Monday, September 24, 2012

ஏன் அண‌ங்குற்ற‌னை?ம‌ல்லிகைக்கும் என‌க்கும் மிக‌ அழ‌கான‌ பொருத்த‌முண்டு. சில‌ நிக‌ழ்வுக‌ள் வாழ்வில் ம‌ல்லிகையோடு பிணைத்து க‌ட்டி என்னை இழுத்து சென்ற வ‌ண்ண‌மிருக்கிற‌து. ஓரிரு மாத‌ங்க‌ளுக்கு முன் என் உற‌வின‌ர் இல்ல‌ திரும‌ண‌த்தில் எதிர்பார்த்த‌ அள‌வு ம‌ரியாதை கிடைக்காம‌ல் நான் சற்றே அண‌ங்குற்றிருந்த‌(துன்ப‌முற்றிருந்த‌) நேர‌ம். உற‌வின‌ர் வீட்டிக்கு செல்லும் முன்ன‌மே என் த‌லையில் கொஞ்ச‌ம் ம‌ல்லிகை இருந்த‌து. உற‌வுப் பெண் என‌க்கு இறுவாச்சி ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கொடுத்து உப‌ச‌ரித்தாள். நான் வேண்டாமென்றேன். இறுவாச்சி ம‌ல்லிகை திருச்சிக்கார‌ர் அனைவ‌ர்க்கும் பிடிக்கும் என்னை தவிர‌. இறுவாச்சி பார்க்க‌ குண‌மாக‌ இருக்காது(க‌ர‌டுமுர‌டாக‌ இருக்கும்) ஆனால் குண்டு ம‌ல்லியை விட‌ ரொம்ப‌ செரிவாக‌ ம‌ண‌க்கும். அதுவும் அந்த‌ பெண் கொடுத்த‌ ச‌ர‌ம் ஏக்கு மாக்காக‌ தொடுக்கப்பட்‌டிருந்த‌து. பார்க்க‌ நேர்த்தியாக‌ கூட‌ இல்லை. வேண்டாமென்றேன். நான் கொஞ்ச‌ம் துய‌ர‌மாக‌ இருந்த‌து என் அக்காவிற்கு ம‌ட்டும் தெரியும். அத‌ன் கார‌ண‌மாக‌ ம‌றுக்கிறேன் என்றும் என்னை த‌வ‌றாக‌ நினைப்பார்க‌ள் என்றும் வ‌ற்புறுத்த‌ என்று அதையும் வைத்துக் கொண்டேன். ஆனால் ம‌தியாதார் வாச‌லென்றால் ம‌ல்லிகைச்ச‌ர‌ம் கூட‌ அண‌ங்குற‌ செய்யும் போலும்.எங்க‌ள் வீட்டுத் தோட்ட‌த்தில் மூன்று ம‌ல்லிகைப்புத‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. அனைத்தும் அடுக்கு குண்டு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை அள்ளி அள்ளி த‌ருப‌வை. ஒவ்வொன்றும் சின்ன‌ ரோஜாப்பூ போல‌ இருக்கும். இங்கே டெல்லி வாழ் ம‌க்க‌ள் யாருமே ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை தொடுத்து த‌ங்க‌ள் த‌லையில் சூடுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் வீட்டில் எத‌ற்கு ம‌ல்லிகை ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்க்கின்றார்க‌ள் என்றே தெரியாது. கேட்பார் எவ‌ருமின்றி அவையும் தாம் பாட்டுக்கு ம‌ல‌ர்ந்து ம‌ண‌ம் வீசி ம‌ண்ணில் வீழும். இந்த‌ கார‌ண‌த்தினால் டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எல்லாமே அண‌ங்குற்ற‌து போலும். இந்த‌ வ‌ருட‌ம் ம‌ல‌ரும் எந்த‌ மல்லிகை ம‌ல‌ரிலும் அந்த‌ அள‌விற்கு ம‌ண‌மில்லை.(வெப்பம் மிக அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்). திருச்சியில் அம்மா ம‌ல்லிகை பூவை இர‌வு குளிரூட்டியில் சேமிக்க‌ வேண்டுமென்றால் வாச‌ம் வெளியேறாம‌ல் இருக்க பிர‌த்தியோக‌ க‌வ‌ன‌மெடுத்து சேமிப்பார்க‌ள். க‌வ‌ன‌ம் குறைந்தால் ம‌றுநாள் காப்பி, இட்லி எல்லாமே ம‌ல்லிகை பூவாச‌த்தோடே ப‌றிமாற‌ப்ப‌டும். டெல்லியின் ம‌ல்லிகைக‌ள் எப்போதும் அந்த‌ அள‌வு ம‌ண‌க்காதென்றாலும் இந்த‌ வ‌ருட‌ம் மெல்ல‌ முன‌கிய‌ப‌டி ம‌ண‌ப்பதாக,‌ ஏன் அண‌ங்குற்ற‌னை ம‌ல்லிகையே என்று கேட்டு வ‌ருந்தும்ப‌டியே இருக்கின்ற‌து.

குறிப்பு:அண‌ங்குற்ற‌னை என்ப‌து "யார் அண‌ங்குற்ற‌னை க‌ட‌லே" என்றும் குறுந்தொகையிலும் "இவ‌ள‌ ண‌ங்குற்ற‌னை போறி" என்று ஐங்குறுநூற்றிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ வார்த்தை. அந்த‌ வார்த்தையால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு எழுதிய‌ ப‌திவிது. யார் கார‌ண‌மாக‌ இவ்வ‌ள‌வு "துய‌ர‌மாக‌" ஓயாது அலைபாய்ந்து கொண்டிருக்கின்றாய் என்று குறுந்தொகையில் த‌லைவி க‌ட‌லை நோக்கி கேட்ப‌து போல‌வும், ஐங்குறுநூற்றில் த‌ன் ம‌னை விடுத்து பிற‌ரிட‌ம் போன‌ த‌லைம‌க‌னிட‌ம் த‌லைவியின் தோழி நீ யாரிட‌ம் த‌ற்ச‌மய‌ம் யார் மேல் மைய‌ல் கொண்டாயோ அவ‌ளை விட்டு நீ நீங்கி சென்றாள் தலைவியை போல் அல்லாது அவ‌ள் "துன்புற்ற‌வ‌ள்" போல பாசாங்கு ம‌ட்டுமே செய்வாள் என்று எடுத்துரைப்ப‌து போல‌வும் அமைந்த‌ பாட‌ல்க‌ள் அவை.

சொல் உதிர்க்கும் விரல்கள்

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன

-வா. மணிகண்டன்

சுந்த‌ர‌ ராம‌சாமி க‌விதைக‌ள்

உறவு
-------

உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.

- சுந்தர ராமசாமி

இந்த வாழ்க்கை
---------------

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர
நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை

- சுந்தர ராமசாமி