Showing posts with label வகை படுத்தாதவை. Show all posts
Showing posts with label வகை படுத்தாதவை. Show all posts

Friday, December 16, 2016

உயிரோடையும் காலச்சுவடும் இணைந்து நடத்தும் "சிறுகதை பயிலரங்கம் 2017"

இடம்: சக்தி கல்யாண மண்டபம், அய்யம்பாளையம், திண்டுகல் மாவட்டம்
தேதி: பிப்ரவரி 10,11,12.
நோக்கம்:
தமிழ்ச் சிறுகதையின் வளத்தையும் வலிமையையும் மீண்டும் உணர்தல்; உணர்த்துதல். சம காலப் படைப்புகளை விரிவான வாசிப்புக்கு உட்படுத்துதல். புதிய படைப்பாளிகளைக் கண்ட டைந்து அவர்களை ஊக்குவித்தல்.
நிகழ்வு:
மூன்று நாட்களில் ஐந்து அமர்வுகளாகப் பயிலரங்கம் நடைபெறும். உணவும் தங்குமிட வசதியும் அமைப்பாளர்களால் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தமது சொந்தச் செலவில் வந்து செல்லவேண்டும்.
பயிலரங்கில் பங்கு பெற:
பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்றை shortstories.workshop2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
நிபந்தனைகள்:
*வயது வரம்பில்லை. அனுமதி இலவசம்
* மாணவ / மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
*ஒருங்கிணைப்பாளர்களால் இறுதி செய்யப்பட்டு பங்கேற்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.









Monday, June 22, 2015

நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம் - நிலாரசிகன்







நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம்

-----------------------------------------------------------------------
நூலின் பெயர் : நீர்க்கோல வாழ்வை நச்சி
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : ரூ.40
பக்கம்: 64
நூலாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்
-----------------------------------------------------------------------

சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை
அழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது.
நினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.

நீர்க்கோல வாழ்வை நச்சி கவிதை நூல் மூலம் இலக்கிய உலகிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் லாவண்யா. இத்தொகுப்பின் தலைப்பின் வசீகரமே இதனை உடனே படிக்க வேண்டும் என்கிற ஆவலை என்னுள் எழச் செய்தது. இணையத்திலும் சில சிற்றிதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த லாவண்யாவின் கவிதைகளை மொத்தமாக ஒரே இடத்தில் படித்த போது முதல்தொகுப்பு என்ற எண்ணமேதும் இல்லாத வகையில் சிறப்பாகவே இருந்தன பல கவிதைகள். இயல்பான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் புற உலகின் மீதான நுண்ணிய கவனித்தலை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் லாவண்யா.
இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை "நீர்த்துளியும் நாய்க்குட்டியும்" என்பேன்.இக்கவிதையின் கடைசி ஆறு வரிகளில் சட்டென்று மனம் இறகாகி காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது.

"உன்னைத் தெளித்த
நீர்த்துளிப்பட்டு சிலிர்த்தது
என் நினைவென்னும் நாய்க்குட்டி

உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான்"

"கவிதை போலும்" என்றொரு கவிதையில் நிராகரிப்பின் வலியை,பிரிதலின் கடும்துயரத்தை,எச்சிலென தன்னை இகழ்ந்த உறவை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

"இறுதியில் நீ உமிழ்ந்துவிட்டு போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக"

கடைசி மூன்று வரிகளை நான்கைந்து முறை வாசித்தேன்.எதுவும்/யாரும் நிரந்தரமற்ற இவ்வுலகில் யாரும் யாருடனும் இல்லை என்கிற நிதர்சன அவலம் கண்முன் தோன்றியது.

"கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்" கவிதை மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு நவீனகவிதையாக அமைந்திருக்கிறது. அகத்தின் குமுறலாக இக்கவிதை பரிணமித்திருக்கிறது.

ஞாபகமீட்சி,மனம் பழகாத பயம்,தொடரும் பயணம்,பிரியங்களின் பிரியம்,என் இருப்பும் உன் இருப்பும் - இவை அனைத்தும் இத்தொகுப்பிற்கு வலுசேர்க்கும் கவிதைகள்.

தானியங்கி குழாய்களும் நானும்,கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள் - இவை கவிதை தொகுப்பின் அடர்த்தியை குறைக்கும் கவிதைகள்.

லாவண்யா எழுத ஆரம்பித்த நாள் முதல் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கடந்த ஓராண்டியில் இவரது மொழிவளமும்,கவிதைத்தேடலின் வளர்ச்சியும் அதீதமாகி இருப்பதை இந்தக்கவிதைகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான வாசிப்பனுபவம் மட்டுமே கவிதைகளின்
குறைகளை களைய உதவும். தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதும்,ஒரே வார்த்தையை அதிகம் உபயோகப்படுத்தாமலிருப்பதும் எழுத எழுதத்தான் கைக்கூடும். இனி எழுதும் கவிதைகளில் இதனை லாவண்யா நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான்
இதுவரை எழுதிய கவிதைகளை கடந்து செல்வது எளிதாகும்.
லாவண்யா மேலும் பல கவிதைகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.



-நிலாரசிகன்

Friday, May 15, 2015

க‌விஞ‌ர் ஞான‌க்கூத்த‌ன் அவ‌ர்க‌ளுக்கு எம் ந‌ன்றி

வ‌ணக்க‌ம்.

ஞான‌க்கூத்த‌ன் இற‌வைப் பருகும் ப‌ற‌வை க‌விதை நூல் பற்றி எழுதிய‌து.



http://www.gnanakoothan.com/2012/04/07/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/


Wednesday, May 13, 2015

சிலந்திக் கூடு

சிலந்திக் கூடு : லாவண்யாவின் இரவைப் பருகும் பறவையை முன்
வைத்து:-



“நான் மிகச் சாதாரணமானவள்
என்னால் குறைந்தபட்சம்
உங்களைப் பற்றிய அவதூறுகளை
உங்களிடம் மட்டும்தான் பரப்ப முடியும்”

கவிதை வாசிப்பிற்கான மனநிலையை சமீபமாய் தொலைத்துவிட்டிருப்பதால்
சற்று அசிரத்தையான மனநிலையுடன் தான் லாவண்யா அனுப்பித் தந்த
அவர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். நான்கைந்து கவிதைகளுக்குப்
பிறகு லாவண்யாவின் உலகிற்குள் எளிதாக சம்மணமிட்டு அமர்ந்து
கொள்ள முடிந்தது. சன்னமான பெண் மனதை சின்ன சின்ன நுண்
உணர்வுகளாய், அழகியல் மென் தூவலாய், சற்றே மிதக்கும் கற்பனை
நினைவுக் குவியலாய் மாற்றியிருப்பது புன்னகையை வரவழைத்தது.
எல்லாக் கவிதைகளும் வாசிக்கும்போது மனதை லேசாக்குகின்றன.
இலகுவான மனம் கொண்டு எழுதப்பட்ட இலகுவான கவிதைகள்
வாசிப்பவரை இலகுவாக்குவதில் வியப்பில்லைதானே! தொகுப்பை வாசித்து
முடித்த பின்பு ஏனோ சிலந்திக் கூடு மெல்ல நினைவில் அசைந்தது.
ஒருவேளை ஒட்டு மொத்தக் கவிதைகளும் மென் சொற்கள் கொண்டு
எழுதப்பட்டிருப்பதால் சன்னமாய் பின்னப்பட்ட இழைக்கூடு நினைவில்
வந்ததோ என்னவோ. தெரியவில்லை.

இயற்கையின் அழகை சிலாகித்தல், இயற்கையோடு தன்னைப் பொருத்திக்
கொண்டாடுதல் அல்லது வருந்துதல், இம்மூன்றும் பல கவிதைகளில்
பதிவாகி இருக்கின்றன. பெண் அடையாளம் கொண்ட தனித்தன்மையான
இருப்பு நிலைக் கவிதைகளாக சிலவற்றை வாசித்துப் பார்க்கலாம்தான்
என்றாலும் பால் நிலை கடந்த பொதுவான உணர்வுகளே பெரும்பாலான
கவிதைகளில் இடம்பெறுகின்றன. உடல் குறித்துப் பேசவேண்டிய
இடங்களில் கூட சற்று உள்ளடங்கி உடலின் பின்னான மனதை
மட்டுமே இக்கவிதைகள் பேசுகின்றன. சில கவிதைகளில் உடலைப்
பதிவு செய்ய பயம் கொள்வதாகக் கூட எனக்குத் தோன்றியது (
இக் கருத்தை படைப்பாளியை நன்கு அறிந்திருப்பதால் தோன்றும்
விமர்சகனின் குழப்பங்களாகக் கூட வாசிக்கலாம்) மற்றபடி மூளைக்கு
அதிக அழுத்தத்தைத் தரவிரும்பாத இம்மென் கவிதைகளை வாசிப்பதில்
உருவாகும் மனநிலையை நெகிழ்வு என வரையறுக்கலாம்.

தொகுப்பிலிருக்கும் மொத்தக் கவிதைகளிலேயுமே இந்த நெகிழ்வு
பதிவாகியிருக்கிறது. எதிர்ப்பை/கோபத்தைக் கூட மென்மையாக பதிவு
செய்யும் பெண் மனம் மீதான கற்பனை வாசிப்பவர்களை ‘ரொமாண்டிச’ மன
நிலைக்குத் தள்ளுகிறது. கவிதைகளில் பதிவாகி இருக்கும் பெரும்பாலான
காட்சிகள் ரசனை மிகுந்ததவையாக உள்ளன. யாரையும் பழித்துப் பேசாது,
எதனையும் குறை சொல்லாது வெறும் பார்வையாய் காட்சியாய் மட்டுமே
கவிதைகள் நிகழ்ந்துள்ளன.

“பெருமழை தீர்ந்த பின்பொழுதில்
கண்ணாடியில்
சிறிதும் பெரியதுமாகப்
பூத்திருந்தன மழைத்துளிகள்

சென்ற பின்னும்
மனசோடு தங்கியிருக்கிறது
அசைந்தசைந்து மெல்லக் கடந்த
யானையின் மணியோசை”

ஒரு கறாரான விமர்சகனாய் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஆரம்ப
நிலை நவீனக் கவிதைகள் என வரையறுத்துவிட முடியும். ஆனாலும்
இக் கவிதைகளில் பதிவாகி இருப்பவை அந்த அளவில் நேர்மையானவை
என்பது ஆசுவாசமாக இருக்கிறது. போலச் செய்தலையோ,மிகையையோ,
பாசாங்கையோ இக்கவிதைகளில் உணரமுடியாது. வேறு யாரையும் போல
இருக்க விரும்பாத, பிடிவாதமில்லாத குழந்தையின் புன்முறுவலான
சிறு நடை தான் இத்தொகுப்பு. மற்றபடி ப்ரியம், வாஞ்சை, அப்படியே
ஏற்றுக்கொள்ளுதல், ஏக்கம், கரைவு, தண்மை, மன்னித்தல், இயலாமை
என மனதின் மேல் நிலையில் நின்று, பார்த்து எழுதப்பட்ட பல நிலைகள்
வாசிப்போருக்கு இணக்கத்தையும் நிம்மதியையும் தருகின்றன.

கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ப்ரியம் என்ற சொல்
நாவில் ஒட்டிக் கொண்டது. ப்ரியங்கள் சொற்களாய் மட்டுமே நின்றுபோன
என்னுலகில் இந்தப் ப்ரியம் என்ற சொல் ஏற்கனவே தன் நிறத்தை
இழந்துவிட்டிருக்கிறது. தவறான முகவரி எனச் சொல்லி அப் ப்ரியத்தை
லாவண்யாவிடமே கொடுத்துவிடுகிறேன். இத்தொகுப்பிற்கு என்னைப்
போய் விமர்சனம் எழுதக் கேட்டுக் கொண்டதற்கான தண்டனையாய்
அவருக்கு ஒரு இலவச அறிவுரையையும் தராமல் முடிப்பது இச்சிறு
பகிர்வுக்கு அழகில்லைதானே? அது இப்படியாகிறது

“ப்ரியங்களால் நிறைந்த ப்ரியமுள்ள லாவண்யா உங்களின் அடுத்த கவிதைத் தொகுப்பில் இந்தப் ப்ரியம் என்ற சொல்லைப் பார்க்க நான் விரும்பவில்லை”

அய்யனார் விஸ்வநாத்

Wednesday, April 29, 2015

மனத்தில் கேட்கும் மணியோசை - பாவண்ணன்


லாவண்யா சுந்தரராஜனின் இரவைப் பருகும் பறவை
பாவண்ணன்



பாப்லோ நெருதாவின் வாழ்க்கைக்கதையைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்த ”போஸ்ட்மேன்” திரைப்படம் எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு காட்சியில் நெருதா கடற்கரையோரம் நடந்தபடி இருப்பார். காதலியின் பொருட்டு கவிதைவேண்டி வந்த அஞ்சல்கார இளைஞன் அவர் பின்னாலேயே நடந்துவருவான். நெருதாவின் நடையை, எதையோ அவர் தேடிக்கொண்டு நடக்கிறார் என்று புரிந்துகொள்கிறான் இளைஞன். “என்ன ஐயா தேடுகிறீர்கள்?” என்று அப்பாவியாகக் கேட்கிறான். கவிஞர் அவனை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு “என் கவிதைகளுக்கு படிமங்களைத் தேடுகிறேன்” என்று விடை சொல்கிறார். அந்தக் காட்சி என் மனத்தில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கிறது. காட்சிகளுக்காக உடல்முழுக்கக் கண்களாக விழித்திருக்கும் கலைஞனின் தேடலை அடையாளப்படுத்தியிருந்தது அக்காட்சி.
 
காலம்காலமாக நம் கவிஞர்கள் கண்டடைந்த காட்சிகளால் நம் இலக்கியங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுகூட அந்த அபூர்வமான காட்சிகளும் அபூர்வமான தற்செயல்களும் இன்றும் புதுமை நிறைந்தவையாக உள்ளன. கன்றும் உண்ணாது கலத்திலும் விழாது தரைமீது சொரிந்தோடும் பால் என்பது ஒரு காட்சி. வெள்ளிவீதியாரின் கண்கள் அதை அழகான ஒரு கவிதையாக மாற்றிவைத்துவிட்டது. முற்றா இளம்புல்லைச் சுவைக்கிற மூத்த பசு இன்னொரு காட்சி. அது மிளைப்பெருங்கந்தளின் கண்களில் பட்டு மற்றொரு கவிதையாக மாறுகிறது. எரிமுன்னர் வைத்தூறு அழிவது ஒரு காட்சி. வள்ளுவரின் கண்கள் அதைப் பொருத்தமாகப் பயன்படுத்தி மறக்கமுடியாத ஒரு கவிதையாக வடித்துவிட்டன. எல்லாக் காலங்களிலும் படைப்பின் ஆதார வலிமையாக இருப்பது இப்படிப்பட்ட காட்சிகள்
 
காட்சிகளுக்கான தேடல் லாவண்யாவிடம் இருப்பதே, அவருக்குள்ள முதல் தகுதி. அதற்கான அடையாளம் அவர் கவிதைகளில் உள்ளது. ”இலையோடு ஓடும் ஓடை” இத்தொகுதியில் முக்கியமான கவிதைகளில் ஒன்று. அடுத்தடுத்து நிகழக்கூடிய இரண்டு தற்செயல்கள் இக்கவிதையில் முன்வைக்கப்பட்டுள்ளன. மரத்திலிருந்து விழும் ஓர் இலை திக்குத் தெரியாமல் மிதந்து மரத்தடியில் ஓடிக்கொண்டிருக்கிற ஓடையொன்றில் விழுகிறது. இலைக்கு எவ்விதமான பற்றும் இல்லை. ஓடை இழுத்த இழுப்பில் ஓர் ஓடம்போல நகர்கிறது. இது ஒரு தற்செயல். அங்கே தெறித்து விழுந்த ஒரு நீர்த்துளி ஓடம்போல நகரும் இலையின்மீது தற்செயலாக விழுகிறது. இது அடுத்த தற்செயல். மிதக்கும் இலைமீது நீர்முத்து. குழந்தையைத் தாலாட்டுவதுபோல நீர்முத்தைத் தாலாட்டுகிறது இலை. இக்காட்சிமீது நாம் அர்த்தங்களின் சுமையை ஏற்றுவது எளிது. எதார்த்த வாழ்வோடு இணைத்து, அதற்கு ஒரு பொருளை நாம் வழங்கலாம். அது காற்றில் பறக்கிற ஒரு பட்டத்தை, தரையை நோக்கி இழுப்பதுபோல. நிச்சயமாக அது பார்வையின் ஒரு கோணம். காட்சியை அது வழங்கக்கூடிய பரவசத்துக்காகவே பார்க்கலாம் என்பது இன்னொரு பார்வை.

பூவொன்று” என்பது இன்னொரு கவிதை. மஞ்சள் மலர்களை உதிர்த்தபடி நிற்கிறது ஒரு மரம். நிழலுக்காக அம்மரத்தடியில் ஒதுங்கி நிற்கிறது ஒரு பேருந்து. முன்கண்ணாடியில் மலர்கள் விழுகின்றன. விழும் மலர்களை கண்ணாடியின் வைப்பர் தாங்கியிருக்கிறது. வைப்பரால் தாங்கமுடியாத மலர்கள் தரையில் உதிர்ந்துபோகின்றன. புறப்பட்ட பேருந்தில் வைப்பர் இயங்கத் தொடங்குகிறது. பூக்கள் ஒவ்வொன்றாக உதிர்கின்றன. பெண்டுலமாக ஆடுகிற வைப்பர் கம்பியில் சிக்கி சில பூக்கள் கிழிந்து சிதறுகின்றன. சிதறவும் முடியாமல் பொலிவுடன் இருக்கவும் முடியாமல் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டு கசக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன சில பூக்கள். கவிதையைப் படித்து முடித்ததும் எவ்வளவு அழகான கவனிப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்களா, ஏழைகளா, குழந்தைகளா, யார் அல்லது எது இந்தப் பூ என்றொரு கேள்வியை முன்வைத்து, இக்கவிதைக்கு பல தளங்களை உருவாக்க முடியும். எந்தத் தளத்தை நோக்கியும் செல்லாத நிலையில்கூட இக்காட்சியின் எளிய அழகு மனநிறைவை அளிப்பதாகவே உள்ளது. லாவண்யாவின் கவிதை இத்தோடு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய அதீத ஆர்வத்தால் அவரும் அக்காட்சியின் ஒரு பகுதியாக மாற நினைத்துவிடுகிறார். அதன் காரணமாக, காலத்தைத் தாண்டிய சித்திரத்தன்மை உள்ள ஒரு காட்சியை, எதார்த்தத்தளத்துக்கு இசைவான ஒன்றாக மாற்றும்வகையில் நான்குவரி கூடுதலாக எழுதிவைக்கிறார்.
 
சின்னஞ்சிறு வெளிச்சமாக கிளையிடை நுழைந்து பெருமர நிழலில் இளைப்பாறும் வெயில் என்பது அவர் காட்டும் இன்னொரு காட்சி. வெயில் கடுமை தாளாமல் நிழலில் இளைப்பாறும் மனிதர்கள் உண்டு. விலங்குகளும் உண்டு. வெயிலே வந்து இளைப்பாறும் காட்சியின் சித்தரிப்பு மிகநல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ”அழகிய கோலங்கள் கூட வாசல் தாண்டி உள் வருவதில்லை” என்ற வரியும் படித்ததுமே மனத்தில் பதிந்துவிடுகிறது.
 
நிகழ்வின் பின்” என்னும் கவிதை சில காட்சிகளின் தொகுப்பாகவே உள்ளது. உணவருந்திய மேசைமீது கை துடைத்தெறிந்த காகிதங்கள் ரோஜாப்பூவாக மலர்ந்திருக்கின்றன என்பது ஒரு காட்சி. பெருமழை தீர்ந்த பின்பொழுதில் கண்ணாடியில் சிறிதும் பெரிதுமாக மழைத்துளிகள் பூத்திருக்கின்றன என்பது இன்னொரு காட்சி. மனசோடு தங்கியிருக்கிறது அசைந்தசைந்து மெல்லக் கடந்த யானையின் மணியோசை என்பது மற்றொரு காட்சி. முதல் இரண்டு காட்சிகளைவிட மூன்றாவதாக உள்ள யானையின் மணியோசைக்கு கூடுதல் அழுத்தம் உண்டு. பூவாக உருவகிக்கப்படுகிற காகிதமும் மழைத்துளியும் கண்முன்னால் இன்னும் உள்ளன. மணியோசைக்கு அப்படி எந்த இருப்பும் இல்லை. யானை அசைந்து அசைந்து கடந்துபோய்விட்டது. மணியோசையும் இல்லை. ஒரு பெளதிக இருப்பு சூட்சும இருப்பாக மாறி, பெளதிகத்தை மனத்தடியில் சுட்டியபடி இருக்கிறது
 
சூட்சும இருப்பை முன்வைக்கும் மற்றொரு கவிதை ”மழை சென்ற பின்னே”. மழை பொழிந்து நின்று விடுகிறது. மழையில் தெப்பமாக நனைந்த மரங்களெல்லாம் பசுமையைப் போர்த்தியிருக்கின்றன. மழையின் நினைவாக ஈரத்தை வைத்துக்கொள்கிறது காற்று. மழையின் அடையாளமாக தரையும் குளிர்ந்திருக்கிறது. மழை இல்லை. ஆனால், மழையின் அடையாளத்தை ஒவ்வொரு உயிரும் பொருளும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

மீன்குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும் கவிதையும் மிக இயல்பான ஒரு காட்சியிலிருந்து கிளைத்தெழும் கவிதை. புதிதாகப் பிறந்த மீன்கள் விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுள்ளன. பிறந்த இடத்தின் நினைவுகளாக பிளாஸ்டிக் பையெங்கும் உயிர்காக்கும் நீராக நிறைந்திருக்கிறது. ஆசையோடு அதை வாங்கிச் செல்கிறது ஒரு குழந்தை. பிளாஸ்டிக் பையிலிருந்து மீன்கள் தொட்டிக்கு மாற்றப்படுகின்றன. மலங்க மலங்க விழித்த மீன்குட்டி தொட்டி நீருக்கு சிறுகச்சிறுகப் பழகி, நீந்தத் தொடங்குகின்றன. பழகுவதிலும் இசைந்துபோவதிலும் வலி இல்லாமல் இருக்காது. ஆனால் நீந்துவது அல்லவா மீன் வாழ்க்கை? அது குட்டையாக இருந்தால் என்ன, தொட்டியாக இருந்தால் என்ன?

(02.01.2012 அன்று நடைபெற்ற காலச்சுவடு கவிதைநூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் லாவண்யா சுந்தரராஜனின் “இரவைப் பருகும் பறவை” கவிதைத்தொகுதியை வெளியிட்டு நிகழ்த்திய உரையின் எழுத்துவடிவம்)

Tuesday, September 2, 2014

லஷ்மண ராஜா மேனகா கல்யாண வைபோகமே....

சில பொழுதுகள் விடியும் போதே இனிய நிகழ்வுகளைக் கொண்டு வரும். அப்படிப்பட்ட ஒரு தினமே 31.8.2014. அது லஷ்மணராஜா என்கிற இரவணன் தன்னுடைய நீண்ட நாள் சகியுடன் கரம் கோர்த்த நற்தினம். அன்று அதிகாலை முதல் இரவு கருமையை போர்த்திக் கொள்ளும் வரை பல்வேறு மகிழ் தருணங்கள் என்னிடம் வந்து சேர்ந்தது. எனது நாத்தனாரின் புதுமனையில் தொடங்கியது அன்றைய தினம். அங்கிருந்து காலை 7 மணிக்கெல்லாம் கள்ளக்குறிச்சி கிளம்பினோம். ரம்யமான காலைப் பொழுதில், காற்று கடலலை போல் அடித்து கூந்தல் கலைக்க, "சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது" போன்ற சுந்தர கானங்களை கேட்டுக் கொண்டு, தம்மப்பட்டிக்கு சற்று முன்னர் தொடங்கி ஆத்தூர் வரை நானே சிற்றுந்தை ஓட்டி சென்றது என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிக மகிழ்வான தருணம். பக்கத்து இருக்கையில் ஒருவேளை அவர் பயந்து கொண்டே வந்திருக்கலாம். 

தற்சமயம் நினைத்துப் பார்க்கிறேன், நான் விழியன் திருமணத்திற்கும் 7 மணிக்கு தான் கிளம்பினேன். வேலூரில் 9 மணி திருமணத்திற்கு காலையில் 7 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பினேன். (ரசிகவ் அதனை மிகுந்த நகைச்சுவையோடு தனது பதிவில் கூட எழுதி இருந்தார்). அன்று மணமகளும் மணமகனும் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பி வீட்டுக்கு செல்ல வெளியில் வந்த தருணம், வாழ்த்தி விட்டு திரும்பினேன். தற்சமயம் அப்படியில்லாமல் இந்த திருமண வரவேற்ப்பில் முன்னரே சென்ற காரணத்தால், மணம் முடிந்து வந்த மணமகனையும் மணமகளையும் மணக்கோலத்தில் மண்டபத்தின் வாயிலில் வரவேற்க்க முடிந்தது.





   லஷ்மண் பெரும்பாலும் பெயர் மாற்றி அழைக்கும் வரம் பெற்றிருந்தார். அவருடைய திரைக்கதையை வடிவமைக்கும் போது என்னை தொலைபேசியில் அழைப்பார், சில பல சந்தேகங்கள் என்பார், இடைஇடை கேள்வி நடுவில் என்னை அனிதா(ஆம் அதே அனிதா ஜெயகுமார் தான்) என்று அழைப்பார். அனிதா லஷ்மணின் சிறந்த தோழி, லஷ்மண் அனிதாவை பற்றி அடிக்கடி சொல்லி இருந்தார். பெங்களூர் வந்ததும் நான் முதலில் சந்திக்க நினைத்தது அனிதாவை தான். (லஷ்மணின் திருமண வரவேற்பில் தான் அனிதாவை சந்திக்க கிடைத்தது. அது எனக்கு பேரானந்தம், இன்னும் சற்று முன்னரே இந்த வரவேற்ப்பை நடத்தி இருக்கலாம்). அதே போல் திருமண பத்திரிக்கையை எங்கள் இல்லத்தில் வந்து கொடுத்த தினம் தொலைபேசியில் அனிதா அழைத்த போது, இடையில் இல்லை லாவண்யா என்றார். :)

  மேலும் பத்திரிக்கையை நேரில் தர வேண்டும் என்று பெங்களூரின் மூம்முனைகளில் இருக்கும் லாவண்யா, கார்த்திகா மற்றும் முகுந்த் மேலும் அனிதா என்று சிரமம் பாராமல் வந்த போது, லஷ்மனுடன் சற்று அளவளாவ நேரம் கிடைக்குமென்று, அவருடன் சென்ற காரணத்தால் கார்த்திக்கா, முகுந்த் மற்றும் நேயமுகிலையும் சந்திக்க முடிந்தது. இதையே லஷ்மண் தனது திருமண வரவேற்ப்பு பாதாகையில் "மரம் அழைக்கிறது, மரத்தடியில் கூடும் அனைவரும் தோழமை பூண்கிறோம்" என்று எழுதி வைத்திருந்தார் போலும். அவருடைய திருமணத்தில் சொந்தங்களுக்கு இணையான எண்ணிக்கையில் தோழர்/தோழியர் வந்திருந்தது அவரின் உன்னதமான நட்புக்கு சாட்சி.



  லஷ்மணின் அனைத்து படைப்புகளும் மிக நேர்த்தியான, வித்தியாமான மற்றும் அழமான சிந்தனை பின்புலங்களை கொண்டது. "வெளிச்சம் பயத்தை ஏற்படுத்த தொடங்கும் முன்பு, இருளில் செய்த அனுமானமும் பாதையும் எளிதாக இருந்தது"  போன்ற கவிதையும், "நீர்வழி படூம்" போன்ற குறும்படமும் இவரின் நெடும் தேடல்களின் அடையாளம். அத்தகைய தேடல் அவருடைய திருமண அழைப்பிலும் இருந்தது. சங்க காலத்தில் திணை கடந்த காதல் உண்டா என்று தேடித் தேடி, திணை தாண்டிய காதல் சங்கத்தில் இல்லை என்று "மலையும் குகையும் அவள் கனவு, கடல் பார்த்தல் அவன் கொள்ளை ஆசை" என்று தனது சொந்த வரிகளில் வடிவமைத்திந்தார், (அனிதா தன் அழைப்பிதழில் குறுந்தொகை பாடலை தந்தது போல நினைவு. good friends think alike). லஷ்மணின் தேடலுக்கு மற்றுமொரு உதாரணம் திருமண வரவேற்பிலிருந்த மற்றுமொரு பாதகை. பாரதியின் பாடல் அது. அப்படி ஒரு பாடலை பாரதியார் கவிதைகளில் கேட்டு அறிந்தது இல்லை. இவருடைய கூழாங்கற்கள் நிறுவனம் மற்றுமொரு கலை நேர்த்திக்கான உதாரணம்.



  குறிக்கோளுக்கென்றும், எளிமைக்கென்றும், தன் சிந்தனை சரியென்றால் அதனை செயல்படுத்த பிறர் என்ன நினைக்ககூடும் என்ற தயக்கமற்ற பாசாங்கற்ற தெளிவே லஷ்மணின் தொடர் வெற்றிகளுக்கு காரணமென்று நினைக்கிறேன்.  புகைப்பட கலையில் கொண்ட பெரும் ஈடுபாடுகெனவும், சினிமா மேல் கொண்ட கொள்ளை கனவுக்கெனவும், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, திருமண நிகழ்வுகளை சந்தோச தருணங்களை பதிவு செய்யும் வேலையை செய்ய எத்தனை அசாத்திய துணிவு வேண்டுமோ, அதே அளவிற்கான துணிவினை கொண்டிருந்தது லஷ்மணின் திருமண வரவேற்ப்பு. இத்தனை எளிமையான மிக அழகான ஒரு மணமேடையை சமீபமாய் எந்த திருமணத்திலும் நான் பார்க்கவில்லை. 



அதே போன்ற மற்றுமொரு முயற்சி தான், முற்றிலும் இயற்கை உணவுமுறை சிறுதனிய உணவு விருந்து. எல்லா நிகழ்வுகளிலும் அவர் தனித்துவம் மிளிர்ந்து கொண்டிருந்தது. ஓவியர் ஒருவர், வந்திருந்த அனைத்து குழந்தைகளில் ஒவியத்தை வரைந்து தந்த வண்ணமிருந்தார். பின்னர் குழந்தைகளுக்கு பனை ஓலையில் பின்னப்பட்ட கிலுகிலுப்பை கொடுக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் திருமணம், வரவேற்ப்பு மேடையில் திருப்பாவை என்று மொத்தத்தில் மிக நிறைவான நெகிழ்வான நிகழ்வு லஷ்மணராஜா மற்றும் மேனகாவின் திருமணமும் அவர்களது வரவேற்ப்பும். அவர் இருவரும் சுவாதிக்கா சொல்வது போல சின்ன சின்ன சண்டைகள் போட்டு உடனுக்குடன் பெரிய சமாதானம் ஆகி சந்தோகம் பொங்க வாழ வாழ்த்துகிறேன்.




பின்னர் இணைக்கப்பட்ட அறிமுகம்:
லஷ்மணராஜா 2006 முதல் தெரியும். முத்தமிழ் என்ற இணைய குழுமத்திலிருந்து அறிமுகம். விழியன், நிலாரசிகன், ப்ரியா, ரசிகவ், ஷைலஜாக்கா, மஞ்சூர் அண்ணா என்று எம் நட்பு குழுவில் என்றைக்கும் எந்த போட்டி பொறாமை வெட்டி பேச்சுக்கு  இடமில்லை. முதன்முதல் லஷ்மணை சந்தித்தது இந்திரா நகர் பறக்கும் ரயிலில். அந்த சந்திப்பு நான், லஷ்மண், நிலாரசிகன் அனைவரும் ஷைலஜா அக்கா வீட்டுக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற போது நடந்தது. பார்த்ததும் மனவெளியின் ஆழத்திற்குள் வந்தமரும் ஒரு சிலரில் லஷ்மனும் ஒருவர். இந்த நேர்மையான நட்பை விவரிக்க தமிழில் வார்த்தைகள் குறைவு. சகதோழனாக என் வாழ்வில் துன்பமிக நாட்களையும், மிக இன்பம் தோய்ந்த நாட்களையும் கவனித்தவர் இவர். லஷ்மன் இல்லத்திற்கு பணி நிமித்தம் ப்ரிதாபாத்திலிருந்து வந்திருந்த சமயம் லஷ்மணின் அம்மாவின் கையால் ஒரு நாள் முழுதும் மூன்றுவேளையும் உண்டிருக்கிறேன். இந்த திருமணத்திலும் என்னை லஷ்மணின் அன்னை என்னை அன்புடன் கண்ணு என்று அழைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். 

Saturday, March 8, 2014

மகளிர் தினம்




இன்று மகளிர் தினம். எனக்கு இந்த தினத்தை கொண்டாடுவதில் அத்தனை உடன்பாடில்லை. என்றாலும் ஊரோடு ஒட்டி வாழ் என்று இன்று எனக்கு வரும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறேன். வாழ்த்துகிறேன். நேற்று மகளிர் தினவிழாவில் அலுவலத்தில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த மகளிர் தின கருத்தாக்கத்தில் உடன்பாடில்லை.

நான் இப்படி சொல்வதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. எனக்கு பெண் என்ற தடை என்றைக்குமே இருந்ததில்லை. எதை செய்ய நினைக்கிறேனே அதை செய்ய என்னால் இயலும். இடைவிடா முயற்சி மட்டுமே இதற்கு துணை புரிந்ததே அன்றி, நான் பெண் என்ற அடையாளம் இல்லை.

எனக்கு என் பார்வைக்குள் நடக்கும் அநியாயங்களை பொருத்து கொள்ள இயலாது. நான் BSF Polytechnique, Batharpur Delhi யில் பணி புரிந்த காலம் அது ஒரு இருபாலினர் கல்லூரி. ஒரு முறை சில ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். நான் அப்போது தான் அங்கே பணி புரிய ஆரம்பித்திருந்தேன். என்னுடன் இருந்த ஆசிரியை "கண்டுக்காம வாங்க லாவண்யா, இவங்க எல்லாம் ரௌடிங்க, மேலும் பெரிய ஆபிசர்ஸ் மகன் நாம் பிரிஸ்பாலிடம் புகார் அளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போதே ஒரு பையன் கொத்தாக பிடித்து ஒரு அறை விட்டேன், ஒருவன் மட்டுமே சிக்கினான் மற்றவர் எல்லோரும் ஓடி போயினர். பின்னர் அது பெரும் பிரச்சனை ஆகி எல்லாம் சரியானாலும் அந்த நிறுவனத்தை விட்டு வரும் வரை அனைவரும் சிலேகிக்கும் புலான் தேவியானேன். 

என்னால் சில விசயங்களை சகித்து கொள்ளவோ பொருமையாக போகவோ இயலாது. உதாரணத்துக்கு வேண்டுமென்றே சாலை விதிகளை மீறி, போக்குவரத்து நெரிசல் உருவாகும் சில இடங்களில் அலுவலக கேப் ஆகட்டும், எங்கள் சொந்த வண்டியாகட்டும் தயங்காமல் இறங்கி போய் சமதானமோ சத்தமோ போட்டு ஓரளவுக்கு பிரச்சனையை சரி செய்ய பார்பேன், சில முறை அது பெரிதாகவும் போய்விடும். ஒரு முறை அவ்வாறு பிரச்சனை செய்த வண்டி ஹரியான மாநில அமைச்சருடையதாம், உள்ளே ஏகே47 வைத்துக் கொண்டு இருந்தார்கள். நன்றாக சண்டை போட்டுவிட்டு வண்டிய நகர்த்தி விட்டு, வந்து அமர்ந்த உடன், வண்டி ஓட்டும் பையன் சொன்னான் "என்ன அக்கா பயமில்லாமல் இப்படி போய் சண்டை போடுங்க, கையில் வைச்சி இருக்கறதுல பொட்டு போட்ட என்ன பண்ணுவீங்க" என்றான். கொஞ்சம் பயம் அப்போது தான் வந்தது. இருந்தாலும் நான் செய்தது என்ன தவறு என்று சொன்னேன். கூட பயணிக்கும் தோழர், தோழியர் "லாவண்யா இப்படி எல்லாம் செய்ய கூடாது. கொஞ்சம் பொருமையா இருக்கனும்" என்றார்கள். என் கணவரும் அதையே தான் சொல்வார். இருந்தாலும் நான் இப்படி இருப்பதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை.

மற்றுமொரு சம்பவத்தில் நாங்கள் குளித்தலையிலிருந்து சென்னை செல்லும் மங்களூர் விரைவு வண்டியில் ஏறினோம். இரவு மணி 9. அடுத்த இருக்கைக்காரன் குடித்திருந்தான், ஒரிரு கெட்ட வார்த்தைகள் பேசினேன். பின்னர் நானும் என் கணவரும் அங்கே இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். திருச்சி வர சற்று நேரம் இருந்தது. மணி 9.30 தான் இருக்கும்,  அந்த குடிகாரன் "என்ன ஒரே சவுண்டா இருக்கு சலசலன்னு பேசிட்டு, மனுசன் தூக்க வேண்டாமா" என்று ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்ட போக, வேகமா எழுந்து போய் "ஏய் என்ன குடிச்சிட்டு வந்து கலட்டா பண்றீயா போலீஸ் ல சொல்லவா" என்றதும் "ஒரு பொம்பள போலவா பேசற, ரௌடி கணக்கா" என்றான். உடனே "நான் பொம்பளன்னு உனக்கு யார் சொன்னா" என்றேன். அது அசாதரணமாக வந்த வார்த்தையில்லை. எனக்குள் ஆணித்தரமாக கிடக்கும் எண்ணம். நான் பெண் என்பதில் பெரும் பெருமை கொண்டவள். நான் பெண் மட்டுமில்லை,  கருணை ஊற்றானவள், அனைவர்க்கும் உதவுபவள், அநியாயத்திற்கு பொங்கி எழும் ஆயிரம் கரம் கொண்டவள், பெரும் சக்தி. எனக்கு எழும் அவமானம், மரியாதையின்மை, துவேசம் அனைத்தையும் ஆயுதமாக அணிந்தவள். 

இத்தனை பேறாற்றல் ஒவ்வொரு பெண்ணிலும் உண்டு. ஆகவே அந்த பெரும் சக்தியின் அதிரூபத்தை கொண்டாட, ஒரு நாள் போதுமா? ஜனிக்கும் ஒவ்வொரு நொடியும், யுகமும் அவர்களுடையதல்லவா?

Friday, February 21, 2014

பிழை பொறுத்தருள்க

கடந்த ஏழு வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன். கிட்டதட்ட 380 பதிவுகள் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, புத்தக விமர்சனம், திரை விமர்சனம், பயணக் கட்டுரை, பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், இவை எதிலும் வகைபடுத்த இயலாதவை என்று என்னென்வோ எழுதி இருக்கிறேன். முத்தமிழ் என்ற இணைய குழுமத்தின் மூலமே நான் எழுத வந்தேன். எழுத ஆரம்பித்த போது தமிழில் தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள் விடுவேன். (தற்சமயமும் அப்படியே, பிழைகள் குறைந்திருந்தாலும் அறவே அற்று போகவில்லை). இன்று கூட தொலைந்து போதல் என்ற என்னுடைய பழைய பதிவு ஒன்றில் மூன்று பிழைகளையும், பண்ணையாரும் பத்மினியில் ஒரு பிழையையும் திருத்தினேன்.

  தமிழில் எழுதும் போது மட்டுமல்ல ஆங்கிலத்தில் எழுதும் போதும் கூட பிழைகள் செய்வது சர்வ சாதாரணம். நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விசயமாக(area to improve) அலுவலகத்தில் ஓரிரு முறை பிழையின்றி மடல் எழுத வேண்டும் என்று கூட குறிப்பிட்டு இருந்தார்கள். எனக்கு எழுத்து வடிவமாய் எழுதும் ஆங்கிலத்தில் தான் பிரச்சனை (written english) ஆனால் பேச்சு வழக்கு(spoken english) மிக அற்புதமாக வரும். அதுவும் அலுவலக பணி நிமித்தம் யாரிடம் பேசினாலும் மிக சரளமாக என்னால் பேச முடியும். ஒரு ஒலிபெருக்கியை கையில் கொடுத்து விட்டால் போதும் மணிக்கணக்கில் பேச முடியும். இத்தகைய பிரச்சனைக்கு காரணம் எனக்கு பில்டிங் ஸ்ரான்ங் ஆனா பேஸ்மெண்ட் வீக். 

  நான் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்றது தமிழ் வழி கல்வியில் அதனால் எனக்கு ஆங்கில அறிவும் மேலும் ஆங்கில வார்த்தைக் கலனும் மிகக் குறைவு. ஆங்கில வார்த்தைக்கு இந்த எழுத்து வருமா அந்த எழுத்து வருமா என்ற குழப்பமும் அதிகம் வரும். அது மட்டுமில்லாமல் ஐந்தாம் வகுப்பு வரை நான் படிக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பா இருவரும் ஆசிரியர்கள், அதனால் சிறு வகுப்புகளில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. இந்த காலத்தில் கொடுப்பது போல வீட்டுப்பாடம் எங்கள் அன்னை, பிதாவிற்கு அப்போதெல்லாம் எங்கள் மூலம் கொடுக்கப் படவில்லை, அதனால் வீட்டிலும் படிப்பதில்லை, பள்ளியிலும் படிப்பதில்லை. ஆறாம் வகுப்பு வந்த பின்னர் மற்ற குழந்தைகளில் அறிவும் மேலும் அன்னை, தந்தை வேலை பார்க்கும் பள்ளியில் அனைத்து ஆசிரியரிமுடம் புத்திசாலி என்று பெயர் வாங்க வேண்டும் என்ற சித்தியும் உந்தி தள்ள தத்தி தடவி ஏதோ படிக்க ஆரம்பித்தேன்.  

  நான் ஏழாம் வகுப்பு  படிக்கும் போது என்னுடைய ஆங்கில ஆசிரியர் ஒரு முறை தந்தை எழுதுவது போல விடுமுறை விடுப்பு எழுதி வரச் சொன்னார். எனக்கு தெரிந்து முதல் வீட்டுப்பாடம் அது தான் என்று நினைக்கிறேன். அப்பாவிடம் இதை சார்ந்து கேட்க மறந்து போயிந்தேனோ அல்லது தயக்கமோ நினைவில்லை. வீட்டில் கடிதம் எழுதாமல் பள்ளிக்கூடம் போய் சேர்ந்து, அவசர அவசரமாக என்ன எழுதினேன் என்று தெரியாது, ஒவ்வொரு வார்த்தைக்கு கீழும் சிவப்புக் கோடு, உச்சகட்டம் என்னவென்றால் என் தந்தையின் பெயர் சுந்தரராஜன், R.சுந்தரராஜன், அவர் படித்த பள்ளியில் இரண்டு R.சுந்தரராஜன்கள் இருந்ததால் உப்பலியபுரம் R.சுந்தரராஜன். அதாவது U.R.சுந்தரராஜன், அந்த பெயரை கூட முழுதாக எழுத தெரியாமல் yours sincerely, URS( அப்பாவை பள்ளியில் அனைவரும் URS Sir என்றே அழைப்பார்கள்) என்று எழுதி வைத்திருந்தேன். ஆங்கில ஆசிரியர் மிகுந்த கோபத்துடன் "எவ்வளவு திமிர் என்றால் URS என்று எழுதுவாய் அது நாங்கள் எங்க வசதிக்காக அழைக்கும் பெயரல்லவா?" என்று அனைவர் முன்னிலையில் திட்டியது மட்டுமில்லாமல் அந்த கடிதத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டார். அம்மா விளையாட்டு ஆசிரியை, அனைவர் முன்னிலையிலும் ஓங்கி ஒரு அறை விட்டார். அன்றிலிருந்து ஒழுங்காக படிக்க ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

 எழுதும் போது பிழையின்றி எழுத இயலாமல் போவதற்கு கவன குறைவும், அவசர புத்தியும் மிக முக்கியமான காரணம். மேலும் சில இடங்களில் ஒற்றுப்பிழையும் ரகர, றகர மயக்கமும் எனக்கு மிக அதிகமாக உண்டு. பல முறை படித்து பார்த்தாலும் என் கண்களுக்கு சில பிழைகள் தென்படுவதே இல்லை. இவ்வாறு பிழையோடு எழுதும் காரணத்தால் பல முறை அவமானமும், பிழையோடு எழுதினால் கவிதை தெரியாமல் பிழை தான் கண்ணுக்கு தெரிந்து கவிதையின் அழகு கெடுகிறது என்ற சாடலும், பிழையின்றி எழுத தெரியாமல் ஏன் எழுத வந்தீர்கள் என்ற வசையும், பெருங்குற்ற உணர்வும் என்னை ஏகத்துக்கு ஆட்டி படைக்கும். எழுதவே வேண்டாமே என்று கூட அடிக்கடி நினைப்பேன்.

  முத்தமிழில் எழுதிக் கொண்டிருந்த சமயம் மஞ்சூர் அண்ணா என்னுடைய எல்லா பதிவுகளுக்கு பிழை திருத்தித் தருவார். நதியலைடாக்டர். சிவசங்கர், டாக்டர். சங்கர், நிலாரசிகன் அவர்களும் அந்த உதவியை செய்து இருக்கின்றார். பண்புடனில் எழுதும் போது சில சமயம் ஐயப்பன் கிருஷ்ணன் உதவி இருக்கிறார். சா. முத்துவேல் வலைச்சரத்தில் சில பதிவுகளுக்கு பிழைத் திருத்தி தந்திருக்கிறார். கவிதை தொகுப்புகளுக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன், தயாளன், கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று பலரும் பிழைகளை நீக்க உதவி இருக்கின்றார்கள். இதே உதவியை செய்த வேறு சிலரை நான் மறந்து விட்டிருக்கலாம். அனைவரையும் நன்றிகளுடன் நினைவு கூர்கிறேன். மேலும் என்னுடைய பிழைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஆகவே என் சகோதர சகோதரியரே நட்புகளே அன்போடு உங்களிடம் நான் கேட்டு கொள்வதெல்லாம் ஒன்று மட்டுமே. அறியாமல் தெரியாமல் நான் "பேயானாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே" இது எழுத்துப்பிழைக்கு மட்டுமின்றி என்னுடைய ஏனைய எல்லாப் பிழைகளுக்கு சேர்த்ததாகவே இருக்கட்டும் அது.

Monday, December 30, 2013

ஈதேன்ன பேருறக்கம்?

 மார்கழித் திங்கள் பக்தி இலக்கியம் சார்ந்த ஒரு பதிவை இந்த வருடம் பதிக்க வேண்டும் என்று மார்கழி முதல் தேதியே நினைத்திருந்தேன், ஆனால் சோம்பலும் தூக்கமும்(உறக்கம் என் பலகீனம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரம் உறக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்) உலகிற்கு கிடைப்பதற்கரிய பல விசயங்களை என்னை பதிப்பிக்க விடாமல் தொடர்ந்து தடை செய்கிறது. மார்கழி பனிரெண்டாம் நாள் திருப்பாவையில் "இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்" என்ற படித்த போது என்னை தான் சாடினாளோ ஆண்டாள் என்று தான் நினைத்தேன். இந்த பேருறக்கத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு இன்று எழுதி விடவேண்டும் என்று நினைத்து அலுவலகம் அடைந்த போது(பொதுவாக நான் எழுதுவது அலுவலத்தில் தான்) என்னை தவிர என் குழுவில் அனைவரும் விடுப்பெடுத்திருந்த காரணத்தால் இன்னொருத்தரின் சுமையை சுமக்கும் பொறுப்பு வந்து இடைபட ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை சார்ந்த எந்த பதிவையும் பதிப்பிக்க இயலாமல் போனது.  ஆனால் இன்று மார்கழி 15ஆம் நாள் சற்று எள்ளலாக ஆண்டாள் என்னை கேட்டாள் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதையோ?"  எழுத தொடங்கியாயிற்று.



உறக்கத்தை பல்வேறு விதமாக சொல்லி இருக்கிறார் ஆண்டாள். என்ன இப்படி துயில்கிறாய் குர்பகர்ணன் உறக்கத்தை உனக்கு தந்து விட்டானா என்றும், துயிலணை மேல் கண் வளரும்(கண் வளர்ந்தல் - அட போட வைக்கும் சிந்தனை), பேருறக்கம்,  மந்திரிக்க பட்டது போல ஏமப் பெருந் துயில் என்று பல்வேறு உறக்கத்தை பட்டியலிட்டு மிக அதிகாலை நேரத்தில் ஊரையே உறக்கத்திலிருந்து எழுப்பி, "குள்ளக் குளிரக் குடைந்து நீராடாடி", கண்ணனை தொழ அவன் இல்லம் தேடிச் சென்று வாயில் காவலனை எழுப்பி கண்ணின் பெற்றோரை எழுப்பி, பின்னர் கண்ணனையே எழுப்பி(கண்ணனும் கடும் சோப்பேறி தான், உலகின் பெரும் பகுதி கடல், அதில் பள்ளி கொண்ட பெருமாளை, திருப்பள்ளி எழுச்சி பாடி பாடி எழுப்பியவர் எத்தனை பேர், இன்னும் அவன் எழுத பாடில்லை). இத்தனை ஆரவாரத்தோடு பத்தியை கொண்டாடுகிறாள், தென்நாட்டு ராதை ஆண்டாள்.  பக்தி இலக்கியத்தில் கடவுள் மேல் காதல் கொள்வதே பக்தியின் உச்சகட்டம்.   ஆண்டாள் மட்டுமல்ல ஆழ்வார்களில் சிலர், திருவெம்பாவை எழுதிய மாணிக்க வாசகரும் இவ்வாறே. இதில் சில்லென்று (சில்லென்றெழையென்மின் என்பதும் ஆண்டாள் சொன்னதே) பக்தியை, காதலை தேன்மதுர தமிழை இனிக்க இனிக்க சொல்லி இருக்கின்றார்கள். இன்றைக்கு காலையில் "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்"என்ற மாணிக்க வாசகர் வரிக்கு "நீயே என் தலைவன் என்று ஒற்றைகாலில் சிவதவம் செய்யும் பூச்செடிகள்" என்ற விளக்கம் சொன்ன மாணிக்க வரிகளை படித்தது இன்றைய நாளை தொடங்க போதுமானதாக இருந்தது.





"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" இந்த ஒருவரி போதுமானது பிரமாண்டமான சிவபெருமானை,(பெங்களூருவில் முருகேஷ்பால்ய அருகில் ஒரு பிரமாண்ட சிவன், 108 சிவ லிங்களும் உள்ள கோவில் உள்ளது, சிவ பெருமான் என்றால் அந்த பிரமாண்ட வெண் சிலையே நினைவுக்கு வரும்) அவன் அற்புத வடிவத்தை விளக்கி கூறிட. திருவெம்பாவையிலும் துயில் எழுப்புவது போன்ற காட்சிகள் சில உண்டு, இங்கும் மார்கழி மாதத்தில் நோன்புண்டு, அதிகாலை  "குள்ள குளிர" மார்கழி நீராடலுண்டு, "மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி" வண்டுகள் மொய்க்கும் குளத்தில் (அப்படின்னா பூக்கள் நிறைந்திருக்கு), கையால் குடைந்து குடைந்து குளித்தோம் என்றும் இடத்தில் வனப்பமும்(பூக்களை கைகளால் தள்ளி விட்டு விட்டு குளிக்கின்றனர்), இயற்கை எழிலை ரசனையை ரசிக்கக் கொடுத்திருக்கிறார் மாணிக்க வாசகர். "பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்"(திருவெம்பாவை - 13) இந்த பாடல் மிக வியப்புடையது கன்னி பெண்கள் நீராடும் பொதிகையையே சிவனாகவும் பார்வதியாக பாவித்து நீராடாடுவது போல் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது. மறுமைக்கு வழிகாட்டலாவே அவன் "இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதந்தந்தருளுங் சேவகனே" என்றும் சொல்கிறார் மாணிக்கவாசகர். "முன்னிக் கடலைச் சுருக்கி"(திருவெம்பாவை -16) பாடலில் மாணிக்கவாசகர் மழையை பார்வதிக்கு ஒப்பிட்டு பாடுகிறார். திருவெம்பாவையில் பாடல்களில் இறையாய் சிவனும் பார்வதியும் சேர்ந்தே போற்றபடுகின்றனர்.

  பக்தி இலக்கியத்தில் கோவிந்தனை ஈசனை போற்றி வீடு பேறு பெற பெரிதாக ஆறு கால பூசையும் பட்டும் பட்டாசையும் பலவகை நேவேத்தியமும் எதுவும் செய்ய தேவையில்லை "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" நம் துயர் அனைத்தையும் போக்குவான் என்று எளிமையை ஆண்டாளும்,  "விண்ணுகொரு மருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினாயானை பாடிக்கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுகுருக" என்று மாணிக்க வாசகரும் கற்றுத்தருகின்றனர். மாணிக்க வாசகர், ஆண்டாள், மாணிக்க வாசகம் போல் இறைவன் மீது காதலாகி கசிந்துருகவிடுனும் இறையை அவர் பாடல்களால் போற்றுதல் எம் தீம்தமிழுக்கு நம்மாலான சிறுதொண்டு. பத்தி இலக்கியத்தில் தித்திக்கும் தமிழும், இறையனுபவமும் போற்ற தக்கவை. இறை மீது நம்பியவர்க்கு அது இறை வழிபாடு. நம்பிக்கையற்றவர்க்கு இது சிறந்த தமிழ் இலக்கிய பாடல்கள்.

திருப்பாவை:
http://www.tamilkalanjiyam.com/literatures/divya_prabandham/thiruppaavai.html

திருவெம்பாவை:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் கொண்டாட கோடி இருந்தாலும் என்னால் இயன்ற எள்ளப்பமிது. ஆண்டாள் மற்றும் மாணிக்க வாசகர் திருவடிகளே சரணம்.

Tuesday, December 10, 2013

ஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை


என்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓடும் பயணங்கள் எங்கள் வாழ்வின் ரசித்து ரசித்து நான் வாழும் சில தருணங்களில் ஒன்று. தற்சமயம் எங்கள் சிற்றுந்தில் இசைக்கருவி என்னை மதிமயக்கும் திறன் கொண்டது. தீபாவளி விடுப்பிற்கு எங்கள் வண்டியிலேயே பிறந்த கிராமமும் மேலும் சில சுற்றுலா தளங்களையும், கோவில்களுக்கு சென்று வர முடிவு செய்து ஊருக்கு சொன்றோம். அவ்வாறே சென்ற நெடும் பயத்தின் போது, ராமேஸ்வரத்திலிருந்து திருச்சியை நெருக்கிக் கொண்டிருந்த போது, இரவு இறக்கி விட்ட கருமை, வெளியில் கவனம் கொள்ள வியலாமல் பண்பலையை திருப்பிக் கொண்டிருந்தேன். (பெங்களூரிவில் எங்கள் வாகனத்தின் பண்பலையை அதிகமாய்  பயன்படுத்துவதில்லை. பண்பலையில் இசையினும் அதிகம் இழுவைகளே அதிகம் அதுவும் சொல்ப அறிந்த கன்னடத்தில் வசவசவென்று மாத்திலாடுவார்கள் அதனால் இசை தரும் இன்பதினும் இம்சையே அதிகமிருக்கும் ).

  பண்பலையில் திருப்பிக்கொண்டிருக்கும் போது, மதி மயக்கும் "முன்பே வா அன்பே வா" என்னை கட்டி இழுக்க அதே அலைவரிசையில் இசைகருவியில் எனக்கான இசையை மிதக்க விட்டேன். அது ஒரு மலையாள பண்பலை ஆங்கிலத்தில் தொகுத்து வழக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த பாடல் முடிந்தவுடன் தான் தெரிந்தது. அது ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. முன்பே வா பாடியது ஸ்ரேயா என்று அன்று தான் அறிந்தேன். ஸ்ரேயா பட்டும் படாமலும் பாடிய ஒரே ஒரு தமிழ் பாடல் என்று சொல்லலாம்.(ஆயினும் நீ பார்த்த பார்வைக்கோரு நன்றி என்றும், செண்பகமே செண்பகமே என்றும் இசை ஜாம்பவான் ஆ ஷா போன்சிலேவின் நுனி நாக்கில் கடிபடும் தமிழிலும் சிறந்ததது தான் "முன்பே வா"வில் ஸ்ரேயா பாடி இருக்கும் தமிழ்) இந்த பாட்டில் மட்டும் சில இடங்களில் ஸ்ரேயாவின் உச்சரிப்பு அவர் வேற்று மொழிக்காரர் என்பதை காட்டிக் கொடுக்கும், ஒரு வேளை இது ஸ்ரேயாவின் முதல் தமிழ் பாடலாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அது 2006-ல் வெளியான படம், அதற்கு முன்பாகவே 2003 ஜீலி கணபதியில் "எனக்கு பிடித்த பாடல்" பாடி இருக்கிறார். முன்பே வா பாடலில் ஸ்ரேயாவின் குரல் தனிப்பட்டிருந்தாலும் மிக அழகாவே இருக்கின்றது. ராவணனில் அவர் பாடிய கள்வரே கள்வரே என்ன ஒரு உச்சரிப்பு. அற்புதம். "உன்ன விட உலகத்தில் உசந்தது" இதில் ஒரு மதுரை தேவரச்சியாக வாழ்ந்திருப்பார் ஸ்ரேயா. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மலையாள பண்பலை 102.8, 12.11.2013 அன்று சுமார் இரவு 10 மணி அளவில் என்ன நிகழ்விற்காக ஸ்ரேயாவின் பல் வேறு மொழிப் பாடல்களை தொகுத்து வழக்கினார்கள் என்று தெரியாது, ஆனால் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒரு சிறு கிராமான எனது மாமியார் வீடு வரும் வரை திகட்ட திகட்ட ஸ்ரேயாவின் இசையோவியங்களை வழங்கியது அந்த பண்பலை, முன்பே வா பாடலுக்கு அடுத்து மலையாளத்தில் கண்ணனை சார்ந்த ஒரு பாடல்,(தேசியவிருது பெற்றது) என்ன அர்த்த சுத்தமான மலையாள உச்சரிப்பு. நான் வட இந்தியாவில் இருந்த சமயம் எனது அலுவலக நண்பர் ஒருவர் மலையாள பெண்ணை தனது கல்லூரியில் ராகிங் செய்து போது அந்த பெண் நான் கூறும் ஒரே ஒரு வார்த்தை ஸ்படமாக உச்சரித்தால் அவர் சொல்லும் எதை வேண்டுமானாலும் செய்வதாக சொன்னாலாம், அதற்கு அவர் சரி சவாலுக்கு தயார் என்றதும் "மழ" என்று சொல்ல சொன்னாலாம். என்னால் இறுதியாண்டு வரை அந்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை என்றார். அவ்வாறாக நாவினை சுழற்றிப்போடும் மலையாள வார்த்தைகளை எத்தனை அழகாய் பாடுகிறார் ஸ்ரேயா என்னும் வங்க மொழிக்காரி சொக்கிப் போகிறேன்.

மூன்றாவதாய்  தேவதாஸ் படப்பாடல் "கேசே காகும் ஹாய் ராம்" இசையால் உறுகி  வழியத் தொடங்கி இருந்தேன், ஸ்ரேயா ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக் காரரில்லை.   எந்த மொழியில் பாடினாலும் ஸ்ரேயாவின் பாடலை கேட்பவர் அவர் அந்த மொழியினை சேர்ந்தவர் என்றே நினைத்துக் கொள்வர். அதுவே ஸ்ரேயாவின் சிறப்புத்தன்மை. இதனையே தான் அந்த பண்பலையிலும் தொகுப்பாளரும் கூறினார். மேலும் ராஜத்தானிய மற்றும் வேறு சில மொழி பாடல்களை ஒலிப்பரப்பினர் அந்த பண்பாலையில். இடையில் வங்காள மொழியிலும் ஒரு பாடல் வந்தது. தனது தாய் மொழியில் அவர் பாடும் போது இன்னும் பிரத்தியோச இசையின்பம் தரவல்லவராக இருக்கிறார் ஸ்ரேயா. இசைக்கு மொழி கிடையாது என்றாலும், வங்க மொழி தெரியவில்லையே என்று இரண்டாம் முறையாக வருத்தப்பட நேர்ந்தது இந்த இசை தேவதையால். "நீலகண்டப் பறவையைத் தேடி" இதன் இரண்டாம் மூன்றாம் பாகம் இன்னும் வங்க மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்படவில்லை, மூலகாரணம் அந்த புத்தகத்தின் ஆங்கில மூலமும் இல்லை. வங்க மொழி தெரியாத காரணத்தால் ஒரு அதி அற்புத நாவலை முழுமையாக படிக்க இயலாமல் போனதே என்று முதல் முறையாக வங்க மொழி தெரியாதற்கு வருந்தினேன். அடுத்து ஸ்ரேயா பாடிய வங்க மொழி பாடலில் விளக்கம் தெரிந்திருந்தால் இன்னும் இசையை ரசித்திருக்கலாம் என்று நினைத்தேன்.

ஸ்ரேயா என்னும் ஒரு குட்டி தேவதையை எனக்கு தெரியும், என் தோழியின் மகள் அவள், எப்போதும் ஸ்ரேயா என்றாலும் அந்த குழந்தையின் நினைவு வந்து இனிக்கும். அதை கெடுத்தழிக்க வந்தாள் நடிகை ஸ்ரேயா. ஆனால் பாடகி ஸ்ரேயா மீண்டும் ஸ்ரேயா என்ற பெயரை கேட்டாலே இன்புறும் அனுபவத்தை தருகிறாள்.





  தலைப்பையும் ஸ்ரேயாவை பற்றி எழுதும் எண்ணத்தை தந்ததற்கு கவிஞர் சுகுமாரனுக்கும், சில காலமாய் எழுத பிடிக்காமல் முடிங்கி இருந்த என்னை மீண்டும் எழுத வைத்த மீராவின் சரவணனுக்கும் நன்றியும்,

கூடவே இந்த பதிவு அவர்களுக்கு சமர்பணம்.

Tuesday, December 14, 2010

பெருங்கடலாடிடும் துளி மழை

எமது இரண்டாம் கவிதை நூல் காலச்சுவடு வெளியீடாக



அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி
நட்புடன்,
லாவண்யா