Friday, September 6, 2019

பின்னல் சித்திரங்கள்


                         


 காலச்சுவடு பதிப்பகத்தின் வெளீயிடாக தற்சமயம் நடைபெறும் மதுரை புத்தக காட்சிக்கு வெளியான எனது முதல் சிறுகதை நூல் "புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை". அதற்கு எழுத்தாளர் அசதா அவர்கள் எழுதியுள்ள முன்னுரை.   
புனைகதை என்பது தொடர்ச்சியாகப் பொய்களை நெய்து ஒரு மகத்தான உண்மையைக் கண்டடைவது. ஆப்கானிய எழுத்தாளர் கலீத் ஹொசைனியின் புனைவெழுத்துக் குறித்த இந்தப் பார்வை ஒரு செவ்வியல் வரையறை. புனைவெழுத்தாளரது நெய்யும் பாங்கில் பின்னப்படும் கற்பனைகள் ஒரு வெளிச்சத்தை வந்து சேருகின்றன. அந்த வெளிச்சம் அல்லது உண்மை ஒரு அகதரிசனமாகவோ, மனப்புரட்டலாகவோ அல்லது அதன் பின்னால் இன்னும் கூடுதல் வெளிச்சமிருக்கும் ஓர் இருண்ட வாயிலுக்கான திறப்பாகவோகூட இருக்கலாம். இறுதிச் சித்திரம் பின்னலில்தான் இருக்கிறது எனும்போது கதைகள் பின்னப்படும் விதமே பிரதானமாகிறது.

லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கியபுறாக்களை எனக்குப் பிடிப்பதில்லைஎன்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது அகவுலகை நமக்குக் காட்டுபவை. பூ விற்கும் பெண்ணும் கிராமத்து விவசாயக் குடும்பத்துப் பெண்ணும் மையப்பாத்திரங்களாக அமைந்த கதைகளும் உண்டு என்றபோதும் மேற்சொன்ன அடையாளமே தொகுப்புக்குப் அதிகம் பொருந்தி வருகிறது. இக்கதைகளை வாசிக்கையில்  சம்பவங்கள்  ஊற்றுப்போல பெருகியபடியிருக்க அதனிடையே கதைமாந்தர்கள் உலாவியபடியும் இடைவிடாது பேசியபடியும் இருப்பதுபோன்ற ஒரு சித்திரம் மேலெழுந்து வருகிறது. தம்போக்கிலான இம்மனிதர்களையும் சம்பவங்களையும் கதையாசிரியர் பின்னியிருக்கும் விதத்தில் இவை சமகாலத்தின் முக்கியமான சிறுகதைகளாகியிருக்கின்றன.

சப்தபர்னி மலர்கள்நுட்பமான சிறுகதை. அறிமுகமில்லாப் பெருநகரில் ஒரு பெண் சுற்றியிருக்கும் ஆண்கள் மட்டில் தன்னை மெதுவாக இயல்பாக நெகிழ்த்திக் கொள்வதை ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் இக்கதை ஆண் -பெண் உறவின் சூக்குமப் பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது. தான் ஏமாற்றப்பட்டதற்கு நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடும் சூழலில் இருந்தபடி ஒரு பெண் தன்னை சமூகம் உறவுகள் அரசு அமைப்புகள் ஆகியனவற்றுக்குள் பொருத்திப் பார்த்துக்கொள்வதாக  சில்லறைகதை அமைந்திருக்கிறது.

இளம் கைம்பெண்ணான தனது அண்ணிக்கும் திருமணமாகாத தனது தம்பிக்குமிடையேயான உறவின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் குழம்பி சதா குமைச்சலுறும் ஒரு பெண்ணைமுற்றத்து அணில்கதையில் திறம்படப் படைத்திருக்கிறார் லாவண்யா சுந்தரராஜன். இன்னொரு தளத்திலிருந்து பெண்ணின் அகச்சிக்கலைப் பேசும் கதையானபூமரம்”, கதையாசிரியரின் லாகவமான கூறுமுறையில் குறிப்பிடத்தக்க கதையாகிறது. எல்லாவகையிலும் வெற்றிபெற்றுவிட்ட ஒரு பெண்ணின் அகந்தை தாய்மைப்பேறின்மை என்னும் விஷயத்தின்முன் சலனமுறுவதாகச் சொல்லுமிடம் சற்று நெருடலானது என்றபோதும் இதுபோன்ற இடங்களில் சமூக வழக்கின் தாக்கம் குறைத்து மதிப்பிட இயலாதது.

தனது எளிய கனவுகளுக்குள்கூட பொருந்திடாத, எப்போதும் தன்னிலிருந்து விலகியே நிற்கும், பொதுவாழ்வின் சாமர்த்தியங்கள் ஏதுமற்ற அப்பாவை அவரது மரணத்தின்போது நினைவுகூரும் ஒரு மகளின் நினைவேக்கங்களின் தொகுப்பாய் அமைந்திருப்பதுஅப்பாசிறுகதை. தந்தைமகள் உறவின் அதிகம் அறியப்படாத ஒரு பரிமாணம் இக்கதையில் காணக்கிடைக்கிறது. வண்ணப்படத்தின் நடுவே நகரும் கறுப்பு-வெள்ளை துண்டுக்காட்சியைப்போல காலத்தாலும் பேசுபொருளாலும் தனித்து அமைந்த கதைகள்சின்ன லட்சுமிமற்றும்யூனிபார்ம்”. “விடுபூக்கள்நேரடியாகச் சொல்லப்பட்ட கதையேயானாலும் அதில் பெண்ணின் பாடுகள் அசலாகப் பதிவாகியிருக்கின்றன. “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை”, “செண்பா சித்திஆகியன பெண் மனதின்  அக அடுக்குகளை பூடகமாகச் காட்டிச் செல்லும் கதைகள்.  துண்டுதுண்டான சம்பவங்களைத் தொகுத்தபயணங்கள்கதையும் முக்கியமானது.

தொன்மங்கள், வரலாறு, சமகால நிர்ணயங்கள் இவற்றையொட்டி சமூகத்தில் பெண்களின் வகிபாகம் தொடர்ச்சியாக ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் உள்ளாகும் நிலையில் அவர்களை அவர்களது அன்றாடத்தின் வெளிச்சத்திலும் இறுக்கத்திலும் பார்க்க விழைவனவாக லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் இருக்கின்றன. இக்கதைகளின் பெண்கள் - சப்தபர்னி மலர்கள் கதையின் நாயகியோ, செண்பா சித்தியோ, விஜயாவின் அண்ணியோ- தமது தேவைகளை அறிந்தவர்கள், குடும்பத்துள் எளிய புகார்களுடன் அல்லது புகார்களேயற்று உழல்பவர்கள்; அதேநேரம் தம்மைச் சுற்றியுள்ள தடுப்புக்களை உடைக்கிறோம் என்ற பிரக்ஞையின்றியே அவற்றை மெல்ல உடைத்து முன்னேறுபவர்கள். இந்த அன்றாடங்களின் வழியாக லாவண்யா சுந்தரராஜன் படைத்துக்காட்டும், உறவுச் சிக்கல்களும் உணர்ச்சிப் மோதல்களும் நிறைந்த பெண்கள் உலகை ஒருவர் நேசிக்காமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக சம்பவங்களைப் பின்னிச் செல்வதினூடே தன் கதைகளைப் படைத்திருக்கும் லாவண்யா பெண்களின் மீறல்களை இயல்பாகக் கதைகளுள் பொதிந்திருக்கிறார். பின்னல்கள்வழி முடிச்சுக்களையல்லாமல் யதார்த்த சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார். சொல்லலில் முனைப்போ மொழிமீதான அதீத கவனமோ இன்றி எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் யதார்த்தமாக அமைந்திருக்கும் அதேநேரம் வலுவான புனைவாக்கங்களாகவும் திரண்டு வந்திருக்கின்றன. இத்தொகுப்பு வழியாக கவிஞரான தன்னை ஒரு சிறுகதையாசிரியாக முன்வைக்கும் லாவண்யா சுந்தரராஜனின் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அசதா
20-08-19

Saturday, June 1, 2019

சொல்லிய கதையும் சொல்ல வந்த கதையும்

Image result for சிவப்பு கூடை திருடர்கள்
Image result for சிவப்பு கூடை திருடர்கள்
எஸ் செந்தில்குமாரின் "சிவப்புக் கூடை திருடர்கள்" சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. முப்பது சிறுகதைகள் அடங்கிய கனமான தொகுப்பு. ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு கதைக்களம் மாய எதார்த்தம், அடித்தட்டு மக்களின் கதை, நகர்புற வாழ்வு, முகநூல் காலச்சாரம் என்று விரியும் பல்வேறு தளங்கள். உறவு சிக்கல், பெண்ணியம், உறவுகளுக்கு இடையே போலி பிணைப்பு, குரூரம் என்று பல்வேறு உணர்வுநிலைகளை தொட்டுப் பேசும் கதைகள். நாவிதர்கள், பண்டிதர்கள், பொற்கொல்லர்கள், கணனி படித்தவன், வெள்ளாடு வளர்க்கும் குடியனவன் என்று பல்வேறுதரப்பட்ட மாந்தரின் கதைகள். ஒரு கதையுள் சம்பவங்களை அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை போல எண்ணற்ற கோடுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரைந்து, கதையின் இறுதியில் கோட்டோவியமாக மெய்சிலிர்க்க காணத் தரும் அசோகமித்திரனுக்கு தனது புத்தகத்தை சமர்பணம் செய்திருப்பதில் ஒரு நியாயமிருக்கிறது. எஸ். செந்தில்குமார் தனது கதைகளில் சம்பவங்களை கோடுகளாக இன்றி தனித்தனி பிரதேசங்களின் எல்லைக்கோடுகாளாக வடிக்கிறார். அது இறுதியில் எல்லாம் சேர்ந்த பெரிய வரைபடமாக மாறுகிறது.  

எஸ். செந்தில்குமாரின் பெரும்பாலான கதைகள் எங்கோ தொடங்கி எங்கோ முடியும் கதைகளாக இருக்கின்றன. ஆனாலும் அதில் சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் ஏதேனும் ஒரு மையசரட்டில் கோர்க்கப்பட்ட மணிகள் போன்றவை. கதை முடியும் போது அது அலங்கார மாலை போலாகிவிடுகிறது. கதை தொடங்கும் முதல் வரியிலேயே கதையுள்ளே வாசகரை இழுத்துக் கொண்டு இறுதி வரை அவர்களை கவனம் சிதறி போகாமல் கதையுள்ளே உலவ விடும் நேர்த்தியான சொல்முறைஅந்த சொல்முறையே அவரின் கதைகளிலிருக்கும் பிசிறுகளை பிசிறுகளாக காட்டாமல் அவற்றை புடவையின் பூவேலைபாடுகள் போல தோற்றமளிக்க செய்கின்றன. கண்மலர் என்ற கதையில் திருவிழாவின் பல்வேறு காட்சிகளை எழுதி இருப்பார், ஆனால் கதையின் உள்நாடி வேறு. கதாசிரியரின் பெரும்பாலான கதைகள் இதே போன்றவையே. அதன் பொருட்டே எஸ். செந்தில்குமார் கதைகளை தனித்துவம் பெறுகின்றன.

மாய எதார்த்த கதைகளாக வரும் சிவப்புக் கூடை திருடர்கள், கதலி, புன்னகை, அவர்கள் சென்ற பாதை போன்ற கதைகள் சுவாரஸ்யமானவை. சிவப்புக் கூடை திருடர்கள், கதலி இரண்டிலும் மாயவித்தை நடக்கும் சமயம் ஏதேனும் வித்தியாசமான வாசனை மயக்குவது போலவும் அதுவே கண் கட்டு வித்தைக்கு காரணமானதாகவோ என்று வாசகனை நம்ப வைக்கிறார். யட்சி வரும் போது குப்பென்று மயக்கும் வாசனையடிக்கும் என்பது உண்மை தான் போலும். வாசனை குறியீடாக இருக்கும் இந்த கதைகளில் நடப்பது மாயவித்தை என்பதை நம்பவியலாத எதார்த்த நடையில் கதை சொல்லி இருப்பதே இந்த கதைகளின் சிறப்பு. திரைப்படங்களில் சிலவற்றில் மனிதர்களுக்கும் பேய், பிசாசுகளையும் வித்தியாசம் காட்டவோ அல்லது பீதியை கிளப்பவோ பேய்களுக்கு கண்களை மட்டும் வெள்ளை நிறத்தில் காட்டும் தொழில்நுட்பத்தை தனது கதையில் குறியீடாக்கி பளிக்கு கண்கள் என்று "அவர்கள் சென்ற பாதை" கதையில் சொல்கிறார் கதாசிரியர். “புன்னகை” கதையில் புகைப்படத்திலிருக்கும் பெண்ணில் புன்னகைக்கு மயங்கி வீட்டிலிருப்போர் இரவு ஊருக்கு செல்வதை அறிந்து அந்த வீட்டுக்கு வந்து இளைப்பாற நினைக்கிறான் கதை சொல்லி. அதே போலவே அவன் நண்பனும் வருகிறான். இருவரும் மிகச் சதாராணமாக இயல்பாக உரையாடிக் கொள்கின்றனர். இறுதியில் பத்தியில் "புன்னகை" என்ற மொத்த கதையும் மாய எதார்த்த கதையாகிப் போகிறது.

தமிழின் ஒற்றை எழுத்தை குறியீடாக கொண்ட இரண்டு கதைகள் உள்ளன இந்த தொகுப்பில். மாய எதார்த்த கதையான சிவப்புக்கூடை திருடர்களில் "" எழுத்தும், சிவப்பு நிறமும் மிக முக்கிய எதிர் இணைப்பு. சிவப்பு நிறம் உழைப்பை குறிக்கும் இங்கே உழைப்பின்றி கண்கட்டு வித்தையாக திருடப்படும் விஷயத்திற்கு இந்த நிறத்தையும், என்பதை கயமை, கள்ளத்தனம், களவு என்று பொருள்படும்படியும் எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. நிர்மலாவின் சைக்கிள் கதையில் சைக்கிளின் முகப்பில் குறிப்பிட்டிருக்கும் "நி" என்ற எழுத்து நிர்மலாவை குறிப்பதா அல்லது அது ஒரு நினைவு மீட்டெடுக்கும் சின்னமாக குறிப்பதா என்று யோசித்துக் கொண்டே கதையின் இறுதியை அடையும் போது அது கொண்டை ஊசி வளைவில் திரும்புவது போல அந்த எழுத்து குறிப்பது வேறொன்றாக இருக்கலாமோ என்று ஒரு சிந்தனையை விதைப்பதே எஸ்.செந்தில்குமாரின் கதை செய்யும் முறை. அந்த கதையில் சைக்கிள் நிறம் எனார்மல்(எமாரால்ட்), சீட் மெரூன் இரண்டும் ரொமான்டிச உணர்வின் நிறமாக எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கிறது. காதல் நிறம்(பச்சை)  நீலம் தானே. அதுவும் மேதமை பொருந்திய விலையுயர்ந்த பளபளக்கும் நீலம்(மரகத பச்சை).

எஸ். செந்தில் குமார் பேசும் பெண்ணியம் வித்தியாசமானது தனது கணவனுக்கு தன்னுடம் உறவு கொள்ள பிரியம் இல்லையென்றால் கணவரின் தம்பியுடனேயே உறவு கொள்ளலாம் என்று நியாயபடுத்துகிறார். "ஆம்பளதனம் இல்லான்னா பேசாம வேலைக்கு போயிட்டு வீட்டுல முடங்கி கிட" என்று கதைசொல்லியின் தம்பி மூலமே குரூரமாக சொல்ல வைக்கும் தைரியம் கதாசிரியருக்கும் இருக்கிறது. நடைமுறையில் இது சாத்தியமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதே கதையின் தொடர்ச்சியாக "கோகிலா என்று கோகிலாம்மாள்" என்ற கதையை வாசிக்கலாம். மணிமேகலை கதையில் நகர்புறத்தில் பணம் சம்பாதிக்க வேண்டி வரும் பெண்களில் உடலில் தீராது ஒட்டியிருக்கும் ஸ்வீட் வாசனையும்வலியை நீக்கும் தைல வாசனையும் பொருளாதாரம் சிக்கலின் குறியீடுகளாக பார்க்க முடியும். பொருளாதார சிக்கல் மக்களை எவ்வளவு இயந்திரகதிக்கும் சில்லரைதனத்துக்கும் ஆளாக்குகிறது என்பதை அந்த கதையில் கண்டிருணரலாம். மகளிர் காப்பக விடுதியில் அபலைகளில் கண்ணீர் சென்னை வெள்ளைத்தை படிமமாக கொண்டு வெளிபடும் நெடுங்கதை மணிமேகலை. ஒரே ஒரு வரலாற்று கதையாக வரும் புத்தன் சொல்லாத பதில் கதையை கூட பிண்ணனியில் யாசோதரைக்கு நியாயம் கேட்டு பெண்ணியம் பேசுவதாக கொள்ளலாம். புத்தன் பதில் சொல்ல முடியாத கேள்வி யாசோதரையுடையது. "மைதானம் அளவு உலகு" கதையில் வரும் கதை சொல்லியின் மனைவி சோகம் மிகுதியின் போது தகப்பனுடன் சேர்ந்து குடிக்கிறாள். சோக நிவாரணியாக குடிப்பதை நியாயப்படுத்தும் ஆண் மைய்ய கருத்தாகவே இதனை நான் பதிவு செய்ய முடியும். பெண்ணுக்கு குடிப்பதற்கு சம உரிமை தரும் பெண்ணிய கருத்து பதிவாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெண்ணில் எளிய ஆசையான சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை கூட பெண் உடல் வாதைகளில் குறிப்பாக கருவுற்றிருக்கும் காலம், குழந்தை பிறந்து அது சிறுகுழந்தையாக இருக்கும் போது போன்ற சில்லரை காரணங்களுக்காக தடுக்கபடுகிறாள் என்று பதிவும் எஸ். செந்தில் குமாரின் கதையில் உண்டு. பெண் பிள்ளைகள் பொருளாதார பற்றாகுறை காரணமாக படிக்க போகாமல் வீட்டின் வேலைகளை பார்க்கும் சில காட்சிகளும் ஒருசில கதைகளில் வந்திருக்கிறது.

எஸ். செந்தில்குமார் கையாண்டிருக்கும் சிறுவர் உலகம் குதூகலமானது. அவர்களின் உலகம் பட்டைபெயர்களில் நிறைந்தது. மெகபூபா என்பது பட்டைபெயர் மட்டுமல்ல, அது ஒரு உடல் மொழி. கலைக்கு கிடைத்த அங்கீகாரம். மெகபூபா என்று அடைமொழியை அடைய அத்தனை குதூகலத்தோடு எல்லா சிறுவர்களும் போட்டி போடும் போது அந்த சிறுவர்களோடு ஒருவராக கதையில் ஓடி விளையாடும் வாசக மனம். பால்யத்தை மீட்டெடுக்க உதவும் சித்திரங்கள் பல இந்த தொகுப்பில் உள்ள கதையில் காணப்படுகின்றன. குதூகல சிறுவர் உலகம்  பற்றி பேசும் கதைகள் ஒருபுறமிருக்க “உமிக்கருக்கு” போன்ற பால்யத்தை குடும்பத்தின் பொருளாராத தேவைக்காக தொலைத்து விட்டு சிறுபிள்ளைகளின் உழைப்பு சுரண்டலை காட்டும் கதை. அதில் வரும் சிறுவர்களை, சற்றே பெரிய சிறுவர்கள் படுத்தும் பாடு ஜூனியர் சீனியர் ராகிங் போலிருக்கிறது. விளையாட்டுப் பருவம் மாறாத சிறுவர்களின் உடல் உமியின் அரிப்பு போல நம்மை ஒட்டிக் கொள்கிறது இந்த கதை அந்த சிறுவர்கள் மீது உருவாக்கும் கரிசனம். நிர்மலாவின் சைக்கிள் கதையில் வரும் விடலை பருவத்துக்கு நெறுக்கும் சிறுவர்களின் கதை அந்த பருவத்துக்கே உரிய உடல் ஈர்ப்பை காதல் என்று நினைக்கத்தோன்றும் உளவியல் சிக்கலை சொல்லும் சிறப்பான கதை. “அவன் மோட்டர் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்” கதையிலும் முதன்முதலாக வண்டியோட்ட பழகும் சிறுவனின் மனநிலையை சரியாக பதிவு செய்கிறது. அப்பாவுக்கு மாட்டு வண்டி, மகனுக்கு மோட்டர் சைக்கிள் இருவருமே வண்டியோட்ட ஒரே நாளில் பழகுவது கற்கும் ஆசை அதிகமுள்ளவர்க்கு மட்டுமே புரியும் விஷயம்.

உலகில் மகத்தான எல்லா இலக்கியமும் உறவின் சிக்கல்களை பேசுவதாகவே இருக்கின்றன. அவ்வாறு உறவு சிக்கல்களும் அதிலுள்ள போலித்தனங்களும் பல்வேறு கதைகளில் பதிவாகி இருக்கிறது. பொருள் பொருட்டு வாய்சண்டை முதல், கொலை செய்யும் வரையிலான பெண்கள் அசாதாரண பதிவுகளாக எஸ்.செந்தில் குமார் கதைகளில் வலம் வருகின்றார்கள். உறவின் சிக்கலை மிக பூடகமாக சொல்லும் கதைமைதானம் அளவு உலகு”. எப்போதுமே தனது புடவை, நகையை விட அடுத்த வீட்டிலிருக்கும் நகையோ, புடவை அதி உன்னமாய், அழகாய் தோன்றுவது இயற்கை. இதே உணர்வை தத்தம் மனைவியினும் அடுத்தவன் மனைவியின் மீதான ஆர்வமும் அதற்கான காரண விளக்கங்களும் கதையூடே பின்னியிருந்தாலும், கதை சொல்லியின் மனைவிக்கு கதை சொல்லியின் நண்பர் மேலிருக்கும் ஈர்ப்பை தாழம்பூவை கொண்டையில் தெரிந்தும் தெரியாமலுமாய் மறைத்து வைப்பது போல கதையில் சொல்லியிருப்பார் எஸ்.செந்தில்குமார். அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமான உறவின் சிக்கலையும் சொல்லும் கதைகள் இமயமலைக்கு டிக்கெட், பலி சோறு, மெகபூபா என்றொரு நண்பன், பொற்படியான் போன்றன. அதில் மிக முக்கியமானதாக சொல்வதென்றால் பொற்படியான். தன்னுடைய கனவை பிள்ளைகள் மேல் திணிக்கும் தந்தை அதன் பொருட்டு மகன்கள் படும் துயர் என்ற மெல்லிய சரடு. ஆனால் அதன் பலம் மலையை கட்டி இழுக்கவல்ல சித்தரிப்பாக முடிகிறது. அத்தனை பாரம் மிகுந்த கதை. முதலாளி, தொழிலாளி அல்லது சக தொழிலாளியிடமான சிக்கலை பேசும் கதைகள் மோட்சம், உமிக்கருக்கு போன்றவை. “காணும் முகம் தோறும்” கதையில் இரு தோழிகள் தங்களுக்குள் எப்படி உறவை பேணுகின்றார்கள் என்பதை காட்டும் முக்கியமான கதை. மேலும் எளிய மாந்தரின் கதைகள் கண்மலர், உமிக்கருக்கு, சிக்கந்தர் அப்பச்சி இன்னும் சிலமகள்களில் மேல் பாசப்பிணைப்பில் உருகும் கதைகள் வெள்ளாட்டுக் குட்டி, மண்வாகு போன்றவைவெள்ளாட்டி குட்டி திருமணம் குதிராத மகளை பற்றிய, திருமணம் முடிந்து சீர் வரிசை சரியாக செய்ய முடியாத தந்தையின் தவிப்பு மட்டுமல்ல அந்த கதையின் முக்கிய முடிச்சு பரமசிவனிம் மகள் செல்வியின் பாத்திர வார்ப்பு. சமீப காலங்களில் கிராமங்களில் பார்க்கும் இளம்பெண்களில் பிரதி. அப்பெண்கள் ஆண்களில் சட்டையை போட்டு, தலையில் உருமால் கட்டி ஆண்களை போலவே சைக்கிள்/டிவிஎஸ் 50 ஓட்டி செல்லும் காட்சி கதையினுடே ஒரு கிராமசாலையில் விரிகிறது.  “ப்ளோராவின் காதல்” கதையின் இரண்டு பெண்கள் தங்களது மகளிடம் கொண்டிருக்கும் உறவு சிக்கலை பேசும் கதை. இரண்டு பெண்களுக்கும் அவர்களில் மகள்கள் அவர்கள் பெற்ற பெண்கள் இல்லை. ஒருத்தியின் மகள் தந்து மகள். அவள் தற்செயலாக கிடைத்த மகள், இன்னொருத்தி மறுதாரம் மூத்தாள் மகள் மீது கொஞ்சமும் அக்கரையில்லாத கொடுமைக்காரி. வலுக்கட்டாயமாக அம்மா ஆனவள். மிக நுட்பமான அம்மா மகள் முரண்களையும், உள் ஒளிந்திருக்கும் பாசத்தையும் பதிவிடும் கதை 

மிக சமீபகாலத்தில் எழுதப்பட்ட கதை என்பதால் தொழில்நுட்ப வளர்ச்சியின் பொருட்டு பயன்பாட்டிலுள்ள செல்போன்கள், லேப்டாப், முக நூல் கலாச்சாரம் மிக சகஜமாய் எஸ்.செந்தில் குமாரின் கதையுலகில் அமைந்திருக்கிறது. "மைதானம் அளவு உலகு" கதையில் முகநூலில் நடக்கும் அலப்பறைகள் பலவும் பகடியாக பதிவாகியுள்ளனநம் சமூகத்தில் வழக்கத்திலுள்ள பல சடங்கு நிகழ்வுகள் கதாசிரியரின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளில் பதிவாகியிருக்கிறது. கண்மலர் கதையில் மொட்டையடித்து, காது குத்தும் நிகழ்வுரசமட்டம் கதையில் தாலிக்கு பொன் உருக்கிதரும் நிகழ்வு. பலி சோறு கதையில் நீத்தாருக்கு முப்பதாம் நாள் இடுகாட்டில் நடத்தும் சடங்கு என்று பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை ஆவணபடுத்தும் கதைகளாக இவை இருக்கின்றன. புத்தன் சொல்லாத பதில் கதையில் பிள்ளை பெற்றவுடன் கை நிறைய கடுகை வெடிக்க செய்து அதன் நெடியை பிள்ளை பெற்றவள் நுகர செய்வது போன்ற ஒரு காட்சி பதிவாகியிருக்கிறது. இதனை சார்ந்த ஆய்வு செய்து பார்க்கும் ஆவலை இது தூண்டுகிறது.

எஸ். செந்தில் குமாரின் சில கதைகளில் பாத்திர அமைப்போ, அல்லது வரிகளோ, பெயரிடும் முறையோ வேறு சில எழுதாளர்களில் படைப்புகளை நினைவுபடுகிறது. அவ்வாறு நினைவுகளை கிளரும் படைப்புகள் ஆக சிறந்த படைப்புகளாக இருக்கும் போதே இந்த சம்மந்தம் சாத்தியப்படுகிறது. புன்னகை என்ற கதையில் புகைபடத்தில் புன்னகைக்கும் பெண்ணின் கையெழுத்து "சா" என்ற எழுத்தில் தொடங்குவதாக குறிப்பிடும் வரியின் வர்ணனை நகுலனின் "நினைவுபாதை" நாவலில் சுசீலாவின் கையெழுத்தை நகுலன் வர்ணப்பதை நினைவுபடுத்தியது. அதே போல "மோட்சம்" கதையின் பண்டரிநாதன் தேவிபாரதியின் "நிழலின் தனிமை" கருணகாரனையும், உமிக்கருக்கு கதையின் வரும் முதலாளிகளில் பெயரிடும் முறையும் "நட்ராஜ் மகாராஜ்" நாவலின் பெயரிடும் முறைகளையும் நினைவுபடுத்துகிறது. சிவப்புக்கூடை திருடர்களில் வரும் சிறுமி விமலாத்திய மாமல்லனின் "சிறுமி கொணர்ந்த மலர்" கதையில் வரும் சிறுமியை நினைவூட்டினாள். "புத்தன் சொல்லாத பதில்" கதையில் புத்தன் உண்ணும் காளான் உணவு தி.ஜாவின் கண்டாமணி மார்கத்தின் குழப்பை நினைவுபடுதியது. சில கதைகள் மட்டுமல்ல "சிக்கந்தர் அப்பச்சி" கதையில் பெத்தா சொல்லும் "மீன் எலும்பை இழுத்து செல்லும் எறும்பு" ஞானகூத்தனின் கவிதையில் வரும் "இளைத்து விட்டாய் பாட்டி என்றேன்/இளைக்கனும். பத்தே பத்து எறும்பு எடுத்துகிட்டு போக கூடியதாய்/கடைசி காலத்தில் தேகம் இளைக்கனும்" என்ற வரிகளை நினைவூட்டியதுஎஸ். செந்தில் குமாரின் மேல் சொன்ன எல்லா கதைகளும், கதைகளங்களும் வேறென்றாலும் நான் படித்த பிற படைப்புகளை நினைவில் ஆழத்திலிருந்து மீட்டெடுக்கும் போது கிடைந்த பேரானாந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை

சில கதைகளில் இந்த கதாபாத்திரத்தின் இந்த கதாபாத்திரத்தின் நோக்கமென்ன என்ற குழப்பம் இருக்கிறது. "ப்ளோராவின் காதல்" கதையில் விஜயாவின் கதாபாத்திரம் கதைக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கிறது என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. "புத்தன் சொல்லாத பதில்சாந்தினியின் ஆறு மாத கற்பத்திற்கு காரணமானவன் என்பதை தவிர எந்த பயன்பாடுமில்லாத கதாபாத்திரத்தின் சாந்தினியின் கணவன் பாத்திரம் அவன் கடைசிவரை சாந்தினி கிளம்பிய இடத்திலிருந்து சென்று சேராத கீழாமரூரிலேயே இருக்கிறான். மண்வாகு கதையில் மருதப்பனின் மகள் நெய் போளியை கொடுத்து விடும் முன்னரே அந்த போளியை நல்லம்மாள் சாப்பிடுகிறாள். அடுத்தவரியின் "அத்தா இன்னிக்கி அப்பா நெய் போளி வாங்கிட்டு வருவாரு நீங்களும் உங்க வயித்துல இருக்க பிள்ளையும் சாப்பிடுங்க" என்று சொல்கிறாள். ஆனால் அடுத்த பத்தியில் அந்த போளியை கொடுத்தும் அனுப்புகிறாள். மேல் சொன்னவை புனைவின் போது, எழுதும் போதோ ஏற்பட்ட குழப்பமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் மனைவி இழந்தவனை கோவில்களில் பூஜை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். முக்கியமாக சிறு தெய்வங்களுக்கு படையல் செய்பவர்கள் மனைவி இறந்து விட்டால் பூஜை தொடர்வதற்காகவே இரண்டாம் திருமணம் செய்வார்கள் அல்லது பங்காளிக்கோ, பிள்ளைகளுக்கோ படையலை விட்டு தருவார்கள். ஆனால் "பலி சோறு" கதையில் பூசாரியின் மனைவி இறந்த பின்னரும் மாவண்ணா கருப்பண்ணன் கோவிலில் பூஜை செய்கிறார். இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளை தவிர்த்து பெரும்பாலான கதை பல்வேறு அனுபவங்களை கடத்தும் கதைகள்.

கதைகளில் நீளம் சற்றே அதிகமென்று கருதக் கூடிய சில கதைகள் இந்த தொகுப்பில் இருந்தாலும், ஆரம்பித்த முதல் வரியில் தொடங்கி முடிக்கும் கடைசி வரி வரை வாசகரை கதையோடு கட்டு வைத்திருக்கும் மாயவித்தை எஸ். செந்தில்குமார் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. சில கதைகளை சற்றே செதுக்கி செம்மைபடுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் தொகுப்பிலுள்ள எல்லா கதைகளுமே மிக முக்கியமான கதைகளாக என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஒவ்வொரு கதையும் வெவ்வேறானவை. எதுவுமே போல செய்த கதைகளாக இல்லாத சிறப்பான கதைகள். ஒரே கதையிலும் சொல்ல வந்த கதையும் சொல்லி முடிக்கும் கதையும் வேறு வேறு. ஆயினும் அவற்றை இணைக்கும் விதமே எஸ்.செந்தில்குமார் கையாண்டிருக்கும் சிறுகதை வடிவம். அந்த விதத்தில் இவரது கதைகள் மிக முக்கியமான இடத்தையும் பிடிக்கின்றன. அதுவே இந்த கதைகளின் தனித்துவ அடையாளமாக இருக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய முக முக்கியமான தொகுப்பு. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.