Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Thursday, January 23, 2014

Coffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்


நான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அம்மாயி தான் காப்பி குடிக்கும் போது நான் ஏங்கி பார்க்கிறேன் என்று ஒரு வாய் குடிக்க கொடுத்து பழக்கிவிட்டதாக அம்மா சொல்வார்கள். அம்மா தடுத்தாலும் பிள்ளை ஏக்கமா பாக்கறா குடுத்த சப்பு கொட்டி குடிக்கிறா ஏன் தடுக்கிறே என்று அடக்கி விடுவார்களாம். அப்படி என்னை தேவியாக்கும் காப்பி பாணம் எனக்கு தொட்டில் பழக்கம். அதற்காக எல்லா காப்பியையும் குடித்து விட மாட்டேன், நல்ல A ரக பிபேரி காப்பி கொட்டைகளை 50% விதமும் B ரக காப்பி கொட்டைகளை 50% சரிபட வறுத்து, 100 கிராமுக்கு 10 கிராம் சிக்கரி கலந்து அரைத்து வைத்த திருச்சி புகழ் பத்மா காபியை அல்லது கிராமத்தில் காப்பி ராமு அண்ணா கொண்டு வந்து தரும் ரமா காபி இவை மட்டுமே பிரியமானது. அதுவும் காப்பிக்கு பாலில் , தண்ணீர் அளவு அதை காய்ச்சும் முறையும் மிக முக்கியம், டிக்காசன் அதிகமா சக்கரை குறைவாக சேர்த்து ஒரு சிப் அருந்தும் போது நாவில் பரவுமே ஒரு சுவை, ஆஹா காப்பி மனிதரை தேவராக்கும் பாணம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.

திருமணமாகி ப்ரிதாபாத் போய் சேர்ந்த புதிதில் காப்பித் தூள் சரியாக கிடைக்காத காரணத்தாலும் மேலும் அங்கே கிடைக்கும் பாலில் கலந்த காப்பி சுவை நாவிற்கு ஒவ்வாத காரணத்தாலும் தேனீரில் இஞ்சி எலக்காய் இன்னபிற விசயங்களை சேர்த்து ஒருவாறு நாவினை ஒப்பேத்தி கொண்டிருந்தேன். கிட்டதட்ட ஒராண்டுக்கு காப்பி அருந்துவது அறவே இல்லாது போனது. பின்னர் டெல்லி முனீர்கா ரமா ஸ்டோர் அருகே ஒரு காப்பித் தூள் கடை மிக சிறப்பாக காப்பித் தூளை அரைத்து தருவார்கள் என்று அறிந்து அங்கே போய் வாங்கி வந்து காப்பி அருந்தும் போது திருச்சி பத்மா காபியின் அதே சுவையை மீட்டெடுக்க முடிந்தது. இந்த சுவைக்காக வேறும் காப்பிப் பொடி வாங்குவதற்காகவும் அந்த சாக்கில் சரவணபவனில் சாப்பிடுவதற்காகவும் ப்ரிதாபாத்திலிருந்து வார இறுதியானால் டெல்லி செல்வோம். அப்படிப்பட்ட ஒரு பொற்காலமது.

பெங்களூர் வந்து தனியளாக இருந்த ஒரு ஆறு மாத காலத்தில் என்னிடம் மிக குறைவான பாத்திரங்களே இருந்தது, அதில் காப்பி பில்டர் இல்லை. அதனால் மீண்டும் இஞ்சி ஏலக்காய் டீக்கு என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். அதன் பின்னர் அம்மா கூட வந்து இருக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் எப்படி தான் காப்பியை விட்டாயோ அதிசயமா இருக்கு என்றார்கள். அவர்கள் அப்படி ஆச்சரியப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை ஏனென்றால் திருமணத்திற்கு முன் ஒரு படி உயர டம்பளிரில் முக்கால்பாகம் காப்பி கொடுத்தால் கூட முகம் சுண்டிக் கொள்வேன் என்று முழு டம்ளராக அல்லவா காபிக் கொடுத்து வளர்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் போய் அம்மா "வயிறு காப்பிக்கு பசிக்குது" என்று கூட சொல்வேனாம். அது எனக்கு நினைவில்லை ஆனால் அம்மா இதை அடிக்கடி சொல்வார்கள். அவ்வளவு பிரியம் எனக்கும் காப்பி மீது.

இத்தனை காப்பி ப்ரியம் கொண்ட நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே என் அலுவலத்தில் காப்பி வாசனை, அலுவலத்தில் மட்டுமல்ல ஸ்டார் பக்ஸ் காபே, லாவாசா இட்டாலியன் காபே, இத்தாயி என்று எல்லா இடத்திலும் ஏகபோகமாய் காப்பி மணம் மனதை மணக்குமளவுக்கு ததும்பி வழியும். நாவை அடக்கவே முடியாதபடி அந்த காபியின் மணம் நம்மை எங்கிருந்தாலும் ஈர்க்கும். அத்தனை ஆர்வமாய் போய் அவர்கள் தரும் சின்ன வாளி அளவில் இருக்கும் பெரிய குவளையில் காப்பியை நுரை பொங்க எடுத்து வந்து ஒரே ஒரு சிப் வைத்தால் போதும் காறி துப்பும் அளவிற்கு காப்பியின் மீது வெறுப்பாகி விடும். அமெரிக்கா சென்ற முதல் வாரத்தில் அலுவகத்தில் தினம் காப்பியை எடுப்பேன் பின்னர் அப்படியே வாஷ்பேசனில் கவிழ்த்து விடுவேன். பின்னர் அமெரிக்காவில் இருக்கும் வரை முழுமையாக காப்பியை வெறுக்க ஆரம்பித்தேன். அங்கே தேனீரும் நாம் நினைக்கும் சுவையில் கிடைக்காது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நல்ல காப்பி கிடைக்கவில்லையே என்று நா ஏங்கி போகும் தமிழ்நாட்டு காப்பி ப்ரியர்களுக்கு காப்பி ப்ரியர்களுக்கு சன்னிவேலில்(Sunnyvale) இருக்கும் கோமள விலாஸ் (திருச்சிக்காரர் இயக்கி வருவது) http://www.komalavilas.com/ மற்றும் http://www.madrascafe.us/ மெட்ராஸ் காப்பேயும் நல்ல வடிகால். சாப்பாடு, டிபன் முக்கியமாக காப்பி எல்லாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய சுவையுடன் கிடைக்கும். ஆகா அமெரிக்கா சென்று வந்த முதல் ஆறு மாதம் நான் காப்பியை அறவே தொடவில்லை என்றால் நீங்களே யோசியுங்கள் அங்கிருக்கும் காப்பி என்னை எந்த அளவு வெறுப்பேத்தி விரட்டி இருக்குமென்று.

தற்சமயம் அக்குபிரஸ்ஸர் என்று ஒரு உடலையே மருத்துவர் ஆக்கும் மருத்துவ முறையொன்றின் பொருட்டு பால், தயிர் இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்று, காப்பி டீ குடித்தே ஆக வேண்டுமென்றால் ப்ளாக் டீ அல்லது ப்ளாக் காப்பி குடியுங்கள் என்றும் அறிவுத்தப்பட்டு, பால் சேர்த்து காப்பி குடிப்பது முற்றாக நின்று போனது. கடந்த முறை திருச்சி சென்ற போது நவகிரக கோவில்கள் சென்றதில் எனக்கு பிடித்த விசயம் நாங்கள் அருந்திய கும்பகோணம் டிகிரி காப்பியே, மேலும் திருச்சியில் இருந்து பெங்களூர் வரும் நெடுங்சாலையில் தீபாவளிக்கு சென்று வரும் போது தான் கிருஷ்ணகிரி டோல்(toll) தாண்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் டிகிரி காப்பி கடையொன்றை கண்டோம். அங்கே காபி அருந்துவதற்கென்றே அடுத்த முறையும் காரில் ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன் அவரிடம், ஹூம்ம்ம்ம் இனி என்று பால் ஊத்தி நல்ல காப்பித் தூளால் தயாரிக்கப்பட்ட டிக்காசன் காப்பியை எப்போது குடிப்பேனோ தெரியவில்லை. I miss you coffee.

இப்போது பரிபூர்ணமாய் உணர்கிறேன் காப்பி மனிதரை தேவனாக்கும் பாணமென்று நன்றி சுகுமாரன் சார்.  பிரபஞ்சன் எழுதி இருப்பதாக அவர் தான் சொன்னார்.

Tuesday, December 10, 2013

ஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை


என்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓடும் பயணங்கள் எங்கள் வாழ்வின் ரசித்து ரசித்து நான் வாழும் சில தருணங்களில் ஒன்று. தற்சமயம் எங்கள் சிற்றுந்தில் இசைக்கருவி என்னை மதிமயக்கும் திறன் கொண்டது. தீபாவளி விடுப்பிற்கு எங்கள் வண்டியிலேயே பிறந்த கிராமமும் மேலும் சில சுற்றுலா தளங்களையும், கோவில்களுக்கு சென்று வர முடிவு செய்து ஊருக்கு சொன்றோம். அவ்வாறே சென்ற நெடும் பயத்தின் போது, ராமேஸ்வரத்திலிருந்து திருச்சியை நெருக்கிக் கொண்டிருந்த போது, இரவு இறக்கி விட்ட கருமை, வெளியில் கவனம் கொள்ள வியலாமல் பண்பலையை திருப்பிக் கொண்டிருந்தேன். (பெங்களூரிவில் எங்கள் வாகனத்தின் பண்பலையை அதிகமாய்  பயன்படுத்துவதில்லை. பண்பலையில் இசையினும் அதிகம் இழுவைகளே அதிகம் அதுவும் சொல்ப அறிந்த கன்னடத்தில் வசவசவென்று மாத்திலாடுவார்கள் அதனால் இசை தரும் இன்பதினும் இம்சையே அதிகமிருக்கும் ).

  பண்பலையில் திருப்பிக்கொண்டிருக்கும் போது, மதி மயக்கும் "முன்பே வா அன்பே வா" என்னை கட்டி இழுக்க அதே அலைவரிசையில் இசைகருவியில் எனக்கான இசையை மிதக்க விட்டேன். அது ஒரு மலையாள பண்பலை ஆங்கிலத்தில் தொகுத்து வழக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த பாடல் முடிந்தவுடன் தான் தெரிந்தது. அது ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. முன்பே வா பாடியது ஸ்ரேயா என்று அன்று தான் அறிந்தேன். ஸ்ரேயா பட்டும் படாமலும் பாடிய ஒரே ஒரு தமிழ் பாடல் என்று சொல்லலாம்.(ஆயினும் நீ பார்த்த பார்வைக்கோரு நன்றி என்றும், செண்பகமே செண்பகமே என்றும் இசை ஜாம்பவான் ஆ ஷா போன்சிலேவின் நுனி நாக்கில் கடிபடும் தமிழிலும் சிறந்ததது தான் "முன்பே வா"வில் ஸ்ரேயா பாடி இருக்கும் தமிழ்) இந்த பாட்டில் மட்டும் சில இடங்களில் ஸ்ரேயாவின் உச்சரிப்பு அவர் வேற்று மொழிக்காரர் என்பதை காட்டிக் கொடுக்கும், ஒரு வேளை இது ஸ்ரேயாவின் முதல் தமிழ் பாடலாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அது 2006-ல் வெளியான படம், அதற்கு முன்பாகவே 2003 ஜீலி கணபதியில் "எனக்கு பிடித்த பாடல்" பாடி இருக்கிறார். முன்பே வா பாடலில் ஸ்ரேயாவின் குரல் தனிப்பட்டிருந்தாலும் மிக அழகாவே இருக்கின்றது. ராவணனில் அவர் பாடிய கள்வரே கள்வரே என்ன ஒரு உச்சரிப்பு. அற்புதம். "உன்ன விட உலகத்தில் உசந்தது" இதில் ஒரு மதுரை தேவரச்சியாக வாழ்ந்திருப்பார் ஸ்ரேயா. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மலையாள பண்பலை 102.8, 12.11.2013 அன்று சுமார் இரவு 10 மணி அளவில் என்ன நிகழ்விற்காக ஸ்ரேயாவின் பல் வேறு மொழிப் பாடல்களை தொகுத்து வழக்கினார்கள் என்று தெரியாது, ஆனால் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒரு சிறு கிராமான எனது மாமியார் வீடு வரும் வரை திகட்ட திகட்ட ஸ்ரேயாவின் இசையோவியங்களை வழங்கியது அந்த பண்பலை, முன்பே வா பாடலுக்கு அடுத்து மலையாளத்தில் கண்ணனை சார்ந்த ஒரு பாடல்,(தேசியவிருது பெற்றது) என்ன அர்த்த சுத்தமான மலையாள உச்சரிப்பு. நான் வட இந்தியாவில் இருந்த சமயம் எனது அலுவலக நண்பர் ஒருவர் மலையாள பெண்ணை தனது கல்லூரியில் ராகிங் செய்து போது அந்த பெண் நான் கூறும் ஒரே ஒரு வார்த்தை ஸ்படமாக உச்சரித்தால் அவர் சொல்லும் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொன்னாலாம், அதற்கு அவர் சரி சவாலுக்கு தயார் என்றதும் "மழ" என்று சொல்ல சொன்னாலாம். என்னால் இறுதியாண்டு வரை அந்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை என்றார். அவ்வாறாக நாவினை சுழற்றிப்போடும் மலையாள வார்த்தைகளை எத்தனை அழகாய் பாடுகிறார் ஸ்ரேயா என்னும் வங்க மொழிக்காரி சொக்கிப் போகிறேன்.

மூன்றாவதாய்  தேவதாஸ் படப்பாடல் "கேசே காகும் ஹாய் ராம்" இசையால் உறுகி  வழியத் தொடங்கி இருந்தேன், ஸ்ரேயா ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக் காரரில்லை.   எந்த மொழியில் பாடினாலும் ஸ்ரேயாவின் பாடலை கேட்பவர் அவர் அந்த மொழியினை சேர்ந்தவர் என்றே நினைத்துக் கொள்வர். அதுவே ஸ்ரேயாவின் சிறப்புத்தன்மை. இதனையே தான் அந்த பண்பலையிலும் தொகுப்பாளரும் கூறினார். மேலும் ராஜத்தானிய மற்றும் வேறு சில மொழி பாடல்களை ஒலிப்பரப்பினர் அந்த பண்பாலையில். இடையில் வங்காள மொழியிலும் ஒரு பாடல் வந்தது. தனது தாய் மொழியில் அவர் பாடும் போது இன்னும் பிரத்தியோச இசையின்பம் தரவல்லவராக இருக்கிறார் ஸ்ரேயா. இசைக்கு மொழி கிடையாது என்றாலும், வங்க மொழி தெரியவில்லையே என்று இரண்டாம் முறையாக வருத்தப்பட நேர்ந்தது இந்த இசை தேவதையால். "நீலகண்டப் பறவையைத் தேடி" இதன் இரண்டாம் மூன்றாம் பாகம் இன்னும் வங்க மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்படவில்லை, மூலகாரணம் அந்த புத்தகத்தின் ஆங்கில மூலமும் இல்லை. வங்க மொழி தெரியாத காரணத்தால் ஒரு அதி அற்புத நாவலை முழுமையாக படிக்க இயலாமல் போனதே என்று முதல் முறையாக வங்க மொழி தெரியாதற்கு வருந்தினேன். அடுத்து ஸ்ரேயா பாடிய வங்க மொழி பாடலில் விளக்கம் தெரிந்திருந்தால் இன்னும் இசையை ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன்.

ஸ்ரேயா என்னும் ஒரு குட்டி தேவதையை எனக்கு தெரியும், என் தோழியின் மகள் அவள், எப்போதும் ஸ்ரேயா என்றாலும் அந்த குழந்தையின் நினைவு வந்து இனிக்கும். அதை கெடுத்தழிக்க வந்தாள் நடிகை ஸ்ரேயா. ஆனால் பாடகி ஸ்ரேயா மீண்டும் ஸ்ரேயா என்ற பெயரை கேட்டாலே இன்புறும் அனுபவத்தை தருகிறாள்.





  தலைப்பையும் ஸ்ரேயாவை பற்றி எழுதும் எண்ணத்தை தந்ததற்கு கவிஞர் சுகுமாரனுக்கும், சில காலமாய் எழுத பிடிக்காமல் முடிங்கி இருந்த என்னை மீண்டும் எழுத வைத்த மீராவின் சரவணனுக்கும் நன்றியும்,

கூடவே இந்த பதிவு அவர்களுக்கு சமர்பணம்.

Saturday, September 24, 2011

ஜே ஜே சில (பின்) குறிப்புகள்

இப்போதுதான் பூத்த மலர்
பறிக்கப்பட்டுவிடும் என்று
சற்றேனும் நினைக்கவில்லை“

"நல்ல சிந்தனை. யார் எழுதினது?"

"நான்தான்"

"அட அம்மிணி சரின்னு சொல்லிட்டாங்களா ?"

"இல்லைங்க.. அந்த வரிகள் வலி வேதனை"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று எனக்கு தோன்றியது.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க.. நான் செடியின் வலியை சொன்னேன்"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று
எனக்கு தோன்றியது - இது Hope.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க நான் செடியின் வலியை சொன்னேன்." -  இது Reality.

Hope and Reality is not always same.

--X--

நான் சுவீடனில் இருந்த போது வார இறுதியில் ஊர் சுற்றித்தானே ஆறு பயணக்கட்டுரைகள் அளித்திருந்தேன். சுவீடனில் பார்க்க அதிகம் இடமில்லாத காரணத்தால் ஊர் வெளியே கிளம்பும் போது வரைபடத்தில் இங்கி பிங்கி பாக்ங்கி போட்டு பார்த்து ஒரு இடம் செல்வோம். அப்படி போய்  ஒரு நிலையத்தில் இறங்கியதும் அங்கே பார்த்த ஒரு ட்ராமில் "சிக்கில ஹுட்டே" என்று எழுதப்பட்டு இருந்தது.

சிக்கில ஹூட்டே என்ற அந்த பெயர் கவர்ந்திருந்தாலும், அது வரை மெட்ரோவிலும் பஸ்ஸிலுமே அதுவரை பயணம் மேற்கொண்டிருந்தால் ட்ராமில் செல்ல எப்படி இருக்கும் என்று நினைத்து, வேறு ஒரு வார இறுதியில் அந்த ஊருக்கே செல்ல திட்டமிட்டு வரைபடத்தில் தேடி கிளம்பினோம்.

அங்கே சென்றதும்தான் தெரிந்தது அங்கே ஒரு தில்லி தாபா இருப்பது. (எங்கே போனாலும் துரத்தும் தில்லி). மேலும் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மாலும், ஒரு பனி மலைப்பிரதேசமும் இருந்தது. (ஸ்கியிங் என்ற மலை மேலிருந்து பனி சறுக்குமிடம்).

தில்லி தாபாவில் சாப்பிட்டோம், அன்னாசி லஸ்ஸி நன்றாக இருந்தது என்பதையும், அந்த ஷாப்பிங் மாலில் எல்லா பொருட்களும் மிக குறைந்த விலையில் இருந்தன என்பதையும், பனி சறுக்குமிடம் வரை வீராவேசமாக சென்று, பின் பயந்து போனாதால், என்னால் என் கூட வந்த யாருமே பனி சறுக்காமல் திரும்பியதுதான் எனது ஸ்வீட் சுவிடன் கட்டுரையிலேயே சொல்லி விட்டேனே.

சரி... ஏன் இந்த மலரும் நினைவுகள் ?

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்றாக பேசப்படும் சுந்தரராமசாமியின் ஜே, ஜே. சில குறிப்புகள்  புத்தகத்தை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிக்க, வாசிக்க நம்மையும் கதைக்குள் ஈர்த்து, நாமே நாவலின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டதான உணர்வேற்படுகிறது.

நாவலின் போக்கில் சாதாரணமாக வரும் வாக்கியங்களின் ஆளுமை மிகவும் அதிகம்.

உதாரணத்திற்கு…

"நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்" (பக்.20)

"பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போது தான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன்." (பக்.26)

"ஜேஜே சில குறிப்புகள் ஒரு நாவல் போல் இல்லாமல் ஒரு டைரி குறிப்பு போல இருக்கும் என்றும் அது தான் தமிழில் வந்த முதல் பின்நவீனத்துவ நாவல், போஸ்ட்மார்டனிசம் ஸ்டைல்..." என்றெல்லாம் கூறக்கேட்டு வாசித்துவிட்டு எடுத்த ஓட்டம் தான் மூச்சு வாங்க மேல எழுதி...

அதான் ஜே.ஜே. பின்குறிப்புகள்.


Tuesday, August 10, 2010

ம‌ல்லிகைப் பொழுதுக‌ள் – II

malli1 "தில் ஹே சோட்டாஷா சோட்டிசி ஆஷா" த‌மிழில் "சின்னச்‌ சின்ன‌ ஆசை" பாட்டின் ஹிந்தி மொழியாக்கம் முன்ன‌ர் சொன்ன‌ பாட‌ல். இள‌ங்காலைத் தென்ற‌ல் முக‌ம் த‌ட‌வும் வேளையில் விரையுமொரு ப‌ய‌ண‌த்தில் இந்த‌ பாட‌ல் கேட்டால் யாருக்குத்தான் ம‌ன‌ம் துள்ளாது. அந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ளில் பொருள் மிகச்‌சிறிய‌ இத‌ய‌ம் அதில் பொத்தி வைத்த‌ ஆசைக‌ளும் சிறிய‌ சிறிய‌ன‌".
த‌யம்‌ என்ப‌தை இங்கே ம‌ன‌ம் என்றும் கொள்ள‌லாம். மிக‌ச்சிறிய‌ ம‌ன‌தில் க‌ட‌ல‌ள‌வு எண்ண‌ங்க‌ள் ந‌ல்ல‌வை கேட்ட‌வை ஆசைக‌ள், கோப‌ம், சோக‌ம், இன்ன‌பிற‌ என்று எவ்வ‌ள‌வோ. ம‌ன‌தின் ச‌க்தி மிக‌ வ‌லிய‌து. ம‌ன‌மார‌ நினைத்தால் காற்றில், நீரில் கூட‌ ந‌ட‌க்க‌ முடியும்.
 malli3ங்க‌ள் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் உண்டு. அவ‌ற்றில் ஒன்று ஜூலை மாத‌ம் வ‌ரை பூக்கும் ம‌ற்ற‌து ஆக‌ஸ்ட் பாதி வ‌ரையும், ஒன்று மட்டும் மிக‌ அதிக‌ பிரிய‌த்தோடு செப்ட‌ம்ப‌ர் இறுதி வ‌ரை இர‌ண்டு அல்ல‌து மூன்று ம‌ல‌ர்க‌ளையாவ‌து த‌ரும். நேற்று அதில் பூத்திருந்த‌ ஏழு பூக்க‌ளை ஆசையோடு ப‌றித்தெடுத்தேன்.
"ஒரே ஒரு பூவையாவ‌து விட்டு வையேன்" என்றார் என்ன‌வ‌ர். ப‌றித்த‌ ஏழு பூக்களையும் அவ‌ர் கையிலேயே கொடுத்துவிட்டு "நீங்க‌ உங்க‌ சாமிக்கே போட்டுக்கோங்க‌" என்று சொல்லிவிட்டு அலுவ‌ல‌க‌ம் கிள‌ம்பி விட்டேன்.
ன்ன‌வ‌ருக்கு என்னை ரொம்பப்‌ பிடிக்கும். எந்த‌ எதிர்பார்ப்பும் அற்ற‌து அவ‌ர் பிரிய‌ம். அன்னையின் நேச‌த்திற்கு அடுத்த‌து அவ‌ர‌து. என் விருப்ப‌ங்க‌ள் எல்லாம் த‌ன் விருப்ப‌ங்க‌ளாக்கிக் கொள்ளும் தூய‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர். என‌க்கு ம‌ல்லிகை மிக‌வும் பிடிக்கும் என்றுதான் அவ‌ர் மூன்று செடிக‌ளை வ‌ள‌ர்க்கின்றார். இன்று பூஜையின் போது எங்க‌ள் வீட்டு க‌ட‌வுள‌ர் முக‌ம் இருண்ட‌ புன்சிரிப்பிழ‌ந்து காண‌ப்பெறுமா? ஒருவேளை நான் ஒரு பூவையேனும் சூடிக் கொண்டு வ‌ந்திருந்தால் அவ‌ர் காணும் போது எம் வீட்டு க‌ட‌வுள‌ர் ம‌கிழ்ந்திருப்பார்க‌ளோ?
malli2 சூடிக்கொடுத்த‌ சுட‌ர்க்கொடி தின‌ம்தோறும் தானணிந்து அழ‌கு பார்த்த‌ மாலையை பெருமாளுக்கு கொடுத்த‌னுப்பிக் கொண்டிருந்தாள். ஒருநாள் இதைக் க‌ண்ட‌ விஷ்ணுசித்த‌ர் இது அப‌ச்சார‌ம‌ல்லவா என்று அந்த‌ மாலையை எடுத்துச் செல்லாம‌ல் இருக்க‌ பெருமாள் முக‌ம் இருண்டு போன‌தை போல‌வும் பின் கோதை சூடிக் கொடுத்த‌ மாலையை அணிவிக்க‌ பெருமாள் புன்ன‌கைப்ப‌தை போல‌வும் க‌ண்டார். விஷ்ணுசித்த‌ர் கோதையின் த‌ந்தை அவ‌ர் ம‌ன‌த்தில் கோதையையும் பெருமாளையும் த‌விர‌ வேறு யாருமில்ல‌ர்.
ஹா விஷ்ணுசித்த‌ர் த‌ன்னை அறியாம‌ல் த‌ன் ம‌ன‌த்தில் கோதை சூடிக்கொடுத்த‌ மாலையை விட்டு விட்டு வ‌ந்த‌தால் பெருமாள் முக‌ம் இருண்டிருப்ப‌தை போல‌ க‌ண்டார். அவ‌ர் ம‌க‌ள் ம‌ன‌ம் புண்ப‌ட்ட‌து. அவ‌ர் ம‌ன‌க்க‌ண் முன் விரிந்து பார்க்கும் பார்வையில் பெருமாள் முக‌ம் அவ்வாறே கண்டிருக்க‌ முடியும். மேலும் ம‌ன‌தின் ச‌க்தி எவ்வ‌ள‌வு பெரிய‌து. ச‌தா ச‌ர்வ‌ கால‌மும் பெருமாளையே எண்ணி இருக்கும். அவ‌ருக்கு க‌ன‌வும் வ‌ந்த‌து அன்றிர‌வு "அவ‌ள் சூடி மாலையே சார்த்த‌ கொண்டு வாரும்" என்று.
து க‌தையாக‌ இருக்க‌ முடியாது. நாமும் ம‌ன‌ உலைச்ச‌லில் இருக்கும் போது அதை ப‌ற்றிய‌ சிந்த‌னையே இருக்கும் க‌ன‌வுக‌ளில் கூட‌ அதுவே வ‌ரும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வே விஷ்ணுசித்த‌ர் வாழ்வில் கோதை சூடி கொடுத்த‌ போது ந‌ட‌ந்த‌து. கோதை மேல் கொண்ட‌ பேர‌ன்பால் அவ‌ர் ம‌ன‌ம் அவ‌ள் பொருட்டு சிந்திக்க‌ அவ‌ள் ம‌னஅலைக‌ள் விஷ்ணு சித்த‌ருக்கு உண‌ர்த்த‌ப்ப‌ட்டு இருக்கின்ற‌ன‌.
malli5ர‌ம்ப‌த்தில் சொன்ன‌து போல‌ ம‌ன‌ம் சிறியதே அத‌ன் ச‌க்தியோடு மிக‌ பெரிய‌து. அத‌ன் செய‌ல்பாடு சொல்லிற்கு அட‌ங்காத‌து. ம‌ன‌தார ந‌ம்பினால் ந‌ம்பிய‌ விச‌ய‌ம் க‌ண்டிப்பாக‌ ந‌ட‌க்கும். அத‌னால் எப்போதும் ந‌ல்ல‌தை நினைக்க‌ வேண்டும். ஆங்கில‌த்தில் ஒரு வாக்கிய‌ம் உண்டு. "Think Big" பெரிதாக‌ நினை. ந‌ல்ல‌தை நினை. ஆண்டாள் போல‌ அர‌ங்க‌னை ம‌ண‌க்க‌ கூட‌ முடியும். ம‌ன‌ம் அவ்வ‌ள‌வு வ‌லிது.
malli4 
         ம‌ல்லிகைப் பூவாய் மாறிவிட‌ ஆசை......
         தென்ற‌லை கொஞ்ச‌ம் மாலையிட‌ ஆசை....
         மேக‌ங்களை எல்லாம் தொட்டு விட‌ ஆசை...
         சோக‌ங்க‌ளை எல்லாம் விட்டுவிட‌ ஆசை...

ன்றி வைர‌முத்துவிற்கும்.....!
திகாலையிலேயே அலுவ‌ல‌க‌ம் வ‌ர‌வழைக்கும்
எங்க‌ள் சேர்ம‌ன் ராஜிவ் ம‌ல்ஹோத்ராவிற்கும்…. !!

- யிரோடை லாவண்யா

Sunday, January 24, 2010

நிசப்தத்தின் சப்தம்

கொஞ்ச நாளைக்கு முன் நண்பர் லஷ்மணராஜாவின் கவிதைகான பன்முனை விளக்கங்களை படித்த அனுஜன்யா நீங்கள் தேவதச்சன் கவிதைக்கு இந்த மாதிரி ஏன் முயற்சிக்க கூடாது என்றார். நான் அதிகம் தேவதச்சன் கவிதைகள் படித்ததில்லை. சில நாட்களுக்கு முன் வா.மணிகண்டனின் வலைப்பதிவில் ஒரு தேவதச்சன் கவிதை பார்த்தேன். படித்ததும் மணிகண்டன் சொன்னது போலவே பல படிக்கட்டுகளுடன் இந்த கவிதை என் மனதில் ஏறி அமர்ந்து கொண்டது.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.


மனித மனமென்பது ஒரு பெறாற்றல் பெற்ற ஒன்று. நிமிட நேரத்தில் அமெரிக்காவில் இருப்பவனை ஆண்டிப்பட்டி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே நண்பர்களோடு
அளவளவியதையோ, கண் காணாத காதலன் என்றோ கொடுத்த முத்தத்தில் இன்றும் திளைக்கவோ வைக்கும். பல விஞ்ஞான,அஞ்ஞான விசயங்களை நினைக்க, பின் நடத்தி காட்ட வைக்கும். இன்னும் பல பல கற்பனைகட்கு அடிதளமாக இருக்கும். இந்த கவிதையில் அவள்/அவன் துணி துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் காதில் விழும் சத்தத்தை மூளை இனம் பிரித்து குருவி சத்தம் என மனதுக்கு சொல்கின்றது. பின் குருவிகளின் நிசப்தத்தையும் நிசப்தத்தின் சப்தத்தையும் மனம் உணர்கின்றது. புறம் அமைதியானதும் அகம் சத்தமிட ஆரம்பிக்கின்றது. செயல் ஒன்று தான் ஆனால் புலன்களும் மனமும் மட்டும் என்னென்னவோ உணர்கின்றது.


நிசப்தத்தின் சப்தம் - 1
------------------------------

நாம் எப்போதும் எல்லாம் வழக்கம் போல் தான் எந்த மாற்றமுமில்லை காலை,மாலை வீடு, அலுவலகம், மனைவி, மக்கள், தொலைக்காட்சி என்று எல்லா நாளும் ஒரே மாதிரி தான் செல்கின்றது என்றே சலிப்போடு இருப்போம். ஆனால் ஆர்விசந்திரசேகரின் இந்த கவிதையையில்

மற்றுமொரு நாள்...

எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையின் கையசைப்பை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை
இதமான முத்தங்கள்
வழக்கமான சூரியன்
சிரிக்கும் மாணவர்கள்
நசநசக்கும் நெரிசல்
டேர் டு டச் டி-சர்ட்டுகள்
நெருக்கமான சிநேகிதம்
டிக்கட் கொடுக்கும் மெத்தென்ற விரல்கள்
குருட்டு பிச்சைக்காரனின் ஓடும் மேகங்களே
சிதைந்து கிடக்கும் நாயின் உடல்
தொட்டியில் பால்சம் பூக்கள்
காரிடார் போன்சாய்கள்
கஃப்டேரியா வாஸ் அப்-கள்…
எல்லா நாட்களும் போல் இன்றும் விடிந்தாயிற்று
எதிர்வீட்டுக் குழந்தையின் கையசைப்பை தவிர்த்து
வேறெதுவும் அழகாகத் தோன்றவில்லை.

இப்படி ஏதாவது ஒரு அழகாக தான் இருக்கின்றது தினமும். நம்மை அறியாமலே அதை கவனித்தும் கவனிக்காமல் செல்லும் நாம் வழக்கம்போல் எல்லாம் என்று புலம்புவது புதிரான விசயமன்றோ. ஒவ்வொரு துணி துவைக்கையிலும் அவன்/அவள் காதில் விழுவது வித்தியாசமான சப்தங்கள். அது போல தான் எதுவுமே வழக்கம் போல என்ற வழக்கே கிடையாது. யோசித்து பார்த்தால் ஏதாவது வித்தியாசமாக இருக்க தான் செய்யும் அது நன்மையோ தீமையோ மனமொன்றி அனுபவிக்க பழகி கொண்டால் வாழ்கை சலிப்பின்றி சுவாரஸியமாக, சுவையாக இருக்கும்.

நிசப்தத்தின் சப்தம் - 2
------------------------------

ஒரு கல்லூரி செல்லும் பெண் அவள் தினமும் காலை செல்லும் பேருந்தில் சந்திக்கும் ஒருவன் தினமும் அவளை பார்க்கின்றான் என்றால், முதலில் சங்கடபடுவாள். சில நாள் சென்று அவன் பார்ப்பது அவளுக்கு பழகிவிடும். அவனை அவளுக்கு பிடிக்க வேண்டும் என்பது கூட இல்லை. வெறுமனே பார்பவனை போய் யாரிடம் சொல்லி என்ன செய்வது என்ற தயக்கமோ, அவன் பார்ப்பதெப்படி உனக்கு தெரியும் என்ற எதிர் கேள்விக்கு பயந்தோ அவள் அவனை பற்றி யாருக்கும் சொல்லி இருக்க மாட்டாள். எதேச்சையாக ஒரு நாள் அவன் வரவில்லை என்றாலோ வந்தும் அவளை பார்க்கவில்லை என்றாலோ அது அவளுக்கு மிக வித்தியாசமான உணர்வை தரும். வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என்று இருக்கும். வந்தும் பார்க்கவில்லை என்றால் ஏன் பார்க்கவில்லை என்றுமிருக்கும். தொடர்ந்து சில நாள்கள் வராமலோ, பார்க்கமலோ இருந்தால் என்ன ஆயிற்றோ என்று நிசப்பதமாக மனம் சத்தமிடும். புறமடங்க(அடக்கப்பட) அகமதிகம் சப்திக்கும். இது பெண்களுக்கே உரிய உணர்வு நிலையா அல்லது ஆண்களுக்கு அதே நிலை தானா ஒரு வேளை தேவதச்சன் இந்த சிந்தனையை அந்த கவிதையாக வடிக்க முயற்சி செய்தாரா?


நிசப்தத்தின் சத்தம் - 3
-------------------------------

சில சமயம் நம் உணர்வுகள் சிந்தனையை தாண்டியதாக இருக்கும். உதாரணத்துக்கு ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளர் தன் நண்பர்களுடன் சத்தமாக அரட்டை அடிக்கும்
சமயம் நாம் ஏதாவது சிக்கலான விசயத்திற்கு யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த சத்தம் அதிகம் தொந்தரவு செய்யும், ஒரு வேளை அவர்களே நீங்கள் மிக கவனமான வேலையில் இருப்பதாக நினைத்து அரட்டை சப்தத்தை குறைந்தாலோ அல்லது வேறு இடம் சென்று பேசினாலோ, பேச்சை நிறுத்தி கொண்டாலோ கூட உங்கள் காதுகள் அவர்களை பின்
தொடரும். அதே தொல்லை பெரும்பாலும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளோக்கோ, வேலைக்கு செல்லும் பெண்களுக்கோ அடிக்கடி நிகழும். அனைவரும் உறங்கி விளக்கு
அணைக்கப்பட்டாலும் அவர்கள் கண்ணுக்குள் மட்டும் விளக்கு எறியும். இது பெரும்பாலும் ஒவ்வாத இடத்தில் இருக்கும் அனைவர்க்கும் பொருந்தும்.

நிசப்தத்தின் சப்தம் - 4
------------------------------

பிரியமான உறவிடை ஒரு சிறு பிணக்கோ அல்லது சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்க வேண்டிய கட்டாயமோ ஏற்படுமாயின் வழக்கமாக அவர்கள் நமக்கு செய்த பணிவிடைகளையோ, சிறு உதவிகளையோ, பிடித்த, பிடிக்காத விசயங்களையோ மனம் எப்போதும் அலசி கொண்டிருக்கும். அடிக்கடி மனதருகே ஒரு மாயபிம்பம் வந்து வந்து மறையும். உணர மட்டுமே முடிந்த ஒரு உணர்வது. இதே உணர்வு மனதுக்கு நெருக்கமான நண்பர்களிடையே கூட வரலாம். எதிரிகள் கூட மனக்கண்ணில் எப்போதும் வந்தாடி நம்மை விசனபடுத்தலாம். கோபியரை விட கண்ணனை அதிகம் நினைத்திருந்தது கம்சனாக தான் இருக்க முடியும். பிரஹலாதனை விட நாரணயண நாமம் சொன்னது ஹிரண்யகஷ்புவாக தான் இருக்க முடியும். மனித மனமென்பது வித்தியாசமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பெற்ற பெரும் அதிர்வை தரும் ஒன்று.

நிசப்தத்தின் சப்தம் - 5
-----------------------------
எதார்தமான சில நம் விருப்பங்கள், வாழ்வின் கட்டாயங்களால் நம்மாலே நிராகரிக்கப்படுகிறது. அந்த வாய்ப்புகள் இழந்த பின்னும் அதன் நினைவுகளை நம்மை அலைக்கழிக்கிறது நிசப்தத்தின் சப்தமென்பதுங்கு வாழ்வின் விருப்பங்க்ளுக்கும் கட்டாய ஏதார்த்திற்குமான இடைவெளி அவ்ளோதான். இதற்கான உதாரணங்களாக ஒரு நிமிடத்தில் தவறா விடப்பட்ட பேருந்து எப்படி 12-B திரைபடத்தில் இரண்டு கதையாக அமைந்ததோ அதே போல தான். தவறவிடப்பட்ட பேருந்து, தவறவிடப்பட்ட வாய்ப்புகள்,தவறவிட்டப்பட்ட உறவுகள், தவறாக இழைத்த கறைகள் அவற்றின் சுவடுகள் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் நிசப்தத்தின் சப்தமாக பலவற்றை. இந்த எல்லாவற்றிலும் அலைகழிப்பது மனம் மனம் மனம் மற்றுமற்றி வேறெதுவும் இல்லை.

Wednesday, June 24, 2009

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

Friday, April 24, 2009

பொம்மலாட்டம்

வாழ்க்கை என்பதே ஒரு பொம்மலாட்டம் தான். இங்கு பிரச்சனை நூல் யார் கையில் என்பதே. பல சமயங்களில் நம் ஆட்டத்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தான் தீர்மானிக்கின்றார்கள். ஆனால் இது ஆடுகின்ற பொம்மையை ஆட்டி வைத்ததவர் யார் என்ற ஆராய்ச்சியைப் பற்றிய நீள்பதிவு.

பொம்மைகள்

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்கேள்வி கூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

- ஹரன் பிரசன்னா.

பொம்மை ஆடிக்கொண்டு இருக்கின்றது. பார்ப்பவருக்கு இதை ஆட்டி வைத்தவர் யாராக இருக்கும் என்ற சந்தேகம். இந்த சாதாரண விசயத்தை இவ்வளவு அலச வேண்டிய காரணம் என்ன என்று நாம் ஆச்சரிய படலாம். ஆனால் இங்கே ஆடும் பொம்மை ஒரு இறுதி விளைவு.(End result) அந்த இறுதி விளைவின் தாக்கம், எப்படி நடத்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியம் அல்லது ஆர்வம் எதுவேண்டுமானாலும் காரணிகளை ஆராய காரணமாக இருக்கலாம்.

குற்றம் அறிதல்
-----------------------------

அலுவ‌ல‌க‌த்திலிருந்து த‌லைவ‌லியோடு வீட்டுக்கு வ‌ரும் பெண்ணிட‌ம், உணவின் சுவை சரியில்லை என்று கணவன் குறை கூறினால், பெரும் சண்டை தான் விளையும். அவள் எரிச்ச‌லுக்கு காலையில் இரண்டு நிமிடம் தாமதத்தில் தொட‌ங்கி அதை தொட‌ந்த‌ அலுவலக பேருந்தை தவறவிட‌ல், நெரிசல் மிகுந்த நகர பேருந்தில் பய‌ணித்தல் அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாம‌ல் த‌லைவ‌லியில் முடித‌ல், ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ளின் அல‌ட்சிய‌ம், உய‌ர் அதிகாரியின் தேவையில்லாத‌ கோப‌ம் இதில் எது வேண்டுமானாலும் கார‌ண‌மாக‌லாம்.

பிறிதொரு நோக்கில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற‌டைய‌ வேண்டிய‌ மிக முக்கியமான ஒரு கோப்பு சென்ற‌டைய‌வில்லையாயின், மேலாள‌ர் க‌ண‌க்க‌ரையும், க‌ண‌க்க‌ர் ப‌ணி பைய‌னையும், ப‌ணி பைய‌ன் அலுவ‌ல‌க‌ விதிமுறைக‌ளையும் ம‌ற்றும் சில‌ர் வேறு சில‌ரையும் கை நீட்டுவ‌ர். எவரின் த‌வ‌றாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். கோப்பு சென்ற‌டைய‌ வேண்டிய‌ இட‌ம் செல்ல‌வில்லை.

சரி இங்கே காரணிகளை பட்டியலிட்டாற்று. அதனால் ஆட்டம் நிற்கவா போகின்றது. எந்த பிரச்சனைக்கும் தீர்வை தேட வேண்டும். பிரச்சனை வந்ததன் காரணம் தேடுவதால் ஒரு பலனும் இல்லை. காரணிகள்(குற்றம்) அறிவதால் பொம்மையின் ஆட்டம் நிற்க போவதில்லை.

மாற்றங்களை மறுதலித்தல்
--------------------------------------------------

ஒரு பெண் குழந்தையின் தாய் த‌ன் தோற்ற‌ம் கார‌ண‌மாக‌ அவள் க‌ண‌வ‌னுக்கு த‌ன்னை பிடிக்க‌வில்லை என்று தெரிந்து தாய் வீடு வ‌ந்தும் விவாக‌ர‌த்து பெற‌ த‌ய‌ங்குகின்றாள். மாற்று வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றாள். இதன் காரணம் சமூகத்தின் மேல் இருக்கும் பயமா, மனத்தின் தெளிவின்மையா அல்லது பெண் என்பதால் சார்புடைமை அதிகம் என்பதாலா?

க‌ணினி துறையில் ப‌ணி புரியும் மிக‌ க‌டுமையான‌ உழைப்பாளி ஒருவ‌ர், வேலைக்கு தகுந்த சன்மானமுமில்லாத‌ போதும், பணி எப்போது வேண்டுமானாலும் போய்விடுமோ என்ற பயமிருந்த‌ போதும் வேறு வேலைக்கு முயற்சிக்கவில்லை. இதற்கு காரணம் தன்னம்பிக்கை இன்மையா? வாய்ப்பு வசதிகள் பற்றிய கவலையா? இங்கே இருக்கும் அளவு நண்பர் கூட்டம் திரட்ட முடியுமா, என்ன தான் கஷ்டம் என்றாலும் பழகிய இடமாகிவிட்டது என்பதா?

பணி இடம் குடி இருப்பிருலிருந்து மிக தொலைவில் இருந்தும் ஒருத்தி வீடு மாற்றிக் கொள்ள யோசிக்கின்றாள். அங்கே இதை போன்ற வசதியா வீடு கிடைக்குமா? வேலையாட்கள் கிடைப்பார்களா? குழந்தைக்கு பள்ளி சரியாக அமையுமா? மருத்துவம் பிற வசதிகள் எல்லாம் இங்கே ஓரளவு கைப்பட்டு விட்டது அங்கு அப்படி வாய்க்குமா?

எல்லோரிடத்திலும் எத்தனை கேள்விகள்? எத்தனை தயக்கங்கள்? மாற்றங்களை முயற்சிக்கும் வரை தான் துயரமெல்லாம். மாற்றத்திலும் அதற்குண்டான நன்மைகள் விளையத் தான் செய்யும் என்பதை அனுபவம் கொண்டு தெளியவேண்டும். மாற்ற‌ங்க‌ளை ம‌றுக்கும் வ‌ரை பொம்மைக‌ளின்(பிர‌ச்ச‌னைக‌ள்) ஆட்ட‌ம் நிற்க‌வா போகின்ற‌து

மடமை போற்றுதல்
-----------------------------------

மாத‌வி எப்பேர்ப‌ட்ட‌ பெண். இவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள். கோவ‌ல‌ன் பல ஆண்டுகள் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள்.

சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் மாதவி கூறுவதாவது

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

கோவ‌லன் மாத‌வியோடு கொண்டிருந்த‌து வெறும் உட‌ல் இச்சை. மாத‌வியின் மேல் இருந்த‌ ஈர்ப்பு குறைந்த‌தும், மாத‌வி அந்நாட்டு ம‌ன்னனை புக‌ழ்ந்து பாடினாள் என்ற‌ சிறு காரணத்திற்காக த‌ன்னை விட்டக‌ன்ற‌ கோவலனை, தான் தன் மனை என்று போனவன் போனானடி என்று விடாமல் "நம்மை மறந்தாரை நாம் மறக்கலாமா?" என்று வினவும் மாதவிக்கு கோவலன் மேல் இருந்தது காதலா, காமமா, இதை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றா? இப்படிப்பட்ட மாதவிகளின் மடமை போற்றுத‌லால் கோவலன் போன்ற பொம்மைகள் இன்றும் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.


கோதை ஒரு அற்புத‌ பிற‌வி. அவ‌ள் தோன்றிய‌தே ஒரு துள‌சி செடி அருகில் தான். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளையும் அவர் மூலமாய் கேட்டு, அந்தக் கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. க‌ண்ண‌ன் மேல் அவ‌ளுக்கு எத்த‌னை பிரிய‌ம். திருமாலுக்கு சார்த்த‌ வேண்டிய‌ மாலையை தான் அணிந்து கொடுத்து "சூடிக் கொடுத்த‌ சுட‌ர்கொடி" பெய‌ர் பெற்று கோதை ஆண்டாள் ஆனாள்.

நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

திரும‌ண‌ வ‌ய‌தில் திருமாலை ம‌ண‌க்க‌ வேண்டும் என்று வ‌ட்ட‌மிட்டு பார்த்த‌ல், கூட‌ல் கூடிய‌தா என்று பார்த்த‌ல், ம‌ன்ம‌த‌னை வேண்டுத‌ல், பாவை நோன்பிருத்த‌ல்,க‌ன‌வு காணல் என்ற‌ ப‌ல‌ ம‌ட‌மைக‌ளை ஆண்டாள் போன்றினாலும் அவை எல்லாவ‌ற்றிர்க்கும் முத்தாய்ப்பாக‌ "என் மார்பகங்கள் திருமாலுக்கேய‌ன்றி மனிதர்களுக்கு அல்ல‌" என்று கூறும் ஆண்டாள் தன்னிலை மறந்தவளா? கடவுளை கண்டவளா? அல்லது தானே கடவுள் என்ற அக‌ங்காரம் பிடித்தவளா? காரணம் எதுவாயினும் ஆண்டாள் மடமை போற்றியதால் திருப்பாவை, திருமொழி என்ற பொம்மைகள் ஆடி எழுந்தன.

Sunday, April 24, 2005

ப‌யம் த‌ரும் வெளிச்ச‌ம்

க‌ட‌வுளும் இன்ன‌பிற‌

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
-லஷ்மணன்

வாழ்க்கை என்ப‌து முத‌ல் முறை ஒரு ந‌தி ந‌க‌ர்வ‌தை போன்ற‌து. எந்த‌ இட‌த்தில் விழ‌‌ வேண்டும் எங்கே தேங்க‌ வேண்டும் என்ப‌வை ஒரு சில‌ அனுமான‌ங்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌. சீராக‌ ந‌க‌ரும் வ‌ரை பய‌ண‌ம் எளிமையான‌தே. ஆனால் உண்மையாக‌வே வீழும் போது விழுவ‌த‌ற்குண்டான‌ அதிர்வும், தேங்கும் போது அடுத்து எப்ப‌டி ந‌க‌ர்வோம் என்ற‌ பய‌மும் தொற்றிக் கொள்வ‌து இய‌ற்கை.

ந‌ம்பிக்கை இழ‌த்த‌ல்
==================

இர‌வு மீதான‌ ந‌ம்பிக்கை விடிந்து விடும் என்ப‌து. ப‌ய‌ண‌ம் மீதான‌ ந‌ம்பிக்கை ஒரு ச‌மய‌ம் முடியும் என்ப‌து. உண‌வு உண்ப‌து கூட‌ அது செரித்துவிடும் மீண்டும் ப‌சிக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் தான். ந‌ம் எந்த‌ ஒரு செயல்பாட்டையும் ஒரு ந‌ம்பிக்கை தான் ந‌க‌ர்த்திக் கொண்டு இருக்கின்ற‌து. இந்த‌ ந‌ம்பிக்கை எல்லாமே ஒரு அனுமான‌ம் தான். அந்த‌
அனுமான‌ங்க‌ள் மாறும் போது, ந‌ம்பிக்கை இழ‌க்கும் போது ஒரு வித‌ ப‌த‌ட்ட‌ம் ஏற்ப‌டும். இதுவ‌ரை ப‌ய‌ணித்த‌து எல்லாம் பொய்யோ என்ற‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ அப்ப‌ட்டமான‌ ப‌ய‌த்தையும், குழ‌ப்ப‌த்தையும் உள்ள‌ட‌க்கிய‌து க‌விதையின் க‌ரு.

ந‌ம்பிக்கை இழ‌ந்தால் தானே பய‌மும் குழ‌ப்ப‌மும் அதனால் அறிவுபூர்வ‌மான‌ த‌ர்க்க‌ங்க‌ளை விடுத்து க‌ட‌வுள் அல்ல‌து இன்ன‌பிற‌ விச‌ய‌ங்க‌ளை அப்ப‌டியே ந‌ம்புவ‌து தான் உத்த‌ம‌ம். ந‌ம்பிக்கையே வாழ்க்கைய‌ன்றோ.

துரோக‌ம் அறித‌‌ல்
================

க‌விதையின் ம‌றுகுறிப்பாக‌ அர‌ங்க‌ன் மேல் ஆண்டாள் கொண்ட‌ காத‌ல் போல‌ உன்ன‌த‌மான‌ காத‌ல் கொண்ட‌ பெண்ணொருத்தியை அவ‌ள் காத‌லித்த‌வ‌ன் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் "ப‌த்து நாள் பேசினாளே ப‌டுக்க‌ வ‌ந்துருவாடா அவ‌ ஒரு வேசிடா" என்ப‌தை சொல்ல‌ கேட்ப‌வ‌ளும், த‌ன் ம‌னைவியின் மேல் அதீத‌ ந‌ம்பிக்கை வைத்திருக்கும் ஒருவ‌ன்,அவ‌ள் இன்னொருவ‌னோடு உற‌வு கொண்டிருப்ப‌தை க‌ண்ட‌வ‌னும் எந்த‌ அள‌வு அதிர்வார்க‌ளோ, உட‌ம்பெங்கும் தீயிட்ட‌து போல‌ எவ்வ‌ளவு துய‌ர‌ப‌டுவார்க‌ளோ அதே அள‌வான‌ அதிர்வை,துய‌ர‌த்தை தான் இந்த‌ க‌விதையின் வெளிச்ச‌ம் த‌ரும் ப‌ய‌ம் காட்டி இருக்கின்ற‌து.

அதுவ‌ரை உல‌க‌மே தொலைந்தாலும் இவ‌ர்/ள் இருக்கின்றார்/ள் என‌க்கென‌ என்ற‌ அனுமான‌ங்க‌ள் பின் என்ன‌வாகும்?

முய‌ற்சி த‌வ‌ற‌ல்
==============

மூன்றாம் க‌ருத்தாக‌, முய‌ன்றால் முட‌வ‌ன் கூட‌ கொம்பு தேன‌டைய‌லாம். முய‌ற்சி செய்யாம‌ல் இருக்க‌ சோம்ப‌லோ, தெளிவின்மையோ, பய‌மோ எது வேண்டுமானும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம். ஆயினும் முய‌லாம‌ல் வெளிச்ச‌ம‌து ப‌ய‌ம் த‌ருமென‌வும், இருட்டை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளோடும் வாழ்ந்தால் அது பாதையை எளிமையாக‌ காட்டும் காட்சிப் பிழையாகும். முய‌ற்சி உடையோர் இக‌ழ்ச்சிய‌டையார். அத‌லால் அனுமான‌ங்க‌ளை ஆக்க‌ பூர்வ‌மான‌ முய‌ற்சியாக்கி வாழ்வில் மேன்மை பெற‌ முய‌ச்சிப்போம்.

ஏமாற்ற‌ம் எதிர்கொள‌ல்
=====================


திரும‌ண‌ம் நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணொருத்தி த‌ன் வ‌ருங்கால‌ க‌ண‌வ‌னைப் ப‌ற்றியும் தான் வாழ‌ப்போகும் வாழ்வைப் ப‌ற்றியும் ப‌ல்வேறு க‌ன‌வுக‌ளோடு இருப்பாள். அப்படிப்பட்ட அனுமானங்களோடு இருந்தவளுக்கு மணவாழ்க்கை உட‌ல்ரீதியாக‌வோ ம‌ன‌ரீதியாக‌வோ திருப்தி கிட்டாத‌ ப‌ட்ச‌ம், எதை செய்த‌தாலும் குற்ற‌ம் குறை கூறி அடித்து துன்புறுத்த‌வோ அல்ல‌து எத‌ற்கெடுத்தாலும் ச‌ந்தேக‌மோ கொள்ளும் க‌ண‌வ‌ன் அமைந்து விட்டால் அவ‌ள்
எதிர்கொள்ளும் ஏமாற்ற‌ம் மிக‌ கொடுமையான‌து. அதுவ‌ரை அவ‌ளுக்கு இருந்த‌ அனுமான‌ங்க‌ள் உண்மை வெளிச்ச‌த்திற்கு வ‌ரும் போது ப‌ய‌ம் வ‌ருவ‌து இய‌ற்கை தானே. இதே க‌ருந்து ஆண்ம‌க‌னுக்கும் பொருந்தும்.

தெளிவின்மை த‌விர்த்த‌ல்
=======================

த‌ன‌க்கு தெரிந்த‌து போதும் என்றோ, த‌ன‌க்கு ம‌ட்டும் தான் எல்லாம் தெரியுமென்றோ அனுமான‌த்தில் இருப்ப‌ர்க‌ள், ஒரு வேளை அது த‌வ‌றென்று புரியும் போது எதிர்கொள்ளும் வெளிச்ச‌ம் மிக‌ அதிக‌மாக‌ ப‌ய‌த்தை த‌ரும். தான் என்ற‌ அக‌ந்தை அட‌க்கி தெளிவு பெற்று வாழும் வேண்டுமெனில் இருளின் மீதான‌ அனுமான‌ங்க‌ளால் வாழ்க்கையை ந‌க‌ர்த்தாம‌ல், (தெளிவு)வெளிச்ச‌ம் த‌ரும் புது பாதையில் ப‌ய‌ணித்த‌ல் எல்லாம் ந‌லம். எங்கும் ஜெய‌ம்.

Tuesday, July 27, 2004

என்ன தவம் செய்தனை

"என்ன தவம் செய்தனை யாசோதே..." எங்கேயோ வானொலியில் பாடுவது அந்த அந்தி மாலை நேரத்தில் என் காதில் விழுந்து என் மனதை என்னவோ செய்தது. அந்த பாடல் ஏதோ இனம்புரியாத உணர்வை என்னில் உண்டாக்குகின்றது. எத்தனை அருமையான பாடல் இந்த பாடலை யாசோதையே கேட்டால் அவள் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்ததிருக்கலாம் இதோ உங்கள் ஆய்விற்கு.

"கண்ணா மணிவண்ணா! நீ என் பிள்ளையாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ என்ற ஏக்கம், சந்தோஷம் எல்லோருக்கும். ஆனால் என் மன சஞ்சலங்களை அறிவாயா மாதவா கேசவா? மனம் திறந்து கேளடா என் புலம்பல்களை.... உருக்கமான உன் நெஞ்சையும் பிளக்கலாம் அவை.
"நீ பிறந்த அதே கணம் நான் பெற்ற மகளை உனக்காக பறிகொடுத்தேனே! இதற்கு நான் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்?" "பெற்ற பிள்ளையின் முகம் கூட காண முடியாத பாவியல்லவா நான்!" "என் பிஞ்சு மகள் சிறையில் தரையில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்படவா பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தேன்?" "அந்த பிள்ளையை நான் இழந்தேன் என்று கூட தெரியமல் அவளுக்குகாக் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் பதிணெட்டாண்டுகள் வாழ்ந்துவிட்டேன் என்ன கொடுமையடா இது" "அதை விட எல்லாம் விட கொடுமை முலைப்பால் தந்து வளர்த்த இந்த பிள்ளையை நான் பெறவேயில்லை என்ற உண்மை தெரியாமலே எத்தனை காலம் வாழ்ந்துவிட்டேனே!" இதெற்கெல்லாம் எத்தனை தவம் செய்து இருக்க வேண்டும்.

"இந்த பதினெட்டாண்டுகளில் உன்னால் நான் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமா?" " கோவிந்தா! கோபாலா! ஒரு நாள் நீ மண் தின்றாய், உலகாளும் பரம்பெருள் நீ என்றறியாத என் பேதைமையால் நீ மண்ணுண்டதைப் பார்த்து பதறினேன். வாயை திறக்க சொன்னால் அண்ட சாரசாரம் காட்டி என்னை மேலும் பித்தாக்கினாய். உன் குறும்பை தாங்காது உரலில் கட்ட நினைத்தேன் பரப்பிரும்மம் உன்னைக்கட்ட என்னால் முடியுமா உன்னை கட்ட இயலாது நான் பட்டப்பாட்டை நீ கிண்டலாக பார்த்து சிரித்து ரசித்தாய். சிறு வயதில் உன்னை கொல்ல எத்தனை எத்தனை சதிகள்? ஒவ்வொரு நாளும் உன்னை காக்க நான் பட்டபாடு எத்தனை என்பதை மறந்துவிட்டாயா தேவகி நந்தனா?" "பரந்தாமன் உன்னை காத்துக்கொள்ள உனக்கு தெரியும் என்று இந்த பேதைக்கு தெரியவில்லையே புருசோத்தமா?"
"அது மட்டுமா? உன் குறும்புகளால் எத்தனை அவபெயர் எங்களுக்கு. நம் வீட்டில் வெண்ணை புரண்டோடும்; ஆனால் நீயோ அடுத்தவர் வீட்டில் வெண்ணை திருடி உண்டதாக தினம் ஒரு குற்றச்சாட்டும், வழக்கும்." "நீ பருவம் அடைந்ததும் உன் லீலைகள் காரணமாக எத்தனை பெண்களை கண்ணீர் சிந்த வைத்தாய்? அத்தனை பெண்களில் பாவத்தை நாங்கள் அன்றோ சுமந்தோம்?"
"நீ சிறு வயதில் பெற்ற சாபத்தின் காரணமாக யாதவர் குலமே அழிய காரணமானாயே!" "உன்னை வளர்த்து நானும் அந்த பாவ செயலில் பங்கெடுத்துவிட்டேனே, பார்த்தீபா! என்னை நம் மக்கள் குலநாசம் செய்த கொடும்பாவி என்றல்லவா நினைப்பார்கள். இதற்கெல்லாம் என்ன தவம் செய்தேன் அய்யா நான்?"

"கண்ணுக்குள் வைத்து காத்து அரும்பாடு பட்டு உன்னை வளர்த்து எத்தனையோ துயர்களுக்கு இடையே உன் புன்சிரிப்பை கண்டு மனம் மகிழ்ந்து வாழ்ந்து வந்த நாங்கள் ஒரு நொடியில் நீ என் சொந்த மகனில்லை என்று தெரிந்ததும் எப்படி மனம் உடைந்து கலங்கிப்போனோம் என்று யோசித்தாயா? " "ஒருவனுக்கு எந்த உறவு வேண்டுமாயினும் ஒன்றுக்கு மேல் இருக்கலாம் ஆனால் ஒரு பிள்ளைக்கு இரண்டு அம்மை அப்பன் இருக்க முடியுமா?" "உலகில் எதை வேண்டும் என்றாலும் பங்கு போடலாம். ஆனால் பெற்ற பாசத்தை நீ பங்கு போட வைத்து விட்டாயே?" "மாயவனே! தூயவனே!" "இப்போது சொல்லடா, எங்கும் நிறைந்த பரப்பிரும்மம் நீ என்னை அம்மா என்று அழைக்கலாம் ஆனால் உன்னை பெற்றவள் தேவகியல்லவா? உனக்காக ஏழு குழந்தைகளை அநியாயமாக தொலைத்தவள். அவளன்றோ ஞானி. அவளன்றோ பெருந்தவம் செய்தவள்." நான் என்ன தவம் செய்துவிட்டேன்?

Thursday, June 24, 2004

சிறைவாழ்வு

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்...
--நன்றி வைரமுத்து.
இந்த உலக வாழ்வே ஒரு சிறை வாழ்வு தான். சிலருக்கு சிறை சற்று பெரியதாக இருக்கும். வீடு, அலுவலகம், உறவுகள், நண்பர்கள் என்று விரியும் அவர்கள் உலகம். ஒரு சிலருக்கு பிறக்க ஒரு நாடு வசிக்க ஒரு நாடென்று அமைந்து விடுகிறது. சிலருக்கு குறிப்பாக சில பெண்களுக்கு வீடு ஒரு சிறையாகும். அதை விட்டு விடுபடுவது அவள் இறப்பே ஆகும். மீன் தொட்டியை கண்டிருக்கிறீர்களா? அதில் நீந்தும் மீன்கள் மிக அழகாக இருக்கும். அவை எல்லாம் மிக சந்தோசமாக இருப்பதுப் போல நமக்குத் தோன்றும். சில சமயம் மெதுவாக நீந்தும், சில சமயம் மின்னல் வேகத்தில் மேலிருந்து கீழாக குதிக்கும். நாம் தருவதை உண்ணும். ஒரு சில கொடுத்து வைத்த மீன்கள் சற்று பெரிய தொட்டியில் ஒரு சில உறவுகளோடு காலம் கழிக்கும். ஒரு சில தொட்டிகள் பானை போன்ற வடிவில் சிறியதாக இருக்கும். கடலில் நீந்த தெரிந்தாலும்கூட அந்த அளவான இடத்தில் தான் மீன்கள் உலவ வேண்டும். அதன் வாழ்வு அந்த தொட்டிக்குள் மட்டுமே. மீன் தொட்டி மீன்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் யாவரும் பல காலமாக சிறை வாழ்வே வாழ்கின்றோம். கீழ் வரும் சங்க கவிதையை பாருங்கள்.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
உரை
---------
தாழி செய்பவனே! தாழி செய்பவனே! தருமம் நிறைந்த பழைய ஊரின் தாழி செய்பவனே! அச்சில் சுழலும் வண்டிச் சக்கரத்தில் ஒட்டியிருக்கும் சிறிய வெளிறிய பல்லிபோல இவனுடன் பலவிதமான பாதைகள் தாண்டிவந்த என்னிடமும் கனிவுகாட்டுவாயாக. மலர் நிரப்பி மண்ணில் இறக்கப்படும் உறுதியான பெரிய தாழியை இன்னும் பெரிதாக வனைவாயாக.
--நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"
இந்த கவிதை இறுக்கமான உணர்வு பொருந்தியது.இந்த வரிகளின் வலி உணர பெறுங்கள். எவ்வளவு ஆழமான துயரத்தை வெளியிட்டிருக்கிறாள் அந்த பெண்கவி. என்ன பொருத்தமான ஒரு உதாரணம் பாருங்கள், ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லியானது வண்டி செல்லும் இடம் எல்லாம் செல்லும் ஆனால் அதன் வாழ்வு இருக்கும் அதே இடத்தில் மட்டுமே. இப்படி தானே இருக்கின்றது சில பெண்களின் வாழ்வு இன்றும் கூட. மேலும் சொல்கிறாள் அவள் மலர் நிரப்பிய தாழி வனைக, எவ்வளவு ரசனை மிக்கவளாக இருந்திருப்பாள் ஒரு வேளை இனி அவளை கட்டுபடுத்தி சிறை அடைக்க ஆள் இருக்க போவதில்லை என்ற ஆனந்தமா அது? இன்னும் உறுதியான தாழியை சற்று பெரியதாக வனைக... இவ்வளவு இறுக்கமான வாழ்வு அவள் வாழ்திருந்தாள் இறக்கும் போதாவது சற்று விசாலமான இடத்தில் இறக்க வேண்டும் என்று எண்ணி இருப்பாள்.உடன்கட்டை ஏறுவதினும் கொடும் கொடுமை இதல்லாவா?
இப்போது இதற்கு இணையான இன்னும் ஒரு சூழலைப் பார்ப்போம். "புனரபி மரணம் புனரபி ஜனனம்" என்ற ஆதி சங்கரர் பாடல் கேட்டிருக்கின்றீர்களா? கருவிலுள்ள குழந்தைக்கு பிறக்கும் வரை புனர் ஜென்ம சிந்தனை எல்லாம் இருக்குமாம். அப்போது பட்ட அத்துணை துன்பங்களும் நினைவிலிருக்குமாம். அது கடவுளிடம் இந்தப் பிறவி வேண்டாம் என்று இறைந்துக் கேட்குமாம். அதையே வேறு விதமாக நாம் யோசித்தால் அக்குழந்தை இந்த புவிக்கு வரும் முன் "கடவுளே நான் ஒரு மீள முடியாத சிறைக்கு செல்ல இருக்கிறேன், எனக்கு ஒரு நல்ல வீடு, நிறைய சொந்தங்கள், சொத்து எல்லாம் தா, குறைந்த பட்சம் உன்னை அடையும் வரை புவி சிறையை முடிந்த அளவு சுற்றி வருகின்றேன் என்று கேட்பது போல கொள்ளலாம். இக்குழந்தை பிறக்கும் வரை தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும் ஆனால் அது வாழும் இடமோ தாயின் கருவறையே.
அடுத்த சூழலை வேறு விதமாக மேலே கூறிவிட்டேன். அதுவும் ஒரு பிறப்பு போல தான். திருமணம் முடிவாகி இருக்கும் ஒரு பெண் மனநிலை கூட ஒரு கருவில் உள்ள குழந்தைக்கு ஒப்பிடலாம். தன் கணவன் மற்றும் கணவனை சார்ந்த சொந்தங்களை பற்றிய பயம் கலந்த ஒரு சிந்தனை இருக்கும். அந்த குடும்ப சூழல் பழக்க வழக்கம் எல்லாம் பற்றிய கலக்கம் இருக்கும். ஒரு புது உலகை பற்றிய கனவிருக்கும், ஆனால் அவள் இருக்கும் இடம் தாயின் வீடாக இருக்கும். சிந்தனை அவளை சுற்றியடிக்கும்.
இதை திருமணம் முடிந்த ஒரு பெண் வாழ்வோடும் ஒப்பிடலாம். இருக்கும் இடம் கணவன் வீடாக இருந்தாலும் சிந்தனை மட்டும் ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லி போல தாய் வீட்டையே சுற்றி சுற்றி வரும். தாய் வீட்டில் அதிகாலை சூரியன் அவளை இப்போதும் விழிக்க வைக்கும். தாயோடு இட்ட செல்ல சண்டைகள் இன்று கூட சிணுங்க செய்யும். அப்பல்லி படும்பாட்டை பாருங்கள். தாய் வீட்டு திண்ணையோடு உலவும் தென்றல் எப்போதும் அவளை தாலாட்டும். வீட்டு தோட்டத்தில் உள்ள மல்லிகை செடிகளுக்கும் நினைவால் நீர் வார்க்கப்படும். அங்கே வந்து போகும் பட்டாம்பூச்சிகளின் நலம் விசாரிக்கும் அவள் மனம். மாடிப்படிகளில் அமர்ந்து ரசித்த அடுத்த வீட்டு அவரைக்கொடியின் பூங்கொத்து அவள் எண்ணங்களில் சிறகடிக்கும். மொட்டை மாடியில் பார்த்து கிறங்கிய சாயுங்கால கீழ்வான சிவப்பும் சின்ன புன்னகை பூக்க செய்யும். அவள் படுக்கை அறை ஜன்னல் வழி பார்த்த தென்னங்கீற்றிடை நிலவொளி உள்ளத்தை மயக்கும். எப்போதும் தாய் இடும் மருதாணி இப்போதும் சிவந்திருப்பது போல தோன்றும். சிறு வயதில் பிறந்த நாளுக்கு தலையில் தைத்து கொண்ட மல்லிகை பூக்களை கண்கள் தேடித் தொலைக்கும். பட்டியலிட்டது அவள் நினைவுகளின் ஒரு சிறு பகுதி தான். சொல்லாதவதை ஒரு கோடி இருக்கலாம்.


வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

நல்லதோர் வீணை செய்து

நல்லதோர் வீணை செய்து - அதை
நலங்கெட புழுதியில் ஏறிவதொண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
இப்பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது. எதை நினைத்து பாரதி இந்த பாடலை பாடி இருப்பான்? தன் வறுமையையா? செல்லம்மா தனக்கு கவிதைகள் மீதுள்ள காதலை புரிந்து கொள்ளாமல் கோபிக்கிறாளே என்றெண்ணியா? இவ்வளவு ஆற்றல் மிக்க அனல் பறக்கும் கவிதைகளுக்கு அவர் நினைத்த அளவு ஆக்கபூர்வமான பின் விளைவுகள் இல்லை என்ற வேதனையா? எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கே.பாலசந்தர் "வறுமையின் நிறம் சிவப்பு" என்ற தன் படத்தில் இந்தப் பாடலை மிக அழகாக பயன்படுத்தி இருந்தார். நன்கு படித்த இளைஞன் அவன் படிப்பிற்கு தக்க வேலை கிடைக்காமல் அவதியுறுவதை இப்பாடல் அழகாக வெளிப்படுத்தும்.

இந்தப் பாடலை ஒப்பிட்டுப் தக்க ஒரு சில சிந்தனைகள் இதோ.

அவள் ஒரு அழகோவியம். காண்போர் யாவரையும் ஒரு கணமேனும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகுக் தேவதை. யாருடனும் சட்டென பழகி விடுவாள். எவரையும் தன் பேச்சால் கவர்ந்திழுப்பாள், மகிழ்ச்சி அடைய செய்வாள். அவளிருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லொருக்கும் உதவுவாள். மிக அன்பானவள். குழந்தை போல் உள்ளம் கொண்டவள்.நன்கு படித்தவள். கற்பூர புத்தி கொண்டவள். கொடுத்த எந்த வேலையையும் இதை விட சிறப்பாக செய்ய யாராலும் செய்ய இயலாது என்னும் வண்ணம் செய்வாள். அதிலும் எதை செய்தாலும் மிக ரசனையோடு செய்வாள். மார்கழியில் தெருவடைத்து அவள் இடும் கோலம் அதற்கு அவள் தரும் வண்ணம, ஆஹா அற்புதம். எல்லோரும் தான் வண்ணக்கோலங்கள் வரைகிறார்கள். ஆனால் அவள் வரையும் போது மட்டும் ஏன் அது உயிர்பெற்று எழுகிறது என்று தோன்றும். ஒரு நாள் மயில் தோகை விரித்து ஆடும், ஒரு நாள் குயில் கூவும், பிறிதொரு நாள் வண்ண உடைகளில் அழகு பெண்கள் நடனமாடுவர், ஒரு நாள் சிறார்கள் விளையாடுவர். ஒரு நாள் அழகான பூ பூக்கும். அவள் பாடினால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. அவள் மலர் தொடுக்கும் அழகிற்கே கண்ணன் கூட அவள்மீது காதல் கொள்வான். அவளது சமையல் எட்டு ஊருக்கும் மணக்கும். அவள் எழுதும் கவிதைகளில் கவிரசம் பொங்கும்.. காவியங்களைப்பற்றி அவள் பேசும்போது அக்காவியமே நம் கண்முன் நடப்பது போல தோன்றும். சுருக்கமாக சொன்னால் அவள் பெண்மையின் இலக்கணம். அந்த நல்லதோர் வீணைக்கு கிடைத்தது ஒரு புழுதி போன்ற கணவன். அவனுக்கு ரசனை என்ற ஒரு வார்த்தை தமிழில் இருக்கின்றது என்றே தெரியாது. அவனுக்கு அவன் அலுவலகம், பின் வீடு, சாப்பாடு, தூக்கம். எல்லாமே ஒரு இயந்திரம் போல, மென்பொருள் இட்ட கணிபொறி போல. இத்துணை குணவதி அவளை பற்றி யாவரும் பெருமை பேசி என்ன பயன்? இதை பார்த்து தான் பாடி இருப்பானோ பாரதி?
அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவன். அவன் படித்தது ஒரு சாதாரண கல்லூரி. ஆனால் அவனுடம் பணி புரியும் அனைவருமே மிக பெரிய பெயர் போன கல்லூரிகளில் படித்தவர்கள். ஆனால் அவர்களின் அறிவிற்கு ஒரு படி மேலானதே அவன் அறிவாகும். அவன் அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொத்த திறமையையும் கொண்டவன் எனக்கொள்ளலாம். திட்டமிடுதல், கட்டமைத்தல், மென்பொருள் எழுதுதல், அதை திருத்தி தரமிடல் இப்படி மென்பொருள் வாழ்வு சுழற்சியின் எந்த பகுதியிலும் அவன் செயல் தரமாக இருக்கும். எவருமே குறை சொல்ல முடியாது. குழுவில் உள்ள மற்ற சக பணியாளர்கள் இவன் திறன் கண்டு மிரண்டு போவார்கள். ஆனாலும் அவன் படித்தது அவ்வளவு உயர்ந்த கல்லூரி அல்லாததால் அதை வைத்து அரசியல் நடத்துவர் குழு மேலாளரும் சக பணியாளர்களும். அவனிடம் நல்ல திறன் காட்ட கூடிய பணியே தரபடாது. வேறு ஒருவருக்கு அது தரப்படும். ஆயினும் வேலை இவனிடம் வாங்கபடும். அதில் வரும் பயன் வேறு ஒருவனுக்கு போய் சேரும். அவ்வளவு நல்லறிவு இருந்தும் என்ன பயன் அது ஒடுக்க படுகின்றதே இங்கே. ஒருவேளை இது போன்ற ஒரு சுழலை தான் பாரது பாடி இருப்பானோ?
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?" வற்றாத ஜீவ நதிகள், காடுகள். மலைகள், விளைநிலங்கள். பூமி நிறைய கனிமங்கள். தாது பொருட்கள். உப்பு, தங்கம், வைரம் , நிலகரி, கச்சா எண்ணைய் படிமங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் இந்த மண்ணில். எத்தனையோ போரட்ட வீரர்கள் இத்தனையும் இந்த மண்ணில். இருந்தும் இந்திய தாய் அடிமைப் பட்டு கிடக்கிறாள். அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சுடர் மிக்க அறிவோடு என்னை படைத்துவிட்டாய். ஆயினும் என் செய்ய அடிமைதளை உடைக்க முடியவில்லையே இப்படி தான் பாரதி யோசித்து இந்த பாடலை பாடி இருக்க வேண்டும்.
இன்று நாமும் நினைப்போம் இவ்வளவு வளங்கள் இருந்தாலும், எத்தனையோ அறி்வாளிகள் விஞ்ஞானிகள் இருந்தாலும், இந்திய மூளையை நம்பி பல பன்னாட்டு நிறுவனங்கள்.இருந்தாலும் இந்திய தாய் அவள் சுயநலம் மிக்க ஆட்சியாளர்களாலும், பொறுப்பற்ற குடிமக்களின் கைகளிலும் மாட்டிக்கொண்டிருக்கிறாளே என்று.

"நல்லதோர் வீணை செய்து அதை
நலங்கெட புழுதியில் ஏறிவதொண்டோ"


வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

Monday, May 24, 2004

வருந்தி அழைத்தால் வருவது மழையாகுமா?

மழைப்பிரார்த்தனைகளில் எனக்கு
சம்மதம் இல்லை
வருந்தி அழைத்தால் வருவதன்
பெயர் எப்படி மழையாகும்?

நன்றி: குமுதம்.

"மழை"


மழையைப் பிடிக்காத மனிதன் இருக்க முடியுமா இவ்வுலகில்? மழையை நினைத்தாலே ஒரு சுகந்தம் வந்து மனதோடு ஒட்டிக்கொள்ளும். மனது ஒரு குழந்தையைப்போல குதூகலிக்கும். குளிர்தென்றல் தாலாட்ட, மண் வாசனை வரவேற்க நம்மை வந்து சேரும் மழைக்காக வேண்டுவது தவறில்லை. எப்படி அழைத்தால் என்ன வரப் போகிறது, வந்து போவது மழையின் சுகந்தம், பலரின் வாழ்க்கை. இக்கவிதையைப்போல மழையை வருந்தி அழைக்க எனக்கு வறுத்தம் இல்லை. ஆனால் இந்த கவிதையில் வருந்தி அழைக்கப்படும் மழையைப் பற்றி மட்டும் பேசுவது போல தெரியவில்லை. எந்த செயலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்றே இந்த கவிதை மறைமுகமாக சொல்வதாக நான் உணர்கிறேன்.


காதல்:
-----

"குளிர் பார்வை பார்த்தால் கொடியோடு வாழ்வேன்
எனை தாண்டி போனால் நான் வீழ்வேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்"

-- நன்றி வைரமுத்து


"வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்

கண் மழை விழும் போது எதை கொண்டுக் காப்பாய்

பூவின் கண்ணீர் ரசிப்பாய்
நான் என்ன பெண் இல்லையா"

--நன்றி வைரமுத்து

காதலன் குளிர் பார்வைக்கு ஏங்கலாம். காதலன் பேச்சுக்கு மயங்கலாம். அவன் சொல்லுவது எல்லாம் கேட்கலாம். கொஞ்சிப் பேசி அவன் உயிரை கொள்ளைக்கூட கொள்ளலாம். அன்பால் அவனை அள்ளி எடுக்கலாம். இதெல்லாம் அவனும் உன்னை விரும்பி ஏற்கையில் செய்யடி பெண்ணே. மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன் என்றால் பின் உன் சுயம் எங்கே? உன் கண்ணீரை ரசிப்பவன் கண்ணனே ஆனாலும் அவன் உனக்கு வேண்டாம். உன் வீட்டு தோட்டத்தின் மல்லிகை மொக்குகளை நேசிக்கலாம். உன் வீட்டு நாய்குட்டியை நேசிக்கலாம். எங்கும் நிறைந்த தென்றலை சுவாசிக்கலாம். இயற்கையின் அற்புதத்தை ஆழ்ந்து ரசிக்கலாம். யாரிடமும் யாசித்து நேசம் பெற வேண்டாம்.

"மன்றாடி பெற்றால் அது எப்படி காதலாகும்?"

நம்பிக்கை
-------

அந்த காலத்தில் மக்கள் யாவரும் கூட்டம் கூட்டமாகதான் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பெண் ஒரு தெய்வம். பெண்ணின் தாய்மை வரத்தினால் அவள் கடவுளுக்கு நிகராக வணங்கப்பட்டாள். பிறகுதான் தனக்கும் அதில் பங்கு உண்டு என்ற அறிவை பெற்றான் ஆண். அதன் பின் வாரிசு என்ற வழக்கு வந்தது. தன் பிள்ளைக்கு தான் தான் அப்பன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான். அதன் விளைவே பெண்ணுக்கு கற்புநெறி கற்பிக்கபட்டது. ஆண் ஆதிக்கம் வளர்ந்தது. சீதை தீக்குளித்து தன் கற்பை நிரூபிக்கவேண்டி வந்தது. கண்ணகி மதுரையை எரித்து தன் கற்பின் சக்தியை உலகுக்கு காண்பித்தாள். வாசுகி சொல்லி வான் பொழிந்து அவளது கற்பின் வலிமையை காட்டியது.. ஏதோ ஒரு தேவனின் பிம்பம் அழகாக இருக்கின்றது என்று நினைத்த பரசுராமரின் அன்னை தன் மகனாலேயே கொல்லபட்டாள். காரணம் அவள் மணலால் செய்த பானை அவள் கற்பு போல் கரைந்தது. சகுந்தலைக்கோ தன்னை மனைவி என்று துஸ்யந்தனிடம் நிருபிக்க ஒரு மோதிரத்தின் துணை தேட வேண்டி இருந்தது. இப்படி பெண்களுக்கு எத்தனை எத்தனையோ சோதனைகள். கணவன் வீடு திரும்பும் போது மனைவி வீட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமல்லாமல் நாள் முழுதும் அவள் அங்கே தான் இருந்தாள் என்ற நம்பிக்கை கணவனுக்கு வரவேண்டும். நம்பிக்கை தானே வாழ்கையின் ஆதாரம். கற்பென்பதும் ஒரு நம்பிகை தானே?



"நிருபித்து பெறுவது எப்படி நம்பிக்கையாகும்?"


தானம்
-----

மஹாபாரதத்தில் கர்ணனின் பாத்திர படைப்பைப் போல வஞ்சிக்கப்பட்ட படைப்பு வேறு எதுவும் இருக்க இயலாது. அவன் பிறந்ததே குந்திதேவி தான் பெற்ற மந்திர சக்தியை சோதனை செய்ததன் விளைவு. பிறந்ததும் தாயே அவனை கை விடுகிறாள். தந்தையாய் சூரியன் தன் புத்திரனுக்கு எந்த கடமையையும் செய்யவில்லை. பாண்டவர் நாட்டை ஆளும் முதல் தகுதியுள்ள கர்ணன் தேரோட்டி மகனாய் பட்ட அவமானங்கள் கோடி கோடி. அவனுக்கு அமைந்த நட்பை தவிற அவனுக்கு வேறு என்ன கிடைத்தது? தருமத்தில் தலை சிறந்தவன். கொடுத்துக் கொடுத்து கை சிவந்தவன். கடவுளும் கூட அவனை தாய், தந்தைக்கு அடுத்தபடியாக வஞ்சிக்கின்றான். உயிர் காக்கும் கவசத்தை தானமாக பெற்றான் இந்திரன். தலையை காக்கும் தருமத்தை தானமாக பெற்றான் கண்ணன். கர்ணனின் கதையை பார்க்கும்போது என் மனத்தில் எழும் ஆழமான கேள்வி இது.


"கேட்டு(வஞ்சித்து) பெறுவது எப்படி தானமாகும்?"
"அநீதி செய்து நிலை நாட்டியது எப்படி தருமம் ஆகும்?"

இரண்டாவது கேள்வி இக்கட்டுரைக்கு சற்றே பொருந்தாது என்றாலும் என் மனதில் ஏனோ வந்த சிந்தனையது.

வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

த‌ன் வ‌லைப்பூவில் இட்ட‌ செல்வ‌னுக்கும் ந‌ன்றிக‌ள்

Wednesday, March 24, 2004

நனைதலின் தேடல்

அறியாமலே விட்டுச்செல்கிறது

ஒவ்வொரு நனைதலும்

பிறிதொரு மழைக்கான தேடலை ...

நன்றி:லக்ஷ்மி சகம்பரி


எப்போதும் மழை என்பது ரம்யம், சுகந்தம், சந்தோசம் தான். மழை எத்தனை சுகமென்றாலும், நனைத்தல் என்னவோ எல்லா மழையிலும் கிடைக்க கூடியதன்று. எப்போதும் எதாவது ஒரு காரணமிருக்கும் மழையில் நனைதலை தவிர்ப்பதற்கு. கையில் முக்கியமான அலுவல் சம்மந்தப்பட்ட தாள்களோ இல்லை அதிகப்படியான பண நோட்டுகளோ இருக்கலாம். நாம் நனைய நினைத்த இடத்தில் நிறைய மக்கள் கூடி இருக்கலாம். நமக்கு நம் ஆடை பற்றிய கவலை இருக்கலாம். வீட்டிலே இருக்கும் பட்சத்தில் கூட காய்ச்சல் பயமிருக்கலாம்.
காரணம் எதுவாயினும் மழையில் நனைதல் மண்ணுலகில் கிடைக்க கூடிய ஒரு மிக சிறந்த சந்தோசமான இழக்க கூடாத தருணம். அத்தருணத்தின் இழப்பை சொல்ல வார்த்தைகள் கிடையாது. நனைந்து பழகியவர்க்கு, நனைய பிடித்தவர்க்கு மட்டுமே புரிந்த ஒன்று இம்மழை நனைதல். அது வார்த்தையில் அடக்கவியலாத அனுபவம். அப்படிப்பட்ட மழை நனைதல் மீண்டும் மழை தேடலை தூண்டி செல்வது ஒரு ஆச்சரியமற்ற விசயமன்றோ. இங்கே நனைதல் என்ற உணர்விற்கு ஒத்த ஒரு சில உணர்வுகளை பார்க்கலாம்.


வன்மம்:

----------


வேம்புண்ட வாய்க்கு எதை தின்றாலும் கசக்கும். அதைப் போல என் நண்பர் ஒருவர் அலுவலக அரசியலில் பெயர் போனவர். நல்ல பேச்சுதிறன் கொண்டவர். அலுவலக நிர்வாகிகளிடம் பெரும் செல்வாக்குள்ளவர். அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் எப்படியாவது சில சிக்கல்களை உருவாக்கி அந்நபரை பழி வாங்கி விடுவார். அவர் என் தோழியின் மேல் ஏதோ காரணத்தால் வன்மம் கொண்டு விட்டார். பின் அவள் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளை கூட பெரிது படுத்தி அனைவரின் முன்னிலும் அவளுக்கு அவபெயரை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

ஒரு முறை அவள் தன் பணிக்காக ஒருவர் உதவியை நாடியதை மிகைப்படுத்தி அந்நபரை அடிமைபடுத்தி கொடுமை செய்கின்றார் என்பது போல பெயர் ஏற்படுத்தி விட்டார். இதைவிட கொடுமை அப்பெண்ணின் நடவடிக்கை, மற்றவரிடம் பழகும் தன்மை சரியில்லை என்று மேலிடத்தில் சொல்லி அவளுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வையும், பதவி உயர்வையும் இல்லாமல் செய்து விட்டார். இதனால் அப்பெண் அந்த அலுவலகத்தேயே விட்டுச்சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது.

அப்போது புரிந்தது. எப்போதும் வன்மம் தன்னை அறியாமலே மேலும் வன்மத்தை வளர்க்கின்றதென்று. இதே போல எதிர்பார்ப்பு இன்னும் எதிர்பார்ப்புகளை தூண்டும். ஏமாற்றம் மேலும் சில ஏமாற்றங்களுக்கு வித்திடும். சந்தேகம் சந்தேகங்களை வளர்க்கும்.


காதல்:

----------


ஒவ்வொரு நனைதலையும் ஒரு காதல் உணர்வோடு ஒப்பிடலாம். மழையை காதல் புணர்தலின் குறியீடாக பார்ப்பது பல
கவிஞர்களின் வழக்கம். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான காதல் உணர்வை பற்றி கூற எண்ணுகிறேன். என் சிறு வயதிலிருந்தே ஆண்டாள் மேல் ஒரு தனி பிரியம். அவளால் கவர்ந்து இழுக்கப்பட்ட நான் அரங்கனை தான் மணக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதை வெளியே சொல்லி அவமானபட்டதும் உண்டு. ஆனால் ஆண்டாள் போல் தூயவளோ திடமானவளோ அன்றே. நான் அற்ப பிறவி தானே.

சில காலம் கழிந்து ஒருவரை பார்த்த பின் இவர் கிடைத்தால் அரங்கன் தேவைஇல்லை என்று எண்ணினேன். அவர் முகம் தவிர வேறு எந்த விவரமும் இன்றுவரை தெரியாதெனக்கு. அதன் பின் வீட்டில் பார்த்து மணமுடித்தனர். இப்படியாக அரங்கன் மேலான காதலை மற்றுமோர் காதல் மாற்றியது. அந்த காதலையும் கல்யாணம் மாற்றியது.

என் நண்பர் ஒருவர் ஒரு முறை தன் நண்பரை சந்தித்த போது, 'அவளும் ஏமாத்திட்டு போயிட்டாடா, இன்னொரு பெண்ணை தான் தேட வேண்டும்' என்று புலம்பியதாக என்னிடம் சொன்னார்.


நீந்த தெரியாமல்

கிணற்றை

ரசிப்பது தவறென்று

ஒவ்வொரு முறை கால் தவறி

உள்விழும் பொழுதும்

நினைத்துக் கொள்கிறேன்

நன்றி:லக்ஷ்மண ராஜா


நிறைவேறா காதல் எல்லாமே இன்னொரு காதலுக்கான தேடலை அறியாமலே தந்து விட்டுத் தான் நீங்குகிறது.


ஆசை:

-----------


தொட்டணைத்தூறும் மணற்கேணியைப் போல ஆசைக்கு அளவில்லை. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆயினும் ஆசை யாரை விட்டது. உதாரணத்திற்கு என் எழுத்தார்வம். அதிகம் வாசிப்பதில்லை. ஏதோ எனக்கு புரிந்த ஒரு சில கவிதைகளை யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்றெண்ணி கவிதையின் பல கோணங்களை வடிக்க போக அதை ஒரு சிலர் வேறு வழியில்லாமல் நன்றாக இருப்பதாக சொல்லப் போக, அந்த போதை எனக்கு பிடித்துப் போக மீண்டும் ஒர் கவிதையை விவரிக்கும் கட்டுரை. இங்கே இப்படியாக ஆசை தன்னை அறியாமலே மேலும் ஆசையை வளர்த்து விட்டுவிடுகிறது. அதனால் பல நன்மைகளும் இருக்க தான் செய்கின்றது மழை நனைதலின் குதூகலம் போல, சுகந்தம் போல, சந்தோசம் போல.

Tuesday, February 24, 2004

"மௌனஒலி"


"Pin drop silence"


அமைதி அல்லது மௌனமான ஒரு இடத்தை,நிகழ்வைக் குறிக்கும் மேற்கோள் தானே மேலே சொன்னது. ஒரு குண்டூசியைத் தரையில் எறிந்தால் அதன் சப்தம் சற்று அமைதியான பகுதியில் காதில் கேட்கும் அளவில் இருக்கும். இது ஒரு சாத்தியமான விசயம். ஆனால் இதை விட அழமான கொடூரமான மௌனத்தை பற்றிய சங்க கால கவிதை ஒன்று உள்ளது.

கொன்னுர் துயிலினும் யாந்துங் சலமே
எம்இல் அயல ஏழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.


உரை:
-------

இந்த பெரிய ஊர் தூங்கிய பிறகும் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டின் அருகே ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள மயிற் பாதம்
போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்.

நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"


இந்த சங்க பாடல் ஒரு உக்கிரமான மௌனத்தை பேசுகிறது. ஊர் உறங்கிவிட்ட வேளை. தூங்க முடியாத இருவர், சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்திலிருந்து உதிரும் பூ ஒன்றின் ஒலியை கேட்டுக் கொண்டு இரவெல்லாம் தூங்காது இருப்பதாக வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு அழமான சோகம் போல தெரிந்தாலும் உற்று கவனித்தால்,இலைகளை மயிற் பாதங்களுக்கு ஒப்பிட்ட கவிஞன் பெரிய பூங்கொத்துகளை நினைவில் கொணரும் கவிஞன் உதிரும் பூ நீலமணி போலிருக்கும் என்று நினைவு கூரும் கவிஞன் சோகமாக இருக்க வாய்பில்லை என்றும் கொள்ளலாம். மலர் உதிரும் ஒலியை கேட்பது சாத்தியமா என்ற வாதத்தை விடுத்து உறங்காமல் தவிக்கும் அந்த இருவர்
பற்றி சிந்திதேன். என் சிந்தனையில் வந்து போனது நான்கு விதமான உறவாகும்.

நட்பு
--------

நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சண்டை என கொள்வோம். சண்டை முடிந்திருக்கும் ஆனால் அதன் சாரம் போகாதிருக்கும். நீ என்ன அவ்வளவு பெரியவனா என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கும். ஆனால் நட்பும் மேலோங்கி நிற்கும். பேச முடியாது. ஒரே அறையில் இருவரும் அடுத்தவன் வந்து பேசுவான் என்ற நினைப்போடு உறங்காமல் படுத்து இருப்பார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் கூடிய பழைய நண்பர்கள் இருவர். நிறைய பேசி மகிழ்ந்து,பிரிந்து செல்ல வேண்டிய நாளின் முதல் நாள் இரவு. மிக சந்தோசமான மனநிலையில் நாம் இருக்கும் போது ஒரு சில பயணங்கள் முடியக் கூடாது என்று நினைப்போம்.அது போல அந்த இரவு முடியாமல் தொடரக் கூடாதா என்று நினைத்தவாறு இருவரும் தூங்காமல் பேசாமல் தாங்கள் மகிழ்ந்து களித்த தருணங்களை நினைத்தபடி படுத்துக்கிடப்பார்கள்.

தாய் மகள்
------------------

மகளை திருமணம் முடித்து கொடுத்த பெற்றோர் அவளை காண அவள் வீடு வந்திருக்கின்றனர். திருமணம் மற்றும் தலை தீபாவளி, பொங்கல், ஆடி இப்படி பல பண்டிகைக்கு தரப்பட்ட சீர் சரியில்லை என்கிற சண்டை. வீடு தேடி வந்த பெற்றோரை அவமான செய்த கணவனையும் கணவர் வீட்டாரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத பெண், தன் மகளை இப்படி பட்ட பேய்களிடையே விட்டு விட்டோமே என்று தாய், அவர்களும் ஒரே வீட்டில் ஒர் இரவில் உறங்காது இருப்பார்கள் அப்போது மலர் உதிரும் ஒலி என்ன கண்ணில் இருந்து கன்னங்களில் கண்ணீர் வழியும் ஒலியைக் கூட கேட்க முடியும்.

கணவன் மனைவி
----------------------

இந்த உறவில் மலர் உதிரும் ஒலியை கேட்டு கொண்டே ஒருவரோடு ஒருவர் பேசமல் படுத்திருப்பார்கள் என்றால் அதைவிட கொடுமை உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்த கவிதைக்கு இந்த உறவை வைத்து நான் சிந்தித்தது வேறு விதமாகும்.

"நான் கேட்கும்
எந்த ஒரு கேள்விக்கும்
உடன் பதில் வைத்திருகிறாய்
அழகாய், அது
உன் மௌனம். " - நன்றி நிலா ரசிகன்

இந்த கவி வரிகளில் ஒரு ஏக்கமில்லை, ஒரு சாடல் இல்லை. இதில் ஒரு சந்தோசம் தான் தெரிகிறது. என் மௌனம் சொல்லாத எதையும்
என் வார்த்தைகள் சொல்ல போவது இல்லை என்ற புரிதல்(understanding) கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரும் "மயிற் பாதம்
போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்" என படுத்திருக்கலாம்.

காதலன் காதலி
--------------------

காதலிக்கும் சமயம் இருவரும் வேறு வேறு வீடுகளில் தான் இருப்பார்கள். ஆயினும் சிந்தனை ஒரே புள்ளியில் தான் இருக்கும். ஒருவேளை
கற்பனையில் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின்
இருந்து உதிரும் நீலமணி மலர்களின் ஒலியைக் கேட்டபடி இருவரும் அவர் அவர் வீட்டில் உறங்காமல் படுத்து இருப்பர். கற்பனையில் மட்டுமே
மலர் உதிரும் ஒலியை காதில் கேட்க முடியும்.





வெளியிட்ட‌ த‌மிழோவிய‌ம் இணைய‌ இத‌ழுக்கு ந‌ன்றி

Saturday, May 24, 2003

யாசோதரையின் யாகம்

மஞ்சள் ஒற்றாடை உடுத்தி பழுத்த துறவி போல சித்தார்த்தின் மனைவி யசோதரை அந்த வனத்தில் தனித்து அமர்ந்திருந்தாள். அவள் தவம் மெய்ப்பட்டது. ஆறு வருடம் கழித்து அவள் கணவன் வர இருக்கின்றாராம். எண்ணிப் பார்த்தாள் தன் பழைய வாழ்வதனை. எத்தனை ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை. கண் நிறைந்த மாமன் மகனே காதலானாக பின் கணவனாக. அரண்மனை வாழ்க்கை, ஆயிரம் பணியாட்கள். தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிய மாமனே மாமனார். சுவைக்க கனி வகைகள், பொழுதை இன்பமாக கழிக்க நந்தவனங்கள். ஆடல் பாடல்களுக்கு குறைவில்லாத அந்தப்புரம். பதி்மூன்று வருடங்கள் எத்தனை இனிமையாக இருந்தது ஒரே ஒரு குறையை தவிர. பிள்ளை வரம். அதுவும் பதிமூணாம் வருடம் கிடைக்கப் பெற்றது. எத்துணை மகிழ்வடைந்தார் என் கணவர் நான் கருவுற்ற செய்தியை கேட்டு. என்னை அர்ச்சிக்காத குறை தான். ஆடை ஆபரணம் என்று அள்ளி குவித்தனர் மாமனும் கணவரும். இந்த உலகே அழகானது போல எத்துணை அருமையாக இருந்தது என் வாழ்க்கை.

ஆனால் ஆண்மகவை பெற்று அடுத்த நொடி முதல் இந்த உலகில் இருக்கும் அத்தனை துயரங்களையும் ஒன்றாக பெற்றது போல ஒரே இரவில் இருண்டல்லவா போனது என் வாழ்க்கை. என்ன நினைத்தாரோ ஏது அறிந்தாரோ இத்துணை அன்பானவளை நொடியில் துறந்து சென்ற இடம் தான் தெரியாது. தவித்த தவிப்பொன்ன? உண்ண மறந்து உறங்க மறந்து பித்துப் பிடித்தவள் போல இருந்த கொடுமை தான் என்ன? தனிமை கொடுங்கொடுமை. அதிலும் இளமையில் தனிமை இன்னுமல்லவா கொடுமை. இன்று வருகின்றாயா! வா! உன்னிடம் கேட்க வேண்டும் சில பல கேள்விகள் அதற்கு தானே இந்த தவம்.

வந்தார் கௌதம புத்தார் முன்னாள் சித்தார்த் இன்னாள் ஞானம் பெற்ற புத்தர். வந்தார். தன் தந்தையிடம் "எங்கே யாசோதரை என்றார்?" அந்த அறையில் என்றோரு அறை காட்டினார் உள்ளே சென்றார். வந்தாள் யசோதரை புத்தரின் காலில் வீழ்ந்தாள் கதறி அழுதாள். அழுது தீர்க்கும் வரை காத்திருந்தார் புத்தர். ஆரம்பமானது யசோதரையின் கேள்வி கணைகள்

"ஏ புத்தரே உன்னை இப்படி கேட்க வேண்டும் என்று தான் இத்தனை நாள் காத்திருந்தேன். ஒரு பிள்ளைக்கு அதுவும் பதிமூன்று ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு பெயர் சூட்டக் கூட தந்தை என்று நிற்காமல் உன் ஞானம் பெரிதென்று எங்கோ சென்று விட்டாய். தந்தையாய் அந்த பிள்ளைக்கு என்ன செய்தனை நீ?

"உன் மேல் கொள்ளை பிரியம் வைத்து இந்த உலகே தெரியாமல் துன்பம் என்பதென்ன என்ன தெரியாமல் பாசம் நேசம் கொட்டி வளர்த்தாரே என் மாமன், அவருக்கு ஒரு மகனாய் உன் கடமையை செய்தாயா?"

"உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் இந்நாட்டு மக்கள், நீ மன்னனாகி நல்வாழ்வை அவர்களுக்கு அளிப்பாய் என்று. ஆனால் நீயோ ஏதோ போதி மரம் தான் உன் பெற்ற தாய் போல போய் அடைக்கலமடைந்து விட்டாய். உன் கடமை தவறிவிட்டாய்"

"இந்த ஆறு வருடங்களாக பகலை பாழாய் கழித்தேன். இரவை ஏங்கி கழித்தேன். மாமன் மகன் என்ற காரணத்தால் மணந்தேன். உன்னை மணந்த காரணத்தால் இல்லதுள்ளேயே துறவறம் பூண்டேன். உன்னை போல பிச்சை எடுத்து மட்டும் தான் உண்ணவில்லை. ஆனால் அடம்பர ஆடை அணிகலனை துறந்தேன். ஒரு வேளை மட்டும் உண்டேன். உறங்க கடும் தரையை மட்டும் உபயோகபடுத்தினேன். என்னை மறுபடியும் மணக்க முன் வந்தோரிடம் மறுத்தேன். ஏன் தெரியுமா? ஒரு நாள் நீ வருவாய், அன்று இந்த கேள்வியை உன்னிடம் கேட்க வேண்டும் என்றே காத்திருந்தேன்."

"ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதே உன் போதனையாம் நீ போதி மரத்தில் அடியில் உணர்ந்தறிந்ததாம். ஆனால் நான் சொல்வேன் என் எல்லா துயரத்திற்கும் காரணம் கௌதம புத்தனே நீர் தான் ஆவீர்"