Tuesday, December 1, 2015

நீளா


மிக சமீபத்தில் வாசித்ததில் என் கவனத்தை ஈர்த்த கவிதை தொகுப்பாக இருந்தது காலச்சுவடு வெளியீடான "நீளா". 

இந்த தொகுப்பின் ஆசிரியர் பா.வெங்கடேசன். மதுரையில் பிறந்து, ஒசூரில் வாழ்பவர் இவருக்கு ஒசூர் மற்றும் ஒசூரை ஒட்டியுள்ள கர்நாடகத்தின் பல நில காட்சிகள், வரலாற்று காட்சிகள் மீது அவர் கொண்ட ஆழ்காதல், அவற்றை எல்லாம் தன் கவிதைக்குள் கையாள செய்திருக்கிறது. கல்லுகொண்டபள்ளி மலையின் பொட்டத்தம்மன், அங்கே இருக்கும் ஒரு குன்று, கர்நாடக கொல்லூரின் நதி சௌபர்ணிகா, ஒசூரில் இருக்கும் சூடவாடிக் குன்று, ஒசூரில் திருவாளர் ப்ரெட் தன் மனைவிக்காக கருவூலத்தை கொள்ளையடித்து கட்டிய பங்களா, ஒசூரின் மிக அருகிலிருக்கும் ஆனேகலில் முத்துக்களின் பள்ளத்தாக்கு என்று பல இடங்கள், வரலாற்று, புராண சின்னங்கள் இவர் கவிதையின் பாடு பொருளாகின்றன.

பாப்லோ நெரூடா, ஓரான் பாமுக் போன்ற அயல் தேசத்து இலக்கிய ஆளுமைகள் இவர் மனிதில் நெருக்கமான இடம் பிடித்திருக்க வேண்டும். இந்திய மண்ணில் தனது காதலியுடனோட ஒரு அனுபவத்தை "போஸ்ட் மேன்" என்ற பாப்லோ நெரூடாவின் மழை நாள் வாழ்வை சித்தரிக்கும் ஒரு உலகப்படத்துடன் ஒப்பிட்டு எழுதி இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. இந்த கவிதையில் மழையை காதல் அல்லது காதலின்மையின் ஏக்கமென்ற குறிப்பாக பார்க்க முடியும். கவிதையின் முன்பாதியையும் ( (மழை வரும் சூழல் இல்லாமல் மழை தூறுகிறது ), பின்பாதியையும் ( மழை பொழிந்து முடித்த தடயங்கள் இருக்கிறது ) இணைக்கும் ஒரு குறியீடு அனுமதி மறுக்கப்பட்ட/மூடிக்கிடக்கும் அரங்கம். அந்த அரக்கின் முன் நினைவுகளால் அலைக்கலிக்கப்பட்டு தத்தளிக்கும் காதல் மனம். இந்த தவிப்பை நிர்பந்தத்தை, கவிதையின் இடைப்பட்ட வரிகளாக வரும் “காதலிக்காக ஒரு கடிதம் எழுத முற்படும் தபால்காரனை / நிலவின் முழு வட்டத்தை மட்டுமே வரையச் சொல்லி / ஐன்னல் வழியே நிர்பந்திக்கும் இத்தாலியா வானம்” மிக அழகான கலவையாக்குகிறது. இந்த நிபந்தனை காதலை, வரண்ட சூழலின் மழையாக, மழை பொழிந்த பின்னும் சகதிகளாக தங்கிவிட்ட நினைவுகளை களைய முடியாது தவிக்கும் மனதை வரைந்து காட்டும் அழகான சித்திரமாக இருக்கிறது அந்த கவிதை.

இதே வர்ணகுழைவில் மற்றுமிரு கவிதைகள் பனி மற்றும் லோலிடா. பேட்ராயசுவாமி கோவில் சிதலமடைந்த தெப்பக்குள படிக்கட்டுகளில் அமர்ந்து தவளைகல்லை எரிந்த வண்ணம் ஒரான் பாமுகின் பனியை கவிதைக்குள் வனைகிறார் கவிஞர். தெப்பகுளம் கார்ஸ் நகரமாகிறது இவர் காதலி இப்பெக் வடிவம் கொள்கிறார். இவர் புதினத்தின் கதாநாயகனாக “கா” ஆகிறார். கார்ஸ் நகரின் பனி பொழிவையை கண்ணுற்றவாறே, பேட்ராயசுவாமியில் கோவில் தெப்பக்குளத்தில் அமர்ந்திருக்கிறார். “உன் கைகளில் புரளும் கார்ஸின் பனிக்கு வெளியே / உதிர்ந்து கொண்டிருக்கும் டென்கனிக் கோட்டையின் பனி / யாரிடமிருந்தும் / எந்த கேள்வியையும் எழுப்புவதில்லை” கார்ஸ் நகரத்து பனி, தென்கனி கோட்டையின் உதிர்கிறது, இவரது காதல் அத்தனை கற்பனைவளம் பொருந்தியது, ஆகவே இவரால் அதனை எந்த கதாபாத்திரத்தோடும் பொருத்தி பார்க்க முடிகிறது. இந்த கற்பனை செரிவே இவர் கவிதைகளை வேறொரு தளத்தில் உயர்த்தி வைக்கிறது என்று நினைக்கிறேன்.  நான் போஸ்ட் மேன் படம் பார்த்ததில்லை, பனி புதினத்தை படித்ததில்லை. இது கவிதை அணுக ஆரம்பகட்ட தடைகளை விதிக்காமல் இல்லை

  இலக்கிய ஆளுமை தன் புலத்து கவிதைக்குள் கொண்டு வந்திருக்கும் அதே தொழிற்நுட்பத்தினை சில புராண பாத்திரங்களோடும் கையாண்டிருக்கிறார் இவர். அகலிகையும், ரோணுகா தேவியும் இவர் கவிதைக்குள் குரலை நேசிக்கும் காதலிகளாக வந்து போகின்றனர். “உன்னை / உன் குரலைக் கொண்டு தனக்காய் / வனைந்து கொண்டிருப்பதாய்” என்று வரும் இவர் கவிதை வரிகள் சமகாலத்து காதலிகளில் பிம்பத்தை நமக்கு புலப்படுத்துகிறது, சமகால இலக்கியத்தில் செல்போன்களில், இணைய அரட்டையில் காதலிகள் இவ்வாறு குரலை காதலிப்பவர்களாகவும் அல்லது மௌன மொழியில் காதல் செய்யும் வல்லமை பெற்றவர்களாகவே இருக்கின்றார். ஜடாயு மோட்சத்தின் நடந்தாக புராணம் சொல்வதற்கும், வரலாறு சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதாக பா.வெங்கடேசனின் தரவு சொல்கிறது. இந்த அய்யம் கவிதை முழுக்க வளைய வருகிறது. தலபுராணம் ஜெபிக்கும் பிராமணர் மேல் நம்பிக்கையிழந்த கவிதை, புறாக்களின் முனுகல்களை மொழிபெயர்த்து புராணத்தில் நிஜமாக நடந்ததை அறிந்து கொள்ள துடிக்கிறது. பின்னும் கிட்டவில்லை அந்த ரகசியம். அதுவே “சேரியுறைப் பெண்ணின் வாயெங்கும் ததியோன்னம்/ உதட்டோரம் கழுகிறைச்சி” என்று கூறும் வரை தொடகிறது குழப்பமாய், மர்மமாக.

“பார்க்கப்படும் நிலவு போலில்லை /  சொல்லப்படும் நிலவு” இது எனக்கு ஒரு பிரபஞ்சத்தையே திறந்து வைக்கிறது. இந்த இருவரிகளுக்கு பின்னால் எண்ணற்ற சிந்தனை வந்து குவிகிறது, பார்ப்பதும் சொல்வதும் எப்போதும் ஒன்றாக இருக்க போவதில்லை. சொல்லும் போது அவரவர் அனுபவம் அவரவர் கற்பனை பார்க்கும் போதிருக்கும் சூழல் சொல்லும் போது இருக்கும் சூழல், இடைப்பட்ட கணங்களில்/நிமிடங்களில்/மணிகளில் நடந்துவிட்ட ஏதோ ஒன்று இதெல்லாம் கலந்ததே வர்ணிக்கப்படும் அந்நிலவு. மேலும் பார்க்கும் போது கிட்டும் அனுபவம் சொல்லும் போதோ சொல்லி கேட்கும் போதோ கிடைப்பதில்லை.  இங்கே நிலவென்பது வெறும் நிலவு மட்டும் குறிப்பதில்லை அது ஒரு குறியீடு பசி, துக்கம், காமம், அன்பு இன்னும் பல்வேறு உணர்வுதளத்திலும் பொருத்தி பார்க்கவல்லது. இருவருமே ஒரு ஒப்பீட்டு விசயத்தையே நினைத்து அந்த அனுபவத்தை பெற முடியும். அதெப்படி அசல் அனுபவமாக முடியும். இவ்விரு வரிகளே கவிதையாக போதுமானதாக எனக்கு தோன்றுகின்றது. அதன் பின்னர் வரும் வரிகள் எதுவும் என் மனதில் ஏறாமல் இவ்விரு வரிகளே கவிதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது

"எதிர்மேடையின் மனிதச் சித்திரங்களை / அழித்துக்கொண்டே நகர்ந்து செல்லும் / இந்த புகையூர்தி", எத்தனை எளிதாக இருக்கிறது இந்த விசயம், நமக்கு எதிரான விசயங்களை ஒரு சித்திரமாக்கி அதை தினமும் அழித்து அழித்து பார்ப்பது, இந்த கவிதை வரிகளில் அழகியலில் சொக்கி போனேன். நமக்கு எதிரான விசயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் நம்மை பற்றி பிறர் பேசிய அவதூராக இருக்கலாம், ஒரு நம்பிக்கை துரோகமாக இருக்கலாம், ஒரு தவறான புரிதலாக இருக்கலாம், ஏதேனும் ஒரு பலவீனமாக இருக்கலாம், நமக்குள்ளேயே உருவாகி வளர்ந்திருக்கும் தாழ்வுணர்ச்சியாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து ஆட்டிவைக்கும் கர்வ குணமாக எதுவானாலும் அதை நமக்கு எதிர் மேடையில் நிறுத்தி ஒரு ரயில் கடக்கும் கால அவகாசத்துக்குள் அழித்து எறிய முடிந்தால் நம் வாழ்வு எவ்வளவு சிறப்பானதாக மாறக்கூடும். இது மாபெரும் வாழ்க்கைத் தத்துவம். இத்தனை பெரிய விளக்கம் இந்த வரிகளின் அழகியலை சிதைத்து விடும் ஆயினும் இந்த தொகுப்பின் முதல் வாசிப்பில் என்னை கவர்ந்த இந்த வரிக்கு என் அளவிலான ஒரு ஆராதனை இது. இதை கடந்து ஒரு வாசகியாக வேறென்ன செய்து விட முடியும்?

பெண்களில் மேல் காட்ட வேண்டிய இறக்கத்தை, தன்னுடைய கழிவிரக்கமாக, ஒரு ஆணாக நின்று பேசி இருக்கும் சில கவிதைகள் இந்த தொகுப்பில் இருக்கின்றன. பெண்கள்கான கழிவிரக்கத்தை அவளை தேவதை என்று சொல்லாதிருந்தகலாம் என்றும் அவள் நகங்களும் குதிகால் வெடிப்புகளும் இல்லாத தேசத்திற்கு செல்ல விரும்புதாக சொல்வதிலிருந்தும், பீத்துணி அவள் இறக்கையாகிறது என்று சொல்வதிலிருந்தும் தன்னுடைய இல்லத்துப் பெண் எவ்வாறு இருக்க வேண்டும், ஆனால் இப்படித்தானே இருக்கின்றனர் என்று தனது உள்ளகிடங்கையே வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்தனியே ஒரு முத்தம் என்ற கவிதையும் இதே ரகத்தில் சேர்க்கலாம்.

சில கவிதை வடிவங்களை முயன்றதில் கவிதையின் ஓட்டம் தடைபடுகிறது என்று எனக்கு தோன்றுகிறது. சில கவிதைகளில் அடைப்புக் குறியிட்டு, சில விசயங்களை சொல்லி இருக்கிறார். அவை கவிதையின் ஓட்டத்திலிருந்து மாறுப்பட்டது, அதை விடுத்து படித்தால் கவிதை சீராக நகர்வது போலவும், சேர்த்து படிக்கும் போது கவிதையின் நகர்விற்கு அது  தடையாகவோ அல்லது சிறு குழப்பத்தை விளைப்பதாகவோ, கவிதையை வாசிக்கும் மனக்குரலை சற்று அயற்ச்சியடையவோ செய்கிறது. அதே போல் தொகுப்பு முழுதும் விரவி இருக்கும் நீண்ட கவிதைகளும் எல்லா வாசகர்களை ஈர்க்கவோ தன்னோடு கட்டி போடும் முயற்சியையோ செய்யுமா என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. நீள்கவிதைக்கு பழகி விட்ட வாசகர்கள் தொகுப்பில் வரும் மிக சொற்பமான சிறு கவிதைகளை பா.வெங்கடேசன் கவிதைகளாக என்ற சந்தேகம் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

இசக்கி பற்றிய கவிதை, சௌபர்னிகா, ப்ரேட் கவிதைகள் இவரது மொழியில் வரும் வரிகளின் சில வார்த்தைகளை மாற்றி போட்டால் அது ஒரு பெண் கவிஞர் எழுதிய கவிதை போலும் என்று எண்ண முடியாதபடி அப்பட்ட ஆண்மொழியாக இருக்கிறது இவரது மொழி. இயக்கி தன் முலைகளை தானே நக்கிக் கொள்கிறாள். அவள் அவளின் ஆணை முழுதாக விழுங்கும் ஆக்ரோசம் கொண்டவள். சௌபர்னிகா சுரோனியத்தை சிவனின் நெற்றியில் சூட்டுகிறாள். திருவாளர் ப்ரட்டில் காதலை காமத்தை ஒரு சேரி பெண் சித்தாளாக வேலை செய்பவளின் குடிசை எள்ளி நகையாடுகிறது. புராண, இதிகாக, இலக்கிய ஆளுமைகளில் தாக்கலோடு வந்திருக்கும் கவிதைகளும் அதே மொழியில் தான் படைப்பேறி இருக்கின்றன. இதனை ஒரு அடையாளப்படுத்தும் விசயமாக சொல்லவில்லை. இதுவே பா.வெங்கடேசனின் கவிதை மொழியாக இயக்குகிறது.

மிக சிறப்பான பல கவிதைகள் இந்த தொகுப்பில், தொகுப்பின் தலைப்புடைய "நீளா" என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்த கவிதையாகும். இந்த நீளா நிழலுருவம் கொண்டவள், அரூபமானவள். பகலில் மட்டும் வாழ்பவள். ஆனாலும் அவளுக்கும் இரு முலைகளும், ஒரு யோனியும் தேவைபடுகிறது. அன்றேல் அவளை பெண்ணாக ஏற்பது யார்? பெண் என்ற அடையாளங்களை துறக்க துணிந்த பெண்கள் ஏராளம். ஆயினும் அவர்கள் எவராலும் துறக்கவியலாத அடையாளங்கள் சில உண்டு. இந்த கவிதை என் அகங்காரத்தை ஆட்டிப் பார்க்கிறது. அரூபமான நீளா மேல் எனக்கிருக்கும் கழிவிரக்கம் யார் மேலானது என்ற கேள்விக்கு/அய்யத்துக்கு, என்னிடம் விடையில்லை சமகாலத்தில் வாழும் களவொழுக்க காதலிகள் யாவரும் "நீளா"க்களே. இந்த கவிதையிலிருந்து வெளிவருவது எனக்கு மிக சிரமமான காரணமாகவும், இந்த தொகுப்பிறகு ஒரு விமர்சனம் எழுதுவதற்கும் அதுவே காரணமானதும்  மறுக்கவியலாத உண்மை.

இந்த விமர்சனம் கொலுசு நவம்பர் இதழில் வெளிவந்திருக்கிறது.
 
 http://kolusu.in/kolusu/kolusu_nov_15/index.html#p=52