Wednesday, June 24, 2009

அம்மாவுக்கு

"நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா"

அட கொடுமையே இந்த பாட்டையுமா ரிமிக்ஸ் பண்ணீட்டாங்க. நல்லவேளை சிவாஜி, பத்மினி இரண்டு பேருமே போய் சேர்ந்துட்டாங்க. இல்லாட்டி இந்த பாட்டை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று தோன்றியது. அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு நாதஸ்வரம் என்றால் ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் கேட்கும் எல்லா நாதஸ்வர இசையும் ஒன்று போலத் தான் தெரியும் எனக்கு ஆனால் அம்மா அது என்ன பாடல் அது என்ன ராகம் எல்லாம் சொல்வார்கள். நகுமோமோ அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். அம்மா ரொம்ப சார்ப். எந்த விசயம் என்றாலும் உடனடியாக கற்று கொள்வார்கள் அம்மாவிற்கு தெரியாத விசயமே கிடையாதோ என்று தோன்றும்.

தொலைபேசியில் அழைத்தேன். அம்மா ஹலோ சொல்லும் விதமே அழகாய் இருக்கும்.

"ஹலோஓஒ"

"ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க"

"நான் நல்லா இருக்கேன்ம்மா நீ எப்படி இருக்கே"

"நல்லா இருக்கேன்ம்மா சும்மா பேசலாம்ன்னு போன் பண்ணேன். உடம்பெல்லாம் நல்லா இருக்கா கால் வலி இருக்கா?"

"ம்ம் உடம்பெல்லாம் நல்லா இருக்கும்மா கால் வலி பரவாயில்லை அடுத்த வாரம் டாக்டரிடம் போகனும்"

"காலையில் என்ன சாப்பிட்டீங்க?"

"தட்டபயிரு துவையல் அரைச்சி சோறு பொங்கினேன் நீ என்ன செய்தே"

"நேத்து ரசம் இருந்துச்சி, அதோட வெண்டைக்காய் வறுத்து, கொடமுளக காயும் செய்து சாப்பாடு வைச்சி இருக்கேன்"

"கொடமுகளாவா நான் இதுவரை செய்தது இல்லை எப்படி செய்யறது?"

"ரொம்ப ஈசி தான்ம்மா பச்சைமிளகாய்,வெங்காயம்,தக்காளி எல்லாம் லைட்டா வதக்கிட்டு, கொடமிளகாயையும் வதக்கிட்டு உப்பு,சாப்பார் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு வேக வைக்கணும் அவ்வளவு தான் 10 நிமிசத்துல செய்துடலாம்"

"சாப்பாட்டோட கலந்து சாப்பிடலாமா?"

"ம்ம் சாப்பாட்டோடயும் சாப்பிடலாம், சப்பாத்தியோடும் சாப்பிடலாம்"

"சரி செய்து பார்க்கறேன். வேறென்ன விசயம் சொல்லும்மா"

"வேறொன்னுமில்லம்மா உடம்பை பார்த்துக்கோங்க எதாவது விசயம்ன்னா போன் பண்ணுங்க"

"சரிம்மா வைக்கிறேன்."

எனக்கு பழைய நாட்கள் ஞாபகம் வந்தது. தினம் திட்டு விழும். காலையில இவ்வளவு நேரம் தூங்கற, ஒருவேலையும் உருப்படியா பண்ண தெரியலை. ஒருநாளாவது வந்து சமையல் செய்ய துப்பில்லை. எங்கே போய் என் பேரை கெடுக்க இருக்கியோ. என்ன வளர்ப்பு வளர்த்திருக்கான்னு என்னைதான்டி சொல்லுவாங்க.... இப்படி தினம் ஒரு முறையாவது அர்ச்சனை கிடைக்காத நாளே இருக்காது. இன்று சமையலில் டிப்ஸ் அவர்களுக்கே தருவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது. இன்று இருக்குமிடத்தில் எவ்வளவு மரியாதை எனக்கு. ஏகப்பட்ட நல்லபேர். அம்மா எல்லாம் நீங்கள் கற்று தந்தது தான் அம்மா. உங்கள் நல்ல குணத்தில் 10% தான் என்னிடம் உண்டு அதற்கே இவ்வளவு நல்ல பெயர் எனக்கு.

I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

Sunday, June 7, 2009

யாதுமான‌வ‌னுக்கு

ரோஜாப் பூக்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பும் சோலையில் அல‌ர்ந்த‌ தென்ற‌ல் விழி த‌ட‌வ‌ விழித்தெழுந்தேன் ஒரு புது காலை பொழுதினில். பொன் வ‌ண்ண‌ம் பூசிய‌ க‌திர‌வ‌ன் சிரித்த‌ப்ப‌டி என்னை பார்த்திருந்த‌து என் வாழ்வின் புது வ‌ர‌வை என‌க்கு அறிவித்த‌ப‌டி. இட‌துக‌ண், இட‌து புஜ‌ம், இட‌து தொடை துடித்து எனக்கான எல்லா சிற‌ந்த‌ ச‌குன‌ங்க‌ளையும் உண‌ர்த்தி சென்ற‌து நீ என்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம். தூர‌த்து சார‌ல் கூட‌ அருகில் வீச‌ க‌ண் குளிர்ந்தேன் உன்னை கண்ட‌ நொடி ஒடியும் போது.

க‌ண்ட‌தும் தோன்ற‌வில்லை நீ என‌க்கென‌ இருக்க‌ பிற‌ந்த‌வ‌ன் என்று. இத‌மான‌ புன்ன‌கை எனை ஈர்த்திருந்த‌து ஆயினும் ம‌ற்ற‌வ‌ரில் ஒருவ‌னாய் தான் தெரிந்தாய் நீ என‌க்கு. விடிய‌லில் தொட‌ங்கி உன்னை ச‌ந்தித்த‌ க‌ண‌ம் வ‌ரை உண‌ர‌வில்லை வாழ்வின் உன்ன‌த‌ த‌ருண‌ங்க‌ளை உன்னோடு க‌ழிப்பேன் என்று.

ஒன்றாக‌ உண்ட‌ பொழுதுக‌ள், கூடி பய‌ண‌த்த த‌ருண‌ங்க‌ள், நீ என்னை தூர‌த்திருந்து ர‌சித்திருந்த‌ ச‌மய‌ங்க‌ள் அத்த‌னையும் அழ‌கான‌ நிக‌ழ்வுக‌ள். ஒரு முறை என்னை சீண்டிய‌ சில‌ரை உன் கோப‌ க‌ணையால் சுட்டெரித்தாயே மென்மையான‌ உன‌க்குள்ளா இத்த‌னை கோப‌ம்? என்னை சுற்றி அக்க‌ரை க‌வ‌ச‌மிட்டு இருந்த‌ உன் அசைவுக‌ள் என் நெஞ்ச‌த்து க‌த‌வுகளை மெல்ல‌ மெல்ல‌ த‌ட்டி சென்ற‌ன‌. ஞயாப‌க‌ம் இருக்கின்றதா நாம் சென்று வ‌ந்த‌ கோவிலில் என‌க்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கொத்து மரிக்கொழுந்து உன்னை போல‌ அழ‌கானதாக‌வும் வ‌ச‌னையோடுமிருந்த‌து. நீ அளித்த‌ நெற்றி குங்கும‌ம் இன்றும் நின்று சிரிக்கின்ற‌து.

என்ன‌ பார்க்கின்றாய் என்றால் உன்னை தான், உன் ஒவ்வொரு அசைவையும் ம‌ற்ற‌வ‌ரிட‌த்து நீ செலுத்தும் அக்க‌ரையும், உன் அணுகு முறையையும், தாயென‌ நீ பொழியும் அன்பையும் அணுஅணுவாக‌ ர‌சிக்கின்றேன் என்பாய். உற‌க்க‌ம் வ‌ருகின்ற‌து நீயும் போய் உற‌ங்கென்றால் நீ எப்ப‌டி உற‌ங்கின்றாய் என்று நான் பார்க்க‌வேண்டும் என்பாய் ப‌த்த‌டி தூர‌த்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்த‌ப‌டி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிட‌மெல்லாம் நிறைந்து வ‌ழிகின்றாய் அப்புற‌ம் என்ன‌டா உற‌ங்கும் போது பார்க்க‌ என்றால் அது உன‌க்கு தெரியாத‌டி எவ்வ‌ள‌வு அற்புத‌மான‌ உண‌ர்வென்று, வார்த்தைக‌ளால் விள‌க்க‌ முடியாதென்பாய். ஆனால் ஒரு நாளும் நான் உற‌ங்குவ‌தை பார்த்த‌தில்லை என்ப‌து தானே உன் புல‌ம்ப‌ல் இன்று வ‌ரை. என‌க்கு உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ற‌தும் நீ ப‌த‌றிய‌தும் அளித்த‌ அர‌வ‌ணைப்பில் நான் க‌ண்டேன் இன்னுமொரு தாயாய் நீ என‌க்கு.

உன்னை க‌ட்டிக் கொள்ள‌வா ஒரு க‌ண‌ம் என்ற‌ போது உன்னை விட‌ இறுக்க‌ க‌‌ட்டிக் கொண்ட‌து நான‌ல்ல‌வா? நெற்றியோட‌ நீ இட்ட‌ முத்த‌த்தில் ஆர‌ம்பித்து இன்று வ‌ரை நீ த‌ந்த‌ முத்த‌ங்க‌ள் எண்ணிக்கையில் அட‌ங்க‌வில்லை. உன‌க்கு என்னை பிடிக்குமா என்றால் ம்ம்ம்ம் என்ற‌ப‌டி இத‌ழ் நிறைய‌ முத்த‌ம் த‌ருவாய். இறுக‌ அணைத்திடுவாய். என் எழுத்தை நீ எழுதிய‌து போல‌ ஏந்தி கொள்வாய். இணுக்க‌ம் இணுக்கமாய் விம‌ர்சிப்பாய். தாங்கி கொள்வாய் எப்போதும் என்னை உன்ன‌வ‌ளாக‌. காலை முத‌ல் மாலை வ‌ரை உன் க‌ண் தொடும் தூர‌த்தில் என்னை வைத்திருந்த‌ ப‌ரிவு என்ன‌வென்று நான் சொல்ல‌. எனிந்த‌ இனிமையான‌ ப‌ய‌ணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிட‌ம் வ‌ந்து விட்ட‌து உன‌க்கென‌ நான் என்ன‌ செய்ய‌ நகர்ந்துபோவதை தவிர.