னுடைய தாயாருக்காக மட்டுமே. என்னைப்பற்றி எவ்வளவு முழுமையாக அவளுக்கு தெரியும் என்று நான் அறியவில்லை. அவளை விட்டு அகன்றிருக்கும் போது அவள் என்னைப் பற்றி எத்தனை முறை நினைப்பாரோ அத்தனை முறை நான் அவளை பற்றி நினைப்பதில்லை.
ஆலயத்தில் அமைதி என்ற ஆட்டுக்குட்டியை தன் கழுத்தை சுற்றி அணிந்திருந்த பாதிரியார் அருகில் திறந்த அறையில் ஒரு கல்வெட்டுள் நாம் நகர்தலுக்கான நேரம் எப்போதோ இறையால் குறிக்கப்பட்டு விட்டது என்றிருந்தது. நான் என் புறப்பாட்டிற்கான ஆயத்தத்தின் போது என்னுடைய புறப்படுவதற்கான நேரம் தொடங்கி இருப்பதை அந்த கல்வெட்டின் வழி உணர்ந்தேன். நல்லவேளை நான் கடும் பனிக்கு முன்னே இருந்து நடக்கும் போரிலிருந்து வெளியே ஒன்றும் செல்லவில்லை. முட்டாள்தனமான தைரியத்தோடு மிக சிரத்தையாக என் உடைமைகளை சேகரிக்க தொடங்கினேன். நான் எதையும் வேண்டாம் என்று மறுக்கவில்லை. கையுறை, முழங்காலில் இருந்து பாதம் வரை அணியும் குளிர்க்கு அடக்கமான துணிகள், வெல்வெட்டாலான கழுத்துப் பட்டையுடைய கோட், இவற்றில் எதுவும் எனக்கு பொருத்தமானது இல்லை. ஆடைகள் உகந்தனவாக இல்லை என்றெல்லாம் யோசிக்கும் அவகாசமில்லை அச்சமயம். புறப்படவேண்டும். அதற்கான நேரம் வந்தாகி விட்டது. அந்த நேரம் மட்டுமே அடுத்த கட்ட வாழ்வை தீர்மானிப்பதாக இருந்தது. ஆடைகளோ அல்லது ஏனைய பொருட்களோ இல்லாவிடிலும் நம்மை பெரியவர்கள் ஆக்கி விடுவது காலமல்லவா? இந்த உலகம் நவீன ஆடை அணிந்த பந்து அல்ல. ஆயினும் இந்த கடுங்குளிர் காலத்தில் ரஷ்யாவிற்கு போகும் யாரும் மிகுந்த முட்டாள்தனமுள்ளவர்களே ஆவர்.
இரண்டு காவல் அதிகாரிகள் ஒரு ரூமானியர் மேலும் ஒரு ரஷ்யர் வீட்டுக்கு வீடு ரொந்து சுற்றி பட்டியல் எடுத்தனர். அவர்கள் இந்த பட்டியல் முகாமிற்காக தயாரிக்கப்படுவை என்று எங்கள் இல்லங்களில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் சிறுவர்களை ரஷ்யா அனுப்ப பட்டியல் எடுப்பதாக சென்னார்கள். அவர்கள் முகாமிற்கு என்று சொல்லி இருந்தால்கூட நான் என்னுடைய பிரகாசமான குழந்தை குறும்புத்தனத்தோடு கூடிய முட்டாள்தனத்தில் தானிருந்தேன். அப்போது எனக்கு பதினேழே வயதாயிற்று. வாட்டர் கலர், சதை என்ற வார்த்தைகளே என்னுள் செல்லும் அளவு புத்தியிருந்தது. முகாம் என்ற வார்த்தையின் பொருள் உணராத செவிடாக இருந்தது என்னுடைய மூளை அப்போது.
என்னுடைய தாய் உருளைக் கிழங்கு, முள்கரண்டியுடன் சேர்த்து சதை என்ற வார்த்தையையும் கற்று தந்த அந்த காலம், நான் ஒரு குழந்தை போல எங்கள் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய தாய் வராண்டாவிலிருந்து இப்போதே சாப்பிட வரவில்லை என்றால் நீ எங்கே வேண்டுமானாலும் சென்று தங்கிக்கொள்ளலாம் என்றாள். ஆனாலும் நான் சற்றே நேரம் தாழ்த்தி சாப்பிட சென்றதால், நீ உன்னுடைய உடமைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் இடத்திற்கு செல்ல விருப்பு இருக்கின்றதோ அங்கேயே செல் என்றாள். சொன்னதோடு மட்டும் அல்லாமல் என்னுடைய அறை வரை என்னை தரதரவென்று இழுத்துச் சென்று என்னுடைய குளிருக்காக அணியும் தொப்பி மற்றும் என்னுடைய ஜாக்கெட் இரண்டையும் ஒரு சிறு பையில் அடைத்தாள். “நான் உங்களுடைய குழந்தை தானே நான் எங்கே செல்வேன்” என்று நான் அப்போது கேட்டேன்.
பலரும் பயணத்திற்கான பொருட்களை சேகரிப்பதும் அதை பையில் தகுந்தபடி அடைப்பதும் பாடுவதும் சாமி கும்பிடுவதும் போல தானே வரும் ஒரு விசயமென்றும் அதற்காக தனிப்பயிற்சி தேவையற்றது என்றும் நினைக்கிறார்கள். என்னுடைய தந்தை ரூமானிய படையில் பணியாற்றச் சென்ற போது எதையுமே ஆயத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. சிப்பாய்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களுடைய சீருடையாக அளிக்கப்பட்டதே அதன் காரணமாகும். குளிரில் மேற்கொண்ட பயணம் தவிர பிரத்தியேகமாக எந்த ஆயத்தமும் அவர் செய்யவில்லை. நம்மிடம் சரியான விசயங்கள் இல்லாத போது அதை அடையும் முயற்சியில் நம்மை நாமே முன்னேற்றிக் கொள்கிறோம். ஆனால் சில சமயம் முற்றிலும் தவறான விசயமே நமது தேவைக்கு அருகில் வருகின்றது. பின் அவையே நமக்கான சரியான விஷயங்களாகவும் ஆகின்றன. ஏனென்றால் அவை நம்முடைய விஷயங்களாகி விடுக்கின்றன.
என்னுடைய தாயார் கிராமபோன் இசைக்கருவியை வரவேற்பறையில் இருந்து சமையல் அறைக்கு கொண்டு வந்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு திருப்புலியின் உதவியோடு அந்த இசைகருவியை நான் ஒரு சூட்கேஸாக மாற்றினேன். சுழலும் தட்டையும், திருப்பு பலகையையும் கழற்றிவிட்டு அந்த வெற்றிடத்தை தக்கை கொண்டு அடைத்தேன். உள்ளிருந்த சிவப்பு நிற வெல்வெட்டை அப்படியே விட்டுவிட்டேன். கூடவே முக்கோண வடிவ திருகையும் நான் அகற்றவில்லை. இந்த பெட்டியின் அடியில் நான்கு புத்தகங்களை வைத்தேன். ‘பௌஸ்ட்‘, தடிமனான துணியால் பைண்ட் செய்யப்பட்டது. ‘ஜாரதுஸ்ரா‘ மெல்லிய புத்தகம் வென்ஹெபேரால் எழுதப்பட்டது மேலும் எட்டு-நூற்றாண்டு-கவிதைகள், நாவல்கள் நான் எடுத்து செல்லவில்லை. நாவல்களை ஒரு முறையே படிக்க முடியும். அவை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு ஏதுவானதாக இருக்காது. அதன் மேல் என்னுடைய குளியல் பொருட்கள் அடங்கிய பையையும் வைத்தேன்.
என்னுடைய குளியல் அறை பையில் சிறிது கழிப்பறையில் உபயோகிக்கும் காகிதமும், சவரத்திற்கு பின் உபயோகிக்கும் பொருளும், சவரத்திற்க்காக உபயோகிக்கும் சௌக்கரமும், ஒரு சவரக்கத்தியும், சவரத்தின் போது உபயோக்கிக்கும் புருஸும், சில மருத்துவப் பொருட்களும், கை சௌக்காரமும், இரண்டு நகவெட்டியும் இருந்தன. இதைத்தவிர குளிருக்கான காலுறை ஒரு ஜோடியும். முழங்கால் வரை அணியும் காலுறையும். சிவப்பு வெள்ளை கட்டமிட்ட சட்டையும், இரண்டு கால் சட்டையும் வைத்தவுடன் சூட்கேஸ் நிறைந்து விட்டது.
இதைத் தவிர தனியாக ஒரு படுக்கை விரிப்பும், ஒரு ஜாக்கெட் மற்றும் முழங்காலிருந்து பாதம் வரை கட்டிக்கொள்ளும் தோலாலான இரண்டு துணிகளும் கட்டப்பட்டது.
மேலும் ஒரு சிறு பையில் பன்றியின் பின்னங்காலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகை ஒரு டின்னும், வெண்ணை தடவிய நான்கு சாண்டியா வகை ரொட்டி துண்டுகளும், சென்ற கிருஸ்துமஸில் பின் மீதமிருந்த சில பிஸ்கட் வகையும் மேலும் தண்ணீர் ஒரு பீக்கர் அளவும் இருந்தது.
என்னுடைய பாட்டி தந்த சூட்கேஸ், படுக்கை பொருட்களடங்கிய மூட்டை மேலும் என்னுடைய கைப்பை யாவையும் கதவருகே வைத்தார்கள். இரு காவல் அதிகாரிகள் இரவு வந்து என்னை அழைத்து செல்வதாக சொல்லி இருந்தார்கள். என்னுடைய உடைமைகள் எல்லாம் கதவருகே தயார் நிலையில் இருந்தன.
நான் இரண்டு கால்சட்டையையும், ஒரு நல்ல குளிர் தாங்கும் சட்டையையும், ஆட்டு ரோமத்தில் செய்யப்பட்ட காலுறையும், சித்தி தந்திருந்த பச்சை வண்ண கையுறையும் அணிந்தேன். என்னுடைய காலணியில் கயிறுகளை கட்டிக்கொண்டிருந்த நேரம் திடீரென எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடுமுறை நாளில் நாங்கள் ராட்சச சக்கரத்தில் சுற்றும் போது நடந்தது நினைவுக்கு வந்தது. அன்றைய தினம் என் அம்மா அவளே தயாரித்த வெள்ளி நிற உடையணிந்திருந்தாள். நகரில் நடுவில் நடந்த போது நீண்ட புல்தரையில் அவள் கீழே விழுந்து தான் இறந்து விட்டதை போல நடித்தாள். எனக்கு அப்போது எட்டு வயது. எனக்கு ஆகாயம் கீழே விழுவதை போலே எனக்கு பயமாக இருந்தது. அதில் நான் மூழ்கி விடுவேனோ என்று பயந்தேன். என் அன்னை குதித்தெழுந்து என்னை அதிர்ச்சியூட்டியபடி, “என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா, நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்“ என்றாள்
என்னுடைய காலணி தற்சமயம் மிக இறுக்கமாகி விட்டது. நான் சாப்பாட்டு மேசையருகே அமர்ந்து நள்ளிரவுக்காக காத்திருந்தேன். நடு இரவைத் தாண்டி விட்டது. ரோந்துப்படை வர தாமதமாகி விட்டனர். அந்த இரண்டு மூன்று மணி நேரம் கடப்பது மிக கொடுமையாக இருந்தது. என்னுடைய தாய் எனக்கான வெல்வெட் கழுத்துப்பட்டை பொருத்திய கோட்டை தாங்கி நின்றாள். நான் அதை வாங்கி மாட்டிக் கொண்டேன். அவள் அழத் தொடங்கினாள். நான் கையுறையையும் மாட்டினேன். மரங்களால் ஆன வீட்டை விட்டு வெளியே வரும் நடைபாதையில் என்னுடைய பாட்டி சொன்னாள் “நீ நிச்சயம் திரும்ப வருவாய்”
நான் இந்த வரிகளை நினைவில் கொள்ள ஒரு நாளும் யத்தனித்ததில்லை. ஆனாலும் இந்த வரிகளை நான் என்னுடன் முகாமிற்கு எடுத்துச் சென்றேன். அந்த வரிகள் என்னை எப்படி தொடர்ந்தன என்று எனக்கே தெரியவில்லை. எனக்கான நான் எடுத்து சென்ற புத்தகங்களை விட இந்த வரிகளே என்னை அதிகம் வலுவாக்கியது. அந்த வரிகள் என் உணவைப் போல என் கூடவே இருந்தன. நான் திரும்பவும் வந்தேன் ஆகையால் மிக அழுத்தமாக செல்கிறேன் அந்த வரிகளே என்னை உயிர்ப்பித்தது.
ஜனவரி 14, 1945 அதிகாலை மூன்று மணிக்கு ரோந்து படையினர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது -15C கடுங்குளிர் இருந்தது. எங்களை ஒரு கன வாகனத்தில் வெற்றாய் இருந்த நகரத்திற்குள் இருக்கும் ஒரு கண்காட்சி அரங்குக்கு அழைத்து சென்றார்கள். அது ஒரு விழாக்கால அரங்கு. முகாமிற்கு அனைவரையும் ஒருமிக்கும் பொருட்டே அந்த அரங்கில் அனைவரும் இறக்கிவிடப்பட்டோம். அரங்கில் கிட்டத்தட்ட மூன்னூறு பேர் அடைத்தாற்போல் இருந்தோம். அரங்கில் தரையில் தரை விரிப்பும் படுக்கை விரிப்பு போலும் விரிக்கப்பட்டிருந்தது. சீருந்துகள் காலை வரை அருகிலிருந்த கிராமங்களில் மக்களை பிடித்து வந்த வண்ணமிருந்தன. காலைக்குள் அந்த அரங்கில் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் நிறைந்தனர். இரவில் எண்ணுவது நேர விரயம் போலிருந்தது. இரவு முழுவதும் அரங்கில் விளக்குகள் எரிந்த வண்ணமிருந்தன. மக்கள் அனைவரும் அரங்கை சுற்றி சுற்றி வந்தனர் தங்களுக்கு தெரிந்த யாரேனும் இருக்கின்றார்களா என்று.
அனைவரும் அருகிருந்தவர்களிடம் மேலும் வருபவர்களை ரயில் நிலையங்களில் வைத்திருப்பதாகவும், புதிதாக படுக்கைகள் செய்ய படுவதாகவும், தரை விரிப்புகள் போடப்படுவதாகவும், ரயிலேயே உணவு தயாரிக்கும் ஏற்பாடாக அடுப்புகள் பொருந்தப்படுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அமைதியாக பேசப்பேச அடுத்தவர்களின் விழிகள் விரிந்த வண்ணமிருந்தது. அவர்கள் அனைவரும் அமைதியாக அழத்தொடங்கி இருந்தனர். காற்றில் பழைய உல்லன் ஆடைகளின் வீச்சம் அடிக்கத் தொடங்கி இருந்தது. அந்த வீச்சத்தின் கூடவே பயமென்ற வியர்வையின் வாடையும் கலந்து வந்தது. கூடவே ரொட்டித் துண்டுகளை வாட்டும் வாடையும் வெண்ணிலா பிஸ்கேட்டுகளின் வாடையும் அடித்தது.
ஒரு பெண்மணி தன் தலையில் காட்டி இருந்த துணியை அவிழ்த்தாள். அவள் கிராமத்தில் வசித்தவள். நிச்சயமாக அவள் தலை முடி ஒரு பெரிய கொண்டை வைத்து அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது கொண்டை ஊசிகளை காணவில்லை. ஏதோ மிக சிறிய குத்தூசிகளால் அவை இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குத்தூசிகளால் அவள் அடர்ந்த முடிகளை சரிவர படிவிக்க முடியாது அவள் தலைமுடி ஒரு படுக்கை போல் காட்சியளித்தது.
நான் ஒரு பார்வையாளர் போல் என் கால்களை மடித்து என்னுடைய உடமைகளோடு அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் எல்லாம் என்னை உறக்கம் ஆட்கொண்டது. அதில் நானொரு கனவைக் கண்டேன்.
நானும் என்னுடைய தாயும் ஒரு சுடுகாட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கல்லறை அருகில் நின்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் நிற்குமிடத்தில் நடுவில் ஒரு வெண் சாமரம் போன்ற கதிர்களைக் கொண்ட செடியொன்று என்னில் பாதி உயரமுள்ளது வளர ஆரம்பிக்கிறது. அதன் தண்டில் ஒரு கைப்பிடி மற்றும் சிமிழியோடு கூடிய சிறிய சூட்கேஸ் இருக்கின்றது. அதன் சிமிழியை திறந்தால் விரல் அகலம் கொண்ட ஆழ் சிவப்பு நிற வெல்வெட் தெரிகின்றது. யார் இறந்து விட்டார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அன்னை என் கோட் பையில் இருந்து சாக்கட்டியை எடுக்கச் சொன்னாள். என்னிடம் இல்லை என்று சொன்னேன். ஆனால் என்னுடைய பையில் தேடிய போது தையற்காரர் உபயோகிக்கும் சாக்கட்டி இருந்தது. அந்த சூட்கேஸில் ஒரு சிறிய பெயர் எழுத வேண்டும் என்றாள். “ருஹ்ட்” என்று எழுத சொன்னாள். இங்கே யாரும் “ருஹ்ட்” என்ற பெயரில் இல்லை. நானும் “ருஹ்ட்” என்று பொய் எழுதினேன்.
என்னுடைய கனவில் இருந்து இறந்தது நான் தான் என்று எனக்கு தெளிவாக தெரிகின்றது ஆனால் அதை நான் என் அன்னைக்கு இன்னும் சொல்லவில்லை. நான் கிளம்ப ஆயத்தமாக இருந்தேன் அந்த சமயம் குடை வைத்திருந்த ஒரு வயதானவர் என்னருகே அமர்ந்து மிக அருகில் வந்து காதோடு “ என்னுடைய மைத்துனன் வர ஆவலோடு இருக்கின்றான் ஆனால் அரங்கின் காவலாளிகள் எல்லாபுரம் இருந்து கொண்டு அவனை வரவிடாமல் தடுக்கின்றனர்“ என்றார்.
நாங்கள் நகரத்தை விட்டு இன்னும் கிளம்பவில்லை. அவன் இங்கே வர இயலாது. நானும் வீடு திரும்ப முடியாது. அவருடைய வெள்ளி பொத்தான்களில் இருந்து ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. அந்த பறவை பார்க்க காட்டு வாத்து போலவோ அல்லது கடல்புறாவையோ ஒத்திருந்தது.
இதை நான் கவனித்தற்கு அவருடைய உடையில் மேல் பரப்பிலிருந்த அலங்காரமே காரணியாயிற்று. நானும் மேலும் குனிந்த போது நங்கூரம் போல் ஆனேன். அவர் கையில் இருந்த குடை எங்களுக்கு இடையே ஒரு முதியவர்க்கு உதவும் நடைபயற்சி குச்சியை ஒத்திருந்து. “இதை நீங்கள் உங்களுடன் எடுத்துவரப் போகிறீர்களா“ என்றேன் நான். “நிச்சயமாக.. அங்கிருக்கும்போதும் இங்கேயிருப்பதாக உணரச் செய்ய உதவும் இது“ என்றான் அவன்.
நாங்கள் இங்கிருந்து எங்கே, எப்போது அரங்கிலிருந்து புகைவண்டி நிலையம் செல்வோம் என்று சொல்லப்படவில்லை. நாங்கள் செல்ல அனுமதிக்கப்படுவோமா? அது எப்படிப்பட்ட இருப்பிடமாக இருந்தாலும் ஒரு கன வாகனத்தினுள் இருந்தாலும் அங்கே என்னுடைய கிராமபோன், வெல்வெட் கழுத்து பட்டையுடைய கோட் இவற்றோடு ரஷ்யாவிற்கு நான் செல்ல வேண்டும். நாங்கள் புகைவண்டி நிலையத்தை எப்போது அடைந்தோம் என்று தெரியவில்லை. எங்களை அழைத்து சென்ற கனரக வாகனம் மிக பெரியதாக இருந்தது. அதில் ஏறி இறங்கும் முறை கூட எனக்கு மறந்திருந்தது. அந்த கனரக வாகனத்தில் நாங்கள் நீண்ட இரவுகளையும் பகலையும் கடந்திருந்தோம். எங்கள் பயணத்தை முற்றிலுமாக அந்த கனரக வாகனத்திலேயே கழித்தது போலும் இருந்தது. எங்களில் யாருக்கும் எவ்வளவு நேரம் பயணித்தோம் என்பது தெரியாது. இவ்வளவு நேரம் பயணக்கிறோம் என்றால் எங்கோ மிக தொலை தூரம் பயணிக்கிறோம். எவ்வளவு நேரம் பயணிக்கிறோமே அவ்வளவு நேரம் நமக்கு ஒன்றும் நேரப்போவது இல்லை. பயணித்துக் கொண்டே இருக்கும் வரை எல்லாம் நல்லவையே.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் அனைவரும் அவரவர் உடமைகளை தங்கள் தலைக்கடியில் வைத்திருக்கின்றார்கள். பேசியபடியும் பேசாமலும், உண்டும் உறங்கியபடியும் இருக்கின்றார்கள். ஸ்னாப் திரவமும் பாட்டில் பாட்டிலாக தரப்படுகின்றது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் நாங்கள் பயணிக்க பழக்கப்பட்டோம். ஒருவருக்கொருவர் பாசமாக இருக்க தொடங்கினோம். ஒருவர் கண்களை ஒருவர் பார்த்தபடியும், வெளியே பார்த்தபடியும் எங்களது காலம் கழிந்தது.
000
உன்னதம் – நவம்பர் 2009 இதழில் வெளியானது.