Monday, December 30, 2013

ஈதேன்ன பேருறக்கம்?

 மார்கழித் திங்கள் பக்தி இலக்கியம் சார்ந்த ஒரு பதிவை இந்த வருடம் பதிக்க வேண்டும் என்று மார்கழி முதல் தேதியே நினைத்திருந்தேன், ஆனால் சோம்பலும் தூக்கமும்(உறக்கம் என் பலகீனம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரம் உறக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்) உலகிற்கு கிடைப்பதற்கரிய பல விசயங்களை என்னை பதிப்பிக்க விடாமல் தொடர்ந்து தடை செய்கிறது. மார்கழி பனிரெண்டாம் நாள் திருப்பாவையில் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்" என்ற படித்த போது என்னை தான் சாடினாளோ ஆண்டாள் என்று தான் நினைத்தேன். இந்த பேருறக்கத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு இன்று எழுதி விடவேண்டும் என்று நினைத்து அலுவலகம் அடைந்த போது(பொதுவாக நான் எழுதுவது அலுவலத்தில் தான்) என்னை தவிர என் குழுவில் அனைவரும் விடுப்பெடுத்திருந்த காரணத்தால் இன்னொருத்தரின் சுமையை சுமக்கும் பொறுப்பு வந்து இடைபட ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை சார்ந்த எந்த பதிவையும் பதிப்பிக்க இயலாமல் போனது.  ஆனால் இன்று மார்கழி 15ஆம் நாள் சற்று எள்ளலாக ஆண்டாள் என்னை கேட்டாள் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதையோ?"  எழுத தொடங்கியாயிற்று.உறக்கத்தை பல்வேறு விதமாக சொல்லி இருக்கிறார் ஆண்டாள். என்ன இப்படி துயில்கிறாய் குர்பகர்ணன் உறக்கத்தை உனக்கு தந்து விட்டானா என்றும், துயிலணை மேல் கண் வளரும்(கண் வளர்ந்தல் - அட போட வைக்கும் சிந்தனை), பேருறக்கம்,  மந்திரிக்க பட்டது போல ஏமப் பெருந் துயில் என்று பல்வேறு உறக்கத்தை பட்டியலிட்டு மிக அதிகாலை நேரத்தில் ஊரையே உறக்கத்திலிருந்து எழுப்பி, "குள்ளக் குளிரக் குடைந்து நீராடாடி", கண்ணனை தொழ அவன் இல்லம் தேடிச் சென்று வாயில் காவலனை எழுப்பி கண்ணின் பெற்றோரை எழுப்பி, பின்னர் கண்ணனையே எழுப்பி(கண்ணனும் கடும் சோப்பேறி தான், உலகின் பெரும் பகுதி கடல், அதில் பள்ளி கொண்ட பெருமாளை, திருப்பள்ளி எழுச்சி பாடி பாடி எழுப்பியவர் எத்தனை பேர், இன்னும் அவன் எழுத பாடில்லை). இத்தனை ஆரவாரத்தோடு பத்தியை கொண்டாடுகிறாள், தென்நாட்டு ராதை ஆண்டாள்.  பக்தி இலக்கியத்தில் கடவுள் மேல் காதல் கொள்வதே பக்தியின் உச்சகட்டம்.   ஆண்டாள் மட்டுமல்ல ஆழ்வார்களில் சிலர், திருவெம்பாவை எழுதிய மாணிக்க வாசகரும் இவ்வாறே. இதில் சில்லென்று (சில்லென்றெழையென்மின் என்பதும் ஆண்டாள் சொன்னதே) பக்தியை, காதலை தேன்மதுர தமிழை இனிக்க இனிக்க சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்கு காலையில் "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்"என்ற மாணிக்க வாசகர் வரிக்கு "நீயே என் தலைவன் என்று ஒற்றைகாலில் சிவதவம் செய்யும் பூச்செடிகள்" என்ற விளக்கம் சொன்ன மாணிக்க வரிகளை படித்தது இன்றைய நாளை தொடங்க போதுமானதாக இருந்தது.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" இந்த ஒருவரி போதுமானது பிரமாண்டமான சிவபெருமானை,(பெங்களூருவில் முருகேஷ்பால்ய அருகில் ஒரு பிரமாண்ட சிவன், 108 சிவ லிங்களும் உள்ள கோவில் உள்ளது, சிவ பெருமான் என்றால் அந்த பிரமாண்ட வெண் சிலையே நினைவுக்கு வரும்) அவன் அற்புத வடிவத்தை விளக்கி கூறிட. திருவெம்பாவையிலும் துயில் எழுப்புவது போன்ற காட்சிகள் சில உண்டு, இங்கும் மார்கழி மாதத்தில் நோன்புண்டு, அதிகாலை  "குள்ள குளிர" மார்கழி நீராடலுண்டு, "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி" வண்டுகள் மொய்க்கும் குளத்தில் (அப்படின்னா பூக்கள் நிறைந்திருக்கு), கையால் குடைந்து குடைந்து குளித்தோம் என்றும் இடத்தில் வனப்பமும்(பூக்களை கைகளால் தள்ளி விட்டு விட்டு குளிக்கின்றனர்), இயற்கை எழிலை ரசனையை ரசிக்கக் கொடுத்திருக்கிறார் மாணிக்க வாசகர். "பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்"(திருவெம்பாவை - 13) இந்த பாடல் மிக வியப்புடையது கன்னி பெண்கள் நீராடும் பொதிகையையே சிவனாகவும் பார்வதியாக பாவித்து நீராடாடுவது போல் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது. மறுமைக்கு வழிகாட்டலாவே அவன் "இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதந்தந்தருளுங் சேவகனே" என்றும் சொல்கிறார் மாணிக்கவாசகர். "முன்னிக் கடலைச் சுருக்கி"(திருவெம்பாவை -16) பாடலில் மாணிக்கவாசகர் மழையை பார்வதிக்கு ஒப்பிட்டு பாடுகிறார். திருவெம்பாவையில் பாடல்களில் இறையாய் சிவனும் பார்வதியும் சேர்ந்தே போற்றபடுகின்றனர்.

  பக்தி இலக்கியத்தில் கோவிந்தனை ஈசனை போற்றி வீடு பேறு பெற பெரிதாக ஆறு கால பூசையும் பட்டும் பட்டாசையும் பலவகை நேவேத்தியமும் எதுவும் செய்ய தேவையில்லை "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" நம் துயர் அனைத்தையும் போக்குவான் என்று எளிமையை ஆண்டாளும்,  "விண்ணுகொரு மருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினாயானை பாடிக்கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுகுருக" என்று மாணிக்க வாசகரும் கற்றுத்தருகின்றனர். மாணிக்க வாசகர், ஆண்டாள், மாணிக்க வாசகம் போல் இறைவன் மீது காதலாகி கசிந்துருகவிடுனும் இறையை அவர் பாடல்களால் போற்றுதல் எம் தீம்தமிழுக்கு நம்மாலான சிறுதொண்டு. பத்தி இலக்கியத்தில் தித்திக்கும் தமிழும், இறையனுபவமும் போற்ற தக்கவை. இறை மீது நம்பியவர்க்கு அது இறை வழிபாடு. நம்பிக்கையற்றவர்க்கு இது சிறந்த தமிழ் இலக்கிய பாடல்கள்.

திருப்பாவை:
http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruppaavai.html

திருவெம்பாவை:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் கொண்டாட கோடி இருந்தாலும் என்னால் இயன்ற எள்ளப்பமிது. ஆண்டாள் மற்றும் மாணிக்க வாசகர் திருவடிகளே சரணம்.

Sunday, December 22, 2013

என் வீட்டின் வரைபடம் - புத்தக விமர்சனம்

சமீப காலத்தில்(சுமார் ஒரு வருடத்திற்கு முன்) படித்த "என் வீட்டின் வரைபடம்" சிறுகதை தொகுதியின் மூலம் எனது சிறுகதை தேடலின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்தேன். என் வீட்டின் வரைபடம் இந்த தொகுப்பின் எல்லா கதைகளுமே ஒரு நாவலுக்குரிய அடர்ந்தியை பெற்றிருக்கின்றன. முன்னுக்கு பின் சொல்தல், சம்மந்தம் இல்லாத சம்பவங்களை ஒரு குறீயீடு சார்ந்து சேர்த்து சொல்லுதல் இந்த பாணியில் அமைந்ததே "என் வீட்டின் வரைபடம்". இந்த தொகுதியில் எனை மிக முக்கியமாக கவர்ந்த அம்சம், கதைகளில் வித்தியாசமான தலைப்புகள் "என் வீட்டின் வரைபடம்", "மிகு மழை", "உடைந்த புல்லாங்குழல்", "உருவங்களின் ரகசியம்", "தனிமையின் புகைப்படம்" என்றபடி நீள்கிறது கதையின் தலைப்புகள். தலைப்பிற்காகவே படிக்க தொன்றும் கதைகள் இவை. 

ஓவ்வொரு கதைக்கான களத்தினை தானே அனுபவித்தது போல அழுத்தமாக எழுதப்பட்டிருக்கின்றன எல்லா சிறுகதைகளும். உடைந்த புல்லாங்குழல் என்ற ஒரே ஒரு கதையை தவிர மற்ற எல்லா கதைகளின் கதை சொன்ன விதம் எல்லா நவீன கதைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. நேர்த்தியாய் தெளிந்த நீர் போல ஓடவில்லை ஜே.பி.சாணக்கியாவின் கதைகள். கொஞ்சம் கலங்கிய நீரும், தேங்கிய நீருமாய், சில இடத்தில் குழப்பிய நீருமாய் ஒடி இருக்கிறது. பெரும்பாலான கதைகளில் விரசமான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் கதாசிரியர். அது கதைக்கு தேவையானது என்ற சிந்தனையினும் சில இடம் மிக நீண்ட அருவருப்படையும் அதிருப்பியையும் தருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மிகு மழை ஏதோ தன்னிச்சையாய் தன்னிஷ்டம் போல இருக்கும் பெண்ணின் காமத்தை பற்றி பேசுகிறது. அவளை ஏதோ சமூகத்தின் அருவருக்கதக்கவள் கேலி குரியவள்  போல சித்திரக்கும் ஆசிரியரின் மனபோக்கு சற்றே கண்டிக்கத்தக்கது. இதே கதையில் ஆசிரியர் தன்னுடைய கண்ணோடத்தில் அந்த பெண்ணை சித்தரித்தது போலில்லாமல் அவளுக்கான நிலைப்பாட்டினை பேசி இருக்கலாமே என்ற ஆதங்கம் மிஞ்சியது கதையை வாசித்து முடித்த பின்னர். "உருவங்களின் ரகசியம்" என்ற மற்றுமொரு கதையில் கள்ள உறவுக்கு பெண் மட்டுமே கலங்கம் கற்பிக்கபடுகிறாள். எல்லா பொது புத்தி சார்ந்த கதைகளம் போல் அதில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். எவனால் அந்த பெண் இறந்தாளோ அவள் மகளையே காதலித்து அவளுக்கான தற்கொலையும் செய்து கொள்கிறான்.

தனிமையின் புகைப்படம் மற்றும் ப்ளாக் டிக்கெட் இரண்டு கதையின்களத்தின் அதிகப்படியான முரண் உறவுகளை சார்ந்த பகுதிகள் இல்லை. ஆனால் அதிலும் இல்லாவே இல்லை என்றெல்லாம் சொல்ல இயலாது. தனிமையின் புகைப்படம் பிச்சைகாரர்களின் வாழ்வினை சொல்கிறது. அதில் வரும் "குரு  மகராஜ்" கிழவன் இறக்கும் தருணம் புதுமைபித்தனின் கதையொன்றை(சாலையேரம் செத்து கொண்டிருக்கும் பிச்சைகாரனை பற்றியது) நினைவுபடுத்தியது. ப்ளாக் டிக்கெட் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வின் சோகத்தை, தன் அடுப்பை/வீட்டை முதுகில் சுமந்து திரியும் நாடோடிகளில் வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்கிறது. தனிமையின் புகைப்படத்தில் பிச்சைக்கார கிழவியும் குருமகராஜ் கிழவனும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்த்து விட மாட்டார்களா என்று ஏக்க வைத்தது.

"ரிஷப வீதி" மற்றும் "ஆட்டத்தின் விதிமுறைகள்" ஆண் ஆதிக்கத்த்தின் உச்சநிலையை பிரகணடப்படுத்திகிறது. தன்னால் தர முடியாத குழந்தையை, வன்புணர்வின் பின் பெறும் மனைவி தற்கொலை செய்து இறந்து விடுவாள் என்றே நினைக்கிறான் சராசரி இந்திய/தமிழக கணவன். அதுவே அவள் விதியாக இருக்க வேண்டுமென்று பின்னர் விரும்புகிறான். மொத்த தொகுப்பில் என்னை பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாக்கிய கதை ரிஷப வீதி. எவ்வளவு மிதிபடுகின்றனர் கீழ்தட்டு பெண்கள் என்று படித்து சீரணக்கவே இயலாத கொடும் கதாசித்திரங்களை புனைந்து வைத்திருக்கிறார் ஜே.பி.சாணக்கியா.

ஒட்டு மொத்த தொகுப்பின் என்னை மிகவும் கவர்ந்த கதை "என் வீட்டின் வரைபடம்", ஒரு வீட்டின் உறவுகளுக்கும் நடவடிக்களுக்கும் இருக்கும் மர்மங்களையும் அவலங்களையும் மனப்போராட்டங்களையும் தெளிவாக வரைந்திருக்கிறார் சித்திரமென. அதெப்படி ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் வெவ்வெறு விதமான பிரச்சனை, சினிமாதனமாக என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எப்படி சொன்னாலும் வித்தியாசமான மொழி, கதை சொல்லும் நேர்த்தி, எதார்த்தமான பாத்திரங்கள், சென்சாரே இல்லாத வாசங்கங்கள், சற்றே சிரமப்பட்டே இவர் கதைகளை உள்வாங்கி கொள்ள முடிகிறது.

Tuesday, December 10, 2013

ஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை


என்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓடும் பயணங்கள் எங்கள் வாழ்வின் ரசித்து ரசித்து நான் வாழும் சில தருணங்களில் ஒன்று. தற்சமயம் எங்கள் சிற்றுந்தில் இசைக்கருவி என்னை மதிமயக்கும் திறன் கொண்டது. தீபாவளி விடுப்பிற்கு எங்கள் வண்டியிலேயே பிறந்த கிராமமும் மேலும் சில சுற்றுலா தளங்களையும், கோவில்களுக்கு சென்று வர முடிவு செய்து ஊருக்கு சொன்றோம். அவ்வாறே சென்ற நெடும் பயத்தின் போது, ராமேஸ்வரத்திலிருந்து திருச்சியை நெருக்கிக் கொண்டிருந்த போது, இரவு இறக்கி விட்ட கருமை, வெளியில் கவனம் கொள்ள வியலாமல் பண்பலையை திருப்பிக் கொண்டிருந்தேன். (பெங்களூரிவில் எங்கள் வாகனத்தின் பண்பலையை அதிகமாய்  பயன்படுத்துவதில்லை. பண்பலையில் இசையினும் அதிகம் இழுவைகளே அதிகம் அதுவும் சொல்ப அறிந்த கன்னடத்தில் வசவசவென்று மாத்திலாடுவார்கள் அதனால் இசை தரும் இன்பதினும் இம்சையே அதிகமிருக்கும் ).

  பண்பலையில் திருப்பிக்கொண்டிருக்கும் போது, மதி மயக்கும் "முன்பே வா அன்பே வா" என்னை கட்டி இழுக்க அதே அலைவரிசையில் இசைகருவியில் எனக்கான இசையை மிதக்க விட்டேன். அது ஒரு மலையாள பண்பலை ஆங்கிலத்தில் தொகுத்து வழக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த பாடல் முடிந்தவுடன் தான் தெரிந்தது. அது ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. முன்பே வா பாடியது ஸ்ரேயா என்று அன்று தான் அறிந்தேன். ஸ்ரேயா பட்டும் படாமலும் பாடிய ஒரே ஒரு தமிழ் பாடல் என்று சொல்லலாம்.(ஆயினும் நீ பார்த்த பார்வைக்கோரு நன்றி என்றும், செண்பகமே செண்பகமே என்றும் இசை ஜாம்பவான் ஆ ஷா போன்சிலேவின் நுனி நாக்கில் கடிபடும் தமிழிலும் சிறந்ததது தான் "முன்பே வா"வில் ஸ்ரேயா பாடி இருக்கும் தமிழ்) இந்த பாட்டில் மட்டும் சில இடங்களில் ஸ்ரேயாவின் உச்சரிப்பு அவர் வேற்று மொழிக்காரர் என்பதை காட்டிக் கொடுக்கும், ஒரு வேளை இது ஸ்ரேயாவின் முதல் தமிழ் பாடலாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அது 2006-ல் வெளியான படம், அதற்கு முன்பாகவே 2003 ஜீலி கணபதியில் "எனக்கு பிடித்த பாடல்" பாடி இருக்கிறார். முன்பே வா பாடலில் ஸ்ரேயாவின் குரல் தனிப்பட்டிருந்தாலும் மிக அழகாவே இருக்கின்றது. ராவணனில் அவர் பாடிய கள்வரே கள்வரே என்ன ஒரு உச்சரிப்பு. அற்புதம். "உன்ன விட உலகத்தில் உசந்தது" இதில் ஒரு மதுரை தேவரச்சியாக வாழ்ந்திருப்பார் ஸ்ரேயா. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மலையாள பண்பலை 102.8, 12.11.2013 அன்று சுமார் இரவு 10 மணி அளவில் என்ன நிகழ்விற்காக ஸ்ரேயாவின் பல் வேறு மொழிப் பாடல்களை தொகுத்து வழக்கினார்கள் என்று தெரியாது, ஆனால் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒரு சிறு கிராமான எனது மாமியார் வீடு வரும் வரை திகட்ட திகட்ட ஸ்ரேயாவின் இசையோவியங்களை வழங்கியது அந்த பண்பலை, முன்பே வா பாடலுக்கு அடுத்து மலையாளத்தில் கண்ணனை சார்ந்த ஒரு பாடல்,(தேசியவிருது பெற்றது) என்ன அர்த்த சுத்தமான மலையாள உச்சரிப்பு. நான் வட இந்தியாவில் இருந்த சமயம் எனது அலுவலக நண்பர் ஒருவர் மலையாள பெண்ணை தனது கல்லூரியில் ராகிங் செய்து போது அந்த பெண் நான் கூறும் ஒரே ஒரு வார்த்தை ஸ்படமாக உச்சரித்தால் அவர் சொல்லும் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொன்னாலாம், அதற்கு அவர் சரி சவாலுக்கு தயார் என்றதும் "மழ" என்று சொல்ல சொன்னாலாம். என்னால் இறுதியாண்டு வரை அந்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை என்றார். அவ்வாறாக நாவினை சுழற்றிப்போடும் மலையாள வார்த்தைகளை எத்தனை அழகாய் பாடுகிறார் ஸ்ரேயா என்னும் வங்க மொழிக்காரி சொக்கிப் போகிறேன்.

மூன்றாவதாய்  தேவதாஸ் படப்பாடல் "கேசே காகும் ஹாய் ராம்" இசையால் உறுகி  வழியத் தொடங்கி இருந்தேன், ஸ்ரேயா ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக் காரரில்லை.   எந்த மொழியில் பாடினாலும் ஸ்ரேயாவின் பாடலை கேட்பவர் அவர் அந்த மொழியினை சேர்ந்தவர் என்றே நினைத்துக் கொள்வர். அதுவே ஸ்ரேயாவின் சிறப்புத்தன்மை. இதனையே தான் அந்த பண்பலையிலும் தொகுப்பாளரும் கூறினார். மேலும் ராஜத்தானிய மற்றும் வேறு சில மொழி பாடல்களை ஒலிப்பரப்பினர் அந்த பண்பாலையில். இடையில் வங்காள மொழியிலும் ஒரு பாடல் வந்தது. தனது தாய் மொழியில் அவர் பாடும் போது இன்னும் பிரத்தியோச இசையின்பம் தரவல்லவராக இருக்கிறார் ஸ்ரேயா. இசைக்கு மொழி கிடையாது என்றாலும், வங்க மொழி தெரியவில்லையே என்று இரண்டாம் முறையாக வருத்தப்பட நேர்ந்தது இந்த இசை தேவதையால். "நீலகண்டப் பறவையைத் தேடி" இதன் இரண்டாம் மூன்றாம் பாகம் இன்னும் வங்க மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்படவில்லை, மூலகாரணம் அந்த புத்தகத்தின் ஆங்கில மூலமும் இல்லை. வங்க மொழி தெரியாத காரணத்தால் ஒரு அதி அற்புத நாவலை முழுமையாக படிக்க இயலாமல் போனதே என்று முதல் முறையாக வங்க மொழி தெரியாதற்கு வருந்தினேன். அடுத்து ஸ்ரேயா பாடிய வங்க மொழி பாடலில் விளக்கம் தெரிந்திருந்தால் இன்னும் இசையை ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன்.

ஸ்ரேயா என்னும் ஒரு குட்டி தேவதையை எனக்கு தெரியும், என் தோழியின் மகள் அவள், எப்போதும் ஸ்ரேயா என்றாலும் அந்த குழந்தையின் நினைவு வந்து இனிக்கும். அதை கெடுத்தழிக்க வந்தாள் நடிகை ஸ்ரேயா. ஆனால் பாடகி ஸ்ரேயா மீண்டும் ஸ்ரேயா என்ற பெயரை கேட்டாலே இன்புறும் அனுபவத்தை தருகிறாள்.

  தலைப்பையும் ஸ்ரேயாவை பற்றி எழுதும் எண்ணத்தை தந்ததற்கு கவிஞர் சுகுமாரனுக்கும், சில காலமாய் எழுத பிடிக்காமல் முடிங்கி இருந்த என்னை மீண்டும் எழுத வைத்த மீராவின் சரவணனுக்கும் நன்றியும்,

கூடவே இந்த பதிவு அவர்களுக்கு சமர்பணம்.

Tuesday, September 24, 2013

வெற்றியைத் தேடி ஓடும் முட்டாள்கள்


3idiats4
பொதுவாக நான் ஹிந்தி படம் பார்ப்பதில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் போலவே பல படங்கள் வருவதும் அதுவும் ஒரே மாதிரியான மசாலா என்று, ஹிந்தி படத்திற்கென்று சில பார்முலாக்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சில  தந்திரங்களும் அதனுடன் சில நல்ல தகவலும் (மேசேஜ்) அளித்துள்ளது இந்த திரி இடியட்ஸ் படம். படத்தின் தலைப்பே படம் பார்க்க தூண்டுகின்றது. புத்தாண்டு அன்று டில்லியில் வைகுண்டநாதரையும் காமாட்சியையும் சேவித்து விட்டு வரலாமென்று கடந்த வெள்ளி சாயுங்காலம் சென்று திரும்பும் போது இந்த படத்தில் தலைப்பை பார்த்துவிட்டு வழக்கமான இந்த மசாலா படமாகவே இருக்கும் என்று நினைத்தேன். அதன்பின் பலரும் இந்த படத்தை பற்றி ஓஹோ என்று சொல்ல நேற்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் அவசரமாக உப்புமாவை கிண்டி, உண்டு 7.30 காட்சிக்கு சென்றோம்.
3idats
எஸ் ஆர் எஸ் என்ற மாலில் இருக்கும் திரையரங்கில் 10 நிமிட தாமதத்தில் அடைந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். முட்டாள்  தான் கதை சொல்லி. (நம் மேடி மாதவன்) அவன் தன் நண்பன் முட்டாள் - 2  இடம் தங்களின் மற்றொரு மிக நெருங்கிய நண்பனை பற்றிய தகவல் தெரிந்து விட்டதாக சொல்ல அவனும் பேண்ட் கூட போட மறந்து அவசர அவசரமாக தங்கள் படித்த கல்லூரிக்கு செல்கின்றான். அங்கே இன்னுமொருவன் (நல்லவேளை இவன் முட்டாளில்லை) அவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் இன்று நாள் நினைவிருக்கிறதா 10 வருடத்துக்கு முன்... என்று கதை ஆரம்பித்த உடன் நினைத்தேன், ஆஹா நல்லா மாட்டிகிட்டோம் என்று, ஆனால் அங்கிருந்து முட்டாள் - 3 தேடி சிம்லா புறப்பட்டதும்தான் தெரிந்தது படம் முடிந்த பின் தான் படம் முடிந்து விட்டது என்று நினைப்பே வந்தது அப்படி ஒரு தொய்வில்லாத கதையோட்டம், நல்ல திரைக்கதை அமைப்பு. கொஞ்சம் பிளாஷ் பேக் கொஞ்சம் நிகழ்காலம் என்று அழகாக கதையை நகர்த்தி இருக்கின்றார்கள்.
3idiats2
நிறைய நல்ல விசயங்களை சொல்லி இருக்கின்றார்கள் இந்த படத்தின் மூலம் நம் வெற்றி என்னும் தொடர் ஓட்டத்தில் ஓடிய படியே வாழ்க்கையை தொலைப்பதை விட பிடித்த விசயம் செய்தால் வெற்றி நம் பின் ஓடி வருமென்றும், படிப்பு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து வெள்ளை காகிதத்தில் வாந்தி எடுப்பது போலில்லாமல் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும்படி இருக்க வேண்டும். படிப்பு மன அழுத்தத்தை உருவாக்க கூடாது, பெற்றோர் தங்கள் பெருமைக்காக தமக்கு பிடித்த படிப்பை பிள்ளைகள் மேல் திணிக்க கூடாது. ராகிங் இருக்க கூடாது. இனொவேட்டிவ் படிப்பியல் படிப்பு எதையாவது புது விசயங்களை கண்டறியவோ புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். மில்லியன் டாலரில் வீடு  அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனத்தின் வேலை இது தான் வெற்றியின் அளவல்ல. பிடித்த விசயத்தில் மனமென்றி குறைவாக சம்பாத்தித்து நிறைவாக வாழ்ந்தாலும் வெற்றியே இப்படி நல்ல பல விசயங்களை முன் வைத்துள்ளது.
idiat2
இவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்கள் கொஞ்சம் மிகையாகவே காட்டப் பட்டிருக்கின்றன, நல்ல கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் நிறுவனர் மிகவும் கடினமானவர் இறக்கமற்றவர் படிக்கும் மாணவர் தற்கொலை புரிந்து கொள்ளமளவு மன அழுத்தம் தர கூடியவர், புத்தகத்தில் இருப்பதை மட்டுமே ஒப்பிக்க கூடிய மாணவர்களே ஆசிரியர்களை கவரும் வண்ணமிருக்கின்றனர் இப்படிப்பட்ட விசயங்களும் சில சினிமாத்தனமான இயல்பற்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த படத்தை மனமாற பாராட்டலாம். எது எப்படி இருந்தாலும் திரைக்கதை மற்றும் கச்சிதமான பாத்திர வடிவமைப்பிற்காக நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படமே இந்த மூன்று முட்டாள்கள்.
- லாவண்யா சுந்தரராஜன்

பேராண்மையும் ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ம‌ற்றும் திரைய‌ர‌ங்க‌ அர‌சிய‌ல்க‌ளும்

த‌மிழ் திருநாள் பொங்க‌லை முன்னிட்டு நீண்ட‌ விடுப்பெடுத்து த‌மிழ‌க‌ம் சென்று திரும்பியாயிற்று. தில்லியில் வ‌சிப்பு என்று விதிக்க‌ப்ப‌ட்ட‌ பின் த‌மிழ‌க‌ம் செல்லும் போதெல்லாம் முடிந்த‌ ம‌ட்டும் சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையாவ‌து பார்த்து விடுவ‌து வ‌ழ‌க்க‌ம். அந்த‌ வ‌கையில் இந்த‌ முறை நான்கு திரைப்ப‌ட‌ங்க‌ளையும் க‌ண்டு வ‌ந்த‌தில் ம‌க‌ழ்ச்சி சில‌ ஆச்ச‌ரிய‌ங்க‌ள்.

த‌மிழ‌க‌ம் அடைந்து இந்த‌ முறை நான் பார்த்த‌ முத‌ல் திரைப்ப‌ட‌ம் பேராண்மை. அடுத்த‌து ஆயிர‌த்தில் ஒருவ‌ன். நான்கு ச‌ண்டைக்காட்சி, ஐந்து பாட‌ல்க‌ள், கொஞ்ச‌ம் சென்டிமென்ட் என்று க‌ட்ட‌ம் கட்டி த‌வித்து வ‌ந்த‌ தமிழ் திரையுல‌கிற்கு ச‌மீப‌மாக‌ வ‌ந்திருக்கும் மாறுத‌ல்க‌ள் வ‌ர‌வேற்கத்த‌க்க‌வை. அந்த‌ வித‌த்தில் பேராண்மையும், ஆயிர‌த்தில் ஒருவ‌னும் ச‌லாம் போட‌ வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ள்.


பேராண்மை மிகவும்‌ க‌வ‌ர்ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. எடுத்துக் கொண்ட‌ க‌தைக்க‌ள‌ம், திரைக்க‌தை அமைத்திருந்த‌ வித‌ம் எல்லாம் அருமை. சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ட்டும் கொஞ்ச‌ம் உறுத்த‌லாக‌ இருந்த‌து. ஆர‌ம்ப‌ காட்சிக‌ளில் அந்த‌ பெண்க‌ளின் அட்டகாச‌ம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அருவெறு‌க்க‌த்த‌க்க‌தாக‌ இருந்த‌து. என்ன‌தான் பெண்க‌ள் மாடர்‌ன் ஆகிவிட்டாலும் இந்த‌ அள‌விற்கு ஒருவ‌ரை ப‌ழிவாங்க‌ என்ன‌ வேண்டுமானாலும் செய்வோம் என்ப‌து திரைப்ப‌ட‌ங்க‌ளில் ம‌ட்டுமே ந‌ட‌க்கும். மேலும் ம‌லை வாழ் ம‌க்க‌ளை அதிகாரிக‌ள் கேவ‌ல‌மாக‌ ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டியிருப்ப‌தும் மிகையான‌து. மேலும் காம்யுனிச‌ம் ப‌ற்றிய‌ வசனங்கள் திணிக்க‌ப்ப‌ட்ட‌து போல் கதையோடு ஒட்டாமல் இருந்த‌து. எது எப்ப‌டி ஆனாலும் பெண்க‌ளை மிக‌ உய‌ர்வாக‌ காட்டி இருப்ப‌தும், காட்டில் சில‌ பெண்க‌ளும் ஒரு ஆணும் ப‌ய‌ங்க‌ர‌ எதிரிக‌ளை முறிய‌டிப்ப‌தும் அருமை. அதில் இர‌ண்டு பெண்க‌ள் பலியாவ‌து உண்மையாக‌ க‌ண்ணீரை வ‌ர‌வ‌ழைத்தது. அதுவும் சுசீலாவை புதைக்கும் போது அவ‌ள் எப்போதும் கேட்கும் க‌ந்த‌ச‌ஷ்டி ஒலிப்ப‌து க‌வித்துவ‌மாக‌ இருந்த‌து. என்ன‌தான் பேராண்மை கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ராக்கெட் ச‌ம்ம‌ந்த‌மாக‌ கூட‌ தெரிந்திருப்ப‌து மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. மொத்த‌த்தில் மிக‌வும் அருமையான‌ ப‌ட‌ம். வ‌ள்ளுவ‌ன் சொன்ன‌ பிற‌ன்ம‌னை நோக்கா இருப்ப‌து பேராண்மை என்ப‌திலும் நாட்டை நேச‌ப்ப‌தும் பெண்க‌ளை ம‌திப்ப‌தும் பேராண்மை என்று சொல்லி இருக்கும் அழ‌கு மிக‌ நேர்த்தி.


அடுத்த‌ப‌டி க‌வ‌ர்ந்த‌து... ஆயிர‌த்தில் ஒருவ‌ன். முத‌ல் பாதியில் சோழ‌ இள‌வ‌ர‌ச‌ன் தமிழ‌க‌த்திலிருந்து விய‌ட்நாம் அருகில் இருந்த‌ ஒரு தீவில் சென்று வாழ்ந்த‌தாக‌வும் அவ‌ன் விட்டு சென்ற‌ த‌ட‌ங்க‌ளை தேடி சென்ற‌வ‌ரை தேடும் பொருட்டு ஒரு ப‌டை கிள‌ம்புகின்ற‌து. ஏதோ ம‌ந்திர‌ த‌ந்திர‌ க‌தைக‌ளில் வ‌ருவ‌து போல‌ இருக்கின்ற‌து முத‌ல் பாதி. க‌ட‌ல், புதை ம‌ண‌ல், நாக‌ம், காட்டுவாசிக‌ள், ப‌சி, தாக‌ம் என்று சோழ‌ர்க‌ள் ஏற்ப‌டுத்திய‌ ஏழு த‌டைக‌ளை (இர‌ண்டு த‌டைக‌ள் சரியாக‌ விள‌ங்க‌வில்லை) தாண்டி செல்கின்ற‌தாம் அந்த‌ ப‌ய‌ண‌ம். இறுதியாக‌ ப‌ல‌ இழ‌ப்புக்குபின் அந்த‌ ந‌க‌ரை அடைகின்ற‌னர் சில‌ர். அங்கே நிஜ‌மாக‌வே சோழ‌ர்க‌ள் 800 ஆண்டையும் தாண்டி வாழ்வ‌தாக‌வும் பாண்டிய‌ வ‌ம்ச‌த்து எஞ்சிய‌ சில‌ர் த‌ங்க‌ள் ப‌ர‌ம்ப‌ரை தெய்வ‌ சிலையை மீட்க‌வே இந்த‌ ப‌ய‌ண‌த்தை மேற்கொள்வ‌தாக‌ சொல்லி க‌தை ந‌க‌ர்த்தி இருப்ப‌து இர‌ண்டாம் ப‌குதி. இதில் சில‌ குழ‌ப்ப‌ங்க‌ளை த‌விர்த்திருந்தால் இந்த‌ ப‌ட‌த்தை க‌ண்டிப்பாக‌ ஒரு உல‌க‌ த‌ர‌மிக்க‌ ப‌ட‌மென்று சொல்லி இருக்க‌லாம். த‌டைக‌ள் சில‌ ச‌ரியாக‌ புரிய‌வில்லை. க‌ட‌லில் என்ன‌ த‌டை என்றே தெரிய‌வில்லை. எப்ப‌டி ச‌ட‌ச‌ட‌வென்று ம‌க்க‌ள் இற‌க்க‌கின்ற‌ன‌ர் என்று தெரிய‌வில்லை. மேலும் சோழ‌ ந‌க‌ர‌த்தை அடைந்த‌வ‌ர்க‌ளுக்கு ஏன் பைத்திய‌ம் பிடித்த‌து போல‌ ஆகிற‌து. சோழ‌ ம‌க்க‌ள் உண‌வை நோக்கி வ‌ரும் போது ம‌ன்ன‌ன் ஏன் அடித்து விர‌ட்டுகிறான். பாண்டிய‌ இள‌வ‌ர‌சி சோழ‌ ம‌ன்ன‌னை கூட‌ ஏன் விழைகிறாள். ஏன் மாயாஜால‌ காட்சிக‌ள் போல‌ பல‌ காட்சிக‌ள் வ‌ருகின்ற‌து. க‌டைசியில் ஏன் அந்த‌ ப‌டை வீர‌ர்க‌ள் சோழ‌ பெண்டிரிட‌ம் அத்த‌னை வ‌க்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ன‌ர். இதெல்லாம் விள‌க்காம‌லேயே ப‌ட‌ம் முடிந்து விடுகின்ற‌து. ஆயினும் மிக‌ வித்தியாச‌மான‌ முய‌ற்சி. க‌ண்டிப்பாக‌ செல்வ‌ராக‌வ‌னை ந‌ம்பி படம் பார்க்கச் செல்வோரின் எதிர்பார்ப்பு வீணாக‌வில்லை.


மூன்றாவ‌தாக‌ ரேணிகுண்டா, க‌தைக்க‌ள‌ம் த‌விர்த்து ம‌ற்ற‌ எல்லாமே மிக‌வும் பிடித்திருந்த‌து. சுப்‌ர‌ம‌ணிய‌புர‌ம் போன்றே வ‌ன்முறையை சாதார‌ண‌மாக்கிவிட்டு போய் இருக்கின்ற‌து இந்த‌ப‌ட‌ம். மனைவியை த‌ன் ப‌ண‌க‌ஷ்ட‌த்திற்காக‌ பாலியல் தொழில் செய்ய‌ சொல்லும் க‌ண‌வ‌னிட‌ம் இருக்கும் குற்ற உண‌ர்விலிருந்து, அப்ப‌டியிருக்கும் பெண்ணும் மேலும் ப‌ண‌த்திற்காக‌ கொல்லும் கூலிப்ப‌டையாக‌ இருப்ப‌வ‌ரிட‌ம் கூட‌ இருக்கும் இர‌க்க‌மும் நேர்மையும் வ‌ரை ப‌ட‌ம் பிடித்து காட்டி இருப்ப‌து அருமை. மிக‌ எளிய‌ சினிமாத‌ன‌ம‌ற்ற‌ க‌தாபாத்திர‌ அமைப்புக‌ள். த‌ன‌து ந‌ண்ப‌னை கொல்லும் வ‌ரை வ‌ன்முறையில் ஈடுப‌டாத‌ நாய‌க‌ன் அத‌ன் பின் இர‌ண்டு கொலை செய்வ‌தும் மிக‌ இய‌ல்பாக காட்ட‌ப்ப‌டிப்ப‌த‌ற்கு ஒரு ச‌பாஷ். ஆனால் க‌தாநாய‌கி மேல் இறுதி க‌ட்ட‌த்தில் கூட‌ ஒரு ப‌ரிதாப‌ம் வ‌ராம‌ல் போன‌து இந்த‌ ப‌ட‌த்தின் தோல்வி. பல‌ காட்சிக‌ள் க‌வித்துவ‌மாக‌ இருந்தது. ப‌ல‌ர் ந‌டிப்பு பாராட்டும் வ‌ண்ண‌மிருந்த‌து.

க‌டைசியாக‌ ‘குட்டி‘. இந்த‌ ப‌ட‌ம் மிக‌வும் அபாரமாக‌ இருந்த‌து. ஆயிர‌த்தில் ஒருவ‌ன் பார்த்துவிட்டு வ‌ந்த‌தும் என் க‌ண‌வ‌ர் அருகில் இருந்த‌ திரைய‌ர‌ங்கில் ஓடிக்கொண்டிருந்த‌ குட்டி ப‌ட‌த்தை பார்த்திருக்க‌லாம் என்றார். ஆனால் குட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது பேசாம‌ல் க‌ட‌ற்க‌ரை போய் வ‌ந்திருக்க‌லாம் என்றார். மொத்த‌த்தில் குட்டி ஒரு வெட்டி.

ஆகா... பார்த்த‌ நான்கு ப‌ட‌ங்க‌ளில் ச‌மீப‌கால‌த்தில் திரைய‌ர‌ங்குக‌ளில் ந‌ட‌க்கும் சில‌ விச‌ய‌ங்க‌ள் எனை மிக‌வும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்ற‌து. நான் பேராண்மையை என் சொந்த‌ ஊர் முசிறியில் பார்த்தேன். அங்கே நாங்க‌ள் திரைப்ப‌ட‌ம் பார்த்த‌ அன்று முத‌ல் வ‌குப்பில் எங்க‌ளையும் சேர்த்து ஆறு பேரும் மேலும் மொத்த‌ திரைய‌ர‌ங்கில் ப‌தினைந்து பேர்தான் ப‌ட‌ம் பார்த்தோம். முசிறியில் இருக்கும் ஒரே அர‌ங்க‌ம் அதுதான். இன்னொன்று திரும‌ண‌ ம‌ண்ட‌பமாக‌ மாறிவிட்ட‌து. ஆனால் ஆயிர‌த்தில் ஒருவ‌ன் வெளிவ‌ந்த‌ ம‌றுநாள் திருச்சியில் ர‌ம்பாவில் பார்த்தோம் முத‌ல் வ‌குப்பு டிக்கெட் விலை 120 ரூபாய் இதன் ச‌ரியான‌ விலை 50 ரூபாய் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இப்ப‌டி அதிக‌ப்ப‌டியாக‌ வ‌சூலிக்க‌ப்ப‌டும் பணம் யாருக்கு செல்கிறது...? திரையரங்குகள் இப்படி அதிக‌ கட்டணம் வ‌சூலிப்ப‌தால் தான் திருட்டு விசிடிக‌ள் ம‌லிகின்ற‌ன‌. என்ன‌ சொல்ல‌... விரைவில் திரைப்ப‌ட‌ங்க‌ளை விசிடிக‌ளிலும் அல்ல‌து தொலைக்காட்சிக‌ளிலும் ரிலிஸ் செய்தால் ஆச்ச‌ரிய‌மில்லை.

Monday, August 26, 2013

உலகின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் மௌனத்தின் சலனம்


நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் (-1) கவிதைத் தொகுப்பினை வாசிக்க நேர்ந்தது. மென்பொருள் துறையில் பணிபுரியும் பலருக்கு (நான் உட்பட) கணிணி வைரஸ் போல் கவிதை எழுதும் பொழுதுபோக்கொன்றும், அவர்களுக்கென்ற வலைப்பூவுமிருக்கும். சில வருடங்களுக்கு முன் ஒரு முறை ஏதேச்சையாக இவர் கவிதையொன்றை வாசிக்க நேர்ந்து தெறித்து ஓடியவள் நான். பின்னர் இவர் அனுப்பிய சிறுகதையை உயிரோடை வலைத்தளத்தில் நடைபெற்ற போட்டிக்கென வாசிக்க நேர்ந்தது. அக்கதைக்கும் என்னை மிரட்டி ஓடவிட்ட கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. அதன் பின்னர் அவ்வப்போது இவர் வலைத்தளத்தில் இவர் கவிதைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். அதற்கு பின்னூட்டமளிப்பதும் வழக்கம். இவர் கவிதைகளில் தலைப்பு சில மிரளச் செய்யும். அப்படிப்படத்தில் "டிராகுலாவின் காதலி" எனக்கு நெருக்கமான தலைப்பு. அவ்வரிசை கவிதைகள் எல்லாம் சற்றே வித்தியாசமானவை.

டிராகுலாவை காதலிக்கும் இவர் காதலி மிகக் கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும். டிராகுலாவாக இருந்தாலும் இவர் மிக மென்மையானவர். ஏனெனில் இவர் காதலி சொல்கிறாள் "நான் துயில்வதை கவனிப்பது உனக்கு பிடிக்கிறது / மேலும் அந்நிலை உன்னை என் ரத்தத்தைக் குடிக்க விடாமல் செய்கிறது." உண்மையான நேசம் காதலியின் துயிலையும் நேசிக்கும். மேலும் "டிராகுலாவின் காதலி" கவிதைகளின் தொடக்கத்தில் இவர் குறிப்பிட்டுக்கும் மேற்கோள்கள் இவருடைய ஆழ்வாசிப்பின் தேடலையும், 1998 ஆம் ஆண்டே கணையாழி போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கும் இவர் கவிதைகள் இவர் தீவிர கவிதைகளை வரைபவர் என்பதற்கும் அத்தாட்சியாகின்றன.

இப்படியாகத் தீவிர வாசிப்பும் எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளவியலாத எழுத்தும் கொண்ட இவரின் இத்தொகுப்பில் சில நவீன கவிஞர்களிடம் (கவிதாயினிகளும் இதில் அடக்கம், கவிதாயினி என்ற வார்த்தை ஏற்புடையதல்ல, கவிதைக்கு பாலினமில்லை எனக் கூறலாமெனினும் குற்றசாட்டினை வைக்கும் போதும் அதுவும் ஒரு பெண்கவி வைக்கும் போது வையகம் கவிஞர்களுக்கு ஆண்பாலையே சூட்டிக் களிக்கிறது) இருக்கும் வெளிப்படையாய் பேசுகிறோமென்று உடல் உறுப்புகளை பற்றி கொச்சையாய் முகம் சுழிக்கச் செய்யும் வாசங்கள் இல்லாதது மிக ஆறுதலான விசயம். இவர் தனது 
காதலியின் காமத்தை குறியீடாகச் சொல்லும் "அடங்காது அலையும் மழைக்காடு நீ" என்பதே எனக்குத் தெரிந்தவரை மிக அதிகபட்சமான காதல் வசனம். சில இடங்களின் விரச ரசமான சொற்றொடர்கள் இருக்கின்றன ஆயினும் கவிதையுள் அடங்கிய மெல்லிய முனகலாகவே.

இழந்த காதலை மிக இயல்பாக அதிகம் சாடல்களின்றி, "நீ பறக்க தயாராகிறாய் நான் இறக்கத் தயாராகிறேன்" என்றும்,   பிரிந்த பின்னும் தன்னுள் உருக்கும் நிலையில் "உன் குரலை மட்டும் எனக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டாய் அது இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது" என்று கடந்து போகிறார். "இப்படித் தான் காதல் மேல் எனக்கிருக்கும் காதல் என்னை வேட்டையாடிக் கொன்றது" என்று பிரிவின் துயரை பிசிரில்லாமல் பதிவு செய்கிறார்.

வித்தியாசமான அழகியல் வாசகங்களை, உவமைகளை உள்ளடக்கியது இந்தக் கவிதைத் தொகுப்பு. காக்கையை 'கருப்பு Angel' என்கிறார். "ரயில் விலங்கு ஓடிக் கடக்கும் மலைபிரமிட்கள்" படிக்கும் மனதில் கூட ரயில் விலங்காகிறது. "தூக்கம் வராதவன் புரண்டு புரண்டு படுப்பதைப் போல் கடல்" என்ற வரிகள் யார் தந்த துயரம் உன்னை இந்த பாடுபடுத்துகின்றது என்று “யார் அணகுற்றனை கடலே” என்ற சங்கப்பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறார் கடல் போல் புரண்டு புரண்டு படுக்கும் உறக்கமற்ற இவர் இரவு தந்த கவிதை வரிகள் மிக ரசனைக்குரியதாகவே இருக்கின்றது, "தென்னையின் நீள் விரல்களில் வழியும் நீர்" என்ற வரிகள் மழையில் பின் பொழுதும் கூட தொன்னை கீற்றின் பசுமை வந்து ஒட்டிக் கொள்கிறது. சில அழகியல் ரசனையோடு ரொமாண்டிஸ வரிகளும் இருக்கின்றன இந்த தொகுப்பில் "கழுவப்பட்ட ப்ளம்ஸ் பழங்கள் காத்திருக்கின்றன" (யப்பா என்ன ஒரு ரொமாண்டிக்கான காத்திருப்பு) "மின்னல் கோட்டோவியம் பூத்துச் சாகும்"  ஒவியம் வரைந்தததும் அப்படியே இருக்கும், ஆனால் மின்னல் மறையும் இதையே பூத்துச் சாகுமென்று சொல்லியிருக்கிறார். "வானம் தன் பூனைக் கண்களைத் திறந்து என்னை பார்த்தது" பூனை கண்களை திறந்தால் அதுவே பகலோ?

மேலும் அப்பார்ட்மெண்ட் வாழ்வில் வௌவாலெனத் தொங்கி கொண்டிருக்கும் நகர வாழ்வின் பரபரப்பை, ஒரு செயற்கைத்தனத்தை, இடப்பாற்றாக்குறையை, அவலத்தை சில கவிதைகளில் சொல்லி இருக்கிறார். "உலோகக் கனவில்" என்று சொல்லும் வரிகளில் கனவையும் கனிமத்தையும் இணைக்கும் இவர் நகர பரபரப்பு கனவை சுமையாக்குவதாய் சொல்லாமல் சொல்கிறார், "புன்னகையை மின்னஞ்சல் செய்என்று நகர காதலின் ஒட்டாதனத்தை இயலாமையை பதிவு செய்கிறார், "இருக்க இடமற்று சமையலறை மூலையில் கூடு கொள்ளும் கடவுளர் கூட்டம்" என்று இடப்பாற்றாக்குறையும் சொல்கிறார், "வீடெல்லாம் ஓடித்திரிகிறது playschool விட்டு வந்த குழந்தையின் அழுகுரல்" என்ற வரிகளை படிக்கும் போதே ஒரு அழுத்தம் வந்தமர்ந்து கொள்கிறது மனவெளியில். மேலும் நகரத்து அவலத்தை "இந்த மழைக் காலத்திலும் தவளைச் சத்தம் கேட்காத நகரம்" என்றும், "பாலிதீன் பைகள் பூத்த நிலத்தை" நகரத்தில் சீராளியும் இயற்க்கையும் கவிதையாக்க முடிகிறது நந்தாவால்.

இருளை விதவிதமாய் பதிவு செய்கிறார் ஒரு கவிதையில். அது தன் அமைதியின்மையா அல்லது பகலிலும் இரவிலும் இடையறாது ஒளிவிடும் நகரத்து தொழிற்கூடங்கள் அலுவல விளக்குகள் மேலிருக்கும் சலிப்பா என்பது தெரியாத பதிவு "ஒரு மலர்ந்த சிவப்பு ரோஜாப் பூவின் மைய இருள் போதும் நான் துயில்வதற்கு"

மேலும் எந்த வகையிலும் அடங்காத சில வித்தியாசமான வரிகளும் உண்டு, "அந்திச் சூரியனில் நனைந்த பஞ்சு மேகங்கள் மிதந்து செல்கின்றன" இது ஒரு மருத்துமனையில் வெளிப்புரத்தில் எரிந்த பஞ்சு துண்டுகளை நினைவுபடுத்துகிறது. "காட்சி அஜீரணம்" ஒவ்வாத காட்சிகளை கண்டபின் அந்த உணர்வை பதிவு செய்ய இதை விட பொருத்தமான வரிகள் எனக்கு கிடைக்கவில்லை, "கண்ணுக்குத் தெரியாத உன் சிறகுகளால் உன் வெற்றுடலை மூடிக்கொள்" தேவதைகளுக்கு சிறகுண்டு உடையில்ல இவர் சொல்ல வந்தது இதையும் தாண்டிய உணர்வு. சில பெண்களுக்கு ஏன் சில ஆண்களுக்கும் இவ்வாறான கண்ணுகளுக்கு தெரியாத சிறகுகளிலிருந்தால் இறக்கும் போதேனும் நிம்மதி கிடைக்கும். "காற்றில் ஓவியம் தீட்டிய உன் வாத்தியக் குரல்" குரலை தூரிகையாக்கி இசையை ஓவியமாக்கி காற்றை தாளாக்கி இவர் கவிதை சிருஷ்டி தொழிற்சாலையாகி போகிறது, "தூரத்தில் ரெண்டு சிகரெட்டுகள் நடந்து வருகின்றன", இப்படியாக.

நந்தா அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக, ஒரு ரயில் பிரியராக இருக்க வேண்டும். ரயிலை குறியீடாக பல கவிதைகளில் சொல்லி இருக்கிறார். "சுகபூகம்பத் தூக்கம்" (அட போட வைக்கும் வரி), "ரயில் கூரையில் மழைச்சலங்கைகளின் நர்த்தன இசையுடன்", மழையும் ரயிலும் என்ன ஒரு இன்பமாயமான கூட்டு. "தண்டவாளக் கடலில் மிதக்கும் ரயில் படகு" ரயில் ஒரு குறீயாடாகி நகரும் பொழுதில் படகு போலும் இவர் உணர்வில் உதிக்கிறது, "ரயில் பெட்டியின் தொட்டிலாட்டத்தில்", தண்டவாளத்தை கடலாக்கி ரயிலை படக்காகிது போதாமல் இவர் ரயில் இவரை தொட்டிலாட்டி தாலாட்டாடுகிறது. "தண்டவாள தாயக்கட்டைகள் உருள ரயில் காய் நகர்வில்" என்று நிறைய கவிதைகளில் விதவிதமாய் ரயிலை வர்ணித்திருக்கிறார்.

பல குறுங்கவிதைகளை உள்ளடக்கிய நெடுங்கவிதைகள் பரவிக் கிடக்கின்றன தொகுப்பெங்கும். இதை தவிர சில ஹைக்கூ கவிதைகளுமிருக்கின்றன இத்தொகுப்பில். எதைச் சொல்ல எதை விட என்பது போன்றவை அவை. உதாரணத்துக்கு "ஆற்றில் ஓடும் சூரியன் சூடாகவா இருக்கும்", "குன்றின் மேலிட்ட விளக்கு / பூமியிலும் நட்சத்திரங்கள்" போன்ற வரிகள்.

பிரம்மாண்டம்ரோஜாப்பூ கடவுள், உடைபடும் மௌனம், மழை கேட்டல் என்று பல கவிதைகளை இத்தொகுப்பின் மிகச் சிறந்த கவிதைகளென்று சொல்லி முடிக்கும் முன், சில கவிதைகளில் கூறியது கூறல் முக்கியமாய் ரயில் சார்ந்த கவிதைகளில், மேலும் "அப்பார்ட்மெண்ட் வௌவால்" இவற்றை தவிர்த்தும், அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளை தவிர்த்துமிருந்தால் இந்நூல் இன்னும் சிறப்பாக வந்திருக்குமென்பது எனது கருத்து. சில ஆங்கில அல்லது அறிவியல் சொற்கள் அதன் அர்த்தம் தெரியாதவர்களை சென்றடையாமல் போவதற்கே அதிகம் வாய்புள்ளது. நல்ல கவிதைகள் எல்லாம் சேருமிடம் சேர வேண்டும். அதனால் அடுத்த தொகுப்பினை மேலும் கவனமாய் கொணர வாழ்த்துகிறேன்.

"கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைக்கும் கவனத்தோடு" இந்த கவிதை தொகுப்பினை நெருக்கிய போது "ஆப்பிளின் நடு வயிற்றில்" பிறந்த கவிதைகளில் "சிகரெட்களில் உதிர்கிறது காலம்".