Monday, August 26, 2013

உலகின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் மௌனத்தின் சலனம்


நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் (-1) கவிதைத் தொகுப்பினை வாசிக்க நேர்ந்தது. மென்பொருள் துறையில் பணிபுரியும் பலருக்கு (நான் உட்பட) கணிணி வைரஸ் போல் கவிதை எழுதும் பொழுதுபோக்கொன்றும், அவர்களுக்கென்ற வலைப்பூவுமிருக்கும். சில வருடங்களுக்கு முன் ஒரு முறை ஏதேச்சையாக இவர் கவிதையொன்றை வாசிக்க நேர்ந்து தெறித்து ஓடியவள் நான். பின்னர் இவர் அனுப்பிய சிறுகதையை உயிரோடை வலைத்தளத்தில் நடைபெற்ற போட்டிக்கென வாசிக்க நேர்ந்தது. அக்கதைக்கும் என்னை மிரட்டி ஓடவிட்ட கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. அதன் பின்னர் அவ்வப்போது இவர் வலைத்தளத்தில் இவர் கவிதைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். அதற்கு பின்னூட்டமளிப்பதும் வழக்கம். இவர் கவிதைகளில் தலைப்பு சில மிரளச் செய்யும். அப்படிப்படத்தில் "டிராகுலாவின் காதலி" எனக்கு நெருக்கமான தலைப்பு. அவ்வரிசை கவிதைகள் எல்லாம் சற்றே வித்தியாசமானவை.

டிராகுலாவை காதலிக்கும் இவர் காதலி மிகக் கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும். டிராகுலாவாக இருந்தாலும் இவர் மிக மென்மையானவர். ஏனெனில் இவர் காதலி சொல்கிறாள் "நான் துயில்வதை கவனிப்பது உனக்கு பிடிக்கிறது / மேலும் அந்நிலை உன்னை என் ரத்தத்தைக் குடிக்க விடாமல் செய்கிறது." உண்மையான நேசம் காதலியின் துயிலையும் நேசிக்கும். மேலும் "டிராகுலாவின் காதலி" கவிதைகளின் தொடக்கத்தில் இவர் குறிப்பிட்டுக்கும் மேற்கோள்கள் இவருடைய ஆழ்வாசிப்பின் தேடலையும், 1998 ஆம் ஆண்டே கணையாழி போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கும் இவர் கவிதைகள் இவர் தீவிர கவிதைகளை வரைபவர் என்பதற்கும் அத்தாட்சியாகின்றன.

இப்படியாகத் தீவிர வாசிப்பும் எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளவியலாத எழுத்தும் கொண்ட இவரின் இத்தொகுப்பில் சில நவீன கவிஞர்களிடம் (கவிதாயினிகளும் இதில் அடக்கம், கவிதாயினி என்ற வார்த்தை ஏற்புடையதல்ல, கவிதைக்கு பாலினமில்லை எனக் கூறலாமெனினும் குற்றசாட்டினை வைக்கும் போதும் அதுவும் ஒரு பெண்கவி வைக்கும் போது வையகம் கவிஞர்களுக்கு ஆண்பாலையே சூட்டிக் களிக்கிறது) இருக்கும் வெளிப்படையாய் பேசுகிறோமென்று உடல் உறுப்புகளை பற்றி கொச்சையாய் முகம் சுழிக்கச் செய்யும் வாசங்கள் இல்லாதது மிக ஆறுதலான விசயம். இவர் தனது 
காதலியின் காமத்தை குறியீடாகச் சொல்லும் "அடங்காது அலையும் மழைக்காடு நீ" என்பதே எனக்குத் தெரிந்தவரை மிக அதிகபட்சமான காதல் வசனம். சில இடங்களின் விரச ரசமான சொற்றொடர்கள் இருக்கின்றன ஆயினும் கவிதையுள் அடங்கிய மெல்லிய முனகலாகவே.

இழந்த காதலை மிக இயல்பாக அதிகம் சாடல்களின்றி, "நீ பறக்க தயாராகிறாய் நான் இறக்கத் தயாராகிறேன்" என்றும்,   பிரிந்த பின்னும் தன்னுள் உருக்கும் நிலையில் "உன் குரலை மட்டும் எனக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டாய் அது இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது" என்று கடந்து போகிறார். "இப்படித் தான் காதல் மேல் எனக்கிருக்கும் காதல் என்னை வேட்டையாடிக் கொன்றது" என்று பிரிவின் துயரை பிசிரில்லாமல் பதிவு செய்கிறார்.

வித்தியாசமான அழகியல் வாசகங்களை, உவமைகளை உள்ளடக்கியது இந்தக் கவிதைத் தொகுப்பு. காக்கையை 'கருப்பு Angel' என்கிறார். "ரயில் விலங்கு ஓடிக் கடக்கும் மலைபிரமிட்கள்" படிக்கும் மனதில் கூட ரயில் விலங்காகிறது. "தூக்கம் வராதவன் புரண்டு புரண்டு படுப்பதைப் போல் கடல்" என்ற வரிகள் யார் தந்த துயரம் உன்னை இந்த பாடுபடுத்துகின்றது என்று “யார் அணகுற்றனை கடலே” என்ற சங்கப்பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறார் கடல் போல் புரண்டு புரண்டு படுக்கும் உறக்கமற்ற இவர் இரவு தந்த கவிதை வரிகள் மிக ரசனைக்குரியதாகவே இருக்கின்றது, "தென்னையின் நீள் விரல்களில் வழியும் நீர்" என்ற வரிகள் மழையில் பின் பொழுதும் கூட தொன்னை கீற்றின் பசுமை வந்து ஒட்டிக் கொள்கிறது. சில அழகியல் ரசனையோடு ரொமாண்டிஸ வரிகளும் இருக்கின்றன இந்த தொகுப்பில் "கழுவப்பட்ட ப்ளம்ஸ் பழங்கள் காத்திருக்கின்றன" (யப்பா என்ன ஒரு ரொமாண்டிக்கான காத்திருப்பு) "மின்னல் கோட்டோவியம் பூத்துச் சாகும்"  ஒவியம் வரைந்தததும் அப்படியே இருக்கும், ஆனால் மின்னல் மறையும் இதையே பூத்துச் சாகுமென்று சொல்லியிருக்கிறார். "வானம் தன் பூனைக் கண்களைத் திறந்து என்னை பார்த்தது" பூனை கண்களை திறந்தால் அதுவே பகலோ?

மேலும் அப்பார்ட்மெண்ட் வாழ்வில் வௌவாலெனத் தொங்கி கொண்டிருக்கும் நகர வாழ்வின் பரபரப்பை, ஒரு செயற்கைத்தனத்தை, இடப்பாற்றாக்குறையை, அவலத்தை சில கவிதைகளில் சொல்லி இருக்கிறார். "உலோகக் கனவில்" என்று சொல்லும் வரிகளில் கனவையும் கனிமத்தையும் இணைக்கும் இவர் நகர பரபரப்பு கனவை சுமையாக்குவதாய் சொல்லாமல் சொல்கிறார், "புன்னகையை மின்னஞ்சல் செய்என்று நகர காதலின் ஒட்டாதனத்தை இயலாமையை பதிவு செய்கிறார், "இருக்க இடமற்று சமையலறை மூலையில் கூடு கொள்ளும் கடவுளர் கூட்டம்" என்று இடப்பாற்றாக்குறையும் சொல்கிறார், "வீடெல்லாம் ஓடித்திரிகிறது playschool விட்டு வந்த குழந்தையின் அழுகுரல்" என்ற வரிகளை படிக்கும் போதே ஒரு அழுத்தம் வந்தமர்ந்து கொள்கிறது மனவெளியில். மேலும் நகரத்து அவலத்தை "இந்த மழைக் காலத்திலும் தவளைச் சத்தம் கேட்காத நகரம்" என்றும், "பாலிதீன் பைகள் பூத்த நிலத்தை" நகரத்தில் சீராளியும் இயற்க்கையும் கவிதையாக்க முடிகிறது நந்தாவால்.

இருளை விதவிதமாய் பதிவு செய்கிறார் ஒரு கவிதையில். அது தன் அமைதியின்மையா அல்லது பகலிலும் இரவிலும் இடையறாது ஒளிவிடும் நகரத்து தொழிற்கூடங்கள் அலுவல விளக்குகள் மேலிருக்கும் சலிப்பா என்பது தெரியாத பதிவு "ஒரு மலர்ந்த சிவப்பு ரோஜாப் பூவின் மைய இருள் போதும் நான் துயில்வதற்கு"

மேலும் எந்த வகையிலும் அடங்காத சில வித்தியாசமான வரிகளும் உண்டு, "அந்திச் சூரியனில் நனைந்த பஞ்சு மேகங்கள் மிதந்து செல்கின்றன" இது ஒரு மருத்துமனையில் வெளிப்புரத்தில் எரிந்த பஞ்சு துண்டுகளை நினைவுபடுத்துகிறது. "காட்சி அஜீரணம்" ஒவ்வாத காட்சிகளை கண்டபின் அந்த உணர்வை பதிவு செய்ய இதை விட பொருத்தமான வரிகள் எனக்கு கிடைக்கவில்லை, "கண்ணுக்குத் தெரியாத உன் சிறகுகளால் உன் வெற்றுடலை மூடிக்கொள்" தேவதைகளுக்கு சிறகுண்டு உடையில்ல இவர் சொல்ல வந்தது இதையும் தாண்டிய உணர்வு. சில பெண்களுக்கு ஏன் சில ஆண்களுக்கும் இவ்வாறான கண்ணுகளுக்கு தெரியாத சிறகுகளிலிருந்தால் இறக்கும் போதேனும் நிம்மதி கிடைக்கும். "காற்றில் ஓவியம் தீட்டிய உன் வாத்தியக் குரல்" குரலை தூரிகையாக்கி இசையை ஓவியமாக்கி காற்றை தாளாக்கி இவர் கவிதை சிருஷ்டி தொழிற்சாலையாகி போகிறது, "தூரத்தில் ரெண்டு சிகரெட்டுகள் நடந்து வருகின்றன", இப்படியாக.

நந்தா அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக, ஒரு ரயில் பிரியராக இருக்க வேண்டும். ரயிலை குறியீடாக பல கவிதைகளில் சொல்லி இருக்கிறார். "சுகபூகம்பத் தூக்கம்" (அட போட வைக்கும் வரி), "ரயில் கூரையில் மழைச்சலங்கைகளின் நர்த்தன இசையுடன்", மழையும் ரயிலும் என்ன ஒரு இன்பமாயமான கூட்டு. "தண்டவாளக் கடலில் மிதக்கும் ரயில் படகு" ரயில் ஒரு குறீயாடாகி நகரும் பொழுதில் படகு போலும் இவர் உணர்வில் உதிக்கிறது, "ரயில் பெட்டியின் தொட்டிலாட்டத்தில்", தண்டவாளத்தை கடலாக்கி ரயிலை படக்காகிது போதாமல் இவர் ரயில் இவரை தொட்டிலாட்டி தாலாட்டாடுகிறது. "தண்டவாள தாயக்கட்டைகள் உருள ரயில் காய் நகர்வில்" என்று நிறைய கவிதைகளில் விதவிதமாய் ரயிலை வர்ணித்திருக்கிறார்.

பல குறுங்கவிதைகளை உள்ளடக்கிய நெடுங்கவிதைகள் பரவிக் கிடக்கின்றன தொகுப்பெங்கும். இதை தவிர சில ஹைக்கூ கவிதைகளுமிருக்கின்றன இத்தொகுப்பில். எதைச் சொல்ல எதை விட என்பது போன்றவை அவை. உதாரணத்துக்கு "ஆற்றில் ஓடும் சூரியன் சூடாகவா இருக்கும்", "குன்றின் மேலிட்ட விளக்கு / பூமியிலும் நட்சத்திரங்கள்" போன்ற வரிகள்.

பிரம்மாண்டம்ரோஜாப்பூ கடவுள், உடைபடும் மௌனம், மழை கேட்டல் என்று பல கவிதைகளை இத்தொகுப்பின் மிகச் சிறந்த கவிதைகளென்று சொல்லி முடிக்கும் முன், சில கவிதைகளில் கூறியது கூறல் முக்கியமாய் ரயில் சார்ந்த கவிதைகளில், மேலும் "அப்பார்ட்மெண்ட் வௌவால்" இவற்றை தவிர்த்தும், அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளை தவிர்த்துமிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்பாக வந்திருக்குமென்பது எனது கருத்து. சில ஆங்கில அல்லது அறிவியல் சொற்கள் அதன் அர்த்தம் தெரியாதவர்களை சென்றடையாமல் போவதற்கே அதிகம் வாய்புள்ளது. நல்ல கவிதைகள் எல்லாம் சேருமிடம் சேர வேண்டும். அதனால் அடுத்த தொகுப்பினை மேலும் கவனமாய் கொணர வாழ்த்துகிறேன்.

"கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் கவனத்தோடு" இந்த கவிதை தொகுப்பினை நெருக்கிய போது "ஆப்பிளின் நடு வயிற்றில்" பிறந்த கவிதைகளில் "சிகரெட்களில் உதிர்கிறது காலம்".