Saturday, September 24, 2011

வெயில் பட்ட புல்லென வாடும் தலைவி

வெயிலுக்கு புல் வாடுவதும், பின் மழை பொழிய பொலிவு பெறுவதும் இயற்கையே. மழையை பொழிதலை கவிஞர்கள் காதல் மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு ஒப்பிடுவதும் அதற்கு உண்டான சூழலாக வர்ணிப்பதும் அந்த நாளில் இந்த நாள் வரை தொடர்கின்றது.


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?


வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

-Chennai library

திருந்திழாய்! என்ன அழகான விளித்தல் இது. இந்த பாடல் பொழிப்புரை இல்லாமலேயே புரிவது மிக வித்தியாசமன்றோ.

ஜே ஜே சில (பின்) குறிப்புகள்

இப்போதுதான் பூத்த மலர்
பறிக்கப்பட்டுவிடும் என்று
சற்றேனும் நினைக்கவில்லை“

"நல்ல சிந்தனை. யார் எழுதினது?"

"நான்தான்"

"அட அம்மிணி சரின்னு சொல்லிட்டாங்களா ?"

"இல்லைங்க.. அந்த வரிகள் வலி வேதனை"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று எனக்கு தோன்றியது.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க.. நான் செடியின் வலியை சொன்னேன்"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று
எனக்கு தோன்றியது - இது Hope.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க நான் செடியின் வலியை சொன்னேன்." -  இது Reality.

Hope and Reality is not always same.

--X--

நான் சுவீடனில் இருந்த போது வார இறுதியில் ஊர் சுற்றித்தானே ஆறு பயணக்கட்டுரைகள் அளித்திருந்தேன். சுவீடனில் பார்க்க அதிகம் இடமில்லாத காரணத்தால் ஊர் வெளியே கிளம்பும் போது வரைபடத்தில் இங்கி பிங்கி பாக்ங்கி போட்டு பார்த்து ஒரு இடம் செல்வோம். அப்படி போய்  ஒரு நிலையத்தில் இறங்கியதும் அங்கே பார்த்த ஒரு ட்ராமில் "சிக்கில ஹுட்டே" என்று எழுதப்பட்டு இருந்தது.

சிக்கில ஹூட்டே என்ற அந்த பெயர் கவர்ந்திருந்தாலும், அது வரை மெட்ரோவிலும் பஸ்ஸிலுமே அதுவரை பயணம் மேற்கொண்டிருந்தால் ட்ராமில் செல்ல எப்படி இருக்கும் என்று நினைத்து, வேறு ஒரு வார இறுதியில் அந்த ஊருக்கே செல்ல திட்டமிட்டு வரைபடத்தில் தேடி கிளம்பினோம்.

அங்கே சென்றதும்தான் தெரிந்தது அங்கே ஒரு தில்லி தாபா இருப்பது. (எங்கே போனாலும் துரத்தும் தில்லி). மேலும் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மாலும், ஒரு பனி மலைப்பிரதேசமும் இருந்தது. (ஸ்கியிங் என்ற மலை மேலிருந்து பனி சறுக்குமிடம்).

தில்லி தாபாவில் சாப்பிட்டோம், அன்னாசி லஸ்ஸி நன்றாக இருந்தது என்பதையும், அந்த ஷாப்பிங் மாலில் எல்லா பொருட்களும் மிக குறைந்த விலையில் இருந்தன என்பதையும், பனி சறுக்குமிடம் வரை வீராவேசமாக சென்று, பின் பயந்து போனாதால், என்னால் என் கூட வந்த யாருமே பனி சறுக்காமல் திரும்பியதுதான் எனது ஸ்வீட் சுவிடன் கட்டுரையிலேயே சொல்லி விட்டேனே.

சரி... ஏன் இந்த மலரும் நினைவுகள் ?

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்றாக பேசப்படும் சுந்தரராமசாமியின் ஜே, ஜே. சில குறிப்புகள்  புத்தகத்தை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிக்க, வாசிக்க நம்மையும் கதைக்குள் ஈர்த்து, நாமே நாவலின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டதான உணர்வேற்படுகிறது.

நாவலின் போக்கில் சாதாரணமாக வரும் வாக்கியங்களின் ஆளுமை மிகவும் அதிகம்.

உதாரணத்திற்கு…

"நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்" (பக்.20)

"பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போது தான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன்." (பக்.26)

"ஜேஜே சில குறிப்புகள் ஒரு நாவல் போல் இல்லாமல் ஒரு டைரி குறிப்பு போல இருக்கும் என்றும் அது தான் தமிழில் வந்த முதல் பின்நவீனத்துவ நாவல், போஸ்ட்மார்டனிசம் ஸ்டைல்..." என்றெல்லாம் கூறக்கேட்டு வாசித்துவிட்டு எடுத்த ஓட்டம் தான் மூச்சு வாங்க மேல எழுதி...

அதான் ஜே.ஜே. பின்குறிப்புகள்.