Monday, September 24, 2012

ஏன் அண‌ங்குற்ற‌னை?ம‌ல்லிகைக்கும் என‌க்கும் மிக‌ அழ‌கான‌ பொருத்த‌முண்டு. சில‌ நிக‌ழ்வுக‌ள் வாழ்வில் ம‌ல்லிகையோடு பிணைத்து க‌ட்டி என்னை இழுத்து சென்ற வ‌ண்ண‌மிருக்கிற‌து. ஓரிரு மாத‌ங்க‌ளுக்கு முன் என் உற‌வின‌ர் இல்ல‌ திரும‌ண‌த்தில் எதிர்பார்த்த‌ அள‌வு ம‌ரியாதை கிடைக்காம‌ல் நான் சற்றே அண‌ங்குற்றிருந்த‌(துன்ப‌முற்றிருந்த‌) நேர‌ம். உற‌வின‌ர் வீட்டிக்கு செல்லும் முன்ன‌மே என் த‌லையில் கொஞ்ச‌ம் ம‌ல்லிகை இருந்த‌து. உற‌வுப் பெண் என‌க்கு இறுவாச்சி ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கொடுத்து உப‌ச‌ரித்தாள். நான் வேண்டாமென்றேன். இறுவாச்சி ம‌ல்லிகை திருச்சிக்கார‌ர் அனைவ‌ர்க்கும் பிடிக்கும் என்னை தவிர‌. இறுவாச்சி பார்க்க‌ குண‌மாக‌ இருக்காது(க‌ர‌டுமுர‌டாக‌ இருக்கும்) ஆனால் குண்டு ம‌ல்லியை விட‌ ரொம்ப‌ செரிவாக‌ ம‌ண‌க்கும். அதுவும் அந்த‌ பெண் கொடுத்த‌ ச‌ர‌ம் ஏக்கு மாக்காக‌ தொடுக்கப்பட்‌டிருந்த‌து. பார்க்க‌ நேர்த்தியாக‌ கூட‌ இல்லை. வேண்டாமென்றேன். நான் கொஞ்ச‌ம் துய‌ர‌மாக‌ இருந்த‌து என் அக்காவிற்கு ம‌ட்டும் தெரியும். அத‌ன் கார‌ண‌மாக‌ ம‌றுக்கிறேன் என்றும் என்னை த‌வ‌றாக‌ நினைப்பார்க‌ள் என்றும் வ‌ற்புறுத்த‌ என்று அதையும் வைத்துக் கொண்டேன். ஆனால் ம‌தியாதார் வாச‌லென்றால் ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கூட‌ அண‌ங்குற‌ செய்யும் போலும்.எங்க‌ள் வீட்டுத் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகைப்புத‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. அனைத்தும் அடுக்கு குண்டு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை அள்ளி அள்ளி த‌ருப‌வை. ஒவ்வொன்றும் சின்ன‌ ரோஜாப்பூ போல‌ இருக்கும். இங்கே டெல்லி வாழ் ம‌க்க‌ள் யாருமே ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை தொடுத்து த‌ங்க‌ள் த‌லையில் சூடுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் வீட்டில் எத‌ற்கு ம‌ல்லிகை ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்கின்றார்க‌ள் என்றே தெரியாது. கேட்பார் எவ‌ருமின்றி அவையும் தாம் பாட்டுக்கு ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் வீசி ம‌ண்ணில் வீழும். இந்த‌ கார‌ண‌த்தினால் டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எல்லாமே அண‌ங்குற்ற‌து போலும். இந்த‌ வ‌ருட‌ம் ம‌ல‌ரும் எந்த‌ மல்லிகை ம‌ல‌ரிலும் அந்த‌ அள‌விற்கு ம‌ண‌மில்லை.(வெப்பம் மிக அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்). திருச்சியில் அம்மா ம‌ல்லிகை பூவை இர‌வு குளிரூட்டியில் சேமிக்க‌ வேண்டுமென்றால் வாச‌ம் வெளியேறாம‌ல் இருக்க பிர‌த்தியோக‌ க‌வ‌ன‌மெடுத்து சேமிப்பார்க‌ள். க‌வ‌ன‌ம் குறைந்தால் ம‌றுநாள் காப்பி, இட்லி எல்லாமே ம‌ல்லிகை பூவாச‌த்தோடே ப‌றிமாற‌ப்ப‌டும். டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எப்போதும் அந்த‌ அள‌வு ம‌ண‌க்காதென்றாலும் இந்த‌ வ‌ருட‌ம் மெல்ல‌ முன‌கிய‌ப‌டி ம‌ண‌ப்பதாக,‌ ஏன் அண‌ங்குற்ற‌னை ம‌ல்லிகையே என்று கேட்டு வ‌ருந்தும்ப‌டியே இருக்கின்ற‌து.

குறிப்பு:அண‌ங்குற்ற‌னை என்ப‌து "யார் அண‌ங்குற்ற‌னை க‌ட‌லே" என்றும் குறுந்தொகையிலும் "இவ‌ள‌ ண‌ங்குற்ற‌னை போறி" என்று ஐங்குறுநூற்றிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வார்த்தை. அந்த‌ வார்த்தையால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு எழுதிய‌ ப‌திவிது. யார் கார‌ண‌மாக‌ இவ்வ‌ள‌வு "துய‌ர‌மாக‌" ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்கின்றாய் என்று குறுந்தொகையில் த‌லைவி க‌ட‌லை நோக்கி கேட்ப‌து போல‌வும், ஐங்குறுநூற்றில் த‌ன் ம‌னை விடுத்து பிற‌ரிட‌ம் போன‌ த‌லைம‌க‌னிட‌ம் த‌லைவியின் தோழி நீ யாரிட‌ம் த‌ற்ச‌மய‌ம் யார் மேல் மைய‌ல் கொண்டாயோ அவ‌ளை விட்டு நீ நீங்கி சென்றாள் தலைவியை போல் அல்லாது அவ‌ள் "துன்புற்ற‌வ‌ள்" போல பாசாங்கு ம‌ட்டுமே செய்வாள் என்று எடுத்துரைப்ப‌து போல‌வும் அமைந்த‌ பாட‌ல்க‌ள் அவை.

சொல் உதிர்க்கும் விரல்கள்

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன

-வா. மணிகண்டன்

சுந்த‌ர‌ ராம‌சாமி க‌விதைக‌ள்

உறவு
-------

உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.

- சுந்தர ராமசாமி

இந்த வாழ்க்கை
---------------

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர
நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை

- சுந்தர ராமசாமி

Tuesday, January 24, 2012

படித்தது பிடித்தது - கலாப்ரியாவின் "வனம் புகுதல்"


க‌லாப்ரியாவின் வ‌ன‌ம் புகுத‌ல் ச‌மீப‌மாக‌ வாசித்தேன். பல‌ க‌விதைக‌ள் மிக‌வும் பிடித்திருந்தது. வ‌ன‌ம் புகுத‌ல் க‌விதை தொகுப்பில் நான் ர‌சித்த‌ சில‌வ‌ற்றை ப‌கிர்ந்து கொள்கிறேன்.

//துணைத் த‌லைப்புக‌ளையே
பார்த்துக் கொண்டிருந்த‌தில்,
வாசிக்க‌ முய‌ன்று தோற்ற‌தில்,
ப‌ட‌விழா சினிமாவின்
மற்ற ந‌ல்ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளை
த‌வ‌ற‌விட்ட‌து போல்

ந‌ம் ச‌ந்திப்பு
நிக‌ழாம‌ல் போன‌து
நாம் ச‌ந்தித்த‌ அன்று//

என்ற இக்க‌விதை மனதில் அழுத்தமாக ப‌திந்த‌து. ப‌ல‌ எதிர்பார்ப்புக‌ளோடு சிலரை ச‌ந்திக்க‌ச் செல்கிறோம். ஆயினும் அந்த‌ ச‌ந்திப்பு ந‌ம் எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிடினும் ஒரு அவ‌ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்கும் வித்தாக‌ ஆகிவிடுவதுண்டு அல்ல‌து எதிர்ப்பார்த்தை விட‌ மிக‌ ப‌ல‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள் நடந்துவிட்டிருக்க‌லாம். இவ்விரு ச‌ம‌ய‌ங்க‌ளிலும் ச‌ந்திக்கும் நேர‌ம் ச‌ந்திப்பு நிகழ்வ‌தில்லை. துணைத்த‌லைப்பு என்ற‌ க‌விதை த‌லைப்பும் அந்த‌ உவமானமும் அழ‌கு.

‘விதை‘ என்ற‌ ம‌ற்றுமொரு க‌விதையில், எதையாவ‌து க‌ற்று த‌ரும் நண்பர்களோ, க‌தை சொல்லி பாட்டிக‌ளோ, நீச்ச‌லோ இன்ன பிற‌வோ க‌ற்றுத் தந்த‌வ‌னை அந்த‌ந்த‌ விச‌ய‌ங்க‌ள் செய்யும் போது நினைத்து பார்ப்ப‌தில்லை. எதையும் க‌ற்று த‌ராத‌, காத‌லிக்க‌ கூட‌ செய்யாத‌ நீ க‌விதையின் முற்றுப்புள்ளிக்கு பின் க‌ண்ணீர்ச் சொட்டாக‌ ஏன் இருக்கின்றாய் என்று வின‌வும் இவ‌ருக்கு க‌விதைக‌ளை த‌ந்த‌வ‌ள் அவ‌ள் என்ப‌தே என் விடையாகும்.

//ச‌ந்தேக‌மே இல்லை அதே தீக்கோல் தான் அருகில் கிட‌ந்த‌து//

ருசி என்ற‌ கவிதையில் மேல் வரும் வரிகளை சொல்லி இருக்கின்றார். அதில் இறந்தவ‌ளையும் வெட்டியானையும் அவ‌ன் பிண‌மெரிக்க‌ உத‌வும் தீக்கோலையும் ம‌ட்டும் பேச‌வில்லை. ம‌னித‌னுக்குள் எப்போதுமிருக்கும் மரணம் என்ற‌ ப‌ய‌த்தை ஒரு விர‌த்தியை பேசுகின்ற‌து. "காய‌மே இது பொய்யடா" என்ற‌ ப‌ட்டின‌த்தார் வ‌ரிக‌ளை நினைவூட்டிய க‌விதையிது. “அதே தீக்கோல் தான் என‌க்கும்“ என்று சொல்கிற‌து.

தொகுப்பின் த‌லைப்பில் வ‌ந்திருக்கும் க‌விதை ம‌ன‌தை அள்ளும் வண்ணமிருக்கின்ற‌து. உவ‌மைக‌ள் கிட்டாம‌ல் க‌விதை எழுத‌ முடியாத‌ வேதனையை ஒரு ம‌ர‌த்தில் பூக்க‌ள் உதிர்த‌லோடு ஒத்திருப்ப‌து அழ‌கு.

//கிளைக‌ள் மாறிக்கொண்டன
வேர்களில்
வேறு வேறு என்ற
பிரக்ஞையில்லாமல் //

என்று அன்பை, பிரிய‌ம் ப‌ல‌ரிட‌ம் வ‌ள‌ர்வ‌தை ஒரு குறியீடாக‌ சொல்லி இருக்கின்றார்.

//ஒரு தீக்குச்சி
கிழிப்ப‌து போல‌
வாக்க‌ளிப்ப‌து போல்
அம்புகுறி வரைவ‌தெளிது//

என்று தொட‌ங்கும் இந்த‌ க‌விதையில் நாட்டின் வ‌ன்முறையை இல‌ங்கை போன்ற‌ இட‌த்தில் ந‌ட‌ந்த‌ வ‌ன்முறையை அனாய‌சிய‌மாக‌ சொல்லியிருக்கின்றார். ராம‌ ஜென்ம‌ பூமி போன்ற‌ இட‌த்தில் அம்பு குறிக‌ளை ஆயுத‌மென‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ கூடும் என்று சொல்லுமிட‌த்தில் ந‌ம் ப‌க்தி எதை நோக்கி என்ற‌ சிந்த‌னை விளைக்கின்ற‌து.

“ஒரு நாள்“ என்ற‌ க‌விதையில் ம‌னித‌னின் நினைவுக‌ளை ஒரு புதிய‌ ஊரில் விசால‌ம் தேடிய‌ ப‌டி ப‌ஸ்ஸிலிருந்து இற‌ங்கும் அன்னிய‌ன் போல‌ என்ற‌ வித்தியாச‌மான‌ உவ‌மையை கூறி இருக்கின்றார். “வீதி விளக்குகள்” கவிதையில் நிழலுக்கு வெற்று கையில் வீடு திரும்புவன் என்ற வேறுபாடு இல்லை என்று வித்தியாசமான சிந்தனையை சொல்லி இருக்கின்றார். பிர‌ம்ம‌ராஜ‌னுக்கு என்று எழுதி இருக்கும் சில‌ க‌விதைக‌ள் புரிய‌ க‌டின‌மாக‌ இருக்கின்ற‌ன‌. அந்த‌ கவிதைக‌ளில் “எவ‌ற்றின் ந‌ட‌மாடும் நிழ‌ல்க‌ள் நாம்” என்ற‌ வாக்கிய‌ம் என்னை மிக‌ க‌வ‌ர்ந்த‌து. அதே போல் க‌தை என்ற‌ த‌லைப்பிட்ட‌ க‌விதையில் சொன்ன‌பின் க‌தை யாருக்கு சொந்த‌ம் என்கின்றார். மிக‌ அழ‌மான‌ சிந்த‌னை இது. க‌தை மட்டும் அல்ல‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌, ஏன் வெளி உல‌க‌த்திற்கு வ‌ந்துவிட்ட‌ எந்த‌ விசய‌மும் நாமே ந‌ம‌க்கு ம‌ட்டும் தான் சொந்த‌மா என்ன‌?

மேலும் வனம் புகுதல் கவிதை தொகுப்பில் இரண்டு இடத்தில் இரண்டு வேறு வேறு கவிதைகளில் ஒரே விதமான வரிகளை சொல்லி இருவேறு கருத்தை உணர்த்தி இருக்கின்றார். இதுவரை படித்திருக்கும் எந்த தொகுதியிலும் இந்த வித நுட்பத்தை நான் கண்டதில்லை. “தெரு விளக்கு” மற்றும் “வீதி விளக்குகள்” என்ற கவிதையில் ஒரே விதமான வரிகளை பொதுவாக உபயோகபடுத்தி வேறு வேறு கருத்தை சொல்லி இருக்கின்றார். அதே போல் “தொடர்பிலி” மற்றும் “முக வரி” கவிதையிலும் பொதுவான வரிகளில் வேறு கருத்து வருமாறு சொல்லி இருக்கின்றார்.

இறுதியாக‌ ஒரு அழ‌கான‌ க‌விதை. “திணைம‌ய‌க்க‌ம்“ என்ற‌ இந்த‌ க‌விதையை நான் விக‌ட‌னில் 75 முத்திரை க‌விதைக‌ள் இணைப்பில் 2001 ம் ஆண்டு படித்தேன். அந்த‌ தொகுப்பில் என்னை மிக‌ க‌வ‌ர்ந்த‌ க‌விதையில் இதுவும் ஒன்று ஆகும். ஒரு பேருந்து ப‌ழுதாகி ம‌ர‌த்த‌டியில் நிற்கிற‌து. குழ‌ந்தைக‌ள் தயங்கி த‌ய‌ங்கி பேருந்தில் ஏறி பின் த‌ய‌க்கும் நீங்கி அந்த‌ பேருந்தில் விளையாடுக்கின்றார்க‌ள். ச‌ற்று நேர‌த்துக்கு பின் அந்த‌ பேருந்து ச‌ரி செய்யப்பட்டு சென்று விடுகின்ற‌து. அதிலிருந்து வெளியேறிய‌ டிச‌ல் ஒரு கறையை க‌ண்டு ம‌ர‌ம் குழ‌ம்பி நிற்ப‌து போல‌ இருக்கின்ற‌து அந்த‌ க‌விதை. இங்கே ம‌ர‌ம் குழ‌ம்பிய‌து என்ப‌து அழ‌கான‌ ப‌டிம‌ம். அந்த‌ டிச‌ல் சுவ‌ட்டை பேருந்தின் நிழ‌ல் என‌ நினைத்து ம‌ர‌ம் ம‌ய‌ங்கிய‌து என்றும், பேருந்து போய்விட்டதால் குழந்தைக‌ளையும் பிரிந்துவிட்டோம் ஏக்க‌த்தையும், அந்த‌ நிக‌ழ்வு விட்டு சென்ற‌ சுவட்டை நினைத்திருந்த‌ப‌டியும் என்று ப‌ல‌விச‌ய‌ங்க‌ளை சொல்லி போகிற‌து இந்த‌ க‌விதை.

இத்தொகுப்பிற்கு சுகுமார‌ன் எழுதியிருக்கும் முன்னுரை மிக‌ வ‌சீக‌ர‌மாக‌ இருந்த‌து. அதில் க‌லாப்ரியாவின் முந்தைய‌ க‌விதைத் தொகுப்பின் வந்த ஒரு கவிதையாக சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டு இருந்த ஒரு கவிதை என்னை மிக‌வும் பாதித்த‌து. ஆண்டாள் திருப்பாவையில் த‌ன் தோழிகளை அழைத்துக் கொண்டு க‌ண்ண‌னை காண‌ செல்வாள். எம்பாவாய் என்ப‌து திருப்பாவையில் வரும் ஒரு ம‌ந்திர‌ம் போல் ஒரு சொல் அந்த‌ சொல்லை த‌லைப்பாக‌ வைத்து, நக‌ர்புற‌த்தில் குடிசைவாழ் பெண்ணொருந்தி காலைக்க‌ட‌னை க‌ருக்க‌லில் செல்வதை எழுதி இருப்ப‌து மிக‌வும் வருத்தத்திற்குரியது.