Monday, December 30, 2013

ஈதேன்ன பேருறக்கம்?

 மார்கழித் திங்கள் பக்தி இலக்கியம் சார்ந்த ஒரு பதிவை இந்த வருடம் பதிக்க வேண்டும் என்று மார்கழி முதல் தேதியே நினைத்திருந்தேன், ஆனால் சோம்பலும் தூக்கமும்(உறக்கம் என் பலகீனம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரம் உறக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்) உலகிற்கு கிடைப்பதற்கரிய பல விசயங்களை என்னை பதிப்பிக்க விடாமல் தொடர்ந்து தடை செய்கிறது. மார்கழி பனிரெண்டாம் நாள் திருப்பாவையில் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்" என்ற படித்த போது என்னை தான் சாடினாளோ ஆண்டாள் என்று தான் நினைத்தேன். இந்த பேருறக்கத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு இன்று எழுதி விடவேண்டும் என்று நினைத்து அலுவலகம் அடைந்த போது(பொதுவாக நான் எழுதுவது அலுவலத்தில் தான்) என்னை தவிர என் குழுவில் அனைவரும் விடுப்பெடுத்திருந்த காரணத்தால் இன்னொருத்தரின் சுமையை சுமக்கும் பொறுப்பு வந்து இடைபட ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை சார்ந்த எந்த பதிவையும் பதிப்பிக்க இயலாமல் போனது.  ஆனால் இன்று மார்கழி 15ஆம் நாள் சற்று எள்ளலாக ஆண்டாள் என்னை கேட்டாள் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதையோ?"  எழுத தொடங்கியாயிற்று.உறக்கத்தை பல்வேறு விதமாக சொல்லி இருக்கிறார் ஆண்டாள். என்ன இப்படி துயில்கிறாய் குர்பகர்ணன் உறக்கத்தை உனக்கு தந்து விட்டானா என்றும், துயிலணை மேல் கண் வளரும்(கண் வளர்ந்தல் - அட போட வைக்கும் சிந்தனை), பேருறக்கம்,  மந்திரிக்க பட்டது போல ஏமப் பெருந் துயில் என்று பல்வேறு உறக்கத்தை பட்டியலிட்டு மிக அதிகாலை நேரத்தில் ஊரையே உறக்கத்திலிருந்து எழுப்பி, "குள்ளக் குளிரக் குடைந்து நீராடாடி", கண்ணனை தொழ அவன் இல்லம் தேடிச் சென்று வாயில் காவலனை எழுப்பி கண்ணின் பெற்றோரை எழுப்பி, பின்னர் கண்ணனையே எழுப்பி(கண்ணனும் கடும் சோப்பேறி தான், உலகின் பெரும் பகுதி கடல், அதில் பள்ளி கொண்ட பெருமாளை, திருப்பள்ளி எழுச்சி பாடி பாடி எழுப்பியவர் எத்தனை பேர், இன்னும் அவன் எழுத பாடில்லை). இத்தனை ஆரவாரத்தோடு பத்தியை கொண்டாடுகிறாள், தென்நாட்டு ராதை ஆண்டாள்.  பக்தி இலக்கியத்தில் கடவுள் மேல் காதல் கொள்வதே பக்தியின் உச்சகட்டம்.   ஆண்டாள் மட்டுமல்ல ஆழ்வார்களில் சிலர், திருவெம்பாவை எழுதிய மாணிக்க வாசகரும் இவ்வாறே. இதில் சில்லென்று (சில்லென்றெழையென்மின் என்பதும் ஆண்டாள் சொன்னதே) பக்தியை, காதலை தேன்மதுர தமிழை இனிக்க இனிக்க சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்கு காலையில் "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்"என்ற மாணிக்க வாசகர் வரிக்கு "நீயே என் தலைவன் என்று ஒற்றைகாலில் சிவதவம் செய்யும் பூச்செடிகள்" என்ற விளக்கம் சொன்ன மாணிக்க வரிகளை படித்தது இன்றைய நாளை தொடங்க போதுமானதாக இருந்தது.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" இந்த ஒருவரி போதுமானது பிரமாண்டமான சிவபெருமானை,(பெங்களூருவில் முருகேஷ்பால்ய அருகில் ஒரு பிரமாண்ட சிவன், 108 சிவ லிங்களும் உள்ள கோவில் உள்ளது, சிவ பெருமான் என்றால் அந்த பிரமாண்ட வெண் சிலையே நினைவுக்கு வரும்) அவன் அற்புத வடிவத்தை விளக்கி கூறிட. திருவெம்பாவையிலும் துயில் எழுப்புவது போன்ற காட்சிகள் சில உண்டு, இங்கும் மார்கழி மாதத்தில் நோன்புண்டு, அதிகாலை  "குள்ள குளிர" மார்கழி நீராடலுண்டு, "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி" வண்டுகள் மொய்க்கும் குளத்தில் (அப்படின்னா பூக்கள் நிறைந்திருக்கு), கையால் குடைந்து குடைந்து குளித்தோம் என்றும் இடத்தில் வனப்பமும்(பூக்களை கைகளால் தள்ளி விட்டு விட்டு குளிக்கின்றனர்), இயற்கை எழிலை ரசனையை ரசிக்கக் கொடுத்திருக்கிறார் மாணிக்க வாசகர். "பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்"(திருவெம்பாவை - 13) இந்த பாடல் மிக வியப்புடையது கன்னி பெண்கள் நீராடும் பொதிகையையே சிவனாகவும் பார்வதியாக பாவித்து நீராடாடுவது போல் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது. மறுமைக்கு வழிகாட்டலாவே அவன் "இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதந்தந்தருளுங் சேவகனே" என்றும் சொல்கிறார் மாணிக்கவாசகர். "முன்னிக் கடலைச் சுருக்கி"(திருவெம்பாவை -16) பாடலில் மாணிக்கவாசகர் மழையை பார்வதிக்கு ஒப்பிட்டு பாடுகிறார். திருவெம்பாவையில் பாடல்களில் இறையாய் சிவனும் பார்வதியும் சேர்ந்தே போற்றபடுகின்றனர்.

  பக்தி இலக்கியத்தில் கோவிந்தனை ஈசனை போற்றி வீடு பேறு பெற பெரிதாக ஆறு கால பூசையும் பட்டும் பட்டாசையும் பலவகை நேவேத்தியமும் எதுவும் செய்ய தேவையில்லை "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" நம் துயர் அனைத்தையும் போக்குவான் என்று எளிமையை ஆண்டாளும்,  "விண்ணுகொரு மருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினாயானை பாடிக்கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுகுருக" என்று மாணிக்க வாசகரும் கற்றுத்தருகின்றனர். மாணிக்க வாசகர், ஆண்டாள், மாணிக்க வாசகம் போல் இறைவன் மீது காதலாகி கசிந்துருகவிடுனும் இறையை அவர் பாடல்களால் போற்றுதல் எம் தீம்தமிழுக்கு நம்மாலான சிறுதொண்டு. பத்தி இலக்கியத்தில் தித்திக்கும் தமிழும், இறையனுபவமும் போற்ற தக்கவை. இறை மீது நம்பியவர்க்கு அது இறை வழிபாடு. நம்பிக்கையற்றவர்க்கு இது சிறந்த தமிழ் இலக்கிய பாடல்கள்.

திருப்பாவை:
http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruppaavai.html

திருவெம்பாவை:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் கொண்டாட கோடி இருந்தாலும் என்னால் இயன்ற எள்ளப்பமிது. ஆண்டாள் மற்றும் மாணிக்க வாசகர் திருவடிகளே சரணம்.

Sunday, December 22, 2013

என் வீட்டின் வரைபடம் - புத்தக விமர்சனம்

சமீப காலத்தில்(சுமார் ஒரு வருடத்திற்கு முன்) படித்த "என் வீட்டின் வரைபடம்" சிறுகதை தொகுதியின் மூலம் எனது சிறுகதை தேடலின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்தேன். என் வீட்டின் வரைபடம் இந்த தொகுப்பின் எல்லா கதைகளுமே ஒரு நாவலுக்குரிய அடர்ந்தியை பெற்றிருக்கின்றன. முன்னுக்கு பின் சொல்தல், சம்மந்தம் இல்லாத சம்பவங்களை ஒரு குறீயீடு சார்ந்து சேர்த்து சொல்லுதல் இந்த பாணியில் அமைந்ததே "என் வீட்டின் வரைபடம்". இந்த தொகுதியில் எனை மிக முக்கியமாக கவர்ந்த அம்சம், கதைகளில் வித்தியாசமான தலைப்புகள் "என் வீட்டின் வரைபடம்", "மிகு மழை", "உடைந்த புல்லாங்குழல்", "உருவங்களின் ரகசியம்", "தனிமையின் புகைப்படம்" என்றபடி நீள்கிறது கதையின் தலைப்புகள். தலைப்பிற்காகவே படிக்க தொன்றும் கதைகள் இவை. 

ஓவ்வொரு கதைக்கான களத்தினை தானே அனுபவித்தது போல அழுத்தமாக எழுதப்பட்டிருக்கின்றன எல்லா சிறுகதைகளும். உடைந்த புல்லாங்குழல் என்ற ஒரே ஒரு கதையை தவிர மற்ற எல்லா கதைகளின் கதை சொன்ன விதம் எல்லா நவீன கதைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. நேர்த்தியாய் தெளிந்த நீர் போல ஓடவில்லை ஜே.பி.சாணக்கியாவின் கதைகள். கொஞ்சம் கலங்கிய நீரும், தேங்கிய நீருமாய், சில இடத்தில் குழப்பிய நீருமாய் ஒடி இருக்கிறது. பெரும்பாலான கதைகளில் விரசமான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார் கதாசிரியர். அது கதைக்கு தேவையானது என்ற சிந்தனையினும் சில இடம் மிக நீண்ட அருவருப்படையும் அதிருப்பியையும் தருவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மிகு மழை ஏதோ தன்னிச்சையாய் தன்னிஷ்டம் போல இருக்கும் பெண்ணின் காமத்தை பற்றி பேசுகிறது. அவளை ஏதோ சமூகத்தின் அருவருக்கதக்கவள் கேலி குரியவள்  போல சித்திரக்கும் ஆசிரியரின் மனபோக்கு சற்றே கண்டிக்கத்தக்கது. இதே கதையில் ஆசிரியர் தன்னுடைய கண்ணோடத்தில் அந்த பெண்ணை சித்தரித்தது போலில்லாமல் அவளுக்கான நிலைப்பாட்டினை பேசி இருக்கலாமே என்ற ஆதங்கம் மிஞ்சியது கதையை வாசித்து முடித்த பின்னர். "உருவங்களின் ரகசியம்" என்ற மற்றுமொரு கதையில் கள்ள உறவுக்கு பெண் மட்டுமே கலங்கம் கற்பிக்கபடுகிறாள். எல்லா பொது புத்தி சார்ந்த கதைகளம் போல் அதில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். எவனால் அந்த பெண் இறந்தாளோ அவள் மகளையே காதலித்து அவளுக்கான தற்கொலையும் செய்து கொள்கிறான்.

தனிமையின் புகைப்படம் மற்றும் ப்ளாக் டிக்கெட் இரண்டு கதையின்களத்தின் அதிகப்படியான முரண் உறவுகளை சார்ந்த பகுதிகள் இல்லை. ஆனால் அதிலும் இல்லாவே இல்லை என்றெல்லாம் சொல்ல இயலாது. தனிமையின் புகைப்படம் பிச்சைகாரர்களின் வாழ்வினை சொல்கிறது. அதில் வரும் "குரு  மகராஜ்" கிழவன் இறக்கும் தருணம் புதுமைபித்தனின் கதையொன்றை(சாலையேரம் செத்து கொண்டிருக்கும் பிச்சைகாரனை பற்றியது) நினைவுபடுத்தியது. ப்ளாக் டிக்கெட் அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வின் சோகத்தை, தன் அடுப்பை/வீட்டை முதுகில் சுமந்து திரியும் நாடோடிகளில் வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்கிறது. தனிமையின் புகைப்படத்தில் பிச்சைக்கார கிழவியும் குருமகராஜ் கிழவனும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்த்து விட மாட்டார்களா என்று ஏக்க வைத்தது.

"ரிஷப வீதி" மற்றும் "ஆட்டத்தின் விதிமுறைகள்" ஆண் ஆதிக்கத்த்தின் உச்சநிலையை பிரகணடப்படுத்திகிறது. தன்னால் தர முடியாத குழந்தையை, வன்புணர்வின் பின் பெறும் மனைவி தற்கொலை செய்து இறந்து விடுவாள் என்றே நினைக்கிறான் சராசரி இந்திய/தமிழக கணவன். அதுவே அவள் விதியாக இருக்க வேண்டுமென்று பின்னர் விரும்புகிறான். மொத்த தொகுப்பில் என்னை பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாக்கிய கதை ரிஷப வீதி. எவ்வளவு மிதிபடுகின்றனர் கீழ்தட்டு பெண்கள் என்று படித்து சீரணக்கவே இயலாத கொடும் கதாசித்திரங்களை புனைந்து வைத்திருக்கிறார் ஜே.பி.சாணக்கியா.

ஒட்டு மொத்த தொகுப்பின் என்னை மிகவும் கவர்ந்த கதை "என் வீட்டின் வரைபடம்", ஒரு வீட்டின் உறவுகளுக்கும் நடவடிக்களுக்கும் இருக்கும் மர்மங்களையும் அவலங்களையும் மனப்போராட்டங்களையும் தெளிவாக வரைந்திருக்கிறார் சித்திரமென. அதெப்படி ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் வெவ்வெறு விதமான பிரச்சனை, சினிமாதனமாக என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எப்படி சொன்னாலும் வித்தியாசமான மொழி, கதை சொல்லும் நேர்த்தி, எதார்த்தமான பாத்திரங்கள், சென்சாரே இல்லாத வாசங்கங்கள், சற்றே சிரமப்பட்டே இவர் கதைகளை உள்வாங்கி கொள்ள முடிகிறது.

Tuesday, December 10, 2013

ஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை


என்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓடும் பயணங்கள் எங்கள் வாழ்வின் ரசித்து ரசித்து நான் வாழும் சில தருணங்களில் ஒன்று. தற்சமயம் எங்கள் சிற்றுந்தில் இசைக்கருவி என்னை மதிமயக்கும் திறன் கொண்டது. தீபாவளி விடுப்பிற்கு எங்கள் வண்டியிலேயே பிறந்த கிராமமும் மேலும் சில சுற்றுலா தளங்களையும், கோவில்களுக்கு சென்று வர முடிவு செய்து ஊருக்கு சொன்றோம். அவ்வாறே சென்ற நெடும் பயத்தின் போது, ராமேஸ்வரத்திலிருந்து திருச்சியை நெருக்கிக் கொண்டிருந்த போது, இரவு இறக்கி விட்ட கருமை, வெளியில் கவனம் கொள்ள வியலாமல் பண்பலையை திருப்பிக் கொண்டிருந்தேன். (பெங்களூரிவில் எங்கள் வாகனத்தின் பண்பலையை அதிகமாய்  பயன்படுத்துவதில்லை. பண்பலையில் இசையினும் அதிகம் இழுவைகளே அதிகம் அதுவும் சொல்ப அறிந்த கன்னடத்தில் வசவசவென்று மாத்திலாடுவார்கள் அதனால் இசை தரும் இன்பதினும் இம்சையே அதிகமிருக்கும் ).

  பண்பலையில் திருப்பிக்கொண்டிருக்கும் போது, மதி மயக்கும் "முன்பே வா அன்பே வா" என்னை கட்டி இழுக்க அதே அலைவரிசையில் இசைகருவியில் எனக்கான இசையை மிதக்க விட்டேன். அது ஒரு மலையாள பண்பலை ஆங்கிலத்தில் தொகுத்து வழக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த பாடல் முடிந்தவுடன் தான் தெரிந்தது. அது ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. முன்பே வா பாடியது ஸ்ரேயா என்று அன்று தான் அறிந்தேன். ஸ்ரேயா பட்டும் படாமலும் பாடிய ஒரே ஒரு தமிழ் பாடல் என்று சொல்லலாம்.(ஆயினும் நீ பார்த்த பார்வைக்கோரு நன்றி என்றும், செண்பகமே செண்பகமே என்றும் இசை ஜாம்பவான் ஆ ஷா போன்சிலேவின் நுனி நாக்கில் கடிபடும் தமிழிலும் சிறந்ததது தான் "முன்பே வா"வில் ஸ்ரேயா பாடி இருக்கும் தமிழ்) இந்த பாட்டில் மட்டும் சில இடங்களில் ஸ்ரேயாவின் உச்சரிப்பு அவர் வேற்று மொழிக்காரர் என்பதை காட்டிக் கொடுக்கும், ஒரு வேளை இது ஸ்ரேயாவின் முதல் தமிழ் பாடலாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அது 2006-ல் வெளியான படம், அதற்கு முன்பாகவே 2003 ஜீலி கணபதியில் "எனக்கு பிடித்த பாடல்" பாடி இருக்கிறார். முன்பே வா பாடலில் ஸ்ரேயாவின் குரல் தனிப்பட்டிருந்தாலும் மிக அழகாவே இருக்கின்றது. ராவணனில் அவர் பாடிய கள்வரே கள்வரே என்ன ஒரு உச்சரிப்பு. அற்புதம். "உன்ன விட உலகத்தில் உசந்தது" இதில் ஒரு மதுரை தேவரச்சியாக வாழ்ந்திருப்பார் ஸ்ரேயா. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மலையாள பண்பலை 102.8, 12.11.2013 அன்று சுமார் இரவு 10 மணி அளவில் என்ன நிகழ்விற்காக ஸ்ரேயாவின் பல் வேறு மொழிப் பாடல்களை தொகுத்து வழக்கினார்கள் என்று தெரியாது, ஆனால் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒரு சிறு கிராமான எனது மாமியார் வீடு வரும் வரை திகட்ட திகட்ட ஸ்ரேயாவின் இசையோவியங்களை வழங்கியது அந்த பண்பலை, முன்பே வா பாடலுக்கு அடுத்து மலையாளத்தில் கண்ணனை சார்ந்த ஒரு பாடல்,(தேசியவிருது பெற்றது) என்ன அர்த்த சுத்தமான மலையாள உச்சரிப்பு. நான் வட இந்தியாவில் இருந்த சமயம் எனது அலுவலக நண்பர் ஒருவர் மலையாள பெண்ணை தனது கல்லூரியில் ராகிங் செய்து போது அந்த பெண் நான் கூறும் ஒரே ஒரு வார்த்தை ஸ்படமாக உச்சரித்தால் அவர் சொல்லும் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொன்னாலாம், அதற்கு அவர் சரி சவாலுக்கு தயார் என்றதும் "மழ" என்று சொல்ல சொன்னாலாம். என்னால் இறுதியாண்டு வரை அந்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை என்றார். அவ்வாறாக நாவினை சுழற்றிப்போடும் மலையாள வார்த்தைகளை எத்தனை அழகாய் பாடுகிறார் ஸ்ரேயா என்னும் வங்க மொழிக்காரி சொக்கிப் போகிறேன்.

மூன்றாவதாய்  தேவதாஸ் படப்பாடல் "கேசே காகும் ஹாய் ராம்" இசையால் உறுகி  வழியத் தொடங்கி இருந்தேன், ஸ்ரேயா ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக் காரரில்லை.   எந்த மொழியில் பாடினாலும் ஸ்ரேயாவின் பாடலை கேட்பவர் அவர் அந்த மொழியினை சேர்ந்தவர் என்றே நினைத்துக் கொள்வர். அதுவே ஸ்ரேயாவின் சிறப்புத்தன்மை. இதனையே தான் அந்த பண்பலையிலும் தொகுப்பாளரும் கூறினார். மேலும் ராஜத்தானிய மற்றும் வேறு சில மொழி பாடல்களை ஒலிப்பரப்பினர் அந்த பண்பாலையில். இடையில் வங்காள மொழியிலும் ஒரு பாடல் வந்தது. தனது தாய் மொழியில் அவர் பாடும் போது இன்னும் பிரத்தியோச இசையின்பம் தரவல்லவராக இருக்கிறார் ஸ்ரேயா. இசைக்கு மொழி கிடையாது என்றாலும், வங்க மொழி தெரியவில்லையே என்று இரண்டாம் முறையாக வருத்தப்பட நேர்ந்தது இந்த இசை தேவதையால். "நீலகண்டப் பறவையைத் தேடி" இதன் இரண்டாம் மூன்றாம் பாகம் இன்னும் வங்க மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்படவில்லை, மூலகாரணம் அந்த புத்தகத்தின் ஆங்கில மூலமும் இல்லை. வங்க மொழி தெரியாத காரணத்தால் ஒரு அதி அற்புத நாவலை முழுமையாக படிக்க இயலாமல் போனதே என்று முதல் முறையாக வங்க மொழி தெரியாதற்கு வருந்தினேன். அடுத்து ஸ்ரேயா பாடிய வங்க மொழி பாடலில் விளக்கம் தெரிந்திருந்தால் இன்னும் இசையை ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன்.

ஸ்ரேயா என்னும் ஒரு குட்டி தேவதையை எனக்கு தெரியும், என் தோழியின் மகள் அவள், எப்போதும் ஸ்ரேயா என்றாலும் அந்த குழந்தையின் நினைவு வந்து இனிக்கும். அதை கெடுத்தழிக்க வந்தாள் நடிகை ஸ்ரேயா. ஆனால் பாடகி ஸ்ரேயா மீண்டும் ஸ்ரேயா என்ற பெயரை கேட்டாலே இன்புறும் அனுபவத்தை தருகிறாள்.

  தலைப்பையும் ஸ்ரேயாவை பற்றி எழுதும் எண்ணத்தை தந்ததற்கு கவிஞர் சுகுமாரனுக்கும், சில காலமாய் எழுத பிடிக்காமல் முடிங்கி இருந்த என்னை மீண்டும் எழுத வைத்த மீராவின் சரவணனுக்கும் நன்றியும்,

கூடவே இந்த பதிவு அவர்களுக்கு சமர்பணம்.