Showing posts with label ம‌ல்லிகை ப‌திவுக‌ள். Show all posts
Showing posts with label ம‌ல்லிகை ப‌திவுக‌ள். Show all posts

Monday, September 24, 2012

ஏன் அண‌ங்குற்ற‌னை?



ம‌ல்லிகைக்கும் என‌க்கும் மிக‌ அழ‌கான‌ பொருத்த‌முண்டு. சில‌ நிக‌ழ்வுக‌ள் வாழ்வில் ம‌ல்லிகையோடு பிணைத்து க‌ட்டி என்னை இழுத்து சென்ற வ‌ண்ண‌மிருக்கிற‌து. ஓரிரு மாத‌ங்க‌ளுக்கு முன் என் உற‌வின‌ர் இல்ல‌ திரும‌ண‌த்தில் எதிர்பார்த்த‌ அள‌வு ம‌ரியாதை கிடைக்காம‌ல் நான் சற்றே அண‌ங்குற்றிருந்த‌(துன்ப‌முற்றிருந்த‌) நேர‌ம். உற‌வின‌ர் வீட்டிக்கு செல்லும் முன்ன‌மே என் த‌லையில் கொஞ்ச‌ம் ம‌ல்லிகை இருந்த‌து. உற‌வுப் பெண் என‌க்கு இறுவாச்சி ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கொடுத்து உப‌ச‌ரித்தாள். நான் வேண்டாமென்றேன். இறுவாச்சி ம‌ல்லிகை திருச்சிக்கார‌ர் அனைவ‌ர்க்கும் பிடிக்கும் என்னை தவிர‌. இறுவாச்சி பார்க்க‌ குண‌மாக‌ இருக்காது(க‌ர‌டுமுர‌டாக‌ இருக்கும்) ஆனால் குண்டு ம‌ல்லியை விட‌ ரொம்ப‌ செரிவாக‌ ம‌ண‌க்கும். அதுவும் அந்த‌ பெண் கொடுத்த‌ ச‌ர‌ம் ஏக்கு மாக்காக‌ தொடுக்கப்பட்‌டிருந்த‌து. பார்க்க‌ நேர்த்தியாக‌ கூட‌ இல்லை. வேண்டாமென்றேன். நான் கொஞ்ச‌ம் துய‌ர‌மாக‌ இருந்த‌து என் அக்காவிற்கு ம‌ட்டும் தெரியும். அத‌ன் கார‌ண‌மாக‌ ம‌றுக்கிறேன் என்றும் என்னை த‌வ‌றாக‌ நினைப்பார்க‌ள் என்றும் வ‌ற்புறுத்த‌ என்று அதையும் வைத்துக் கொண்டேன். ஆனால் ம‌தியாதார் வாச‌லென்றால் ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கூட‌ அண‌ங்குற‌ செய்யும் போலும்.



எங்க‌ள் வீட்டுத் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகைப்புத‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. அனைத்தும் அடுக்கு குண்டு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை அள்ளி அள்ளி த‌ருப‌வை. ஒவ்வொன்றும் சின்ன‌ ரோஜாப்பூ போல‌ இருக்கும். இங்கே டெல்லி வாழ் ம‌க்க‌ள் யாருமே ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை தொடுத்து த‌ங்க‌ள் த‌லையில் சூடுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் வீட்டில் எத‌ற்கு ம‌ல்லிகை ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்கின்றார்க‌ள் என்றே தெரியாது. கேட்பார் எவ‌ருமின்றி அவையும் தாம் பாட்டுக்கு ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் வீசி ம‌ண்ணில் வீழும். இந்த‌ கார‌ண‌த்தினால் டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எல்லாமே அண‌ங்குற்ற‌து போலும். இந்த‌ வ‌ருட‌ம் ம‌ல‌ரும் எந்த‌ மல்லிகை ம‌ல‌ரிலும் அந்த‌ அள‌விற்கு ம‌ண‌மில்லை.(வெப்பம் மிக அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்). திருச்சியில் அம்மா ம‌ல்லிகை பூவை இர‌வு குளிரூட்டியில் சேமிக்க‌ வேண்டுமென்றால் வாச‌ம் வெளியேறாம‌ல் இருக்க பிர‌த்தியோக‌ க‌வ‌ன‌மெடுத்து சேமிப்பார்க‌ள். க‌வ‌ன‌ம் குறைந்தால் ம‌றுநாள் காப்பி, இட்லி எல்லாமே ம‌ல்லிகை பூவாச‌த்தோடே ப‌றிமாற‌ப்ப‌டும். டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எப்போதும் அந்த‌ அள‌வு ம‌ண‌க்காதென்றாலும் இந்த‌ வ‌ருட‌ம் மெல்ல‌ முன‌கிய‌ப‌டி ம‌ண‌ப்பதாக,‌ ஏன் அண‌ங்குற்ற‌னை ம‌ல்லிகையே என்று கேட்டு வ‌ருந்தும்ப‌டியே இருக்கின்ற‌து.

குறிப்பு:அண‌ங்குற்ற‌னை என்ப‌து "யார் அண‌ங்குற்ற‌னை க‌ட‌லே" என்றும் குறுந்தொகையிலும் "இவ‌ள‌ ண‌ங்குற்ற‌னை போறி" என்று ஐங்குறுநூற்றிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வார்த்தை. அந்த‌ வார்த்தையால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு எழுதிய‌ ப‌திவிது. யார் கார‌ண‌மாக‌ இவ்வ‌ள‌வு "துய‌ர‌மாக‌" ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்கின்றாய் என்று குறுந்தொகையில் த‌லைவி க‌ட‌லை நோக்கி கேட்ப‌து போல‌வும், ஐங்குறுநூற்றில் த‌ன் ம‌னை விடுத்து பிற‌ரிட‌ம் போன‌ த‌லைம‌க‌னிட‌ம் த‌லைவியின் தோழி நீ யாரிட‌ம் த‌ற்ச‌மய‌ம் யார் மேல் மைய‌ல் கொண்டாயோ அவ‌ளை விட்டு நீ நீங்கி சென்றாள் தலைவியை போல் அல்லாது அவ‌ள் "துன்புற்ற‌வ‌ள்" போல பாசாங்கு ம‌ட்டுமே செய்வாள் என்று எடுத்துரைப்ப‌து போல‌வும் அமைந்த‌ பாட‌ல்க‌ள் அவை.

Friday, June 24, 2011

ஒரு வேப்ப‌ ம‌ர‌மும் வ‌ழி ம‌றிக்கும் சாலைக‌ளும்



எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மிக‌ப் பெரிய‌ வேப்ப‌ ம‌ர‌மிருக்கிற‌து. சுமார் ஒரு ஏழு வ‌ருட‌த்திற்கு முன் என‌து கை அள‌விற்கே ஒல்லியாக‌ இருந்த‌ இந்த‌ ம‌ர‌ம் த‌ற்ச‌மய‌ம் என்னை விட‌ குண்டு பெண்ணாகி விட்ட‌து. எங்க‌ள் வீட்டு மாடிக்கு மேல் வ‌ள‌ர்ந்து விட்ட‌து இந்த‌ ம‌ர‌ம். வேப்ப‌ம‌ர‌ம் வைத்த‌ கார‌ண‌மே எங்க‌ள் வீடு சாலையிலேயே அமைந்திருப்ப‌தாலும் அதில் தொட‌ர்ந்து க‌ன‌ வாக‌ன‌ங்க‌ள் புழுதியை அள்ளி இறைத்த‌ ப‌டி செல்வ‌தால் வீடு புழுதியாகி விடுவ‌தை சற்றேனும் த‌டுக்க‌லாம் என்ற‌ எண்ண‌மே.

இந்த‌ வேப்ப‌ ம‌ர‌ம் அட‌ர்ந்து வ‌ள‌ர்ந்து க‌ண்ணுக்கு எவ்வ‌ள‌வு குளுமையாக‌ இருக்கிற‌து என்று அருகிருந்து பார்ப்ப‌வ‌ர்க்கு ம‌ட்டுமே தெரியும். இடையிடையே க‌ண்ணாமூச்சி ஆடி சிரிக்கும் சூரிய‌னும் ம‌றைந்து ம‌றைந்து பொழியும் ம‌ழையும் எத்த‌னை அற்புத‌மாக‌ இருக்கும். இந்த‌ ம‌ர‌ம் சில‌ அணில்க‌ளுக்கும், ப‌ல‌ காக‌ங்க‌ள், குயில்க‌ள் ம‌யில்(எங்க‌ வீட்டுக்கே ம‌யில் வ‌ரும் ந‌ம்புங்க‌) இவ‌ற்றின் குதூக‌ல‌த்துக்கும் குர‌லுக்கும் அடித்த‌ள‌மாக‌ அமைந்திருந்த‌து.

வீட்டுக்கு முன் செல்லும் மின்சார‌ க‌ம்பிக‌ளில் வேப்ப‌ங்கிளைக‌ள் மோதுவ‌தாக‌ மின்சார‌ ஊழிய‌ர்க‌ள் வ‌ந்து இர‌ண்டு மூன்று பெரிய‌ கிளைக‌ளை வேப்ப‌ ம‌ண‌ம் ம‌ண‌க்க‌ வெட்டி சாய்த்துவிட்ட‌ன‌ர். ப‌ழைய‌ வேலைக்காரி வேப்ப‌ங்கிளைக‌ளின் மேல் க‌ண் கொண்டிருந்தாள் வெட்டிய‌து தான் தாம‌த‌ம், சில‌ரை அழைத்து வ‌ந்து வெட்ட‌ப்ப‌ட்ட‌ அத்த‌னை கிளைக‌ளையும் அள்ளிக் கொண்டு போய்விட்டாள். த‌ற்ச‌ம‌ய‌ம் வீட்டை விட்டு வெளியே வ‌ந்தால் சூரிய‌னும் ம‌ழையும் நேர‌டியாக‌ தெரிகின்ற‌ன‌.

"கூரை எரிந்து போன‌து
நில‌வு தெளிவாக‌ தெரிகின்ற‌து"

என்றொரு ஹைக்கூ க‌விதை இருப்ப‌தாக‌ கற்றதும் பெற்றதுமில் சுஜாதா எழுதியதைப் ப‌டித்திருக்கிறேன்.



வீட்டுக்கு அருகில் இருக்கும் சில‌ தெருக்க‌ளில் ம‌க்க‌ள் தா‌ங்க‌ளே அமைத்துக் கொள்ளும் வேக‌த் த‌டைக‌ளை க‌ட‌க்கும் போது என்ன‌வ‌ர் சொல்வார் "இது எல்லாம் தேசிய‌ செல‌வீன‌ம்(நேச‌ன‌ல் வேஸ்டேஜ்)". அவ‌ர் அப்ப‌டி சொல்ல‌ கார‌ண‌ம் இந்திய‌ அர‌சு அதிக‌ விலைக்கு பெட்ரோலிய‌ க‌ச்சா பொருள் வாங்கி செல‌வு செய்து பெட்ரோல் செய்து மிக‌ குறைந்த‌ விலைக்கு விற்கிற‌து. எண்ணை நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலும் அர‌சின் ந‌ட்ட‌ க‌ண‌க்கு பாக‌த்திலேயே வ‌ருகின்ற‌ன‌. அப்ப‌டி இருக்க‌ ப‌த்த‌டிக்கு ஒரு வேக‌த்த‌டை வாக‌ன‌த்தின் பெட்ரோல் செல‌வினை அதிக‌ரிக்கும். அதுவும் தெருக்க‌ளில் போட‌ப்ப‌டிருக்கும் வேக‌த்த‌டை விதிப்ப‌டி சீராக‌ கொஞ்ச‌ம் தொலைவிலிருந்து ஏறி இற‌ங்கி இருக்காது. கொக்கு மாக்காக‌ சுவ‌ர் போல் எழுப்பி இருப்பார்க‌ள் ஏறித் தான் குதிக்க‌ வேண்டும். என்ன‌வ‌ர் எண்ணை நிறுவ‌ன‌ர் ஆயிற்றே இத‌ற்காக‌ அலுத்துக்கொள்வார்.

சென்ற‌ வார‌ம் நேர்முக‌ தேர்வொன்றுக்காக‌ டெல்லி வ‌ரை செல்ல‌ வேண்டி இருந்த‌து. இந்திய‌ சாலைக‌ளில் முக்கால்வாசி குண்டும் குழியுமாக‌ வ‌ழி வார்ப்பதை விட்டு வ‌ழி ம‌றிப்ப‌தையே வேலையாக‌ கொண்டிருப்ப‌வை. அதுவும் டெல்லியின் தொட‌ர்ம‌ழை கார‌ண‌மாக‌ குண்டும் குழியும் மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌ன விழுந்து எழுந்து சென்று கொண்டிருந்தோம்‌. தெருவில் வேக‌த்த‌டைக்கே "நேச‌ன‌ல் வேஸ்டேஜ் என்பீர்க‌ளே இதை என்ன‌ சொல்வ‌து" என்றேன். இது "கொலைக்குற்ற‌த்திற்கு இணையான‌து" என்றார். ஆம் அவ‌ர் சொல்வ‌து ச‌ரி தான் அந்த‌ சாலையில் ஒரு நாளைக்கு எத்த‌னை வாக‌ன‌ங்க‌ள் க‌ட‌க்கின்ற‌ன‌? இத்தனை குண்டும் குழியுமாக‌ எத்த‌னை சாலைக‌ள் இருக்கின்ற‌ன‌? மொத்த‌ பெட்ரோலிய‌ க‌ச்சா எண்ணை இருப்பு என்ன‌? ம்ம் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் கொஞ்சமேனும் யோசிப்பார்க‌ளா அல்ல‌து காம‌ன் வெல்த் ம‌ட்டும் சேர்த்துக் கொண்டு இருப்பார்க‌ளா? அந்நிய‌ன் விக்ர‌ம் போல் யாராவ‌து வ‌ந்தால் தான் என் தாய்த்திரு நாட்டை காக்க‌ முடியும். ஹூம்ம்ம்ம்.

Friday, September 24, 2010

மல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாராக‌)
















எங்க‌ வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகைக‌ள் ச‌ற்றே பெரிய‌ குண்டு ம‌ல்லிகைக‌ள். பார்க்க‌ வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல‌ இருக்கும். என‌க்கு சிறு வ‌ய‌திலிருந்தே ம‌ல்லிகைப் பூ மேலே தீராத‌ காத‌ல். திருவ‌ர‌ங்க‌த்தில் இருந்த‌ நாட்க‌ளில் மென‌க்கெட்டு பூ மார்கெட் போய் ம‌ல்லிகைப் பூவை உதிரியாக‌ வாங்கி நெருக்க‌மாக‌ தொடுத்து, த‌லை நிறைய‌ வைத்துக் கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

என‌க்கு ம‌ல்லிகைப் பூ நிற‌ம்ப‌ பிடிக்கும் என்ற கார‌ண‌த்தால் ம‌ல்லிகை ப‌திய‌னிட்டு மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் வ‌ள‌ர்க்க‌‍ப்ப‌டுகின்ற‌ன‌ என் வீட்டில். தினம் காலையில் கிள‌ம்பும் போது தோட்ட‌த்தை வாஞ்சையோடு பார்ப்ப‌தை த‌விர‌ நான் வேறு எதுவும் செய்வ‌தில்லை அந்த‌ ம‌ல்லிகைச் செடிக‌ளுக்காக‌. தோட்ட‌த்தில் ம‌ல்லிகை ம‌ட்டும் அல்லாது நிறைய‌ ரோஜா செடிக‌ளும் ஒரு வேப்ப‌ ம‌ர‌மும், ஒரு சில‌ வாழை ம‌ர‌ங்க‌ளும், ஒரு ந‌ந்தியாவ‌ட்டை செடியும் இருக்கின்ற‌து. இருந்தாலும் ம‌ல்லிகையின் ப‌சுமையும் அடுத்த‌ப‌டியாக‌ வாழையுமே என்னை எப்போதும் க‌வ‌ரும்.

மார்ச் முடிந்து ஏப்ர‌ல் மாத‌ம் ஆர‌ம்பிக்கும் த‌ருண‌ம் என‌க்கு மிக‌ பிடித்த‌ கால‌ம். எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ளலும் ஒரு சில‌ ம‌ல்லிகை மொக்குக‌ளை த‌ர‌ ஆர‌ம்பிக்கும். முத‌லில் ஒன்று இர‌ண்டாக‌ ஆர‌ம்பித்து, மே மாத‌த்தில் த‌லை நிறைய‌ வைத்துக் கொள்ளும் அள‌வு பூக்கும். அதை சாயுங்கால‌ம் ப‌றித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வ‌து என் தின‌ப்ப‌டி செய‌ல்.(இங்கே ம‌க‌ளிர் த‌லையில் பூக்க‌ளை பெரும்பாலும் அணிவ‌தில்லை)

"ஏங்க‌ ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க‌ போச்சு?"

"இரு வ‌ரேன்"

வ‌ந்து விள‌க்கை போட்டார். அத‌ற்குள் என‌க்கு பூக்குத்தி கிடைத்து விட்ட‌து.

"பாரு ஒரு ஏர்பின் தேட‌ கூட‌ நான் தான் வ‌ர‌ வேண்டி இருக்கு"

"என்ன‌வோ ஒரு ஏரோபிளேனேயே தேடி த‌ந்த‌ மாதிரி சொல்லீங்க‌ ம்ம்ம்"

"ச‌ரி வெட்டியா பேச்சு தான் டிப‌ன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் ப‌ண்ண‌ முடியும்"

"அதுக்கு தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே வெட்டியா அப்ப‌ற‌ம் இன்னோரு ஆளை வேற‌ அப்பாயிண்ட் ப‌ண்ண‌னுமா?"

கிள‌ம்பி சீருந்தில் கொஞ்ச‌ தூர‌ம் சென்ற‌ இருப்போம். நான் எங்கே என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌த்தை பிடிப்பேனோ அதே இட‌த்தில் த‌ன் அலுவ‌ல‌க‌த்து வாக‌ன‌தை பிடிக்க‌ வேண்டி செல்லும் எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிப்ப‌வ‌ரை தின‌ம் ஏற்றி செல்வ‌து போல் இன்னும் ஏற்றி சென்றோம்.

"குட் மார்னிங் ஜி"

"குட் மார்னிங் கத‌வு சரியாக‌ மூட‌வில்லை மூடி விடுங்க‌ள்"

"எங்க‌ வீட்டு பைய‌ன் க‌ல்யாண‌ ரிசப்ச‌னில் உங்க‌ போட்டோ அழ‌கா வ‌ந்திருக்கு"

"ஓ அப்ப‌டியா?"

"ஆம் அப்ப‌ மேட‌ம் இங்கே இல்லையா என்ன‌?"

"ஆமா அவ‌ங்க‌ அப்ப‌ வெளிநாடு போயிருந்தாங்க‌."

"ஓ அப்ப‌டியா எங்கே..."

அவ‌ர்க‌ள் உரையாட‌ல் நீண்ட‌து. நான் கிடைத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தினேன்.

ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர் இற‌ங்கிய‌தும்

"பாரு அவ‌ர் சொல்றாரு நான் போட்டோல‌ அழ‌கா இருக்கேனாம்"

"சும்மா தின‌ம் வ‌ண்டில‌ வ‌ரோமே ஏதாவ‌து புக‌ழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்க‌ற‌து தானே வ‌ரும் போட்டோல‌"

"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழ‌கு அதான் அவ‌ரும் சொல்றாரு"

"அவ‌ருக்கு என்ன‌ அவ‌ரா உங்க‌ளை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி இருக்காரு அந்த‌ கொடுமைய‌ நான் இல்லை ப‌ண்ணி இருக்கேன்"

"ப‌க்க‌த்துல‌ இருக்க‌ பொருள் எப்போதுமே தெரியாது."

"அதுக்கு பேரு தூர‌ப் பார்வை என் பார்வை ச‌ரியா இருக்குன்னு டாக்ட‌ரே ச‌ர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க‌ தான் இந்த‌ ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்க‌ல் செக்க‌ப் கூட்டிட்டு போனீங்க‌"

அத‌ற்கும் என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌ம் வ‌ந்து விட்ட‌து.

*******















சில‌ நாட்க‌ளுக்கு முன் ஒருவார‌ இறுதியில் வெளியே கிள‌ம்ப‌ த‌யாரா இருந்தோம்...

"இன்னிக்கி வெளில‌ சாப்பிட்டு அப்ப‌டியே சூப்ப‌ர் மார்க்கெட் போய் உங்க‌ ஆபிஸ்ல‌ கொடுத்த‌ சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து ம‌ளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வ‌ர‌லாம்"

"சாப்பிட‌ போக‌லாம் ஆனா சூப்ப‌ர் மார்கெட் எல்லாம் வ‌ர‌ முடியாது"

"அதுக்காக‌ த‌னியாவா போக‌ முடியும் அப்ப‌டியே போயிட்டு வ‌ந்திருலாம்"

"நான் வ‌ர‌லை. சாப்பிட‌ ம‌ட்டும்ன்னா வேணும்ன்னா வ‌ரேன்"

"எங்கேயும் போக‌ வேண்டாம் என‌க்கு உன் கூட‌ சாப்பிட‌ போக‌ பிடிக்க‌லை"

இத‌ற்கு மேல் அங்கே அம‌ர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாத‌ம் தான் வ‌ள‌ரும் என்று கோப‌த்தோடு வெளியே வ‌ந்தேன். தோட்ட‌த்தில் இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ முத‌ல் ம‌ல்லிகை ம‌ல‌ர்ந்திருந்த‌து. ப‌றித்துக் கொண்டு உள்ளே வ‌ந்தேன். ம‌ண‌ம் அதில் ம‌ன‌ம் லயிக்க‌...

"ஹ‌லோ சொல்லுங்க‌ மோக‌ன்"

"இன்னிக்கா... கொஞ்ச‌ம் டைய‌ர்டா இருக்கு"

"எங்க‌ போக‌ணும்"

"ச‌ரி இருங்க‌ கேட்டு சொல்றேன்"

"மோக‌ன்ட‌ இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போக‌ணுமாம் அவ‌ருக்கு. அப்ப‌டியே சாப்பிட்டு வ‌ந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிள‌ம்பி தானே இருக்க‌. போயிட்டு வ‌ந்திருலாம்"

தோட்ட‌த்து முத‌ல் ம‌ல்லிகை என்னை பார்த்து புன்ன‌கைத்த‌து.

Sunday, June 24, 2007

கூடிடு கூடலே

நாச்சியார் திருமொழியின் ஐநூற்றி மூப்பதி நான்காம் பாடலின் ஆரம்பித்து வரும் பத்து பாடல்களில் ஆண்டாள் கூடல் இழைத்து பார்த்து கண்ணன் தன்னை மணப்பான் என்று மணம் தேற்றிக் கொள்வாள். கூடல் இழைப்பதென்பது, கை நிறைய மஞ்சள் கிழங்குகளை அள்ளி எடுத்து அவற்றை இரண்டிரண்டாகச் சேர்த்து இரட்டையாகச் சேர்ந்தே வருகின்றனவா கடைசியில் ஒற்றையாக ஒன்று தனித்து நிற்கிறதா என்றுப் பார்ப்பது தான். இரட்டையாக வந்தால் எண்ணம் கை கூடும்; நினைத்தது நடக்கும் என்று மனம் தேறலாம்.

"திருமாலிருஞ்சோலை வாழ் என் மணாளனார் பள்ளி கொள்ளும் போது அவர் கால்களை நான் வருடிடும் பேறு கிட்டுமா", "வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வானா", "வசுதேவரின் இளவரசன் வருவானென்றால் ","காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால்", "குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில்", 'கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில்", "கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில்", "நிலவுலகத்தையும் அண்டங்களையும் ஒவ்வொரு அடியால் அளந்து தன் உரிமையாய்க் கொண்டவன் வருவானெனில்", ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில்" கூடிடு கூடலே என்று கூறி கூடல் இழைக்கின்றாள் கோதை. அத்தனை முறையும் கூடல் கூடியே வருகின்றது.

இது ஒரு வகை மாய விளையாட்டு. இதை போன்ற பல நிகழ்வுகளை சகுனமாக கொண்டு இருக்கின்றேன் நான் என் வாழ்வில். நான் தினமும் மல்லிகை தொடுக்கும் முன் ரங்கனை வேண்டி சில விசயங்களை நினைத்த படி கூடிடுவாயோ கூடலே என்றபடியே மல்லிகை மலர்களை தொடுப்பது வழக்கம். தோழி சீக்கிரம் வேலை கிடைக்குமா? மல்லிகை தொடுத்து முடிக்கையில் இரட்டைபடையாக வந்திருந்து. இன்னுமொரு நண்பரின் இல்வாழ்கையில் பிணக்கு, அது சரியாக கூடிடு கூடலே என்ற போது கூடல் கூட்டிற்று. இன்னும் பலருக்காக பல விசயங்களை இப்படி நினைத்து கூடல் இழைக்கும் போது பெரும்பாலும் கூடியே வரும்.

அடிக்கடி ரிங்டோன் மாறி கொண்டே இருப்பார். இந்த முறை கூப்பிடும் போது "உனை நான் உனை நான்" பாட்டு இருந்தால், அம்மாவோட சண்டை போட்டு கொண்டு இருக்கும் பக்கத்து வீட்டுகாரன் சரி ஆவான் என்று நினைத்தேன். அவரை கூப்பிட்ட போது "உனை நான் உனை நான் கண்ட முதல்" என்ற பாட்டே ஒலித்ததது. அவரிடம் அம்மாவின் பிரச்சனையை சொன்னேன். வழக்கு பதிந்து அந்த பக்கத்து வீட்டுக்காரர் பண்ணிய அட்டகாசத்திற்கு ஒரு நீதி வாங்கி தந்தார். பணி இடத்தில் மிக அதிக தொல்லை இருந்தது. வேறு வேலையும் கிடைக்கவில்லை, எப்போதும் வெகு அரிதாக வரும் ஒரு பேருந்துக்காக காத்திருந்தேன். அந்த பேருந்து உடனே வந்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்து முடிக்கும் முன்னமே அந்த பேருந்தும் வந்தது, உடனே வேறு அலுவலகத்தில் வேலையும் கிடைத்தது.

இதை போல் ஆயிரம் விசயங்கள் சகுனங்களை நம்ப அது நடந்திருக்கின்றது. மனம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. எதை ஒன்றையும் மிக வேண்டினாலோ, மனமாற நினைத்தாலோ அது கண்டிப்பாக நடக்கும். சகுனங்கள் எல்லாமே மனதின் திடமும் சக்தியுமே. அப்படி தான் ஆண்டாள் கூடிடு கூடலே என்று கூறி கூடல் இழைத்தது. அந்த பத்து பாடல்களும் முத்து பாடல்கள்.

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ


ம‌ல்லிகை இந்த‌ பெய‌ருக்கே அப்ப‌டி என்ன‌ ஒரு ம‌ய‌க்கும் குண‌ம். ம‌ல்லிகை இந்த‌ பெய‌ர் கேட்டாலே ஏன் மல‌ர்ந்த‌ அத‌ன் அழ‌கும், ம‌ன‌ம் அப்பிக்கொள்ளும் ம‌ண‌மும் நினைவுவில் வ‌ருகின்ற‌து. முன்னொரு ப‌திவில் சொல்லி இருந்த‌ப‌டி, என‌க்கு ம‌ல்லிகை என்றால் கொள்ளை பிரிய‌ம். என் வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகையை அழ‌காக‌ நெருங்க‌ தொடுத்து எடுத்து த‌லையில் சூடிக் கொள்வ‌து என் தின‌ப்ப‌டி வேலை. உண‌வு உண்ப‌தை கூட‌ சில‌ வேளை ம‌ற‌ப்ப‌துண்டு ஆயினும் ம‌ல்லிகை தொடுப்ப‌தையோ அதை சூடிக்கொள்வ‌தையோ ம‌ற‌ப்ப‌தில்லை.

அலுவ‌ல் கார‌ண‌மாக‌ நேர‌ம் சென்று வீடு திரும்பினால் கூட‌ இருண்ட‌ இர‌விலும் விள‌க்கொளியின் உத‌வியோடு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை கொய்து எடுத்து மாலையாக்கி கொள்வ‌து என் விடாத‌ ப‌ணி. அதுவும் ஒரு ம‌ல‌ர் கூட‌ செடியில் விடாது கொய்து கொள்வ‌தென் வ‌ழ‌க்க‌ம். க‌ண‌வ‌ர் தின‌ம் கூறுவார் சில‌ ம‌ல‌ர்க‌ளை ம‌ட்டுமாவ‌து விட்டு செல், அல்ல‌து நீ தொடுக்கும் மாலையில் சிறிதேனும் தின‌ம் ர‌ங்க‌னுக்காவ‌து இட்டு செல் என்று. ஆயினும் அவ‌னோ நானோ வேறுவேறு அல்ல‌ர், யாமும் அவ‌னும் ஒன்றே என்றெண்ணி நானே சூடிக்கொள்வ‌து வ‌ழ‌க்கம். இருப்பினும் என் வீட்டு ம‌ல்லிகை செடிக‌ள் ச‌ற்றே குறும்பான‌வை என‌க்கு தெரியாம‌ல் சில‌ ம‌ல‌ர்க‌ளை காலையில் அவ‌ர் கையால் ர‌ங்க‌னுக்கு சூட‌ த‌ன்னோடு ம‌றைத்து வைத்துக் கொள்ளும்.

சரி இப்ப‌டியாக‌ ம‌ல்லிகை என‌க்கு ம‌ட்டுமல்ல‌ ஏனைய‌ர்க்கும் பிடிக்கும். ந‌ம்மாழ்வார் த‌ன்னை நாயகியாக‌(உல‌கில் பெருமாள் ஒருவ‌னே ஆண்ம‌க‌ன் என்ப‌து வைண‌வ‌ர் ஐதீக‌ம்) உருவ‌கித்து கொண்ட‌துமே ம‌ல்லிகைக்கு ம‌ய‌ங்க‌ ஆர‌ம்பிக்கின்றார் பெண் போல‌வே. தென்ற‌ல் த‌ட‌வுகின்ற‌தாம் அவ‌ர் மேனியை அதுவும் ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ள் நிறைந்த‌ வ‌ன‌த்தில் இருந்து வ‌ரும் தென்ற‌ல். அட‌டா பாருங்க‌ள் என்ன‌வொரு ர‌ச‌னை இந்த‌ ம‌னித‌ருக்கு. அந்த‌ தென்ற‌ல் த‌ட‌வுத‌ல் இவ‌ர் மேல் தீயிட்டு கொளுத்துவ‌து போல் இருக்கின்ற‌தாம்.

மேலும்

இனிமையான குறிஞ்சி இசை இனிமையானதாக இல்லை, அந்தி சாயும் அழகிய மாலை நேரமும் என்னை மயங்கச் செய்கிறது. செவ்வான மேகங்கள் என் உடலைச் சிதைப்பது போல் உள்ளன. அன்றலர்ந்த தாமரை போன்ற கண்களை உடைய கண்ணபெருமான், ஆயர்குலத்து ஆண்சிங்கத்தை ஒத்த என் மாயவனின் பிரிவுத்துயரால என் மார்புகளும், தோள்களும் விம்ம புகலிடம் தெரியாத பேதையாக தவிக்கின்றேன்.

ஆஹா ஆஹா... என்ன‌ ஒரு காத‌ல் பாருங்க‌ள்.

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ
அல்லியந் தாமரைக் கண்ணன்
எம்மான்ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ

ந‌ம்மாழ்வார் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம்.