காட்சி - 1:
நறுமணம் கமழும் அழகான சோலை, அமிழ் தூறும் மலர்கள், ரீங்காரம் செய்யும் வண்டுகள், வண்ண வண்ண மலர் சொரியும் மரங்கள், இதமாக தென்றல் தாலாட்டும் மலையருவி, குயில்களின் கானம், மயில்களின் நடனமென பூலோக சொர்க்கமாக இருந்தது அந்த நந்தவனம். அந்த நந்தவனத்தில் சகுந்தலை தோழியர் சூழ நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அந்த கன்னியர்களில் ஆடல் பாடல் மேலும் அந்த நந்தவனத்திற்கு அழகு சேர்த்தது.
காட்சி - 2:
ஏனோ தோழியர் யாரும் துணையின்றி தனித்து வனம் புகுந்தாள் சகுந்தலை அன்று. தூரத்தில் மயங்கி கிடப்பது யார்? புரியாமல் பரிதவித்தாள் பேதை மகள். அவன் தான் தன் வாழ்வின் துயரம் என்று அறியாமல் அருகில் இருந்த அருவில் நீர் எடுத்து வந்து அவன் முகம் தெளித்தாள். கண் விழித்தவனுக்கு புசிக்க சிறந்த கனி வகைகளை அழித்தாள் அந்த கனிகை. மேகலையின் மகளாயிற்றே வந்தவன் சகுந்தலையின் அழகில் மயங்கினான்.
"கன்னிகையே உன் பெயர் என்ன?"
"சகுந்தலை" என்றாள் சகுந்தலை
"தேவலோக மங்கை போல அழகாய் இருகின்றாய் உன் வாசம் எது?"
"கண்வ முனிவர் குடில் தான் என் இருப்பிடம். தாய் தந்தை இல்லாதவள், இருப்பினும் பெறும் அன்பிற்கு குறைவில்லாதவள்"
"சகுந்தலா உன் அழகில் மயங்கினேன் என் பெயர் துஷ்யந்தன். இந்த நாட்டின் மன்னன். உன்னை இப்போதே மணக்க ஆசை கொண்டேன்"
"இப்போதே எப்படி அக்னி மூட்டி தேவர்கள் சாட்சியாக, தந்தை கண்வ முனிவர் ஆசி வழங்க ஊரார் முன்னிலையில் திருமணம் நடப்பதே முறை இப்போதே எப்படி சாத்தியம் ஆகும்"
"நாம் கந்தர்வ மணம் புரிவோம்"
"அப்படி என்றால்"
"இந்த காடு, மலை, காற்று, அருவி சாட்டியாக உனக்கு இதோ இந்த சோலையின் மலர்களால் ஆனா மாலையை அணிவித்து என் மனைவி ஆக்கிக் கொள்வேன்"
மனம் மகிழ்ந்தாள் சகுந்தலை, தான் நீர் வார்த்த சோலையின் மலர்கள் சேமித்து மாலை தொடுத்தாள். மணம் புரிந்தனர் துஷ்யந்தனும், சகுந்தலையும். மன்மதன் குடி புகுந்தான் அந்த வனப் பகுதியில். கிளம்பும் முன் தன் மோதிரத்தை பரிசளித்தான் அன்பு மனைவியிடம்.
"கலங்காதே சகுந்தலா, விரைவில் வருவேன் உன்னை என் மாளிகைக்கு அழைத்துச் செல்ல..."
புரவி பறந்தது.
காட்சி - 3:
மகிழ்ச்சியின் எல்லைகள் இது தான் என்றிருந்தாள் சகுந்தலை. நம்பிக்கையோடு இருந்தாள். எப்போதும் கனவு கண்டவாறு இருந்தாள். வழக்கம் போல ஓடைக்கு நீராட கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது ஆஸ்ரமத்திற்கு வருகை புரிந்துக் கொண்டு இருந்த துர்வாச முனிவரை அவள் கவனிக்கவில்லை. துர்வாசர் உடனே யார் நினைவால் என்னை கவனிக்காது நீ நடந்தாயோ அவருக்கு உன் நினைவுகள் அற்று போக கடவது என்று சாபம் தந்தார். நீராட சென்ற இடத்தில் காதல் பரிசான மோதிரத்தை தொலைத்தாள் சகுந்தலை. தன் சிரிப்பையும் அன்றே தொலைத்தெரிந்தாள்.
காட்சி - 4:
கண்வ குடிலில் பெண்கள் எல்லோரும் சோக உருவாக காட்சியளித்தனர். தொலைத்த மோதிரத்தை நினைத்தவாறு தன் மகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சகுந்தலை. கண்வ முனிவர் அரண்மனை சென்று அவமானப்பட்டு திரும்பி இருந்தார்.
காட்சி - 5:
வருடங்கள் ஓடின, ஆனால் சகுந்தலையின் வாழ்கை விடிவில்லாமல் நகர்ந்தது. மகன் வளர்பில் தன்னையே அர்பணித்துக் கொண்டாள் சகுந்தலை.
காட்சி - 6:
ஒரு நாள் துஷ்யதன் அரசவையில் ஒரு மீனவன் கொண்டு வரப்பட்டான். ராஜா மோதிரத்தை விற்றதற்காக கைதாகி இருந்தான் அவன். அரசன் வழக்கை விசாரித்தார்.
"அரசே நான் வலை வீசி பிடித்த மீன் வயிற்றில் இந்த மோதிரம் அது" என்றான்
அந்த மோதிரத்தை பார்த்ததும் அரசனுக்கு சகுந்தலையின் நினைவும் அவளை மணந்ததும், அரண்மனை வந்தது மறந்ததும் நினைவில் வந்தது. அவளை அழைத்து செல்வேன் என்று வாக்களித்தது நினைவில் வந்தது.
காட்சி - 7:
மன்னர் தன் சுற்றம் சூழ கண்வ முனிவர் குடிலுக்கு வந்து சகுந்தலையையும் அவன் மகனையும் தன்னோடு அனுப்புமாறு கோரினான். சகுந்தலை மனம் மகிழ்ந்தாள். கண்வ முனிவர் ஆசியோடு அரண்மனை சென்றடைந்தாள்.
நாடகத்தை பார்த்த சுப்பையா குறலெழுப்பினார் "நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு" ஆமாங்க நம்ம நாடகத்துக்கு அது தான் தலைப்பு இப்போது காட்சி 7 மறுபடியும்
காட்சி - 7:
மன்னர் தன் சுற்றம் சூழ கன்வ முனிவர் குடிலுக்கு வந்து சகுந்தலையையும் அவன் மகனையும் தன்னோடு அனுப்புமாறு கோரினான். சகுந்தலை குமுறி எழுந்தாள்.
"துஸ்யந்தா நாடாழும் மன்னாக இருக்கலாம் ஆனால் நீ அழைத்த நேரத்தில் மட்டும் தான் நான் வர வேண்டுமா?
ஆனால் ஒரு மோதிரத்தை பார்த்த பின் தான் உனக்கு மனைவியின் நினைவு வரும் அதன் பின்புதான் எனக்கு உன்னோடு வாழ்வு என்றால் அப்படிப்பட்ட வாழ்வே எனக்கு வேண்டாம். என் மகனின் தந்தை யார் என்று உலகிற்கு தெரிந்து விட்டது அது போதும் எனக்கு. இந்த காடு, மலை, அருவி இவை தாம் எம் வாழ்க்கை நீ சென்று வரலாம்"
4 comments:
good and nice. keep it up - kalyankumar
மிக்க நன்றி கல்யாண்ஜி
நல்ல தமிழைப் படித்த
மனநிறைவு
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி திகழ்மிளிர். திகழ்மிளிர் அழகான வார்த்தை
Post a Comment