Friday, January 12, 2018

சின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை


லட்சுமியின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சைப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக்குலையில் வந்து படமெடுத்து நின்றது. வாழை மரம் நெகுநெகுவென்று வளர்ந்திருந்தது. காய்கள் எல்லாம் விடைத்துக் திமிறி நின்றன. பாம்பு பட்டென ஒரு காயைக் கொத்தியது. உடல் தூக்கி வாரிப்போட விழித்தெழுந்தாள் வேலாம்பா.

ம்மேய்யே...

லட்சுமியின் குரலா இது? வழக்கமான அழைப்பில்லை இது.

ம்மேய்யே.. பயத்துடன்தான் கத்துகிறது. என்னவோ சரியில்லை.

அருகில் உறங்கிக் கொண்டிருந்த செல்லப்பனை எழுப்பினாள்.
  
"ஏங்க ஏங்க" 

"என்ன?"  முகினான் செல்லப்பன்

"வாளய பாம்பு கொத்திட்டாப்புல கெனாக் கண்டேன்படபடப்பா இருக்கு வாங்க போய் பார்த்துட்டு வந்திடலாம்"

"சும்மா கிறுக்காட்டம் பொலம்பாதஉனக்கு வாள மேல பையத்திமா போச்சுதூங்கு பேசமா" 
  
பட்டிக்கும் வீட்டுக்கும் கூப்பிடு தூரம் தான். ஆனால் வீட்டிலிருந்து இரவில் நடக்கத் துணை வேண்டும். கையில் லாந்தர் எடுத்துக் கொண்டு போகலாமா என்று நினைத்துசுவரில் "டிக் டிக்" என்று நகரும் கடிகார முள்ளை உற்றுப் பார்த்தாள். மணி இரண்டு தான் ஆகியிருந்தது. கனவு அவள் உறக்கத்தை விரட்டி விட்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை பொங்கல் பானையில்  வெல்லம் போட போகும் போது அடுப்பு திகுதிகுவென்று  எரிந்து, பானையே செந்நெருப்பாய் மாறி உருகி உடைய   பொங்கல் அடுப்பில் நெருப்பில் விழுந்து கருகி  போனது போல கனவு வந்த மறுநாள் தான் கிணற்றில் மோட்டார் காயில் தீய்ந்து போனது. பெரிய செலவு அது. இருப்பு கொள்ளாதவளாய் பட்டியில் இனி ஆடுகளைத் தனியே விட்டு வரக்கூடாது வீட்டிலேயே கட்டி வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாள்.

வேலாம்பா நிலைகொள்ளாமல் வீட்டுக்குள் இங்கும் அங்குமாய் நடந்தாள். வயலின் விளைச்சலை நல்ல விலை வரும் வரை மூட்டையாக வீட்டிலேயே அடுக்கி வைத்திருந்த நடுக் கூடத்திலில் உத்திரத்திலிருத்து தொங்கிய கயிற்றுக் கட்டில் பூனை தாவியோடியதில் ஊஞ்சல் போல் அசைந்து ஆடியது. “சனியன் எப்போ பாரு மேல கட்டில் மேலயே போய் குடியிருக்கு என் உசுரெடுக்க.  தெனம் தெனம் உறவுக்காரங்க வந்து இங்க       உக்காந்து சாப்படற மாதிரி இத்தனை மெத்தைங்க, இப்படி ஆடி எல்லாம் கீள விளுந்துட்டா இருக்க வேலைக்கு அத வேற அடுக்கி வைக்கனும்" முனகியபடியே             சுவர் ஓரமாய் சரிந்திருந்த மிளகாய் கூடையை நிமிர்த்தினாள். தரையில் கிடந்த கோணிச் சாக்கை எடுத்து உலர்ந்த வெங்காயத்தின் மீது    போட்டாள். கூடம் முழுக்க வெங்காயத்தின் நெடி. “வருஷம் முச்சூடும் நெல்லும் பருத்தியும் கடலையும்ன்னு ஏதானும் ஒன்று பொட்டும் பொடிசுமா பிள்ளக படுக்கக் கூட இடமில்லாம அடச்சி கிடக்கு, பட்டில ஊட்ட கட்டிடலாம்ன்னா, இருக்க ஜோலிய விட்டு ஒரங்க வர இடத்துக்கு ஒய்யாரம் கேக்குதான் பேசுவாக, பேச்சு தான் வேலா புருஷன முடிஞ்சி வைச்சி இருக்கான்னு”

வாசலில் நின்றாள். கலையாத இருட்டு. கண்களை இடுக்கிக் கொண்டு கிழக்குப் பக்கமாய் உற்றுப் பார்த்தாள்கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும்கூட குஞ்சங்குழையான் கோயில் கண்ணுக்குப் படும். கண்ணை மூடினாள். மனதில் கோவிலின் மூன்று பகுதியும் வந்து போனது. நெருப்பாய் எரியும் சிவப்பு பாவாடை இன்னுமொன்னு எடுத்து சாத்தறேன் மதுகாளியம்மா ஏழு கன்னிமாரே மது காளியாம்மாவே, ஜென்ட சன்னியாசியாரே            குஞ்சங்குழையானே! லட்சுமிக்கும் கன்னுகளுக்கும் ஒன்னும் ஆவாம பாத்துக்கோ. சின்ன லட்சுமி குல தள்ளி இருந்தா முத படயல குல கோவிலுக்கு மட்டும் நேந்து கிட்டேன் இது சரியான்னு சொல்லி காட்டீங்க. உங்க கோவிலையும் ஒரு படையலை போட்டுறேன் எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோய்யா சாமி. வயலையும் கிணத்தையும் உம்ம நம்பி விட்டு வரேன் எப்போவும்” இருட்டைப்             பார்த்து பிதற்றியபோது கன்னத்தில் நீர் வழிந்தது.

“என்ன புள்ள பொலப்பிட்டே இருக்க, விடிஞ்சதும் போய் பாக்கலாம் கொஞ்சம் ஒரங்கேன்”

“ஆமா கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து பொலம்ப தாம்ய்யா விட்டு இருக்க, எவ்வளவோ பிக்கலு பிடுங்கலு”

“இப்போ உனக்கு என்ன குற வைச்சிட்டேன். ஏன் இப்படி தொண தொணக்கிற கொஞ்ச நேரம் ஒரங்க விடேன் காலைல வேல வெட்டி பாக்க வேணாமா?”

 “ஆமா நான் பேசினா உமக்கு தொண தொணப்பா தான் இருக்கும், பாகம் பிரிச்சப்ப கைல கழுத்துல போட்டு இருந்தத கழட்டி கொடுத்த போதே இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு வேற இடத்துல வீட்ட கட்டி மாடு கன்னு எல்லாம் ஒன்னா வைச்சிட்டு இருந்தா இந்த தூக்கம் கெட்ட பொலப்பு வருமா? பங்காளி கண்ணு பெருங்கண்ணால்லா இருக்கு லட்சுமிக்கு என்ன ஆச்சோ ஏன் அப்படி கத்துச்சின்னு தெரியலையே. சிறுவ சிறுவ காசு சேர்த்து பட்டிய வாங்கி போடாம இருந்திருந்தா தெரியும்”

செல்லப்பன் மீண்டும் உறங்கி போயிருந்தான்.

“பங்காளிங்க வீட்டு பூதங்க எதுவும் பண்ணுதா, ஒரெட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்ன்னா ஒரக்கம் அவ்வளோ முக்கியமா போச்சா இந்த கேடுகெட்ட மனுஷனுக்கு, கடந்த முற கிணத்துல தண்ணி வத்தி போய் மோட்டார் கீழ எறிக்கி வைக்க ஒரு நா தாமதமாச்சு, சும்மா தண்ணி எட்டாத நேரம் மோட்டாரா போட்டு பொகுச்கிட்டு நானில்ல நீ இல்லன்னு சொல்லிட்டாங்க. இரண்டு பாகம் வாங்கி போட்டதிலிருந்தே வருஷமாச்சு ஐந்து இன்னும் பொறாம தீரல. கூடவே பொல்லா பேச்சு வேற, குஞ்சகுலயா கோவிலுக்கு போறதுக்கு நல்ல ஜாதில வந்தவளா, பொசங்கெட்டவன்னு நாக்குல பல் படாம பேசி தீர்க்கறாங்க. என்னான்னு கேட்டியா, எனக்கு கூட பொறந்த பொறப்பிருந்தா, அப்பனு அத்தானுமிருந்தா இப்படி நாதியத்தவளா கிடப்பேனா?” செல்லப்பன் உறக்கம் கலைந்து விடக்கூடாது என்று இதமாக குரலில் தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.  இப்படித் தான் செல்லப்பனோடு சண்டைக்கு வரட்டிக் கொண்டு பேசினாலும்,  பங்காளி பெண்டுகள் ஏச்செல்லாம் பழகி போயிருந்தது. திருமணமாகி வந்த புதிதில் கொஞ்சம் மன சங்கடப்பட்டாள். மாமானார் மாமியார் இல்லாத குறைக்கு மற்ற மூன்று வீட்டு பெரிசுகளும் எதற்கெடுத்தாலும் பேசி குறை சொல்லிக் கொண்டிருந்த நிலையில் புதுப்பண்ணையார் வீட்டம்மா பவானி தான் வேலாம்பாவுக்கு ஆறுதல் சொல்லி வழிகாட்டுவாள். திருமணம் முடிந்து வீட்டில் அடி எடுத்து வைத்தவளுக்கு ஆரத்தி எடுக்கக் கூட யாருக்கும் மனமில்லாத போது பவானி தான் ஆரத்தி எடுக்கச் சொல்லி மூத்த பங்காளி வீட்டும்மா தேவியிடம் வற்புத்திச் சொன்னாள். அவளும் முகரை கட்டையை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு போய் விட்டாள். பின்னர் பவானியே ஆரத்தி எடுத்தாள். அத்தனை கூட்டத்தின் முன்னிலையில் சத்தமாக “பொண்ணை அணைச்சி உள்ள கூட்டிட்டு போ” என்று சொன்னது, பவானியின் கணவன் சூரப்பன் என்று மறுநாள் பவானி வீட்டில் விருந்துக்கு போன போது தெரிந்து நாணம் கொண்டாள். விருந்து தடபுடலாக இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்த போது சூரப்பன் அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த போது உள்ளுக்குள் பரவசமாய் இருந்தது. விருந்து முடிந்த புதுபெண்ணுக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் மங்கல பொருட்களை மடியில் நிறைத்தாள் பவானி. மனமும் நிறைந்த வேலாம்பா, வீடு திரும்பிய போது தேவி “வெலங்காத வயித்துக்காரி வீட்டுல போய் முத சோறு திண்ணிட்டு, மடி நிறைச்சிட்டு வந்திருக்கா குலம் வெளங்கும், பணக்காரின்னா கூப்பிட்டா போயிடறதா நல்லது கெட்டது யோசிக்க கூட தெரியாட்டா கேட்கனும்” திட்டித் தீர்த்தாள்.

  மாமியார் மாமனார் எவர் சிக்கலும் இல்லாத ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்தாள் வேலாம்பாமேலும் வீட்டில் அவள் கருத்துக்கு மறு கருத்து இருந்ததில்லை. அதுவே பிற குடும்பத்திற்கு இவள் மேல் பொசபொசத்து வரக் காரணமாக இருந்தது. யாரிடம் என்ன பேசி எப்படி வேலை வாங்கவேண்டுமென்ற தளுக்கு வேலாம்பாவுக்கு தெரிந்திருந்தது. இதுவும் பங்காளிகள் வாய் கோணிப் பேச வாகாக அமைந்தது. செல்லப்பன் எது செய்தாலும் அதில் ஏற்றம் பெற்று நல்ல லாபத்தை ஈட்டியது அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் கூட்டியது. திருமணம் முடிந்த அடுத்தடுத்த ஆண்டே இரண்டு பிள்ளையை பெற்று விட்ட வேலாம்பாவுக்கு பவானி தான் பெருதவியாக இருந்து அவள் பிள்ளையை பார்த்துக் கொண்டால் வயலில் வேலை இருக்கும் போதெல்லாம் பிள்ளைகளை புதுப் பண்ணை வீட்டில் தான் விட்டிருந்தாள் வேலாம்பா. புதுப்பண்ணை வீட்டில் இவள் பிள்ளைகளுக்கென்று தூளிக் கட்டி வைத்திருந்தாள். செல்லப்பனிடம் பவானி பெருமையை எப்போதும் போல பேசிக் கொண்டிருக்கும் போது ஒருமுறை “இப்பெல்லாம் நம்ம வீட்டில இருக்கிற நேரத்த விட வயலையும், சூரப்பன் வீட்டிலையும் தான் இருக்க போ!” என்றான்.

  பிள்ளைகளுக்கு மொட்டையடிக்க குலதெய்வ கோவிலுக்கு கூப்பிட்ட போது பவானி மட்டும் வந்திருந்தாள். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் குலக் கோவில் வந்த போது பவானியும், சூரப்பனும் ஏதேச்சையாக அங்கே வந்திருந்தார்கள். சூரப்பன் குடும்பத்துக்கும் அதுவே குலதெய்வம். அப்போது தான் வளைகாப்பு முடிந்திருந்தது வேலாம்பாவுக்கு. “உங்களுக்கு இது தான் குல தெய்வ கோவிலா அப்ப நாமெல்லாம் தூரத்து பங்காளியாத்தான் இருக்கனும்” என்ற வேலாம்பாவுடன் சிரித்து பேசி மகிழ்வாக இருந்த பவானியை அவளோடு இருக்க விடாமல் சீக்கிரமே காரில் அழைத்துக் கொண்டு போய்விட்டார் சூரப்பன். அதை பற்றி செல்லப்பனிடம் வருத்தப்பட்ட போது “சூரப்பனுக்கு அப்படி தான் ஏதோ கிறுக்கு பிடிச்சிக்கும் அப்பப்ப” என்றான். மறுநாள் பேசும் போது பவானியும் வருத்தப்பட்டாள். ஆனால் சூரப்பனுக்கு இணையாக வாயாடுவதில் அந்த ஊரில் வேலாம்பா விட்டா யாருமில்லைன்னு சூரப்பனே சொன்னதாக சொன்ன பவானி “அவுக லேசுல யாரையும் அப்படி சொல்ல மாட்டாக” என்றாள். “பட்டியை வாங்கி ஏன் அப்படியே போட்டு வைச்சி இருக்கா, சின்னதாக தோட்டம் போடுன்னு” சொன்னதே பவானி தான்.  அப்படி பூச்செடி, காய்கறி எல்லாம் வைத்து வளர்த்தவளுக்கு பவானி வீட்டுக் கொல்லையில் இருக்கும் வாழை மரம் போலொன்றை வளர்க்க ஆசை வந்தது.


வேப்ப மரமும்புங்கனும், சில சிறிய தென்னங்கன்றுகளும் இருந்த பட்டியில் வாழைக் கன்றை நட்டதுமே பசுமை கூடி களை வந்தது போலிருந்தது  ஆனால் அடிக்கடி ஆடு மேய்ந்து மிகவும் நைந்து போய்க் கொண்டிருந்தது அந்த வாழை. அது தழைந்து வர தனியாக வேலி ஒன்றைக் கட்டச் சொல்லி செல்லப்பனை நைத்தெடுத்தாள். அவள் சொல்வது எதையும் அவளைத் திட்டாமல் செல்லப்பன் செய்தது இல்லை.  "இந்த வாள மேல அப்படி என்ன உசுர வைச்சிட்டு இருக்கு கிறுக்கி மவ" என்று அவன் சொல்லாத நாளே இல்லை. அடிக்கடி வாழையை சுற்றியுள்ள மண்ணை வெட்டி விட்டுவாள். தனியாக உரம் வைப்பாள். அடியில் கிளைத்து வரும் கன்றுகளை நீக்கி எடுத்து தோட்டத்தில் வேறு இடத்தில் வைப்பாள்.   சாயுங்காலத்தில் விளக்கு வைத்து கும்பிடுவாள். சின்ன லட்சுமி என்று வாழைக்கு பெயரும் வைத்திருந்தாள். பெண் வளர வளர தாய் ரசிப்பது போல ஒவ்வொரு குருத்திலை வரும் போதும் பூரித்துப் பார்த்தாள். தினம் கொஞ்ச நேரமெனும் அந்த வாழை மரத்திடம் நின்று பார்க்காமல் அவளால் இருக்க முடியாது. சின்ன லட்சுமியின் இலைகளைக் கூட அறுக்க அனுமதிக்க மாட்டாள்யாரும் அதன் பக்கத்தில் சென்றாலே படு கோமாக ஏதாவது பேசிவிடுவாள். செல்லப்பனையும் பிள்ளைகளையும் போலவே அவளுக்கு அந்த வாழையும் முக்கியமாக இருந்தது. மத்தாப்புகள் மலர்ந்த மரம் ஒன்று கனவில் வந்த அன்று சின்ன லட்சுமி வடக்கில் குலை தள்ளியிருந்தது. தன் பெண் பிள்ளை சூல் கொண்டது போல மனம் மகிழ்ந்து போனாள் வேலாம்பா. அன்று காலையில் வேலப்பனுக்கு காப்பிதண்ணி கொடுக்கக் கூட மறந்து போய் பட்டிக்கு ஓடி விட்டாள்.  பட்டிக்கு பிறகு வந்த வேலப்பன் “இப்போல்லாம் என்னை விட வாளா தான் உனக்கு முக்கியமா போச்சு” என்று கொஞ்சம் கோபமாகவும் சலிப்பாகவும் சொன்னான்.

 வாழை குலை தள்ளி இரண்டு வாரத்தில் அதையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த வேலாம்பாவை பார்க்க செல்லப்பனுக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது. "இந்தச் சனியனை ஒழிச்சி கட்டினாதான் நீ சரிப்படுவே" என்றான். தினம் சோத்துக் கஞ்சியை கொண்டு வந்து வாழைக்கு ஊற்றினாள். அதை பார்த்த ஊர்ச்சனம் அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா எனக் கேட்டார்கள். ஆனால் தொடர்ந்து வீட்டிலிருந்து மிஞ்சும் கழுநீர்கழித்துக்கட்டிய காய்கறிகள்வேப்பிலைபூக்கள் என்று தோன்றியதை எல்லாம் வாழையைச் சுற்றிப் புதைத்தாள். தோட்டத்தில் இருப்பதை விட அதிக நேரம் பட்டியில் வாழையோடு கழித்தாள். அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு சுற்று இளைத்து கூட போனாள். அவளுடைய உழைப்பையும் அளவில்லாத கவனிப்பையும் பார்த்து செல்லப்பனுக்குக் கூட அந்த வாழை மேல் கொஞ்சம் பாசம் வர ஆரம்பித்தது. 

 கொஞ்சம் வெள்ளி விட்டதும்வீட்டில் இருப்புக் கொள்ளாமல் பட்டிக்கு ஓடினாள் வேலாம்பா. மனது கருக் என்றது போலவே தார் திருட்டுப் போயிருந்தது. அப்போது சற்று நேரத்துக்கு முன் வெட்டப்பட்டு சாறு "டொக் டொக்" என்று வடிந்து கொண்டிருந்தது. மொட்டையாக நின்ற வாழையை பார்க்கப் பார்க்க பொருமிக் கொண்டு வந்தது. "உசுர எடுத்துட்டாங்களே பாவிக" என்று அழுது புலம்பினாள். இன்னும் இரண்டு நாளில் ஆள கூப்பிட்டு வெட்டி விடலாமென்று பேசி வைத்திருந்தார்கள், முதல் குலை தள்ளி இருக்கும் குலம் இன்னும் தழைக்கனும்ன்னு குலதெய்வத்துக்கு அந்த காய படைக்கனும் பவானி அக்காட்ட சொல்லிட்டு இருந்தேனே. அதற்குள் இப்படி ஆகிப் போனது. கண்ணீர் கொட்ட வீட்டுக்கு ஓடினாள்.

 "ஏங்க மோசம் போச்சுவாளக் குலய யாரோ வெட்டிட்டுப் போயிட்டானுவ"

"என்ன புள்ள சொல்றகெனா கினா கண்டியா?"

"காலைலயே எழுப்பினேனேவந்திருந்தா திருட்டுக் களவாணிய பிடிச்சிருக்கலாமே"

பதறிக் கொண்டு இருவரும் பட்டியை நோக்கி ஓடினார்கள். பூச்செடிகள் மிதிபட்டிருந்தன. வேப்பமரத்தில் வெட்டறுவையால் கொத்தி வைத்திருத்தையும் பார்த்தான் செல்லப்பன்.

"விழுந்து விழுந்து கவனிக்காதஊர் கண்ல உளுவாதன்னு சொன்னா கேட்டியா?"

"அய்யா குஞ்சங்குலயானே உன் பார்வையில இருந்த மரமாச்சே".

 சாமி வந்தவள் போல, "எந்திரி இத வெட்டிக் கொண்டு போய் குஞ்சங்குலயான்கிட்டயே வைச்சிடுவோம் அவன் வாளதாரை கொண்டு போனவனை பார்த்துக்குவான்" என்றாள்.

 செல்லப்பனுக்கும் அதுவே சரி என்று தோன்றியது. வீட்டிலிருந்து அறுவை கொண்டு வந்து அடிமரத்தை வெட்டி எடுத்தான். அவன் உடம்பெல்லாம் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. வேலாம்பா அழுது கொண்டே இருந்தாள். “பெத்த பெண்ண கட்டிக் கொடுக்றாப்பல உன்னை வெட்டணும்னு நெனைச்சேனே. இப்படிப் போறியே ஆத்தா" என்று அரற்றினாள். இருவரும் தூக்க முடியாமல் வாழையை தூக்கிக் கொண்டு முனிக்காளை வாசலில் போட்டு ரொம்ப உருகி வேண்டிக் கொண்டார்கள். வேலம்பா சூடத்தை ஏத்தி எலுமிச்சம் பழத்தை வெட்டி குங்குமம் தேய்த்து சூடத்தின் மேல் பிழிந்து அணைத்தாள். ரத்தம் போல் வழிந்த எலுமிச்சை சாறு பட்டு "சுர்ர்” என்ற ஓசையோடு கற்பூரம் அணைந்தது. எலுமிச்சையும்கற்பூரமும் சேர்ந்து தீயும் தெய்வீக மணம் கோவில் முழுவதும் பரவியது. பருந்தொன்று படபடத்துப் பறந்தது. அதைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். செல்லப்பனும் இரண்டு கைகளையும் நெஞ்சோடு பின்னிக் கோர்த்து ஒரு வித சடங்கு போல் செய்தான். ஜென்ட சன்னாசி கோவிலிலும் எலுமிச்சையை வெட்டி எரிந்தாள். வல்வால்களின் கவிச்சி வாடையை எலுமிச்சை வாசனை விரட்டடித்தது. மதுகாளியம்மனிடம் சூடம் ஏற்றி  வேண்டி நின்றாள்.

 புருஷனும் பொண்சாதியும் பூசாரியிடம் பூப்போட்டு கோடாங்கி கேட்டார்கள். "வீட்டுக்கு வடக்க இருக்கான் திருடன். இன்னும் இரண்டு நாழில துப்பு வரும்ஹூம் ஹூம்” என்று நாக்கை துருத்திக் கொண்டு சாமியாடிபடி சொன்னான் பூசாரி. அவன் கையில் ஐந்து ரூபாயைத் திணித்து விட்டு புருஷனும் பொண்டாட்டியும் வீடு வந்து உட்கார்ந்து கொண்டார்கள். இருவரும் சோறு தண்ணி நினைப்பற்றவர்களாய் விக்கித்துக் கிடந்தார்கள்.

 "அப்படியே எவ்வளவு நேரம் உக்காந்து இருக்கநான் கிளக்கி தோட்டம் வர போயிட்டு வரேன்." என்றான் செல்லப்பன்.

"நானும் வரேன்" என்றவள் நீராகாரத்தைக் கரைத்து கொடுத்து விட்டுத் தானும் கொஞ்சம் குடித்தாள். பிள்ளைகள் நீராகரம் மட்டும் தானா என்று சிணுங்கினஅப்படியே பள்ளிக்கூடம் போய்விட்டன. வேலாம்பாவும் செல்லப்பனும் கிழக்குத் தோட்டத்திற்கு பழையதை தூக்கு போவணியில் ஊற்றி எடுத்துக் கொண்டு போனார்கள். 

"சின்ன லட்சுமி இருந்தவரை எல்லா பளசயும் அங்கே கொட்டிட்டு தினம் சுடு சோறு வைப்பப்ச்" என்றான் செல்லப்பன்.

"எல்லாம் வவுறு எரிஞ்சி தான் இப்படி ஆச்சு" என்றாள் வேலாம்பா.

 மௌனமாக கிழக்குத் தோட்டம் போய்ச் சேர்ந்தார்கள். நெல்லறுப்பு நடந்து கொண்டிருந்தது. கூலிக்கு ஆள் வந்திருந்தார்கள். சர சரவென்று இறங்கி கூலியாளோடு இரண்டு ஆள் வேலையைப் பார்க்கும் வேலாம்பா எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்ட பக்கத்து தோட்டத்து பூவாயி "என்ன வேலுசின்ன லட்சுமிய விட்டு இன்னிக்கி இங்க வந்திருக்க" என்றாள். பூவாயி கிழக்கு தோட்டம் பார்க்க ஒத்தாசையாக இருக்கும் பண்ணையாளின் பொண்டு. அவளுக்கும் பக்கத்திலேயே தோட்டமிருந்தது. வேலாம்பா அதான் போச்சே என்று அழத் தொடங்கியதும் பூவாயி பயந்து போனாள். செல்லப்பன் எதுவும் கேட்க வேண்டாமென்று சைகை காட்டினான். 

பொழுது உச்சிக்குப் போனது. கூலியாள் சோத்தைப் பிரித்தான்வாழைக்காய் பொரியலாக மணந்தது. அந்த மணத்தில் சின்ன லட்சுமியே மணந்தது போல இருந்தது வேலாம்பாவுக்கு. எங்கடா கிடைச்சது வாழைக்காய் என்று கூலியாளை ஒரு மிரட்டு மிரட்டினாள். செல்லப்பன் "ஏப்புள்ள கிறுக்கு அடங்காம இருக்கவாளன்னா அது நம்ம வீட்டுல மட்டுந்தான் இருக்கா?" என்றான். வேலாம்பாவின் உருட்டும் விழிகளைப் பார்த்து கூலியாள்  புதுப் பண்ணை வீட்டுல கொடுத்தாங்க என்றான். பூவாயியும் சொன்னாள் "இன்னிக்கி புதுப் பண்ணை வீட்டு பண்ணையாள் வாளக்காய, நல்ல பனங்கிழங்காட்டாம் இருக்கும்கொண்டாந்து வித்துட்டுப் போனான். நான் கூட இரண்டு காய் வாங்கினேன் பாரு" என்று காட்டினாள். வேலாம்பா துணுக்குற்றாள். அது சின்ன லட்சுமி குலை தள்ளிய வாழைக்காய்தான். அந்தக் காய்களை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

புதுப்பண்ணையின் பண்ணையாளை மடக்கிப் பிடித்தார்கள். தார் தான் வெட்டவில்லை என்று சூடமடித்து சத்தியம் செய்தான். பண்ணையார் வீட்டில் வித்து காசு பண்ணிக்க சொல்லி கொடுத்தாங்கஅதான் செய்தேன் என்றான். அவனிடம் வெட்டிய தாரின் நடுத்தண்டை கொடுக்க சொன்னான் செல்லப்பன். அதைக் கொண்டுபோய் குஞ்சங்குழையான் கோவிலில் தனியாக பிசாசு போல் நின்ற சின்ன லட்சுமியின் வெட்டுபட்ட இடத்தில் வைத்துப் பார்த்தான். சரியாக இருந்தது. 

கிழக்கு வயலில் இருந்து செல்லப்பன் துப்பு துலக்க கிளம்பியதுமே வேலாம்பா குஞ்சங்குழையான் கோவிலை நோக்கி ஓடினாள். முனிகாளை கோவிலில் அவள் அணைத்த சூடம் காற்றோடு கரைந்து பாதியாய் இருந்தது.  “அய்யோ பாதி கரைஞ்சிடுச்சே” என்றபடி விக்கித்தபடி அதை பார்த்தாள். பரபரப்பாய் அவளெரிந்த எலுமிச்சை தோலையையும் தேடினாள். ஜன்ட சன்னாசி கோவிலில் எரிந்த எலுமிச்சையை காணாது அழுகை முட்டி முட்டி வந்தது அவளுக்கு. சின்ன லட்சுமி வழக்கம் போல் தன் இலைகள் காற்றில் அசைத்து மௌனமாய் வேலாம்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

சூரப்பன் வீட்டிலிருந்து சோர்ந்த முகத்தோடு திரும்பிய செல்லப்பன் “ “நம்ம சொந்ததுல இப்படி ஒரு நாறப் பயலா. முதல்ல உங்க வீட்டுல தான் வாள இருக்கா நான் டவுன்ல இருந்து வாங்கியாந்தேன்னு தெனவெட்டா பேசினான். பூசாரி சொன்னதையும் ஆமா எங்கிட்ட கூட தெக்க திருடன் இருக்கான் சொன்னான். சொல்லி முடிக்கல நல்லா பழி வாங்கிட்டான் குஞ்சகுலயான். வாள குலயோட தண்ட புடுங்கி ரூசு இருக்கக் கூடாதுன்னு நெருப்புல போட்டான் பாரு, அவன் கையே பத்திகிச்சி. நா ஆடிப் போயிட்டேன் அப்படியே துடிச்சி போயிட்டான் மனுஷன். பவானி தான் பாவம், எனக்கே தெரியாம நடந்துடுச்சின்னு கண்ணல தண்ணி விட்டுச்சி கையெடுத்து கும்பிம்பிடுச்சி, வேலா முகத்துல எப்படி முளிப்பேன்னுச்சி. பேசமா வந்துட்டேன்.விறு விறுவென்று ஆவேசமாய் எழுந்தாள் வேலம்பா. அறிவாள் மனையை எடுத்து கொண்டு போனவள். எங்கே எவ்வளவு கோபமாய்  போகிறாள் என்று வியப்பாய் இருந்தது       செல்லப்பனுக்கு. சன்னதம் வந்தது போல  சின்ன லட்சுமியை துண்ட துண்டமாய் வெட்டி நாலாப்பக்கமும் எறிந்தாள். பாசமா இருந்தா இது தான் பலனா?” என்று ஒவ்வொரு வெட்டுக்கும் சொல்லி சொல்லி வெட்டினாள். ஏன் அப்படி பித்து பிடித்தவள் போல் செய்கிறாள் என்பது புரியாமல் வேலப்பன் பார்த்துக் கொண்டிருந்தான்.  இலை, மட்டை எல்லாவற்றையும் துண்டமாக்கிய வேலாம்பா அதனை பட்டியில் குழி வெட்டி புதைத்து விட்டு வந்தும் ஆதங்கம் தீரவில்லை அவளுக்கு.  எங்கோ இருந்து சின்ன லட்சுமி அவளை பார்த்து சிரித்துக் கொண்டேயிருந்தது. அவளால் வெட்டிப் புதைக்க முடியாத சிரிப்பு அது.