Showing posts with label பயண கட்டுரை. Show all posts
Showing posts with label பயண கட்டுரை. Show all posts

Thursday, December 24, 2009

பரவசமாய் ஆரம்பித்த ஒரு வார இறுதி

வெள்ளி கிழமை காலையிலேயே எதிர் அறை தமிழ் நண்பர் இன்று மாலை நாங்கள் வெளியே சொல்லும் திட்டத்தில் இருக்கின்றோம் நீங்கள் வர இயலுமா என்றார். சரி என்று சொல்லி வைத்திருந்தேன். அலுவலக எண்ணை வாங்கி கொண்டு அவரும் பக்கத்து அறை தோழி சென்று விட்டனர். வேலையில் மூழ்கியிருந்த நேரம் மாலை 5 மணிக்கு நண்பரின் அழைப்பு வந்தது. நாங்க இங்கே இருந்து கிளம்ப போறோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஹோட்டலில் இருப்போம். சித்தி விநாயகர் கோவில் செல்வதாக திட்டம் நீங்கள் சரியாக 6 மணிக்கு அறைக்கு வந்தால் எல்லோரும் போகலாம் என்றார். அவசர அவசரமாக மிச்சமிருந்த வேலையை முடித்துவிட்டு வேகமாக ஓடி வந்து அவர்களோடு சென்றேன். வழக்கம் போல் மெட்ரோ டி-சென்ரம் சென்று அங்கிருந்து இன்னும் ஒரு மெட்ரோ பிடித்து ஃபர்ஸ்ரா(Farstra) என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்து ஒரு 5 நிமிடம் நடந்து சில படிக்கட்டுகள் ஏறினால் அருள் மிகு சுவீடன் சிறீ(ஸ்ரீ) சித்தி வினாயகர் ஆலயம் என்ற அன்பான பெயர் பலகை வரவேற்கும்.

அருள் மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் என்று தமிழ் எழுத்துகளை சுவீடனின் கண்டால் எப்படி இருக்கும். பரவசம் பொங்காது. அப்படிப்பட்ட பரவசத்தில் தான் இந்த
பதிவு. ஆம் சுவீடனில் சித்தி வினாயகர் ஆலயம் இருக்கின்றது. இலங்கை தமிழர்களால் நடத்த பெறும் இந்த ஆலயத்தை பற்றி என் பயண கட்டுரையில் மட்டும் அடக்கி விட முடியாத ஆவலால் தனி பதிவு. விநாயகர் தாள் சரணம்.

நாங்கள் உள்ளே நுழைந்த போது ஒரு 30 முதல் 35 பேருக்கு குறையாமல் கோவிலில் குழுமி இருந்தனர். நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை என்று தேன் மதுர குரலில் ஒரு அம்மையார் முருகன் மேல் பாடிக் கொண்டு இருந்தார். தொடர்ந்து இன்னும் ஒருவர் பிள்ளையார் கீத்தனம் கீச் குரலில் பாடி முடிக்க ஆரத்தி நடந்தது திவ்யமாக.

ஒரு சாம்பினாரி தூபக் கோல் போன்ற ஒன்றில் மூன்று வெற்றிலைக்கு நடுவில் ஒரு உடைத்த தேங்காய் மூடியும் அதன் மேல் ஒரு ஆரஞ்சு பழமும் வைத்திருந்தது பார்க்க மிக
நேர்த்தியாக அழகாக இருந்தது. சாப்பாடும் சாப்பரும் பரிமாறப்பட்ட இலையும், ஒரு தட்டில் நிறைய மோதங்களும் இருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பார்க்க
அருமையாக இருந்தார் வசந்த மண்டப்பத்தில்.

கோவில் மூலஸ்தானத்தில் பிள்ளையாரும், கொடி மரத்தை ஒட்டிய தூணோடு தும்ப விநாயகரும் நம்மை ஒரு சேர வரவேற்க்கின்றனர். கொடுமரத்திற்கு முன் பலிபீடம்முன் மூங்சூரும் கூட இருப்பது நம் ஊரில் இருப்பது போன்றே உணர்வை தருகின்றது. பிள்ளையார் கோவில் விட்டு வெளியே பார்வையை ஓட்டினால் பிரதானத்தின் வலப்பக்கம் ஒரு சிறு மண்டப்பத்தில் சிவனும் இடப்பக்கம் அம்பாளும், அப்படியே கோவிலை சுற்றினால் வலதுகோடியில் மஹாலஷ்மியும், இடது கோடியில் வள்ளி,தெய்வானை சமேத முருகனும், சற்றே முன்புறமாக நவகிரங்களும் வசந்தமண்டபத்தை தாண்டி பைரவரும் வீற்று இருக்கின்றனர்.

ஆரத்தி முடிந்து அனைவர்க்கு அளிக்கப்பட்ட விபூதியில் அப்படி ஒரு ஜவ்வாது வாசனை, வீடு வந்து சேரும் வரை கூட அதன் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கின்றது. பின் பாலும்,
பூக்களும்,சந்தனம் குங்குமமும் வழங்கப்பட்டன. கொஞ்சம்(ஒரு கரண்டி) எலிமிச்சை சாதம் தரப்பட்டது. சரி செல்லலாம் என்று எத்தனித்தால் பெரிய பாத்திரத்தில் சாம்பார் சாதம் சுடச்சுட கொண்டு வைத்தார்கள் அனைவர்க்கும் ஒரு தட்டில் சாம்பார் சாதமும், கொஞ்சம் பருப்பும், தயிரும் கூடவே அரை மோதகமும்(மிக அருமையாக இருந்தது உண்டு முடித்து சுவையாக இருக்கின்றது என்று மீண்டும் கேட்க சென்றேன் அதற்குள் தீர்ந்து விட்டது) கொடுத்தார்கள். இரவு உணவிற்கு வேறு எதுவும் தேவையில்லாத அளவிருந்தது அங்கே அருந்திய பிரசாதம்.

வயிரும், மனமும் நிறைந்ததொரு வார இறுதியின் தொடக்கத்தை என்னால் மறக்கவே முடியாது. சித்தியோடு புத்தியும் தரும் சீர் மிகு விநாயகர் அருள் பெருகட்டும் எங்கும்.

சுவிட் சுவீடன் - பகுதி 2

சுவீட் சுவீடன் மெட்ரோவும்,செல்ப் சர்வீஸ் சூப்பர் மார்கெட்களும் இந்தியாவிலேயே பார்க்க கிடைப்பதால் இது ஒன்றும் புதிய உணர்வை கொடுக்கவில்லை.(ஆனால் சில்லறை பெருவதற்கும் மீதி சில்லறை தருவதற்கும் மெசின் இருக்கு புதுமையா) ஆனாலும் பனி சூழ்ந்த சுவீடன், பசும் புல்வெளி ஆங்காங்க வெண்பனி இயற்கை போட்ட ரங்கோலி, சில சமயம் சோப்பு நுரை பரப்பியது போல, சில சமயம் இட்லி மாவை கொட்டி பரப்பியதை போல, கேக் மேல் பரப்பிய ஐசிங் போல இப்படி பலவிதங்களில் அழகாக இருக்கின்றது. பனி பொலியும் போது பஞ்சு மிட்டாய் வெள்ளை கலரில் பறப்பது போல ரசிக்கும் படி இருக்கின்றது அறைக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குள்ளோ இருக்கும் வரை. வெளியே நடக்கும் போது என்னதான் கனமான ஜாக்கெட் போட்டாலும்,க்ளவுஸ் போட்டாலும், சாக்ஸ்,சூ போட்டாலும் கையும் காலும் விரைத்து போவதும், தரையில் நடப்பதே பனிக்கட்டி மேல் நடப்பது போல வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது. சில நாட்கள் காலையில் அலுவலகம் வரும் போது நம் ஊர் போல இருக்கும் ரோடும், தரையும். ஆனால் மாலை திரும்பும் முன் பனி பொழிந்து எங்கும் வெள்ளை கம்பளத்தை விரித்தது(தூய வெள்ளை நிறம் பார்க்க கொள்ளை அழகு) போல ஆகிவிடும். மரம்,செடிகளில் ஆங்காங்கே தங்கியபடி இருக்கும் பனித்துகள் பார்க்க கொள்ளை அழகு. சில சமயம் மரங்கள் பூத்த வெள்ளை பூப்போல இருக்கும் அவை.

எண்களால் ஆனது சுவிடன் உலகம். ஹோட்டல் நுழைவாயிலில் ஒரு சந்கேத எண் அடித்தால் தான் கதவு திறக்க கதவோடு இணைக்கப்பட்ட பாதுகாப்பு கருவி அனுமதி தருகின்றது. அதன் பின் அறைகள் இருக்கும் வரண்டாவில் ஒரு 4 இலக்கத்தை அடிக்க வேண்டி இருக்கின்றது அதை தாண்டி கதவை திறக்க ஒரு எண், பூட்டிவிட்டு வெளியே வர இன்னொரு எண்(சாவியோடு உள்ள பூட்டும் உண்டு இந்தியர்களுக்காகவே இந்த ஏற்பாடு என்றாள் ஹோட்டலை நிர்வாகிக்கும் பெண். என்ன தான் இலக்க எண்கள் கொடுத்து படு பயங்கர பாதுக்காப்பென்றாலும் இந்தியர்கள் மட்டும் பூட்டு சாவி கேட்கின்றார்களாம், இருக்காதா பின்னே பூட்டை பூட்டி அதை ஒரு முறை தொங்கி திறக்கவில்லை என்று தெரிந்ததும் தானே மனதுக்கு நிம்மதி பிறக்கின்றது நமக்கு.) சரி இப்படி தங்கும் இடத்தில் தான் இத்தனை இலக்க எண்களை மனனம் செய்ய வேண்டுமென்றால், பணி இடமோ அதற்கு மேல், நுழைவாயில், வாரண்டா மட்டும் இல்லாது மின்தூக்கியில் ஏற ஒரு எண், இறங்க ஒரு எண்(அடகொன்னியா உங்க பாதுகாப்பு உணர்ச்சிக்கு அளவே இல்லையா?) ஒருவேளை இறங்கும் எண்ணை தப்பாக அழுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்து E மாடிக்கு(அதானுங்க நுழைவாயில், entrance floor) வரும் முன் அங்கே இருக்கும் காவலாளர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய் விடுவார்களாம்.(அவ்வளவு fast)

நான் பணி நிமித்தம் சென்ற அலுவலக்கதில் ஒரு மாலை சூடான விவாதத்தின் இடையில் உடன் இருந்த சூவிடன் அலுவலக பணியாளர் குடிக்க டீ வேண்டுமா என்றதும் சரி என்றேன். அவர் யாரிடமோ சொல்ல ஒரு மனிதர் கரும்காபி எடுத்து வந்தார், அவர் பார்க்க ஆபிஸ் பாய் மாதிரி இல்லை. பால் வேண்டும்,சர்க்கரை வேண்டும் என்று நான் படுத்தியதும் அந்த மனிதர் வெளியே சென்று வாங்கி வந்தார். அலுவத்தின் போன் ஆப்ரட்டேர், அட்மின்ஸ்ட்ரெசன் சம்மந்தப்பட்ட வேலை அனைத்து அவர் தான் பார்ப்பராம். அலுவலகத்தில் எப்போதும் பழவகைகள் இருக்கும் அதை வாங்கி வருபவரும் அவர் தானாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஆளுக்கு Rs.10000 என்று எங்கள் அலுவலத்தில் இருந்து பெறும் கம்பெனியின் முதலாளி அவர் என்றால் கொஞ்சம் வியப்பாக இல்லாமல் என்ன செய்யும்?

சுவிடனில் வந்து கொஞ்சம் சுவிடிஷ்(அது என்ன டிஷ் என்பவர்க்கு அது தான் சுவீடனின் மொழி) புரியும் வரை கொஞ்சம் கடினம் தான். சூப்பர் மார்கெட் சென்று ஒரு சோப்பு பவுடர் வாங்க வேண்டுமானாலும் அங்கே இருப்பவரிடம் இது சோப்பு பவுடர் தானே என்று கேட்க வேண்டி இருக்கின்றது. பால்,தயிர் என்று எதுவுமே ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை. எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் சுவிடனில் சுவிடிஷ் பேச தயங்குவதே இல்லை இந்த மக்கள். என்னோடு பணி புரியும் சக பணியாளி, தான் செய்த மென்பொருளை என்னிடம் காட்டும் போது அதில் எழுதப்பட்டுருந்த விளக்கங்கள்(comments) சுவிடிஷில் இருந்தது(விட்டா இவிங்க மென்பொருளை கூட சுவிடிஷில் எழுதி விடுவார்கள் போலும்) அவ்வளவு மொழிப்பற்று.

வார இறுதியில் சுவிடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் சென்றோம் கிருஸ்துமஸ் இப்போது தான் முடிந்து இருக்கின்றது அதனால் எல்லா இடங்களிலும் பல விதமான வண்ண விளக்குகள் இருந்தன. ஸ்டாக்ஹோமில் பெரிய மார்கெட் இருக்கின்றது. அங்கே எல்லாம் கிடைக்குமாம். ஆனாலும் நமது திநகர் மார்கெட் போல் எல்லாம் இல்லை. சும்மா சுவீடன் வந்ததற்கு சென்று பார்க்கலாம். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒன்றொன்றும் ஒவ்வொரு அலங்காரத்தில்(interior decoration) ரசிக்கும் படியாக இருக்கின்றது. இங்கே இருக்கும் குழுந்தைகள் பெரும்பாலும் அழுவதோ, அதிகம் அங்கிங்கும் ஓடுவதோ கிடையாது, கன்ன சிவப்போடு அமைதியான பொம்மைகள் போலிருக்கின்றன.சுவிடன் சாப்பாட்டு விடுதிகளில் வெஜிடேரியன் என்றால் நான்கைந்து உருளை கிழங்கை அவித்தும் சில இழை தழைகளை அவிக்காமலும் தருகின்றார்கள்.

சுவீட் சுவீடன் - பகுதி 1

அலுவலகத்தில் நான் இணைந்த போதே கம்பெனியின் முதன்மை தொழிற்நுட்ப அதிகாரி(CTO) பணி நிமித்தமாக அடிக்கடி சுவீடன் செல்ல வேண்டி இருக்கும் உங்களுக்கு ஆட்சேணை எதுவும் இருக்கின்றதா என்று கேட்டு இருந்தார். நானும் இல்லை எனச் சொல்லி வைத்திருந்தேன். உடனே விசா பெற ஏற்பாடு செய்தார்கள். விசா வந்தது. கிட்டதட்ட விசா வந்து இரண்டு மாதம் பயணம் ஒன்றும் திட்டமிடப்படவில்லை. நானும் மறந்து போய் இருந்தேன். திடீரென ஒரு நாள் மடல் வந்தது: அடுத்த வாரம் உங்கள் பயணம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தயாராகுங்கள் என்று. மடமடவென எல்லாப் பொருட்களையும் வாங்கி கொண்டே இருந்தேன்... கிளம்பும் நாள் வந்துவிட்டது.

அங்கே குளிர் -15 டிக்கிரி என்றதும் அதற்காக வாங்கிய ஜாக்கெட் போட்டால் அத்தனை கனமாக இருந்தது. எனக்கு அப்போதிருந்தே டென்ஷன் ஆரம்பித்து விட்டது. இத்தனை கனமான ஆடையை அணிந்து ஒரு மாத கால கடும் குளிர் பிரதேசத்தில் எப்படி காலம் கடத்த போகிறேன்று.

பயணநாளில் வீட்டிலிருந்து விமானம் வரை எந்த தடங்கலும் இன்றி (என்னுடன் இன்னும் இருவர் வந்ததால் எந்த கவலையும் எனக்கிருக்கவில்லை) 7 மணி நேரம் பயணத்திற்குப் பின் ஹெல்சிங்கி (ஃபின்லாண்ட்) வந்தடைந்தோம். விமானம் ஆப்கானிஸ்தானை கடக்கும் போது, ஒரு மலைத் தொடரில் பனி மூடி(வெள்ளை சிமெண்ட் கொட்டும் போது ஒரு வித புகையோடு கொட்டும் இடத்தை மூடுமே அது போல) இருந்ததது. பார்க்க மிக அழகாக இருந்தது. ஆனால் அது இமய மலையா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை. (அது இந்துகுஷ் மலையாம்)

ஹெல்சிங்கியில் வந்து பார்த்ததும் தான் தெரிந்தது வந்த மூவரில் இருவருக்கு முதல் விமானத்திலும், எனக்கு மட்டும் அடுத்த(5 மணி நேரம் கழித்து) விமானத்திலும் இடம் ஒதுக்கபட்டிருந்தது. கேட்டால் முதல் விமானம் நிறைந்து விட்டது என்றும் என் பயணத்தை மாற்ற முடியாதென்றும், அந்த விமானத்தில் யாராவது ஒருவராவது செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் அனைவரின் சாமான்களும் அந்த விமானத்தில் செல்லவதாகவும் தெரிந்ததால் என்னை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். அங்கே போய் அந்த விமான நிலையத்தில் காத்திருக்கின்றோம் என்று சொல்லிக் கிளம்பினார்கள்.

நான் தனியாக 5 மணி நேரம் வேறு கடத்த வேண்டும்; அத்துடன் அங்கே போய் எப்படி அவர்களை கண்டு பிடிப்பது, எங்கே இருப்பார்கள் என்று பல கவலை வாட்ட, கூடவே கனமான ஜாக்கெட் வேற இன்னும் படுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நல்லவேளை ஹெல்சிங்கி விமான நிலையத்தில் ஒய்-பைய் இருந்ததால் என் மடிகணினி மூலம் இணையத்தில் ஒரு வலம் வந்தேன். மாதவிபந்தல், தமிழ் உலா பாவை பதிவுகளை பார்த்தேன். நர்சிம், பரிசல், நுனிப்புல், அனுஜன்யா (வழக்கம் போல் பழைய பதிவு), மொழி விளையாட்டு என்று வழக்கமாக வலம் வரும் அனைத்து வலைப்பூக்களைப் பார்த்தும் ஒரு மணி நேரம் தான் கழிந்திருந்தது. மேலும் வலைமேய முடியவில்லை. பயண அலுப்பு வேறு. அப்படியே இருக்கையில் சாய்ந்து உறங்க முயற்சித்தேன் அதுவும் முடியவில்லை. அந்த 5 மணி நேரம் கழிப்பது பெரும் பாடாயிற்று.

ஒரு வழியாக அடுத்த விமானத்தை பிடித்து, ஸ்டாக்ஹம் விமான நிலையத்தை அடைந்தேன். (விமானத்தில் பக்கத்து இருக்கைகாரர் பொதுவாக பேச ஆரம்பித்து தொழில்நுட்பம் வரை பேசினார். என்னால் முடியவில்லை ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசினேன் ஏதோ.) அங்கே சொன்னபடி என்னோடு வேலைபார்க்கும் உடன் வந்த நண்பர்கள் காத்திருந்தார்கள். அங்கிருந்து அனைவரும் கிளம்பி என்னை அக்லாவில் எனக்காக ஒதுக்கப்பட்ட கெஸ்ட் ஹவுசில் இறக்கிவிட்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடம்(சீஸ்தா) சென்றார்கள்.

சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 5

அடுத்த‌ வார‌ம் என்னுடைய‌ க‌டைசி வார‌ இறுதி அத‌னால் என் விருப்ப‌ப்ப‌டி மலை ப‌னிச‌ர‌க்கு போக‌ எல்லோரும் முடிவெடுத்தார்க‌ள். காலையில் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன். என் ப‌ய‌ண‌ச் சீட்டை ஒரு ச‌ட்டையுள் வைத்து சேர்த்து துவைத்து விட்டு இருந்தேன். அதில் நான்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ தேவையான‌ அள‌வு ப‌ய‌ண‌ சீட்டை அதில் இருந்த‌து. எப்ப‌டியோ அத‌ன் துண்டுக‌ளை சேக‌ரித்து ஏதோ ஒரு ந‌ம்பிக்கையோடு வெளியே கிள‌ம்பியாற்று. மெட்ரோவில் ஓத்துக் கொண்டார்க‌ள் ஆனால் பேருந்தில் அதை குப்பைத் தொட்டியில் போட‌ போனார் அத‌ன் ஓட்டுனர். கெஞ்சி குத்தாடி அவ‌ரிட‌ம் இருந்த‌ பய‌ண‌ச்சீட்டு துண்டுக‌ளை வாங்கிக் கொண்டு ஒரு ந‌ண்ப‌ரும் நானும் அடுத்த‌ பேருந்தில் வ‌ருவதாக‌ சொல்லிவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அனுப்பிவிட்டு, சேர‌ வேண்டிய இட‌ம் தெரியும் என்ப‌தால் அதே இட‌ம் போகும் வேறு பேருந்துக்கு சென்றோம். அங்கே ஒரு ஆத்தா அங்காள ப‌ர‌மேஸ்வ‌ரி என் ப‌ய‌ண‌ச்சீட்டை ஒரு புன்ன‌கையோடு ஏற்று கொண்டு நாக்கா ஸ்ர‌ண்டு அழைத்துச் சென்றாள்.

ஆனால் இற‌ங்கிய‌ உட‌னேயே தெரிந்து விட்ட‌து அந்த‌ இட‌ம் இத‌ற்கு முன் வ‌ந்த‌ இட‌மில்லை. கூட‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர் சுவீட‌னுக்கு புதிது. என்னிட‌ம் கைபேசி இல்லை. உட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர் தான் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் பேசினார். அவ‌ர்க‌ள் சொன்ன‌தாக‌ சொல்லி என்னை நீண்ட‌ தூர‌ம் அழைத்து சென்றார் அவ‌ர் ந‌ம்பிக்கையாக‌ ந‌ட‌ந்து கொண்டு இருந்தார். ச‌ரி அவ‌ரிட‌ம் அவ‌ர்க‌ள் ச‌ரியாக‌ சொல்லி இருப்பார்க‌ள் என்று நினைத்தேன். ஆனால் நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்த‌ பின் தான் தெரிந்த‌து ஒரு வேளை த‌வ‌றான‌ இட‌த்திற்கு வ‌ந்து விட்டோமோ என்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாகிவிட்ட‌து. ஒரு குழுவாக‌ வ‌ந்தோம் ந‌ம்மை காணாம‌ல் அவ‌ர்க‌ள் த‌வித்து போவார்க‌ள். அவ‌ர்க‌ள் நேர‌மும் ந‌ம்மால் விர‌ய‌மாகும் என்று நினைவே என்னை வாட்டிய‌து.

அந்த‌ இட‌ம் மிக‌ அழ‌காக‌ இருந்த‌து. ஒரு ஏரி இருந்த‌து. அதில் நீருற்று இருந்த‌து. அழ‌கான‌ சிலைக‌ள் இருந்த‌ன‌. ப‌னி போர்த்த‌ சிறு குன்றுக‌ள் என்று எல்லா இட‌மும் ந‌ன்றாக‌ இருந்த‌து. ஆனால் நான் தான் க‌வ‌லையில் எதையும் ர‌சிக்க‌வில்லை. உட‌னிருந்த‌ நண்ப‌ர் ஏன் ப‌ய‌ம் நானிருக்கேனில்லை என்றார். என‌க்கு பய‌மில்லை ஆனாலும் இப்ப‌டி ஆகிவிட்ட‌தே ஒரு ப‌ய‌ண‌ச்சீட்டு எடுத்து இருக்க‌லாம் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் பேருந்திலிருந்து இற‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து அங்கே ஒரு க‌டைகாரிட‌ம் விசாரித்தால் போக‌ வேண்டிய‌து நாக்கா ஃபோர‌ம் என்று தெரிந்த‌து. ஒரு ப‌ய‌ண‌சீட்டு த‌ரும் இய‌ந்திர‌த்தில் ஒரு 30 கோனாரை போட்டு ஒரு பய‌ண‌ச்சீட்டை எடுத்து ஒரு ம‌ணி க‌ழித்து ஒரு பேருந்தில் ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்குமிட‌ம் சேர்ந்தோம். மீண்டும் ப‌னிம‌லை ச‌றுக்காம‌ல் கிள‌ம்பினோம் அன்றும்.

சுவீட் சுவீட‌ன் - ப‌குதி 4

ம‌றுநாள் சென்னை ந‌ண்ப‌ர் கிள‌ம்புவ‌தாக‌ இருந்த‌து. அனைவ‌ரும் அவ‌ர் அறையில் கூடினோம் ஒன்றாக‌ உண‌வ‌ருந்தி, உங்க‌ள் இந்தியா அலைபேசி எண் என்ன‌? ம‌ட‌ல் முக‌வ‌ரி என்று வின‌வ‌ல்க‌ள், இனிய‌ ப‌ய‌ண‌ வாழ்த்துக‌ள் இத்தியாதி இத்தியாசி எல்லா ச‌ம்பாஷ‌ணையும் ந‌ட‌ந்தேறிய‌து. அவ‌ரை பிரிந்த‌து மிக‌ வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. நாங்க‌ள் ஐவ‌ர் நால்வ‌ரானோம். அவ‌ர் அறையை க‌ட‌க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வித்தியாச‌மான‌ உண‌ர்வு.

அத‌ன் அடுத்த‌ வார‌ இறுதிக்குள் எங்க‌ள் குழுவில் மேலும் நால்வ‌ர் வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அதில் மூவ‌ர் த‌மிழ‌ர். என் உல‌க‌ம் மாறிய‌து. த‌மிழ் பேச்சு, பாட்டு என்று சுவீட‌னுள் ஒரு புது உல‌க‌த்தில் இருந்தேன். கிட்ட‌த்த‌ட்ட‌ இந்தியாவை விட்டு வெகு தூர‌த்தில் இருக்கின்றோம் என்ற‌ உண‌ர்வே இல்லை என‌க்கு. நால்வ‌ர் எண்வ‌ரானோம். வாழ்க்கையின் மினி த‌த்துவ‌த்தை உண‌ர்ந்தேன் ஒருவ‌ர் போவார் இன்னும் ப‌ல‌ர் வ‌ருவார் இது தானே வாழ்க்கை.

அந்த‌ வார‌ இறுதியில் ப‌னி பொலிவு மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌து. கணுக்கால் வ‌ரை கால் புதையும் வ‌ரை ப‌னியின் அட‌ர்த்தி இருந்த‌து. மிக‌ வித்தியாச‌மான‌ சாலையில் கூட‌ ப‌னி மூடி இருந்த‌து. தொட‌ர்ந்து ப‌னி பொழிந்து கொண்டு இருந்த‌து. வெளியில் கிள‌ம்பினோம். ப‌னித்துளிக‌ள் த‌லையில் வ‌ந்து த‌ங்க‌ த‌ங்க‌ அதை வில‌க்கிய‌வாறு ந‌ட‌ந்தோம். முக‌த்தில் வ‌ந்து போதும் மென்மையான‌ ப‌னி ர‌ம்ய‌மாக‌ இருந்த‌து. ம‌ழை போலில்லை ப‌னிப் பொலிவு. ஆடை ந‌னையும் என்ற‌ அய்ய‌மில்லை. ப‌னியில் ந‌னைந்தாலும் குளிர்வ‌தில்லை. அது ஒரு ஆன‌ந்த‌ நிலை. வெளியே கிள‌ம்பி வ‌ந்த‌தும் எங்க‌ள் விடுதிக்கு முன் இருக்கும் மேட்டில் வழ‌க்க‌ம் போல் சிறுவ‌ர் சிறுமிய‌ர் ச‌ர‌க்கி விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு ப‌ட‌கை நானும் வாங்கி ச‌ர‌க்கினேன். அங்கே ஒரு ப‌னி பொம்மை செய்து வைத்திருந்தார்க‌ள். ந‌ம் ஊர் சோலைக்கொலை பொம்மை போல‌. அழ‌க்காக‌ இருந்த‌து அந்த‌ பொம்மை.

புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை வெளியே அழைத்து செல்ல‌ வேண்டும் என்று நினைத்து டி‍சென்ர‌ல் சென்று ப‌னிச‌ர‌க்கு இட‌ம் செல்ல‌ முடிவாயிற்று. புதிய‌வ‌ர் யாரும் ப‌ய‌மின்றி உட‌னே ச‌ரி என்று சொன்ன‌து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நானும் ச‌ர‌க்கு கால‌ணி அணிய‌ வேண்டியாற்று, இந்த‌ முறை போன‌ முறை போல‌ அல்லாது கொஞ்ச‌ம் எளிதாக‌ இருந்த‌து. ஆனால் ப‌னி பொலிவின் கார‌ண‌மாக‌ பாதையே கூட‌ ச‌ருக்க‌க்கிய ப‌டி இருந்த‌து. க‌ள‌த்தில் இருங்க‌வே ஒரு ம‌ணி நேர‌ம் ஆகிய‌து.

நான்கு முறையாவ‌து சுற்றி வ‌ர‌ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மூன்ற‌ரை சுற்று தான் சுற்ற‌ முடிந்த‌து. அத‌ற்க்குள் த‌ய‌வு செய்து உங்க‌ள் கால‌ணிக‌ளை திருப்பி த‌ர‌வும் என்று சுவிடிஷில் அறிவிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள். அதுவ‌ரை ஒழுங்காக‌ ந‌ட‌ந்த‌ நான் ச‌ற்று வேக‌மாக‌ ந‌ட‌க்க‌ முய‌ன்று, முடிக்கும் நேர‌த்தில் விழுந்தேன். விழுத்தால் தான் எழுவ‌து சிர‌மாயிற்றே. திரும்பி பார்த்தால் எங்க‌ள் குழுவில் ஒரு ந‌ண்ப‌ர் ஓடி வ‌ந்து கொண்டு இருந்தார் என‌க்கு கைக்கொடுக்க‌, நெகிழ்த்தேன். ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளும் வ‌ந்து என்னை வேக‌மாக‌ இழுத்து செல்வ‌தாக‌ விளையாட்டிக்கு இழுத்து விழ‌ வைத்தார்க‌ள் மீண்டும். :(

சுவீட் சுவீடன் - பகுதி 3

அடுத்த இரண்டு வாரங்களும் அலுவலகம் அறை மைக்ரோவேவ்(அடுப்படி) வேலை வேலை மற்றும் வேலை என்றவாறு கழிந்தது. ஒவ்வொரு வார இறுதியிலும் அலுவலக நண்பர்களை எங்காவது செல்லலாமா என்று கேட்பேன் அவர்களும் சொல்கின்றோம் என்று சொல்லி ஒன்றும் சொல்லாமல் விட சமையல் தூக்கம் இணையம் வேறு வழியே இல்லாமல் அலுவலையாவது முடிப்போம் என்று கழிந்தது. ஆனால் வித்தியாசமாக நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வார இறுதியில், வெள்ளி இரவில் விடுதி வரண்டாவில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி புரிய வந்திருந்த நான் தங்கும் விடுதியிலேயே தங்கி இருந்த ஒரு குழுவை(group) சந்தித்தேன். இந்த குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் வேறு. நாளை நாங்கள் வெளியே செல்கின்றோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களோடு வரலாம் என்றார் சென்னையை சேர்ந்த அந்த நண்பர்.

மறுநாள் நானும் தயாராகி வெளியே செல்ல கிளம்பினோம். அந்த குழுவில் ஒரு நண்பர் பனி துகள்களை கை நிறைய வாரி அடுத்தவர் மீது எறிந்து விளையாடுவது போல என்னை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அவர்கள் நால்வரும் பனிதுகள்களை ஒருவர் மீது ஒருவர் எறிய ஆரம்பித்தனர். பின் நடக்க ஆரம்பித்தோம். எங்கள் விடுதிக்கு எதிரே பெரிய மேடான இடம் இருக்கும். ஒரு 50 படிகட்டுகள் ஏறிதான் மெட்ரோ ஸ்டேசன், மார்கெட் எல்லாம் போக வேண்டும். அங்கிருந்து பார்த்தால் எங்கள் விடுதி மற்றும் சில கட்டிடங்கள் எல்லாம் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கும். மிக பரந்தவெளி முற்றிலும் பனியால் சுழப்பட்ட வெள்ளி பள்ளத்தாக்கு போல பார்க்க பிரம்பிப்பாக இருக்கும்.அந்த பள்ளத்தாக்கில் மேட்டிலிருந்து கீழ் வரை சில சிறுவர்கள் ஒரு ப்ளாடிக்காலான படகு போன்ற ஒரு வஸ்துவில் அமர்ந்து நாம் சரக்கு மரத்தில் சறுக்குவோமே அதை போல சறுக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். பார்த்தால் நமக்கும் கூட ஆசை வரும்.

மெட்ரோ நிலையம் அடைந்தபின் அவர்கள் ஒருவருக்குள் ஒருவராக தங்களை கேட்டு கொண்டனர் எங்கே செல்ல வேண்டும் என்று(அடப்பாவிகளா எங்க போகணும் தீர்மானம் பண்ணாமலேவா கிளம்புவீக) ஒரு வழியாக பனிசறுக்கு விளையாடுமிடம் செல்லலாம் என்று முடிவாயிற்று. அங்கே போய் அனைவரும் விளையாட வேண்டும் என்று முதலிலேயே தீர்மானம் ஆயிற்று. அங்கே சென்றதும் தான் தெரிந்தது. மீண்டும் ஸ்டாக்ஹோமே கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றார்கள் பார்த்த அதே இடங்கள். ஒரு இடத்தில் நிறைய பேர் பனி சறுக்கு விளையாடி கொண்டு இருந்தார்கள். உடன் வந்த நண்பர்கள் வாங்க நீங்களும் கட்டாயம் பனி சறுக்கியே ஆக வேண்டும் என்று கட்டயமாக அந்த சறுக்கு காலணிகளை வாங்கி தந்தார்கள். வாங்கி போட்டு கொண்டு வைத்த முதல் அடியே விழுந்தேன். மீண்டும் எழுந்து களமிறங்கி 50 அடி தூரம் கடக்கும் முன் ஒரு 6 முறை விழுந்து(விழுவதில் பிரச்சனை இல்லை பின் எழுந்து நிற்பது மிக சிரமாக இருக்கின்றது) குழந்தை போல சிறிய அடி வைத்து ஒரு மணி நேரத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து அந்த காலணிகளை கழட்டிவிட்டு நம் காலணிகளை அணிந்தால் ஏதோ வித்தியாசமா(எஸ்டிரா பிட்டிங்க் இல்லாத)ஒன்றை போட்டிருப்பதை போல ஒரு உணர்வு. பத்தடி நடந்த பின் தான் விழமாட்டோம் வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கிறோம் என்ற நம்பிக்கை வருகின்றது.

அடுத்த வாரம் வெள்ளி மாலை அருள்மிகு சுவீடன் சிறீ சித்தி விநாயகர் ஆலயம் சென்று வந்தது மிக திருப்தியாக இருந்தது. சனியன்று பனிமலை இருக்கும் ஒரு இடம் செல்ல வேண்டும் என்று நண்பர்கள் பணித்தனர். அங்கு சென்று மலை பனிசரக்கு(ஸ்கியிங்) செல்வதாக திட்டம். மிக பயத்தோடு சென்றேன். முற்றிலும் வெள்ளை தோல் போர்த்த பனிமலை எவ்வளவு அழகு, எவ்வளவு குளுமை. கால் நரம்பின் வழியாக தலை வரை ஒரு சில்லிட்ட உணர்வு பரவும். சொல்ல மிக பரவசமாக இருந்தாலும் ஊஊகுகு ரொம்ப குளிர். அந்த மலையின் சரிவுகளை கண்டதும் ஒருவரை தவிர அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட தப்பித்தேன். ஞாயிறு அன்று ட்ரோட்டின்கோம் மாளிகை சென்றோம். மாளிகை என்று பெரிய எதிர்பார்ப்போடு சென்றால் சற்று ஏமாற்றமே தரும். சில ஓவியங்களை தவிர வேறு எதுவும் சொல்லும் படி இல்லை.

சுவீட் சுவீட‌ன் - இறுதி ப‌குதி

ஒருவ‌ழியாக‌ சுவீட‌னில் இருந்து கிள‌ம்பும் நாள் நெருங்கிய‌து. முத‌ல் நாள் சாயுங்கால‌ம் ஒரு டெனிக்க‌ல் முஸிய‌ம் சென்றோம். அங்கே ஒரு 4டி சோ பார்த்தோம். ப‌ம்பாயில் பார்த்ததை போல‌ தான் க‌ன்செப் ம‌ட்டும் தான் வேறு. ஆனால் ந‌ன்றாக‌ இருந்த‌து. அதே போல் முதுகில் அடிக்கும் சேர்க‌ள், முக‌த்தில் ப‌னி அடிக்கும் ஏதோ. ஒன்றே ஒன்று ம‌ட்டும் வித்தியாச‌ம் திரையில் எலி க‌டிக்கும் போது இறுக்கையை க‌டிப்ப‌து போல‌ இருந்த‌து. ஏனோ சிரிப்பு வ‌ந்த‌து. என்னை போல‌வே எல்லோரும் சிரித்த‌ன‌ர். ஒரு வினாடி வினா ந‌ட‌ந்த‌து. எங்க‌ள் குழும‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் முத‌ல் ம‌திப்பெண் பெற்றார்.அந்த‌ முஸிய‌த்தில் எல்லா வித‌மான‌ கார்க‌ள், ர‌யில்க‌ள், க‌ப்ப‌ல், விமான‌ம், தொலைபேசிக‌ள் இன்னும் ப‌ல‌வென்று நிறைய‌ இருந்த‌து. இந்திய‌ இசையாக‌ த‌மிழ் பாட‌ல்க‌ள் ஒலித்த‌து. நான் கேட்ட‌ போது ராசா கைய‌ வைச்சா ஒலித்துக் கொண்டு இருந்த‌து. அத‌ற்கு முத‌ல் பாட‌லும் த‌மிழ் தானாம். கேட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.

ம‌றுநாள் கிள‌ம்ப‌ வேண்டும். என் அறையில் இருந்த‌ ச‌மைய‌ல் பொருட்க‌ளை எல்லாம் எதிர் அறைக்கு மாற்றிவிட்டு, என் இந்திய‌ அலைபேசியையும், ம‌ட‌ல் முக‌வ‌ரியையும் கொடுத்து, ம‌ன‌ம் தொடும் வார்த்தைக‌ள் பேசி பிரிய‌ ஆய‌த்த‌ம் ஆனேன். ம‌றுநாள் ஒரு ந‌ண்ப‌ர் வ‌ந்து வ‌ழி அனுப்பினார். விழியில் துளிர்ந்த‌ ஒரு துளி க‌ண்ணீர் ப‌ரிசாக்கினேன் அவ‌ர்க‌ள் பாச‌த்திற்கு. செல்லும் வ‌ழி எங்கும் வெள்ளை ப‌னியையும், அதே ப‌னி போல‌ தூய‌ ந‌ட்பையும் பாச‌த்தையும் பொழிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் இனி எப்போது பார்ப்பேன் என்று நினைத்த‌ப‌டி ஸ்டாக்ஹோமிலிருந்து ஹெல்சிங்கி வ‌ந்து அங்கிருந்து டில்லி அடைந்தேன்.

ப்ரிபெய்ட் டாக்ஸியை கேட்டேன் 700 மேல் ஆகும் என்றார்க‌ள் வீடு வ‌ரை விட‌, கையில் முன்னூறு இந்திய‌ ரூபாய்க‌ளும், சில‌ அமெரிக்க‌ டால‌ர்க‌ளுமே இருந்த‌து. ப்ரிபெய்ட் டாக்ஸி மேனேச‌ரிட‌ம் காக்கா பிரியாணி சாப்பிட்டு அக்வோ பீனா கேட்கும் ர‌ன் விவேக் போல‌ டால‌ர் வாங்கிபீங்க‌ளா, கார்ட் அக்செப்ட் ப‌ண்ணுவீங்க‌ளா என்றேன். அவ‌ர் பார்த்த‌ பார்வை பார்த்து ந‌ன்றி சார் என்று சொல்லி 20 டால‌ரை மாற்றினேன் ஸ்சேன்ஞ் சார்ஞ் 100 ரூபாய் வாங்கி விட்டார்க‌ள். ஒரு வ‌ழியாக‌ வீடு வ‌ந்து. த‌ண்ணி இல்லை, க‌ர‌ண்ட் இல்லை, இன்ட‌ர்நெட் இல்லை என்று எல்லா இல்லைக்கும் அவ‌ரை திட்டி தீர்த்து, த‌மிழ் இசை அலைவ‌ரிசைக‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்த‌தும் தான் நான் இந்தியாவில் இருப்ப‌து போல‌ எண்ண‌ம் வ‌ந்த‌து. வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளையும் ரோஜாவையும் க‌ண்ட‌தும் உள்ள‌ம் நிறைந்த‌து. வீட்டு வேலைக்காரி தீதீ ஆகேயே கேயா. ஆப் ந‌கித்தே ஹ‌ம் ப‌ரிசான் கோஹையேன் என்ற‌ பாச‌த்தில் நெகிழ்ந்து போனேன். எப்ப‌டியோ இர‌ண்டு மாத‌மாக‌ கைபேசி இல்லாம‌ல், தொலைக்காட்சி இல்லாம‌ல், க‌ன‌மான‌ ஜாக்கெட் இப்ப‌டி இருந்த‌து மிக‌ வித்தியாச‌மாக‌ இருந்த‌து.

நாடோடியின் கிச்சன்

ஒரு வழியாக சுவீடன்(ஸ்டாக்ஹோம்) வந்து சேர்ந்தாயிற்று. அந்த அன்று நண்பர்கள் விடு்தியில் விட்டு விட்டு தங்கள் இடம் சென்றனர். அது ஒரு ஞாயிற்று கிழமை என்பதாலும் பயணகளைப்பாய் இருந்ததாலும் இந்திய நேரப்படி நடு இரவை தாண்டி இருந்தாலும் சூட்கேஸ் மற்றும் பைகளில் இருந்த எதையும் எடுத்து வைக்க முடியாத காரணத்தால் அப்படியே உறங்கி போனேன். காலையில் எழுந்ததும் விடுதியின் வரவேற்பறையில் கேட்டு அருகில்(ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்) ஒரு சூப்பர் மார்கெட்க்கு(நம் நீல்கிரீஸ் போல இருந்தது)சென்றேன். கடையில் இருந்தவர்களை பால் எது தயிர் எது என்று கேட்டு வாங்கினேன்(எல்லாம் கெரகம் சுவீடிஷ்ல இல்ல எழுதி இருக்கு, முதல் முறை கேட்டு சரியாக வாங்கி வந்தேன் அடுத்த முறை தெனவெட்டாக நானாக எடுத்து வந்த பால் மிக கெட்டியாக பால் போலவும் அல்லாது தயிர் போலவும் அல்லாது ஏதோ ஒன்றாக இருந்தது). ஒரு பிரட் பாக்கெட் போல இருந்த ஒன்றை எடுத்து பில் போடுபவரிடம் இஸ் திஸ் வெஜ் என்றேன். இட் இஸ் பிரெட் வாட் டி யு மீன் பை இஸ் திஸ் வெஜ் ஆர் நான்வெஜ் என்றார் நக்கலாக. சரி தான் என்று வாங்கி வந்தேன்.

அன்று காலை ஏதோ உண்டு விட்டு, சமைக்க நேரம் இல்லாததால் அலுவலகம் சென்று விட்டேன். மதியமும் சாப்பிடவில்லை, சாயுங்காலம் வந்ததும் அகோர பசி, கொடுமைக்கு அடுப்பு வேறு இல்லை, மைக்ரோவேவ் மட்டும் தான்.(வீட்டில் எதற்கு மைக்ரோவேவ் இடத்துக்கும் காசுக்கும் கேடா இதில் என்ன செய்ய முடியும் எதை எடுத்தாலும் வாங்கி வைக்க வேண்டியது தானா என்று அவரை தீட்டிய படி மைக்ரோவேவில் சமைக்க பழகாதது இப்படி ஒரு பின்விளைவாக வரும் என்று யாருக்கு தெரியும்) அதில் நான் செய்த உப்புமாவை பற்றி ஒரு கதை தான் எழுத வேண்டும். பத்திரம் வைத்து தளிக்க 6 நிமிடம் எண்ணை சூடக்க வேண்டும். பின் எடுத்து கடுகு போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வைத்து உளுந்து போட்டு, பின் எடுத்து வெங்காயம் போட்டு அதை வதக்குவதக்குள் நான் வதங்கிவிட்டேன். அப்புறம் ஒரு வழியாக தண்ணீர் ஊற்றி சூடாக்கி உப்புமாவை கிண்டி உண்டால் ஆஹா எவ்வளவு சுவையாக இருந்தது தெரியுமா? நான் அவ்வளவு அருமையான உப்புமாவை இதற்கு முன் உண்டதில்லை அவ்வளவு அதிகமான அளவு உப்புமாவையும் உண்டதில்லை. எல்லாம் பசி செய்யும் அற்புதம். சுவீடன் வந்ததில் இருந்து அதிகம் பசிக்கின்றது.

எங்காவது கசக்கும் ஜாம் சாப்பிட்டு இருக்கின்றீர்களா? சுவீடனில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஜாம் தேடி தேடி,கிடைத்ததும் ஆஹா கண்டேன் சீதை என்றவாறு ஒரு ஆரஞ்சு பழம் படம் போட்ட ஜாம் பாட்டிலை எடுத்தேன். அதில் உள்ளே சிறிய துகள்கள் போன்ற ஏதோ இருந்தது. நானும் அது என்ன என்று கடை(டன்)கரனிடம் கேட்டேன் இட் இஸ் ஆரஞ்ச் என்றான். சரி என்று நம்பி எடுத்து வந்து அதை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு திறந்து சாப்பிட்டால் ஒரே கசப்பு ஏன்னா அது தெரிந்த துகள்கள் எல்லாம் ஆரஞ்சு பழ தோலாம். :( அதே போல ஒரு முறை மாதுளை ஜீஸ் வாங்கி வந்து ஒரு கோப்பையில் ஓத்தி குடித்தால் தொண்டையில் ஒரே அறிப்பு. அந்த ஒரு கோப்பையை குடித்து முடிக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அலுவலகம் எடுத்து போய் ஒரு நண்பரிடம் கொஞ்சம் கொடுத்தேன் அவர் இது ஒயின் போல் இருக்கின்றது என்றார். அட பாவிகளா இப்படித் தான் ஒயின் இருக்கும் என்றால் அந்த கெரகத்தை எப்படி குடுக்கிறீங்க என்றேன். அந்த ஒரு லிட்டர் பாட்டலை அவரிடமே கொடுத்து விட்டேன். ஆனால் சுவீடனில் ஜீஸ் மிக விலை கம்மியாக கிடைக்கின்றது(ஒரு லிட்டர் பழரசம் 9 கோரோனா தான்) ஆரஞ்சு மற்றும் மிக்ஸ் பழரசங்கள் நன்றாக இருக்கின்றன.

சுவீடனில் கிச்சன் பற்றி எழுத்தும் போது நாராயணி அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர்களை நான் மெட்ரோ ரயிலில் தற்செயலாக சந்தித்தேன். நான் சுவீடன் வந்த வாரம் அலுவலக நண்பர்களிடம் எங்காவது செல்லலாமா என்று கேட்டதற்கு போகலாம் என்று கூறி அழைத்துச் செல்லும் போது டிக்கெட் வாங்க சொன்னார்கள் சரி என்று போனால் 180 கோரோனா வாங்கிக் கொண்டு 16 முறை பயணிக்க ஏதுவான ஒரு பயண அட்டையை வாங்கி தந்தார்கள். அதை உபயோக்கித்து ஒரு முறை தான் சென்று வந்திருந்தேன் அதனால் சும்மா சென்று வரலாமே சென்று மெட்ரோ நிலையம் சென்று ஒரு ரயிலில் ஏறி சோல்னா சென்ரமில் இறங்கி சும்மா கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்தேன். அடுத்த நிலையத்தில் ஒரு பெண் தன் அலைபேசியில் தமிழில் பேசியபடி நான் பயணித்த அதே பெட்டியில் ஏறி அமர்ந்தார். நான் போய் நீங்கள் தமிழா நானும் தமிழ் என்றதும் அறிமுக உரையாடல்கள் முடிந்ததும் நான் சீஸ்தா செல்கின்றேன் அங்கே தான் பச்சை மிளகாய் கிடைக்கும் என்றார். சரி என்று நானும் அவரோடு சென்றேன். அவர் அழைத்து சென்றது சீஸ்தா கோரோசன் என்ற இந்தியர் நடத்தும் கடை அங்கே எல்லா இந்திய காய்கறிகளும் கிடைக்கின்றன. இங்கே தயிர் நன்றாக கிடைக்கும் வாங்கி உண்ணுங்கள் என்று ஒரு பிரண்ட் தயிரை காட்டினார்.(ஒரு பெயிண்ட் டப்பா சாயலில் இருந்த அந்த டப்பாவை வாங்கிக் கொண்டேன் அதில் ஒரு மீசைக்காரன் படம் போட்டு இருந்தது) மேலும் சில டிப்ஸ் தந்தார். மக்காச்சோளம் மற்றும் பச்சை பட்டாணி அடைத்த டப்பாவை காட்டி வாங்கோங்க மாலை நேரம் உண்ண அருமையாக இருக்கும் என்றார். வாங்கிக் கொண்டேன். மேலும் பேன் பீஸாவை காட்டி இது கூட நன்றாக இருக்கும் வாங்கிக்கோங்க என்றார்.

நாராயணி கூறியது போல தயிர் மிக அருமையாக இருந்தது. அது சாப்பிட தயிர் போல இருந்தாலும் பார்க்க வெண்ணை அல்லது வெண்ணிலா ஐஸ்கீரிம் போல இருந்தது. மக்காச்சோளம் டின் திறக்க சாவியோடு(பெப்ஸி டின்னில் இருக்குமே அது போல) இருந்தது அதனால் எளிதாக திறந்து சாப்பிட்டு விட்டேன். ஆனால் அந்த பச்சைபட்டாணி டின் மிக படுத்தி விட்டது. திறக்க மிக கடினமாக இருந்தது. கத்தி(விடுதியில் ஆடு வெட்டும் அளவிற்கு பெரிய கத்தி கூட இருந்தது), முள் கரண்டி, ஸ்பூன் என்று எல்லா ஆயுதம் மற்றும் மெக்ஸிமம் எனர்ஜி கொஞ்சம் மூளை இதை பயன்படுத்தி திறந்து உண்டால் சிறிது இனிப்பான சுவையோடு நன்றாக தான் இருந்தது. பேன் பீஸா பசிக்கு நல்ல விருந்தாக இருந்தது. ஒரு நாள் நல்லிரவு திடிரென பசியால் விழிப்பு வர அந்த பீஸா தான் உதவிற்று. முன்னமே சொன்னது போல சுவீடன் வந்ததிருலிருந்து அதிகம் பசிக்கின்றது.

இப்படியாக இரண்டு மூன்று வாரம் கழித்ததும், ஒரு வெள்ளி மாலை அசதியாக என்ன சமைப்பது என்று யோசித்தவாறு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த சமயம் பின்னாலிருந்து ஒரு குரல் நீங்க தமிழா என்று ஆமாம் என்றதும் ஆஹா என்று திரும்பி பார்த்தேன் மூன்று பேர் அதில் ஒருவர் தமிழ் மற்றவர்கள் கன்னடர்கள் ஆனால் அவர்களுக்கும் தமிழ் புரியுமாம் அவ்வளவு தான் வரண்டாவில் நின்று பெரிய அரட்டை ஆயிற்று. மறுநாள் ஒன்றாக உண்ணலாம் என்றும் முடிவாயிற்று. நான் இரண்டு காயும் அந்த சென்னை நண்பர் சாம்பார் மற்றும் சுண்டலும் செய்தார். சாம்பார்க்கு வைத்த பருப்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரசமும் செய்தேன். மற்றவர்கள் சிக்கன் மற்றும் ஆம்லேட் செய்து வந்திருந்தனர். மற்றுமொரு தோழி கேரட் அல்வா செய்து கொண்டு வந்தார். 5 பேரும் சேர்ந்து உண்டது ஏதோ ஒரு கல்யாணத்திருக்கும் போய் வந்தது போல் இருந்தது. இதுவரை தனிமையே துணையாக இருந்தவளுக்கு இது மிக வித்தியாசமான உணர்வாக இருந்தது. அன்று மட்டும் அல்லாமல் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஒன்றாகவே உண்டோம். கொஞ்ச நாளில் அந்த சென்னை நண்பர் கிளம்ப வேண்டி இருந்தது. அவர் அறையில் இருந்த எல்லாம் மசாலா ஐட்டங்களையும் எண்ணெய் பால் கன்ப்ளாஸ் ப்ரட் எல்லாம் என் அறைக்கு கொண்டு கொடுத்தார். அவர் சென்றதும் ஏதோ பெரிய இடைவெளி வந்தது போல இருந்தாலும் மீதி இருந்தா நால்வரும் ஒன்றாக உண்பது வார இறுதியில் வெளியே செல்வது என்றபடி கழித்தோம். மேலும் இரு வாரம் கழித்து நான்கு நண்பர்கள் வந்து இணைந்து எங்கள் குழு 8 பேர் ஆனா குழுவானது. அவர்கள் கொண்டு வந்த அடையார் ஆனந்தபவன் புளிக்காய்ச்சல், காரக்குழம்பு, வத்தகுழும்பு, கருகப்பிள்ளை தொக்கு என்ற ஐயிட்டங்கள் என் அறையை நிறைத்தன. பொதுவாக என் அறையில் தான் குழுமி உண்போம் அதனால் அனைவரின் பாத்திரிங்கள் மற்றும் கரண்டிகள் எல்லாம் என் அறையில் நிறைந்திருக்கும் பின் என் இரண்டு ஸ்பூன் இங்கே இருக்கு, என் அந்த பாத்திரம் இங்கு தான் இருக்க வேண்டும் என்ற எல்லோரும் தேடுவார்கள்.

ஆரம்ப நாள்களில் கடுகு,உளுத்தம் பருப்பு, மஞ்சள் இத்தியாதி இத்தியாதிகளை அப்படியே அதன் பேக்கிங் பேகிலேயே சேமித்து வந்திருந்தேன். பின் ஒரு நாள் மொபின் வாங்கி வந்த போது அது தீர்ந்த பின் ஆபத்பவனாக அஞ்சரை பெட்டி போல உபயோகமாயிற்று. மேலும் சேர்ந்த பல டப்பாக்கள் மற்றும் பாட்டில்களால் அது ஒரு சீரான கிச்சனாக மாறி இருந்தது. நான் கிளம்பும் முதல் நாள் எல்லா மசாலா ஐயிட்டம், எண்ணெய், பால் கன்ப்ளாக் எல்லாம் எதிர் அறையில் அடைத்துவிட்டு, இருந்த பழரசமெல்லாம் குடித்து தீர்த்து ஒரு வழியாக கிளம்பி இந்தியா வந்தடைந்தேன். பல அனுபவங்களையும் தன்னம்பிக்கையும் தந்தது இந்த நாடோடி கிச்சன். இந்தியா வந்து கேஸில் சமைப்பது என்னவோ ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது. :)

Saturday, January 24, 2009

யூரோவே இல்லாமல் ஃப்ரான்க்போர்டில் ஒரு வலம்

சுவீடனில் இருந்து திரும்பி ஒரு மாதத்தில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுவதற்கு விசா கிடைத்தது. ஆனால் இந்த முறை கிடைத்தது ஜெர்மன் விசா. அதனால் ஒரு ஜெர்மனிய நகரத்தில் தரையிறங்கி பின் சுவீடன் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த காரணத்திற்காக ஃப்ரான்ங்போர்ட் வழியாக ஸ்டாக்ஹோம் செல்ல விமான சீட்டுகள் கொடுக்கப்பட்டன அலுவலகத்தில். அதுவும் ஃப்ரான்க்போர்டில் எட்டு மணி நேர இடைவெளி வேறு. அதனால் நானும் என்னுடன் வந்திருந்த நண்பரும் ஃப்ரான்ங்போர்ட் சுற்றி பார்க்க முடிவு செய்தோம். ஒரு நாள் முழுவதும் எந்த போக்குவரத்தில் வேண்டுமானாலும் செல்ல ஏதுவான பயணசீட்டு பதினாலே யூரோவிற்கு கிடைக்கின்றது ஃப்ரான்ங்போர்டில். அதில் அதிகபட்சம் ஐந்து நபர்கள் பயணிக்கலாம். கடனட்டையில் அந்த பயணசீட்டை வாங்கிக் கொண்டோம். விமானநிலைத்தில் இருந்து ஒரு நுழைவாயில் வழி வந்தால் மேட்ரோ ஏறும் வசதியுள்ளது ஜெர்மன் நாட்டு நகரில். ரயில் நிலையத்தில் சந்தித்த இந்திய நண்பர்களிடம் எங்கே செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு. ஃப்ரான்ங்போர்ட்டின் வரைபடத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினோம்.

விமான நிலையத்திலிருந்து சென்ரல்(சென்னை இல்லைங்க) நிலையல் அடைந்து அங்கிருந்து இன்னுமொரு மெட்ரோ ரயில் ஏறி டாம் ரூமர் என்ற நிலைத்தில் இறங்கி அங்கே ஒரு நதியும் நிறைய அருங்காட்சியகங்களும் இருப்பதாக அந்த இந்திய நண்பர்கள் சொன்னதால் அதை பார்க்க கிளம்பினோம். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தால், மெயின் நதி(பேரே மெயின் நதி தானுங்க) வருகின்றது. அதன் அக்கரையில் நிறைய அருட்காட்சியங்கள் இருந்தன. அதை பற்றிய விபரங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மிக புராதனமான அருங்காட்சியகத்தை தேர்தெடுத்து சென்றோம். நுழைவு கட்டணமாக பத்து யூரோ கேட்டார்கள். எங்களிடம் இருந்தது அமெரிக்க டாலர்களும் கடனட்டையும் தான். அங்கே கடனட்டை ஏற்று கொள்ளபடாத காரணத்தாலும் டாலர்களை மாற்ற வசதி அந்த இடத்தில் இல்லாததாலும் மேலே நடந்தோம். தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் அதே நிலையே.

ஃப்ரான்ங்போர்டில் என்னை மிக கவர்ந்தது அந்த நதிகரையோரமே. வசந்த கால மகழ்ச்சியில் மலர்ந்து பூத்திருந்தது அந்த நதிகரை. சற்று தொலைவில் இருந்து பார்த்தால் கிடைத்த இடமெங்கும் தன்னை நிறைத்து பூத்திருந்த மரங்கள் பார்க்க அதிசியமாக இருந்தன. இலைகளே இல்லாமல் வெறும் பூக்கள் மட்டுமிருந்தது அந்த மரங்களில். மஞ்சள்,உதா, இளம்சிவம்பென்று இலைகளற்ற அந்த மரங்கள் பார்க்க கொள்ளை அழகாக இருந்தது. அந்த மரங்களின் மிக அருகில் சென்று தேடினால் மட்டுமே சில இலைகளை காணமுடிந்தது. எனக்கு பிடித்த மஞ்சள் நிற பூ(ஏன் மஞ்சள் நிற பூக்கள் பிடிக்கும் என்று பின்னொரு பதிவில் :) ) ஒன்று இங்கே இரண்டு அடுக்காக இருந்தது.








லில்லி பூவிற்கும் அல்லி பூவிற்கும் இடைப்பட்ட வடிவாய் சந்தன கலந்த வெள்ளை நிறத்தில் அழகாய் பூத்திருந்தது மற்றொரு மரம். நம் ஊர் வெள்ளை செவ்வந்தி பூக்களுமிருந்தன ஆங்காங்கே. நுனி முழுதும் இளம் சிவப்பை பூசிய, செவ்வந்தி பூ போன்ற ஒரு மலரும் படர்ந்து மலர்ந்திருந்தது தரைகளெங்கும். பச்சை நிற மலர்கள் பார்க்கும் புண்ணியம் வாய்த்தது மெயின் நதிகரையில். இளம் பச்சை நிறத்தில் சிறு சிறு பூக்களை பூத்திருந்தது அந்த அதிசய மரம். பார்த்ததில் மனம் கொள்ளை கொண்ட நாயகி இளம்சிவப்பாய் பூத்திருந்த அந்த மரம் தான். மிக அழகாய் இருந்தது. நிறைய வண்டுகளை ஈர்த்து வைத்திருந்த அந்த மலர்களை கண்ட போது "பொறிவண்டு கண்படுப்ப" என்று திருப்பாவையில் கோதை பறைந்ததே நினைவில் ஆடியது.








இப்படியாக பலவித நிற மரங்களை, விதவிதமான மனிதர்களை, குழந்தைகளை மகழ்வித்தபடி நகிழ்ந்து கொண்டிருந்த அந்த நதிகரையில் ஓடும் தண்ணீர்க்கு மிக அருகில் அமர்ந்து, அதில் கால் நனைத்தபடி, அங்கே படக்கோட்டி தங்கள் நேரம் கழித்துக்கொண்டிருந்த ஆண்கள் பெண்களை பார்த்தபடி இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருந்த உணவுப்பொருள்களை உண்டுவிட்டு, நதி நிறைய தண்ணீர் இருந்தும், கையில் ஒரு யூரோ இல்லாத காரணத்தால் குடுக்க ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியாமல் தாகத்தோடு நடந்து, மீண்டும் ரயில் நிலையம் ஏறி, ஜூ என்ற நிலையத்தை அடைந்தோம்.

அங்கே இருக்கும் மிருககாட்சி சாலை இருப்பதால் அந்த ரயில் நிலையத்திற்கு பேரே ஜூ. வனவிலங்குகள் இருக்குமிடம் அதனால் பார்க்க வனம் போல் இருக்கும் என்று நினைத்து சென்றோம். ஆனால் வெளியே இருந்து பார்க்க ஒரு மாளிகை போல இருந்தது. உள்ளே ஒரு வேளை வனம் போல இருக்குமோ என்னவோ. இங்கே மட்டுமல்ல இன்னும் ஒரு இடத்தில் ஒரு பெருமை வாய்ந்த தோட்டம் இருப்பதாக சொன்னார்கள் அங்கேயும் நுழைவு கட்டணம் இருந்ததால் உள்ளே சென்று பார்க்கவில்லை. மிருகக்காட்சி சாலையின் வெளியே இருந்த நீருற்றை மேலும் பலவித மலர்கள் குழந்தைகளை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஃப்ரான்ங்போர்டின் சிறந்த கட்டங்கள் இருக்குமிடம் சென்றடைந்தோம்.







அங்கே நிறைய வர்த்தக மையங்கள் இருந்தன. யன்னல் வழி வாங்கல்(window shopping) செய்துவிட்டு அங்கிருந்த ஒரு சில கட்டிடங்களை கண்டு கழித்துவிட்டு, ஐந்து மணி நேரம் கழிந்திருந்தாலும் அங்கிருந்து விமான நிலையம் அடைய இன்னும் மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பாதாலும் ரயில் ஏறி சென்ரல் வந்து ரயில் மாறி விமான நிலையம் அடைந்து, அதே சுவீடன், அதே விடுதி, அதே நண்பர்கள் உண்டு உறங்கி மறுநாள் அலுவலகம் அடைந்தால் "Welcome back to sweden" என்ற இனிய மொழி கேட்டு அலுவல் தொடங்கி தொலைந்து போனேன்.

Wednesday, September 24, 2008

ஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையும்.

என்னோட எல்டிஎ இரண்டு வருசமா டூயூ இந்த வருசம் அவைல் பண்ணலேன்னா எக்ஸ்பெயர் ஆயிடும் என்று அடிக்கடி நச்சரித்தார் என் கணவர். நான் இப்போ தானே புது வேலை சேர்ந்திருக்கேன் என்று தட்டி கழித்து வந்தேன். தினமொரு முறை 5 ஸ்டார் ஹோட்டலில் வேற தங்க எலிஜிபிலிடி இருக்கு.. இப்படி அடிக்கடி புலம்பலுக்கு முடிவு கட்ட மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் நான்கு நாள் மும்பை போகலாம் என்று முடிவாயிற்று.

ஒரு வழியாக மும்பை கிளம்ப வேண்டிய சுபயோக சுபதினத்தில் சாயுங்காலம் 4.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி, ஒரு சேர் ஆட்டோவில்("என்னது ஏர்போர்ட்க்கு ஆட்டோவில் அதுவும் சேர் ஆட்டோலயா?" அப்படீங்கிறவங்களுக்கு எங்க அலுவலகம் இருப்பது ஹரியானாவில் நான் போக வேண்டியதோ தில்லி ஏர்போர்ட்க்கு. நேரடியாக ஆட்டோ கிடைக்காது. ஹரியானா தில்லி பார்டரில் தான் தில்லி செல்லுவதற்கான ஆட்டோ கிடைக்கும். சென்ற முறை சென்னை செல்லும் போது அழகா என் அலுவலகத்திலேயே சொல்லி ஒரு டாக்ஸி புக் செய்து எளிதாக 25 நிமிடத்தில் ஏர்போர்ட் அடைந்து விட்டேன். இந்த முறை மறந்தது மட்டும் அல்லாமல் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன் கையில் இருந்தது 150 ரூபாய் மட்டும். அது பாருங்க இந்த ஏடிஎம், டெபிட் கார்ட் எல்லாம் வந்ததிலிருந்து கையில் காசு வைத்திருப்பதென்பது மிக குறைவு. அதனால் ஆட்டோவில் போகலாம் என்று கப்பசடா பார்டரில் ஒரு ஆட்டோகார‌ரிடம் எனக்கு 6.15 ஃப்ளைட் சீக்கிரம் போக வேண்டும் என்றது தான் குறை அவர் டைம் அவுட் வைத்து ஓட்டுகின்றேன் பேர்வழி என்று, ஆட்டோவை ஓட்டோ ஓட்டென்று ஓட்டி 5.40க்கு விமான நிலையம் சேர்த்தார். ஏனோ அன்று விமான நிலையம் வரும் வழி, விமான நுழைவாயில் என்று என்றுமில்லாத வாகன கூட்டம். அது மட்டுமில்லாது உள்ளே செல்ல வெளியிலிருந்தே பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நிற்பதை விட பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது. நல்ல வேளையாக அவர் முன்னமே போய் போர்டிங் பாஸ் வாங்கி இருந்தார். மேலும் வாயில் அருகே வந்து காவலரிடம் கேட்டு என்னை வரிசையில்லாமல் உள்ளே அழைத்து சென்று விட்டார். அப்புறமும் க்யூ விட்டபாடில்லை. செக்குரிட்டி செக்கிலும் அவ்வளவு பெரிய வரிசை. திருச்சி பஸ் நிலையத்தில் 3 அல்லது 4 நாள் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப நிற்கும் கூட்டம் போலிருந்தது அந்த கூட்டத்தையும் கூச்சலையும் கேட்கும் போது. ம்ம் இந்தியாவின் சராசரி மனித வாழ்வின் தரம் உயர்கின்றது. :) ஒரு வழியாக 30 நிமிட தாமத‌த்துடன் மட்டும் மும்பை வந்திருங்கியது விமானம். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்னார் நாம் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் பெரும்பாலும் எவ்வளவு நேரம் விமானம் பயணிக்கின்றதோ அதை விட அதிக நேரம் தரையிறங்க ஆகுமென்றார். அங்கிருந்து ஹோட்டல் வந்து இரவு விருந்துண்டு உறங்கி விட்டோம்.

மறுநாள் எழுந்து காலையில் சாண்டகுரூஸ் ரயில்நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினோம் மீட்டரில் 18 ரூபாய் வந்திருந்தது. ஆட்டோகாரர் மீட்டரில் 18 என்றால் 17 ரூபாய் தான் வாங்குவோம் என்றார், அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று வியந்து போனேன்.(முதல் நாள் விமான நிலையத்திருலிருந்து ஜுகுவிற்கு 140 ரூபாய் வாங்கிட்டான் அந்த டாக்ஸிகாரன் என்று என் வீட்டுகாரர் புலம்பியதில் ஆச்சரியமில்லை என்று தெரிந்தது, எனக்கு மும்பை முதல் முறை அவர் ஐந்தாறு முறை வந்திருக்கின்றார்.) கேட் வே ஆப் இந்தியா போக சர்ச்கேட் ரியல் நிலையத்திலிருந்து டாக்ஸியில் 15 ரூபாய் தான் மீண்டும் வியப்பு தான்.(சென்னை ஆட்டோகாரர்கள் நினைவு வந்தால் வியப்பாக இருக்காதா என்ன) இது தான் கேட் வே ஆப் இந்தியா, அது தான் தாஜ் ஹோட்டல் போகலாமா என்றார். அப்படியே இரண்டு, மூணு போட்டோ எடுத்துட்டு மீண்டும் ரயில் ஏறினோம். அங்கிருந்து தாதரில் இறங்கி ஆரோரா தியேட்டர் போனோம். அங்கே தமிழ் படம் ஓடுமாம் போனால் சிலப்பாட்டம் ஓடிக்கொண்டு இருந்தது ஓடியே வந்துட்டோம். "ரத்னா அவங்க இங்க தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போகலாமா" என்றார். சரி என்றதும் ஹோட்டல் சென்று கொஞ்சம் புதிதாகி(fresh ஆகி) மீண்டும் ரயில், கந்திவெளி சென்று தக்கூர் கிராமம் என்ற மும்பை புறநகரில் மிக பணக்கார கிராமத்தை அடைந்தோம். அங்கே செலென்ஜர் டவரில் ரத்னா மனோகர்(எங்க குடும்ப நண்பர்கள் நீண்ட நாட்களாக ஃபரிதாப்தில் இருந்தார்க‌ள் கொஞ்ச நாள் முன் மும்பை மாற்றலாகி வந்தார்கள்) வீட்டுக்கு சென்றோம். வழக்கம் போல உபசரிப்பு, பேச்சு, சிரிப்பு என்று கொஞ்சம் நேரமில்லை கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போனதே தெரியலை. அவர்களோடு டின்னர் முடித்துவிட்டு மீண்டும் ஜுகு கிளம்பினோம். ரத்னா கொஞ்சம் என்னை போலவே நகைச்சுவையாக பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சில, "என்ன ரத்னா செல்ப்ல ஒரே இன்கிலிஸ் புக்ஸா இருக்குன்னு" கேட்டதுக்கு "க‌வுண்ட‌ம‌ணி ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க‌ தான்", என்றார்கள். இன்னுமொன்று "பாம்பேல வேலைகாரி ரொம்ப நல்லா வேலை செய்வாங்க ஒரு ஒரமா யாராவது உக்கார்ந்து இருந்தா அவங்களை கூட சூப்பரா துடைச்சி சுத்தம் செய்துட்டு போயிடுவாங்க." மேலும் ஒண்ணு "ஃபரிதாபாதிலிருந்து வரும் போது நிறைய சாமான்களை டிஸ்போஸ் செய்து விட்டு வந்தேன். இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய முடியல"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)

இரண்டாம் நாள் காலையில் எழுந்து அதே ரயில்(அதெப்படின்னு மொக்கை போடாதீங்க, அதேன்னா அதே இல்லை), அதே தாதர் நிலையம், மீண்டும் டாக்ஸி இப்போது போனது சித்தி விநாயகர் கோவில். அங்கே அருகம்புல் ஒரு கொத்தோடு ஒரு செம்பருத்தியை வைத்து கட்டி ஒரு சிறு பொக்கே போலவோ விற்று கொண்டிருந்தார்கள். அதே மாலையாகவும் கிடைத்தது. பார்க்க மிக அழகாக இருந்தது. இரண்டு மாலை வாங்கி விநாயகருக்கு கொடுத்து, வணங்கி விட்டு அங்கிருந்து மஹாலஷ்மி கோவிலுக்கு போனோம், பெரிய வரிசை(கிட்டதட்ட 2 கிமி தூரம் மக்கள் வெள்ளம்) அதனால் அங்கிருந்து அப்படியே யூ ட்ர்ன் அடுத்து மடுங்காவுக்கு தமிழ் சாப்பாடு கிடைக்கும் என்று சொன்னதால் வந்தோம். அங்கே நிறைய தமிழ் கோவில்களும் இருந்தது. ஆனால் மதிய வேளை என்பதால் எல்லாம் மூடி இருந்தது. மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட் வே ஆப் இந்தியா போய் எலிபெண்டா கேவ் போகலாம் என்று முடிவெடுத்து அங்கே போய் ஒரு படகில் கிட்டதட்ட ஒன்ற‌றை ம‌ணி நேரம் கடலில் அங்கே மிதக்கும் கப்பல்,படகுகள் இதெல்லாம் பார்த்தபடி போய் ஒரு தீவில் இறங்கி அங்கே விற்கும் இலந்தை பழம்,மாங்காய் இத்தியாதி இத்தியாதியை வாங்கி உண்டு இரண்டு நிமிடம் ரயிலில்(மாதிரி) போய், 20 நிமிடம் நடைபாதை கடைகளை ரசித்தவாறு ஒரு மலை மேல் ஏறி அங்கே இருக்கும் குரங்குக‌ளின் அட்டகாசத்திலிருந்து தப்பி அங்கிருக்கும் சுமாரான ஒரு குகை கோவிலை தரிசித்துவிட்டு இஷ்டபடி புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வந்த வழியே வந்து விடுதியை அடையும் போது இரவு உணவிற்கான நேரம் வந்திருந்தது. அதனால் உண்டு விட்டு ஜூகு கடற்கரை (கடற்கரைக்குறிய எல்லா அடையாளங்களும் கூடாவே நிறைய‌ குப்பைக‌ளும் இருந்த‌து, மும்பை மாநகராட்சி இதை கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்) சென்று வந்து உறங்கியாகிவிட்டது.

மூன்றாம் நாள் மும்பை சுற்றி காட்டும் ஒரு பேருந்தில் சென்றோம். பேருந்தில் ஒரு வழிகாட்டி மிக நகைச்சுவையாக மும்பை மாநகரை பற்றி கூறிக் கொண்டு வந்தார். ஒரு கட்டிடத்தை காட்டி அது தான் சஞ்ஜய்தத்தின் மாமியார் வீடு என்றார், அப்புறம் அதை அப்படி தான் கிண்டலாக கூறுவோம் அது மும்பை உயர்நீதி மன்றம் என்றார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானத்தை காட்டி அதற்கு பெயர் காந்தி மைதானம் என்றும் காரணம் அதில் புல் இல்லாம‌ல் மொட்டையாக இருப்பதால் என்றார். :) நீங்கள் இறங்கும் போது பணம்,நகை, பாம்(வெடிகுண்டு) போன்ற விலை உயர்ந்தவைகளை கூடவே எடுத்து சென்றுவிடுங்கள், சாப்பிடும் ஐட்டம் ம‌ட்டும் விட்டு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்றார். :) மும்பை தரிசனில் பிடித்தவை தொங்கும் தோட்டம்(ஆனால் உண்மையாக தோட்டம் தொங்கவில்லை நீர்தொட்டி மேல் அமைந்து இருப்பதால் அந்த பெயர் காரணமாம்), பூட் ஹவூஸ், மெரைன் டிரைவ் சாலை, மஹாலஷ்மி கோவில், அட்ரா மாலில் காட்டப்பட்ட 4டி காட்சி, அனுஜன்யா அண்ணாவை சந்தித்தது.(பாவம் அனுஜன்யா, ஹேங்கிங் கார்டனில் இருந்து, மஹாலஷ்மி கோவில் வரை எங்கள் பேருந்தை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக‌ சந்தித்து, ஓட்டத்தோடு ஓட்டமாக மஹாலஷ்மியை தரிசித்து, கொஞ்சம் பேசி, மஹாலஷ்மி கோவிலிருந்து அட்ரா மால் வரை கொண்டு வந்து விட்டார். என்னிடம் பேசியதை விட என் வீட்டுகாரரிடம் அதிகம் பேசினார். அனு அண்ணியும் தொலைபேசினார்கள் என்னிடம்) 4டி சோவில் 3டியை விட கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது. படத்தில் பனி பெய்யும் போது தலை மேல் பனி பொலிந்தது. அங்கே தீ எரியும் போது நாற்காலியிம் பின்பக்கத்தில் ஊதாங்குழல் ஊதுவது போல ஒரு வித சத்ததோடு என்னவோ வந்தது.(நல்ல வேளை நிஜபனி போல நிஜ தீ வைத்து சுடவில்லை.) ஆனால் அடிக்கடி நாற்காலி முன்னும் பின்னும் ஆடி யாரோ நம்மை அடிப்பது போல இருந்தது. மற்றபடி கண்டிப்பாக 4டி சோ பார்க்கலாம். நல்ல வித்தியாசமான பொழுது போக்கு. அங்கிருந்து நேரு அறிவியல் கூடம் சென்றோம் நிறைய விசயம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை போல இருந்தது. சத்தம், சங்கீதம் பற்றிய தொகுப்பிடத்தில் வெர்சுவல் ரியாலிட்டி என்ற இடத்தில் நாம் நடனமாடினால் அதற்கு தகுந்த இசை ஒலிக்கிறது.(பெரிய கம்ப விசித்திரமில்லை எல்லாம் மென் பெருளே, ஒரு சில இசைகருவிகள் அந்த இசை கருவி மீது நம் நிழற்படம் விழந்தால் ஒலிக்கின்ற மாதிரி செய்து இருக்கின்றார்கள். ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது) மேலும் சிலது அந்த பகுதியில் நன்றாக இருந்தது. ஒரு பியானா போன்ற கருவியில் நடந்தால் இசை வந்தது. அதன் பின் பேருந்து ஜுஹு கடற்கரை சென்றதால் நாங்கள் இடையில் இறங்கி மீண்டும் மடுங்கா சென்ற முதல் நாள் விட்டு போயிருந்த கோவில்களை பார்த்துவிட்டு இரவு உணவை முடிந்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

நான்காம் நாள் காலை எழுந்து தில்லி திரும்பும் ஆயத்த‌த்தில் ஆழ்ந்தோம். வரும்போது இருந்த தில்லி விமான நிலைய நெரிசலை மனதில் கொண்டு இரண்டு மணி நேரம் முன்னமே விமான நிலையத்தை அடைந்தால் என்ன ஆச்சரியம், நுழை வாயிலில் கூட்டமே இல்லை. போர்டிங் பாஸ் வாங்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆயிற்று. செக்குரிட்டி செக் பத்தே நிமிடத்தில் முடிந்தது. நல்லவேளை கையில் சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் புத்தகம் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை. விமானமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னமே கிளம்பி சரியான நேரத்தில் தில்லி வந்திறங்கியது. ஒரு டாக்ஸி பிடித்து இல்லம் வந்து சேர்ந்தோம். கைபேசியை உயிர்யுட்டியில் இணைத்துவிட்டு, எஸ் எஸ் முசிக்கில் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாட்டை கேட்டதும் வீட்டிக்குள் வந்து விட்டது மனமும்.

பயணத்தில் திரும்பும் போது எடுத்து சென்ற சூட்கேஸ் நிறைய அழுக்கு துணிகளும்..., தினசரி சிடுசிடுப்பும்,சலிப்புமில்லாத‌ சற்றே அதிக நேரமும், தில்லி வந்திருக்கிய விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணித்த பேருந்தில் என் கையசைப்பிற்கு என்னை பார்த்து மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக "எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)

Sunday, August 24, 2008

குழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்

அன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.

நான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.

எதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.

எதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.

என் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அருகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.