Friday, September 24, 2010

க‌ல்யாண்ஜி க‌விதைக‌ள்

1. நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது


2.தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

3.அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.

4.பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
'கோலம் நல்லா வந்த '
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.

புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ

விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.

உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.

- கல்யாண்ஜி

மல்லிகை பொழுதுக‌ள்(ஃபிரான்சிஸ் க்ருபா ம‌ன்னிப்பாராக‌)
எங்க‌ வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகைக‌ள் ச‌ற்றே பெரிய‌ குண்டு ம‌ல்லிகைக‌ள். பார்க்க‌ வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல‌ இருக்கும். என‌க்கு சிறு வ‌ய‌திலிருந்தே ம‌ல்லிகைப் பூ மேலே தீராத‌ காத‌ல். திருவ‌ர‌ங்க‌த்தில் இருந்த‌ நாட்க‌ளில் மென‌க்கெட்டு பூ மார்கெட் போய் ம‌ல்லிகைப் பூவை உதிரியாக‌ வாங்கி நெருக்க‌மாக‌ தொடுத்து, த‌லை நிறைய‌ வைத்துக் கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

என‌க்கு ம‌ல்லிகைப் பூ நிற‌ம்ப‌ பிடிக்கும் என்ற கார‌ண‌த்தால் ம‌ல்லிகை ப‌திய‌னிட்டு மூன்று ம‌ல்லிகை செடிக‌ள் வ‌ள‌ர்க்க‌‍ப்ப‌டுகின்ற‌ன‌ என் வீட்டில். தினம் காலையில் கிள‌ம்பும் போது தோட்ட‌த்தை வாஞ்சையோடு பார்ப்ப‌தை த‌விர‌ நான் வேறு எதுவும் செய்வ‌தில்லை அந்த‌ ம‌ல்லிகைச் செடிக‌ளுக்காக‌. தோட்ட‌த்தில் ம‌ல்லிகை ம‌ட்டும் அல்லாது நிறைய‌ ரோஜா செடிக‌ளும் ஒரு வேப்ப‌ ம‌ர‌மும், ஒரு சில‌ வாழை ம‌ர‌ங்க‌ளும், ஒரு ந‌ந்தியாவ‌ட்டை செடியும் இருக்கின்ற‌து. இருந்தாலும் ம‌ல்லிகையின் ப‌சுமையும் அடுத்த‌ப‌டியாக‌ வாழையுமே என்னை எப்போதும் க‌வ‌ரும்.

மார்ச் முடிந்து ஏப்ர‌ல் மாத‌ம் ஆர‌ம்பிக்கும் த‌ருண‌ம் என‌க்கு மிக‌ பிடித்த‌ கால‌ம். எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகை செடிக‌ளலும் ஒரு சில‌ ம‌ல்லிகை மொக்குக‌ளை த‌ர‌ ஆர‌ம்பிக்கும். முத‌லில் ஒன்று இர‌ண்டாக‌ ஆர‌ம்பித்து, மே மாத‌த்தில் த‌லை நிறைய‌ வைத்துக் கொள்ளும் அள‌வு பூக்கும். அதை சாயுங்கால‌ம் ப‌றித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வ‌து என் தின‌ப்ப‌டி செய‌ல்.(இங்கே ம‌க‌ளிர் த‌லையில் பூக்க‌ளை பெரும்பாலும் அணிவ‌தில்லை)

"ஏங்க‌ ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க‌ போச்சு?"

"இரு வ‌ரேன்"

வ‌ந்து விள‌க்கை போட்டார். அத‌ற்குள் என‌க்கு பூக்குத்தி கிடைத்து விட்ட‌து.

"பாரு ஒரு ஏர்பின் தேட‌ கூட‌ நான் தான் வ‌ர‌ வேண்டி இருக்கு"

"என்ன‌வோ ஒரு ஏரோபிளேனேயே தேடி த‌ந்த‌ மாதிரி சொல்லீங்க‌ ம்ம்ம்"

"ச‌ரி வெட்டியா பேச்சு தான் டிப‌ன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் ப‌ண்ண‌ முடியும்"

"அதுக்கு தான் நீங்க‌ இருக்கீங்க‌ளே வெட்டியா அப்ப‌ற‌ம் இன்னோரு ஆளை வேற‌ அப்பாயிண்ட் ப‌ண்ண‌னுமா?"

கிள‌ம்பி சீருந்தில் கொஞ்ச‌ தூர‌ம் சென்ற‌ இருப்போம். நான் எங்கே என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌த்தை பிடிப்பேனோ அதே இட‌த்தில் த‌ன் அலுவ‌ல‌க‌த்து வாக‌ன‌தை பிடிக்க‌ வேண்டி செல்லும் எங்க‌ள் ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் வ‌சிப்ப‌வ‌ரை தின‌ம் ஏற்றி செல்வ‌து போல் இன்னும் ஏற்றி சென்றோம்.

"குட் மார்னிங் ஜி"

"குட் மார்னிங் கத‌வு சரியாக‌ மூட‌வில்லை மூடி விடுங்க‌ள்"

"எங்க‌ வீட்டு பைய‌ன் க‌ல்யாண‌ ரிசப்ச‌னில் உங்க‌ போட்டோ அழ‌கா வ‌ந்திருக்கு"

"ஓ அப்ப‌டியா?"

"ஆம் அப்ப‌ மேட‌ம் இங்கே இல்லையா என்ன‌?"

"ஆமா அவ‌ங்க‌ அப்ப‌ வெளிநாடு போயிருந்தாங்க‌."

"ஓ அப்ப‌டியா எங்கே..."

அவ‌ர்க‌ள் உரையாட‌ல் நீண்ட‌து. நான் கிடைத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தினேன்.

ப‌க்க‌த்து வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர் இற‌ங்கிய‌தும்

"பாரு அவ‌ர் சொல்றாரு நான் போட்டோல‌ அழ‌கா இருக்கேனாம்"

"சும்மா தின‌ம் வ‌ண்டில‌ வ‌ரோமே ஏதாவ‌து புக‌ழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்க‌ற‌து தானே வ‌ரும் போட்டோல‌"

"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழ‌கு அதான் அவ‌ரும் சொல்றாரு"

"அவ‌ருக்கு என்ன‌ அவ‌ரா உங்க‌ளை க‌ல்யாண‌ம் ப‌ண்ணி இருக்காரு அந்த‌ கொடுமைய‌ நான் இல்லை ப‌ண்ணி இருக்கேன்"

"ப‌க்க‌த்துல‌ இருக்க‌ பொருள் எப்போதுமே தெரியாது."

"அதுக்கு பேரு தூர‌ப் பார்வை என் பார்வை ச‌ரியா இருக்குன்னு டாக்ட‌ரே ச‌ர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க‌ தான் இந்த‌ ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்க‌ல் செக்க‌ப் கூட்டிட்டு போனீங்க‌"

அத‌ற்கும் என் அலுவ‌ல‌க‌ வாக‌ன‌ம் வ‌ந்து விட்ட‌து.

*******சில‌ நாட்க‌ளுக்கு முன் ஒருவார‌ இறுதியில் வெளியே கிள‌ம்ப‌ த‌யாரா இருந்தோம்...

"இன்னிக்கி வெளில‌ சாப்பிட்டு அப்ப‌டியே சூப்ப‌ர் மார்க்கெட் போய் உங்க‌ ஆபிஸ்ல‌ கொடுத்த‌ சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து ம‌ளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வ‌ர‌லாம்"

"சாப்பிட‌ போக‌லாம் ஆனா சூப்ப‌ர் மார்கெட் எல்லாம் வ‌ர‌ முடியாது"

"அதுக்காக‌ த‌னியாவா போக‌ முடியும் அப்ப‌டியே போயிட்டு வ‌ந்திருலாம்"

"நான் வ‌ர‌லை. சாப்பிட‌ ம‌ட்டும்ன்னா வேணும்ன்னா வ‌ரேன்"

"எங்கேயும் போக‌ வேண்டாம் என‌க்கு உன் கூட‌ சாப்பிட‌ போக‌ பிடிக்க‌லை"

இத‌ற்கு மேல் அங்கே அம‌ர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாத‌ம் தான் வ‌ள‌ரும் என்று கோப‌த்தோடு வெளியே வ‌ந்தேன். தோட்ட‌த்தில் இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ முத‌ல் ம‌ல்லிகை ம‌ல‌ர்ந்திருந்த‌து. ப‌றித்துக் கொண்டு உள்ளே வ‌ந்தேன். ம‌ண‌ம் அதில் ம‌ன‌ம் லயிக்க‌...

"ஹ‌லோ சொல்லுங்க‌ மோக‌ன்"

"இன்னிக்கா... கொஞ்ச‌ம் டைய‌ர்டா இருக்கு"

"எங்க‌ போக‌ணும்"

"ச‌ரி இருங்க‌ கேட்டு சொல்றேன்"

"மோக‌ன்ட‌ இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போக‌ணுமாம் அவ‌ருக்கு. அப்ப‌டியே சாப்பிட்டு வ‌ந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிள‌ம்பி தானே இருக்க‌. போயிட்டு வ‌ந்திருலாம்"

தோட்ட‌த்து முத‌ல் ம‌ல்லிகை என்னை பார்த்து புன்ன‌கைத்த‌து.

காத‌ல் வ‌ந்தால்

காதல் வந்தால் பதினெட்டு/இருப‌து வருடம் வளர்ந்த பெற்றோர் மறந்து, சுற்றம் சுழல் மறந்து, தோழியர் மறந்து, தோட்டத்து மல்லிகைகளை, அக்கம் பக்கத்து சிறுவர் சிறுமியரோடு கழித்த காலங்கள் மறந்து போவது எந்த காலத்திலும் மட்டும் அல்ல அக்காலமே இருந்து இருக்கின்றது.

என் தோழி ஒருத்தி சொன்னாள் சினிமாவில் காத‌ல் எளிது, பெற்றோர்க‌ளை வில்ல‌த்த‌ன‌மாக‌ காட்டி விடுக்கின்றார்க‌ள். ஆனால் நிஜவாழ்க்கையில் அது அப்ப‌டி இல்லை. என்ன‌ ப‌ண்ற‌துன்னே தெரியாது என்றாள். அப்ப‌டி பாச‌த்தை கொட்டும் தாயோருத்தியின் ம‌ன‌நிலையில் எழுதுப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌ல்...

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?


ஆயம் - தோழியர் கூட்டம்

"பாலோடு ஒப்பிட்ட வல்ல ஆய்ந்த மொழிகளையுடைய என் மகள், காய்தெரிக்கும் சூரிய கதிர்களால் வெப்பம் மிகுந்த பாலைக் காட்டில், தன்னுடைய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாய் கொண்ட பைங்கிளிகள், தோழியர் கூட்டம் ஆகியவை ஒன்றையேனும் நினைக்காமல், காதலன் பின் செல்வாளோ என்ன?"

மதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்
படத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே மிக நல்ல படம் என்ற உணர்வுக்கு இழுத்து சென்றது.

படம் ஒரு இரங்கல் கூட்டத்தோடு (“a wonderful husband” என்கிறார் பாதிரியார் அது எப்படி அய்யா உனக்கு தெரியுமென்று கேட்க தோன்றுகிறது) ஆரம்பித்து பின்னர் எமியின் கண்ணோட்டத்தில் தொடர்கிறது. அவருக்கு தன் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்ததும் தன்னிடம் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் தாலியை இது என்னுடையது அல்ல இதை உரியவரிடம் சேர்க்க வேண்டுமென்று இந்தியா செல்ல வேண்டுமென்று தன்னுடைய மகளையும் இந்தியன் எம்பசியை இதெல்லாம் இருந்தாதான் இந்தியா போகனுமா என்று தமிழ் வாக்கியத்தாலும் கன்வின்ஸ் செய்து (ஒரு தமிழ் வாக்கியத்திற்கு இந்தியாவுக்கு வர விசா கிடைத்து விடுமா?) தனது தேடுதலை தொடங்கி இந்தியா வருகிறார் எமி.

எமி இந்தியா வந்ததும் தன்னுடைய சக்கர நாற்காலியில் வரும் போதே அந்த காலத்தில் தன்னை வரவேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த வண்ணம் வருகிறார். சென்னையில் டாக்ஸிகாரர் உரிமையோடு அழைக்கும் விதத்திலிருந்து வெளிநாட்டுக்காரர்கள் என்றாலே அவர்களிடம் ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற திட்டதோடு இருக்கும் சென்னைவாசிகள் சிலரையும் கனகச்சிதமாக பொருத்தி இருக்கின்றார்கள். எந்த பாத்திர அமைப்பு இது தேவையற்ற இடைச்சொருகலாக இருக்கின்றதே என்று நினைக்கும்படியில்லை. எல்லா கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு விதத்தில் திரைக்கதையோட்டத்திற்கு உதவி இருக்கின்றார்கள்.

எமி தற்கால சென்னையின் மாற்றங்களை நோட்டமிட்டபடி தொடங்கும் பரிதியை தேட தொடங்கும் பயணத்தில் அவரின் பழைய நினைவுகளையும் தற்கால தேடல்களையும் சரிவிகிதமாக சேர்ந்து கொஞ்சம் கூட தொய்வு குறையாத திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒவ்வொரு இடமாக தேடி ஏமாற்றம் அடையும் எமி கடைசியாக மருத்துவமனையில் காதரை அடையாளம் காணும் போது அப்படா என்ற நிம்மதி நமக்கே பிறக்கிறது. பின்னர் அவரும் இறந்து போனதும் எமியின் தவிப்பு நமக்கும் தொத்திக் கொள்வது அற்புதமான கதையமைப்பு. என்ன தான் ஏமாற்றியும் கறாராகவும் காசு கரந்தாலும் தமிழர்கள் இரக்கமுள்ளவர்கள் என்றும் ஈரமான எந்த உணர்வுக்கும் எந்த தமிழனும் உதவுவான் என்றும் பின்னர் நடக்கும் தேடலில் காட்டி இருப்பது சற்றே ஆறுதலான விசயம்.

இந்த திரைப்படத்தில் நிறைய விசயங்கள் கவித்துவத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லோரும் நல்லவர்கள் போல் காட்டப்பட்டிருக்கின்றனர். அந்த காலத்தில் மழை கூட தோழமையோடு காட்டப்பட்டிருக்கின்றது. ஏதாவது சண்டை என்றால் கூட “வெயில் இருக்கும் போதே வேலை முடிப்போம் வாங்க” என்ற சமாதானம் போதுமானதாக இருந்திருக்கிறது. விமான சத்தம் குண்டு போடறாங்க ஓடி ஒளிஞ்சிக்கங்கன்னு ஒருவன் சொல்ல அனைவரும் ஓடி மறையும் வெள்ளெந்தியாக இருக்க முடிகிறது, Floating point வாய்ப்பாடு போகிற போக்கில் சொல்லி தர முடிகிறது, ஒரு மல்யுத்தத்தில் ஜெயித்தால் அரசால் ஆக்கிரமிக்க பட இருக்கும் நிலம் மீண்டும் உரியவர்க்கு கைவசமாகும் சாத்தியமிருக்கிறது. (வெள்ளையர்கள் நம் அரசியல்வாதிகளினும் நல்லவர்கள் என்றே நினைக்க தோன்றுகின்றது)

படத்தில் நகைச்சுவை திணிக்கமல் போகிற போக்கில் சொல்லி இருக்கின்றார்கள். அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை கணக்கா எமிக்கு நன்றி சொல்ல பரிதியும் அவன் நண்பர்களும் தான்கூ தான்கூ என்று சொல்லிக்கொண்டே வந்து சைக்கிள் பள்ளத்தில் விழுந்தெழுந்ததும் மங்கு மங்கு என்று சொல்லிக் கொண்டே வருவதும் பின்னர் எமியே தாங்யூ பிரேவ் மேன் என்று சொன்னதும் அதான் அதே தான் தாங்யூ என்று சொல்லி முடிப்பது அழகான நகைச்சுவை. கோல்ப் விளையாட்டை கோலி குண்டு விளையாட்டா என்று என்று கேட்கும் மொழிபெயர்பாளாராக வரும் நம்பி அதையே குச்சி வைச்சி தள்ளிவிட்டு விளையாடுவது என்பதும், ஆங்கில எழுத்துகளை தமிழ் எழுத்து போல சொல்லி தர சொல்லி எ, ஏ, பி, பீ, சி, சீ என்று படிப்பது மாசற்ற நகைச்சுவை.

பிண்ணனி இசை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று, கொஞ்சம் இந்தி பட சாயல்களில் வரும் பிண்ணனி இசையானாலும் இசையும் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதுவும் எமியுடன் பரிதி கற்றுக் கொண்டு வந்து பேசும் நான்கு வாக்கியங்களுக்கு தடுமாறும் போது மறந்துட்டியா என்று எமி முதல் முறையாக தமிழ் பேசும் போதும் அரும்பும் காதலுக்கு பிண்ணனியாக வந்த இசைத்துளிகள் ரம்மியமாக ரசிக்கும்படி இருக்கின்றது. வெள்ளைக்காரி என்பதால் கொஞ்சம் படித்த அறிவாளி மற்றும் கவர்னர் மகள் என்பதால் எளிதாக தானே கற்றுக் கொள்ள ஏதுவான தமிழ் புத்தகங்களை வாங்கி பயில்கிறாள். உங்களிடம் கொடுக்க இந்த தாலி இருக்கே என்று தன் காதலையும் தயக்கமின்றி அவளே தான் சொல்கிறாள்.

அந்த கால கேமிரா, டிராம், கூவம் நதி, பங்கம் கால்வாய், வால்டாக்ஸ் ரோட் மணிக்கூட்டு அந்த கால கார், ரயில் கைவண்டிகள் கட்டங்கள் என்று மொத்தத்தையும் பழைய மதராஸ் பட்டினமென்று காட்ட மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கலை இயக்குனரை இதற்காக பாராட்டாமல் இருக்கவே முடியாது. உண்மையாகவே சிங்கார சென்னை என்பது பழைய மெட்ராஸ் தான் என்று ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் செய்து இருக்கின்றார்கள்.

படத்தில் சில விசயங்கள் நெருடாமல் இல்லை. கதை களம் நடந்த வருடம் 1945 முதல் 1947 வரை அந்த காலகட்டத்தின் சுதந்திர போராட்டம் பற்றி தொடும் தொடாத வண்ணம் காட்டி இருப்பது சுதந்திரத்திற்காக இவ்வளவு தான் போராடினார்களா என்று நினைக்க ஏதுவாக இருக்கின்றது. அதே போல் ஆர்யா வெள்ளையர்களை எதிர்ப்பது போல அதற்காக அடிக்க வரும் போது எமி அந்த இடத்தில் இருப்பதை கண்டு விட்டுவிட்டு போவதும் பின்னர் யாரை அடிக்க நினைத்தானோ அவனை அடிக்காமல் இருப்பதும் எதோ விடுப்பட்டது போல இருக்கின்றது. அதே போல ஒரு பத்து இருபது பேர் சென்று ஒரு பிரஸ் மிட் போன்ற இடத்தில் எப்போது சுதந்திரம் தேதியை இப்போதே சொல்லுங்கள் என்று கேட்டதும் கவர்னர் ஜென்ரல் சொல்வது போல காட்டி இருப்பதும் கொஞ்சம் அபத்தமாக இருக்கின்றது. லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வந்த இடத்தில் யார் சம்மதமுமின்றி ஒருத்தியை மணந்து அதே கலாச்சாரத்தை பின்பற்றும் கவர்னரான எமியின் தந்தை இந்திய மனப்பான்மையுடன் உன்னை கொன்றாலும் ஒரு இந்தியனுக்கு மனம் செய்து தர மாட்டேன் என்று சொல்வது ஏற்புடையதாக தோன்றவில்லை. படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வது போல இருக்கின்றது அதற்கு இதன் நீளம் காரணமாக இருக்கலாம். மேலும் இடைவெளி முடிந்து வரும் பாடல் ஒன்று மட்டும் கொஞ்சம் இடைச் சொருகல் போல இருக்கின்றது. ஆனால் அவ்வளவு எழிலான மதராச பட்டினம் காட்டிய காரணத்திற்காக இந்த குறை அனைத்தையுமே மறந்து விடலாம்.

படத்தில் குறியீட்டு கவிதை போல பல காட்சிகள் இருக்கின்றன. கோல்ப் மைதானத்திற்காக இடத்தை பிடுங்க வரும் அதிகாரிகளிடம் பேசும் போதும் சரி அதற்காக மனு எழுதும் போதும் மற்ற எந்த விசயங்கள் பேசும் போதும் தூங்கி கொண்டே இருந்த ஒரு கதாபத்திரம் தன் இடத்தை மீட்க பரிதி மல்யுத்தம் புரியும் போது மட்டும் விழுத்து எழுந்து ஆரவாரம் செய்வது, நம் பொதுஜனத்தை குறியுட்டு சொல்லப்பட்ட கதாபத்திரம், அதே போல் நாட்டின் சுந்திரத்திற்கான பேச்சு வார்த்தை நடக்கும் அதே சமயம் எமி தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை மாறி மாறி காட்டி இருப்பதும் ஒரு அழகியல் கவிதை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாள் கொண்டாங்கள் யாவும் எமியும் பரிதியும் காதலை கொண்டாட நடத்தப்படுவது போன்றே காட்டப்பட்டிருந்தது. சரியாக சுந்திர விடியலில் வெள்ளைக்கார ஐஜியாக வருபவனை கொன்று அவனிடமிருந்து தப்பிப்பதும் ஒரு குறியீட்டு கவிதை போன்றே இருக்கின்றது.

படத்தின் ஆரம்ப இடைப்பட்ட சில காட்சிகள், இசை டைட்டானிக், லாகான் மற்றும் 1942 ஏ லவ் ஸ்டோரி போன்ற படங்களை நினைவுக்கு கொண்டு வந்தாலும் மதராஸ பட்டினம் திரைப்படம் பார்த்துவிட்ட வந்த பொழுதில்
சிங்கார சென்னை உண்மையாகவே சிங்காரமாக இருந்த தினங்களில் வாழ்ந்து விட்ட மனம் நிறைந்த உணர்வு இருந்தது. இதை அப்பட்ட காப்பியடித்தல் என்று சொல்ல வேண்டியது இல்லை. நல்ல படத்திலிருந்து சில நல்ல விசயங்களை எடுத்து நம் காட்சிகளத்திற்கு பயன்படுத்தி கவிதை போன்ற இந்த படத்தை தந்தால் அது மிகவும் வரவேற்க்கபட வேண்டிய விசயமே.

படத்தின் இறுதிகாட்சி முற்றிலும் இருட்டாக ஆக்கப்பட்டு சில வசனங்களில் முடித்திருந்தனர். அப்படி முடிந்த பின் வரும் புகைப்படங்களில் மதராஸ பட்டினத்தின் அழகும் இவை இப்போது மாற்றப்பட்டிருக்கும் விதமும் காட்டி இருப்பது கூட ஒரு அழகியல் செயலாக இருக்கின்றது. படம் முடிந்து விட்டது என்று தெரிந்தாலும் எழுந்து நடந்த எல்லோரும் நின்ற வண்ணமே அத்தனை புகைப்படங்களையும் ரசித்து விட்டு பின்னரே சொல்கின்றார்கள். சென்னையின் அடையாளமாக எத்தனை விசயங்கள் அவற்றில் சென்ரல் மணிக்கூண்டை தவிர எல்லாவற்றையும் இழந்திருக்கிருறோம்.எமி கூவம் நதிக்கரையை பார்த்து, அதன் பழைய அழகை உணர்ந்தும் பின் தற்சமயம் சிறுவர் தங்கள் காலைக்கடனை அங்கே முடிந்து கொண்டிருப்பதை கண்டு முகம் சுளிப்பார். அந்த சமயம் நிச்சயமாக நம் நெஞ்சை ஏதோ செய்வது போல இருப்பது மிகவும் உண்மை. இன்று கொசுக்களில் உற்பத்தி பண்ணையாக இருக்கும் பங்கிம் கால்வாய் அந்த காலத்தில் அத்தனை எழிலோடு இருந்ததா? 1942களில் அத்தனை எழிலோடு திகழ்ந்த சென்னை மாபட்டினம் இத்தனை எழில் குறைந்து போக நாடாள்வோரை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. மக்களில் வாழ்வாதாரத்திற்கு சென்னை தவிர வேறு இடமே இல்லை என்று மொத்த தமிழ்நாட்டின் முக்கால் பாகம் சென்னையில் இருந்தால் சிங்காரம் எங்கிருக்கும்? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் சிலர் தங்கள் கொள்ளையடித்ததில் கொஞ்சத்தை செலவளித்தாலே சென்னை சிங்காரம் பெறும். யோசிப்பார்களா? மதராஸ பட்டினம் படம் இந்த கேள்வியை என் மனதில் வைத்தது. சென்னை நேசிக்கும் இன்னும் பல கோடி மக்களிடம் இதே எண்ணத்தையே விதைக்கும்.

வானம் - சில மின்னும் நட்சத்திரங்களும் பின் விளைவாக சில சிந்தனைகளும்


வானம் கிரிஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம். கடந்த வருடம் தெலுங்கில் வெற்றிப்படமாக ஓடிய வேதம் என்ற படத்தின் மறுபதிவே இந்த வானம். ஐந்து குறுங்கதைகளை குழப்பமும் தொய்வும் இல்லாத கலவையாக தந்திருக்கும் வித்தியாசமான முயற்சிக்காகவே இந்த திரைப்படத்தினை பாராட்டியாக வேண்டும்.

அறிமுக காட்சிகளில் சிம்பு நகைச்சுவை ததும்ப நடித்திருக்கிறார். சந்தானமும் இரட்டை அர்த்தம் தராத நல்ல நகைச்சுவையை தந்திருக்கிறார். பரத் நடிப்பும் கொஞ்சம் தேவலை ரகம் தான். ஆனால் பரத்தின் தோழியாக நடித்திருப்பவர் தமிழை ஏன் விஸ்கி அடித்து விட்டு பேசுவது போல பேசி இருக்கிறார் என்று தெரியவில்லை. சிம்புவும் தன் தோழியிடம் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலேயே பேசுகிறார். அப்படி தமிழை கொலை செய்து பேசினால் தான் உயர் தட்டு மக்கள் என்ற காட்டுவதிலிருந்து இந்த தமிழ் திரைப்படங்கள் எப்போது தப்பிக்குமென்றே தெரியவில்லை.

சரண்யாவும் வழக்கம் போல அருமையான நடிப்பினை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அனுஷ்காவின் கதாபத்திரம் நீக்கி இருந்தாலும் இந்த படத்தில் அதிக வித்தியாசமும் இருந்திருக்காது. ஆனால் அனுஷ்கா பொதுப்படையாக தெய்வ பெண்ணாக வந்தாலும் பாலியல் தொழில் செய்பவராக வந்தாலும் கச்சிதமாக பொருந்தும் முகவட்டோடு இருக்கிறார். பிரகாஷ்ராஜ்க்கு மிக முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தினில்.

யுவன் சங்கரின் இசை ரசிக்கும் படி இருக்கிறது. சிம்புவின் குரலில் எவண்டி உன்னை பெத்தான் பெத்தான் பாடல் கூடவே நம்மை பாட வைக்கிறது. சிறு சிறு தொடல்களாக நாட்டின் பல முக்கிய பிரச்சனைகளை அசால்ட்டாக கையாண்டு இருக்கின்றார்கள். மக்களுக்கிடையிலிலான உட்பூசல்கள் எல்லாவற்றிக்கும் மொழி, மதம், பணம் பேதம் போன்றவையே காரணம் என்று பல முக்கிய கனமான கதைகளைக்குக்கான கருவினை போகிற போக்கில் சொல்லி போயிருக்கிறார்கள். தனித்தனியாக சொல்லி இருக்கும் ஐந்து கதைகளையும் இறுதியாக இணைப்பது மனிதநேயம். இந்தப் படத்தின் மிக பெரிய பலமாகும்.

முகமதியர் நடத்தும் புனிதபோருக்கு தீவிரவாதம் என்ற பெயரை தந்து எந்த மூஸ்லீமை பார்த்தாலும் ஏதோ அவர்கள் தீவிரவாதம் செய்யவே பிறவி எடுத்தனர் என்ற பொதுப்படையான எண்ணத்தை வளர்த்து கொள்வது தவறென்று சொல்லும் முயற்சியையும், அவர்களிலும் அப்பாவிகள் உண்டென்பதையும் அவர்கள் பிற மதத்தினரால் முக்கியமாக இந்துவாவின் மேல் தீவிரம் காட்டுவோரால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கான நியாயம் எளிதாக மறுக்கப்படுகிறது என்று உணர்ந்த்தும் முயற்சியையும் இந்த படத்தின் மூலம் முன் வைத்திருக்கினர்கள். அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கினர். பல மதத்தினை சார்ந்தவர்களை காப்பாற்ற சில முஸ்லீம்கள் கூடி குரான் ஓதும் காட்சி உச்சக்கட்ட மனிதநேய காட்சியாகும். அப்பாவிகளை கொடுமை செய்யும் எந்த விசயமும் தீவிரவாதம் என்று புது கருத்தினை முன் வைத்திருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமாக உணரப்பட வேண்டிய விசயம்.

பணம் இது என்னவெல்லாம் செய்கிறது?

எப்படியாவது பணக்காரப் பெண்ணை காதல் திருமணம் செய்ய வேண்டுமென்று என்னவோ தில்லுமுல்லு வேலைகளை ஏன் திருட கூட தூண்டும் எண்ணமும் தருவது மேட்டுகுடிக்கும் குப்பத்திற்கும் இருக்கும் பணத்தால் ஆன வேறுபாடு தவிர வேறென்ன இருக்க முடியும். திருடனிடமும் பாலியல் தொழிலாளியிடமுமிருந்து கூட ஒரு காவல்துறை அதிகாரி பணத்தையையும் நகையையும் கொள்ளையடிக்க பணத்தின் மேலிருக்கும் ஆவலன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

வாங்கின கடனையும் கடனுக்கு இணையான வட்டியையும் திருப்பி தர மாமனார் ஒருமுறையும் மருமகள் ஒருமுறையும் தன்னுடைய கிட்னியை விற்கும் அவலத்தினும், கிட்னியை பரிவத்தனத்தில் கிடைக்கும் பணத்தில் பாதிக்கு மேல் அமுக்கிக் கொள்ள முன்பே ரூட் போடும் இடைத்தரகர், பணம் பட்டுவாடா செய்யும் போது மேலுமொரு தொகையை மேல் செலவென்று எடுத்து கொண்டு மீதியை தரும் போது பணத்தை முழுசா குடுத்துடுங்க அய்யா என்று கெஞ்சி கண்ணீர் விடும் அப்பாவி இந்திய ஏழைகளை நினைத்து கொஞ்சம் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. வேறென்ன செய்ய முடியும் இந்த கையாலாகாத எழுத்தினை வைத்துக் கொண்டு?

அழகர்சாமியின் குதிரைபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படமாக எப்படி எல்லாம் சீரழிந்தது என்று சுஜாதா தன்னுடைய கட்டுரை ஒன்றில் புலம்பி இருப்பார். அப்படியில்லாமல் அழகர்சாமியின் குதிரை சிறுகதையை சிறு சிறு செழுமையூட்டல்கள் மட்டும் செய்து அதே தரத்தோடான திரைக்கதை அமைத்திருப்பதற்காக சுசீந்திரனுக்கு மிகப் பெரிய சபாஷ். பாஸ்கர் சக்தியின் சிறுகதையை ஏற்கனவே படித்திருந்ததால், அதை எப்படி திரையாக்கம் செய்திருப்பார்கள் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை விட மிகச்சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

தேனி மாவட்டத்தை ஒட்டிய மலை கிராமங்களை மிக அழகாக கண்ணுக்கு குளுமையாக காட்டி இருக்கிறது தேனீ ஈஸ்வரின் கேமிரா. பிண்ணனி இசை மிக நேர்த்தியாக இருக்கின்றது. ராஜா ராஜா தான் எப்போதும். அதுவும் "குதிக்குது குதிக்குது" பாட்டில் என்னம்மா பாடி இருக்கிறார். இளையராஜா தமிழ்நாட்டிக்கு ஒரு பெரியவரம். மூன்று பாடல்களும் மூன்று முத்துகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசம். பாஸ்கர் சக்தியின் வசனம் பல இடங்களில் நச்சென்று இருக்கிறது. இயல்பான வசனத்திலேயே நகைச்சுவையை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் பாஸ்கர் சக்தி. திரைக்கதையில் சுசீந்திரன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென்பது என் கருத்து. ப்ளாஷ்பேக் காட்சிகள் கதையோட்டத்தோடு இல்லாமல் கொஞ்சம் தொக்கி நிற்பது போல தோன்றியது.

கிராமத்தில் மக்களுக்கு வாழ்வு எவ்வளவு எளிமையாக இருக்கிறது. அவர்களின் வெள்ளந்தி மனம், சிக்கு பிடிக்காமல் எவ்வளவு எளிதாக கையாலும் விதமிருக்கிறது. அதிகம் படித்து அதிகம் யோசித்து அதிக பைத்தியம் பிடித்து மனநோயால் வாட்டும் நகர மக்களின் வாழ்வினும், மழை பெய்ய அழகர்சாமிக்கு திருவிழா நடத்தினால் போதும் என்ற நம்பிக்கையும், அழகர் வந்து குறி சொன்னா எதுவும் நடக்கும் குருட்டு நம்பிக்கையும், அழகர்குதிரையின் விட்டை கலந்த தண்ணீரை குடித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்ற அசட்டு நம்பிக்கையும் கொண்டிருக்கும் கிராம வாழ்வு எவ்வளவோ மேல். அந்த கிராமிய வாழ்வு நீர்மையுடன் இருப்பதுக்கு இந்த ஏதோ ஒன்றின் மீதான நம்பிக்கை தான். நம்பிக்கை தானே எல்லாமே. ஆனால் இப்படிப்பட்ட லாகிக்லெஸ் நம்பிக்கையால் கோடாங்கிகளும், தீடிர் சாமிகளும் ஏமாற்றும் அப்பாவி மக்கள், எதாவது தில்லுமுல்லு செய்து திருவிழாவை எப்படியாவது தவிர்த்து மழை பெய்ய விடாமல் செய்யலாம் என்று எண்ணும் முன்னால் பஞ்சாயத்து தலைவர் மகன் இவர்களின் அறியாமையை நினைத்து ஆதங்கபடுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

என்ன தான் மூட நம்பிக்கை என்றாலும் கோடை திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் தவறாமல் மழை பொழிவதை எங்கள் கிராமத்தில் நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். மழை பெய்ய திருவிழா, திருவிழா சமயத்தில் குதிரை காணாமல் போனால் தனக்கு வேலை கிடைக்கும் என்று தச்சனும், குதிரையை கண்டு பிடிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் கோடாங்கிகளும், கோடாங்கி "காக்கை அமர பழம் விழுமென்ற கதை" போல பிடித்து தந்த நிஜக்குதிரையும், அந்த நிஜக் குதிரையின் சொந்தக்காரனும், அவனுக்காக காத்திருக்கும் ஒரு பௌர்ணமி தேவதையும் என்று அழகாக வலைப்பின்னலாக நகர்ந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் மழை. அதற்கென நடக்கும் திருவிழாவை நம்பி தான் எத்தனை ஜீவனம்.

தன் குதிரையை மீட்க வேறு ஒரு கிராமத்தில் வேறு வழியின்றி தங்கி இருக்கும் நிஜக்குதிரையின் சொந்தக்காரன், அவனுக்கும் இருக்கும் மனிதநேயம், தன்னுடைய குதிரை ஒருவேளை திருவிழாவிற்கு அப்புறம் கிடைக்காமல் கூட போகலாம் என்று தெரிந்தும் கூட, தன் குதிரையோடு இரவு தப்பிக்க வழி சொல்லு ஊர் இளைஞர்களிடம் மறுப்பது நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சி. கோடி கோடியாக கொள்ளையடிக்கும் இந்த நாட்டில் தம் மக்கள் பசி போக்க கிணற்று மோட்டரை திருடும் வயிரொட்டிய பஞ்ச திருடன். அவனை பிடித்து அடித்து நொறுக்கும் வீர போலீஸ். என்ன செய்து தான் எம் தாய் திருநாட்டை காப்பாற்ற?

ஹாலிவுட் படங்களை போல இரண்டே மணி நேரத்தில், தமிழ் சினிமாவின் பார்முலாவிலிருந்து மாறுபட்ட தரமான ஒரு திரைப்படத்தை வெகு நாட்களுக்கு பின் கண்டு வந்த திருப்தி நீங்கவில்லை என் மனதிலிருந்து. அழகர்சாமியின் குதிரை நீண்ட நாள் வாழவிருக்கும் காவியம்.

அமில‌ம் தோய்தெரிந்த‌‌ நினைவுக‌ள்ப‌க‌ல்கொள்ளைகார‌னிட‌ம்
காட் பிர‌மிஸ் கேட்கும்
சிறுமியின் அறியாமையோடு
தானிருந்த‌து என்
சகோத‌ர‌த்துவ‌ம் உன்னுட‌ன்

மெல்ல அதிர்ந்தேன்
முன்பொருமுறை
மேலும் அதிர்ந்தேன்
ப‌ல‌முறை சில‌முறை

இன்று தான் புரிகின்ற‌து
நான் என்றுமே அதிர‌வில்லை
இது தெரியும் வ‌ரை
போக‌ட்டும்

உண்மையும் பிரிய‌மும்
எங்கானும் ஒரு ஓர‌த்தில்
ஒளிந்திருக்கிற‌தா
தேடிப்பார்கிறேன்

பையெங்கும்
அமில‌ம் தோய்த்த‌த்
தெரிந்த‌ அம்பென‌
கையெங்கும் மிஞ்சிய‌து
நினைவுக‌ள்