Saturday, May 24, 2008

அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு

ஒரு வழியாக இரண்டு வருடங்களாக படித்து கொண்டிருக்கும் யூமா வாசகியின் "அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு" என்ற கவிதை தொகுப்பை படித்து முடிக்க வாய்த்தது தனிமையோடான நீண்டதொரு பயணம். இந்த தொகுப்பை எனக்களித்த பாம்பாட்டி சித்தன் அவர்களுக்கும், அவரை எனக்கு அறிமுகம் செய்த முத்தமிழுக்கும், முத்தமிழுக்கு என்னை அறிமுகம் செய்த நிலாரசிகனுக்கும் நன்றி.

அனேகமாய்
வெயிலற்ற ஒரு பொழுதில் - உன்
வீடுள்ள தெருவழியாய் - நான்
என்றாவது நடக்க நேரிடும்.

என்று ஆரம்பிக்கும் இந்த கவிதை தொகுப்பின் முதல் கவிதையே படிக்க ஆரம்பித்ததுமே மிக அருமையான கவிதை தொகுப்பை தந்த சித்தருக்கு ஆயிரம் நன்றிகள் கூறிக் கொண்டேன். அப்படி என்ன விசேசம் இந்த கவிதையில் என்பவர்களுக்கு, ஒருவேளை அப்படி நான் நடக்கும் போது உள்ளே இருக்கும் நீ எந்த காரணத்திற்காவும் வெளியே வர வேண்டாம் வந்தாலும் யாருக்கும் தானம் கொடுக்கும் நோக்குக்கு உண்டான அளவான ஈர்போடு மட்டும் வா. உடனே உள்ளே சென்று விடு. ஒருவேளை

"உணர்ந்து பெயர்கூவி
அணைக்கின்ற ஆசையோடு
நெருக்கிவிடாதே
அதோடு என் பயணம் முடிந்துவிடும்."

:)

ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும் என்ற தலைப்பில் இடப்பட்டு இருக்கும் ஏழுகவிதைகளும் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அழகாக இருக்கின்றன. முத்தாய்ப்பாக

"என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்"

என்று அழைப்பது யாரை தெரியுமா? பிறை கூடிய அந்த இறையை, சிவபெருமானை.

"நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவிசெய்து ஒத்திருப்போம்"

என்று சொல்லும் போதும், வரும்போது நந்தியையும் நாகத்தையும் அழைத்து வா எனக்கு டீயும் சிகரெடும் வாங்கி வர தேவைப்படும் என்று சொல்லும் போதும் கவிக்கே உரிய ஆளுமை புலப்படுகின்றது.

தொகுப்பு முழுவதும் அழகியல் மழைத்துளிகளாக அங்காங்கே அழகாக தெளிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றில் இங்கே நனைவோம்

"கடவுள் விரல்கள் காட்டும் அபிநயங்களின்
அர்த்தங்களறியாதவர்களுக்குதவ உன் கொலுசு
தூண்டற்குறிப்புகளை வாரி சொரிந்தது."

தூண்டற்குறிப்புகள் என்பது அழகான சொல்லாடல் அல்லவா?

"பருவங்கூம்பிக் கட்டவிழும் யௌவனத் துளியொன்று
சொட்டியதிர்கிற ஓசையையில்"

"உன் கொலுசொலி நிரம்பிய கடல் இந்த வராண்டா"

"கருகமணிகளின் சறுக்கு விளையாட்டில்
விழிக்கு வெளியேயும் சிதறும் பனுச்சில்லுகள்"

"உன் உள்ளங்கைகளின் மருதாணி புள்ளிகளிலிருந்து
பிறந்து வரும் இரவுகாலம்"

"உன் தீண்டலில் பொடிந்து தூசுபடலமாவேன் - அதில் நீ
வரையும் வடிவாய் வெளிப்படுவேன்"

"எங்கோ பெய்த மழை உன் பாதங்களை முகர்ந்தபடி
தவழ்ந்து வருகிறது என் வறட்சிக்கு"

அத்தனையும் அழகியல் அற்புதமான மொழி வசப்பட்டு இருக்கின்றது இந்த கவிஞருக்கு.

மேலும் கவிஞர் பெண்மையை போற்றும் இடத்திருக்கு பல இடங்களில் ஆதாரம் இருக்கின்றன். "உடலுக்கு வெளியே இலங்கும் உறுப்புகள் அனைத்திக்கும் இயக்கம் என்பது உன்னை வியப்பதே" இதை விட பெண்மையை போற்ற இயலுமா?

கவிஞர் கையாண்டு இருக்கும் உவமைகள் கூட அழகோவியமாய் திகழ்கின்றது.

"உச்சிகிளை இலவங்காய் வெடித்து - பஞ்சுப் பிசிறு
மெல்ல நிலமணைவதுபோல்" என்று தன் காதலியின் மெல்லிய நடைக்கு ஒப்பிடுகின்றார்.

"கன்னத்துப் பருவாக ஆஷ்டிரேவிற்குள் கிடக்கிறேன்"


மேலும் கவிஞர் துரோகத்தை வெறுப்பை பதித்திருக்கும் விதமும் அருமை "செரிப்பற்று இடறும் என் அன்பை மறைவில் சென்று வாந்தியெடுத்துப் போ".ஒரு முயல் வடிவ குப்பைத் தொட்டிக்கு கூட இரங்கும் கவிஞரின் சிந்தனை அதி அற்புதமானது.

பிளர்ந்தெரியும் நெருப்பாக தகிர்க்கும் தருணமும் "புகையின் முனையில் என் உதடுகள் உன் இருப்பிடத்தின் கதவுகளை முத்தமிட்டுத் திரும்புகின்றன" என்கின்றார். அவ்வளவு அதி
உன்னத காதல் அவரது.

தனிமையில் காதல் நுகர்தலை இதை விட அழகாக சொல்லமுடியுமா?

"இரவில் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பிற்கும் உன் கனம்
பல நூறு துடிப்புகள் ஓடஓடத் துரத்தியடிக்கின்றன"

அடுத்து...

"இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருந்தேன்."

என்று ஆரம்பிக்கும் இந்த கவிதையில் கவிஞர் தன் அறையில் காதலி வந்து சென்றது போல நினைத்து தடயத்தை தேடுக்கின்றார். ஒரு துப்பறியும் நாவல் போல விருவிருப்பாக
இருக்கின்றது கவிதை. எங்கும் தேடி கிடைக்காத தடயம் தண்ணராக நீர்சாடியில் இருக்கின்றது. காலையில் காலியாக இருந்த சாடியில் நீர் இருக்கின்றது இப்போது. கைப்பட்டு சாடி கவிழ்ந்து அவர் நனைகின்றார் நாமும் தான்.

ஒரு கலவியை காமத்தை சொல்லிவிட்டு இறுதிவரிகள் இப்படி இருக்கின்றன

"கவுண்டருக்குள்ளிருந்து அவள்
சாந்தமாகவே டிக்கெட் கொடுத்தாள்
பெற்றகன்று
வழியோரம் துப்பிய எச்சில்
விழுந்தது விந்தென"

படிக்கும் போது அதிராமல் இருக்க முடியவில்லை.

இறுதியாக நான் தொலைந்து போன கவிதை இதோ.

"குற்ற உணர்வில் குமைந்து
கைகளைப் பிசைந்தபடி இத்திடலில் உலவும்போது"

இப்படி கவிஞர் கூறுவது காற்றை. காற்றுக்கு ஏன் இந்த குற்ற உணர்வு, ஒரு வேளை எங்கோ கடல் கொந்தளிபையோ, ஒரு புயலையோ ஏற்படுத்தி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறுவனில் பட்டத்தையோ அறுத்திருக்க வேண்டும் என்கின்றார். அதற்கு பரிகாரமாக சற்றே தூரத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டு இருக்கும் காதலியின் கூந்தலை அடிக்கடி நெற்றிக்கு தள்ளுகின்றாம் அதை ஒதுக்கும் போதெல்லாம் அவள் அவரை பார்க்கின்றாள்.

"பாவத்திற்கொரு பரிகாரம் செய்யும் பதட்டத்தில்
அது என்னைப் பலியிட்டுப் போய்விட்டது" என்கின்றார். :)

உடலியல் மொழியும் விரசமும் நிறம்பி ததும்புகின்றது பல கவிதைகளில். ஆனாலும் நல்ல கவிதைகளை பதிவிக்க ஆசைக் கொள்ளும் அனைவரும் ஒரு முறையேனும் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.